Wednesday, February 27, 2019
நன்றி கதிரேசன் சம்பத் எல்லா நாளும் கார்த்திகை
பவா செல்லதுரை !

இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவர் அதிக ஆண்களுக்கு முத்தம் கொடுத்தவர், இவர் அதிக ஆண்களிடம் முத்தங்களைப் பெற்றவர். சமீப காலங்களில் தமிழ் வாசகர்களிடையே இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட அல்லது கேட்கப்பட்ட பேச்சுக்கள் இவருடையதாகத்தான் இருக்கும். சென்னையும் அல்லாத திருவண்ணாமலையும் அல்லாத ஒரு பேச்சுவழக்கில், யாரையும் வசீகரிக்கும் ஒரு சிரிப்போடும், எள்ளலோடும், தனக்கேயுரிய பாணியில் இவர் சொல்லும் கதைகள் தனித்துவமிக்கவை. இவரால் ஜே.பி சாணக்யாவின் ஆண்களின் படித்துறையையும் நமக்கு காட்ட முடியும் அசோகமித்திரனின் புலிக்கலைஞனையும் நம்முன் நிகழ்த்த முடியும். நிகழ்காலத்தில் எல்லாருக்குமான ஒரு கலைஞன் பவா!
எழுத்தாளர் எஸ்.ரா-வின் எழுத்தின் மூலம் தான் பவா அறிமுகமானார். 

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவரைக்குறித்து தேடி படிக்கத்தொடங்கினேன். அந்த சமயத்தில் ஒரு பிரளயம் போல் இந்த யூ-டியூப் பேச்சுக்கள் பரவத்தொடங்கின. ஒரு ஆறு மாதங்களுக்கு முன் பவாவின் வலைப்பக்கத்தை (19, டி.எம் சாரோனிலிருந்து) 
வாசித்துக்கொண்டிருக்கையில் அதில்தான் இந்த ”எல்லா நாளும் கார்த்திகை” புத்தகத்தை பவா குறிப்பிட்டு எழுதியிருந்தார். புனைவல்லாத எழுத்தின் மீது என் கவனம் விழத்தொடங்கிய நேரமது. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்களுடனான எழுத்தாளர்களின் உறவுக்குறித்து, நாமறியாத அவர்களது பக்கங்களை நமக்கு வெளிச்சமிட்டு காட்டும் படைப்புகள் குறித்து ஆர்வம் குவிந்தது. அதைப்பற்றிய தேடலில் கண்டெடுத்ததுதான், எழுத்தாளர் ”கரிச்சான் குஞ்சு” குறித்த கவிஞர் ரவி சுப்ரமணியனின் பதிவு, எம்.வி.வெங்கட்ராம் தன் நண்பர்கள் மூவர் குறித்து எழுதிய ”என் நண்பர்கள்” புத்தகம், ந.முருகேச பாண்டியனின் ”என் இலக்கிய நண்பர்கள்”, முக்கியமாக எஸ்.ரா-வின் ”வாசக பர்வம்”. இந்த சமயத்தில் தான் பவாவும் இப்படியொரு புத்தகம் எழுதியிருப்பது தெரியவந்தது. இந்த புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய முதல் புத்தகம், பவா செல்லதுரையின் “எல்லா நாளும் கார்த்திகை”.
புனைவைவிட அபுனைவுகளில் இருக்கக்கூடிய பலனாக கருதுவது, அதன் நேர்ப்படைத் தன்மையை தான். அதிகம் மெனக்கெட தேவையில்லை, கலைக்கண் கொண்டு பார்க்கவேண்டாம். புதிர்த்தன்மை இல்லை, குறியீடுகள் இல்லை, படிமங்கள் இல்லை. உதாரணமாக, எந்த புனைவையும் எடுத்துக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு தரக்கூடிய மனவெழுச்சியை, ஆழ்ந்த கற்றல் அனுபவத்தை இந்த புத்தகமும் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை. பவா இதில் அவரது நண்பர்கள், எழுத்தாளர்கள் என்று 24 நபர்களைப் பற்றி எழுதியுள்ளார். ஜெயகாந்தன், மம்மூட்டி, கந்தர்வன், கோணங்கி, கைலாஷ் சிவன், பாலு மகேந்திரா, பாலா, பால் சக்காரியா ஆகியோரும் இதில் அடங்குவர். எந்த ஒரு கட்டுரையும் சோடைப் போகக் கூடியது அல்ல. ஒவ்வொன்றும் தன்னளவில் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

”பூவின் மலர்தலை எந்தச் செடி நினைவில் வைத்திருக்கும்” என்று தொடங்கும் கட்டுரையில் இந்த தலைமுறை அறியாத பாலு மகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். பாலு மகேந்திரா என்னும் அசல் கலைஞன் கடைசிவரை திரையில் வடிக்காத, பவாவுக்கு மட்டுமே சொன்ன ஒரு கதையை நமக்கு சொல்கிறார் பவா. ஷைலஜாவை தன் மகளாக ஏற்றுக்கொண்டு பவாவை என்னுடைய மாப்பிள்ளை என்று சொல்லுமளவுக்கு இருக்கும் உறவு வெறும் அன்பின் மட்டும் அல்ல, பாலு மகேந்திராவின் ஆழ்மனம் மட்டுமே அறியும் ஒரு அந்தரங்க ரகசியம். இதன் நீட்சியாகத்தான் பாலாவுடனான பவாவின் அறிமுகத்தைப் பார்க்கமுடிகிறது. தன்னுடய படத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் மவுனத்தையே பதிலாகக் கொண்டிருக்கும் பாலா, தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருக்கும் பாலு மகேந்திரா குறித்து ஷைலஜாவிடம் பேசும் போது குழந்தையாகிவிடுகிறார். தனக்கு கிடைத்த தேசிய விருது இருக்க வேண்டிய இடம் இதுதான் என்று பாலு மகேந்திராவின் அலுவலகத்தில் மாட்டிவிட்டு செல்வதையெல்லாம், குரு-சிஷ்ய உறவு என்று சுருக்கிவிட முடியாது.

ஜெயகாந்தன் பற்றிய நினைவுகளைக் குறிப்பிடும்போது, இனம்புரியாத ஒரு சக்தி நம்மையும் ஊடுருவுகிறது. குறிப்பாக நடுச்சாமத்தில் அடர்காட்டின் இருளில் இருந்து பகத்சிங் குறித்து ஜேகே பேசும் சித்திரம் நம் கண்முன் விரிகிறது. பாண்டிசேரியில் ஒரு விழாவில் மேடையில் மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. மற்ற இரண்டும் யாருக்கு என ஜேகே கேட்கிறார். ஒன்று தோழர் ஒருவருக்கும் மற்றொன்று சபாநாயகர் கண்ணனுக்கு என்றும் சொல்லப்படுகிறது. பேசுவதற்கு மேடையேறிய ஜேகே, கண்ணனை ஒரு பார்வைப் பார்த்து நீ உட்கார வேண்டிய இடம் அதுவல்ல கீழே இறங்கலாம் என்று சொல்லிருக்கிறார், கண்ணனும் கீழே அமர்ந்து முழு உரையையும் கேட்டிருக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஒரு எழுத்தாளனாவது இப்படி சொல்லமுடியுமா?

நாம் யார்யாரைப் பார்த்து எப்படி எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று பிரயாசைப்படுகிறோமோ, அவர்களின் உண்மையான முகத்தை வெளிச்சமாக்கி நம் எண்ணங்களனைத்தும் நீர்த்துபோகும்படி செய்கிறார். மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மகன் திருமணம். கேரளாவில் நடக்கிறது. பவா சென்றிருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம். பெண்ணும் மாப்பிளையும் வெகு இயல்பாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கேரள மாநிலத்தின் அனைத்து முக்கிய அமைச்சர்களும் வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர்கூட தங்களது உதவியாளர்களைக் கூட அழைத்துவரவில்லை. மிகச் சாதாரணமாக வந்திருக்கின்றனர். பவாவின் தோள்களில் ஒரு கை விழுகிறது. திரும்பிப் பார்த்தால் கேரள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நின்றுக்கொண்டிருக்கிறார், ஒரு எளிமையான கோடியக்கரை வேஷ்டியில். சாப்பாடும் மிக எளிமையான சாப்பாடுதான். இங்கு நம் ஊரில் இது சாத்தியமா? யோசித்துப் பாருங்கள். இவ்வளவுக்கும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ஒன்றும் சாதாரண ஆளில்லை, கேரள அரசு ஒரு எழுத்தாளனுக்கு உண்டான மரியாதையோடு அவரை நடத்திவருகிறது. பின்னர், பவா கேட்டிருக்கிறார் ”ஏன் பாலா, இவ்ளோ எளிமையா ஒரு கல்யாணம்? சாப்பாடாவது நல்லா போட்ருக்கலாமே?” ”இல்ல பவா, காலையிலையே அநாதை ஆசிரமத்துக்கு போய் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாப்பாடு கொடுத்துட்டு வந்திட்டோம், நாமதான் டெய்லி நல்ல சாப்பாடு சாப்டுறோமே ஒருநாள் அவங்க சாப்டட்டும்” என்றிருக்கிறார். இதனால்தான் எழுத்தாளன் எப்போதும் வெகுசனத்தில் இருந்து தனித்தலைகிறான். அந்த திருமணத்திற்கு மொத்தம் செலவான தொகை, இருபத்தைந்தாயிரம் மட்டும்.

ஒருமுறை மம்மூட்டி காரில் வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறார். அவரே ஓட்டிச் செல்கிறார். வழியில் ஒரு பெரியவர் கார்மீது மோத வந்ததை ஒருகணத்தில் உணர்ந்து ப்ரேக் அடித்து நிறுத்திப்பார்த்தால் அவருடன் ஒரு பெண். பிரசவ வலி. காரில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். அந்த பெரியவர் நன்றி நிரம்பிய கண்களோடு இவரைப் பார்த்து, ”உன் பேரென்னப்பா?” என்று கேட்கிறார். இவரும் ”மம்மூட்டி” என்று சொல்ல, ”அப்படியா சரி” என்று சொல்லிவிட்டு தன் பையில் இருந்து இரண்டு ரூபாய் நோட்டொன்றை எடுத்து மம்மூட்டியுடம் கொடுத்துள்ளார். இன்னும் அதைப் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் மம்மூட்டி.

கைலாஷ் சிவன் குறித்து இதில் வரும் பதிவு முக்கியமான ஒன்றாக எனக்கு தெரிந்தது. திருநெல்வேலியில் இரண்டாடுகளுக்கு முன் மூட்டா சங்க கட்டிடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். பாலகுமாரன் விஜயராமனின் நாவல் குறித்து போகன் சங்கர் பேசியதாக நினைவு. கார்த்திகை பாண்டியனும் கூட்டத்தில் இருந்தார். அங்குதான் என்னருகில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னை கைலாஷ் சிவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வேறு நிகழ்ச்சிகள் நடப்பதாக இருந்தால் அழைக்கிறேன் என்று சொல்லி என்னிடம் பெயர், தொலைபேசி எண் வாங்கி தன் டயரியில் குறித்துக்கொண்டார். இன்னும் அழைக்கவில்லை. அவர்தான் கைலாஷ் சிவனா என்றும் தெரியவில்லை. இன்னும் நிறைய பேரை நான் சொல்லவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். நீங்கள் உங்களில் இருந்து நீங்கி வேறொருவராக மாற வாய்ப்பிருக்கிறது.

இப்போது மலையாளத்தில் வெளிவரும் ”தேசாபிமானி” இதழில் பவா இந்தக் கட்டுரைகளை எழுதிவருகிறார். கேரளத்தில் இரண்டு லட்சம் பேர் தேசாபிமானியை வாசிக்கிறார்கள். இரண்டு லட்சம் பேரிடம் ஜெயகாந்தன் போய் சேருகிறார். இங்கு?

அன்பின் பவா,

என்றாவது ஒருநாள் அடைமழையில் நனைந்து வெடவெடத்து வந்து நின்ற கோணங்கி – எஸ்.ரா போல நானும் உங்கள் வீட்டுவாசலில் வந்து நிற்கக்கூடும். கைலாஷ் சிவனைப் போல் உங்கள் வீட்டு மோர்ச்சோரும் ஊறுகாயும் உண்ணக்கூடும். ஆனால் மாடிப்படிக்கு கீழ் நாலுக்கு நாலில் என்னால் படுக்க முடியாது, நான் கொஞ்சம் உயரம் அதனால் ஆறுக்கு நாலு என்றால் நல்லது. கடந்த புத்தகக்காட்சியில் என் நண்பன் என்னை விட்டுவிட்டு உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான், அவனைக் கோபித்துக்கொண்டேன். இப்போது யோசித்துப்பார்க்கிறேன். இல்லை பவா, இதுதான் சரி. நீங்கள் அங்கயே இருங்கள், நாங்கள் இங்கிருந்தே பார்த்துக்கொள்கிறோம்.
நட்சத்திரங்கள் கருவறையில் தான் ஒளிந்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment