Saturday, August 28, 2021

எளிமையிலும் எளிமையான என் நண்பன் ஜனா

 ஒரு தொடரின் துவக்கத்திலேயே மரணித்துப்போன நண்பனின் நினைவுகள் பற்றியா எழுதப்போகிறாய்? ஆம் அவன் விட்டுச்சென்றிருக்கிற மனித விழுமியங்களே என் ஜீவிதத்திற்கான ஆதூரம்.

கலையின் விஸ்த்தரிப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு காலம் எங்களுக்குமிருந்து. அப்படி கண்டடைந்ததுதான், எடிட்டர் லெனின் இயக்கியநாக் அவுட்குறும்படம். அப்போது அப்படம் ஒருமுறை கூடத் திரையிடப்படவில்லை. நவீன தொழிற்நுட்பம் கைக்கூடாத அந்நாட்களில்  16mm புரஜெக்ட்ரில் போட்டுதான் பார்வையாளர்களுக்கு அப்படத்தை காண்பித்தாகவேண்டும்.  16mm புரஜெக்டர்  திருவண்ணாமலை போன்ற நகரங்களிலேயே கிடைக்காது. நாங்கள் அப்படத்தை தமுஎசவின்  இரண்டு நாள் மாநாட்டில் திரையிடுவதென்றும், அதற்காக புரஜெக்டரை வேலூரில் இருந்து வரவழைப்பதென்றும் முடிவு செய்தோம்.

அப்போது லெனின் சார் நாடோடி வாழ்வின் துவக்கத்திலிருந்தார். எடிட்டிங் தியேட்டரில் நீண்ட நேரம் உட்காருவதில்லை. அநியாயத்திற்கு ஊர் சுற்றுவது, சித்தர்கள் என சொல்லப்பட்டவர்களை ஆழ்வார்ப்போட்டை வீட்டிற்கு வரவழைப்பது, வெந்த உணவுகளைத் தவிர்ப்பது, சினிமாக்காரர்களை அநியாயத்திற்கு திட்டுவது என அவர் போக்கு சித்தன் போக்காக மாறிக் கொண்டிருந்த அந்நாட்களின் ஒன்றில் நானும், என் நண்பன் கருணாவும் அவரை ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் சந்தித்து

நாக் அவுட்படத்தை நாங்கள் திருவண்ணாமலையில் திரையிடட்டுமா எனக்கேட்டோம்.

அவர் தன் நண்பன் சந்திரபாபுவின் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே அதற்கு சம்மதித்தார்.

இதே போலொரு இலைகள் உதிரும் கோடையில் எங்கள் வீட்டிற்கு எதிரிலிருந்து சாரோன் போர்டிங் ஸ்கூல் வளாகத்திற்கு தமிழ்நாட்டில் அப்போது எழுதியும், படைத்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகளின் வருகை நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

ஒயிட் அண்ட் ஒயிட் பேண்ட் சட்டையில் அத்தகீடான தன் புண் சிரிப்போடும்  லெனின் சார் தன்னைலெனின்என அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்த எல்லோரிடமும்  கைப் புதைப்போடு பேச ஆரம்பித்திருந்தார்.

சட்டென என் முகத்திலிருந்த பதட்டத்தை உணர்ந்து கொண்டுபொட்டி பின்னா வருதுஎன்னைப் பார்த்து ஒரு சொல் சொல்லிவிட்டு, தன் உரையாடலைத் தொடர ஆரம்பித்திருந்தார். நான் அவர்க் கைகாட்டிய மேற்கு திசையையே அப்பெட்டியின் வருகை வேண்டி, நிமிடத்திற்கொரு முறைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருட்டின அப்புறம், ஒரு நடுத்தர வயது ஆள் அப்பெட்டியை தலை சுமையாக சுமந்து கொண்டு வந்தார். ஆசுவாசமடைந்த நான் அவருக்கு என் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாயை எடுத்துக்கொடுத்த போது, அவர் அதை வாங்க மறுத்துவிட்டு,

ஒரு சொம்பு தண்ணி வேணும்என்ற சிக்கனமான வார்த்தையோடு அந்த பிரமாண்ட அரசமரத்தடியில் போய் உட்கார்ந்துக் கொண்டார்.

எல்லாம் ஒரு படத்தின் திட்டமிட்ட காட்சியைப் போல எனக்கு இன்றும் நினைவிலிருக்கிறது.

இயற்கைபடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த  ஒரு நாளின் பிண்னணியில் இயக்குநர் ஜனநாதனை சந்தித்தப் போது,

அன்று  ‘நாக் அவுட்பெட்டியைத் தூக்கிக்கொண்டுவந்த அந்த ஆண் ஆள் நான் தான் பவா சார்என சிரித்துக் கொண்டே சொன்னதும் கூட.

அப்போதும் எங்களிருவரின் கைகளும் புதைந்தேயிருந்தன.

சிந்தனை ரீதியாக இப்படித்தான் எஸ்.பி. ஜனநாதன் என்ற சினிமாவை  மக்களின் சிந்தனைகளை மாற்றுபவர்கான ஒரு ஊடகமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உள்ளுர உமுடிவெடுத்திருந்த அந்த எளிய நண்பனை  நான் சென்றடைந்தேன்.

தான் வாழ்நாளெல்லாம் கற்ற மார்க்சியத்தை, தன் திரைப் படங்களில்  எவ்வித்ததிலாவது கொண்டுவந்து விடவேண்டுமென்ற பேராசைஜனாவுக்கிருந்தது.

 சில காட்சிகளில் அது பிரச்சாரமாகத் துருத்திக்கொண்டு நிற்கையில் கூட அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதேயில்லை.

‘‘கலை என்பதே ஒரு வகைப் பிரச்சாரம்தான்’’

என தனக்குள்ளே சொல்லிக்கொள்வார்.

சென்னை நகரத்துள்ளான ஒரு கார்ப்பயணத்தில் ஒலித்த ஒரு தத்துவப்பாட்டைக் கேட்டு அசந்துபோய், வண்டியை நிறுத்தச் சொல்லி சாலையோர தூங்குமூஞ்சி மர நிழலில் நின்று அப்பாடலை நான் கேட்டேன்.

அருகில் உட்கார்ந்திருந்த என் தம்பி  நா. முத்துக்குமாரின் கைகளை இறுகப்பற்றி அழுத்திய போதுதான் அவன் சொன்னான்.

ஜனா அண்ணனுக்காக எழுதின்துனாஎங்கள் வண்டியைத் திருப்பச் சொல்லி அப்போதே ஜனா சாரைப் பார்க்கப் போனோம் அப்போதுதான் அவருக்கும் முத்துகுமாருக்கும் இருக்கும் தோழமையின் அடர்த்தியை அறிய  முடிந்தது எனக்கு.

அதன் பிறகான நாட்களில் அவர்களிருவரின் திருவண்ணாமலையை நோக்கியப் பயணம் பல முறை தொடர் நிகழ்வானது.

ஒவ்வொருப் பயண நிறைவிலும், அவர்களைப் பிரியும்போதும் குழந்தையை விடுதிக் கறுப்பும் ஒரு தாயைப் போல நான் கண்கலங்குவேன்.

இத்தனைக்கும் ஜனா அதிகம் பேசுபவரல்ல. ஆனால் மார்க்சிய வகுப்புகளில் உட்காந்திருக்கும் போது அடைந்த அதே மனலையை அவன்முன் இருக்கையில் நான் எப்போதும் அடைந்திருக்கிறேன்.

தமிழ் நிலத்தின் கலைஞர்கள், படைப்பாளர்கள், இயக்குநர்கள் இவர் மாதிரியாகத்தான்  உருவாக வேண்டுமென உள்ளூர நினைப்பேன். சில்வர் ஸ்பூன் பழக்கமுள்ள ஒருவன் கலைஞன் எப்படி, அல்லல்ப்படும்  மனிதர்களின் துயரத்தை  காட்சிப்படுத்திவிட முடியும்? என்ற கேள்வி என்னுள் எழுந்தடங்கும்.

ஆனால் துரதிஷ்ட்டவசமாக அப்படிப்பட்ட அவலம்தான், குறிப்பாக தமிழ் சனிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது.

மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையைப் போல

பாம்பு நிலவைத் திண்ணும்

காட்சி

தினந்தோறும் அரங்கேறுகிறது.

ஆனாலும் ஈவிரக்கமற்றக் காலம், தன் முரட்டுக் கைகளால் என்றாவது ஒருநாள் இவைகளைத் துடைத்தெறியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்கின்றன.

தன் வெற்றியை முதலீடாக்கி, நிறைய படம்பண்ணி பணம் பார்த்துவிடத் துடிக்கும் வணிகம் ஜனாவின் ரத்தத்தில் கடைசிவரை கலக்கவேயில்லை

ஒவ்வொரு வெற்றியையும் அவர் நிதானித்தார். தோல்விகளை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தினார். அதுதான் அவர் ……… தேர்ந்தெடுத்த மார்க்சிய இயக்கங்கள் அவருக்குக் கற்றுத்தந்தவை.

படப்படிப்புக்குழுவினரை, தன் குடும்பம் போலல்ல, தன் இயக்கத் தோழர்களைப் போலப்பாவித்தார். அவர்கள தங்கள் வாழவின் எது குறித்தும் ஜனாவை தங்கள் மூத்த அண்ணனைப்போல இருத்திவைத்து முறையிடுவதை பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

இயற்கையும், ‘‘யும் அவர் நினைத்ததில் தொண்ணூறு சதவீதத்தைத் தொட்டு காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள் என்பது என் கணிப்பு.

பசுபதிஎன்ற  நக்சலைட்டைத் துரத்திக் கொண்டு ஓடி, தோல்வியுற்ற ஒரு போலீஸ்காரனைப் பார்த்து பொன்வண்ணன் என்ற இன்ஸ்பெக்டர் கேட்பார்,

ஏண்டா அவனை பிடிக்க முடியாம தப்பிக்கவிட்டீங்க?

தலை குனிந்தபடியே அப்போலீஸ்காரன் சொல்லுவான்.

லட்சியத்திற்காக ஓடும் அந்தக் கால்களை, கடமைக்காக ஓட்ற எங்களால் பிடிக்க முடியலை சார்

பல ஆயிரக்காணக்கான லட்சியவாத கனவேறிய இளைஞர்களின் அப்போதைய வேத வாக்கு இவ்வரிகள்தான்.

இந்த தேர்ந்தெடுப்புகள் வேண்டிதான் ஜனா நீண்ட நாட்கள்க் காத்திருப்பார். இந்த தேர்வுக்குத்தான் தன் உதவி இயக்குநர்கள் கல்யாண், ஆலயமணி, சரவணன், ரோகான்ந்தஎன்ற சக தோழமைப் படைப்பாளிகளுடன் பல மணி நேரம் விவாதிப்பார்.

பேராண்மையும், “பொறம்போக்கும் அவர் நினைத்ததை முழுமையாகக் காட்சிப்படுத்த முடியாதப்படைப்புகள் என்பது என் அவதானிப்பு. வணிகம் எப்போதுமே மார்க்சியத்திற்கு எதிர்புறம் நிற்கவேண்டிய ஒன்று. ஒரே கலவையில்  அவை இரண்டையும் கலக்க நினைப்பது அறிவியலுக்கும் அப்பாற்பட்டது.

அது பரிசோதனையாகக் கூட செய்துபார்க்க முடியாதது என்பதை அப்படங்களின் நிறைவிலும், அதுதந்த முடிவுகளிலிருந்தும் ஜனா  பாடம் கற்றுக்கொண்டார்.       

ஒரு மார்க்சியவாதி எப்போதும், எவரிடத்திலிருத்தும், எந்நிலையிலும் கற்றுக்கொண்டேயிருப்பான். நானறிந்து தமிழ் திரைப்படப்படைப்பாளிகளில் ஜனா மட்டுமே அதை, எடிட்டிங் தியேட்டரில் இறுதியாகச் சரியும் வரை மேற்கொண்டவர்.

சில வருகைகளை இரகசியமாய் வைத்திருந்து என் முன் நின்று என்னை ஆச்சர்யப்படுத்துவது என் தம்பி நா. முத்துக்குமாரின் விளையாட்டுகளில் ஒன்று. அப்படி ஒருமுறை, நாங்கள் குடும்பத்துடன்  அருகிலிருக்கும் சாத்தனூர்  அணைக்கட்டுக்குப் போய், அணையிலிருந்து கசியும் நீரே தென்பெண்ணை ஆறாக நகரும், மரக் கூட்டங்களுக்கிடையே அடுப்பு மூட்டிமீன் வறுத்து சாப்பிடத் துவங்கும் முன் ஜனாவும், முத்துக்குமாரும் எங்கள் முன் வந்து நின்றார்கள்.

எப்போதும் பழையக் காதலிகளின் சந்திப்புகளைப்போல பரவசமானவை அவை.

எத்தருணத்திலும், எந்நிலையிலும நாங்கள் எங்களுக்குள் தேக்கிவைத்திருக்கும் சொற்களை விவாதத்திற்கழைப்போம்அன்றைய உரையாடல் பெரும் தர்கமாக மாறி, வறுத்த மீன் துண்டுகளை அநியாயத்திற்கு மிச்சப்படுத்தியிருந்தது.

திரும்பி வரும் வழியெங்கும் வார்த்தைகள் வழிமறித்து நின்று தெறிக்க விடப்பட்டன. எப்போதும் அதிகம் பேசாத ஜனா சார் அன்று எங்களோடு மல்லுக்கு நின்றார். நான் உள்ளுக்குள் குதூகலமானதொரு மனநிலையிருந்தேன்.

எங்கள் கார் திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் திரும்பி, வேடியப்பனூருக்கு பிரியும் பாதையில் வியாபித்திருந்த ஒரு மர நிழலில் நின்று கொண்டது.

அந்தியில், இரவுத் தன்னை மெல்ல கரைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான நேரக் கலவை அது.

ஜனா சார் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து கையோடு கொண்டுவந்திருந்த டம்ளரில் ஊற்றி      ஒரே முடக்கில்  குடிக்க முயன்றக் கணமும்ஒரு போலீஸ் ஜீப் எங்கள் முன் வந்து நின்றத் தருணமும் நேரெதிரேச் சந்தித்துக் கொண்டன.  

 

 

 

 

 

 

 

ஜனா பயந்து நடுங்கினார். லேசாக நடுங்கும் அவர் வலது கையால், என் வலது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. எங்கள் மாவட்டத்தில் உள்ள எல்லாப் போலீஸ் அதிகாரிகளுக்கும் எனக்கு நன்கு பரிட்சியமானவர்களே. அவர்களின் பாலின நிகர்நிலைப் பயிலரங்கின்  ஒருங்கிணைப்பாளர் நான்.  அப்படி ஏற்பட் அறிமுகம் அது.

ஆனால் என் தைரிர்யமும், சமாதானமும் ஜனா சாருக்கு எட்டவில்லை.

அவர் எதையோ சொல்ல வாயெடுக்கும்முன், அந்த ஜீப்பிலிருந்த அதிகாரி இறங்கி எங்களை நோக்கி வந்தார். ஜீப்பின் முன்புறம் DSP Town என எழுதியிருந்தது.

டவுன் டி.எஸ்.பி. என நெருங்கிய நண்பர்வாசிப்பாளர், என்னையும் எஸ். ராமகிருஷ்ணனையும்   தொடர்ந்து வாசிப்பவர்.

அவர் எங்கள் மூவரோடும்  கைக்குலுக்கிவிட்டு, சாய்வு இருக்கையின் மேல் வைக்கப்பட்டிருந்த மது நிரம்பிய டம்ளரைப் பார்த்து கண்சிமிட்டியவாறு Carry on என புன்னகைத்துவிட்டு ஜனா சாரிடமும், முத்துக்குமாரிடமும்  தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தில் ஆட்டோகிராப், வாங்கியபோது கவனித்தேன். அவர் கையில் வைத்திருந்தஅறம்தொகுப்பில் ஏற்கனவே நானும் கையெழுத்திட்டிருந்தேன்.

டி.எஸ்.பி.யின்  வண்டி எங்களை விட்டகன்றபோதுதான் ஜனா சார் மீண்டும் சகஜ நிலைக்கு வந்தார்.

நீங்க எவ்வளவு  முக்கியமானதொரு ஆளுமை? ஏன் போலீசைப் பார்த்து இப்படிப் பயப்பட்றீங்க சார்  என நான் கேட்டதற்கு எம்.எல். மூவ்மெண்ட்ல இருந்து செயல்பட்ட யாருக்கும் இந்த எச்சரிக்கையும், பயமும் இருக்கும் பவாஎன என் கண்களை ஏறெடுத்தார். நான்தான் அப்பார்வையை சந்திக்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக்கொண்டேன்.

நடந்தவற்றை ஒரு பார்வையாளனைப் போல பார்த்துக்கொண்டிருந்த தம்பி முத்துகுமார் இரு விஷயங்களிலேயும் அனுபவமற்றவன். அனாலும் அவன் தான் முதலில்ப் பேசினான்.

பவாண்ணா, எங்க டைரக்கடர் (பாலுமகேந்திரா) ஒரு கான்ஸ்டேபிள் தீபாவளி இனாம் கேட்டுவந்தால் கூட ஆயிரம், ரெண்டாயிரம் தருவார்ணா, ஏன் சார்  இவ்ளோ கொடுக்கறீங்கன்னு கேட்டா

உனக்கு போலீசா பத்தி தெரியாதுடா, ஷோபா தற்கொலை விஷயத்துல நான் அனுபவச்சிருக்கேண்டா என ஒரு பெருமூச்சு விடுவார்ணாஎன சொன்னபோது அவன் குரல் உடைந்தது.

எதனாலோ மது நிரப்பப்பட்ட அக்காகித டம்ளர்களை அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டுவிட்டோம். அன்றிரவை ஜனா எங்களிருவருக்கான் தன் இயக்க அனுபவபகிர்வாக மாற்றிக் கொண்டார்.

இச்சிறு ஜீவிதத்தில் அவர் எங்களுக்கு விட்டுச்சென்றிருக்கிற நினைவுகள் என் எழுத்திலடங்காதவை.

லாபம்படம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முறை பத்தாயத்திற்கு தன் உதவியாளர்கள், ஒளிப்பதிவாளரோடு ஒரு சாயங்காலத்தில் வந்திறங்கியவர்களுக்கு அன்றிருந்த மனநிலைக்கு அந்த இடம் அப்படிப் பிடித்துப்போக அங்கேயே இருநாட்களுக்கு தங்கி விவாதிப்பதையும், லொகேஷன் பார்ப்பதையும் வைத்துக்கொள்வோம் என சொன்னபோது சிலபேர் நகரத்தல் இன்னும் சௌகர்யமான அறைகள் வேண்டுமென அடம்பிடித்தார்கள்.

ஜனா சார் அவ்வளவு கெட்டவார்த்தைகளைப் பேசுவார். என அன்றுதான் அறிந்துக் கொண்டேன்.  “எல்லாரும்  போங்கடா, நான் இங்கதான் இருப்பன். இங்கிருந்தா தாண்டா, வந்தன் நான். எங்கம்மா இட்லி  சுட்டு வித்தவ என  பெருங்குரலெடுத்தார்.”

ஷைலஜாவை  பார்க்கும்போதெல்லாம், அவள் கையால் பறிமாறும்  உணவருந்தும் போதும்எனக்கொரு பொண்ணுப் பாருக்கா, இயக்கம், கொள்கை, திரைப்படம்னு அப்படியே காலம் போயிடிச்சிக்காஎன மறக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.

எங்களால்தான் அது கடைசிவரை முடியாமல் நிறைவேற்ற போய்விட்டது  ஆழ்ந்து யோசித்தால், அவரைப் பகுதிநேர சினிமா இயக்குநர் எனக், துணிந்து என்னால் சொல்லிவிட முடியும். அவருக்கு திரைப்படங்களைத் தாண்டியப் பலக் கனவுகளிருந்தன.

லோகாயுதா என்ற அமைப்பின் மூலம் உலகின் பலமொழிக் கலைஞர்களை ஒன்றிணைக்கவும், ஜாதி, மதமற்ற முக்கியமாக போரற்ற ஒரு பூமியாக இப்புவியை மாற்றிவிட துடித்த ஒரு கனவின் மிகுதி அது. உலக வரைபடத்தின் கோடுகளை கலைஞர்களால் மட்டுந்தான் அழித்துவிட கனவுகான முடியும் என அவர் நம்பினார்.

கவிஞன் ரமணன் பாடுவதைப் போல,

கோடுகள் இல்லா உலகம்

ஒரு நாள் வானில் சுழன்றிட வேண்டும்

அதில் கூடுகளின்றி மனிதர்கள் யாவரும்

கூடி மகிழ்ந்திட வேண்டும்.”

இந்த பெருங்கனவு ஒன்றுதான் எடிட்டிங் தியேட்டரின் செயற்கை குளிரூட்டப்பட்ட அறையில் அன்று பிற்பகல் தமிழ் மண்ணைவிட்டு கலைந்து போனது.

 

  

 

 

No comments:

Post a Comment