Saturday, March 2, 2024

 

”தமிழ்நிலத்தின் அசல்படைப்பாளி இராஜேந்திர சோழன்”

-பவா செல்லதுரை
என் கல்லூரி நாட்களில்தான் இராஜேந்திர சோழன் என்றப் பெயரை செம்மலர் பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பார்த்தேன்.

டி செல்வராஜ், கு. சின்னப்பபாரதி, மேலாண்மைப் பொன்னுசாமி போன்ற எழுத்தாளர்களின் உரத்த குரலில் பெரும் கலக்கமடைந்திருந்த என்னை ராஜேந்திர சோழன், கந்தர்வன், ச.தமிழ் செல்வன் போன்ற  படைப்பாளிகள் கலைக்கு மிக அருகில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

மற்ற இருவரையும் விட இராஜேந்திர சோழன் மனதிற்கும், வாசிப்பதற்கும் என் வாழ்விற்கும் கூட மிக நெருக்கமாக வந்ததற்குக் காரணம் அவர் என் சொந்த நிலத்தின்  படைப்பாளி. எங்கள் மல்லாட்டைக் கொல்லையிலிருந்து கூப்பிட்டால் மயிலம் அரசுத் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற ராஜேந்திர சோழனுக்கு கேட்டு விடும் என நம்பினேன். என் நிலப்பரப்பின் மொழியை அவர் கதைகளில்தான் முழுதாகப் பருகினேன். என் அப்பாவும், அம்மாவும் வீட்டில் எப்போதும் பேசிக் கொள்ளும் “வா தே” “போ தே” என்ற சொல்லாடலை அவருடைய தனபாக்கியத்தின் ரவநேரம் “புற்றியுறையும் பாம்புகள்” போன்ற கதைகளில் வாசித்து, என் குடும்பமும், இலக்கிய உரையாடலுக்கு அருகில் தான் உள்ளது என திருப்திபட்டுக்கொண்ட நாட்கள் அவை.

 முற்போக்கு இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டே, அசலான தமிழ் நிலத்தின் கதைகளை எழுதிய படைப்பாளிகளலான ஜெயகாந்தன், இராஜேந்திர சோழன், கந்தர்வன், தமிழ்ச்செல்வன் என சிலரையே இப்போதும் சொல்ல முடிகிறது.

ஆனால் இந்த மதிப்பீடு இராஜேந்திர சோழனின் படைப்பாற்றல் மிக்க ஆரம்ப கால படைப்புகளுக்கும் பொருந்தும். அவரின் பிந்தைய படைப்புகள் அதீதம் முற்போக்கு தமிழ் தேசியம், அல்லது மார்க்சிய இலக்கியங்களை கிண்டலடித்தல் என படைப்பு மனநிறைவிலிருந்து விலகி வெகுதூரம் போய்விட்டது.

எப்போதாவது செம்மலரின் படித்த கதைகளை ஒரு சேர க்ரீயாவின் வெளியீடான எட்டுக்கதைகள், தொகுப்பாக வாசித்தபோது அப்போது என் வாசிப்பிலிருந்து மற்ற எல்லா தொகுப்புகளையும் பின்னுக்கு தள்ளவேண்டியிருந்தது. இவைகள் தான் என் சொந்த நிலத்தின் அசலானப் படைப்புகளை உணருவதற்கு பிரயத்தனப்படவில்லை.

புதுமைப்பித்தன், ஜானகிராமன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பூமணி, வண்ணநிலவன் என எல்லோருக்குமே எனக்கு வெகு தூரத்திலிருந்தார்கள். இராஜேந்திர சோழன் மட்டும் நான் தொட்டும் விடும் தூரத்திலிருந்தார்.

அப்போது நான் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டு இருந்தேன். நினைத்த நேரத்தில் நண்பர்களோடு சைக்கிளிலோ, டூவிலரிலோ, மயிலம் போய் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திலும் மிகுந்த ஏமாற்றதோடு அறைக்குத் திரும்புவேன். காரணம் அன்றைய எங்கள் உரையாடலில் இலக்கியத்திற்கு பதிலாக அவரின் அன்றைய அரசியலும் அவர் பார்வையில் இடதுசாரி கட்சிகளின் போதாமையையும், அவரால் விமர்சிக்கப்படும்.

நான் பெருங்கனவோடு எதிர்ப்பார்த்துப்போன என் நிலத்தின் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல் கிட்டத்தட்ட  அவரின் நேர்ப் பேச்சில் எனக்கு கிட்டவேயில்லை.

அந்த காலம்தான் ராஜேந்திர சோழன் என்ற படைப்பாளி பின்னகன்று, அஸ்வகோஷ் என்ற நாடக செயற்பாட்டாளனும், அரசியல் முன்னெடுப்பாலும், முதல் வரிசையில் நின்ற காலம். என்னை மாதிரி பல இலக்கிய வாசிப்பாளர்களிலிருந்து அவர் தூர விலகியதும் இக்காலத்தில்தான்.

கோணங்கி மாதிரியான படைப்பாளிகள், அவரின் துவக்க கால அசல் படைப்புகளில் மனம் தோய்ந்து, வருடத்திற்கு இரு முறையாவது மயிலத்திலேயே முகாமிட்டு இருப்பார்கள்.

திருவண்ணாமலைக்கு அவரை பலமுறை நாடகப்பயிற்சிக்கும், இலக்கியப் பயிலரங்கங்களுக்கும் அழைத்திருக்கிறோம்.  ஒரு ஹெட்மாஸ்டர் தோரணையில் அவர் நாடக பயிற்சியாளர்களை பயிற்றுவிப்பதை பார்ப்பேன். அது தியேட்டர் செயல்பாடுகளுக்கு அவசியம் என்பதை பின்னாட்களில் உணர்ந்தபோதும்,

இராஜேந்திர சோழன் மாதிரி படைப்பு மனநிலை சார்ந்த ஒருவரிடம் என்னால்  அதை எதிர்பார்க்க முடியவில்லை.

அவர் அவ்வப்போது எழுதி வெளியிட்ட இலக்கியம், அரசியல் சார்ந்த துண்டு பிரசுரங்கள் உட்பட அவரின் எல்லா பிரசுர படைப்புகளும் இன்றும் என்னிடமுள்ளன.

இந்திரா காந்தியின் ‘இருபதம்ச திட்டம்’ வெளிவந்த போது ‘இருபத்தி ஓராவது அம்சம்’  என்ற படைப்பு கைக் கூடாத பிரச்சாரப் படைப்பை அவர் எழுதி தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார். இந்த நாவலுக்காக அவரின் ஆசிரிய பணியிலிருந்து கூட அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தன் எட்டுக் கதைகளில் எட்டுக் கதைகளையுமே வட தென்னற்காடு மனிதர்களின் உயிருள்ள வாழ்வியலையும்,விவசாயம் சார்ந்த,  வீட்டிற்குள் ஏற்படும் பாலியல் பிரச்சனைகளோடும் மல்லுக்கட்ட நேர்ந்த வாழ்வை அச்சு அசலாக அப்படியே உலகிற்கு அளித்த ஒரு உன்னதமான படைப்பாளி தன் ஜீவிதத்தின் பின் பகுதியில் இயக்கம், தமிழ் தேசியம், அதன் செயற்பாடுகள் என தன் மனதையும், உடலையும் பறிகொடுத்து தன் உயிரோட்டமுள்ள படைப்பு மொழியை இழந்தார் என்பதுதான் பெரும் துயரம்.

என் வாழ்வின் பல தருணங்களில் ‘எட்டுக்கதை’ -யை பல முறை என் வாசிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அது எனக்கு ஒரு புதிய தரிசனத்தையும் அனுபவத்தையும், தர தவறியதேயில்லை.

கொஞ்சமும் மிகையில்லாமல். கெஞ்சமும் சொல்லத் தவறாமல், வாசகனுக்கு விடவேண்டிய இடைவெளியை இடத் தயங்காமல் இம்மனிதால் எத்தனை கச்சிதமாக கதை எழுத முடிகிறது! என ஒவ்வொரு வாசிப்பின் போதும் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

அந்த உந்துதலில்தான் அவரின் பல கதைகளை நான் ‘கதை கேட்கவாங்க’ நிகழ்வில் உயிரோட்டமாக சொன்னபோது, என்னை தொலைபேசியில் அழைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 பத்திருபது வருடங்களாக அறுந்துகிடந்த எங்கள் நட்ப்பின் சங்கிலியை எந்த கொல்லன் பட்டறைக்கும் போகாமலேயே நாங்களாகவே மீண்டும் இணைந்துக் கொண்டோம்.

பலமுறை நாங்கள் பத்தாயத்தில் நடத்திய பயிலரங்களுக்கு அவரை அழைத்துப் பேசச் சொன்னோம். அரசியல் ரீதியாகவும் தனிமைப்பட்டிருந்த அந்நாட்களில் அது அவருக்கு மிகுந்த மன ஆறுதலாக இருந்ததாக பல முறை நேரில் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டை ஒரு சௌகர்யத்திற்காக இலக்கிய ரீதியாக வடக்கு, தெற்கு, மேற்கு என பிரித்துக் கொண்டால், எங்கள் வட திசை மக்களின் வாழ்வியலை, அல்லது வாழ்க்கை பாட்டை எழுவதற்கு எங்கள் பலருக்கும் அவரே முன்னத்தி ஏர் என்பதை பல படைப்பாளிகளும், பலத் தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 இமயம், கண்மணிகுணசேகரன், கரிகாலன், தங்கர்பச்சான், பவா செல்லதுரை, காலபைரவன், அசதா, செஞ்சிதமிழினியன் என  இப்பட்டியல் தென்பெண்ணை கரையில், துவங்கி பாண்டிசேரி கடற்கறை வரை நீளக்கூடியது. ஒரு பெரும் படைப்பாளி என்பவன் தன் வாழ் நாளில் இப்படி பலப் பேருக்கு உந்து]சக்தியாகவும் நேரடியான அல்லது மறைமுக ஆதர்சமாக இருக்க வேண்டும். தெற்கில் எப்படி கீரா கரிசல் மண் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தாரோ, அல்லது இன்னும் இருப்பாரோ அப்படியே எங்களுக்கும் எப்போதும் இராஜேந்திர சோழன் தான்.

எழுத்தாளர்களில் ஜி.நாகராஜனைப் போல கம்பீரமான தோற்றம் பெற்ற இராஜேந்திர சோழனை நோய்மை தாக்கி, அதனால் உடல் தளர்வுற்று பார்த்த போது தான், சிங்கப்பூரிலிருந்து அவர் வாசகர் உமா கதிரும், அவர் நண்பர்களும் சேர்ந்து அவரை ஒரு ஆவணப்படம் எடுக்கவேண்டுமென விரும்பினார்கள், அப்படத்தை என் மகன் வம்சி இயக்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. நான் தான் அவரிடம் அதற்கு அனுமதி வாங்கினேன். மிகுந்த ஆர்வத்தோடு அப்படத்தில் அவர் தன்னை பகிர்ந்திருப்பார்.

அப்படத்தின் திரையிடலை சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் வைத்தபோது, தன் குடும்பம் மற்றும் பெருந்திரளான தன் நண்பர்களோடும் அதில் பங்கேற்று மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். வம்சியை தன் பேரக் குழந்தையாகவே பாவித்து தன் மயிலம் வீட்டில் அவருடனேயே சில நாட்கள் தங்கவைத்துக் கொண்டார்.

விஷ்ணுபுரம் முதல் விருது அவருக்குத்தான் அறிவிக்கப்படயிருந்தது. மார்க்சிய கொள்கைகளில் ஊறித் திளைத்திருந்த அவர்  அதை நிராகரித்தார். அவ்விருதை பெற்றால் என் அரசியல் வாழ்வு கேள்விக்குள்ளாகும் என சொல்லி அதை மறுத்தார்.

விருதையும், பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கொரு ஒரு வலுவான காரணத்தைத் தேடும் படைப்பாளிகளுக்கு மத்தியில் அதை துவக்கத்திலேயே நிராகரித்த உறுதியான மனம் அவருக்குண்டு.

இரண்டாண்களுக்கு முன்பு கூட அவர் தமிழில் எழுதிய ’இச்சை’ என்ற சிறுகதை பெரும் விவாதற்குள்ளானதை தமிழ் இலக்கிய உலகம் அறியும். கலாச்சார காவலர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின இக்கதையின் நிஜ வடிவங்களை பல கிராமங்களில் நாம் தினம் தினம் இன்றும் சந்திக்க முடியும். நிகழ் கால இலக்கிய உலகோடு இத்தனை நோய்மைக்குப்பின்பும்

அவருக்கு தொடர்பும் சர்ச்சையுமிருந்தது. பெரும் படைப்பாளிகள் பலரும் லௌகீகத்தோடும், நோய்மையாலும் வீட்டிற்குள் அடைந்து விடாமல் இப்படித்தான் எப்போதும் திமிருவார்கள் என்பதுதான் இராஜேந்திர சோழனின் படைப்படையாளம்.

பத்துவருடங்களுக்கு முன் சென்னைப் புத்தக கண்காட்சியில் நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டி அவருடைய எட்டுக் கதைகள் தொகுப்பை தேடியலைந்து ஏமாந்தேன்.

அடுத்த நாள் அதிகாலை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு எட்டுக்கதைகள் எங்கும் கிடைக்கவில்லை எனவும், நாங்களே அதை வம்சியில் பதிபிக்கட்டுமா? என கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் ஒப்புதல் அளித்தார். அதன்பின்பே எட்டுக்கதைகள் எங்கும் கிடைக்கும் தொகுப்பாக மாறியது.

 

படைப்பாளிகளில் ஏராளமான நண்பர்களைக் பெற்றவர் அவர். தொடர்ந்து பயணித்து அவர்களெயெல்லாம் சந்திக்க முடியாமல் செய்துவிட்டதே இந்த நோய்மை என்ற கவலை மட்டுமே அவருக்குக்கிருந்தது. வட தென்னற்காடு வாழ்வியலை அறிந்துகொள்ள எத்தனிக்கும் ஒரு படைப்பாளியோ, வாசகனோ அவரின் எட்டுக் கதைகளை மட்டுமே வாசித்தால் போதும் என்பேன்.

எங்கள் நிலத்து  வாழ்வியலுக்கான பெருமிதத்தை தந்த ஒரு பெரும் படைப்பாளியை இப்போது நாங்கள் எல்லோருமே இழந்து நிற்கிறோம்.

No comments:

Post a Comment