Wednesday, November 13, 2013

மூன்று நிகழ்வுகள்



சனிக்கிழமை காலையே நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த பால்சக்காரியாவின் ‘யேசு கதைகள்’ திறணாய்வுக் கூட்டத்திற்காக வேலூருக்கும், இன்னொரு குழு ஓவியர்கள் சீனுவாசன் – பாலசுப்ரமணியன் உரையாடிய நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகப் பகிர்வுக்காகச் சென்னைக்குமாகப் பிரிந்தோம். முதல் குழுவில் தோழர்கள் அமலதாஸ், காளிதாஸ், ஆனந்தியும் எங்கள் குழுவில் கார்த்தி, ஜெய், சத்யா என்றும் அடங்கியிருந்தார்கள்.
நாங்கள் சென்னை போய் சேர்வதற்குள் வேலூரில் நடந்த கூட்டம் பற்றிய செய்திகளை அவரவர் செல்போன்கள் அவசரப்பட்டு அறிவித்துக் கொண்டேயிருந்தன.
கூட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் பாதிரியார்களும், பேராசியர்களும். தொகுப்பிலுள்ள பதிமூன்று கதைகளைப் பற்றி பதின்மூன்று பேர் பேசுகிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. யாருமே யேசுவை மீட்பர் என்றும், கடவுளென்றும். உச்சரிக்கவில்லை.


சக்காரியாவுக்கு மட்டுமல்ல நமக்கும் தோழன்தான் இந்த யேசு. தேவாலய பீடங்களிலிருந்து உச்சரிக்கப்படும் இக்குரல்கள் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன. ‘அல்லேலுயா’ இதோ உள் ‘தேவனின் வருகை’ இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற அபத்தங்களற்று, யேசு ஒரு தோழனாக, நண்பனாக, சகோதரனாக, காதலனாகப் பார்க்கப்படுகிறார்.
எங்கள் கார் பயணம் நம்பிக்கைகளால் நிறைந்து கொண்டேயிருந்தது.
வேலூர் கூட்டம் முடிந்து நேராக அவர்கள் புக்பாய்ண்ட்டுக்கு ஆறு மணிக்குள்ளாக வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் பதினைந்து நிமிடத் தாமதத்தில் அங்கிருந்தோம். வரவேற்பறையில் புதுசு புதுசான குஜராத்தி ஸ்வீட்ஸ் என்னை வம்புக்கிழுத்தன. சீனுவாசன் சார் பிடிவாதமாக அவர் புத்தகத்துக்கு வந்திருந்த விமர்சனங்களைப் பேசும் நாவலாக்கியிருந்தார். அவை விரித்து வைக்கப்பட்டிருந்த மேடை புதிய வண்ணங்களால் நிறைந்து தன்னைத் தேர்ந்தெடுத்த அந்த ஓவியனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தன.



இரண்டு பெண்கள் கச்சேரியில் பாடுவது போல சப்பராங்கால் போட்டமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். என் மனம் வரவேண்டிய விருந்தினர்கள் எஸ்.ரா, பிரபஞ்சனுக்காக அலைந்து கொண்டிருந்தது.
முன்வரிசையில் நான் இன்றளவும் மிக மதிக்கும் ஆளுமை சே. ராமனுஜம் தன் வழக்கமான வெள்ளை பைஜாமா, ஜிப்பாவோடு கால்மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இது எதுவுமில்லாமலேயே இயல்பான கம்பீரத்தோடு கூத்துப் பட்டறை நா. முத்துசாமி அருகிலிருந்தார். அவருக்கும் பக்கத்தில் நரசய்யா. இக்கூட்டத்திற்கு சம்மத்தமே இல்லாத நிறந்தோடும் அழகோடும் இன்னொரு பெண் இருந்தார். யாரையும் கேட்காமலேயே அவர்தான் சௌமியா அன்புமணி என அறிந்தேன்.

அடுத்து முன் வரிசையில் தனியே தமிழச்சி இருந்தார். ஒவ்வொருவரும் அவரருகிலமர்ந்து ஓரிரு வார்த்தைகளில் பேசிக் கொள்வதும், படமெடுத்துக் கொள்வதும், ஒவ்வொருவருக்கும் தர அவரிடம் தனித்தனியே பிரியம் இருந்ததையும் கவனிந்தேன். அரங்கில் சீட்டுக்கட்டுகள் போல் கலைந்திருந்த கலைஞர்களில் அங்கங்கே ஓவியர் மணியன் செல்வம், கோணங்கி, மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி என்றிருந்தார்கள். கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழ் ஸ்டுடியோ அருண் என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டார்.
மேடையில் நான் தனித்து நின்று அரங்கை ஒருமுறை கண்களால் பருகினேன்.
என் சிறு வயது முதலே பார்த்து வியந்த ஆளுமைகள் அரங்கில் நிறைந்திருந்தார்கள். நடுக்கமில்லை. ஆனாலும் பரவசப்பட்டேன். நாடகக்கலைஞர் சே. ராமனுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, ஓவியர். மணியம் செல்வன், கோணங்கி ஆகியோருடனான என் பழைய ஞாபகங்கள் அடுக்கடுக்காய் நினைவில் கசிந்து வார்த்தைகளால் ஒழுகியது.


புரிசையில் தன் ஒவ்வொரு நாடகமும் நிறைவடைகையில் ராமனுஜம் சாருக்கு ஊர்மக்கள் அந்த நள்ளிரவில் மண் மொந்தையில் அருந்த பனங்கள் கொடுப்பார்கள். அவர் ஒரு பச்சிளம் குழந்தையைக் கையிலேந்துவதைப் போல அதை வாங்கி ஆயிரம் வாட்ஸ் வெளிச்ச உமிழ்தலுக்கிடையே குடிப்பார். ஒரு கலைஞனுக்கான தைர்யமும் பெருமிதமுமது. இதை நான் சொன்னபோது ராமனுஜம் சார், ஒரு மணப் பெண்ணைப்போல முறுவலித்ததும், அருகிலிருந்த ந.முத்துசாமி அவர் தோளில் தட்டி காதில் ஏதோ கிசுகிசுத்தார். (என்னை விட்டுட்டு போயிட்டேயாய்யா) அதற்கு அவர் அந்த அரங்கமே அதிர சிரித்தார். புரிசையில் கேட்ட அச்சிரிப்பைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேட்டேன். தமிழச்சி, சௌமியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் தங்கள் தனித்துவத்தோடு பேசினார்கள். வழக்கமான தன் மேடை மொழியை உதறி, தன் அந்தரங்க நண்பன் ஒருவனுடன் பாரில் பேசிக் கொள்வது போல கிருஷ்ணகுமார் பேசினது எல்லோரையும் கவர்ந்தது.


யாருமே எதிர்பார்க்காமல் பட்டியலில் எப்போதும் இல்லாத கோணங்கியைப் பேச அழைத்தேன். அவனால் மறுக்க முடியாது எனத் தெரியும். திருவண்ணாமலையில் இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஓர் பேச்சைக் கிளறிவிட்டேன். அக்கருத்தரங்கில் அவன் உரையாடல் பாதியில் அறுந்ததை நினைவு படுத்தினேன். அதை அப்போது நிறுத்தின பி.கே.வைப் பார்த்தேன். எல்லாரும் உன்மத்த மனநிலையிருந்தோம்.

கோணங்கி சிரித்துக் கொண்டே மேடையை நோக்கி ஓடிவந்தான். காற்றில் அலைந்து கொண்டிருந்த ஒரு துவக்க வார்த்தையைக் கையிலெடுத்தான், இல்லை ஏற்றினான்.
வார்த்தை தீப்பிடித்துக் கொண்டது. முத்துசாமி அவன் நிகழ்த்து கலையை ஆழ்ந்து கவனித்தார். அரைமணி நேரம் அம்மழை நீடித்தது. நான் முழுக்க நனைந்திருந்தேன். சீனுவாசனும் பாலு சாரும் தலைதுவட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த ஈரத்திலேயே அறைக்குத் திரும்ப வேண்டும் போலிருந்தது.

Monday, November 11, 2013

பால் சக்காரியாவின்



பால் சக்காரியாவின் யேசுகதைகள் (தமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ) பற்றி இம்மாத (நவம்பர் புத்தகம் பேசுது இதழில்) எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா











Tuesday, November 5, 2013

ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு – Extention


பவா செல்லதுரை


ஜெயஸ்ரீயின் கணவர் உத்ரகுமாருக்கு அவருடைய குடும்ப பாகமாக 3 லட்ச ரூபாய் கிடைத்தபோது அதை வைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு 50 அடியுள்ள மனையும் கிடைக்காதபோது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.
நம் நிலத்தருகே  50 சென்ட் இடம் வாங்குவது, ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவது. அது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன்மேல் கடக்கால் போடப்பட்டபோது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடக்கால் தோண்டி அக்கருங்கல் துண்டுகளோடு செம்மண் கலந்து கரைத்துவிட்டு கடக்காலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.
என்  நண்பன்புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினு பாஸ்கரின் தம்பி பிஜூ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான கனவு காண்பவனும்  கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.
அவ்வீட்டிற்கான ஒரு பிளானைத் தந்துவிட்டு வழக்கமான எல்லாக் கலைஞர்களையும் போல எங்கேயோ காணாமல்   போனான் பிஜூ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான்ஷைலஜாஜெயஸ்ரீஉத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்.  கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனைத் தற்செயலாக சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும்தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது பத்து உடைகற்களைக் கொண்டு சீத்தாப்பள்ளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடிஅவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.

அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்கள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைக்கூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும் மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கருங்கற்தூண்கள் தூக்கி நிறுத்தப்பட்டபோது அனைவரும் பரவச மனநிலையை அடைந்தோம்.
அவ்வீட்டின் கட்டுமானத்தை மூன்றாகப் பகுத்துக் கொண்டேன். முதலில் கறுப்பும், நீலமும் கலந்த கருக்கற்களோடு சிகப்பு கருங்கற்களை சேர்க்கும்போது அச்சுவர் மேலும் அழகடையும். அதைத் தேடுவது. அதையும் அதன் சுற்றுப்புறங்களிலேயே சேகரிப்பது. அதிக அலைச்சலின்றி, அவ்வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டரில் தென்மாத்தூர் ஏரிக்கரைக்கருகில் ஏழுமலை என்பவர் தோண்டி போட்டிருந்த கல்லணைத்தும் சிகப்பு நிறமுள்ளவை.
நானும் ஜெயஸ்ரீயும் ஒரு மாலையில் அதைக் கண்டடைந்தபோது குதூகலித்தோம். அதன் ஒரு சிறுதுண்டை ஒரு குழந்தையை ஏந்துவதுபோல ஜெயஸ்ரீ கையில் ஏந்திக் கொண்டார்கள்.
வீட்டைக் கட்டப் போகும் மாதுவிடம் அதைக் காண்பித்தபோது ‘‘இதான் சார் இதான் சார்’’ என அதை ஆமோதித்தார்.
எனக்கு இதனூடே சுத்தக் கறுப்பு நிறத்திலான கற்களையும் சேர்க்க வேண்டுமென ஆசையிருந்தது. மரபான பலர் ‘‘கறுப்புக் கற்களை வீட்டிற்கு பயன்படுத்தக்கூடாது’’ எனத் தடுத்ததை, ஒரு சொல்லில் நிராகரித்தேன். இக்கறுப்புக் கற்களின் பாலீஷ் செய்யப்பட்ட வடிவம்தான் கிரானைட் கற்கள். அதை வீட்டிற்கு, அடுப்புத்திட்டிற்கு என பயன்படுத்தவில்லையா என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
ஆக இப்போது எங்கள் முன் நீலம், சிகப்பு, கறுப்பு ஆகிய மூன்று நிறங்களிலான உடைகற்கள் குவிய ஆரம்பித்தன. எனக்கு மட்டும் இன்னும் ஏதோ குறைவது போலிருந்தது. இன்னொரு நிறம் தேவைப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக பூமியில் புதைந்து கிடந்த பாறைகளை ஜே.சி.பியின் மூலம் தோண்டியெடுத்தபோது அதன் மேற்புறம் முழுவதும் அடர் மஞ்சள் நிறத்தில் உறுதிப்பட்டிருந்தது. ஒரு பக்கம் நீலமும், இன்னொருபுறம் அடர்மஞ்சளிலான கல்லும் சுலபமாகக் கிடைத்தன.
இப்போது கட்டுமானத்தைத் துவங்கினோம். மாது அநியாயத்திற்கு இருமடங்கு சம்பளம் கேட்டார். என் ஆர்வம் அவனைப் பணமாக மாற்றியிருந்தது. அதன் ஆரம்பம் தள்ளிப் போய்விடக் கூடாதென்பதற்காக அனைத்திற்கும் சம்மதித்தேன்.

எங்கள் ஊரில் ஒரு மேஸ்திரிக்கு ஒருநாள் சம்பளம் 500/- ரூபாய்தான். மாது 1000/- கேட்டார். உதவியாளுக்கு முன்னூறுக்கு பதில் எழுநூறு கேட்டார். உள்மனதில் ஒரு கணக்குப் போட்டேன். வித்தையை உள்ளூர்காரர்கள் கற்றுக் கொள்வதற்கான தட்சணை இது. பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டேன். என் சம்மதங்கள் மாதுவுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் உதவியாட்கள் அனைவருக்கும் மூன்றுவேளையும் சோறு போடுவதாகச் சொன்னேன். அவ்வார்த்தை மாதுவை ஒரு சிறு குழந்தையாக்கி என் உள்ளங்கை கதகதப்பிற்குள் கொண்டு வந்தது.
எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அற்புதமான காலையில் தமிழின் மிக முக்கிய கவிஞன் விக்ரமாதித்யன் முதல் கருங்கல்லைத் தூக்க முடியாமல் தூக்கி சனிமூலையில் வைக்க எங்கள் எல்லோரின் பெருங்கனவு ஒன்று ஊழித்தீ போல பெருக ஆரம்பித்தது.
பத்துபேர் சேர்ந்து பணிபுரியும் இடத்தில் நிகழ இருக்கும் கருத்து மோதல்கள், உடல் சிராய்ப்புகள், தடித்த வார்த்தைகள், மனித ஈகோ எல்லாவற்றையும் நான் நன்கறிந்திருந்தேன். ஒவ்வொரு நாளும் ஈரமான வார்த்தைகளால், வாஞ்சையான செயல்பாட்டால் கல்லின் மீது படியும் சிமெண்ட்டை அவர்கள் துடைப்பது போலவே நானும் அவர்களறியாமல் துடைத்துக் கொண்டே போனேன். ஆனால் இது அரூபமானது.
உள்ளூர் மேஸ்திரிகள் இரண்டு மூன்று பேரை மாதுவுக்கு உதவியாளர்களாய் சேர்த்துவிட்டு என் எதிர்கால திட்டத்தைத் துவக்கினேன். நான் எதிர்பார்த்தது போலவே மாதுவைவிட வேகமாக காமராஜூம், குமாரசாமியும் கருங்கற்களைக் கைக் கொண்டார்கள்.
கட்டிடம் வளர வளர நாங்களனைவரும் அதனுள் அமிழ்ந்து போனோம். எங்கள் தலைகளைத் தாண்டி அது உயர்ந்திருந்தது. எங்கள் எல்லோரையும் கலவரப்படுத்திய ஜன்னல், வாசற்படிகளுக்கு, சிலாப் எப்படிப் போடுவது என்ற கேள்வி ஒரு குட்டி பிசாசைப் போல அவ்வீட்டின் முன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டது. எல்லோரும் வேலை முடித்து போய்விட்ட பின் நான் மட்டும் அக்கட்டிடப் பரப்பினுள் கையில் ஒரு சிகரெட்டோடு அலைந்து கொண்டிருந்தேன். தூரத்திலிருந்து அப்பிசாசு என் தோல்வியை எதிர் நோக்கிக் காத்திருந்தது. முடிவை உள்மனம் எட்டியபோது எதிரிலிருந்த ஒரு கட்டுக்கல்லை வன்மத்தோடு காலால் உதைத்தேன். அப்பிசாசு இடமகன்றது.
அன்றிரவு ஜெயஸ்ரீயை தொலைபேசியிலழைத்து காலை ஆறுமணிக்குத் தயாராக இருக்கும் படியும், ஒரிடத்திற்குப் போக வேண்டுமென்று மட்டும் சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

அடுத்தநாள் காலையின் பேரழகை தள்ளிக் கொண்டு நாங்களிருவரும் அடியண்ணாமலை கிராமத்தின், யாரையும் பயமுறுத்தும் கல்குவாரியின் முன் நின்றோம்.
ஆண்டாண்டு காலமாய் அடியண்ணாமலைப் பாறைகளில் நெருப்பிட்டு கொளுத்தி பாளம்பாளமாகப் பலகைக் கற்களை வெட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுத்த திரேகங்களோடு அப்பாறைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான், ஆறு ஜன்னல், இரண்டு வாசற்படிகளுக்கு நாலடி வீதம் பலகைக் கற்கள் வேண்டுமெனக் கேட்டேன். ஜெயஸ்ரீயின் முகத்தைக் கவனித்தேன். திகைப்பும், ஆனந்தமும், முடிவும் அறிந்த அதன் முக பாவனைகளைக் கொண்டுவர எழுத்திற்கு வலுவில்லை. கேமராக்கள் முயலலாம்.
இத்தனை அழகானதொரு கல்வீட்டிற்கு சிமெண்ட் கான்க்ரீட் சிலாப்புகள் பொருத்தமற்றவை. அதுவும் கருங்கல்லாலேயே என்ற என் தீர்மானத்தின் ஆரம்பம்தான் இந்த அடியண்ணாமலையின் பலகைக் கல் குவாரி.
இரண்டாம் நாள் காலை மாட்டு வண்டிகளில் இரண்டிரண்டு கற்களாக அவ்வீட்டின் முன் வந்து அப்பலகைக் கற்கள் இறங்கின, வாழப்போகும் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள்களின் குதூகலத்தோடு.

வண்டிமாடுகளைத் திரும்பியனுப்பிவிட்டு நானும் ஷைலுவும் இதை எப்படி இவ்வளவு உயரமுள்ள கட்டிடத்தின் மேலேற்றுவது என விவாதிக்க ஆரம்பித்தோம். என் நினைவில் எப்போதோ எங்கோ இதைவிட பெரிய பாறாங்கல்லை அநாவசியமாகத் தூக்கித் திரிந்த ஒரு கிரேன் நிழலாடியது.
அடுத்த அரைமணி நேரத்தில் அக்கிரேன் அவ்வீட்டின் முன் நின்றது. அதற்குள் காமராஜையும் குமாரசாமியையும் வரவழைத்திருந்தேன்.
எந்த விவாதமும் வேண்டாம். செயல்படுத்துவோம் என முதல் கல்லை கிரேனில் கட்டி அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு காமராஜ் நின்று கொள்ள, ஒரு வித்தை மாதிரி அக்கல் வானவெளியில் அலைந்து அக்கட்டிட ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து கொண்டது. அக்கல்லின் மீதேறி நின்று காமராஜ் கைத்தட்டி குதூகலித்தது இன்னும் நினைவில் அகலாதது.
திரும்பிப் பார்த்தால் பக்கத்தூர் ஜனங்கள் பாதிக்கும் மேல் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தார்கள். நான் உள்ளூர பெருமிதத்திலிருந்தேன். மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் எல்லாப் பலகைக் கற்களும் அதனதன் இடத்தில் அம்சமாக உட்கார்ந்து கொண்டன. மனித உடலால் சாத்தியமற்ற ஒன்றை, அவனால் வடிவமைக்கப்பட்ட இயத்திரம் ஒரு அடிமையைப் போல நிறைவேற்றித் தந்துவிட்டது. ஸ்லாபுக்கும் மேலே ஆறுவரிகள். ஆறு நாட்களில் நிறைவடைந்தது.

அடுத்து வீடுகட்டும் ஒவ்வொருவரின் பெருங்கனவான கான்க்ரீட். அது நிறைவடைந்துவிட்டால் பாதிவீடு முடிந்துவிடும். எதுவும் எதிர்ப்பார்ப்பில்லையெனில் அப்படியே அடுப்பு பற்ற வைக்கலாம். கான்க்ரீட் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். நண்பர்களின், உடன் பணிபுரிபவர்களின் நகைகளும் வளையல்களும் அடகுக் கடைகளுக்குப் போய் ஜல்லிகளாகவும், மணலாகவும் சிமெண்டாகவும் குவிந்தன.
கான்க்ரீட்டுக்கான நாளாக ஒரு ஞாயிற்றுக் கிழமையைத் தேர்த்தெடுத்துக் கொண்டோம். சனிக்கிழமை இரவே எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு எங்கள் நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போய்ச் சேர்ந்தோம்.
வம்சி அப்போது சிவாஜிகணேசன் படங்களாகப் பார்த்துத் தீர்த்துக் கொண்டிருந்தான். கையோடு ‘வசந்த மாளிகை’ கொண்டு வந்திருந்தான். இரவு பத்து மணிக்கு மேல் அப்படத்தைப் பார்க்கத் துவங்கினோம்.
யாருக்காக? இது யாருக்காக என கணேசன் அந்தக் கண்ணாடி மாளிகையின் முன் நின்று சுழன்று, சுழன்று நடிக்கும்போது தாங்கமுடியாத ஏதோ ஒன்று எங்களை அழுத்த, அப்படியே அப்படத்தை அணைத்துவிட்டு வெளியேறினோம். தென்னை மரத்தின் ஓலைகளின் சப்தம் அலாதியாயிருந்தது. அங்கிருந்து நடந்து நாளைக் காலை கான்க்ரீட் போடப் போகும் ஜெயஸ்ரீயின் வீட்டின் முன் நின்றோம்.

அந்த நள்ளிரவில் சற்றுமுன்தான் கம்பிகட்டி முடித்து தொழிலாளர்கள் இறங்கியிருந்தார்கள். கட்டிடத்தின் மேலேறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிலுமிருந்தது.  ஒரு முடிவுக்கு வருமுன்பே வம்சியும், மானசியும் சுகானவும் ஹரியும் எதன் வழியோ அக்கட்டிடத்தின் மேலேறி அவர்களின் உலகிற்கு எங்களை அழைத்தார்கள். வளைய முடியாத, ஏற முடியாத உடல் வளர்ந்திருந்த எங்கள் இயலாமை வெட்கித் தலைகுனிந்தது.
எப்படியோ ஒவ்வொருவராய் மூச்சு வாங்க மூச்சு வாங்க ஏறினோம். அக்கட்டிட உயரத்தில் நின்று அந்த அகாலத்தில் மலையை நோக்கினோம். மலை பாதி வரைந்து முடிந்த ஒரு யானையைப் போல வெகுதூரத்தில் படுத்துக் கிடந்தது. இன்னும் மூன்று திசைகளில் திப்பக்காட்டின் நீட்சித் தெரிந்தது. வெள்ளி நட்சத்திரம் ஒன்று எங்கள் தலைகளுக்கு மேல் நின்று எங்கள் மேல் வெளிச்சம் உமிழ்ந்தது.

கட்டி முடிக்கப்பட்ட கம்பிகளின் மேலேயே படுத்துக் கொள்ளலாமாவென ஒரு கணம் யோசித்தோம். படுத்திருக்கலாம். முடியவில்லை. ஆனால் அதன்பிறகு ஒருவரும் தூங்கவில்லை. சிவாஜிகணேசன் மீண்டும் மீண்டும் யாருக்காக? யாருக்காக வென எங்கள் தூக்கங்களைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்.
காலை ஆறு மணிக்குள் ஒரு டெம்போவில் நாற்பது ஐம்பது பேர் வந்திறங்கினார்கள். பெரும்பாலும் உரமேறியப் பெண்கள். கான்க்ரீட்பாலு என்ற அந்த முப்பது வயதுக்கும் உட்பட்ட பையன் தன் ட்ரேட்மார்க் சிரிப்போடு என்னருகே வந்து,
‘‘ஆரம்பிச்சிடலாமாண்ணே?’’ என்றான்.
நான் பரவசமானதொரு மனநிலையிலிருந்தேன். ஷைலஜா அவர்கள் அனைவருக்கும் மதிய உணவின் ஆயத்தத்தில் அலைந்து கொண்டிருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் முதல் தட்டு ஜல்லிக் கலவை தயாராகி கட்டிடத்தின் கிழக்கு மூலையில் கொட்டப்பட்டபோது அவர்கள் அனைவரும் ஆராவாரக் கூச்சலிட்டார்கள்.

அது பற்றிக் கொண்டது. கல் நெரியும் சப்தமும், மணல் குழையும் நேர்த்தியும், சிமெண்ட் சேரும் அழகும், அவர்கள் கொண்டு வந்திருந்த கான்க்ரீட் இயந்திரத்தின் பெரும் சப்தமும் மனித உழைப்பின் மகத்துவத்தை எல்லோருக்குமாக நிரூபித்துக் கொண்டிருந்தது.
அது தொடர்ச்சி. இடையில் ஏற்பட்ட தொய்வு ஃபேன்ட்டா, 7 அப்பால் நிரப்பிக் கொள்ளப்பட்டது. பேச்சு… பேச்சு… அவர்களுக்குள்ளான ஆசைகள், வாழ்வுகள், கணவன்கள், கள்ளக்காதலன்கள், நிறைவேறாமைகள் எல்லாமும் நாம் கெட்டவார்த்தைகளெனப் பிரித்து வைத்திருக்கும் சொற்களைக் கொண்டே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். இடையிடையே சிரிப்பும், கும்மாளமும், கலவையை அள்ளி வீசிக் கொள்வதும், இளம்பெண்களின் மாரில் அதுபட்டுத் தெறிக்கும்போது ஆராவாரமிடும் இளம் பையன்களும்.
சே, இவர்கள் வாழ்வு எவ்வளவு அழகானது?
எந்தப் புகாருமற்றது!
எல்லாம் முடிந்து மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் எங்கள் கிணற்றடி புங்கமரத்திற்கு சாப்பிட வந்தார்கள். வீழ்ந்தப்பட்ட வாழைமரங்களைப் போலிருந்தார்கள். உடல் களைப்பையும் அசதியையும், மீறி வேலை முடிந்த திருப்தி அந்த உழைப்பாளி மக்களின் முகங்களில் படிந்திருந்தது. நாங்கள் தரப் போகும் இருநூறு ரூபாய் கூலிக்கான உழைப்பில்லை அது. ஒரு எளிய குடும்பத்துக்கான வாழ்விடத்தைத் தங்கள் கரங்களால் நிறைவு செய்த சக மனிதத் தோழமை.

மணக்க மணக்க கதம்ப சாம்பாரில் ஆரம்பித்து, ஷைலஜாவின் பிரத்யேக சேமியா பாயசத்தில் நிறைவுற்ற மதிய உணவு அது. அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த டிபன் கேரியரிலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளிலும் மீதியை தங்கள் குஞ்சுகளுக்காக சேகரித்துக் கொண்டார்கள்.
இருபத்தியொரு நாள் இடைவெளி எங்களை மேலும் நிதானப்படுத்தியது. இழைத்த தவறுகள், பட்ட அவசரங்கள். எல்லாவற்றையும் திருத்தியது. கான்க்ரீட்டின் மேல் கடலென நீர் ததும்பி நின்றது. ததும்பலில் நனைந்த கருங்கற்கள் மேலும் நிறம்காட்டி அழகூட்டியது.
எனக்கொரு மேற்பார்வையாளர் தேவைப்பட்டார். என் அன்றாட அலுவல் பரபரப்பு அதைக் கோரியது. ஜெயஸ்ரீயுடன் வேலை பார்க்கும் ஃபிலோமினா டீச்சரின் மாமா என்றறியப்பட்ட ராஜா அப்பணிக்கு வந்து சேர்ந்தார். அவர் மரபான அனுபவம் என்ற மணல் கயிற்றால் எங்களைக் கட்டியிழுக்கபட்ட அனைத்துமே உதிர்ந்து போனது. நாங்கள் நவீனத்திலும் லாரிபெக்கர் என்ற மேதையின் நிழலிலும், அவரை வழி நடந்திய காந்தியின் சொல்லிலும் உறுதிப்பட்டிருந்தோம்.
மீண்டும் கட்டிடத்தின் இறுதி வேலைகளின் போது காமராஜ் தன் சகாக்களோடு காணாமல் போயிருந்தான். இடையிடையே நாங்கள் மாற்றிய மேஸ்திரிகள், சீத்தாப்பள்ளிப் பழ வடிவ அடுக்கலுக்குப் பயந்து ஓரிரு நாட்களில் வழக்கமான செங்கல் வேலைகளுக்கு  போனார்கள். ஆனால் எதன் பொருட்டும் அப்பணி நிற்காமல் குமாரசாமி என்ற மேஸ்திரி அப்புதுவடிவத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தான்.
கருங்கல் தூண் நின்று, விசாலமான அதன் தாழ்வாரமும், என் நண்பர் அருண் (மைசூர்) பிரத்யமாகத் தயாரித்து அனுப்பிய தேக்கு ஊஞ்சலும் அவ்வீட்டின் முன் புறத்தை பிரமிக்க வைத்தன. மாடியின் போர்டிகோவைப் பச்சை மூங்கிலால் வடிவமைக்க நினைத்து, நாள்தாங்காமயை யோசித்து, சிமெண்ட்டால் மூங்கிலைப் போலப் பிரிதியெடுத்தோம். எல்லாம் கச்சிதமாக நிறைந்த ஒரு இரவில் அடைமழை வந்தது.
கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டைத் திறப்பதென்றும்எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ் செல்வன்கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.
எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின்எஸ்.கே.பி. கருணா,                     அ. முத்துகிருஷ்ணன்பாஸ்கர் சக்திதேனி ஈஸ்வர்வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.
புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டிஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோஷத்தோடு கத்தரிக்கோலைக் கையில் எடுக்கநாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்,

காணிநிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும்”    என
தன் கம்பீரமான குரலில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடத் துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்,  துயரமும்கண்ணீரும், பெருமிதமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக்காரத் தம்பிகள் வேலுஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புதக் கணங்கள் அவை.
அவ்வீட்டின் மொட்டை மாடியில் பெரிய ஸ்கிரீன் ஒன்றை வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிலிருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம் போடப் போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்து வைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுவயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார். 

இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும்தமிழின் நவீன இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான, ஜெயமோகன்எஸ். ராமகிருஷ்ணன்கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும்அன்று காலை கோணங்கியும்அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது.

எல்லார் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறுப் போட்டோம். சுடுசோறுரத்தப்பொறியல்மட்டன் குழம்புநாட்டுக்கோழி வறுவல், கதம்பம் (போட்டி,  நுரையீரல்ஈரல்கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்றுத் தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பிப்  பார்த்தேன்.
ஒரு கனவு முற்றுப் பெற்றது போலவும்ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக்கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.