Saturday, November 19, 2011

மலையாளத்தில் காலம்....

நான் ஒரு எழுத்து சோம்பேறி என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னவோ ஒரு உந்துதலில் சமீப நாட்களில் பதினாறு தொடர் கட்டுரைகளை ஒரே மனநிலையில் எழுத முடிந்தது . இது இன்னமும் தொடரும் போலத்தான் இருக்கிறது. அது 'மீடியா வாய்ஸ்' என்கிற வார பத்திரிகையில் வெளிவந்து வாசகர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது உற்சாகமளிக்கிறது.
ஒரு வாசகனாய் இதை வாசித்து இக்கட்டுரைகளில் ஈர்க்கப்பட்டு மலையாளத்தில் மொழிபெயர்தார் டாக்டர் டி.எம்.ரகுராம். கேரளாவில் மிகப்பெரிய வாசகபரப்பைக்கொண்டதும், தோழர்.இ.எம்.எஸ். ஆசிரியராய் இருந்து நடத்தியதுமான ''தேசாபிமானி''யில் இக்கட்டுரைகள் மலையாளத்தில் இந்த வாரம் முதல் வெளிவர துவங்கியுள்ளது.

கட்டுரை வெளியான இரண்டொரு நாட்களில் நூற்றுக்கனக்கான வாசகர்கள் தன்னை அழைத்து பேசியும், வாழ்த்து தெரிவித்ததாகவும் இதழ் ஆசிரியர் ரமேஷ்பாபு தொலைபேசியில் அழைத்து கூறினார்.

மிகச்சிறந்த வடிவமைப்போடு வெளியாகியுள்ள இப்பக்கங்களை என் தமிழ் வாசகர்களின் பார்வைக்கு மிகுந்த மனநெகிழ்வோடு பகிர்ந்துக்கொள்றேன்.













Wednesday, November 16, 2011

தொடர் - 15


இல்லையென்றாலும் எழுந்துதான் இருப்பேன். தொடர்ந்து ஒலித்த பாடல், அதைத் துரிதப்படுத்தியது. தூக்கக் கலக்கத்தில், அழைத்தது யாரென்றுகூட பார்க்காமல் போனை காதுக்குக் கொடுத்தேன்.

‘‘குட்மார்னிங் பவா’’

பழக்கப்பட்டிருந்த அக்குரல், என் மிச்ச தூக்கத்தைத் துடைத்தது.

‘‘சார்... எப்டி இருக்கீங்க? என்ன காலையிலேயே?’’

‘‘பவா, எனக்கு அடுத்த வாரம் புதன், வியாழன் படப்பிடிப்பில்ல. திருவண்ணாமலைக்கு வரட்டா? உங்க ஃபிரண்டோட காலேஜ்ல, பிலிம் பத்தி ஒரு சின்ன ஒர்க்ஷாப் நடத்தித் தர்றேன்.’’
‘‘கண்டிப்பா சார், இப்பவே கூப்டுறேன்’’

முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கிடைக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, தன் ஓய்வு நாளை இப்படி திரைப்பட மற்றும் சமூக மேம்பாட்டிற்கு சமர்ப்பிக்க, நம்மில் எத்தனை நடிகர்கள் தயாராயிருக்கிறார்கள்?

அப்போதுதான் தெய்வத்திருமகள் பார்த்து, நாசரின் மிகையற்ற நடிப்பில் மனம் லயித்திருந்தேன். என்னென்னவோ எண்ணங்கள் என்னை அலைக்கழித்தன. ஒரு அசல் கலைஞனுக்கான, தெளிவற்ற சிந்தனைகளிலேயே அவர் எப்போதும் சுழன்று கொண்டிருப்பதாகத் தோன்றும். ‘பீமா’ என்றொரு படத்தில், பிரகாஷ்ராஜ் செய்ய நினைப்பதையெல்லாம் விக்ரம் செய்து முடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் மிகுந்த உணர்வு வயப்பட்டு,

‘‘யாரு சாமி இவன்? எங்கிருந்து வந்தான்? இவன் யாரோட மிச்சம்?’’ எனத் துள்ளும் ஒரு காட்சி உண்டு.

அத்துள்ளல் கொண்டாட்டம் சம்மந்தபட்டது. உள்ளுக்குள் பொங்கும் பெருமிதப் பொங்குதல் அது. அது இடம், தகுதி, அந்தஸ்து, வயது எல்லாவற்றையும் துடைத்தெறிந்து, மனிதனை ஒரு குழந்தையைப்போல் நிர்வாணப்படுத்தி, மழையில் ஆனந்த களியாட வைக்கும். இரண்டு, மூன்று இலக்கிய கூட்டங்களின் கடைசி வரிசைகளில், நாசரின் கூர்ந்த கவனித்தலின்போது, ஏறக்குறைய நானும்கூட இப்படி ஒரு மனநிலைக்கு வந்திருந்தேன்.

‘யார் இவர்? இவர் எப்படி தமிழ் சினிமாவின் வரம்புகளை மீறி சாதாரணத்துக்கு முயல்கிறார்?’ என் இந்த எளிய கேள்விகளுக்கான பதில், அவரின் தொடர் வாசிப்பு. அது நம்மை தொடர்ந்து கழுவுகிறது. கீழிறங்கி வர வைக்கிறது. ‘நீ ஒண்ணும் பெரிய ஆள் இல்லை’ என, சதா நம் ஒவ்வொரு நிமிஷங்களிலும் எச்சரிக்கிறது.

என் முதல் சந்திப்பின்போது, நாசர் சொன்னார்.

‘‘அதற்கு முன் ஒன்றிரண்டு படத்தில் நடித்திருந்தால்கூட என் முதல் படம் ‘நாயகன்’தான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, மனமும் உடலும் பரவசமாக, வரப்போகும் வண்டிக்கு காத்திருந்தேன். குறைந்தபட்சம் ஒரு அம்பாசிடரை எதிர்பார்த்திருந்த என் முன், வந்து நின்றது ஒரு பழைய மெட்டடார் புரடெக்ஷன் வேன். பின்பக்க கதவு திறந்து உள்ளே நுழைந்தபோது, குப்பென்று ஒரு துர்நாற்றம். சமீபத்தில்தான் அந்த வாடையை நுகர்வுற்றிருந்தேன். அது, அசோகமித்ரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் சொல்லப்பட்டிருக்கும் அதே புரெடக்ஷன் வேன் நாற்றம்.

என் அன்றைய மனநிலையில், நான் அதை விலை மதிப்பற்ற வாசனை திரவியங்களின் சுகந்த மணமாக உணர்ந்தேன். துணை நடிகர்களுக்கான உடைகள், எங்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது. எனக்களிக்கப்பட்ட போலீஸ் உடையுடன் நான் ஆளுயரக் கண்ணாடி முன் நின்றபோது, அது தொளதொளவென்று முப்பது வருடத்திற்கு முந்தைய தமிழ்நாட்டு கான்ஸ்டபிளை காண்பித்தது. ஆனால், நான் அப்படத்தில் டெல்லி மாநகரின் அசிஸ்டெண்ட் கமிஷனர்.

கண்கள் லேசாக கலங்கினாலும்கூட, வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து நின்றிருந்தேன். ‘மனதில் உறுதி வேண்டுமென’ பாரதி உரம் தந்தான்.

பத்து நிமிடத்திற்குள் அங்கு வந்த இயக்குநர் மணிரத்னம், என் உடையைப் பார்த்து அதிர்ந்து, புரடெக்ஷன் பக்கம் திரும்பி, ‘‘இவர் டெல்லி கி.சி.யா, இப்படி ஒரு தொள தொளன்னு, கான்ஸ்டேபிளுக்கான டிரெஸ் மாட்டியிருக்கீங்க.’’ என்றார்.

அடுத்த நாள் காலை, எனக்கென பிரத்யேகமாக தைக்கப்பட்ட டெரிகாட்டன் காக்கி உடை, ஷூ என என்னை நானே கம்பீரமாக உணர்ந்த நிமிடம் அது. அந்நிமிடம், வாழ்வின் எல்லாத் துயரும் தீர்ந்தது போலவும், இனி பெண் தேவதைகள் என் வழியை செப்பனிட்டு காத்து நிற்பார்களென்றும், அசாத்தியமான நம்பிக்கை எதன் பொருட்டோ என்னை வந்தடைந்தது.

அப்படத்தில் என் நடிப்பிற்கான ஊதியமாக ஐந்தாயிரம் ரூபாய் பெற்றேன். அக்கரன்சித்தாள்களை இப்படியும் அப்படியும் ஸ்பரிசித்து ஸ்பரிசித்து, அதை எனக்குப் பழக்கினேன். உற்சாகம் மேலிட ஒரு அரை மணி நேர சைக்கிள் மிதிப்பில் என் நண்பன் கிரியை அடைந்தேன். கிரியின் தோள் பற்றி, எதற்கென தெரியாமலே இருவரும் அழுதோம். ‘துயரம் சுமந்த வாழ்வு இனி நமக்கில்லை’ என ஆனந்தத்தின் சிதறல் அத்துளிகள்.


அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பாட்டில் பீரோடு ஆற்காடு பிரியாணி ஹோட்டலில் எதிர் எதிர் இருக்கைகளில் அமர்ந்து, பேச்சற்று இருந்தோம் நானும் கிரியும். நீரும், உணவும் எங்களை வெகுநேரம் மறுதலித்துக் கொண்டேயிருந்தது. மனது நிறைந்து வயிற்றையும் நிறைத்திருந்தது. ‘பசிக்கு உணவு மட்டும் ஒருபோதும் போதாது’ என்பதை அக்கணத்தில்தான் பவா மனது உணர்ந்தது.’’

நான் படித்த டேனிஷ் மிஷன் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக, தமிழின் புகழ்பெற்ற 12 ஆளுமைகளை ஒரே நாளில் வரவழைத்து, அவர்களின் பள்ளிப் பருவ நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வைத்தோம். அதில், நாசரின் உரை, நான் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர்பாராதது. ஒரு தேர்ந்த கல்வியாளனின் சமூக அக்கறையும், எதிர்கால கல்வி பற்றிய கனவுகளும் தோய்ந்த, ஒரு கலைஞனின் பெருங்கனவு அது.

அந்நிகழ்வில் மாணவர்கள் அவரை மொய்த்துக் கொண்டார்கள். ஒரு நடிகனை தொட்டுப் பார்க்கவும், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், ஆட்டோகிராப் வாங்கவும் மீன் குஞ்சுகளைப் போல துள்ளல்களால் அப்பாதையை அவர்கள் நிறைத்தார்கள். மாணவர்களின் சந்தோஷத்தை எப்போதும் எதன் பொருட்டும் சகித்துக் கொள்ள முடியாத இரண்டு ஆசிரியர்கள், கையில் பிரம்போடு வந்து அவர்களின் அந்நிமிட பரவசத்தைக் கலைத்தார்கள். மாணவர்கள் கலைந்து போனபின், கையில் ஒரு நோட்புக்கோடு,

‘‘சார் ஆட்டோகிராப்’’

‘‘இப்ப நீங்களும் அவங்க செஞ்சதையேதானே செய்யறீங்க. அதுக்காக அவங்கள ஏன் துரத்தறீங்க? கொஞ்சமாவது மாறுங்க சார்’’ என்ற அவரின் குரலில், ‘மாறாதவர்கள் அவர்கள்’ என்ற பல வருட அவதானிப்பிருந்தது.

நம், மரபான விஷயங்கள் எதன் மீதும், வெறும் ஆர்வம் மட்டுமின்றி அக்கறையும் கொண்ட மனிதர் நாசர்.

‘‘பவா, செஞ்சியிலிருந்து விழுப்புரம் போற வழியில், அனந்தபுரம்னு ஒரு ஊர்ல இருக்கேன். இங்க பழமையான நெற்குதிர்கள் கேட்பாரற்று கெடக்கு. யாரையாவது அனுப்பி இரண்டு மூணு எடுத்து வச்சி பத்திரப்படுத்துங்க’’ என்பது மாதிரியான தொலைபேசி செய்திகள், எந்த நேரத்திலும் என்னை வந்தடையும். ‘இது வெறும் ஆர்வம்’ என ஒற்றை வரியோடு விட்டுவிட முடியாது.

பரபரப்பும், புகழும், செல்வமும், அதன்பொருட்டெழும் பெருமிதத்தையும் தாண்டிய நம் வேர்கள் பற்றிய அக்கறை அது. ‘தமிழ் சினிமாவில் மின்னும் எத்தனை நட்சத்திரங்களுக்கு இதுபற்றிய அக்கறை உண்டு?’ என்ற கேள்வி நமக்கு எழாமலில்லை. நம் மரபான தெருக்கூத்தின் மீது அவருக்கிருந்த ஈர்ப்பு, ‘அவதாரம்’ வரை கொண்டு போனது. ‘அவர் மனது நினைப்பதை, திரைக்கு மாற்ற முடியவில்லையோ?’ என்ற பதட்டம், அவருடைய ஒவ்வொரு புதுப்படைப்பின்போதும் என்னைப் பற்றிக்கொள்ளும்.

‘தேவதை’யின் முதல் இருபது நிமிடங்களின் அசாத்திய காட்சிகள், ‘நாசர், ட்ராஸ்கி மருது’ என்ற இரு கலைஞர்களின் பெருங்கனவில் ஒரு துளி வெளிப்பாடு மட்டுமே. அம்மனநிலையை, அப்படத்தின் இறுதிவரை தக்க வைத்துக்கொள்ள முடியாமல், ஏதோ ஒன்று அவரை தொடர்ந்து சிதைக்கிறது. இரவும் பகலும் கண்விழித்து, அதீத வெளிச்சத்தில் அரிதாரம் பூசி, பேசிக்கொண்டு வரும் பொருட்கள், அவருடைய புதிய படைப்பு முயற்சிகளின்போது காணாமல் போய்விடுவது குறித்த வருத்தம் எதுவும் இல்லாத நண்பர்களாகத்தான் நாசரையும், கம்மீலாவையும் எப்போதும் நினைக்கிறேன்.

தான், விரும்பித் தேர்ந்தெடுத்த துறையின் உச்சத்தை எட்டுவதுதான் லட்சியம் எனினும், அதைத் தாண்டிய பல சமூக நிகழ்வுகளில், எப்போதும் ஆர்வமும் அக்கறையுமுள்ள பெரும் பயணம் நாசருடையது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் பல நேரங்களில் கட்டட மேஸ்திரிகளோடு நீங்கள் அவரைப் பார்க்கலாம். ‘சம்மந்தமே அற்ற துறைகள்’ என்று எதுவுமில்லை. மனித வாழ்வு என்பதே, கண்ணுக்குத் தெரியாத ஏதோ சில உணர்வுக் கம்பிகளின் இணைப்புதானே?

புகழ்பெற்ற கட்டடவியலாளர் ‘லாரி பெக்கர்’ அவர்களின் மாற்று கட்டிட வடிவமைப்பில், பெரும் நம்பிக்கையுள்ளவர் நாசர். ஒருமுறை, மகாத்மா காந்தியை அவரின் சபர்மதி ஆஸ்ரமத்தில் சந்திக்கிறார் லாரிபெக்கர். ‘இவர் ஒரு மிகப்பெரிய ஆர்கிடெக்ட்’ என்கிற அறிமுகத்துடன் நிகழும் அந்த ஓரிரு நிமிட சந்திப்பில், காந்தி அவரை நோக்கி,

‘‘நல்ல கட்டடம் என்பது எது?’’

‘‘நீங்க என்ன கேக்கறீங்கன்னு புரியலை.’’

‘‘ஒரு நல்ல கட்டடம் என்று, எதைச் சொல்வீங்க?’’

அப்படியும் புரியாமல் லாரிபெக்கர் விழிக்க காந்தியே தொடர்கிறார்...

‘‘எந்தக் கட்டடம் கட்டப்படுவதற்கு போக்குவரத்து தேவைப்படவில்லையோ, அதுவே ஒரு சிறந்த கட்டடம்.’’

‘‘இன்னும் கொஞ்சம் விளக்கமாக...’’

‘‘எந்தப் பிரதேசத்தில் எது கிடைக்கிறதோ, அதைக்கொண்டு நம் வசிப்பிடங்கள் அமையவேண்டும். சென்னையில் கட்டப்படும் ஒரு கட்டடத்திற்கு, எதற்கு இத்தாலியன் மார்பிளும், ராஜஸ்தான் டைல்ஸும்?’’

‘இந்த ஒரு வரி, என் ஒட்டுமொத்த வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது’ என்கிறார் பெக்கர்.

நவீன கட்டடக் கலையின் நிராகரிப்பில், நாசர், பெக்கரின் தொடர்ச்சி. இதன் பொருட்டே ‘கட்டடம் கட்டும் மேஸ்திரி, சித்தாள்கள்’ என்று, பலரோடும் அவரின் நிறைவடையாத உறையாடல்கள் நீள்கிறது. விருகம்பாக்கத்திலுள்ள நாசரின் வீடே, பழமையும் கனவும் இழைந்த கட்டடம்தான். நம் நவீன வாழ்வு இழந்த ஒற்றைக் கதவுகளும், அதன் பித்தளைக் குமிழும், அதன் மீது ஒட்டியிருக்கும் ஒரு குடும்பத்தின் பாரம்பரியச் செழுமையையும், அவ்வீட்டில் நம்மை நெடுநேரம் உட்கார வைக்கும். ஒரு நவீன வீட்டின் அகங்காரம், நம்மை தொடர்ந்து துரத்துவது மாதிரியில்லை இது.

தன் வாழ்வின் சுழற்சியில், நம் மரபில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் தக்கவைக்க, ஒரு சிறு முயற்சியை எப்போதுமே தன்னிலேயே வைத்திருக்கும் கலைஞன் அவர்.

‘‘அவதாரம்’ படம் மூலம், நான் அடைந்த அனுபவங்களின் முன், என் பொருளிழப்புகள் ஒன்றுமில்லை பவா. ஈர மண் மாதிரி, பசுமையான மனிதர்களை வட தமிழ்நாடெங்கும் அள்ளி அணைத்தக் காலங்கள் அவை. செய்யாறுக்குப் பக்கத்தில் ஒரு கூத்து வாத்தியார். எழுபது வயதிருக்கும். என் படத்திற்குத் தேவை என்பதால், எங்களுடனே வைத்துக்கொண்டோம். அவர் எப்போதுமே என்னை ஒருமையில்தான் அழைப்பார். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் திரளான மனிதர்கள் மத்தியில்

‘‘தே, நீ இன்னா எத்தினி தபா சொன்னாலும், தப்பு தப்பா பண்ற’’ என்று, அக்கூத்து வாத்தியார் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரின் உதவி இயக்குநர்கள், பல தடவைகள் பல மொழிகளில், ‘‘அப்படிச் சொல்லாதீர்கள்’’ என உணர்த்தியும், புரிந்து கொள்ளாத அவரிடம், ஒரு முறை கடுமையாக கோபித்துக் கொண்டார்கள்.


தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கணத்தில் அவர் வெகுண்டெழுந்து, ‘‘அப்பிடி என்னப்பா தப்பா சொல்லிட்டேன்? அவரு, இவருன்னு மனசு நிறைய மரியாதையை வச்சிக்கிட்டு, வாயில வரும்போது பழக்க தோஷத்துல இப்படி வருது. நான் இன்னா பண்ண...?’’ என கலங்கியதைப் பார்த்து, அவரை தன் தோளில் அணைத்து, ‘‘நாங்கள் உங்களின் மிச்சம்’’ என உணர்வு வயப்பட்ட நாசரை, அப்படப்பிடிப்பின்போது குவிந்திருந்த மனிதர்கள் மட்டுமின்றி, என்னைப்போல தொலைதூரத்திலிருந்து பார்க்கும் நண்பர்களும் அறிவோம்.

Wednesday, November 9, 2011

தொடர் - 14



படித்து முடித்து, வேலை கிடைக்காமல் அலைந்த காலமது. வெயில், மழை எதுவாயினும், எப்போதும் மனப்புழுக்கத்தில் கிடந்த நாட்கள் அவை. ‘வாயில் வைக்கும் ஒரு பிடி சோறும் நமதில்லை’ என மனது சொல்லும். இதிலிருந்து தப்பிக்க, எங்காவது போய்க்கொண்டே இருப்பேன்.

திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில், ‘வேளானந்தல்’ என்றொரு சிற்றூர். அதற்கும் அப்பால், இரண்டு கிலோ மீட்டரில் வியாபித்திருக்கும் திப்பக்காட்டிற்கிடையில், ஆளரவமற்ற அந்த ரயில்வே ஸ்டேஷன். அதில்தான் என்னை நவீன இலக்கியத்திற்கு கொண்டுவந்த என் நண்பர் உதயசங்கருக்கு, உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலை. அந்த வேலை கிடைப்பதற்கு முன்பான பத்தாண்டுகளில் அவர் பட்ட ரணங்களை, பக்கம் பக்கமாய் எழுதித் தீர்க்கிறார் இன்னமும். அது, தீராதப் பக்கங்கள்.


இரவு பகல், நேரம் காலம் என்றெல்லாம் எந்த தடையுமில்லை. எப்போது தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனியாகவும் சில நேரங்களில் நண்பன் கருணாவோடும், தண்டவாளத்தை ஒட்டிய காட்டு வழியே, எந்த கேள்வியுமற்று போய்க்கொண்டிருப்பேன். திசை தவறியப் படகொன்றில், உணவும் நீரும் தீர்ந்துபோன கணத்தில், தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சக் கீற்றுபோல, எங்களைப் பார்த்து உதயசங்கர் அடையும் பரவசத்தை இங்கிருந்தே உணரமுடியும். மனமொழியை உடல் மொழி அறிய, ஏது தடை?

யாருமற்ற அனாதையான அந்த ரயில் நிலைய குவார்ட்டர்சில், உறக்கமின்றி, பசி மறந்து நாங்கள் பேசித் தீர்த்த நாட்களின் உரம், இன்னமும் என்னில் இரண்டு புது இலைகளைத் துளிர்க்கச் செய்து கொண்டேதான் இருக்கிறது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் ஒரு அழகிய கறுப்பு வெள்ளை போட்டோகிராபி அட்டைப்படத்துடன், அவர் மேசைமீது கிடந்த புத்தகத்தை கையில் வைத்து மெதுவாக வருடிக் கொண்டிருந்தேன்.

உதயசங்கர்மென் சிரிப்பினூடே,

‘‘பிரிச்சுப் பாக்கணும்னு தோணலியா’’என்றார்.

‘‘இல்லை ஷங்கர், கையில வச்சுக்கணுன்னு மட்டுந்தான் தோணுது.’’

‘‘வீட்டுக்கு எடுத்துட்டு போய், படிச்சிட்டுத் தா’’

அப்புத்தகத்தை சைக்கிள் கேரியரில் வைக்க மனமின்றி, சட்டைக்குள் நுழைத்து எடுத்துவந்த ஸ்பரிசம், இன்னும் நினைவில் உண்டு.

அன்று வழியிலேயே மழை வந்தது. மழைத்துளி படாமல் அப்புத்தகத்தைக் காத்துக்கொண்டு வந்து வீடு சேர்ந்தபோது, இருட்டியிருந்தது.

தொடர் வாசிப்பு என்பது எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தலுக்கான ஒரு சிறந்த வழி என்பதைத் தெரிந்து வைத்திருந்தேன். அன்றிரவு, ‘வெயிலோடு போய்’ ச.தமிழ்ச்செல்வன் என்று தலைப்பிட்ட அப்புத்தகத்தை வாசித்த அனுபவமே ஒரு மகத்தான புனைவு. அதில் ‘பாவணைகள்’ என்றொரு கதை.

அநேகமாக அதுதான் அத்தொகுப்பின் முதல் கதை. ‘‘அவன் இரு கால்களையும் சப்பணம் கூட்டி உட்கார்ந்துப் பார்த்தான். கால்களை மடக்கி கைகளை முன்பக்கம் நீட்டி உட்கார்ந்தான். குத்து காலிட்டு உட்கார்ந்தான். எப்படி உட்கார்ந்த போதும் பசித்தது...’’

இவ்வரிகளைத் தாண்ட முடியவில்லை என்னால். ஏதோ ஒரு முரட்டுக் கை, என் சட்டையைப் பிடித்திழுக்கிறது பின்னுக்கு. திமிறுகிறேன், முடியவில்லை. ‘‘எப்படி உட்கார்ந்தபோதிலும் பசித்தது.’’ ஒட்டுமொத்த பசியின் பொருட்டெழுந்த மானுட கூக்குரலும் அந்த இரவில் என் வீட்டு வாசலில் கேட்கிறது. ஒரு தமிழ் வார்த்தை என் மென்னியைப் பிடித்திருக்கிறது. எப்படித் திமிறியும் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் கிடந்த இரவது. ஒரு டம்ளர் நீச்சத் தண்ணியின் பொருட்டு, வாசலில் காத்திருந்த சிறார்களின் உருவங்கள் வந்து என்னைப் பிடுங்கித் தின்றன. அந்த ஒற்றை வரி வாசிப்பினூடே, அறுத்துக்கொண்டு துக்கம் மேலிட, மூச்சுமுட்ட அப்படியே உறங்கிப் போனேன்.

இடைவெளிகளில், நான் அப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் எனக்குள் கொண்டு வந்தேன். ‘பொன்ராசின் காதல்’, ‘கறுப்பசாமியின் அய்யா’, ‘வெயிலோடுப் போய்’ என்று தென் மாவட்டத்து வெயிலை வெறியோடு குடித்தேன். தீப்பெட்டி மருந்து வீச்சம் வீசும், இளம் பெண்களை நுகர்ந்தேன். சமூக அமைப்பின் மீது தீராக் கோபம் கொண்ட ஒருவனின் ஆவேசத்தை, நானும் படைப்பின் வழி அடைந்தேன். அதன்பின் பல நாட்கள் வேளானந்தல் ரயில்வே ஸ்ட்டேஷன் பக்கம் போகாமல் தவிர்த்தேன். அது தொடர்ந்து என் மன அமைதியைக் குலைத்தும், நான், அதுவரை நம்பிய அனைத்தையும் ஒன்றுமில்லாமலாக்கியும், என் சராசரி வாழ்விலிருந்து வெளியேறும்படியும் கோரிக் கொண்டேயிருந்தது.

நான் அமைதி காத்தேன். கவிஞர் சுகுமாறன் சொல்லும் ‘தற்கொலை’யில், தோற்றவனின் மௌனம் அது.

இதோ... இருள் கவியும் இத்தருணத்தில், அதிக இரைச்சலற்ற இப்புதுப் பேருந்தில், என் பக்கத்து இருக்கையில் தமிழ்ச்செல்வன். திருச்சியில் நடந்த ஒரு கூட்டம் முடிந்து, நான் திருவண்ணாமலைக்கும், அவர் திருநெல்வேலிக்கும் திரும்பவேண்டும். ஆனால், அவரோடு பயணிக்கவேண்டி நானும் மதுரைக்கே பஸ் ஏறி, அவருக்கு பக்கத்தில் உட்காருகிறேன். பேருந்தின் வேகம் எங்களை அசைக்கக்கூட இல்லை. ஜன்னலின் வழி போகும் சின்னஞ்சிறு உலகை பார்த்தபடி கடக்கிறோம். பஸ் துவரங்குறிச்சியைக் கடக்கிறது.

நான், மௌன கோடுகளை கூடுமானவரை நீட்டிக்கிறேன். அந்த இரண்டு மணி நேர பயணம்தான் தமிழ்ச்செல்வன் என்ற கலைஞனின் சொல்லப்படாத இன்னொரு பகுதியை அவருக்கு மீட்டும், எனக்குக் கடத்தியும் கொடுத்தது. ஏதாவது ஒரு வகையில், இத்தேசத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற வேட்கையில், மிலிட்டரிக்கு போனவர் தமிழ்ச்செல்வன். எல்லோரையும்போல நிறையக் கனவுகள். அத்தனையும் நிறைவேறாதக் கனவுகள். எதிர்பார்த்துப்போன எதுவுமேயற்ற அமைப்பாக இருந்தது ராணுவம்.


மாநில வாரியான, நிறம் வாரியான, மொழி வாரியான, சாதி வாரியான பிரிவுகளில், வீரர்கள் ரகசியமாய் மன ரீதியாய் பிரிந்துக் கிடந்தார்கள்.

தமிழக குக்கிராமங்களில் கிடந்த சாதியக் கழிவுகள், டெல்லிக் குளிரிலும் பெருக்கெடுத்தன. ‘மனிதர்கள் இவைகளை சுமந்து கொண்டேதான் உலகம் முழுக்க அலைகிறார்கள்’ என்பதை ஒரு கலைஞனின் நுட்பமான மனம் கண்டுபிடித்து கலங்குகிறது. வெளியில் சொல்ல முடியாத ஏதோ ஒரு துயரம், தொண்டைக்குள் இறங்காமல் நின்று கொள்கிறது.

ஒரு விடுமுறையில், தமிழ் சொந்த ஊருக்கு வருகிறார். அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக 44 உழைக்கும் தோழர்களை உயிரோடு வைத்து கொளுத்திய கோரச் செய்தி, ஒரு கலைஞனை மனச்சிதைவுக்கு கைகாட்டுகிறது. அதிலிருந்து தப்பவேண்டி, அவன் மீண்டும் ராணுவத்தை நோக்கி ஓடுகிறான்.

இல்லை. மனதின் இரைச்சல் எதன் பொருட்டும் அடங்குவதில்லை. அன்று அவருக்கு மலையேறும் பயிற்சியின் முதல் நாள். உயரம் எதுவென அறியாத அப்பனிமலையில், ஒரே நேரத்தில் ஒரு குழு ஏறிக் கொண்டிருக்கையில், இன்னொரு குழு இறங்கிக் கொண்டிருக்கிறது. தூரமறிய ஏறும் ஒவ்வொருவரும், இறங்குபவனைப் பார்த்து கேட்கிறான்...
‘இன்னும் எவ்வளவு தூரம்?’

‘தோ, கொஞ்சம் தூரந்தான்.’

இது பயிற்றுவிக்கப்பட்ட பாடம்.

எல்லா மொழிகளிலும் அவர்கள் இப்பொய்களைச் சொல்லக் கற்றிருந்தார்கள். தமிழ்செல்வன் ஒரு பிடிப்பை கைகளால் பிடித்துக்கொண்டு, அங்கிருந்து அண்ணாந்து பார்க்கிறார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, வீரர்கள் எறும்புபோல ஊர்வது தெரிகிறது. அப்பனிமலையில் நின்று அண்ணாந்த அந்நிமிடத்தில், வெண்மணி என்ற அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் எழுந்தடங்கி, சில மணித் துளிகளில் 44 பேரை கரிக்கட்டையாக்கிய தீ, சுடுகிறது. தப்பிக்க முடியாத அம்மனிதக் கூக்குரல், அப்பனிமலையின் சில்லிப்புகளை ஒன்றுமில்லாததாக்கி அவனுக்குள் கேட்கிறது.

அதற்கு மேல், ஒரு அடியும் எடுத்து வைக்காமல் அவன் அங்கேயே நின்றுவிடுகிறான். இராணுவத்தில், அடங்காமைக்கு என்ன விலை என்பது தெரிந்திருந்தும், ஒரு மரம் மாதிரி மனம் இறுகி அங்கேயே நிற்கிறான். அவனை முகாமுக்கு கொண்டு வருவதற்குள், அவன் அறை, திறக்கப்பட்டு அலசி ஆராய்ந்து, அந்தத் தமிழ் அதிகாரியின் மேடை மீது கிடக்கிறது. யாருமற்ற அந்த அறையில், ஓடாத ஒரு மின் விசிறியை பார்த்துக்கொண்டே நிற்கிறான் அவன்.

‘‘சொந்த ஊரு திருநெல்வேலியோ’’

‘‘இல்லை, கோவில்பட்டி’’

அதிகாரி, கையிலிருந்த ‘விடியல்’ என்ற பத்திரிகையைத் தூக்கிப்போட்டு உணர்வில்லாத குரலில் கேட்கிறார்.

‘‘இந்தப் பத்திரிகையை எப்போ வாங்கின?’’

‘‘லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்போ’’

விசாரணையின் இறுதியில், தன் வாழ்வின் மீது ஊற்றப்போகும் ஆசிட் பாட்டிலின் நெடி அவ்வறையில் வியாபித்திருந்ததை அவன் அறிந்தேயிருந்தான். மலையின் மீது ஒரு அடியும் எடுத்து வைக்க மறுத்தபோதே, பின் விளைவுகளும் தெரிந்தே இருந்தன. சில நேரங்களில் எதிர்பாராததுகள் நிகழ்ந்துவிடும்தானே. யூகித்த எல்லாமும் ஒன்றுமில்லாமல் முடிந்து, தேவதைகள் கையில் பூங்கொத்துகளால் எதிர் வருவார்கள்தானே. அந்தத் தனியறையில், தமிழ்ச்செல்வனுக்கு அது நிகழ்ந்தது. அந்த இராணுவ வீரனின் ஆவேசத்தை அந்த தமிழ் அதிகாரி அரைகுறையாய்கூட அல்ல, எதிர்மறையாய் மொழிபெயர்த்தார். விசாரணை முடித்த அவரின் முரட்டு கைக்குலுக்கலில், ஸ்நேகம் ஸ்பரிசித்தது.

‘‘இங்க வேணாம், ஊருக்கு போயிடு’’ என இவர் யூகித்ததையே அவரும் சொன்னார். அறையைவிட்டு வெளியேறிய ஒரு அவசர நிமிடத்தில், ‘‘புதுமைப்பித்தன்தான் டேய் எனக்கும் ஆதர்சம்’’ என்ற வார்த்தை தனக்கு அரைகுறையாய் கேட்டதாக, தமிழ் என்னிடம் சொல்லி முடித்தபோது மதுரை மாட்டு தாவணியில் எங்கள் வண்டி நின்றிருந்தது.

‘சிறுகதை எழுதுபவரை, பயிலரங்குகள் மூலம் பயிற்றுவித்துவிட முடியும்’ என நம்பிய காலமது. சாத்தனூர் அணையிலிருந்து இறங்கும் நீர். எங்களை சலசலத்துக் கடந்துபோகும் ஒரு காட்டாற்றங்கரையில் இருபது முப்பது பேர் மௌனமாய் உட்கார்ந்திருக்கிறோம். நீரின் சப்தம் நீருக்குள்ளேயே விழுந்து கரையும் நீரின் பயணம் அது.

எங்கிருந்து துவங்குவதென தெரியாமல், நீண்ட நேரம் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார் தமிழ்செல்வன்.

‘‘ஒரு வார்த்தை கெடைக்கலையேடா’’

ஒரு கவளம் சோறு கெடைக்கலையே என்றழும் ஒரு எத்தோப்பிய குரலைத் தாண்டியது அது.

‘‘பரவாயில்லைண்ணா, இன்னொரு கேப் கொடுத்தறலாம்.’’

‘‘வேணாம். எத்தனை கேப் கொடுத்தாலும் நான்தானே மறுபடி ஆரம்பிக்கணும்?’’

‘‘இசக்கிமுத்து எட்டு வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வர்றான். வெள்ளையம்மா நெறை மாசமா இருந்தப்போ வீட்டைவிட்டு ஓடினது. இப்போ பையனுக்கு எட்டு வயசு. தன் புள்ளைய மொத மொதலா பாத்த இசக்கி முத்துக்கு...’’

அவரால் தொடர முடியவில்லை. நாங்கள் யாரும் எதிர்பார்க்காமல் உடைந்தழுகிறார். அக்கூட்டத்திலிருந்து எழுந்த கோணங்கி, ஒரு மர மறைவிற்கு அவசரமாய் நகர்கிறான். நீண்ட நேர இடைவெளிக்கப்புறம், அவரே அறுந்த இடத்திலிருந்து தொடர்கிறார்.

‘‘எட்டு வருஷமா சம்பாதிச்சி என்னத்தையா கொண்டு வந்தே’’ இருட்டில் வெள்ளையம்மாவின் குரல் மட்டுமே கேட்கிறது அவனுக்கு.

‘‘வந்தன்னிக்கே கேக்க வேணாமா வெள்ளையம்மா?’’

அவன் கொண்டுவந்திருந்த ட்ரங்க் பெட்டியை, அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் திறந்து, ‘‘முப்பத்தியேழு ரூவா, நாப்பது பைசா’’ என பெரும் உற்சாகத்திற்கிடையே, தன் எட்டு வருட உழைப்பின் பெருமிதத்தை சொல்கிறான் இசக்கிமுத்து.

வெள்ளையம்மாவின் முகம் ஆவேசமடைகிறது. இந்த முகத்தை சகிக்க முடியாமல்தானே எட்டு வருஷத்துக்கு முன்னால், அவன் ஓடினது.

அவன், அவளை நோக்கி அந்த அரிக்கேன் விளக்கொளியில் தன் இரு கைகளையும் விரித்துக் காண்பித்தான். கைகள் இரண்டும் முண்டும் முடிச்சுகளுமாய் காப்பு காய்ந்திருக்கின்றன.

‘‘நான் எட்டு வருசமா மூட்டைத் தூக்குனேன், வண்டி இழுத்தேன், பரோட்டா சுட்டேன்...’’ அவன் வேலைகளை அடுக்கிக் கொண்டே போகிறான்.

‘‘ஆனா, ஏன் எங்கிட்ட காசு இல்லன்னு தெரியலை வெள்ளையம்மா.’’

தமிழ்ச் செல்வன் கைகளை விரித்துக் காண்பிக்கிறார். அவர் கைகளில் காய்பில்லை. ஆனால், பொங்கியெழுந்த அந்த கணக் கண்ணீரில், மனம் முழுக்க காப்பு காய்த்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. எத்தனை முயன்றும் அவரால் அன்று ‘கருப்பசாமியின் அய்யா’ என்ற அக்கதையை முழுக்கச் சொல்ல முடியவில்லை. கதையின் மிச்சத்தை, ஓடும் அந்நதி நீரில் கரைத்துவிட்டு நாங்கள் திரும்பினோம்.

நீரின் சுழிப்புபோல, தன் போக்கில் படைப்பின் உச்சத்திலிருந்தபோது, தமிழ்ச்செல்வனின் வாழ்வு மடை மாற்றப்பட்டது. அறிவொளிக்குப் போனார். தன், ஜனங்களின் சுவாசத்தை அருகிலிருந்து அருந்தின காலம் அது அவருக்கு. இங்கே சிறு பத்திரிகைகளில், வார்த்தைக்கும், வரிக்கும், இசத்துக்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தபோது, இவர் தன் தொலைதூர கிராம மனிதர்களின் கைப்பிடித்து ‘அ, ஆ’ எழுதச் சொல்லிக் கொடுத்தார்.

இதுவரை நம்பிக் கொண்டிருந்தவைகள், அந்த எளிய மனிதர்களின் முன் பொலபொலவென உதிர்ந்தன. அவர்களுக்கான கதை சொல்ல முடியாமல், டால்ஸ்டாயும் அசோகமித்திரனும் திணறினதை உணர்ந்து, அவர்கள் படைப்பை மக்களுக்கானதாய் மறு படைப்பாக்கினார். எப்போதும் இளசுகளால் சூழப்பட்டிருந்தார். ‘இலக்கிய அரசியலற்ற அந்நாட்களே, தன் வாழ்வின் உன்னதம்’ என அவைகளை நினைவுகூர்கிறார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, அவர் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின்’ பொதுச்செயலாளர் ஆனார். அதுவரை அவர் அடைகாத்த படைப்பு, அன்றிரவு அவர் கையிலிருந்து ஒரு பாம்பு மாதிரி நழுவினாலும், ‘ஒரு களப்போராளி எதையாவது பலி கொடுத்துதான் களத்தில் நிற்கவேண்டும்’ என்று அவர் அறிந்திருந்ததால், அக்கசப்பை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டார். ஆனாலும் படைப்பிழந்து நின்ற அத்தலைமை, வரலாற்று சோகம்.

-நன்றி மீடியா வாய்ஸ்

Tuesday, November 1, 2011

தொடர் - 13


இருள் முற்றியிருந்தது. மனம் முழுக்க ஆர்வமும், வெளிச்சமுமாயிருந்தது. போக வேண்டிய பாதையை ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததால், வெகு சுலபமாக அவ்வீட்டு வாசலை அடைந்தேன். மூடியிருந்த இரும்பு கேட்டின் வழியே உள்ளூர ஊடுருவிப் பார்த்தேன். நெடிதுயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களும், அடர்த்தியாய் பரவியிருந்த தங்கப்பெட்டி மலர்களுமாய் வீடு உள்ளடங்கி இருந்தது. எப்போதும் அப்படியில்லையெனினும் அப்போது எங்கிருந்தோ வந்து ஒரு சிறு அச்சம் உள்புகுந்தது. அதை வெல்ல நினைத்து குரலுயர்த்தினேன்.

‘‘கிரீஷ்... கிரீஷ்...’’

‘‘வெயிட் ப்ளீஸ்... ப்ளீஸ் வெயிட்..’’

என்று குரல் வந்த திசையைத் துல்லியப்படுத்த முடியவில்லை.

வீட்டினுள்ளா, தாழ்வாரமா? மரம் செறிவடர்ந்த ஈர மண்மேலிருந்தா என மனம் அலைவுற்றது. பல வருடங்களுக்கு முன், ஒரு வெப்பால மரத்திற்கடியில், அவருக்காக விடியும்வரை நின்று திரும்பின ஏமாற்றம் ஏனோ ஒரு நிமிடம் முகத்தில் அறைந்து திரும்பியது. அமைதியாய் இருக்க முடியாமல் மனம் அலைவுற்றுக் கொண்டேயிருந்தது. சர்க்கஸ் இரும்புக் கூண்டில் உலாத்தும் புலியின் தவிப்பு அது.

‘‘கிரீஷ், ஐ ஆம் பவா’’ என்று அநியாயத்திற்கு கத்தினேன்.

உடனே பதில் வரும் என கணித்து ஏமாந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து,

‘‘பவா ப்ளீஸ் வெயிட். வில் கால் யூ’’ என்று முற்றிலும் விளங்காத, ஆங்கில குழறலில் ஓங்கிய குமுறலில் ஒலி வந்தது.

‘என்ன ஆனது இவனுக்கு? உள்ளே யாருடனாவது இருக்கிறானா? கேட்டு தீர்மானித்துதானே இன்று மாலை 7.30 என்று நேரம் குறித்தோம். கொஞ்சம் அமைதியாய் இரு’ என மனத்தின் திமிறலை தலையில் தட்டி அடக்கினேன். அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின், முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே,


‘‘ஹாய் பவா’’

என்ற வார்த்தை சிக்கனத்தினூடே வழிந்த புன்னகையோடு கேட்டை திறந்து, கிரீஷ் என் தோள் அணைத்து வரவேற்று உள் அழைத்தான். அவன் மீது வியர்வையை மீறின ஒரு சுகந்த மணம் வீசியது.

‘‘சாரி... சாரி’’ என அவன் முணுமுணுத்துக் கொண்டே இயங்கினான்.

அவன் தாமதத்திற்கான காரணத்தை அச்சிறு வீட்டின் அறையிலும், பின்வாசலிலும், மர இருட்டிலும் துழாவிய, என் கள்ள மனம் புரிந்து, இன்னும் கொஞ்சம் தாராளமான புன்னகையோடு தன் கேமராவை கம்ப்யூட்டரில் இணைத்தான். பிரம்பு நாற்காலி இருக்கையிலிருந்து எழுந்து அச்சிறு திரையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேர காத்திருப்புக்குப்பின் அத்திரையில் நான் பார்த்த காட்சி, அப்படியே சில்லிட வைத்தது. படமெடுத்து நிற்கும் ஒரு நாகப்பாம்பு. எதுவும் சொல்லாது சமையலறையில் நுழைந்து எனக்கு டீ போட்டுக் கொண்டிருந்தான் கிரிஷ். நிமிடத்திற்கு நிமிடம் படம் மாறிக் கொண்டேயிருந்தது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள். அதன் கோபத்தோடு, அதன் தப்பித்தலோடு, அதன் மறைவோடு, அதன் எதிர்ப்போடு, அதன் குழைவோடு...

‘‘அய்யோ... கிரீஷ்.. இது எப்போ எடுத்தது?’’

‘‘ஜஸ்ட் நவ் பவா. அதான் லேட்.’’

ஆவி பறந்த டீ கப்புடன் எதுவுமே நடக்காதது மாதிரியான முகபாவத்தோடு வெளியே வந்த ‘கிரிஷ் ஃபேலன்’ என்ற அந்த புகழ்பெற்ற எழுபது வயதிற்கும் மேலான அமெரிக்க புகைப்படக்காரனையே பார்த்துக் கொண்டிருந்தேன். டீ ஆறிக் கொண்டேயிருந்தது. கம்ப்யூட்டர் படம் நழுவிக் கொண்டிருந்தது. அது ஒரு அச்சமூட்டின இரவு.

ஒரு நண்பரின் பிரவுசிங் சென்டரில் அடுக்கப்பட்டிருந்த, யாரையும் உறைய வைக்கும் அபூர்வ புகைப்படங்களே, ஆறு மாத அலைவுறுதலுக்குப் பின், இதோ இந்த இரவில், சற்றுமுன் வெளியேறின சர்ப்பத்திற்குப்பின், என்னைக் கொண்டுவந்து இக்கலைஞனிடம் சேர்த்திருக்கிறது. கிரீஷ் ஃபேலன் கனடாவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து குடியேறி, கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இந்த ‘லேண்ட்ஸ்கேப்’ அவனுக்கும் மிகப் பிடித்துவிட்டது.

‘‘பௌர்ணமி நிலவு, உலகம் முழுக்கத் தோன்றுவதுதானெனினும், திருவண்ணாமலையிலிருந்துதான் அது தன் சகல சௌந்தர்யத்தோடும் கர்வப்படுகிறது’’ என்று வார்த்தைகளில் கவிதைத் தோய்த்து, என்னைப் பொறாமைப்படுத்தினான் கிரிஷ்.

‘‘எப்படிப் பார்த்தும், எங்கிருந்து நோக்கியும், மடியில் புரண்டும் மார்பில் குடித்தும், எத்தனை முறை இதன் உடலில் நடந்தும், எனக்கு சலிக்காதது இம்மலை மட்டும்தான். என் அருகாமையிலேயேத் தங்கி, என் ஸ்பரிசத்திலேயே இருந்துவிடு கிரீஷ்’’ என்ற அதன் அந்தரங்கமான வார்த்தைகளுக்காகவே இங்கிருக்கிறேன் பவா.

மிக சந்தோஷமான வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் முன் பகுதியில் சூழ்ந்த நரகத்தை, இம்மலைக் கழுவி சுத்தப்படுத்தி, ஒரு குழந்தைக்கு வெண்ணிற ஆடைப் போர்த்தி, பொத்திக் கொள்வது மாதிரி என்னை அரவணைத்து நிற்கிறது பவா.’’

பாம்பு கடைசியாய் வெளியேறின வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிரீஷ் தன் கம்ப்யூட்டர் முன்னமர்ந்து, எதையோ மீட்டுக் கொண்டு வந்தான். இப்போது அந்த இருட்டில், அவன் முகம் முற்றிலும் பிரகாசமடைந்திருந்தது. பின் திரும்பி என்னை அருகில் அழைத்து, தோளில் அழுத்தி உட்கார வைத்தான். திரைக்கு கைகளால் ஒலியூட்டினான்.

என்னால் நம்ப முடியவில்லை. என் பிறப்பு முதல் இன்றுவரை தினம் தினம் இம்மலையைப் பார்த்து வளர்ந்த மனம்தான் எனினும், அதன் பல பரிணாமப் பரவசம் என்னை மூழ்கடித்தது. அக்கணினித் திரை அடுத்தடுத்து மலைகளால் எங்களிருவரையும், அதனுள் இழுத்தது. இச்சிருஷ்டிகளை உருவாக்கியதன், ஒரு சிறு துளி கர்வமுமின்றி, கிரீஷ் என் முக மாற்றங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான்.

அது என் வாழ்வின் முற்றிலும் வேறொரு நாள். எனக்கு வழிவிட்டு வெளியேறின நாகத்துக்கு போலவே, அதன் ஜீவிதத்தில் யாராவது ஒருவன், அதன் அத்தனை அசைவுகளையும் அங்குலம் அங்குலமாய் படமாக்கின அனுபவத்தை, மரச்செறிவினூடே வளர்ந்த அதன் வாழ்விற்கு எவ்வளவு புதுசோ, அவ்வளவு புதுசு எனக்கு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்காரன், பருவம் கடந்து, காலம் அறிந்து, மழை, வெய்யில், நீர், தூறல், காலை, மாலை, இரவு, அதிகாலை...

ஓ... இம்மலையும் இக்கலைஞனும் எப்படி பிணைந்திருக்கிறார்கள்? ஒவ்வொரு பருவ நிலைகளிலும் அதன் அழகை அள்ளியெடுத்து பருகி முடித்த ஒரு மனிதனின் அருகாமை, எனக்கு சிலிர்ப்பூட்டியது.


‘‘கிரீஷ், இம்மலைகளை இக்கணினியிலிருந்து வெளி எடுத்து உலகுக்கு காட்சிப்படுத்த வேண்டும் கிரீஷ்.’’

‘‘எதற்கு?’’

‘‘‘இத்தனை கம்பீரமான ஒரு மலை நிழலிலா நம் வாழ்வு?’ என்ற பெருமிதமும், ‘இதன் ஆகிருதிக்கு முன், நாம் வெறும் அற்ப பதர்’ என்ற மனிதனின் உணர்த்தலுக்கும் வேண்டி.’’

‘‘நான் யோசிக்கிறேன் பவா’’

அடுத்த ஃபோல்டர் திறக்கப்பட்டது. இந்திய நிலப்பரப்பெங்கும் அவன் அலைந்து திரிந்து, அவன் காமிராவுக்குள் அள்ளிய சாதுக்கள். ஒரு பொன்னிறமான சூரிய உதயத்தில், கங்கை ஆற்றின் கரையில் நின்று குளிக்கும் ஒரு பெண்ணின் படத்தில் நான் ஊன்றி நின்றேன்.

‘‘யூ லைக் திஸ் பிக்சர்?’’
‘‘வெரி மச் கிரிஷ்’’

அப்படம் எடுக்கப்பட்ட பின்னணியை, மனம் லயிக்க சொல்லி முடித்தான். நடுநிசியைக் கடந்து கொண்டிருந்தோம்.

அடுத்த ஃபோல்டர்...

நதிகள், ஒரு தேசம் முழுதும் குறுக்கம் நெடுக்குமாய் ஓடும் நதிகள். அந்த அறை திடீரென சில்லிட்டுப் போனதாகவும், நீரின் சுழிப்புக்குள் நாங்கள் இருவரும் நின்று கொண்டிருப்பதாகவும் உணர்ந்த தருணம் அது. ஆர்வம், அடுத்த திறப்புக்காக கதவருகில் போய் நின்று கொண்டது.

‘‘இது எகிப்து. இங்கு நான், வீடுகளைத் தவிர வேறெதையும் படமெடுத்ததில்லை.’’

‘‘ஏன் கிரீஷ்.’’

‘‘ஒவ்வொரு தேசத்திலும் ஏதோ ஒன்று மட்டும்தான் என்னுள் பிரவேசிக்கிறது. மற்றதெல்லாமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. ஸ்வீடனில் ஏரி, எகிப்தில் வீடு, இந்தியாவில் சாதுக்கள்.’’

அவன் உலகத்தை இப்படி வகைப்பத்தி ஒரு கோலி குண்டு அளவுக்கு சின்னதாக்கி, தன் கணினியில் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தையின் குதூகலத்திற்கும் அப்பால், அதற்காக அவன் அலைந்த அலைச்சலும், செலவிட்ட பணமும், மொழி தெரியாத பிரதேசங்களில் சுற்றி அலைந்த காலங்களும்...

‘‘எதற்கு, எதற்கு கிரீஷ் இதெல்லாம்?’’

‘‘இது, இன்னொரு உலகம் பவா, உனக்கு எல்லா நாளும் மலை சுற்றும் அருணாசலத்தைத் தெரியுமா?’’

‘‘எந்த அருணாசலம் கிரீஷ்?’’

‘‘தினமும் காலையிலேயும், மாலையிலேயும் மலையைச் சுற்றி வலம் வரும் அந்த இளைஞன் அருணாசலம்.’’

‘‘அவரை எனக்குத் தெரியும் கிரீஷ், அவர் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஷார்ட்ஹேண்ட் மாஸ்டராய் பணிபுரிகிறார்.’’

‘‘ஓ... எனக்கு அது தெரியாது.’’

‘‘ஆவேசமான எங்கள் அரசியல் கூட்டங்கள் நடக்கும் இடங்களில், வெளிச்சம் படாத ஒரு மூலையில் அமர்ந்து எங்கள் உரைகளின் சாராம்சத்தை அவசரமாய் குடித்துக் கொண்டிருக்கும் அருணாசலத்தின் இன்னொரு முகத்தை நான் அறிவேன் கிரீஷ்.’’

‘‘அது வேண்டாம் எனக்கு. அவன் யாராய் வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் தினம் ஒருமுறை என்று ஆரம்பித்து, அது ஒரு புற்று போல வளர்ந்து, வளர்ந்து, மலை சுற்ற மட்டுமே அவனுக்கு பொழுதுகள் புலர்ந்தும், உலர்ந்தும் போனது. இது எதற்கு பவா? அருணாசலத்தின் வாழ்வை நீ எதில் அடக்குவாய்?’’


விடை தெரியாத பல ஆயிரம் கேள்விகள், மனதின் ஏதோ ஒரு மூலையில் தேங்கி நிற்பதைப்போல, இதுவும் அதற்குள் சங்கமித்தது. பால் கலக்காத இன்னொரு கோப்பைத் தேநீரோடு கிரீஷ் வந்தபோது, மழை துவங்கியிருந்தது. ஏனோ எனக்கு மணி பார்க்கத் தோன்றவில்லை. மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, விடிந்திருந்தது.

அதன்பிறகான பல நாட்களில், கிரீஷ் தன் கறுப்பும் வெளுப்புமான பல ஸ்நேகிதிகளோடு ஒரு ஜீணீஸீtலீமீக்ஷீ வண்டியில் என்னைக் கடந்திருக்கிறான். ‘உலகின் ஒட்டுமொத்த சுவையை ஒரு சின்ன சாக்லேட் பேப்பரில் சுற்றி, தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறான்’ என என்னை பொறாமைப்படுத்தும், அவனின் டூ வீலர் பயணங்கள்.


விட்டொழிக்க முடியாமல், கவ்விப் பிடித்துள்ள என் பத்து மணி அலுவலக வாழ்வின் பரபரப்பிலும், நான் ‘கிரீஷ் உடனான சர்ப்பம் புகுந்த அந்த இரவையும், மலையின் அப்பிரமாண்ட ஆகிருதியின் அருகில்கூட அண்டமுடியாத என் அகங்காரத்தையும் நினைத்துக் கொள்வேன். உலகெங்கும் நடந்து திரிந்த, அந்த கால்களை கூர்ந்து பார்க்கும்போதெல்லாம், தீபத்தன்று வாணவேடிக்கைகள் தீர்ந்து, எல்லா கொண்டாட்டங்களும் முடிந்துபோன பின்னிரவுகளில் நின்றெரியும் தீபச்சுடர் என் நினைவில் நெடுநேரம் ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

Monday, October 24, 2011

தொடர் - 12


சல்வடோர் டி விட்டாவின் சினிமா பாரடைஸ் என்ற உலகப் புகழ் பெற்ற இத்தாலியப் படத்தில், அப்படத்தின் நாயகன் பெரிய இயக்குநராகி திரும்பித் தன் நகரத்துக்கு வந்து அவனை இப்படி ஓர் இயக்குநராய் உயர்த்திய சிதிலமடைந்த அத்திரைப்பட அரங்கின் முன் நிற்கிற துயரம் எப்போதும் என்னுள் வந்து வந்து போகும் காட்சிப் படிமம். இதற்குச் சற்றும் குறைவில்லாத மனநிலையை எங்கள் ஊர் ராமலிங்கனார் தெரு மூலையில் சிதைந்து போயுள்ள மீனாட்சி தியேட்டரைப் பார்க்கும் போதெல்லாம் அடைந்திருக்கிறேன். அதைக் கடக்கும்போதெல்லாம் , துருப்பிடித்த அதன் மூடிய இரும்பு கேட்டைத் திரும்பிப் பார்ப்பேன். ஒரு துக்கம் உடல் முழுவதும் பரவுவதை உணர்வேன். யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் கூடாத மன உணர்வு அது. ஒரு கிழட்டு வேசியின் அந்திம காலத் துயர வாழ்வை மீட்டுவது போன்றது.

ஆறரை மணிக்குத் துவங்கும் ஃபஸ்ட் ஷோ பார்க்க நாலு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட்டு கியூவில் முதல் ஆளாய் நிற்க ஆரம்பித்தாலும், ஒரு போதும் முதல் டிக்கெட்டை நான் வாங்கினதாய் நினைவில்லை. மனிதர்களின் அசுர நெரிசலில் நான் நசுங்கியும், பின்னோக்கி இழுத்து விடப்படினும்கூட ஒவ்வொரு படத்தையும் வியர்வையினூடே பார்த்த நினைவுகள் மேலிடுகிறது.

அத்தியேட்டரில் நான் பார்த்த தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்த முடியாது. ஆனால் பாரதிராஜாவின் நிழல்களை முதல் நாள் முதல் காட்சியில் மூன்றாம் ஆளாக டிக்கெட் வாங்கி, மனித ஆரவாரங்களினூடே பார்த்த நாளின் ஞாபகம் மட்டும் என்றென்றும் என்னுள் நேரம், காலம், பருவம் எல்லாவற்றையும் உள்ளடக்கி அப்படியே உறைந்திருக்கிறது.

அன்று அப்படம் என்னுள் நிகழ்த்திய உணர்வுக் குவியலான உரையாடல்கள், வேலையின்மையைப் பற்றி அது தந்த மனச் சித்திரம், கலைஞனின் பெருமிதம் குறித்து அது பேசிய உச்சம் இப்படத்தின் இயக்குநரை ஒரே ஒருமுறை வாழ்வில் சந்தித்துவிட முடியுமா என்ற பேராசை எல்லாத் தமிழ் இளைஞர்களுக்கும் போலவே எனக்குள்ளும் எழுந்த அன்றைய இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல காலம்தான் எத்தனை வேகமாக நம்மை சடசடத்துப் போய்விடுகிறது! ஆறேழு வருடங்களுக்கு முன் பெரும் தனிமை சூழ்ந்த ஒரு விடுமுறை நாளின் பின்னிரவில் என் நண்பர் எஸ். கே. பி. கருணாவுடன் பெங்களூர் போய், உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கினோம்.

அயர்ந்து தூங்கும் நண்பர்களின் முகங்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, திருட்டுப்பூனையின் மெல்லிய காலடி ஓசையில் அறையை விட்டு வெளியேறி நாங்கள் தங்கியிருந்த மூன்றாவது மாடியின் லிஃப்ட்டுக்குள் நுழைய வைத்தது எல்லாமும் ஒரு காப்பியின் பொருட்டே.

கண்ணாடி அணிந்து, பெர்முடாஸ் போட்டு, ஒரு கசங்கலான டி-ஷர்ட்டோடு அந்த லிஃப்ட்டில் என்னோடு இருந்த லிப்ட் ஆபரேட்டர் அச்சு அசல் பாரதிராஜாவின் இன்னொரு வார்ப்பு. அவசர அவசரமாய் காபி குடித்து, தம் அடித்து, மீண்டும் அறைக்கு வந்து என் நண்பர் கருணாவிடம் இந்த ஹோட்டல் லிஃப்ட் ஆப்பரேட்டர் நம்மூர் பாரதிராஜா மாதிரியே இருக்கிறார் என்று சொன்ன என் குழந்தைத் தனத்தையும் கருணா புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த காப்பிக்கு அவரோடு போய், மங்கலான அவ்வெளிச்சத்தில் உட்கார்ந்து நிமிர்ந்தால் எங்கள் எதிரில் அவர்.

இரு குழந்தைகளின் குதூகலத்தோடு பாரதிராஜாவும் கருணாவும் உடல்மொழியில் கட்டித் தழுவி, நிதானப்பட்டு, கருணா என்னை அறிமுகப் படுத்தினார்.

‘’இவர் பவா, என் நண்பர், நல்ல எழுத்தாளர் சார்’’

“ஹேய், இவனைத் தெரியாதா எனக்கு! இவன்தான் கொஞ்சம் முன்னாடி என்னை யாருன்னே தெரியாத மாதிரி லிஃப்ட்ல மொறச்சான்.”

“சார்... நான் உங்களை லிப்ட்...’’ வார்த்தைகளைப் பாம்பின் நச்சு நாக்கு மாதிரி உள்ளிழுத்துக் கொண்டேன்.

காலம்தான் என்னென்ன விளையாட்டுகளை நம்முன் தினம் தினம் விளையாடிப் பார்த்து விடுகிறது. அவர் காபி குடித்து முடிக்கும்வரை, நிழல்கள் படம் ஒவ்வொரு பிரேமாய் அவர் முகத்தின்மீது ஓட ஆரம்பித்தது எனக்கு.

ராஜசேகர், சந்திரசேகர் என்ற இரு அறிமுகங்களின் இயல்பான நடிப்பும், ஒவ்வொரு காட்சியும் வரையப்பட்ட ஓர் ஓவியம் மாதிரி வந்துபோன இன்றுவரை பெயர் தெரியாத அப்படத்தின் நாயகியும், மனதில் நினைத்ததை அப்படியே திரைக்கு மாற்றியஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமையாலும் நிறைந்து அறைக்குத் திரும்பினேன்.

பெப்ஸி போராட்டம் உச்சமாகியிருந்த நேரமது. திருவண்ணாமலையில் ‘மறுமலர்ச்சி’ படமாகிக் கொண்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் ஹென்றி படைப்பாளிகள் சங்கத்தின் தீவிர செயல்பாட்டாளர். அப்போது படைப்பாளிகள் சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவரும் தன் நண்பனுமான பாரதிராஜாவின் பிறந்தநாளை திருவண்ணாமலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தன் விருப்பத்தை ஹென்றி சார் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான்.

மூடப்பட்டிருந்த தன் ரைஸ் மில்லையே ஓரிரு நாட்களில் கலாபூர்வமாக்கி, ஒரு படைப்பாளியின் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தப்படுத்தினார் கருணா.

அது இன்னும் நம்ப முடியாத ஓர் இரவு.

முப்பது நாற்பது இயக்குநர்கள் பத்திருபது கார்களில் வந்திறங்கி எங்களை ஆச்சர்யப்படுத்தினர். மயக்கமூட்டிய அன்றைய லேசான மழைத்தூறல் மிக்க இரவில் கிட்டத்தட்ட விடியும்வரை எங்juகள் உரையாடல் நீண்டது.

அடுத்த நாள் அவரோடு பயணிக்க வாய்ந்த பகல்நேரக் கார் பயணம் நேற்றிரவு விட்ட உரையாடலை நீட்டித்துக் கொள்ள உதவியது. இயக்குநர் வி. சேகரின் சொந்த கிராமமான நெய்வா நத்தத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் போகும் சாலையில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

வழியோர மந்தமான கிராமங்கள், டீக்கடை மரப்பலகைகளில் கிராமத்து ஆட்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தவர் என்பக்கம் திரும்பி, தமிழ்நாட்ல எல்லா கிராமத்தானும் ஒருபோலத்தான் இருக்கான். இது மாவட்டம், ஜாதி அப்படியெல்லாம் ஒரு மயிருமில்ல என்று வார்த்தைகளை முடிப்பதற்குள் கார் கோணலூர் ஏரிக்கரைமீது போய்க் கொண்டிருந்தது. பரவசத்துடன் காரை நிறுத்தச் சொன்னார். நான்கு திசைகளிலும் வியாபித்திருந்த உருண்டை உருண்டையான கற்குன்றுகள் அவருக்குள் எதையோ மீட்டுக்கொண்டு வந்திருப்பதை நான் மௌனமாய் உணர்ந்தேன்.

ஆழ்ந்த மௌனமும் பெருமூச்சுமாய் காரின் முன்சீட்டிற்கு ஏறி, என் பக்கம் திரும்பிக் கொண்டார்.

‘‘இந்த லேண்டஸ்கேப் எத்தனை அற்புதமா இருக்கு! இப்படி ஒரு எடத்தை நான் கிழக்கே போடும் ரயிலுக்காக தேடி அலைந்தேன், உங்க ஊரை அப்ப பாக்கல. இந்த எரியாவை ஏனோ மிஸ் பண்ணிட்டேன்’’ என அப்பயணத்தின் முடிவுவரை எதையோ இழந்த மன பதற்றத்தோடே பேசிக் கொண்டுவந்தார்.

சாலையோரங்களில் அலாதியாய் பூத்துக்கிடந்த கசா மலர்களை படமாக்க வேண்டி அவசர அவசரமாய் முயன்றும் ஆறேழு மாதங்கள் கழித்தேபோய் அப்படி ஒரு மலர் செடிகள் இருந்த அடையாளமேயற்ற நிலப்பரப்பைப் பார்த்து சத்யஜித்ரே அடைந்த மன பதற்றத்திற்கு நிகரானது அது.

ஒரு சிறு பத்திரிகையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியிருந்த கட்டுரையை என் மதிய உணவினூடே வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், தமிழில் பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ மிக முக்கியமான படம். திராவிடக் கட்சிகள் ஒரு சாதாரண ஸ்லம் பையனின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை அதன் கலாபூர்வத்தோடு சொன்ன படம் அது என்று அதை முடிக்குமுன்பே பாரதிராஜவை தொலைபேசியில் அழைத்து அச்செய்தியை பகிர்ந்து கொண்டேன். தான் மிக எதிர்பார்த்திருந்தும் எதனாலோ அப்படம் நான் நினைத்த அளவுக்கு பேசாமல் போனது. ஆனால் எனக்குத் தெரியும் பவா, ஈவிரக்கமற்ற விமர்சனத்தை காலம்தான் முன்வைக்கும். அப்படைப்பை நானே மறந்த பிறகும் யாரோ ஒரு நேர்மையான விமர்சகனால் அது போற்றப்படுகிறது அது போதும் எனக்கு என அவர் தழு தழுத்ததை தவிர்க்க வேண்டி,

‘‘அப்புறம் எப்படி சார் இருக்கீங்க?’’

‘எனக்கு ரொம்ப பிடிச்ச படத்துல ஒன்னு பவா என்னுயிர் தோழன், ஏன் அது தோத்துச்சி’ என ஆவேசத்தோடு என்னிடமே கேட்டார். எதிர் முனை மௌனத்தை உணர்ந்து ‘தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சுக்க முடியலை பவா’ என அங்கலாய்த்த அக்கலைஞனின் குரல் நீண்ட நேரம் தொலைபேசியை மீறியும் அந்த அறையில் அலைந்துகொண்டிருந்தது.

மழைநீர் அறைக்குள்ளும், வெளியிலேயும், பொழிந்த ஓர் இரவு அவர் எங்களுக்கு ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலு பேர்’ கதை சொன்னார். என் வாழ்வில் என்றாவது ஒரு முறை இந்த படத்தை நான் தான் எடுப்பேன். என்னளவிற்கு இக்கதையை உள் வாங்கிக் கொண்டவன் எவனுமில்லையென்று குரல் உயர்த்தினார். ஆனால் அந்நாவல்தான் அவர் தமிழில் கடைசியாக வாசித்தது என என்னால் உணரமுடிந்தது. எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பை துப்புற துடைத்து விடுகிறது. அது அவருக்கும் நேர்ந்தது இயல்புதான்.

கொஞ்சம் கொஞ்சமாய் படைப்பு மனம் விலகி, எதை எதையோ முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் பெரும் கலைஞர்களை இலக்கியத்திலும் திரையிலும் நாம் அறிவோம். அப்படி ஓர் இறுதி முடிவுக்கு வாசகனோ, பார்வையாளனோ வந்துவிடுமுன் தன் ஆகச் சிறந்த இன்னொரு படைப்பின் மூலம் உச்சத்தை அடைந்து நம்மை ஏமாற்றத்துகுள்ளாகிய படைப்பாளிகளே அதிகம். (பொம்மலாட்டம்......)

பொம்மலாட்டம் படம் துவங்கின பத்தாவது நிமிடம் நான் இந்த மனநிலையில் இருந்தேன். நானேபடேகர் என்ற ஆகிருதியை இவர் கையாண்ட விதம் அப்படிப் பிடித்திருந்தது எனக்கு. அப்படத்தின் ஜீவனோடே இடைவெளியின்றி அவரோடு கூட நானும் பயணித்தேன்.

இதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்க முடியாது. கதையின் கன்னி அறுத்து பார்வையாளனை விடுவித்தே ஆகவேண்டியத் தருணத்தில் அப்படத்தின் நாயகி பெண்ணல்ல ஆண் என்ற அதிர்வு என் உடல் முழுக்கப் பரவியது. ஒரு சராசரி சினிமா பார்வையாளனாக நான் என் வாழ்வில் அடைந்த ஒரு உச்சஸ்தாயிலான யாராலும் அனுமானிக்க முடியாத அனுபவம் அது. கிட்டதட்ட ஷைலஜாவும் என்னுடனே இருந்தாள்.

இருவரும் மௌனமுற்று, பேச எதுவுமற்று, ஈரகாற்று முகத்தில் மோத வீட்டிற்கு வந்தோம். வாசலிலேயே நின்று அவருக்கு போன் செய்தேன்.

‘‘சார் இப்பதான் பொம்மலாட்டம் பாத்துட்டு வர்றோம்’’ என்ற துவக்கம் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தாவணிக் கனவுகள் என்ற படத்தில் தான் நினைத்த ஒன்றை காட்சிப் படுத்த முடியாமல் முற்றிலும் சோர்ந்து போகும் ஒரு கணத்தில் வெளியில் பாக்யராஜ் ராதிகாவிடம் அதே காட்சியை, அதே உகரத்தோடு நடித்துக் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாரதி ராஜா ஒவ்வொரு நிமிடமும் மலர்வதை கேமிரா படமாக்கிக் கொண்டேயிருக்கும், அதே மாதிரியான தருணமது.

என் போன் ஷைலஜாவுக்கு போனது, ‘‘இதுக்கு மேல பேசினா நான் பொறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துறவேம்மா, உங்கரெண்டு பேரின் பாராட்டு போதும் எனக்கு, பணம் போனா மயிராச்சி’’

கிட்டத்தட்ட அவரிடம் பேசின அதே மன உணர்வோடு பாலுமகேந்திராவிடமும் பேசினோம். எல்லாக் கலைஞர்களுமே உணர்வுக் குவியல்கள்தானே.

ஒரு நல்ல படைப்பை நான் கொடுத்தா என்ன, என் நண்பன் பாரதி கொடுத்தா என்னம்மா என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் அம் மனஉணர்வுகள் எதன் பொருட்டும் கலைந்துவிட அனுமதிக்காதப் பிடிவாதத்தோடு பார்சன் காம்ப்ளக்ஸ்க்குப் போய், எப்போதும் அவரிடம் உள்ள நிதானத்தை கொஞ்சம் தளர்த்தி, பரவசமாகி

‘‘பாரதி நான் இன்னும் படம் பாக்கல என் மக ஷைலுவும், மாப்ள பவாவும் இப்பதான் பேசினாங்க அந்த ஈரத்தோடயே வந்திருக்கேன், இப்போ உனக்கு என்ன கொடுக்கறதுன்னு எனக்கு தெரியல....’’ எனத் தடுமாற,

எதிர்பாராத இவ்வுணர்வுபூர்வமான சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்த பாரதிராஜா, தன் எதிரில் மிக பிரமாண்டமாய் மாட்டப்பட்டிருந்த பொம்மலாட்ட பட ஸ்டில்லை கிழித்து, அரைகுறையாய் கிழிக்கப்பட்ட அந்த போட்டோ பிரிண்ட் மீது

‘நான் எப்போதும் நேசித்து மதிக்கும் அன்பு நண்பன் பாலுவுக்கு அன்புடன் பாரதிராஜா....’ என எழுதி தருகிறார்

கலைஞர்களின் வாழ்வை ஒரு பறவையின் புதிர் நிரம்பிய வாழ்வைப் போலவே நம் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது நண்பர்களே!


-நன்றி மீடியா வாய்ஸ்

Friday, October 21, 2011

தொடர் - 11

அத்தனை மினுமினுப்போடு ஒரு நாகப்பாம்பை இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. அச்சமின்றி அவசரமுமின்றி நான் கருங்கல் கட்டிடத்திலான கிணற்றுமேட்டில் நின்றுகொண்டும்,பாம்பு பாதி கிணற்று சூறாவரியில் அலைவுற்றுக்கொண்டிருந்த காட்சிப்படிமம் அலாதியானது.

தவறியோ, விரும்பியோ விழுந்திருக்கவோ இறங்கியிருக்கவோ வேண்டும். அது இருந்த இடத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் நீர். இதற்கப்புறம் மேலேறி வருவது சிரமம். அது நீரை நோக்கி ஊர்வதும், சடாரெனத் திரும்புவதும், மேலேற முயல்வதும், முடியாமல் இறங்குவதும் கொஞ்சநேரம் படமெடுத்து நிற்பதுமான அதன் தவிப்பை எவ்வளவு முயன்றும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மனம் அதன் அலைவுறலைப்போலவே அடங்கமறுத்தது. யாருமற்ற அக்கிணற்றுமேட்டில் நின்றுகொண்டு கொஞ்சநேரம் அழத்தோன்றியது.அதுவும் முடியவில்லை.

என் நடுவிரல் பெருசேயிருந்த அந்நாகப்பாம்பை இன்னும் கூர்ந்துபார்க்கிறேன். சம்மந்தமேயின்றி அக்கணத்தில் எனக்கு என் நண்பனும் ஒரு காலத்தில் நவீன தமிழ் கவிதையில் கலக்குரல் எழுப்பின கவிஞனுமான கைலாஷ்சிவனின் ஞாபகம் வந்தது.

அந்நாகப்பாம்பை அப்படியே தனித்தலைய விட்டுவிட்டு கைலாஷ் சிவனோடு அங்கிருந்து அகன்றேன்.

கைலாஷ், தமிழ் நவீன கவிதையின் இன்னொரு முகமோ, ஆளுமையோ அல்ல. சிறுபத்திரிகை வாசிக்கும், எழுதும் குழுவில் இப்பெயர் ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்பட்டது.

இவர்களின் ஞானத்தந்தையும், தமிழின் முக்கிய கவிஞருமான விக்கிரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் தன் தோள்களிலும், இடுப்பிலும், காடு மேடெல்லாம் இரண்டு மூன்று செல்லக் குழந்தைகளை சுமந்தவர். அப்படி அவரிடமிருந்து இறங்க மறுத்து அல்லது அவர் கீழே இறக்க மறுக்கும், விக்ரமாதித்யனே சொல்வது போல வாழ்வில் இருந்தே வாழ்வை மறுதலிக்கிறவன் கைலாஷ்.

அவன் கவிதைகளின் ஒரு வரியோ, உரைநடையின் ஒரு வார்த்தையோ இது வரை என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் அவன்? அவன்தான் என்னை இப்போதும் அலைக்கழிக்கிறான். பாதிகிணற்றில் மாட்டிக் கொண்ட, அல்லது ஏற்றுக் கொண்ட அந்த நாகப் பாம்பைப் போலவே.

வருடம், மாதம், கிழமை எதுவும் ஞாபகத்திலில்லாத ஒரு மாலையில், நான்கடிக்கும் குறைவான உயரத்தில் தோளில் நீண்டுத் தொங்கின ஜோல்னாப் பையோடு, காதில் போட்டிருந்த சிகப்புக் கல் கடுக்கன் தெரிய, மனதில் பதிக்கத்தக்க உருவத்தில் துளியும் தயக்கமின்றி வீட்டிற்குள் நுழைந்து, என்னிடம் வந்தவன் கைலாஷ்.

”திருநெல்வேலியிருந்து வாரேன், உங்களைத் தெரியும். என் பேரு கைலாஷ்சிவன். சூன்யப் பிளவுன்னு ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கு....” அவன் பேசிக் கொண்டேப் போக என் பார்வை அந்த சிவப்புக் கல் கடுக்கன் மீதேக் கிடந்தது.

அன்றிரவு அவனே விரும்பிக் கேட்ட மோர் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு தான் தூங்குவதற்கான இடம் எதுவென தயக்கமின்றி கேட்டான். நான் காட்டிய சிறு அறையை நிராகரித்து, மொட்டை மாடிக்கும், படிக்கூண்டுக்குமிடையேயான,நாலுக்கு நாலிலான ஒரு சிமெண்ட் திட்டு தனக்குப் போதுமென என்னைக் கீழே அனுப்பினான். பழக்கம்தான் எனினும் எல்லாமுமே விசித்திரமாய் இருந்தது எங்களுக்கு. அப்போதுதான் எங்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்திருந்த சாந்தி என்ற பெண்ணுக்கு விசித்திரத்தை மீறிய அச்சமிருப்பதாய் அன்றிரவே எங்களிடம் சொன்னாள்.கலைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பாரதியிலிருந்து உதாரணம் சொல்ல வேண்டிருந்தது அவளுக்கு.

திருட்டுப் பூனையின் காலடித்தடங்கள் போலவே அவன் இருப்பும் எங்கள் வீட்டில்.

எப்போது வருகை, எங்கே செல்கிறான், எதுவும் யாருக்கும் தெரியாது. இருட்டுப் பிரியும் முன்பே எழுந்து நிலத்திற்குப் போய், அருகிலிருக்கும் காடுவரை அலைந்து, பம்ப்புசெட்டில் குளித்து, வெற்றுடம்போடு வந்து..... எப்படியெல்லாமோ அவன் வாழ்வு.

அப்போது அவனுக்கு முப்பதுக்கும் கீழே வயதிருக்கும்.

ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு, பெர்ப்யூம் அடித்து, பைக்கில் சுற்றி, காதல் கடிதங்கள் பரிமாறி, நகரில் சந்திப்புகளுக்கான ரகசிய இடம் தேடி, மனம் முழுக்க சந்தோஷம் நிறையும் கணங்களோடு அவன் வயதையொத்த இளைஞர்கள் பறந்து கொண்டிருக்கையில்,

இவன் காவி கட்டி, தேசாந்திரியாகி,

”என்ன வேணும் கைலாஷ் உனக்கு?”

”ஒண்ணுமேயில்லை.”

அப்போதைய அவன் கை விரிப்பு என் பல இரவுகளின் மீது விழுந்து பிறாண்டியிருக்கிறது.

அவன் வீட்டை விட்டகன்ற அடுத்தநாள் அவன் தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்யப் போன சாந்தி, துணியால் கட்டப்பட்ட சிறு மூட்டை ஒன்றை எடுத்துவந்து எங்கள் முன் கோபத்தோடு போட்டாள்.

ஆர்வத்தோடு அதைப் பிரித்தால்,

அத்தனையும் அதன் அடிநாதம்வரை இழுக்கப்பட்ட பீடித்துண்டுகள்.

சுகமான வாழ்வை நிராகரித்து அதன் நேர் எதிர் கோணத்திற்கு போய் பார்ப்பது. எல்லோரும் வரவேற்பறையில் உட்கார்ந்து வாசல்வழியே வரும் வசந்தத்தை அருந்திக் கொண்டிருக்கையில் ஜி. நாகராஜனைப் போல் புழக்கடைப்பக்கம் போய், வெளியேறும் கழிவுகளை கவனிப்பது. இதற்கான ஆத்ம பலம்யாராலும் அளவிட முடியாதது. அது கைலாஷ் மாதிரியானவாழ்வை, தேர்ந்தெடுத்தவர்களிடம் நிறைய உண்டு.

எல்லோரும் படித்துமுடித்து, வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, லஞ்சம்வாங்கி, கார் பங்களாவோடு பெண் கட்டி, தினம் தினம் ஒரு ஒழுங்கோடு அவளோடு உறவுவைத்து பிள்ளைபெற்று அப்புறம் அதை படிக்க வைத்து.... ச்சேய்... என்ன மாதிரியான வட்டத்துக்குள் வாழ்கிறோம் நாம்?

கைலாஷ் மாதிரியான மனிதர்கள் முதல் கட்டத்திலேயே தங்கள் கயிறுகளை அறுத்துக் கொண்டவர்கள். நாடு முழுக்க அலைவுற்ற அந்த கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள்,எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சை மிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள். தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்கு கிடைப்பது எப்போதும் என்னை பொறாமைபடுத்துவது. உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்.

இப்படியான பலி வாழ்வை அடைந்தே, பெரும் படைப்புகளை மானுடத்திற்கு வழங்கியுள்ள படைப்பாளிகள், தாஸ்தாவேஸ்கியில் ஆரம்பித்து பஷீர் வரை நீளும் இப்பட்டியல் உலகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

அதன் பிறகான நாட்களில், கிரிவலப் பாதையில் காவி கட்டி அன்னதான வரிசையில் நிற்கும் கைலாஷை பல முறை பார்த்தும் அவன் துறவு வாழ்வு என் பார்வை பட்டு தீட்டாகிவிடுமோ என்ற அதிகபட்ச ஜாக்கிரதையோடு பார்க்காததுமாதிரிவிட்டகன்றிருக்கிறேன் ஆனால் அன்றிரவே அவன் மீண்டும் ”மக்கா பசிக்குது சோறு இருக்குமா?” என்றபடியே வீட்டிற்குள் நுழைவதை புன்னகையோடு எதிர் கொண்டுமிருக்கிறேன்.

அம்மலைச்சுற்றும் பாதையில் அலைந்து திரியும் கைலாஷைவிட வயதில் குறைந்த சரவணனையும் எனக்குத் தெரியும். சரவணனின் சொந்த ஊர் நாகர்கோயில். ஹைவேயில் கிளார்க் உத்யோகம். வசதியான வீட்டில் சம்மந்தம். அமைதியான நதியின் சீரான வேகம் அவன் லெளகீக வாழ்வை செழிக்க வைத்தது.

ஒரு நிமிடம் தானே! எல்லாரும் ஒரே ஒரு ஒற்றை நிமிடத்திற்கிடையே என இடைவெளிகளில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்களா? என ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட ஓர் இரவில், தன் உடல்மேல் இரண்டு கால்களையும் போட்டுத்தூங்கும் மகனின் கால்களை மெல்ல விலக்கி, அயர்ந்து தூங்கும் துரோகத்தின் நிழல் படிந்த மனைவியின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் வெளியேறியவனின் இரவு விடிந்தது திருவண்ணாமலையில்.

”என்ன சரவணா இது?”

”மனம் ஒப்பலை சார்,”

மலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்வை அளவிட முடிந்த விஞ்ஞானி யார்?இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார்?, அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார்? என்ற எந்த பிரக்ஞையுமற்ற லட்சோபலட்சம் கால்கள் அப்பாதையை சுற்றுகின்றன. சுழுலும் அப்பாதங்களில் சில அங்கேயே தங்கிவிடுவதுமுண்டு. கைலாஷ் அதுவுமல்ல. அவன் அதிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.

அப்போதைய தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், சிறந்த வாசிப்பாளரும் நல்ல இலக்கியம், நல்ல சினிமா இவைகள் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையுமுள்ள என் நண்பர் நாகராஜன் தன் பத்திருபது நண்பர்களோடு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

என்னதான் கலகக்குரல், கட்டுடைத்தல் எனினும் அதிகாரமும், வழமைகளும் நமக்குள் ஏற்றிவைத்திருக்கும் மரபுகளிலிருந்து விடுபடாமைகள் அவ்வப்போது நிகழும்தானே!

அவர்கள் வருகையின் பொருட்டு கொஞ்சம் அதீத பரபரப்போடு வீடு இயங்கியது அப்போது அங்கிருந்த கைலாஷ்க்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவர்களோடு விளையாடலாம் என்ற அவனின் ரகசிய முடிவு அந்நண்பர்களின் வருகைவரை பதுங்கியிருந்திருக்கிறது.

அவர்கள் வந்தவுடன், பரஸ்பரம் அறிமுகங்கள், சிரிப்பொலிகள், குதூகலங்கள், நினைவுகூறல்களின் கூச்சங்கள் இதில் யாரும் கைலாஷின் இருப்பை கவனிக்கவில்லை. ஆனால் நாகராஜன் அவனில் மட்டுமே பார்வை பதித்திருந்ததை நான் கவனித்தேன்.

தன் சட்டையைக் கழட்டி அதையே பெரிய முண்டாசாகக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு மரச்சேரில் மௌன சாமியாரின் கற்சிலைப் போல அமர்ந்து எங்களை அற்ப மானிடப் பதர்களைப் போல பாவித்து பார்த்துக் கொண்டிருந்த காட்சி அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.

ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தை மௌனத்தால் தன்வசமாக்கியிருந்தான். சூழலை லகுவாக்க, நான், ”சார் இவர் பெயர் கைலாஷ்சிவன், ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது” என என் வார்த்தைத் தொடரை இடைமறித்து,

”பாரதிக்குப் பிறகு நான்தான்” என சத்தமாய் சொல்லி, மீண்டும் கண்மூடி மௌனம் காத்தான்.

”சாரோடு ஊரு,?”

”தெக்க,”

அவன் இருப்பு, அவருக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை கொண்டுவந்திருந்தது. அமைச்சரின் நேர்முக உதவியாளராய் அவர் எப்போதும் சந்திக்கிற பாதி வளைந்த உடல்களும், கூழை கும்பிடுகளும், எதையோ வேண்டி மட்டுமே வரும் போலி முகங்களுக்கிடையே இதோ ஒரு வேற்று முகம். வேற்று ஆள்.

ஒரு கவிஞனின் கன கம்பீரத்தோடு, வாசிப்பின் திமிரோடு, எழுத்தின் வலிமையோடு கால்மேல் கால்போட்டு அதிகாரத்தை சகல விதங்களிலும் அலட்சியப்படுத்தும் அவர் அதற்கு முன் சந்தித்திராத ஒரு இளைஞன்

என் நண்பருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. என் வீட்டில் அக்கணத்தில் அவனைவிடப் பொருட்படுத்தக் கூடியது வேறென்றுமில்லை அவருக்கு.

என்னிடம் கொஞ்சம் பயத்தோடு இரகசியமாய், “பவா இவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கோவிச்சுக்குவாரா?”

எனக் கேட்டது அவனுக்கு கேட்டுவிட்டது.

திடீரென தன் மௌனம் கலைந்து,

”அதெல்லாம் கோவிச்சுக்கமாட்டேன், தாராளமா தரலாம்” என்று சாமி தன் திருவாய் மலர்ந்ததும்அங்கிருந்த எல்லாருமே அதுவரையிலானதங்கள்முகஇறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்த கணமது. அக்குழுவில் சிரிப்பின்றி இருந்த ஒரே ஒருவன் நான் மட்டுமே.

சற்று நேரத்திற்கு முந்தைய தன் கம்பீரத்தை கைலாஷ் வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஏன் இழந்தான்?

பாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்டுதானே!

எனக்கு ஏதோ நெருட அவசரமாய் அவ்விடத்தை விட்டகன்று இரண்டு முழு சிகெரட்டுகளை முழுவதுமாய் உள்ளிழுத்தேன்.

அவர்கள் வந்துவிட்டுப்போன வெறுமை வீட்டை வியாபிக்க அனுமதிக்காமல், வாசலில் உட்கார்ந்து இலக்கியம் பேச ஆரம்பித்தோம். உரையாடலின் துவக்கத்தில் மௌனமாய் பங்கேற்ற கைலாஷ், இடையில் உக்கிரமாக பேச ஆரம்பித்தான். ஒரு காட்டு விலங்கின் அதிகாரமிக்க நடமாட்டம் அது.

என் ’வேட்டை’ கதை கதையேயில்லையெனவும் வேட்டையின் ரத்தம் வாசிப்பவனின் முகத்தில் தெறிக்க வேண்டுமெனவும் என் கதையின் ஒரு வரியையும் வாசிக்காமலேயே பேச ஆரம்பித்தான்.

சூடான தோசைகளோடும், மல்லாட்டை சட்னியோடும் அவ்வுரையாடல் நீண்டது.

அடுப்பங்கரையிலிருந்து ஒவ்வொரு தோசையாக எடுத்து வந்து, சாந்தி எங்கள் தட்டுகளில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கு எங்கள் யாருக்கும் அவள் இருப்பு நினைவிலேயே இல்லை.

கொஞ்ச நேரம் சூடான தோசைத் திருப்பியோடு எங்கள் உரையாடலைக் கவனித்த சாந்தி எதன் பொருட்டோ மிக உக்கிரமடைந்து,

”நீ எங்கண்ணன் கதையை படிச்சிருக்கியாண்ணா?” நாங்கள் நிதானிப்பதற்குள், அவளே கைலாஷை நோக்கி,மீண்டும்

“சொல்லுண்ணா, நீ வேட்டை கதை படிச்சிருக்கியா?” யாரிடமோ பேசும் வார்த்தையென நினைத்த அவன், அவள் பக்கம் திரும்பி.

”இது எங்களுக்குள்ள நடக்குற தர்க்கம்மா, நீ போய் தோசை போடு”

தான் வெறும் தோசை சுட்டுப் போடும் பெண்ணல்ல என்பதை நிரூபிக்க வேண்டி,

”அதிருக்கட்டும் நீ சொல்லு, நீ அந்தக் கதையை படிச்சிருக்கியா? இல்லையா?”

”இல்லை”

”படிக்காமலேயே எப்படி அத குப்பைன்னு சொல்ற?”

”எனக்குத் தெரியும்மா”

”படிக்காமலேயே தெரிய நீ என்ன பெரியக் கடவுளா?”

அதற்குள் ஏதோ சண்டயென நினைத்து தெருப்பெண்கள் வாசலில் கூடியிருந்தார்கள்.

கைலாஷின் தடுமாற்றத்தை உள்ளூர ரசித்து,

”நான் படிச்சிருக்கேண்ணா, திப்பக் காடும், ஜப்பான் கெழவனும், தாலியறுத்தான் பாறையும், செவடங்கொளமும், பன்னி வேட்டையும் படிச்சாதாண்ணா தெரியும்.”

கோபத்தில் சூடான தோசைத்திருப்பிஎங்கே அவன் மேல் பட்டுவிடுமோ என நாங்கள் பதறினோம்.

கைலாஷிடம் அதுவரை இருந்த அலட்சிம் விலகி ஆச்சர்யம் கூடி,

”கண்டிப்பா இன்னிக்கு நைட் வாசிச்சிற்றேன்” என்றஅவன் குரல் வழக்கத்திற்கு மாறாய் மிக இளகியிருந்தது.