Friday, June 3, 2016

எப்போதும் ஆடுகளத்தின் மையத்தில் – பிரளயன்


                                                                                                               கட்டுரை
நான் ஏன் நாத்திகனானேன்?
கற்பூரம் வாங்க காசில்லாததால்
நான் கிருஸ்துவனானேன்.
மெழுகு வர்த்திகூட இருபத்தைந்து காசாம்
இப்போது தான் முஸ்லிமானேன்.
லுங்கி கட்டாத கோபணதாரிகளை
மசூதிகள் அனுமதிப்பதில்லை
இப்போது நான் நாத்திகனானேன்.

நான் படித்த டேனிஷ் மிஷன் மேநிலைப் பள்ளியின் வாசலிலிருந்த மாவட்ட மைய நூலகத்தினுள், பரவிக்கிடந்த பெரிய மேசையில்வார்ப்புஎன்ற பெயருடன் என்னை ஈர்த்த கையெழுத்துப் பிரிதியின் அட்டைப்படத்தில் இக்கவிதையை முத்து முத்தான கையெழுத்துடன் வாசிக்க வாய்த்தது.



எழுதியவரின் பெயர் மிகச்சிறயதாகபிரளயன்என்றிருந்தது. மனம் அக்கவிஞனை தேடியலைந்தது. அவரை ஒரு மாணவனாக  நான் தூரத்திலிருந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

ஓதுவான் என்றும், சந்துரு என்றும் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரளயன் என் தமிழாசிரியர் சண்முக அருணாசலம் சாரின் சகோதரன் என்பது கூடுதலாக அவரை கவனப்படுத்த வைத்தது.

அவர் போகும் பாதைகளில் நின்று கவனிக்க ஆரம்பித்தேன். வாலிபத் துள்ளலோடு அவர் நகரை வலம் வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு பெரும் நண்பர் கூட்டத்துடன் குதூகலமாக ஆட்டம் போட்ட ஓதுவானை நகர் இன்னமும் நினைவில் இருத்திக் கொண்டுள்ளது.

எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் இளைஞர்கள் அணி அணியாய் புறப்பட்டு சென்னையை நோக்கிக் குவிந்தார்கள். பெரும்பாலும் அவர்களின் மைய லட்சியம் திரைப்படம்.

திருட்டு ரயிலேறி வந்துதான் இத்தனை உயரத்தை அடைந்தேன். பிளாட்பாரத்தில் தங்கியிருந்த போதுதான் முதல் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது போன்ற சொல்லாடல்கள் கிராமப்புற சாதாரண இளைஞர்களை பெரிதும் வசீகரித்து வழி நடந்த தொடங்கியிருந்த நாட்கள் அவை.

அப்படியெல்லாம் எந்த கனவும் இன்றி, தீர்மானிக்கப்பட்ட கொள்கையோடும், வாழ்வோடும் பிரளயன் எண்பத்தி ஒன்றில் சென்னைக்கு பயணமாகிறார். வசதியான வாழ்க்கை, ஏராளமான நிலம், நகரின் மத்தியில் ரைஸ்மில் என எல்லாமும் அவருக்கு பின்னால் சென்று சென்று ஒரு கட்டத்தில் மறைந்து போகிறது. அடையப் போகும் லட்சியம் ஒன்றே தன் கண் முன் விரிகிறது.

அக்காலத்தில் என்னைப் போல எழுத ஆரம்பித்த கத்துக்குட்டிகளுக்கும், இடதுசாரி கொள்கைகளை தீ மாதிரி மனதில் எரியவிட்டு சென்னைக்கு வந்தவர்களுக்கும் தெரிந்த ஒரே இடம் 4, பிச்சுபிள்ளைத் தெரு, மைலாப்பூர், மட்டுந்தான்.

எருமைமாடுகளும், வாசலிலேயே போடப்பட்ட ஒரு நாஷ்டா கடையும் சேர்ந்த ஒரு பழைய மாடிவீட்டின் அறையும் ஒரு விரிந்த மொட்டைமாடியும் தான் பிரளயனின் வசிப்பிடம். எப்படியோ அந்த இடத்தை அவர் அடைந்த விநாடி, இதுதான் நம் வெளி என்பதை மனம் உறுதி செய்து நிலைத்து விட்டிருந்தது.

இன்று தமிழகத்தின் பெரிய ஆளுமைகளான பலரையும் முதன்முறையாக நான் இங்குதான் முதன்முறையாக சந்தித்திருக்கிறேன். அப்போது நானறிந்து இடதுசாரி கவியரங்குகளில் கவிஞர்கள் கே.சி.எஸ்.அருணாசலம், தணிகைச் செல்வன், வெண்மணி, கந்தர்வன், பிரளயன் இவர்கள்தான் தங்கள் வானுயர்ந்த குரலால் கவிதை வாசிப்பார்கள். தமிழ்த்தாயை இவர்கள் விதவிதமாய் வர்ணித்து சண்டைக்கழைக்கும் சொல்லாடல்கள் தமிழகமெங்கும் பலரை இவர்களை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது.

நான் கூட பல தனிமையான தருணங்களில் தணிகைச்செல்வன் மாதிரி, கந்தர்வன் மாதிரி கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உள் மனது இவைகள் கவிதைகள் இல்லை. உரத்து சொல்லப்படும் வார்த்தை அடுக்குகள் என்றும், கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்புக்குட்படுத்த வேண்டியவைகள் அது மனதைப் புரட்டிப் போடும். ஒரு மனிதனை நிலைகுலைய வைக்கும், தன் வேர்களை நோக்கி திருப்பும், லட்சியத்தை நோக்கி நீளச் செய்யும், அவையல்ல இது. இது ஜாலம். தற்காலிகமான ஒரு எழுச்சியை இது உண்டாக்கி உதிர்ந்துவிடும் என்ற முடிவுக்கு வந்து இன்றுப் பேசப்படும் சில அபூர்வமான கவிதைத் தொகுப்புகளோடு என் உள்ளறையில் நான் என்னை அடைத்து கொண்ட ரகசிய நாட்கள் எனக்குண்டு.

இதே நாட்களில்தான், மிகச் சரியாக பிரளயனும் தன்னிலிருந்த கவிஞனை உதறி ஒரு நாடகக்காரனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டார்.



கடந்த முப்பதாண்டுகளை கூர்ந்து கவனிக்கும் ஒரு நுட்பமான விமர்சகன் ஒத்துக் கொள்ளக் கூடும், இடதுசாரி இயக்கங்களில் நமக்கு மீந்திருக்கும் ஒரே அரங்கக் கலைஞன் பிரளயன் மட்டுமே. இதை அடைவதற்கு அவரின் வலிநிறைந்த நாட்கள் நமக்குத் தெரியாதது. அவ்வப்போது மாறும் தன் குழுவுடன் பட்ட காயத்தையும் ரணத்தையும் இன்னமும் அவர் சட்டையை கழட்டிப் பார்த்தால் சிறுசிறு தழும்புகளாக நம் விரலுக்கு தட்டுப்படலாம்.

தன் சிறு அறையைத் தவிர்த்து அதன் முன் பரந்திருக்கும் மொட்டை மாடியின் காரை உதிர்ந்த தரை அக்கலைஞனுக்கு ஒத்திகைப் பார்க்கும் இடமாகவும், பகல் நேரங்களில் தன் இயக்கத்திற்கு தட்டி போர்டுகள் எழுதித் தரும் இரகசிய கிடங்காகவும்,

தன்னைப் போலவே மனதில் தீ எரிய தமிழகமெங்குமிருந்து வரும் படைப்பாளிகளும், களப்பணியாளர்களும் இலவசமாகத் தங்கிப் போகும் யாத்ரி நிவாசாகவும் 4 பிச்சுப்பிள்ளைத் தெருவை பிரளயன் மாற்றியிருந்தார்.

இன்று தமிழின் பெரும் படைப்பாளிகளாக உருமாறியிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்ற சகபடைப்பாளிகள் கிழிந்த லுங்கியோடு இங்கு படுத்துக் கிடந்ததையும், உலவிக் கொண்டிருந்ததையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

சில உருவாக்கங்கள், சிதைவுகள், முயற்சிகளுக்குப் பின் பிரளயன்சென்னைக் கலைக்குழு’  என்ற முழுமையை அடைகிறார். அங்கங்கே சிறுசிறு குழுக்கள் உருவாகியும், செயல்பட்டும் மறைந்தும் போயிருந்தாலும்சென்னைக் கலைக்குழுமட்டுந்தான் இன்றளவும் நமக்கிருக்கும் அரங்கத்திற்கான ஒரே தளம்.

இதுவரை ஐம்பதற்கும் மேற்பட்ட படைப்புகளை சென்னைக் கலைக்குழு மூலம் பிரளயன் தமிழ் சமூகத்தின் முன் நிகழ்ந்தியிருக்கிறார். அவைகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் முழுமையை அடைந்தவை. இதை அடைய ஒரு குழுவாக அவர்கள் மேற் கொண்ட வலி நிறைந்த பயணங்கள்தான் முக்கியம்.

நாங்கள் வருகிறோம், மணிமேகலை, மாநகர், முற்றுப்புள்ளி, பெண், ஜேம்ஸ்பாண்டு, உரம், பவுன்குஞ்சு, பாரி படுகளம் என நீளும் இந்நாடகங்கள் மாநகர தெருமுக்குகளில் துவங்கி காமராஜர் அரங்கம் வரை நீண்டவைகள். பல லட்சம் மக்களை விதவிதமான இரவுகளில் இவர்கள் தங்கள் அரங்க படைப்பின் மூலம் தொட்டிருக்கிறார்கள். இதன் பிண்ணனியில் பிரளயனின் பணி மகத்தானது.

ஒரு கட்டத்தில் தமிழகத்தில் அறிவொளி இயக்கம் துவங்க பட்டு அதை மக்கள் மனதில் செயல்படுத்த சரியான மனிதர்களின்றி அரசு நம் முன் நிற்க வேண்டி வந்தபோது, நாம் ஒரு பெரிய லட்சியத்திற்கு துணை நிற்பதாகக் கருதி உடனே அதற்கு நம் கலைஞர்களை முழுவதுமாய் ஒப்புக் கொடுத்தோம்.



அதுவரை வகுப்பறைகள் முடிந்து பூட்டப்படாமல் கிடந்த அரசு பள்ளிகளின் அறைகளும், மைதானங்களும் மட்டுமே நம் ஒத்திகை கூடங்களாக இருந்தது மாறி திருமண மண்டபங்கள், குளிரூட்டப்பட்ட அரசு அரங்குகள் நமக்குத் தரப்பட்டன.

நமக்கான மதிய  சாப்பாட்டை அரசு வாகனங்களில் சுமந்து கொண்டு ஒரு பி.டி..வோ, தாசில்தாரோ நமக்கு பறிமாறின போது நாம் சிலிர்ப்புற்றோம். அதுவரை நாம் அனுபவத்தறியாத ஏதோ ஒரு சிறு சுகத்திற்கு நம் உடல் பழகியது.

தீஜூவாலை மாதிரி நமக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மெல்ல அணைய ஆரம்பித்தது. நம் போராட்ட அரசியல் சேவை அரசியலாக மாறியது இக்காலக் கட்டத்தில்தான் என்பதை இருபது ஆண்டுகளுக்கு பின்னான இத்தருணத்திலாவது நாம் நம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது என கருதுகிறேன்.

திறந்தவெளி அரசியல் அரங்குஎன்ற வடிவத்தைதான் பிரளயன் தனக்கான களமாக கொண்டு இயங்கினார். இவரின் காலத்திலேயே ந.முத்துசாமி, மு.ராமசாமி, .ராமசாமி, கருஞ்சுழி ஆறுமுகம், கே..குணசேகரன் போன்ற அரங்க கலைஞர்கள் தங்கள் படைப்புகளை அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் முன், பெரும் பொருட் செலவு செய்து தருவிக்கப்பட்ட ஒளி அமைப்புகளுடன், ஒரு அரங்கில் அரங்கேற்றிக் கொண்டிருந்த போது பிரளயன் மட்டுந்தான் தனித்து நின்று தன் நாடகங்களை புறநகர் பகுதிகளில், தெரு முக்குகளில், ஓசியில் கிடைத்த அரங்குகளில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

முருகபூபதி என்ற தனித்துவமிக்க ஒரு நாடகக்கலைஞன் இதிலிருந்தெல்லாம் வெகுதூரம் போய் வனங்களிலும், தேரிக்காடுகளிலும் தனக்கான தனி மொழியில் இயங்கிக் கொண்டிருந்தான்.

பாதல் சர்க்காரின் தொடர்பாலும், சப்தர் ஹஷ்மியின் கொலையாலும் தன் படைப்புகளை இன்னும் செதுக்கி கொள்ள முடிந்தது என்கிறார் பிரளயன்.

பதினைந்து ஆண்டுகளாக பல தென் மாநிலங்களில் பலமொழிகளில் இன்குலாப்பின்மணிமேகலையை நிகழ்த்திய போது அவர் அடைந்த பெருமிதங்கள்தான் தன் மொத்த அரங்க வாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என நினைக்கும் பிரளயன் பத்து வருடங்களுக்கு முன் புழுதிபடிந்த தெருவிலிருந்து நடந்து அரங்கத்திற்கு வருகிறார்.

அங்கு தன் நாடக சகாக்கள் முத்துசாமியில் ஆரம்பித்து மு.ராமசாமி வரை ஏற்கனவே சிம்மாசனங்களில் உட்கார்ந்திருக்கிறார்கள். தன்னாலும் அந்த அரங்குகளில் தன் அரசியலை கலையாக மாற்ற முடியும் என்பதை நிருபிக்கிறார். அப்படி நிகழ்தப்பட்டவைதான்  ‘நாங்கள் வருகிறோம்’,  ‘போபால் 1990’,  ‘புரட்சிக்கவி’  ‘உபகதை’,  ‘வஞ்சியர்காண்டம்’  ‘பாரி படுகளம்’.

பிரளயனின் பிரவேசத்திற்குப் பின் பல நாடக ஜாம்பவான்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். அது மக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து வந்த ஒரு கலைஞனின் பிரவாகம்.

உலகமயமாக்கலும், அது இந்திய விவசாயத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி, விவசாயிகளை தற்கொலை செய்யகொள்ள நிர்பந்தித்ததும் பிரளயனின்  ‘உரம்தவிர வேறு எந்த அரங்க செயல்பாடுகளிலும் ஒரு வரி செய்தியாகக்கூட பதிவாகவில்லை.

பிரளயனின் புதிய நாடக அரங்கேற்றத்திற்கு என் நண்பர்கள் காளிதாஸ், கருணாவோடு, நான் பயணித்த பயணங்கள் நினைவிற்கு வருகின்றன.

நாடகம் முடிந்து திரும்பி வருகையில் ஒரு புதிய உத்வேகமும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் எங்களை நெருக்கும். அந்நெருக்கத்தோடு நான் நின்று கொள்ள தோழர் காளிதாசும், கருணாவும்நிதர்சனா’ ‘தீட்சண்யாஎன இரு நாடகக் குழுக்களை திருவண்ணாமலையிலிருந்து துவங்கினார்கள்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இப்படி பல மரங்கள் துளிர்க்கவே செய்தன. அதன் வேர்களில் கசியும் நீரைப் போல வெகு தூரத்திலிருந்து சென்னைக் கலைக்குழு செயப்பட்டது.


இப்போது நினைவுபடுத்தினால் சகிக்க முடியாத தன் குடும்ப ஒழுக்கத்தை, இதுவரை கெட்டப் பழக்கங்கள் என ஒழுக்கவாதிகளால் முன் வைக்கப்பட்ட எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு தானே செய்து, தன் குடும்பத்தை நிலை கொள்ள செய்த ஒரு இளைஞன் கடந்த முப்பதாண்டுகளில் தன் தொடர் செயல்பாடுகளால், கற்று தேர்ந்த மார்க்சிய கொள்கையால் எளிய மனிதர்கள் மீது கொண்ட வெறித்தனமான நேசிப்பால், இந்திய அரங்கமே வியந்து பார்க்கும் ஒரு ஆளுமையாக மாறிப் போனான்.
  
காமராஜர் அரங்கத்தில் என்னோடு சேர்ந்து ஆயிரத்திற்கும் மேலானோர்பாரிபடுகளம்பார்க்கிறோம். நான் மட்டும் என் சொந்த ஊர்க்காரர் பிரளயனின் தொட முடியாத உயரத்தை தனித்து நின்று அளந்துகொண்டிருந்தேன்.

அவர் படைப்புகளில் இன்றளவும் என்னை ஆக்ரமித்துக் கொண்ட ஒன்றுபெண்ஒரு பெண்ணின் ஐந்து வயதில் ஆரம்பித்து அறுபது வயதுவரை அவள் எப்படி ஒரு ஆணை சார்ந்து, வாழ நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதை வலி நிறைந்த காட்சியமைப்புகளால் நமக்கு கடத்தி நம்மை குற்ற உணர்வுக்குட்படுத்துவார் பிரளயன்.

.மங்கையும் உ.வாசுகியும் தங்கள் அபாரமான நடிப்பினால் இன்றளவும் பார்வையாளனின் மனதில் நிலைத்திருக்கிறார்கள். ஒரு கவிதையை செதுக்கியது போலான வசனங்களால் அந்நாடகத்தில் பிரியோகிக்கப்பட்ட மொழி நம்மை கலங்கடிக்கும். அமைப்புகள்கடந்தவைகள்என பட்டியலிடாமல்பெண்போன்ற ஆக்கங்களை இன்னும் அடர்த்தியான ஆண் சமூகத்தின் முன் நிகழவைத்து அவர்களை குற்ற உணர்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

எப்போதும் இடைவெளிகளை இட்டு நிரப்புவதல்ல ஒரு கலைஞனின் இடம்.

முதன்மை பேச்சாளரோ, முதன்மைத் தலைவரோ பேச ஆரம்பிக்கும்முன் சுருதி கூட்டி ஒரு இதமானச் சூழலை உருவாக்கி தருவதற்காக அல்ல கலைஞன்.

ஒரு நாகரீக சமூகத்தின் முதன்மை சிம்மாசனமே அவனுக்குத்தான்.

அழுகிக் கொண்டிருக்கும் அதன் உள் உறுப்புகளை அவன்தான் உலகிற்கு தன் கலை மூலம் முன்னறிவிக்கிறான்.

அமைப்புகள் எப்போதும் கலைஞர்களை தங்கள் கைப்பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ளவே முளைகிறது. அது இருபக்க பாதுகாப்பை உள்ளடக்கியது. வரலாறு நெடுக பிரளயன் மாதிரியான அசல் கலைஞர்கள் திமிறிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்போ, மாநாட்டு உணவு இடைவெளிகளின் போதோ, இரவு உணவு முடிந்து தூக்கம் வரத் தாமதமாகும் முன்னிரவுகளிலோ மட்டுந்தான் நமக்கு கலைத் தேவைப்படுகிறது. அது ஒரு மனமகிழ்ச்சி யூட்டும் மூன்றாம் தர (paid) கலைஞனின் வேலை.

முற்றுப்புள்ளிமாதிரியான ரௌத்திரம் மிக்க படைப்பை உருவாக்கிய பிரளயன் போன்ற கலைஞர்களால் ஒரு போதும் அப்படி செயல்பட முடியாது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன் ஒரு மாலையில் பெரியார் திடலில் நான் அந்நாடகத்தைப் பார்த்தேன். எனக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அந்நாடகம் எனக்குள் ஏற்படுத்திய மன எழுச்சி சொல்லிடங்காத்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அழுகலான சமூகத்தின் துர்நாற்றத்தை அது கிளறி மேற்கொண்டு வந்தது. எத்தனை குனித்தும், எத்தனை தேய்த்தும் அது என் உடலில் இன்னொரு மேல்தோல் மாதிரி போர்த்தி கொண்டு விட்டது.

.மங்கை அந்நாடகத்தில் பெண் மருத்துவராக நடத்திருப்பார் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் அவருக்கும் நடக்கும் தீவிரமான விவாதம் பார்வையாளர்களை உச்சத்திற்கு கொண்டு போய் கழுத்தை நெறித்து வெறும் பிணமாக கீழே உதறும்.

அவர்கள் சவமான வீழம் கணம் அரங்கு மௌனத்தால் உறையும்.

அந்நாடகத்தில் ஒரு இடதுசாரி தலைவரின் உரை நிகழும். தோழர் வி.பி.சி.யும், W.R.வரதராஜனும் ஆற்றிய ஒரு மே தின உரையின் சுண்டக்காய்ச்சிய வடிவம் அது.

பாலியல் பலாத்காரம் குரல். செய்யப்பட்டு, கொல்லப்பட்ட போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு பிணவறையில் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு பாமரனின் மகளுக்காக நீதிகேட்டு ஒலிரும் ஒரு குரல் பெரியார் திடலையும் தாண்டி நீளும்.

தாங்க முடியாத பெரும் துயரத்தோடும், கோபத்தோடும் நான் அவ்ரங்கத்தை விட்டு வெளியேறி வெகுதூரம் வந்து தினத்தந்தி அலுவலக வாசலில் நின்று கொண்டேன். இது ஒரு வகையான தப்பித்தல் அல்லது அடைகாத்தல்.

பல அற்புதமான நிகழ்வுகளையும், வெறுக்கத்தக்க, தாங்கமுடியாத அனுபவங்களையும் தந்து கொண்டே மெல்ல நகரும் இம்மானுட வாழ்வில் சில கணங்கள் மட்டுமே ஞாபகத்தில் தங்குகிறது.

எம் பொண்ணுஎம் பொண்ணுமல்லிகா என கதறும் அத்தந்தையின் குரல் என் வாழ்நாள் முழுக்க என்னைப் பின் தொடர்கிறது. இதைத்தான் ஒரு மகத்தான படைப்பு செய்யும்.

திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்வில் மூன்றாம் அரங்கு பற்றிப் பேச அ.மங்கை வந்திருந்தார். மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவுடன்பவா பைக்கை எடுங்கஎன என் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மௌனமாக சாலையின் இருபக்கங்களையும் மலங்க மலங்க பார்த்துக் கொண்டே வந்தவர்,

‘‘காந்தி சில மூலைக்கு போங்க பவா’’

‘‘எங்க மங்கை?’’

‘‘நாம கலை இரவு நடத்துவோமே அந்த மூலைக்கு’’

நான் அந்த இடத்திற்கு போனபோது மணி பார்த்தேன்.

இரவு ஏழு

இருள் மெல்ல என் நகரத்தை மூடிக் கொண்டிருந்தது.

பைக்கிலிருந்து இறங்கி வெகுதூரம் பின்னகர்ந்து சென்று அத்திறந்த வெளியில் ஏதோ நிகழ்வதாக பாவித்து அதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகில் போய் மங்கையைப் பார்த்தேன்.

‘‘என்னாச்சு மங்கை?’’

தன் கண்களை துடைத்துக் கொண்டே,

‘‘ஒண்ணுமில்ல பவா, இந்த இடத்தில் எத்தனை முறை என்னவெல்லாமாக மாறி நான் நடித்திருக்கிறேன். விட்டுவிலகி தூர வந்துட்ட மாதிரி இருக்கு’’

அந்நிமிடம் நான் பிரளயனை நினைத்துக் கொண்டேன்.


தூர நின்று தன் ஆடுகளத்தை ஏக்கத்தோடு பார்க்கும்படி என்றுமே நேராது அவருக்கு.

எப்போதும் ஆடுகளத்தில் மையத்திலேயே பிரளயன் இருக்கிறார்.

நன்றி 
இம்மாத செம்மலர்

Thursday, June 2, 2016

டொமினிக்

                                                                                                                         சிறுகதை





இரண்டாம் போகம் நெல் விளைந்து முற்றி நிலம் பொன்னிறமாக உருமாறியிருந்தது. பார்க்கிற எவரையும் வசீகரிக்கும் அழகு அது. தன் அழகில் தானே பெருமிதம் கொள்ளும் தருணம் ஒரு வயலுக்கு அறுவடைக்கும் கொஞ்சம் முந்தைய நாட்களில்தான் வாய்க்கிறது.

வழக்கத்தைவிட இன்று அதிகாலை விஜயத்தில் எனக்கு நிதானம் கூடியிருந்தது. வரப்பெல்லாம் பனியில் நனைந்த வித விதமான வண்ணங்களில் புடவைகள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வண்ணக்கோடுகள் அவை.

கூர்ந்து கவனிக்கிறேன். எல்லா புடவைகளின் நுனியும் நெல்வயலின் ஒரு மையத்தில் குவிந்திருக்கிறது. இக்கனவின் விரிவு நம்பமுடியாததாகவும், ஆச்சர்யங்களை கூட்டிக் கொண்டேயும் போகிறது.

புடவைக்குவியலின் மையத்தில் ஒரு அழகான இளம்பெண் இருக்க வேண்டுமென யாசிக்கிறேன். அத்தனை வண்ணத்தையும் குடித்தெழும் அவள் இதற்கும் அப்பாற்பட்டவளாக, இதுவரை நான் காணாத ஒரு நில தேவதையாக எழவேண்டுமென மனம் முந்துகிறது.

வரப்புகளின் மீதிருந்து அசையும் புடவைகளின் லயத்திற்கேற்ப அம்மையம் கூட்டியும், குறைத்தும் விளையாடுகிறது. அதில் ஒரு தேர்ந்த நாட்டியக்காரியின் நளினமிருக்கிறது. கூடவே ஒரு இதமான ட்ரம் சத்தம் ஏற்கனவே இசைத்து வைத்த மாதிரி ஒலிக்கிறது. எப்போதாவது எங்காவது இப்படி சில அதிசய காட்சிகள் விரியும். இன்று அது என் வயலில்.

என் கவனத்தை சிதைத்து சீழ்க்கை ஒலி அதே மையத்திலிருந்து மேலெழுகிறது. புடவைகளின் நுனிகளோடு வரப்பின் கீழ்படுத்திருந்த குழந்தைகள் குபீரென எழுந்து கும்மாளமிடுகின்றன.

இப்போதும் குழந்தைகளின் கைகளில் புடவைகளின் நுனி. பனியில் நனைந்து நிற்கும் அக்குழந்தைகளை இன்னும் நெருங்குகிறேன். எல்லோரும் பக்கத்து இருளக்குடியின் தேவதைகள்.

இன்று அதிகாலை ஒலித்த ட்ரம் சத்தம்தான் அவர்களை இங்கு அழைத்திருக்கக் கூடும்.

மையத்திலிருந்து இப்போது ஒரு பாடல் ஒலிக்கிறது. மொழி புரியாத சங்கீதம் அது.  அப்பாடலை உள்வாங்கி குழந்தைகள் எதிரொலிக்கின்றன. அவை முற்றிய கதிர்களில் பட்டுத்தெறிக்கிறது.

வயல் நடுவிலிருந்து எழப்போகும் தேவதையின் எழும்புதலுக்கு எதிர்பார்த்திருந்த ஒரு தருணத்தில் மேல்சட்டை அணியாத வெற்றுடம்போடு ஒரு வெள்ளைக்காரன் எழுகிறான். கால்சட்டை அணிந்திருக்கும் அவன் முதுகு லேசாக வளைந்திருப்பதைப் பார்த்தேன்.

குழந்தைகளின் கையிலிருக்கும் புடவை நுனிகளின் மொத்தத்தையும் அவன் தன் இரு கைகளில் தாங்கிப் பிடித்து நிற்கிறான். அவன் வலது தோளில் பெரிய ட்ரம் ஒன்று தொங்குகிறது.

அவனைப் பார்த்ததும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அதையே தனக்கான பின்னணி இசையாக்கி அவன் நடனத்தோடு கலக்கிறான். இப்போது புடவை நுனிகள் அவன் கால்களுக்கடியில் புதைந்து கொண்டன.

குழந்தைகளின் ஆரவாரமும் ட்ரம்மின் சத்தமும் தூரத்தில் துலங்கும் ஊர்வரை எட்டுகிறது.

தன் வெற்றிலையிடிப்பை நிறுத்தி பெரியத்தாய் ஆயா குழந்தைகளின் ஆரவார குரலறுந்துகிறாள். அவள் பொக்கை வாய் சிரிப்பு காலத்தைத் தாண்டி நீள்கிறது.

அந்த வெள்ளைக்காரன் நான் நிற்கும் திசை நோக்கி வருகிறான்.குழந்தைகளின் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அவன் நடனமாடிக் கொண்டே வருகிறான். என் கண் முன் ஒரு கவித்துவ காட்சி பரந்து விரிந்து அந்த காலையை இன்னும் அழகாக்குகிறது.

ஒரு மாமரத்திற்கு பின் நான் மறைந்து நின்று கொள்கிறேன். அவர்களின் உலகத்திலிருந்து மறைதல் நன்று.

என்னைக் கண்டுவிட்ட சந்தோஷத்தோடு அவன் என்னை இன்னும் சமீபிக்கிறான். நான் என்  உடம்பை இன்னும் சுருக்கிக் கொள்கிறேன். அது திமிறுகிறது.

அவன் மரத்திற்கு அப்புறம் நின்று தன் வலது கையை மட்டும் நீட்டி,

“ஐ எம் டொமொனிக், ஆனந் ஸ்கரியாஸ் ஃபிரண்ட்”  என ஆங்கிலத்தை ரகசியம் போல உச்சரிக்கிறான்.

பதிலுக்கு என் கையை நீட்டாமல் அவன் பக்கமாய் நகர்ந்து அவனை ஒரு பெண்ணைப் போல தழுவிக்கொள்கிறேன்.

எங்கள் இருவரின் உடல் சூட்டையும் இருவராலும் உணர முடிகிறது.

இப்படித்தான் எனக்கும் டொமினிக்குக்குமான அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

இதோ டொமினிக்குடனான என் இரண்டாம் சந்திப்புக்குக் கார்த்தியோடு போகிறேன் எங்கள் இருவர் முகங்களிலும் பதட்டம் படர்ந்திருக்கிறது. எங்கள் புல்லட் சத்தம் மட்டும்   அச்சாலையை நிறைக்கிறது.

பெரிய இரும்பு கேட் போட்ட அவ்வீட்டின் முன் புல்லட் அணைக்கப்படாமல் சத்தம்   கூட்டப்படுகிறது. ஹாரன் ஒலியும் கூடவே அலறுகிறது. காத்திருப்பின்றி அந்த கேட்   திறக்கப்படுகிறது. யாரையும் பொருட்படுத்தாமல் நானும் கார்த்தியும் உள் நுழைகிறோம்.   நான் மட்டும் திரும்பிப் பார்க்கிறேன். பத்து பேருக்கும் மேல் அங்கங்கே மிஷ்கின் பட   மனிதர்கள் மாதிரி வியாபித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கோடுகளுக்குள்   அவர்கள் நின்று அல்லது உட்கார்ந்திருக்கிறார்கள். வெய்யிலேறிய மத்தியானம்.

ஒரு சிகப்பு கலர் பிளாஸ்டிக் சேரில் அதன் விட்டத்திலிருந்து வெளி பிதுங்கி ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறான். எங்கள் வருகை அவனிடம் ஒரு சிறு அசைவையும் உருவாக்கவில்லையென அவன் உடல்மொழி சொன்னது.

‘‘இங்க யாரு சக்திவேலு?’’



ஒரு கறுத்த ஆள் தலை உயர்த்தி என்னைப் பார்த்தான்.

‘‘உனக்கு என்னடா பிரச்சனை?’’ என கார்த்தியின் குரல் என்னை முந்துகிறது.

‘‘பொறு, பொறு கார்த்தி’’

‘‘என்ன பிரச்சன?’’ அதே வார்த்தையை நான் கொஞ்சம் சாந்தமாக உபயோகித்தேன்.

‘‘ஒரு பிரச்சனையுமில்லையே’’ அவன் மதிற்சுவற்றின் வடக்கு நோக்கிப் பார்த்தவாறு யாருக்கோ சொல்வதுபோல சொன்னான். அவன் உடல்வழியே காட்டிய அலட்சியம் யாரையும் வெறியேற்றும்.

கார்த்தி தன் ஆத்திரத்தை என் கைப்புதைப்பில் கரைத்துக் கொண்டிருந்தான்.

நான் டொமினிக்கைத் தேடினேன்.

மதிற்சுவற்றின் ஒரு மூலையில் சட்டையில்லாமல் ஒரு பெர்முடாஸ் மட்டும்   போட்டு திரும்பி நின்று கொண்டிருந்தவன், என் குரல் கேட்டு எழுந்து திரும்பினான். அந்த வெள்ளை உடம்பெங்கும் விழுந்த அடிகளின் இரத்த விளாறுகள் படிந்திருந்தன. கன்னம் கன்றியிருந்தது. சற்றுமுன் உதட்டின் வழி வழிந்த சிறு ரத்தம் உறைந்து கருங்கோடாய்  நிலைபெற்றிருந்தது. திறந்திருந்த அவ்வீட்டின் ஹாலில் அவன் எங்கெங்கோ சேகரித்து வைத்திருந்த வண்ணப் புடவைகள் தாறுமாறாய் தரையில்    கலைந்திருந்தன.

அந்த ட்ரம் படிக்கும் தரைக்குமிடையே புரண்டிருந்தது. ஒரு பக்கத் தோல் முற்றிலும் கிழிந்திருந்தது.

டொமினிக் என்னை ஏறெடுத்தான்.

பாம்பின் தலை கடைசியாக நசுக்கப்படுவதை நீங்கள் அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்களா? அது சாகும் முன் ஒருமுறை தலையை உயர்த்தி யாசிக்கும். டொமினிக் தன் தலையை உயர்த்தி என்னை நோக்கி யாசித்தான்.

நானும் கார்த்தியும் சூழலைக் குடித்துக் கொண்டிருந்தோம்.

நான் அந்த சிகப்பு நிறச் சேரில் உட்கார்ந்திருந்த ஆளை நோக்கிப் போனேன். கூடவே என் ஒரு கை டொமினிக்கைப் பற்றியிழுத்துக் கொண்டிருந்தது.

‘‘என்ன இது?’’

‘‘என்னைக் கேட்டா?’’

‘‘யார் இவரை இப்படி அடிச்சது?’’

அவன் சக்திவேலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்.

நானே எதிர்பாராத அக்கணத்தில் கார்த்தி அவனை நோக்கி ஓடி, எட்டி அவன் முகத்தில் உதைத்தான். பின்னாலிருந்த ஒரு அடுக்கு செம்பருத்திச் செடியில் அவன் மல்லாக்க   விழுந்தான். அக்கறுத்த பெண் ஓடிவந்து அவனைத் தூக்கினாள். அச்சிறு பெண் திடீரென   வீறிட்டழுதது. என் கைப்பற்றியிருந்த டொமினிக்கின் உடல் பயத்தால் உதற ஆரம்பித்தது.  கூடுமானவரை என் கை அழுத்தத்தில் அவர் பயத்தை உறிஞ்சிவிட முயன்றேன்.

அவனைத் தூக்கி உட்கார வைத்தவள், உதைத்தவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லையென்பதை கவனித்தேன். அவள் மௌனத்தை என்னால் அளவிட முடியவில்லை.

விளைந்த நெல்வயலின் நடுவே தன் பாடலோடு ஒரு ஆண் தேவதையென காற்றில் மிதந்து வந்த டொமினிக் என் முன் பிம்பமாகத் தோன்றி மறைந்தான்.

இங்கிருப்பவன்தான் நிஜம். கலைந்த புடவைகள், கிழந்த ட்ரம், பாதி வெந்த   சோற்றோடு கவிழ்ந்து கிடக்கும் அந்தப் பாத்திரம், இன்று பூத்த மலர்களோடு உடைந்து சரிந்த செம்பருத்திச் செடி, எதற்கும் அசைந்துக் கொடுக்காத அந்த சிகப்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் வீட்டு உரிமையாளன்.

உன் பாடலுக்கும், வாழ்வுக்குமான தூரம் தெரிகிறதா என் டொமினிக்?

அவனை உற்றுப் பார்த்தேன்.

இப்போதுகூட சற்றுமுன் கரும் ரத்தம் கசிந்த தன் வலி மிகுந்த உடலைப் பஞ்சாக்கி  அப்படியே அவனால்வானில் பறந்துவிட முடியும் எனத் தோன்றியது எங்கோ ஒரு வயலிலிறங்கி அதனுள்ளிருந்து  ஆடிப்பாட முடியும். சட்டையில்லாத அக்கரிய குழந்தைகளோடு ரயில்வண்டிவிளையாட்டில் வெகுதூரம் பயணித்து வளைந்து வளைந்து ஓடும் அக்காட்டாற்றில்  குதித்துவிடவும் முடியும்.

ஆனால்அது எதுவும்  முடியாமல் பெருமழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சின் உதறலோடு என் பின்னால் நிற்கிறான் டொமினிக்.

அப்பா கல்கத்தாக்காரன், அம்மா அயர்லாந்துக்காரி என்பது டொமினிக்கிற்குப் புரிய   ஆரம்பித்தபோது அவர்கள் இருவருமே அவனுடனில்லை. மரணம், தொலைதல், விடுபடல், விட்டொழித்தல் இதில் எதுவென அவன் அறிந்து கொள்ள யத்தனிக்கவில்லை. பூர்வீகம் தேடியலையும் வாழ்வு இதுவரை அவனுக்கு வாய்க்கவில்லை. அன்றாடங்கள் அகலவே பெரும் போராட்டம் தேவைப்பட்டது.

கடந்தகால இழிவுகள், பெருமிதங்கள் ஒருபோதும் நிகழ்காலப் பசியைப் போக்கி   விடுபவையல்ல என்பதை டொமினிக்கின் பட்டினிகள் நிறைந்த நாட்கள் உணர்த்தியிருந்தது.

இத்தொடர் அலைக்கழிப்பில் அவன் திருவண்ணாமலையை அடைந்தபோது தன் வாழ்வின் முப்பத்து ஏழு வருடங்களை இழந்திருந்தான்.

ஆஸ்ரம அமைதி, எப்போதாவது அதைக் கீறியெழும் மயில்களின் சத்தம், மதியச்சாப்பாடு, பில்டர்காபி எதுவும் அவனுக்கு ஆரம்பம் முதலே ஏனோ பிடிக்காமல் போனது. அதன்   பின்பக்க வழியே நீளும் மலையேறும் பாதை, விரவிக்கிடக்கும் சரளைக்கற்கள், சிறு   குகைகள், எலுமிச்சம்பழ வாசனை கொண்ட மஞ்சம்புல்புதர்கள், சில்லிட்ட நீரூற்றுகள்,   அழுக்கேறி வாய்நாறும் சாமியார்கள் எல்லாவற்றிலிருந்தும் அவன் வெகுதூரம் விலகிப் போய்க் கொண்டிருந்தான்.

சமுத்திர ஏரிக்கரையின் மேல் ஊர்க்காவல் போல் நிற்கும் அக்கரிய பனை மரங்கள்.   கரைக்கும் கீழ் வியாபித்திருக்கும் புளியமர நிழல்கள்தான் அவனை அப்படியே இருத்திக்  கொண்டன.

ஏதோ ஒரு உந்துதல் பெற்று அவன் என் கையை விடுவித்து வீட்டிற்கு உள்ளே   போனான். எங்கள் எல்லோர் கண்களும் அவன் மீதேயிருந்தன. அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஐஸ் கட்டிகள் ஒட்டியிருந்த எலுமிச்சை பழச்சாறு நிரம்பிய பெரிய கண்ணாடி டம்ளர்களை ஒரு மர ட்ரேயில் அடுக்கிக் கொண்டு வெளிவந்தான். நேராக வந்து, விழுந்து எழுந்து   அதன்பின் தரையையே வெறித்துக் கொண்டிருந்த சக்திவேல் முன் நின்று,

‘‘ப்ளீஸ் டேக் இட்’’ என்றான். அவன் முகத்தை கவனித்தேன். கருணை ததும்பும் முகம்.

அவன் தலையுயர்த்திப், பார்த்துவிட்டு, பின் கவிழ்த்து கொண்டான். அந்த வீட்டு   ஓனரும், நானும் கார்த்தியும் ஜூஸ் டம்ளர்களைக் கையிலெடுத்தோம். மீதி டம்ளர்கள் ட்ரேயிலேயே இருந்தன.

புளியமர நிழல் மனதை நிரப்பி உடலைக் கிடத்தியது. பசியைக் கண்டு கொள்ளவில்லை..

அவன் பெரும்பாக்கம் சாலையில் இரும்பு கேட் போட்ட ஒரு பெரிய வீட்டை ஆனந்  ஸ்கரியாவின் பண உதவியோடு முன்பணம் தந்து வாடகைக்கு எடுத்தான்.

சீசனுக்கு வரும் வெள்ளைக்காரர்கள் அவனிடம் சுலபமாக வந்து சேர்ந்தார்கள்.   உணவோடு கூடிய தங்குமிடம். கூடவே மீந்த விஸ்கியும், சில சமயங்களில் சோர்ந்த   வெள்ளைக்காரிகளின் உடம்பும் கூடக் கிடைத்தன.

தனியாக அவனால் சமாளிக்க முடியாத போதுதான் ராணி தன் ஆறு வயது மகளோடு உடன் வந்து சேர்ந்தாள். அவனுக்கு ராணி மீது உடல் ஈர்ப்பு எப்போதுமேயிருந்ததில்லை.   தன்னைப் போலவே அனாதையென்றொரு கருணை சுரந்தபடியிருந்தது. அக்குழந்தையை   கனந்தம்பூண்டி ரமண மகரிஷி பள்ளியில் சேர்த்தான். அவளைக் கொண்டு போக, கூட்டிவர சைக்கிள் வாங்கினான். விருந்தினர்களை ராணியும் அவனும் சேர்ந்து கவனித்தார்கள்.

ராணியின்முன் கதையை அவன் ஒருபோதும் கேட்டதில்லை. ரணங்கள் அதுவாக   ஆறிவிடும்.

ஆனந் கொடுத்த முன்பணம் ஒரே சீசனில் அடைந்து அவன் முதலானது. பின்னிரவு  வரை தூக்கமின்றித் தவித்த அவன் இரவுகள் வலி நிறைந்தவை.

மொட்டை மாடியில் தகரம் அடித்து, தனக்கான அறையை அவனே வேய்ந்து   கொண்டான்.

இதுப்ளாட்பாரத் தங்கலையும், புளியமர நிழலையும் தாண்டிய அடுத்த நிலை.   ராணியும், அச்சிறு பெண்ணும் சமையலறையோடு கூடிய கீழ் வீட்டிலிருந்தார்கள்.   ஒருநாளும் அவர்களோடு உட்கார்ந்து பேச நேரமிருந்ததில்லை அவனுக்கு. அச்சிறு சசியை சைக்கிள் கேரியரில் உட்கார்த்தி வைத்து ஸ்கூலுக்குக் கூட்டிப் போகும்போது, எதிர்படும்   குளிர்க் காற்றில் அடக்கி வைத்த அத்தனையையும் கொட்டிக் கொண்டே போவான். சசி   அதைக் கேட்கிறாளா என ஒருநாளும் கவனித்ததில்லை. அப்பேச்சில் அவன் நினைவுகள்  எப்போதும் ததும்பியதில்லை. சிலசமயம் பாடல்கள், இவை எப்போதும்    விசித்திரமாயிருந்தது சசிக்கு.

வெளிக்கசிவுஎதுவுமின்றி அச்சிறுப்பெண் எப்போதும் மௌனத்தால் இறுகியிருந்தாள். அவள் பேச்சற்று இருந்தே எல்லோரையும் நிறைத்துக் கொண்ட மாதிரித் தெரிந்தது அவனுக்கு.

அந்த இறுகல் டொமினிக்குக்குப் பிடித்திருந்தது. அவன் குதூகலமாகிக் காற்றில் மிதக்கும்போதெல்லாம் சசிதான் அவனை எப்போதும் தரைக்கு இழுத்து வந்தவள்.

என்றுமில்லாமல்எதற்காக இன்று அதிகாலையிலேயே சக்திவேல் வந்தான்?   இவன்தான் என் புருஷனென ராணிதான் டொமினிக்குக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். அவனை நோக்கி நீட்டிய டொமினிக்கின் கையை உதறினான் சக்திவேல். அதில் ஒரு   முரட்டுத்தனமிருந்தது.

எதிர்பாராததொருதருணத்தில் டொமினிக் முகத்தில் காறித்துப்பி அந்தக் காலையை வன்மமாகத் துவக்கினான் சக்திவேல்.

தரையில்சாத்திவைக்கப்பட்டிருந்த ட்ரம் கிழிந்தது. சராமாரியாக அவ்வப்போது   அவனுக்குஅடி விழுந்தது. ராணி பதுங்கினாள். அவனைத் தடுக்க முயலவில்லை. சசியின் முகம் மேலும் இறுகி எந்நேரமும் வெடித்து விடுமோ என ஆனது.

என்ன யோசித்தும் எதற்காக இந்த துவம்சம் என டொமினிக்கால் புரிந்து கொள்ள   முடியவில்லை, ராணியின் இந்த மௌனத்தையும் சேர்த்து.

புதுசு புதுசாய் யார் யாரோ வந்து உட்கார்ந்தார்கள். டொமினிக்கின் உடல்   நடுக்கத்திலிருந்தது. ரத்தக் கசிவு தான் தாங்கமுடியாத வலியைத் தந்தது.

என்ன முயன்றும் இது எதனால் என அவனால் யூகிக்கவே முடியாமல் போனது.

ராணியையும், சசியையும் யாராலும் இதைவிட அக்கறையுடன் கவனித்துக்     கொண்டிருக்க முடியாது. அத்தனை அக்கறை, அத்தனை பிரியம்.

‘‘இன்னும் ஒருபடி மேலே போ டொமினிக்’’ இன்னும் ஏறு

உயரம் சறுக்கியது, ஏறினான்.

டொமினிக். இன்னொருவன்மனைவி. குழந்தையின் மீது உனக்கான அக்கறை   பிரியம் ஏன்?

ஏணிக்கருகில் சக்திவேல் நின்றிருந்தான். சட்டெனச் சறுக்கி தரைக்கு வந்தான்.

ஒரு கணத்தில் டொமினிக்கிற்கு எல்லாம் புரிந்தது.

வாழ்வின் இரகசிய முடிச்சுகள் ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது. தூக்கிச் சுமந்ததை, நழுவவிட்டு துறந்தான்.

டொமினிக் லேசானான். முகம் தெளிந்தது. அவன் திடீரென அவ்வீட்டிற்குள்   பிரவேசித்தான். போன வேகத்தில் வெளியே வந்தான்.

மிகச் சிறிய ஒரு ட்ராவல் பேக் மட்டும் அவன் வலதுபக்கத் தோளில் தொங்கியது.

எதிர்புறம் நின்றிருந்த சக்திவேலை நெருங்கி, அவ்வீட்டைக் காண்பித்து,

‘‘நான் போறேன், நீ இருந்துக்கோ என்று சைகையிலும் தப்புத் தப்பான தமிழிலும்   சொன்னான்.

சக்திவேல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். அது மிகச்   செயற்கையாயிருந்தது.

ராணி அவனை ஏறெடுத்துப்பார்த்து சட்டென கவிழ்ந்து கொண்டாள். நிமிஷத்தில் அவள் பார்வை அவன்மீது பட்டுத் திரும்பியது.

சசியை மட்டும் தரையளவு குனிந்து தன்னுள் அணைத்துக் கொண்டான்.

ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கப்பட்ட காட்சி போல அவ்விடம் விரிந்து கொடுத்தது.

டொமினிக் சட்டென திறந்திருந்த கேட் வழியே வெளியேறினான்.

வெளியே நின்று இருபக்கச் சாலையையும் கவனித்தான். அவன் செல்ல வேண்டிய   திசை சற்றுமுன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது தெற்கு. அவன் நடக்க ஆரம்பித்தான்.   எப்போதும் டொமினிக்கின் நடையில் ஒரு நளினமிருக்கும். இன்று அவன் நடை வேகமெடுத்து ஓட்டமாக மாறியிருந்தது.

வாடகை வீடுதான் எனினும் அது அவன் வீடு. ஒரு கரும்பிசாசு மாதிரி வாசலை   அடைத்து நின்ற அவன் புல்லட்.

ஆனந்திடமிருந்து பெற்ற பணத்திலிருந்து ஆரம்பித்த உயர்ந்த வாழ்வு சில நிமிடங்களில் அவன் என் பீல்ட் முதுகுக்குப்பின் போய்விட்டது.

அவனால் திரும்பிப் பார்க்க முடியாது.

திரும்பினால் சக்திவேல் தெரிவான். தரையில் உறைந்துபோய் ராணி   உட்கார்ந்திருப்பாள். சசியின் தவிப்பு மீண்டும் அவனை ஈர்க்கும்.

டொமினிக் பெரும்பாக்கம் சாலையில் இன்னும் வேகம் கூட்டி நடந்தான். நடையில்  ஒரு தீர்மானமிருந்தது.

அடுத்தநாள் காலை, ஆணாய்பிறந்தானில் கூலி வேலைக்குப் போன பெண்களின்   குரல்கள் வியந்து வியந்து பேசிக் கொண்டன.

வெள்ளக்காரன்டி, கால் சட்டை மட்டுந்தான் போட்டிருக்கான். வெளஞ்ச வெளச்சலுக்கு நடுவால இருந்து எழுந்தான் பாரு, வரப்பு முழுக்க கொத்து கொத்தா கொழந்தைங்க அம்மாஞ் சீக்கிரம் எப்படித்தான் நம்மூரு கொழந்தைங்க   முழுக்க அவங்கூட போச்சுங்களோ?

“நம்ம அம்புட்டு பேரு பொடவையும் அதுங்க கையில கலர் கலரா என்னமா அசையுது!

வரப்பு மேல குபீர்னு

 எழுந்து வந்துச்சுங்கப் பாரு, எம்மாம் அழகு, கொள்ள அழகு. அதுங்க கூடவே போயிடலாமுன்னு இருந்துச்சி





- நன்றி
01.06.2016
ஆனந்த விகடன் - ஓவியர் ஷ்யாம்