Thursday, February 3, 2011

ஆன்மீகத்திலிருந்து மனிதனுக்கு






என் இருபதாவது வயதில் நான் முதன் முதலாக கிடியன் தேவநேசன் என்ற பெயருடைய அக்கிறிஸ்துவத் திருச்சபையின் பாதிரியாரைச் சந்தித்தேன். அதற்கு முன்பும், பின்புமான ஏராளமான பாதிரியார்களைச் சந்தித்திருக்கிறேன். யாருக்குமே பெரிய அளவிற் இறைஞானமோ, அதைத் தாண்டியவற்றில் ஆர்வமோ இருந்து பார்த்ததில்லை. பாதர் ஜோஸ் மாதிரியானவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைகளில் விதிவிலக்கானவர்கள். அவர்கள் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறினார்கள், அல்லது வெளியேற்றப்பட்டார்கள்.

முதல் சந்திப்பிலேயே சிலர் மனதுக்குள் சுலபமாக நுழைந்துவிடுவார்களே, அதுபோல கிடியன் தேவநேசன் கண்களும், தான் நம்பும் விஷயத்தின் மீதான உறுதியும், திருச்சபையைத் தாண்டி சமூகம், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், தமிழ்மரபு, திருக்குறள், சங்க இலக்கியம் இப்படி எல்லாவற்றின்மீதும் அவருக்கிருந்த ஞானமும் ஆர்வமும் என்னை அவருக்கு மிக அருகில் வைத்தது.
நானும் அவரும் அவருடைய என்ஃபீல்ட் புல்லட்டில் புரிசைக்குக் கூத்து பார்க்க ஒரு நீண்ட பயணம் போன இரவும், வழி நெடுக மின்னிய மினுக்கிட்டாம் பூச்சிகளும் இன்றும் எங்களால் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவ அடிப்படைவாதத்தின் நேர்க்கோட்டிலிருந்து கொஞ்சம் விலகியே நடந்தவராக அவரைச் சொல்வேன். அவருடைய வாழ்வு அவரை அப்படி மாற்றிப் போட்டதாக உணர்கிறேன். தன் நாற்பதாவது வயதில் தன் பணியின் நிமித்தம் கல்வராயன் மலைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்கிறார். இயற்கையின் மகோன்னதத்திற்கு தன் ஜன்னலைக்கூடத் திறக்காமல் மூடப்பட்ட அறையிலேயே வாழ்வை முடிக்கும் பல கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு மத்தியில் கிடியன் ஜன்னல்களை மட்டுமின்றி, கதவுகளையும் அகலமாகத் திறந்து வைக்கிறார். சுற்றிலுமிருந்த ஆதிவாசி மக்கள் தங்கள் நேசிப்புக்குரிய மனிதனாக இவரிடம் நெருங்குகிறார்கள். இச்சமயத்திற்காகவே காத்திருந்தது மாதிரி தூண்டிலை இழுத்து மீன்களை அறுவடை செய்யும் மற்ற மதவாதிகளைப் போலன்றி, அம்மக்களின் இயல்பை, மதத்தை, இயற்கையின் மீதான பற்றைக் கொஞ்சமும் மாற்ற முயற்சிக்காமல், அவர்களில் ஒருவராக தான் மாறினார். 1990இல் ஒரு மார்ச் மாதத்தில், ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதற்காக வெறிகொண்டலைந்த என் நண்பன் கோணங்கியை அவரிடம் அனுப்பி வைத்தேன்.

கோணங்கி சென்ற இரண்டாவது நாள் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் பதில் சொன்னார். உங்கள் நண்பருக்கு நான் கொடுத்த அறை, உணவு, ஃபேன் காற்று எதுவுமே தேவைப்படவில்லை, அவர் ஆதிவாசிகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். இரண்டற என்ற வார்த்தை உச்சரிப்பின்போது அவரிடம் தெறித்த கிண்டலைச் சமவெளியில் இருந்தே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நேற்று அதிகாலை என் நடைப்பயிற்சியின்போது பார்த்தேன். இரவு வேட்டையில் சிக்கிய காட்டுப்பன்னியை இரத்தம் சொட்டச்சொட்ட தூக்கி வந்த ஆறு பேரில் கோணங்கியும் ஒருவர். கல்வராயன் மலையில் சுத்தமான கஞ்சா எங்கிருக்கிறது என்பதும் இந்த மக்களுக்கு அத்துபடி.

நான் கோணங்கியை அவன் மனநிலைக்கு ஏற்ற இடத்திற்குத்தான் அனுப்பியதாகப் பெருமிதப்பட்டுக் கொண்டேன். அம்மலைக்காட்டில் சுற்றி அலைந்து அவன் தரைக்குக் கொண்டு வந்ததுதான் 'கல்குதிரை.' தொடர்ச்சியான வாசிப்பே அவரை சராசரிகளிடமிருந்து அன்னியப்படுத்தியது. திருச்சபைகள் எதிர்பார்ப்பதோ, அதிகாரம் பிரித்துக் கொடுத்தலையும் உத்யோக பிச்சையிடலையும், என்ன விலை தந்தேனும் லௌகீக வாழ்வின் உச்சத்தை அடைதலையும்தான். இதை, தொடர்ந்து கிடியன் அலட்சியப்படுத்தினார். ஒரு பறவையின் சிறகில் பட்டுத்தெறிக்கும் மழைநீர் மாதிரியானது பதவி என்பதில் இறுதிவரை உறுதியுடன் இருந்தார். அதனால் தானடைந்த நேர்மையை, கம்பீரத்தைத் தனதாக்கி வைத்திருந்தார்.
அவருடனான என் பல உரையாடல்களின் முடிவில் பேச்சற்று போயிருக்கிறேன். நீடிக்கும் மௌனத்தினூடே அவர் சொன்ன செய்திகளின் காட்சி வடிவத்தில் மூழ்கியிருக்கிறேன்.

நீண்ட மலைப்பாதை. மழைபெய்து முடிந்த குளிர்ந்த இரவு. காரில் வாய்த்த இரவுப் பயணமது. முன்சீட்டில் உட்கார்ந்து தூங்குகிறார். ஓட்டுனர் அடித்த பிரேக்கில் தலைமோதி அதிர்ந்தெழுந்து நெற்றியைத் தடவிக் கொண்டே பாதையைப் பார்க்கிறார். கண் நீண்ட தொலைவிற்கு எதுவுமில்லை.
''அப்புறம் ஏன் இப்படி ஒரு பிரேக் அடிச்ச?''

அந்த வயதான டிரைவர் தலை திருப்பாமலேயே நிதானமாக பதில் சொல்கிறார்.

''ரோட்டை ஒரு கீரிப்புள்ள கிராஸ் பண்ணுச்சுங்க''

''கீரி தான, அடிச்சிட வேண்டியதுதான?''

''அப்புறம் மரணம் எனக்கு மரத்துப் போயிடும் அய்யா''

நான் பேச்சற்றுபோன தருணங்களில் இதுவும் ஒன்று.

பாதிரியாரிலிருந்து பேராயராக உயர்ந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட கிரீடம், செங்கோல், அதிகாரம் எல்லாமும் அவரை மக்களிடமிருந்து பிரித்து விடுமோ என பயந்தேன். தன் கீரிடத்தையும், செங்கோலையும் பேராலாயத்தில் வைத்துவிட்டு அவர் மெல்ல நடந்து வந்து எளிய மக்களின் கை பிடித்தார்.
அவருடைய பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன். அவை எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. மேதமைக்கும் எளிமைக்கும் இடையிலான சொற்பொழிவுகள்தான் அவை. ஆனால் சில முக்கிய மரணங்களின்போது அவர் ஆற்றிய உரைகள் அவரே அறியாமல் முக்கியமானவை. மரபுகள் வழியே மனிதனைப் பார்ப்பது அவருக்கு வாய்த்திருந்தது.

ஆனால் தொடர்ந்த வாசிப்பிலும்கூட வசீகரமான மொழி அவருக்கு வாய்த்திருக்கவில்லை. இலக்கியம் தவிர்த்த பொருளாதார அரசியல் சம்மந்தமான புத்தகங்கள் அவருக்கு வறண்ட மொழியையே அளித்திருந்தன.
டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேனிஷ் மிஷன் செக்கரட்ரி ஒருவர் தமிழகத்தின் முக்கியமான பல ஓவியர்களைச் சந்திக்க வேண்டுமென தன் மகள் பொருட்டு விரும்பியபோது அப்பயணத்தை என் நண்பன் ஜாஷ்வா பீட்டருக்காக நான் நிறைவேற்றித் தந்தேன்.

அப்பயணத்தில் பிஷப் கிடியனின் எங்களுடனான இருப்பில், கலைஞர்களின் பெருவாழ்வும், விட்டேத்தியான மனநிலையும், லௌகீக வாழ்வை புறந்தள்ளும் குணமும் அவரைப் பெரிதும் கவர்ந்தது.

''பாதிரியார்கள்தான் பற்றற்று இருக்க வேண்டுமென எப்போதும் நினைப்பேன். அப்படி ஒருவரையும் என் வாழ்வில் சந்தித்ததில்லை. கலைஞர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் பவா'' எனத் தன் வியப்பைத் தொடர்ந்து அப்பயணத்தின்போது வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.
சந்தானராஜ், ட்ராஸ்கி மருது, டக்ளஸ், சஜிதா போன்ற ஓவியர்களுடான சந்திப்பும், ஓவியர் ஆதிமூலம் வரைவதை அவர் அறையிலேயே உட்கார்ந்து பார்க்கும் பெரும் வாய்ப்பும் அன்று வாய்த்தது.

ஒரு முறை என்னை அவருடனான ஒரு உரையாடலின் போது பார்த்த சர்ச் பாதிரியார் ஒருவர், 'அய்யா, பவா ஒரு தடவைகூட சர்ச்சுக்கு வந்ததில்லைங்கய்யா' என்ற புகார் மனுவை வாசித்தார்.

பிஷப் கிடியோன் புன்னகைத்துக் கொண்டே ''நீங்க எத்தனை தடவை அவர் நடத்துற முற்றத்துக்குப் போயிருக்கீங்க டேனியல்?'' என்று கேட்டார். மனித ஞானத்தையும், அனுபவத்தையும், ஆராதனைகளிலிருந்தும் முற்றத்திலிருந்தும் பெற்றுக்கொள்வது ஒன்றுதான் என்று அவர் உள்ளூர நம்பினார்.

மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு இங்கிலாந்து பயணத்தின்போது, அங்கேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பேச்சடங்கிப்போன ஒரு மனிதனாக சி.எம்.சி. மருத்துவமனையில் பார்த்தேன். எனக்கு, தன் கண்களால் நன்றி சொன்னார். கை அழுத்தத்தால் அன்பைப் பரிமாறினார். தன் உடல் சுகவீனத்தின் பொருட்டு விடை பெற்றுக்கொண்ட மிக உயர்ந்த பிஷப் பதவியை அதன் பிறகான நாட்களில் திரும்பிப் பார்க்காமல் இன்னும் எளிமையான வாழ்விற்கு வந்தார். இந்த மனநிலை அசாதாரணமானது.

ஆறு மாதத்திற்கு முன் என் உறவினர் திருமணத்தில் எதிர்பாராத விதமாக அவரை தேவாயத்தில் தன் மனைவியோடு பார்த்தேன். கையில் ஒரு பாட்டுத்தாளை வைத்துக்கொண்டு பாட முயற்சி செய்து கொண்டிருந்தார். எங்கள் பழைய நாட்களின் நினைவு பெருகியது. எப்போதும் கடவுள் நம்பிக்கையற்ற நான், ''கடவுளே இவருக்கு மீண்டும் பேசவும் பாடவுமான நாட்களை வாய்க்கச் செய்வாயாக'' எனக் கண்ணீர் மல்க இறைந்து மன்றாடினேன்.
புகைப்படங்கள் - ஆர்.ஆர். சீனிவாசன்

5 comments:

  1. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது பவா சார். :( எல்லாம் வல்ல இறைவன் உங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கட்டும்.

    ReplyDelete
  2. மனதை தொட்ட இதமான சம்பவங்களுடன் இருந்தது. தடவிக்கொடுக்கும் எழுத்து நடையில்

    ReplyDelete
  3. நீங்களும், நானும் அவரை டேனிஷ்மிஷன் பங்களாவில் சந்தித்து பேசியது நினைவு இருக்கிறாதா பவா? அவருக்கு, என்னையும் பிடித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    மிகச் சிறந்த மனிதர்.

    நல்ல கட்டுரை பவா.

    கருணா.
    எஸ்.கே.பி

    ReplyDelete
  4. மனதை தொட்டது. நெகிழவைத்துவிட்டீர்கள் நண்பரே. உங்களை, கோணங்கியை, பிஷப்பை என்றாவது ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது

    ReplyDelete
  5. பறவையின் சிறகில் பட்டுத் தெறிக்கிற மழைத் துளியை போன்றது பதவி என்கிற சொற்கள் கவித்துவமாக இருந்தது.

    ReplyDelete