Sunday, October 9, 2011

கல்யாண்ஜியிடமிருந்து...

அன்புமிக்க பவாசெல்லதுரை,

வணக்கம்.

தகுதிக்கு மீறித்தான் ஆசைப்பட்டேன். தமிழ்ஸ்டுடியோ அருண் கூடு இணைய இதழுக்காக எழுதக்கேட்டபொழுது, எழுதலாம் என நினைத்தேன். அப்படி நினைத்திருக்கக் கூடாது என்று, கலாப்ரியாவின் உருள் பெருந்தேர்தொகுப்புக் கட்டுரைகளைப் படித்தவுடன் தோன்றிவிட்டது.

ஐந்து தினங்களுக்குமுன், உதயசங்கரின் ‘ முன்னொரு காலத்தில்வாசித்துவிட்டு அந்த 22 சொச்சம் பேர்களில் ஒருத்தர் கூடக் கூட நிற்கும் அருகதையில்லை என்று தெரிந்துவிட்டது.

நேற்று 19.டி.எம். சாரோனிலிருந்து வாசித்து முடித்ததும், என் வாழ்க்கை உப்பு பெறாதது என்று உறுதியே ஆகிவிட்டது.

கலாப்ரியா-

உதயசங்கர்-

பவா செல்லதுரை- இருக்கும் திசைகளுக்கு என் வணக்கம். திசைகள் என்று வெவ்வேறாகச் சுட்டுவது கூட என் முட்டாள்தனம். இவ்வளவு வெளிச்சமும் கிழக்கில் இருந்துதானே வரமுடியும்.

எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை, எப்பேர்ப்பட்ட மனிதர்களுடன் நீங்கள் வாழ்ந்து வந்திருக்கிறீர்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

வெட்கமாக இருக்கிறது பவா. இந்த 21 இ. சுடலைமாடன் கோவில் தெரு வீட்டுக் காரைச் சுவர்களை உலகம் என நினைத்துக்கொண்டு,வெறுங்கையால் எவ்வளவு முழம் போட்டபடி இருக்கிறேன் இத்தனைக் காலமாய்.

சரி. இனிமேல் எதற்கு சூரிய நமஸ்காரம், இவ்வளவு கெட்டுப்போன கண்ணை வைத்துக் கொண்டு,

உங்களைமாதிரி ஆட்களின் காலத்தில் நானும் உடன்வாழ்கிறேன்,அது போதும்.

எல்லோருக்கும் அன்புடன்,

கல்யாண்ஜி.

2 comments:

  1. என்ன பவா இது? இதற்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை, ஒரே பிரமிப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் பவா இன்னும் உங்கள் சேவை தொடரட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

    ReplyDelete
  2. சொல்ல விரும்பியவற்றை எல்லாம் ஒரு பதிவாக இட்டுள்ளேன்.

    http://kanakkadalan.blogspot.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete