Wednesday, November 20, 2013

கார்த்திகை தீபம் – என் வீட்டனுபவங்கள்

ஞாயிற்றுக்கிழமைக்கான தீபக்கொண்டாட்டம் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவே துவங்கிவிட்டது. சாத்தூரிலிருந்து தியாகு அண்ணன் தன் மனைவியுடனும், இரு மகன்களுடன் கூடவே அ.முத்துக்கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு இரவு எட்டு மணிக்கு, சாத்தூர் சண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், சேவு தலா இருபது கிலோவுடன் வந்து சேர்ந்தார். இதுவரையிலான அவர் சந்திப்பு கருப்பட்டிமிட்டாயும், சேவுமின்றி ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை.
அவர் தம்பி மகேந்திரன் சென்னையிலிருந்து தன் ஏழுவயது மகனோடு தனி காரில் இரவு எட்டரைக்கு வந்து சேர்ந்தார். மிக சமீபத்தில் தன் மனைவியை கேன்சருக்கு பலிகொடுத்திருந்தார் மகேந்திரன். அத்துயரம் அவர் பேச்சை உறிஞ்சியிருந்தது. அமெரிக்க வாழ்வு தந்த அலுப்பும் அதனுடன் சேர்ந்திருந்தது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு முன்பே என் நண்பர் ஓவியர் சீனிவாசன் தன் மனைவி ஜெயந்தி, ஐந்து வயதேயான மகன் தம்புக்குட்டியோடு வந்திருந்தார். அவர் வாழ்வு கொண்டாட்டங்களாலும், மௌனங்களாலும் மட்டுமே நிறைந்தது. ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், ஆஸ்ரம சாப்பாடு இதெல்லாம் மௌனத்தின் பக்கம் சேரும். தன் நண்பர்கள் கார்த்தி, ஜெய், முருகனோடு நீண்ட பின்னிரவுகளில் ஊர்சுற்றல், விவாதம், எவரையும் காயப்படுத்தாத நக்கல்கள் இவை முதல்வகை.
நானும் நண்பன் சிந்து ஏழுமலையும், வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒவ்வொரு இடமாகத் தயார் செய்தோம். ஜெயஸ்ரீயின் கல்வீடு, எங்கள் இரண்டாம்நில கெஸ்ட் அவுஸ், மாத்தூர் நில வீடு ஆகியவை ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களால் இரவு பகலாய்ப் பொலிவூட்டப்பட்டன.
சனிக்கிழமை இரவு முதல் என் தொலைபேசி பல்வேறு குரல்களால் மூச்சு திணறியது. மூன்று நான்கு முறை அதை சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது.
இரவு பனிரண்டு மணிக்கு மேல் வந்த மருதா பாலகுரு, மற்றும் அவர் நண்பர்களை அழைத்து வந்து மாத்தூர் நிலத்தில் தங்க வைத்தோம். அடுத்த விடியலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மிச்சமிருந்தது. ஏதோ விசித்திர சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்தால் அடைமழை துவங்கியிருந்தது.
மாலை மூன்று மணியளவில் மலேசியாவிலிருந்து என் மாமா மகள் பரமேஸ்வரியும் அவள் ஸ்நேகிதி யோகேஸ்வரியும் மழையினூடே திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எங்கள் போலோ காரில் வந்திறங்கியது இனிமையான காட்சி.                                     
சனிக்கிழமை மாலையே வந்து சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தர்  எழுத்தாளர். ஜெயமோகனின் மகன் அஜிதன்.
வம்சி, மானசி, ஹரி, அஜி, தியாகு அண்ணனின் மகன்கள் நிருபன், அஸ்வின் அ.முத்துகிருஷ்ணன்  இவர்கள் எல்லோரும் நிறைந்திருந்த கிணற்று நீரில் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஊறிக் கிடந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் ஜெயஸ்ரீ வீட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தோம். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்து சாப்பிட்டோம்.
இடையே சிபிச்செல்வனும், வேல்கண்ணனும் வந்து ஒரு கறுப்பு காபி மட்டும் குடித்து அவசரமாக விடைபெற்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அவசியம் வருவதாக அப்போதே பொய் சொன்னார்கள். எல்லாம் கடந்து போனது.
இப்போதெல்லாம்  என் தம்பியும் கவிஞனுமான நா.முத்துக்குமாரும்,  பாட்டெழுதும் விதமே அலாதியானது. படத்தின் இயக்குநரோடு காலையில் சென்னையிலிருந்து கிளம்பி வாணியம்பாடிவரை பயணிப்பது. இடையிலேயே பாடல் கருக்கொண்டுவிடும். வாணியம்பாடியிலோ, ஆம்பூரிலே முஸ்லீம் வாசம் வீசும் பிரியாணியோடு அப்பிரசவம் முடிந்திருக்கும்.
திரும்பி வரும்போது அவர்களை ஒரு புதுப்பாடல் நிறைக்கும். இம்முறை அருணாசலேஸ் வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலையே முத்துக்குமாரும் நீயா நானா’ ஆண்டனியும், அவரின் நண்பனும் பட இயக்குனருமான சார்லஸ் ஆகியோர் இரு கார்களில் புறப்பட்டு வந்தவாசி வழியே தங்கள் பயணத்தைத் துவக்கியிருந்தார்கள்.

ஆண்டனி சார் தயாரிப்பில் சார்லஸ் இயக்கும் படத்திற்கு முத்துக்குமார் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்படப் பாடல் நிறைவடையும் இடத்தில் சார்லசும் கோபியும் அப்படியே சென்னைக்குத் திரும்பிவிடுவார்கள். (டப்பிங் வேலை) நாங்கள் எத்தனை பேருக்கு சமைப்பது என்பது குழப்பத்திலிருந்தது. வந்தவாசி அவர்களுக்கு அப்பாடலை பரிசளித்து அப்படியே திருப்பியனுப்பியது. ஆண்டனியும், முத்துக்குமாரும் மட்டுமே மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரின் பயணம் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.
மாலை ஐந்து மணிவரையிலும் நண்பர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஐந்து மணிக்குக் குளித்து முடிந்து எல்லோரும் மொட்டைமாடிக்குப் போனோம். மானசி, வம்சி, அஜி, பாஸ்கர், ஹரி எல்லோருமாக அம்மொட்டைமாடியை அகல் விளக்குளால் அலங்கரித்திருந்தார்கள். செம்மண் அகல்களில் தீப எண்ணெய் நிறைந்திருந்ததே தனி அழகு.

எங்கிருந்தோ சிந்து ஏழுமலை ஒரு பை நிறைய மத்தாப்புகளையும், பட்டாசுகளையும் கொண்டு வந்தான். நான் நேரம் பார்த்தேன். சரியாக 5.50 எனக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. பல லட்சம் கண்களோடு சேர்ந்து என் கண்களும் மலையின் திசையில் நிலைகொண்டது. மலை உச்சியை கருமேகங்கள் நிறைப்பதும், விலகுவதும் அட… அது ஒரு சுவாரசியமான ஏமாற்றம். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துக்குமாரையும், ஆன்டணி சாரையும் எழுப்பினேன். பதறியடித்து எழுத்து வந்து மொட்டைமாடி வெறுந்தரையில் சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். மானசி முதல் மந்தாப்பைக் கொளுத்துவதற்கும் தீபம் ஏற்றுவதற்கும் சரியாயிருந்தது. எங்கிருந்தோ வந்த உற்சாகம் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லார் வீட்டு மொட்டைமாடிகளிலும் அதுவே பிரிதிபலித்தது. அடுத்த அரைமணி நேரத்திற்கு ஊரெங்கும் வான வேடிக்கையும், குதூகலமும், ஆன்மீக அனுபவமுமாகத் திகழ்ந்தது.
அகல் விளக்குகளின் ஒளி குறைதலுக்கு அஜி தனியே எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வம்சி இவைகளை ஓடிஓடி பல கோணங்களில் படமாக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு சிறு குழுவிடம் ஆன்டணி நீயாநானாவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை பரிதி அதில் மூழ்கியிருந்தார். ஷைலுவும், ஜெயஸ்ரீயும் ஒரு பெரிய மேசையில் தாங்கள் இதுவரை சமைத்த இருபத்தியோரு வகை உணவை மிக அழகாக மூடியிட்டு அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அதில் என்னைக் கவர்ந்த ஆறேழு வகை, காலிபிளவர் ப்ரை, முருங்கைக்கீரை மல்லாட்டை கலவை, பாகற்காய் வெங்காயம் சேர்ந்தொரு வறுவல், மூக்குகடலை, மொச்சை, பட்டாணி, பெரும்பயறு கலந்ததொரு சுண்டல், ஷைலஜாவின் பிரத்தேயக சேமியா பாயாசம். இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய பீர்க்கங்காய் காரக் குழம்பு.
சிறுசிறு குழுக்களின் பேச்சினூடே சாப்பிட ஆரம்பித்தோம். ஒவ்வொருவருக்கும் முன் ஒரு மூன்றடிக்கு தலைவாழை இலை. பௌர்ணமி வெளிச்சத்தில் அதன் மஞ்சள் கலந்த பச்சை நிறம் மின்னியது.
உற்சாகமும், உணவும் கூடிக் கொண்டேயிருந்தது.
ட்ரம்ஸ் சிவமணியை முத்துக்குமார் சாப்பிட அழைத்தான். அவர் பேசி முடித்து என்னிடம் தொலைபேசியைத் தரச்சொல்லி,
‘‘சாரி பவாண்ணே, போன வருட தீபத்துக்கு உங்க வீட்டு மொட்டமாடியிலதான் சாப்பிட்டேன். நாளைக்காலை பூனாவுக்கு ப்லைட் பிடிக்க அவசர அவசரமா போறேன். இடையில் இன்னொரு முறை வர்றேன். தீபத்துக்கு சமைச்ச அத்தனை வகையும் வேணும்’’
தொலைபேசியை முத்துக்குமார் கைகளுக்கு மாற்றிய என்னிடம் ஒரு பெருமிதமான சிரிப்பிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு, இது ஷைலஜாவுக்கு,
அவள் முதல் வார்த்தையிலேயே பரவசமாகி அதையும் என்னிடமே தந்தாள்.
‘‘சார் நான் சப்தரிஷி, லா.ச.ரா பையன். பத்து வருசமா உங்களை பாக்கனுன்னு முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் வாய்ச்சது. உங்க ‘வம்சி’ முன்னால நிக்கறேன். அங்கிருந்த போர்ட்லதான் நெம்பர் எடுத்தேன். வீட்டுக்கு எப்படி வரணும்?’’
நான் ஆட்டோவிற்கு வழி சொன்னேன். அவரும் அவர் மனைவி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆட்டோ கிடைக்காமல் நடந்தே மூணு கிலோமீட்டர் தூரம் வந்தார்கள். அவர் மொட்டைமாடியில் ஏறும்போதே பெரும் உற்சாகத்தைக் கூடவே கூட்டி வந்தார். அது எல்லோரையும் பற்றிக் கொண்டது.
நான் உங்களைப் பார்க்க வந்தது 49%. தான் ஷைலஜாவைப் பார்க்க வந்ததுதான் 51%. கணக்கு சரியா?
அதற்கும் நான் சிரித்துக் கொண்டேன்.
‘சிதம்பர நினைவுகள்’ என்னை உலுக்கியது. அதுக்கு அப்புறம்தான் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’
‘‘நேற்று நீங்க உங்க இப்லாகு-ல எழுதினதுவரை படிச்சிட்டேன் சார்’’ இது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாய்ஸ்.
அவர்களுக்கு ஷைலுவும், ஜெயஸ்ரீயும் தாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைக் கையெழுத்திட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர், அப்பாவின் ‘தொனி’யை மீண்டும் படித்தேன் பெரிய கலைஞன்தான் அவர் என அதிலிருந்த ஒரு பகுதியை அச்சுப் பிசகாமல் அப்படியே எங்களிடம் பகிர்ந்தார்.
‘அபிதா’வும், ‘பச்சைக்கனவும்’ வந்துவந்து போனார்கள். இடையிடையே கருமேகத்திற்கிடையே தீபம் மினுக்கிமினுக்கி எல்லோருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகனின் ‘அறம்’ கேட்டார். கொடுத்தவுடன் அதில் ஜெயமோகனுக்கு பதிலாக அவர் மகன் அஜியிடம் கையெழுத்து கேட்டார்.
அவன் முடியவே முடியாதென அடம்பிடித்தபோது என் தொலைபேசி வழியே ஜெயமோகனே வந்தார்.
நான் பெரும் சிரிப்பினூடே,
‘அஜி உங்களுக்கு பதிலா கையெழுத்து போட மறுக்கிறான் ஜெயமோகன்’ என்றேன்.
அவரும் சிரித்துக் கொண்டே தொலைபேசியை அஜியிடம் கொடுக்கச் சொன்னார்.
அவர் என்னமோ சொல்ல அவன் மிக வெட்கப்பட்டு, நாணிக் கோணி அப்புத்தகத்தில் கையெழுத்திட்டது பேரழகு.
நான் ஜெயமோகனிடம் ‘அஜி இப்போது ஐந்தாவது பந்திக்குப் பரிமாறுகிறான்’ என்றேன்.
அவர் ‘அவனை உங்கள் வீட்டிற்கு பஸ் ஏற்றுவதற்கு முன் ‘எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா’ என சொல்லித்தான் பவா பஸ் ஏற்றினேன்’ என்றார்.
இருவருமே முடிந்தவரை சிரித்துத் தீர்த்தோம்.
இப்போதைக்கு எவரும் பேசுவதை நிறுத்துவதாயில்லை. என் கை கால்களைத் தனித்தனியே கழட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாங்கமுடியாத வலி உடலெங்கும் பரவியிருந்தது.
அவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு நானும் சிந்து ஏழுமலையும் பைக்கை எடுத்துக் கொண்டு நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போனோம்.
கெஸ்ட் அவுஸ் திறந்தே கிடந்தது. ஏதோ ஒரு அவசரத் தொலைபேசியின் அழைப்பின் பொருட்டு இத்தனை கொண்டாட்டங்களையும் இழந்துவிட்டு தீபம் பார்க்காமலேயே பஸ் ஏறிவிட்ட கட்டுரையாளன் அ.முத்துகிருஷ்ணன் படுத்திருந்த தடயத்தை மட்டும் விட்டு சென்றிருந்தான். இந்த வருடம் நிச்சயம் அவனால் அவ்வளவு அதிரடிக் கட்டுரைகளை எழுதவே முடியாது, அண்ணாமலையாரின் சாபம் அப்படி.
மேடைமீது நேற்று நண்பர்கள் குதூகலித்து முடித்த மிச்சமாய் வயலட்நிற ‘வோட்கா’ இருந்தது.
அதை பார்த்துக் கொண்டே நான் அப்படியே படுக்கையில் சரிந்தேன். திரும்பிப் பார்த்தால் ஏழுமலை சிறு குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
எழுந்து வெளியே வந்து கிணற்றுத் திட்டின் மீதமர்ந்தேன். அங்கிருந்து தீபத்தைப் பார்த்தேன். நள்ளிரவிற்குப்பின் சுடர் பிரகாசமாய் எரிந்தது தெரிந்தது.
  ஆரவாரங்களின் அடங்கல்களில் எதுவும் பிரகாசமடைகிறது. அதை முழுவதும் தரிசிக்கவும், பருகவும் முடிகிறது.
அந்நிலப்பரப்பில், சுற்றிலும் வயல்வெளிகளிள் அடர்பச்சையின் அசைவினில் அப்பாவின் நினைவு வந்தது.
பத்து வருடத்திற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முடித்த முன்னிரவில், ஷைலஜாவை தன்னருகே அழைத்து ‘தீபம் ஏற்றிட்டாங்களாம்மா’ என்ற வார்த்தையோடுதான் அவரின் உயிர்ச்சுடர் அணைந்தது. அவர் பேசிய கடைசி வார்த்தைகளும் அதுதான்.
எல்லாவற்றையும் தாண்டி அப்பாவை நினைத்து ‘ஓ’ வென கத்தி யாருமற்ற இந்த வனாந்தரத்தில் கொஞ்சநேரம் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

10 comments:

 1. உடனே தி.மலைக்கு ஓடிவர ஆவலைத் தூண்டுகிறது உங்கள் இடுகை. 86-89 மங்கலம் கிராமத்தில் பணிபுரிந்த இனிய பொழுதுகளை அடிக்கடி பேசி மகிழ்கிறோம்.

  ReplyDelete
 2. உங்கள் பதிவில் உங்கள் அப்பாவைப் பற்றி எழுதியது என் மனத்தைத் தொட்டது. உங்களை அடுத்த முறை சந்திக்கும்போது என் அப்பாவைப் பற்றி எழுதிய என் சிறு புத்தகத்தை உங்களுக்குத் தர வேண்டும் என்று விரும்புகிறேன் :-)

  மலையில் தீபம் ஏற்றப்படும் போது நீங்கள் உணர்ந்த அதே உற்சாகத்தையும் பரபரபப்பையும் படிக்கும் எனக்கும் உணர முடிந்தது நன்றி :-)

  amas32
  சுஷீமா சேகர்

  ReplyDelete
 3. இத்துணை மனிதர்கள் இத்துணை அனுபவங்கள் - உங்கள் இல்லத்தில் மட்டுமே சாத்தியம்!

  ReplyDelete
 4. 'எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா '.... TOPS :).. rajamani

  ReplyDelete
 5. தமிழில் அத்துனையும் அழகு !!
  தீக்குள்விரலை வித்தால் நின்னைதீண்டுவது இன்பம் நந்தலால!!!
  பாரதி வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .
  ஒரே நேரத்தில்
  கார்த்திகை தீபக்கொண்டாட்டம் !
  நண்பர்கள் விருந்தோம்பல் !
  தந்தை தற்போது இல்லாதது .
  இலக்கிய வரிகளுடன் நிறைசெய்தது
  அழகு ! ,,,, நன்றி

  ReplyDelete
 6. இம்முறை அருணாசலேஸ்வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.

  ReplyDelete
 7. இந்த மாதிரி அனுபவங்கள் என்னை மாதிரி சமான்யர்களுக்கு கிடைக்குமா??? ம்ம்....

  ReplyDelete
 8. "ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது. ""..., Classic. take care t ur health.JAY

  ReplyDelete
 9. பவா சார் இதை படித்து முடித்தபின் நானே நேரில் அங்கு வந்து எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பெற்றது போன்ற நிறைவான எண்ணம். வாழ்க அன்பு என்பது பகிரும் போது தான் பெருகுகிறது .நன்றி.

  ReplyDelete
 10. I missed it sir...
  I was planned to come there to celebrate my last bachelor karthikai dheepam...
  I felt very bad for not coming on that day.
  Thank you for sharing it...

  ReplyDelete