Tuesday, January 10, 2017

பாரதிராஜா

சென்னை வரை நீடித்த எங்கள் கார் பயணத்தில் எந்த முன் முடிவுமின்றி, அப்போது ஏற்பட்ட மன உந்துதலில் காலேஜ் கலை விழாவுக்கு பாரதிராஜா சாரை கூப்பிடலாம் பவா என என் நண்பர் எஸ்.கே.பி. கருணா சொல்ல நான் உடனே என் தொலைபேசியில் அவரை அழைத்து,

‘‘காலேஜ் கல்ச்சுரலுக்கு நீங்க வரணும் சார்’’

‘‘வரமாட்டேன்’’

அதில் ஏதோ ஒரு பொய்க் கோபம் இருப்பதாய் எனக்குப்பட,

‘‘ஏன் சார் வரமாட்டீங்க?’’

‘‘எத்தனை தடவை ஒரு டின்னருக்கு கூப்டறேன் நீங்க வர்றீங்களா? நானும் வரமாட்டேன்’’

வண்டி தாம்பரத்தை தாண்டிக் கொண்டிருக்க இன்னைக்கு வரட்டா சார் என அவரிடம் கேட்டேன், கருணாவிடம் கூட கேட்காமல். ரெண்டு பேரும் வாங்க, நானும் கல்ச்சுரலுக்கு வரேன்.

இரவு எட்டரைக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடலில் கால் நனைத்து காய்வதற்குள் வந்துவிடும் தூரத்தில் அவர் பங்களா முன் நாங்கள் இருவரும் நிற்க,

ஒரு அரைக்கால் ட்ரவுசர், நெக் டீ ஷர்ட் போட்டு கைகளை இறுக்கி, கட்டியணைத்து முன்பக்கம் நீச்சல்குளம் விரிந்திருந்த அவர் பங்களாவுக்குள் எங்கள் இருவரையும் அழைத்து போனது ஒரு காலத்தில் எங்கள் கனவின் ஆளுமையாயிருந்த இயக்குநர் பாரதிராஜா.

16 வயதினிலே வெளி வரும்போது நான் அநேகமாக ஆறோ ஏழோ படித்துக் கொண்டிருந்தேன்.

மயில்என்னை பலவகைகளில் தினறடித்துக் கொண்டிருந்தாள்.
சப்பாணியும், பரட்டையும் என் கிராமத்து வாழ்வை திரையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பாரதிராஜா என்ற பெயர் இரும்பாணி கொண்டு என்னில் எழுதப்பட்டிருந்தது.

லண்டனிருந்து வந்திருந்த அவர் நண்பர்களிடம் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் கூச்சத்தால் சுருங்கினோம்.

மனம் ஒரு புள்ளியில் குவிந்து அவர் பேச ஆரம்பித்தார்.

தான் சின்னசாமியாக பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து, மலேரியா இன்ஸ்பெக்டராக மாறி பண்ணை புரத்தில் பணிபுரிந்தது. இளையராஜா வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என தன் ஆரம்பித்து அப்படியே சொல்லத் துவங்கினார்.

கையில் 270/- ரூபாய் பணத்தோடு ஒரு சரக்கு லாரியில் தேனியிலிருந்து சென்னைக்கு மூன்று நாட்கள் பயணித்ததை சிரிப்பும், துக்கமுமாய் அவரால் சொல்ல முடிந்தது.

சினிமா பாரம்பரியமில்லாத, அசல் கிராமத்தானாக, சினிமாவைப் பற்றிய பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவுமின்றி அதன் மீதான காதலும் வெறியும் கொண்ட ஒரு கிராமத்து இளைஞன், அதன் பிரமாண்ட கதவைத் தட்டவும், உள்ளே நுழையவும், தனக்கான ஒரு நாற்காலியைக் கண்டடையவும் எதையெல்லாம் இழக்க வேண்டியிருந்தது, என்னவெல்லாம் அவமானப்பட வேண்டியிருந்தது,

பல ஆண்டுகளாய் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவர்களின் பார்வையை எப்படியெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை பல இடங்களில் தழுதழுக்கும் குரலிலும், சில நேரங்களில் அடக்க முடியாத கண்ணீராலும் எங்கள் முன் கொட்டினார்.

அவர் எங்களை அழைத்தது ஒரு இரவு டின்னருக்கு அல்ல என்பது வெகு சீக்கிரமேப் புரிந்தது.
பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள், நிழல்கள், கருத்தம்மா, அந்தி மந்தாரை, என்னுயிர் தோழர் என அவரின் லட்சிய படங்களை எட்டுவதற்கு அவர் பட்ட கஷ்டங்களையும் ஒரு கலைஞனாக அதை எதிர்கொண்ட விஷயங்களையும் பகிரத் தொடங்கினார்.

ஒரு இயக்குநரின் ஐம்பதாண்டு கனவை, அடைதலை, அவர் ஐந்து மணி நேரத்திற்குள் கடத்திவிட முயன்றார்.

எனக்கு பாலுவைப் போல (பாலுமகேந்திரா) சினமாத் தெரியாது கருணா, என் சொந்த கிராம வாழ்வின் செழிப்பும், அழகும், மனிதர்களின் நேசமும், வன்மமும் மட்டுமே முழுமையாகத் தெரியும். ஒரு கேமரா வழியே இதை எப்படியும் திரைக்கு கடத்திவிட முடியும் என நம்பினேன். அவ்வளவுதான்.

புறக்கணிப்புகளாலும், அவமானங்களாலுமே மேலேறி வந்தேன் என என்னை நிமிர்த்து பார்த்தபோது கண்கள் நிறைந்திருந்தன.

எங்கள் முன் நிறைந்திருந்த உணவு வகைகளை எங்கள் யாராலும் தொட முடியவில்லை.

அவரும் அதற்கு எங்களை வற்புறுத்தவில்லை. நான் என் படங்களில், சொந்த வாழ்வில் தவறே செய்யாதவன் அல்ல. உங்க ஜெயகாந்தன் மாதிரிதான் நானும். எதையும் சமூகத்திற்கு மறைச்சி, வெளிவேசம் போடத் தெரியாது எனக்கு.

தோ இப்ப எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் வெளியிலேயும்.

ஒரு படப்பிடிப்பின் பொருட்டு லண்டன்ல ஒரு சொகுசு ஹோட்டல்ல பதினெட்டாவது மாடில உட்கார்ந்து ட்ரிங்ஸ் சாப்பிடும் போதும், ஆண்டிப்பட்டி கண்மாயும், அய்யனார் கோவில் ஆலமரத்தடியும் தான் எனக்கு சொந்தமானவை என்பது நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

வந்து இறங்கியதும் வண்டியை எடுத்துகிட்டு சொந்த ஊருக்கு ஓடிடுவேன்,

என் ஆத்தா அப்பன்னு தொடரும் ஸ்பரிசம், இன்னமும் ஆடு மாடு மேய்க்கிற கூட்டாளிங்க வரைத் தொடரும். அது இல்லன்னா நான் ஏது? என் படமேது?

அந்த இடம் இன்னும் உறைந்தது. நீச்சல் குளத்தில் அந்த அகாலத்தில் விழுந்த ஒரு சருகின் சத்தத்திற்கு நாங்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தோம்.

ஒரு டீ குடிக்கணும் பவா என்பதற்காக மட்டும் ஒரு முறை வீட்டிற்கு வந்து கண்ணாடி கிளாசில் டீ கேட்டு குடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

அவர் சொந்த ஊரில் தமிழ் திரைப்படத்தின் அத்தனை ஆளுமைகளையும் வரவழைத்து நடத்திய பட துவக்க விழாவிற்கு, நான் தனியே போனது ஒத்துக் கொள்ள முடியாமல்,

கார் அனுப்பு, ஷைலஜாவையும், குழந்தைகளையும் வரசொல்லு என ஒரு குழந்தையை போல அடம் பிடித்திருக்கிறார்.

இந்த வருடம் தீபத்தன்று காலையில் தொலைபேசியில் அழைத்து,

நான் இதுவரை தீபம் பார்த்ததில்லை. அதில்ல இன்னைக்குஎல்லா நாளும் கார்த்திகையில்நீ என்னைப் பத்தி எழுதினதை படிச்சேன்.

அதை குரல்ல கேக்கணுன்னு ஏக்கமா இருக்கு. ஊருக்கு புறப்பட்டு வர்றேன்.

அடர் மழையில் நனைத்து கொண்டே மாடியேறி வந்தார்.

நண்பர்கள் எல்லோரும் அவரைச் சுற்றி கிடைத்த இடங்களில் நெருக்கமாய் உட்கார்ந்து கொண்டனர். வெளியில் மழை இன்னும் உச்சத்திற்கு சுருதி கூட்டியது.

நான் தமிழ்வாழ்வின் உணர்வு குறியீடு பாரதிராஜா என்ற அக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன்.

அதன் ஒவ்வொரு வரிக்கும் அவர் முகபாவத்தை அவருக்குத் தெரியாமல் மகன் வம்சிபடமாக்கியிருக்கிறான்.

கடந்த கால படைத்தலுக்காக தான் இன்னொரு படைப்பாளியால் நினைவு கூறப்படுதலை நேரடியாய் தரிசித்து சிலிர்ப்புற்ற ஒரு கலைஞனின் உடலை நாங்கள் எல்லோரும் அருகிலிருந்து தரிசித்தோம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் அவர் வீட்டிலிருந்து அன்று நாங்கள் வெளியேறும் போது பின்னிரவு மணி இரண்டரை.


நாங்கள் காரில் உட்கார்ந்த பின்தன் உடலால் எங்களை தொட்டுத் தழுவி நெகிழ்ந்த போது நான் சொன்னேன்.

‘‘இதையெலாம் எழுதுவேன் சார்’’


‘‘எழுது, நீ எழுதணும்ன்னுதான் இதையெல்லாம் உங்கிட்ட சொன்னேன்’’


நன்றி
இம்மாத அந்திமழை

No comments:

Post a Comment