Wednesday, January 11, 2017

எங்களை வழிநடத்தும் மேய்ப்பன் எஸ்.ஏ.பி


      
ஒரு எதிர்ப்பு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ துவங்குவதற்கு சற்றுமுன்னே எப்போதும் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதர்களாக வந்து சங்கமிக்கும் போது அவர்களின் முகபாவனைகளை, உடல்மொழியை அவதானித்திருக்கிறேன். அது அந்நிகழ்வின் மூர்க்கத்தை, வெற்றியை, அதன் பரவலை எனக்கு மௌனமாக உணர்த்திவிடும்.

அப்படியாக கவனிக்கும் போதெல்லாம் ஒரு ஆள், அல்லது ஒரு ஆளுமையின் வருகைக்காக அவ்விடம் எதிர்பார்த்து காத்திருப்பதாகவே தோன்றும்.

நெடிதுயர்ந்து ஆறடிக்கும் சற்று மேலான உயரமும், திடகாத்திரமான உடல்வாகும், காலில் கட் ஷூ, நீண்ட கதர் ஜிப்பாவோடு அவர் வந்து நிற்கும்போது அவ்விடம் தைரியத்தால் நிறையும்.

இம்மனிதனின் ஆளுமை இப்போராட்டத்தை வலுப்படுத்தும் என்ற ரகசியச் செய்தி ஒன்று ஒவ்வொருவருக்குள்ளும் கசியும். மனிதர்களை அது முன்னோக்கி நகர்த்தும்.

என் பள்ளி நாட்களிலிருந்து தோழர் எஸ்..பி.யை நான் அவ்வாறே என்னுள் உள்வாங்கியிருக்கிறேன். அவரில்லாத துவக்கங்கள் ஏனோ எனக்கு ஒரு வெற்றிடத்தைத் தரும்.

எனக்கும் மார்க்சியம் கற்றுக் கொடுத்திருக்கிறது ஸ்தாபனமே முக்கியம். தனி நபர்கள் அல்ல. ஆனால் தனி மனிதர்களின் சங்கிலிதான் இயக்கம். தனி மனிதர்களின் அடர்த்திதான் அதன் நகர்வு. தனிநபர்களின் தொடர்ச்சியான இயக்கமே அதை முன்னகர்த்திச் செலுத்துகிறது. ‘தளபதிஎன்ற வார்த்தை அதன் அர்த்தத்தை முற்றிலும் இழந்து விட்டாலும் கூட, பல இயக்கங்களுக்கு, பல ஆயிரம் தோழர்களுக்கு அவர் தளபதிதான்.

கடந்த ஜனவரியில் நான் கொடைக்கானலையும் தாண்டி மன்னவனூர் என்ற ஊரில், என் நண்பனும் இயக்குநருமான ராமின் பேரன்பில் மம்முட்டியோடு நடித்துக் கொண்டிருந்தேன். தாங்கிக் கொள்ள முடியாத குளிரில் என் உடல் உதறிக் கொண்டிருந்தது. பகலுக்கும், இரவுக்குமான இடைவெளியை உடல் உணர மறுத்தது.

என் மனம் ஏதோ ஒரு நம்பிக்கைக்கு ஏங்கித் தவிப்பதையும், உடல் உஷ்ணம் வேண்டி என்னிடம் முறையிட்டதையும் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்.

படப்பிடிப்பு இல்லாத அடுத்தநாள் காலை நானும் என் ஓட்டுநர் ரமேஷூம் கொடைக்கானலைக் கடந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம்.

‘‘எங்கண்ணா போறோம்?’’

‘‘போ சொல்றேன்’’

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த இரு வார்த்தைகள் மட்டும் இருவரிடமிருந்தும் வெளிப்பட்ட பயணம் அது
.
மலை பயணங்களுக்கென ஒலித்த மெலடிகளை நிறுத்தச் சொன்னேன்.

மனம் எங்கள் காரை முந்தி பல மைல்கள் சென்று கொண்டிருந்தது.

   என் வாழ்வில் முக்கியமானவர்களாகக் கருதும் பலருக்கும் ஆசானாக, குருவாக, வழி நடத்தும் ஆளுமையாக ஒரே ஆள் எப்படி இருக்க முடியும்?

மந்தைகளுக்கு ஒரே மேய்ப்பன் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இவர்கள் அப்படியல்ல ஒவ்வொருவருமே வரலாற்றின் பல பக்கங்களைத் தங்கள் எழுத்தால், பேச்சால், வாழ்வால், செயலால் நிரப்புகிறவர்கள். இவர்கள் பெரும்பாலானவர்களின் உருவாக்கம் ஒரே மனிதன் எனில் அது எப்படி சாத்தியம்? கேள்விகள் துளைத்தெடுத்த மனம் அடங்க மறுத்தது.

‘‘நாம யாரப் பாக்க போறோன்னாச்சும் சொல்லேண்ணா’’ பதட்டமற்ற குரலில் ரமேஷ் பக்கவாட்டில் திரும்பி என்னைக் கேட்டான்
.
‘‘உனக்கு அவரைத் தெரியாது. போ’’

‘‘நான் எங்கப் போவன்னாவது சொல்றயாண்ணா’’ அவன் வார்த்தைகளில் கொப்பளித்த கிண்டலை உள்ளிழுத்துக் கொண்டதை உணர முடிந்தது.

‘‘மதுரைக்கு’’

சில முடிவுகள், மனிதர்களை அதன்பின் பேச விடுவதில்லை.

நாங்கள் மதுரையை அடையும்வரை ரமேஷ் எதுவும் பேசவில்லை. வழியில் ஒரு கீரிப்பிள்ளையின் குறுக்கிடலின்போது அவன் கொடுத்த லேசான அதிர்வுச் சத்தத்தைத் தவிர்த்து
.
கந்தர்வன், எஸ்.ராமகிருஷ்ணன், வேலராமமூர்த்தி, பாரதி கிருஷ்ணகுமார், கே..குணசேகரன், கவிஞர் மீரா இப்படி நீளும் தமிழ் ஆளுமைகளிடம் எந்நேரத்தில் எவர் கேட்பினும்

உங்கள் வழிநடத்தல்,

உங்கள் ஆதர்சம்?எஸ்..பி.

எல்லோருக்குமே ஒரே பெயர், ஒரே உருவம்,

இதெப்படி சாத்தியம்?

சாத்தியம்தான் தோழர்களே.

இம்மனிதனால் மட்டும் கற்ற இலக்கியத்தை, இயக்கம் மூலம் அடைந்த அனுபவத்தை, களத்தில் போராடிப்பெற்ற வெற்றியை, அரசியலில் என்றும் தவறாத நிலைபாடுகளை, தன்னை நுட்பமாக கவனித்து அது போலவே தொடர நினைக்கும் ஒரு இளைஞனுக்கு தன் முழுமையை அப்படியே எப்படி கடத்த முடிகிறது?

அரை நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்து இயங்கும் எஸ்..பி. என்ற எளிய தோழனின் வெற்றி இதுதான்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழு நேர ஊழியர்களோ, எப்போதும் களத்தில் நின்று போராடும் முன்னணித் தோழர்களோ, எஸ்..பி.யிடமிருந்து தொடர் வாசிப்பை, எழுதுவதை, மொழிபெயர்ப்பதை, இசை கேட்பதை, திரைப்படம் பார்ப்பதை உள் வாங்குகிறார்கள். அதனுடன் கூடத்தான் தினம்தினம் தொடர் போராட்டமும். இவைதான் அவர் எல்லா தரப்பு மனிதர்களாலும் ஈர்க்கப்படுவதன் சூத்திரம்.

ஏதோ ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் நிகழும் அரசியல் கூட்டத்திற்கோ, இலக்கிய நிகழ்விற்கோ நேரடியாய் சென்று பேசி அன்றிரவே பஸ் பிடித்தோ சொந்த காரிலோ வீடு திரும்பும் தொழில்முறைப் பேச்சாளனல்ல அவர்.

அந்த ஊரின் பிரத்யேக நிலப்பரப்பு, தட்ப வெப்பம், அரசியல் சூழல், வியாபித்திருக்கும் கலைகள், கலைஞர்கள், ஆளுமைகள், மனிதர்கள் எல்லாவற்றையும் எல்லோரையும் தான் பேசுவதற்கு முந்தைய வினாடிவரை அவர் தனக்குள் கொண்டு வருவார். தனக்குள் அவர் ஏற்றிக் கொள்கிற இந்த மனித உரம்தான் எல்லா மனிதர்களாலும் எஸ்..பி. என்ற எளிய மனிதனை வெறி கொண்டு நேசிக்க வைத்தன.

 ரஷ்ய இலக்கியத் தர்க்கங்கள் முற்றிய ஒரு பின்னிரவில் எஸ்.ராமகிருஷ்ணனைக் கேட்டேன்.

ரஷ்ய இலக்கியங்களின் மேல் இத்தனை ஆர்வம் எந்த வயதில் ஏற்பட்டது எஸ்.ஆர்?’’

‘‘காலேஜ் படிக்கறப்போ?’’

‘‘உங்களுக்கு யார் அறிமுகப்படுத்தினா?’’

‘‘தோழர் எஸ்..பி’’

‘‘அவர் தொடர்ந்து வாசிப்பவரா?’’


மார்க்சிய இயக்கங்களில் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் வெகு சிலர்தான். நம் எளிய மக்களின் அன்றாடங்களுக்காக களத்தில் நின்று போராடி களைத்து வருபவர்களுக்கு வாசிக்க வேண்டிய புத்தகங்கள் கொஞ்சம் தள்ளிப் போய்விடும்.

எஸ்..பி.க்கு மட்டும் அது முன்னோக்கி வரும். உறக்கத்தைத் தவிர்த்த இரவுகளில் அவர் படித்து முடித்த உலக இலக்கியங்களை நானோ, நீங்களோ கணக்கு வைக்க முடியாது.

இரண்டு நாட்களுக்குமுன் அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து,

எடுவர்டோ கலியானோ பற்றி இதுவரை நீ எங்கேயும் எழுதக் காணோம்?என்றார்.

எழுதலைத் தோழர். விடுபடல்

உலகம் முழுக்க இவ்ளோ பேரப் பத்தி எழுதறே, எப்படி அவனை மட்டும் விடற? அவன் இடதுசாரி எழுத்தாளர்கள்ல முக்கியமான ஆளு. ஆறு புத்தகம் வந்திருக்கு

இப்படி ஒரு மனிதனை நீங்கள் உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளாவிடில் அது உங்கள் துரதிஷ்டம்தானே!

பழைய முகவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆயிரக்கணக்கான கிராமங்களில் அலைந்து திரிந்த கால்கள் அவருடையது. நான் அவர் கைப்பற்றி பல நாட்கள் என் சிறுவயதில் நடத்திருக்கிறேன். இன்றைக்கு நான் சென்னையிலும் அவர் மதுரையில் வாழ்ந்தாலும் வாழ்தலின் தூரம் எங்களைப் பிரித்ததே இல்லை

இன்றும் அவர் கைப்பற்றியே நிற்கிறேன். அவர் காட்டும் திசையிலேயே நான் பயணிக்கிறேன்

என் அப்பா ஒருநாள் மதுரையில் எஸ்..பியை சந்தித்து, என்னிடம் பேசுவதைவிட என் பையன் ராமகிருஷ்ணன் உங்களிடம்தான் அதிகமாகப் பேசுகிறான். நெருக்கமாக இருக்கிறான். இது எதனால் எனப் புரியலை தோழர் என கேள்வி கேட்டு அவரிடமிருந்து ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகப் பெற்று வந்திருக்கிறார்
எங்கள் கார் வாடிப்பட்டியில் நின்றது.

மனம் அவரிலிருந்து அகன்றுவர மறுத்தது,

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒரு வார்த்தையையாவது கந்தர்வன் எஸ்..பி.யைப் பற்றிச் சொல்லாமல் இருந்ததில்லை.

அவர்தான் பவா என் ஆசான். தொழிற்சங்க தைரியமெல்லாம் அவரோடு திரிந்த காலங்களில் பெற்றவையே

வெண் சரளைக் கற்கள் வெறுங்கால்களில் மிதிபட புதுக்கோட்டை மயானத்தை நடந்து அடைந்தோம். எங்கள் கந்தர்வனை எரியூட்டும்போது அவர் தன் ஆசானைப் பற்றிச் சொன்னதெல்லாம் என் காதில் எதிரொலிக்க, நான் அப்போது எங்கள் இருவருக்கும் பொதுவான ஆசான் எஸ்..பி.யின் கரங்களையே பற்றிக்கொண்டிருந்தேன்.

புராண குருக்களுக்குத்தான் சீடர்கள் துணிதுவைத்துப் போட வேண்டும். நல்ல கனிகொய்து கொண்டு வரவேண்டும். மடியில் தலைசாய்ந்து குரு உறங்குகையில் தொடையைத் துளைத்து வண்டு போனாலும் அசையாமல் இருக்க வேண்டும் இசை,

எங்களுக்கு அப்படியில்லை. எந்நிலையிலும் தோழமை மட்டுமே சௌகர்யம் கருதி உட்காரும் இடங்களில் உயர்வும், தாழ்வும் இருக்கலாம். ஒருபோதும் எங்கள் வாழ்வில் அதற்கு இடமில்லை. முப்பது வருடங்களுக்கும் மேலே தமிழ்நாடெங்கும் அலைந்து, திரிந்து பேசி வருகிற இப்போது B.K. என அழைக்கப்படும் பாரதி கிருஷ்ணகுமார் ஒரு காலத்தில் முகவை பாலாஜி என்றே அழைக்கப்பட்டார். ஒரே அளவிலான உயரம், உடல்வாகு, நடையென இவர்கள் ரத்த சம்மந்தமுள்ள சகோதரர்களோ என எதிர்பார்த்து ஏமாந்த ஆரம்பங்கள் எனக்குண்டு.

கிருஷ்ணகுமாரை ஒருநாள் கேட்டேன்.

சிறுவயதில் உங்கள் ஆதர்சம் யார் பி.கே?

அதென்ன சிறு வயதில்?

அவர் என்னைத் திரும்பிக் கேட்டார்.

இல்ல என் நண்பன் மிஷ்கின் சொல்கிறார், ஒவ்வொரு மனிதனுக்கும் பதின் வயதுகளில் ஒருவர் ஆதர்சமாக உருப்பெறுவதுண்டு. என் இருபதாவது வயதில் அப்படி நான் அடைத்த ஆளுமை கி.. சச்சிதானந்தன். அவர்தான் புத்தகங்கள் தந்து என்னைப் படிக்கச் சொன்னார். எதைப் படிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகத்திலிருந்து எதைப் படிக்கக் கூடாதென நானே முடிவு செய்தேன்.

பின்னிரவில் ஆரம்பித்து புலரும்வரை கவிதைகள் கேட்கவும், வாசிக்கவும் நான் சச்சியிடமிருந்தே கற்றேன். என் வாழ்வின் வெற்றியடைந்த நாட்களிலேயும், தோல்வியுற்ற கணங்களிலேயும் நான் திரும்பிப் பார்ப்பேன். என் தோள்களை ஆதூரமாகப் பற்றி நிற்கும் கை சச்சி சாருடையதுதான்.

என் நாற்பத்தைந்தாவது வயதில் இவரைப் போலவே இன்னொருவரைப் பார்த்தேன். அவர், எஸ்.வி.ஆர். எஸ்.வி.ஆருடன் எனக்கேற்பட்ட நெருக்கமும், பிரியமும், அவர் எழுத்தின் மீதேற்பட்ட மரியாதையும் எனக்கு ஒன்றை உணர்த்தியது. ஒரு மனிதனின் வாழ்வில் இரு வேறு ஆளுமைகள் உண்டு. ஒன்று அவன் சிறு வயதிலும், இன்னொன்று அவன் நாற்பது வயதைக் கடக்கையிலும்…’

இல்லை பவா, இதை நான் மறுக்கிறேன். என் இளமைக் காலத்தில் சாத்தூரில் ஏதோ ஒரு ரோட்டுக் கடையில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே தூரத்தில் நடந்த CPI (CM) பொதுக் கூட்டத்திலிருந்து அந்த உரையைக் கேட்டேன்.

ரசூல் கம்சதோவ் கவிதைகளையும், பாப்லோ நெருடாவின் ஒரு காதல் கவிதையையும் மேற்கோள் காட்டிப் பேசின அந்தப் பேச்சாளன் யாரென அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் சாப்பாட்டைப் பாதியிலேயே முடித்து மேடைக்கு மிக அருகே போனேன்.

என்னைப் போலவே இன்னொருவராக இருந்த அவர் தோழர் எஸ்..பி. என்று சொன்னார்கள். அந்நிமிடம் நான் அவரில் கலந்தேன். இன்னும் அவரே என் எல்லாச் செயல்பாடுகளிலும் எனக்கான ஆதர்சம். இன்றுவரை முதிர்வு என் ஆளுமையை மாற்றிவிடவில்லை. எனக்கு வார்த்தைகள் தடுமாறுகிறது பவா, ஆனாலும் வரிசைப் படுத்த முயல்கிறேன். என் இத்தனை வயதில் நீ யாருடைய தொடர்ச்சி என்றோ யார் உன் ஆளுமையென்றோ ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. அந்தரங்கம் மிகப் புனிதமானதுதான். ஆனால் பயனற்றது. இமயமலையில் உற்பத்தியாகிற எவர் கையும் பட்டுவிடாத அந்நீர் புனிதமானதுதான் பவா, ஆனால் நீ அதில் கைவைத்துதான் இன்று ஒரு கை நீரள்ளி அருந்துகிறாய் அம்மனிதனின் பெயர் எஸ்..பெருமாள். அவரை நினைக்கும் போதெல்லாம்,

உனக்கும் எனக்கும் எல்லா வகையிலும் சமத்துவம் இருக்கிறது.
விமர்சிக்கவும், பாராட்டிக் கொள்வதற்கும்  உரிமை இருக்கிறது
ஏற்றத்தாழ்வு ஒருபோதும் நமக்குள் இல்லை.
உட்காரும் இடத்தில் உயரமும், குறைவும் இருந்தாலும் கூட 
காட்டிக்கொடுத்தாலும் துரோகமும் ஒருபோதும் இல்லை
இரக்கமும், ஈரமும், கருணையும் மட்டுமே.
கற்றுக்கொடுக்கவும், உன்னிடமிருந்து
கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்..
எல்லா வகையிலும்
உன் உயர்வு ஒன்றுதான்
என் எண்ணம், விருப்பம் செயல்
உறுதியான இத்தனை
உறுதிமொழிகளுக்குப் பிறகும்
என்மீது  நம்பிக்கையில்லாது
நீ பிரிந்து போய்விடலாம்
எப்போது வேண்டுமானாலும்
பிரிவுக்குப் பின்னும் நமக்குள்  பகைமையில்லை.
தோழமை மட்டுமே.

இவ்வார்த்தைகளுக்கு  கை, கால்கள், வைத்து வரைய ஆரம்பித்தால் எஸ்..பி. என்கிற ஒரு ஆகிருதியைத் தவிர வேறு யாரும் உன்முன் எழ வாய்ப்பேயில்லை.

பாரதி கிருஷ்ணகுமாருக்கு அதன் பின் பேச என்னைப்போலவே சொற்கள் இல்லை.

நினைவின் நதியிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கை, நீரள்ளி குடித்துக்கொண்டே

நான் அவரோடு தெருவில் நடந்து போகும்போது அவதானிப்பேன். எல்லாத் தரப்பு மனிதர்களும் அவருக்கு வணக்கம் சொல்வார்கள்.

குற்றவாளிகள் என ஒரு ‘‘ஒழுக்கமான’’ சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்ட எல்லோருமே அவரை நேசித்தார்கள்.

தாஸ்தாவஸ்கியின் படைப்புகளில் வரும் பாத்திரங்களைப் போல,

விபச்சாரிகள், குற்றவாளிகள், ரிக்க்ஷாக்கார்கள், சுமை தூக்குபவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நாம் அடுக்கிக்கொண்டே போகமுடியும்.

அத்தனைப் பேருக்கும் அவர்தான் பிரியமான தோழர்.

ஜீவா இறந்துவிட்டார் என்பதையறிந்த  அவ்விநாடி சுந்தரராமசாமி கேட்டார்.

ஒரு மேடையில் மைக்முன் பேசிக் கொண்டிருக்கும் போதுதானே?

அப்படித்தான் எஸ்..பியைப் பற்றி ஒரு சித்திரம் எனக்குண்டு. ஒரு புரட்சியை வழிநடத்தும் தளபதியின் முன்னணிக் கால்களாய் அவருடைய கட் ஷீ போட்ட கால்களாக இருக்கக்கூடும்.

நானும் என் ஓட்டுநர் ரமேஷூம் 6/16, பைபாஸ் ரோடில், தெற்கு பார்த்த  இரும்புகேட் அருகே நிற்கும்போது மணி மாலை நான்கு.

நான் அந்த செக்யூரிட்டி தோழரிடம் கேட்கிறேன்.

‘‘தோழர் எஸ்..பி.யைப் பார்க்க வேண்டும்’’

‘‘தோழர் புறப்படுகிற நேரம். கொஞ்சம் காத்திருங்கள்’’

நான் சற்றுதூரம் போய் ஒரு பெட்டிக்கடை முன் நிழலில் நின்று கொள்கிறேன்.

வெள்ளை நிறத்தில் ஒரு பைஜாமாவும், அதே நிறத்தில் ஒரு நீண்ட ஜிப்பாவுமாய் அவர் ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நெடுஞ்சாலையேறுகிறார்.

நான் தூரத்திலிருந்து அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சைக்கிளும், அவரும் ஒரு புள்ளியாகி மறைகிறார்கள். அதன்பிறகே எனக்குப் பிடித்தமான பில்டர் கோல்ட் என் கைக்கு எட்டுகிறது.

‘‘போலாம் ரமேஷ்’’

‘‘இவரை தூரத்திலிருந்து பாக்கறதுக்காண்ணா இவ்ளோ தூரம் வந்த?’’

‘‘ம்’’

உன்னைப் புரிஞ்சிக்கவே முடியலண்ணா நான் அவன் தோள்மீது கைபதித்துக் கொண்டேன்.

ரமேஷ், ஆயிரம் மைல்கள் பயணித்து தாஜ்மகால் முன் நின்று ஒரு போட்டோ எடுத்துவிட்டுத் திரும்புவதில்லையா?

இமயமலை பனிச்சிகரத்தின் மீதேறி ஒரு கை நீரள்ளிக் குடித்துவிட்டு, நான் கங்கையைக் குடித்துவிட்டேன் என ஊரில் வந்து சொல்லிக் கொள்வதில்லையா?

அதற்கெல்லாம் என்ன அர்த்தம் ரமேஷ்?

அவன் என்னை ஏறெடுத்துப் பார்த்தான். அவன் கண்கள் புரியாமையால் தளும்பியிருந்தன.

அவர்களுக்கெல்லாம் தாஜ்மஹால் முன்னும், கங்கையின் முன்னும் நிற்கும்போது என்ன கிடைத்ததோ அதுதான் இம்மனிதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் எனக்குக் கிடைக்கிறது.


நன்றி
இம்மாத செம்மலர்No comments:

Post a Comment