Sunday, March 29, 2020

வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம் - அன்புராஜ்


ஒரு இருட்டத் துவங்கும் மாலையில், அந்தியூர் அடர்ந்த மூங்கில் காடுகளிடையில் நாங்கள் ஐம்பது பேர் கூடியிருந்தோம். வெகுதூரத்தில் காட்டு யானைகள் கடந்து போனதை சிலர் பார்த்ததாக சொன்னார்கள். மனித நெருக்கம் பயத்தை அறவே துடைத்தெறிந்து விடுகிறது. நான் கதை சொல்லப்போகும் பதட்டத்திலிருந்தேன். சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘பிரியாணி’ தொண்டைக்குள் இறங்காமல் தவித்துக் கொண்டிருந்த அத்தருணத்தில்தான், யாரோ அன்புராஜ் இப்போது பறவைகளோடு பேசுவார் என அறிவித்தார்.

ஒரு கல்லின் மீது வாகாக உட்கார்ந்து அன்புராஜ் என்ற அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதன் தன் இருகைகளையும் உதடுகளில் குவித்து ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையின் சத்தத்தை எழுப்பினார். பெரும்வனத்தின் அமைதி. காத்திருந்தோம். இரு நிமிட இடைவெளியில் அவர் எழுப்பிய அதே சத்தத்திற்கு  அதே போலொரு பறவையின் குரல் காற்றில் மிதந்து வந்தது. மனிதர்கள் ஆச்சரியத்தில் உறைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

நான் மௌனத்தால் உறைந்திருந்தேன். அடுத்த அரைமணிநேரம் ஏதேதோ பறவையின் குரலில் அன்புராஜ் அப்பெருவெளியில் பேசிக்கொண்டேயிருதார். எங்கிருந்தோ ஒவ்வொரு பறவையாக எங்களருகே வந்து கொண்டிருந்ததை ஒரு நிகழும் அற்புதத்தைப்போல நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்.  தூரத்து மரம் ஒன்றில் ஒரு புல்புல்தாரா வந்தமர்வதை நான் கவனித்தேன். ஒரு தேவதூதன் மாதிரி அக்கல்லில் உட்கார்ந்திருந்த அன்புராஜை பார்த்தேன். இவன் எப்படி பறவைகளோடு பேசுகிறான்? அவைகளை தன்னண்டை அழைக்கிறான். மனிதகுரலில் எப்படி பறவைகளின் குரலை அடைத்துக்கொள்கிறான்? வனத்தின் வாழ்வை முழுமையாக அருந்தமுடியாத ஒருவனுக்கு இவை சாத்தியமேயில்லை. நான் அன்புராஜை இப்படித்தான் அடைந்தேன். அல்லது ஒரு பறவையைப் போல அவனிடம் அடைக்கலமானேன்.

பதினைந்து வயதுள்ள பையனாக தன் அப்பாவின் சைக்கில் கேரியரில் உட்கார்ந்து அந்தியூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போய் திரும்புகையில்தான் சாலையோரத்தில் அக்காட்சியை  அவன் பார்க்கிறான். வெள்ளை துணி போர்த்தி மனித உடல்கள் சாலைக்கு கீழே கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நாற்பது ஐம்பது பேர் நிற்கிறார்கள் எல்லோர் முகங்களும் அச்சத்தால் வெளிறிப்போயிருக்கிறது. பெரும் மௌனம் ஒன்று யாரையும் கேட்காமலேயே அவர்களை சூழ்ந்து கொண்டது. சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த அப்பா, அவனிடம் கண்களை கைகளால் மூடிக்கொள்ளச் சொல்கிறார்.  கீழ்படிதலை அவன் மூடிய விரல்கள் மீறுகின்றன.  விரல்களின் வழியே அவன் அந்த உடல்களைப் பார்க்கிறான். அத்தனையும் இருபதுக்கும் இருபதைந்துக்கும் இடையில் உள்ள இளைஞர்களின் உடல்கள். சைக்கிள் வேகம் கூடுகிறது. எல்லாம் மொழுக்கன் கோஷ்டி பையன்கள். நேற்றிரவு போலீஸ் சுட்டது. அப்போது வீரப்பனை மொழுக்கன் என்றுதான் அக்கிராமங்களுக்கு தெரியும்.

அன்றிரவு அப்பையனின் தூக்கத்தை, அந்த இளைஞர்களின் வெள்ளைத்துணிப் போர்த்திய உடல்கள் பிடுங்குகின்றன. அவன் விடியும்வரை மோட்டுவளையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான். விடிந்ததும் அந்த உடல்கள் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு போகிறான். எந்த தடயமும் அங்கில்லை. அடையாளங்கள் அழிக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து தன் கிராமத்தை அவதானிக்கிறான். அச்சத்தால் அடங்கியிருந்த அக்கிராமத்து மனிதர்கள் தங்கள் வயித்துப்பாட்டிற்கு ஒரு மாடுகளோடு பக்கத்திலிருக்கும் மலைக்காடுகளுக்கு போகிறார்கள்.

அப்பையனுக்கு தன் பள்ளிக்கூடம் குமட்டுகிறது. இதன் எந்த சுவடுமின்றி ஒழுக்கம் போதிக்கும் ஆசிரியர்கள் அன்னியப்படுகிறார்கள். தன் பெரியப்பா மகனோடு இதுபற்றி பேசுகிறான். ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு மலைக்கு போனால் வீரப்பனை பார்த்துவிடலாம் என அவர்கள் இருவரும் ஒரு ஓடைக்கரையிலிருந்து பேசுகிறார்கள். அப்படியே நிறைவேற்றுகிறார்கள். மனதில் சில லட்சியங்கள் பறந்துவிடும் போது அதன் நிறைவேறல் மிகச் சுலபம்.

பல நாட்களின் காத்திருப்பில் அவர்கள் ஒரு நாள் வீரப்பன் குழுவினரை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அக்குழுவில் வீரப்பனில்லை. அவர்களின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு ஒரு ஓடைமரத்து நிழலில் எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருந்த வீரப்பன் முன் நிறுத்தப்படுகிறார்கள். எல்லாவற்றையும் சந்தேகி. சந்தேகம் இருபக்கமும் நிழலாடுகிறது. மனம் புரிந்த போது கைகட்டுகள் அவிழ்க்கப்படுகிறது. காட்டிறைச்சியோடு அவர்களிருவருக்கும் சோறு தரப்படுகிறது. உணவு பரிமாற்றம் மனிதனை தன் சகமனிதனிடம் வசமிழக்கவைக்கும். அவர்கள் வசமிழந்தார்கள்.

வீரப்பனின் நம்பிக்கைகுரிய தோழளானான் அன்பு. அவனிடம் ஒரு நாட்டுத்துப்பாக்கி தரப்பட்டது. பெரியப்பா பையனுக்கு முகத்திம் வாட்டம் இருந்தது.  இவன் பேச்சை கேட்டு இப்படி வந்து காட்டுக்குள் மாட்டிக்கொண்டோமே என்ற வாட்டம் அது. அன்புவின் கனவொன்றின் நிறைவேறல். அவன் உள்ளுக்குள் துள்ளினான். ஒரு பெரும் சாகசம் செய்யப் போகிறோம் என்ற துள்ளல் அது. வீரப்பனோடு சேர்ந்து பல மைல்கள் காடுகளில் நடக்கத துவங்கி, தன் கால்களை உரமேற்றிக் கொண்டான். விசையின் லாவகத்தை அவன் விரலகள் சுலபமாக கற்றுக்கொண்டன. சிறு வேட்டையாடுவது, உளவு பார்ப்பது, சமைப்பது, தூங்க இடம் பார்ப்பது என அவன் நாட்கள் சுவாரசியமிக்கதாய் மாறியிருந்தது. ஆனால் மனம் ஒரு சாகத்திற்கு ஏங்கியது. சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த ஆறு இளைஞர்களின் போர்த்தப்பட்ட உடல்கள் அடிக்கடி ஞாபகத்திற்கு வந்தது.

வீரப்பனின் பல குணங்கள் அவனை ஒத்திருந்தது. சிலவற்றை அவனால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. ஒரு வனவிலங்கைப்போல காட்டில் அலையும் வீரப்ப்பனிடமும் சாதிய வன்மம் இருந்தது. போர்க்களங்களும் சாதியை அடைகாக்குமெனில் யாருக்கான சமர் இது?. மெல்ல ஒரு நாள் நிலவிரவில் இது பற்றி வீரப்ப்பனிடம் பேசினான். நாம் சாப்பிடும் தட்டுக்களில் சாதி நிறைந்திருக்கிறது என்பதை அவன் அருவருப்போடு அக்குழுவிற்கு சொன்னான். அச்சிறு பையனின் சொல்லின் வன்மை, அவர்களை அதை கைவிட வைத்தது. அவனின் புத்திக் கூர்மையை வீரப்பன் வியந்து அவனை தன்னுடனே இருக்கச் செய்தது.

அது இருட்டத்துவங்குகிற பின்மாலை. ஒரு சிறுமலையின் கீழ் இரவு உணவுக்கு அடுப்பு மூட்டும் மும்முரத்திலிருக்கிறார்கள். வீரப்பன் குரல் பதட்டமாக அலறுகிறது. “டேய் ஆணைடா… ஆணைடா…என பதறுகிறார். துப்பாக்கிகள் அவசரமாக கைகளுக்கு மாறுகின்றன. மலை ஒன்றிலிருந்து அந்த யானை தறிகெட்டு ஓடி வருகிறது. வேறுவழியே இல்லையா என அவர்கள் யோசிப்பதற்குள் அது அவர்களை சமீபித்துவிடுகிறது. வீரப்பந்தான் சுடுகிறார். சரியாக மத்தகத்தின் மீது குண்டு பாய்கிறது. அது சில அடிகள் ஓடு விழுகிறது. எல்லோரும் போய் பார்க்கிறார்கள். அது தந்தங்களும் தும்பிக்கையும் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு யானை. அன்பு சொல்கிறார். அதன் உடலில் எண்பதுக்கும் மேலான புல்லட் தாக்குதல்கள் இருந்தன. நாங்கள் சுடவில்லையெனினும் அது தானகவே செத்திருக்கும். வனத்தில் யானை வேட்டையாடிய அத்தனை மனித மிருகங்கள் உலாத்திக் கொண்டிருந்தன.

ஒரு இரவுணவுக்குப் பின்னான சத்தமில்லாத உரையாடலில் வீரப்பன், ஒரு கடத்தலுக்கான வியூகத்தைச் சொன்னார். அன்புவின் சாகச மனம் துள்ளியது. இதுதான் அவன் ஆசைப்பட்ட வாழ்வு. இதற்காகத்தான் காத்திருந்தது. இதற்காகத்தான் எப்போதும் சைக்கிள் கேரியரில் ஏற்றித்திரியும் அப்பாவை, தனக்கென பிரத்யேக அன்பு சுரக்கும் அம்மாவின் கைகளை கூட அவன் மறந்தது.

அது ஒரு பெரு மழை நாள். அடர்காட்டின் பெருமழையை அதனுள் நின்று வாழ்வில் ஒருமுறை ஒரு மனிதன் அடைந்துவிட வேண்டும். அது ஒரு பாக்கியம். இயற்கையின் கோரத்தாண்டவத்தை வன விலங்குகளின் ஆர்ப்பரிப்பை, மரங்களின் ஆரவாரத்தை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம். அன்புவுக்கு அது வாய்த்தது. அவனுக்குள் வன ரத்தம் ஓடுவதாகவே அவன் தன்னை உணரத்துவங்கிய ஆரம்ப நாட்கள் அவை. இருட்டில் பழகிய வழிதடத்தில் அவர்கள் நின்றது வனத்துக்கு நடுவே தனித்திருந்த ஒரு வீட்டின் முன்னால். வீரப்பனிடம் அவ்வீட்டின் வரைபடமும் அவ்வீட்டிற்குள் இருக்கும் இருவரின் புகைப்படங்களுமிருந்தன. மழைச்சத்தை மீறி சேத்துக்குளி தன் துப்பாக்கி கட்டையால் அவ்வீட்டின் கதவுகளை தட்டினார். சில தட்டல்களுக்கு பின் கதவு திறந்தது. எதற்கும் தாமதிக்காமல் இவர்கள் ஆறேழுபேரும் வீட்டிற்குள் நுழைந்து உள்தாழிட்டார்கள். அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் பதட்டமாகி உடனே பதட்டம் தனிந்து அவர்களை எதிர்கொண்டார்கள். வெகுநாட்கள் காத்திருந்து எதிர்கொள்ளும் மனதுக்குப் பிடித்தமான விருந்தினரை உபசரிப்பது மாதிரி கிருபாகரன், சோனானி என்கிற அந்த உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள் அவர்களை வரவேற்றார்கள்.

மழைக்கு இதமாக சுடச்சுட தேநீர் தயாரித்து ஒரு ட்ரேவில் வைத்து அவர்களுக்கு அதை தந்தார்கள். ஒருவரும் அந்த தேநீர் கோப்பையை கையில் எடுக்கவில்லை. மௌனம் அந்த அறையை அடைகாத்து வெளியில் பெய்யும் பெருமழையின் ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சூழலை ஒரே நிமிடத்தில் அவதானித்த கிருபாகரன் எல்லாக் கோப்பை தேநீரையும் ஒரு மிடறுகுடித்து விட்டு வைத்தார். இறுகிய வீரப்பன் முகத்தில் இப்போது லேசாக புன்னகை துளிர்ப்பதை அன்பு அருகிலிருந்து கவனித்தான். ஒரு கையில் லோட்டா துப்பாக்கியோடு இன்னொரு கையில் அவர்கள் டீக்குடித்தார்கள். வீரப்பனை அவர்கள் உட்காரச் சொன்னார்கள். அவர் அச்சொற்களை இடைமறிந்த்து, இல்ல, உட்கார வரலை. கடத்த வந்திருக்கோம். பொறப்படுங்க என குரலில் கடுமையைக் கூட்டினார். சில நிமிடங்களில் அவர்கள் தோல்பைகளோடு புறப்படத தயாரானார்கள். சோனானி இப்போது பேச ஆரம்பித்தார். ”வீரப்பண்ணா, நாங்க உங்க கூட வர்றதுல எங்களுக்கு எந்த மனத்தடையுமில்லை, ஆனா எதோ தவறான தகவல் உங்களுக்கு வந்திருக்கு. நாங்க அவ்வளவு வொர்த் இல்ல. எங்களை பணயம் வச்சி உங்களால எதையும் கர்நாடக கவர்மெண்ட்ல அடைய முடியாது.” அத நான் பாத்துக்கறேன், நீங்க பொறப்படுங்க என்று அதே கடுமையில் வீரப்பன் பேசினார்.

அந்த அடர்மழையில் நனைந்து கொண்டே, வழி தெரியாத கும்மிருட்டில் அவர்கள் ஒன்பதுபேரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். முதலில் வீரப்பனும், அடுத்து கிருபாவும், அதற்கடுத்து அன்புமான அவ்வரிசையில் சோனானி கடையில் சோத்துக்குளி முன் நடந்தார். அவர்கள் போய்கொண்டேயிருந்தார்கள். மழை பெய்துகொண்டே இருந்தது. வனம் அவர்களுக்கான வழியை மட்டும் விட்டு விலகியிருந்தது. ஒரு கடத்தல் காவியம் மாதிரி நடந்ததாக அன்பு அன்பு என்னிடம் அந்நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

இருபது மைல் நடைக்குபின் அவர்கள் நனைந்து போயிருந்தார்கள். நடை தானகவே நின்று கொண்டது. ஒரு மூடாப்பு பாறையின் அடியில் அவர்கள் குந்திக் கொண்ட சில நாழிக்கையில் பொழுது விடிந்தது. தங்கள் புகைப்படங்களுக்காக கிரீன் ஆஸ்கார் விருது பெற்ற அந்த இளைஞர்கள் இருவரும் அடிமைகளைப் போல அவர்கள் முன் அமர்ந்திருந்தார்கள். கண்கள் அவர்களின் கட்டளைக்காக காத்திருந்தன. காலை உணவிற்காக அன்புதான் ஒரு மிளாவை முறிபார்த்தார். ஒரு சேர அவர்களிருவரும் அதை தடுத்தார்கள். வன உயிரினங்கள் மனித உயிர்களைவிட மேலானது என்பது அவர்களின் கைவழியில் அன்புவிற்கு உணர்த்தப்பட்டது. அதையும் மீறி அன்புவின் விரல்கள் விசையை அழுத்தியது. தூரத்தில் மிளா ஒரு துள்ளு துள்ளி சரிந்தது. அவர்களிருவரும் அச்சத்துடன் விலகிவிட, வீரப்பன் தவிர்த்து குழு மிளாவின் திசைக்கு நகர்ந்தது. வேட்டை, உணவு, இரக்கம் எல்லாம் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். உனக்கு பாவமெனப் படும் இதுதான் என் மூதாதையர்கள் காலம் முதல் என் உணவு என்ற பெருமிதத்தோடு அன்பு ஒரு கத்தியோடு மிளாவை நோக்கி நடந்ததை அவர்களிருவரும் ஈரப்பாறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். பயம்படிந்த அந்த முகங்கள் அவர்கள் யார் மனதையும் பற்றவில்லை. அவர்கள் தங்களுக்குள் இறுகியிருந்தார்கள். அவர்களுக்கு சைவ உணவும் இவர்களுக்கு மிளகு கறியும் சமைத்து தரப்பட்டது.வீரப்பன் சகஜமாக அவர்களிடம் கன்னடத்தில் உரையாடினார். அவர்களின் இருப்பை இடம் மாற்றிக் கொண்டே இருந்தார்.

பதிமூன்று நாட்கள் வன அலைக்கழிப்பில் அவர்களிருவரும் இவர்களாக  மாறியிருந்தார்கள். இறுதியில் அவர்களை எப்படியும் விடுவித்துவிட வேண்டுமென்பதில் வீரப்பன் உறுதியாயிருந்தார். அவர்களை பிரிய மனமின்றி வீரப்பன் எதிர்த்திசையில் திரும்பி உட்கார்ந்துகொண்டார். அவர்கள் இருப்பு இனி இங்கில்லை என்றபோது வீரப்பன் தன் குழுவினரோடு உடைந்த குரலில் பேசினார்.

  “என்னா மனுசங்கடா இவனுங்க, அப்பன் முன்னாடி புள்ளைய போட்டு இருக்கேன், கட்னவ முன்னாடி புருசன அடிச்சிருக்கேன். கண்ணு மூடிட்டு ஒரு மூலைக்கா போயி தங்களை காப்பாத்திற்கிற மனுசங்களதான் பாத்துருக்கேன். ஆனா இவனுங்க ரெண்டு பேரும் தனித்தனியா எங்கிட்ட வந்து, 

உங்களுக்கு எங்க ரெண்டு பேர்ல யாரையாவது ஒருத்தரை கொன்னாதான் உங்க கோரிக்கை நிறைவேறுமுன்னா என்ன கொன்னுருங்கண்ணு சொல்லுறாணுங்க… இவனுங்களோட நட்பு என்ன நெலகுலைய வச்சிருச்சு

என அன்பு வீரப்பனை விட்டு பிரியும் வரை அவர் அனத்திக் கொண்டிருந்ததாக அன்பு என்னிடம் சொன்னார்.

வனத்தில் நடத்தல் மட்டுமே அவர்களை எல்லாவற்றிலுமிருந்து காப்பாற்றியது. இருப்பை மாற்றிக்கொண்டேயிருப்பது. தடயங்களை அழிப்பது. தற்காலிக வாழ்விடங்களை சில மணி நேரத்திலே கடந்துவிடுவது. அப்படி ஒரு மாலை நடத்தலின் போது, முன்னாள் நடந்த அன்புவின் தோள்களைப் பிடித்து வீரப்பன் பின்னுக்கு இழுக்கிறார். நிலைதடுமாறி விழப்போனவனை தாங்கிப்பிடித்துக் கொண்டு, கண்களாள் பாதையை அவதானிக்கச் சொல்கிறார். பூமி பத்தடிக்கு மேலாக லேசாக பிளந்தது போல இருந்தது. அதன் விளிம்பில் ஒரு மலைப்பாம்பு தலைமட்டும் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. குலை நடுங்குகிறது அன்புவுக்கு. வீரப்பன் நிதானமாக சில அடிகள் பின்வாங்கி வேறு பாதையில் நடக்கிறார். வனப்பரப்பை வீரப்பன் அறிந்து வைத்திருந்தது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்று அன்பு அந்நிகழ்வை எப்போதும் காட்சிப்படுத்துவார்.

அதுவும் மழைபெய்து முடிந்திருந்த ஒரு மாலைதான். வீரப்பன் வேறொரு மனநிலையில் இருந்தார். அன்புவை இன்னும் நெருங்கிவரச் சொல்லி தோள் மீது கைப்போட்டுக் கொண்டார். வாஞ்சையாக உடல் உணர்ந்தது. “அன்பு இன்னும் எம்மாம்நாளைக்கோ இப்படியே காட்ல கெடக்றேது. நாலு மக்க மனுசாளோட இருந்து சாவோம்டா, என்ன ஆனாலும் செரி… நீயும் உன் பெரியப்பா பையனும் மொதல்ல சரண் அடைஞ்சிருங்க. உங்கள கெவெர்மெண்ட் எப்படி நடத்துதுன்னு பாத்துட்டு நாங்களும் சரண் அடைஞ்சிற்றோம். செஞ்ச பாவத்துக்கு தண்டனையை அனுபவசிட்டு கொஞ்சகாலம் ஊர்ல இருந்து செத்துடுவோம்டா.

அன்புவால் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. தலைகவிழ்த்து மரக்குச்சியால் ஈரத்தரையில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தான். அப்போதைய மனநிலையில் வீரப்பன் எதைச் சொன்னாலும் செய்யும் ஒரு இயந்திரத்தைப் போலதான் அன்பு இருந்தான். அவர்கள் சொன்ன ஒரு நாளில் இருவரும் சரணடைந்தார்கள். தனக்கென வைத்திருந்த துப்பாக்கியை கைமாற்றித் தந்தான். தன் வனத்தை ஒரு முறை திரும்பி பார்க்க கூட திராணியற்று நடந்தவர்கள் அவர்கள் இருவரும். வனத்துக்குள் இப்படித்தான் மூன்று வருடத்திற்கு முன் போனார்கள். இப்போது அது அவர்களை திருப்பியனுப்புகிறது. அரசு, அதிகாரம், போலீஸ், உளவுத்துறை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாரமாக அந்த இளைஞர்களை குதறியது. ஏதோ ஒரு பெரும் நம்பிக்கையில் இருந்த வீரப்பனின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிராக இருந்தது  எல்லாமும். சந்திக்கிற எல்லா மனிதர்களும் ஈரமற்று இருந்தார்கள். போலீஸ் ஸ்டேசன், விசாரணை, காக்கிச் சட்டைகள், அடி, குதறல் என்று அவர்கள் இருவரும் விலங்குகளைப் போல குதறப்பட்டார்கள்.



அப்போது அன்புக்கு இருபது வயதுதான் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற மனவலிமையை அந்த காலம், அதிலிருந்த அவன் தோழர்களும் அவனுக்கு உரமேற்றியிருந்தார்கள். நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் ஆயுள்வரை சிறைதந்தது. தன் கடைசி மூச்சை அவர்களிருவரும் சிறைக்கொட்டடியிலேயே விட வேண்டும் என ஒரு நீதிபதியின் விரல்கள் தீர்ப்பெழுதியது. ஒரு சாகசத்திற்காக துள்ளிய மனம் துவண்டு விழுந்தது. பெரியப்பா மகனின் முகத்தைப் பார்க்க திராணியில்லை.

அவர்கள் இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையிரவுகள் அவனை ஆழமாக யோசிக்க வைத்தது. எது சரி? எது தவறு? என அவனுக்குள்ளாக பெரும் விவாதங்கள் நடந்தன. சாகசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? என்ற கேள்வியோடு அவ்விவாதம் ஒரு நிறைவுக்கு வந்தது. அவன் தன்னை பேச்சற்றவனாக ஆக்கிக் கொண்டான். சிறையில் ஏதோ ஒரு தொலைபேசி வழியே வீரப்பன் அவனோடு பேச வேண்டும் என்ற கோரிக்கையை அவன் நிராகரித்தான். அந்த வனவாழ்வு இனி நினைவில் மட்டுமே. மீதியிருக்கிற நாட்களைப் பற்றி ஒரு பெருங்கனவு ஒன்று துளிர்த்தது. அந்தியூர் விவசாய வாழ்க்கை, பிடிக்காத பள்ளிக்கூட வாழ்க்கை, விரும்பி ஏற்ற வன வாழ்க்கை இதன் கலவையான மனநிலையில் அவன் தூக்கமின்றி உழன்றான். பெரியப்பா மகன் திகிலுக்கு, மனப்பிறழ்வுக்கு ஆளாவானோ என இறுகிய முகத்தோடு அமைதி காத்தான். சேலம் ஜெயில் அவர்களுக்கு இன்னொரு வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. குற்றவாளிகள் அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்கள், நிரபராதிகள், சிறைக்காவலர்கள் என்ற பெயரில் உலாத்திய பெரும் குற்றவாளிகள் என இதுவரை தான் பழகிய மனிதர்களின் இருப்பு இருவேறு மனநிலைகளை அன்புவிற்க்குக் கொடுத்தது.

சேலம் சிறைக்கொட்டடியில் கழிப்பறை கேட்டு அன்பு நடத்திய போராட்டத்திற்கு சகல விதங்களிலும் அந்த இளைஞன் குதறப்பட்டார். அவன் உறுதியைக் குலைக்க வேண்டி, சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கொட்டடியில் அவன் அடைக்கப்பட்டான். தன் எல்லா மன உறுதியும் தளர்ந்த நாட்கள் அவை என அன்பு அந்த நாட்களை நினைவுகூர்கிறார். அவர்களை குளிக்க வைப்பது, முறதபட்டி விடுவது, அவர்களின் மலம் அள்ளிப் போடுவது, தரையைக் கழுவுவத் என தன் தொடர் வேலைகளில் அந்த மனத்தளர்வை மீட்டுவிட முயன்றுகொண்டிருந்தார் அன்பு. கம்பிகளுக்கு வெளியே ஒரு ஜெயிலருக்கும், கம்பிகளுக்கு உள்ளே அன்புவுக்கும் நடந்த ஒரு தடித்த வாக்குவாதத்தில் அவன் லாக்கைப்பை திறந்து அன்புவை வெளியே இழுத்துப்போட்டு நாயடிப்பது மாதிரி அடிக்கிறான். உள்ளேயிருந்து ஒரு குரல் கதறுகிறது.

எங்க பெத்தண்ணாவ அடிக்காதீங்கடா… அடிக்காத…

யாருடைய குரல் என்பது அன்புக்கு தெரியும். அது கணேஷ் என்கிற வெங்கடேஷின் குரல். தெலுங்குப் பையன். ஓசூரில் வசிப்பிடம். அன்பு மீது அதீத பற்றுடையவன். துவைத்து கொட்டடிகளுக்குள்ளே வீசப்படுகிறான் அன்பு. உறை மௌனம் அந்த இரவெல்லாம் நீடிக்கிறது. அவர்கள் யாரும் யாரோடும் பேசிக் கொள்ளாமல் அவனுக்கு மரியாதை செய்கிறார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் நடக்கிறது. அது ஒரு மகாராஜாவின் தரிசனத்தைப் போன்றது. படைப்பரிவாரங்கள் சூழ்ந்துவர தன் சிறை இராஜ்ஜியத்தை பார்வையிட மன்னர் வருவார். மன்னர் மீது தான் கரைத்து வைத்திருந்த மலத்தை வீசினான் வெங்கடேஷ். அணிவகுப்பு மைதானமே போர்க்களமானது. சிறைக்காவலர்கள் விலங்குகளைப் போல அவர்களைக் குதறினார்கள். இது நடந்த மூன்றாம் நாள் வெயிலில் காய வெளியே வரவில்லை என வெங்கடேஷின் அறைமுன்னே அன்பு நின்றபோது, வெங்கடேஷ் தரையில் நிர்வாணமாக மல்லாந்திருந்தான். ஆயிரக்கணக்கான எறும்புகள் அவன்மீது மொய்திருந்தன. அவன் கண்களை எறும்புகள் குதறியிருந்தன. வெங்கடேஷ் என அன்பு பெருங்குரலெடுத்து கத்த, சின்னப்பு என்ற ஒரு ஜெயிலர் ஓடிவந்து அறைக் கதவைத் திறந்து வெங்கடேஷை தூக்கி,

ஒண்ணுமில்லடா, குளிர்தான்… சரியாயிடுவ… சரியாயிடுவ… என பிணத்திடம் நடித்தான். அவன் HIV-யிலும் TB-யிலும் இறந்ததாக பத்திரிக்கை செய்தி வந்தது.அன்பு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அடுத்தகட்ட அதிகார மீறலுக்குத் தயாரானான். அன்பு முதன்முதலில் ஒரு கவிதை எழுதினான். அதன் தலைப்பு,
அவர்கள் அவ்வப்போது பிணங்களோடு பேசுவார்கள்.

மனித வாழ்வில் எந்த இடத்திலும் எந்த காலத்திலும் ஏதோ ஒன்றோ அல்லது யாரோ ஒருவரோ உங்களை முழுக்க முழுக்க புரட்டிப்போட்டுகிற, இதுவரை நீங்கள் வாழ்ந்தாக நம்பிய வாழ்வை கேட்பார்கள். சேலம் சிறையில் நெடுஞ்செழியன் என்ற வாத்தியாரும், அழித்தொழிப்பு இயக்கத்திலிருந்து உள்ளேயிருந்த தோழர் தங்கவேலுவும் அன்பு அதுவரை கடந்த வாழ்வை கேள்விக்குள்ளாக்கினார்கள். வெளியிலிருந்து சிறைக்கைதிகளுக்கு பாடம் எடுக்க வருகைதந்த நெடுஞ்செழியன் வாத்தியார் தினம் ஒரு புத்தகத்தை தன் ஜட்டியில் கடத்திக் கொண்டு வருவார். பெரியதாக இருந்தால் பிரித்து இரு நாட்களாய் கொண்டுவருவார் அன்புவை நேரடி அரசியல் வாசிப்புக்கு அவர்தான் உட்படுத்தினார். தோழர் தங்கவேல் மார்க்சிய வகுப்புகள் எடுத்து அவர்களை உரமேற்றினார்கள். இதில் எதிலும் மனம் சாயாமல் வீடு, ஊர், அப்பா, அம்மா, மாடு, கன்று என அதன் நினைவுகளிலேயே பெரியப்பா மகன் தவித்துக் கொண்டிருந்தான். அன்பு ஒரு சேர மார்க்சியத்தையும் இலக்கியத்தையும் பயில ஆரம்பித்தான். மனதில் படியும்  பக்கங்கள் எப்போதுமே சிறைக்காவலர்களால் அறிய முடியாதது. அந்தியூர் காடுகளிலிருந்து மாஸ்கோவின் பனிபடர்ந்த வீதிகள் வரை அன்பு உலாத்தினான். இந்திய ஏழ்மைக்கும் வறுமைக்கும் உண்மையான காரணங்களை அச்சிவப்பு புத்தகங்களும், தோழர் தங்கவேலுவின் வகுப்புகளும் அவனுக்கு தெளிவுபடுத்தின.

சிறையில் எதற்கெடுத்தாலும் கோபப்படும் பெரும் முன்கோபக்காரனாக அவன் இருந்ததை நெடுஞ்செழியன் தணித்தார். காத்திருத்தலும், திட்டமிடலுமே இதற்கான நிரந்தர தீர்வைத் தரமுடியும் அதிகாரம் தரும் குரலாக பாட்டாளியின் குரல் மாற வேண்டும் என்ற கொள்கையில் அவர் இறுகியிருந்தார். அதன்பின் சேலம் சிறையில் அன்பு நடத்திய போராட்டங்கள், அர்த்தம் நிறைந்த தோற்றுப் போகாத போராட்டங்கள். ஒரே அறையில் படுப்பதும் சட்டியில் மலம் கழித்து அடுத்த நாள் அதை தாங்களே வெளியே தூக்கிப் போய் வீசுவதையும் அவன் தலைமையில் ஒருங்கிணைந்த கைதிகள் மூர்க்கமாக எதிர்த்தார்கள். அடி, உதை, தனிமைச் சிறை என்று எல்லாம் தண்டனைகளும் அவர்கள் முன் மண்டியிட்டன. இறுதியில் அவர்கள் வென்றார்கள் அறைகளுக்குள் பீங்கான் பேரள்கள் பொருத்தப்பட்டன. தனிமையில் அன்பு அந்த இரு ஆசான்களையும் நன்றியுடன் நினைத்துக் கொண்டான். வீரப்பன் நினைவுகள் தன்னை விட்டு முற்றிலும் அகன்றிருந்ததை அவன் உணர ஆரம்பித்தான். ஆனாலும் அரசு அவனை குறிவைத்திருந்தது. அவனை மனித புள்ளியாகி கவனப்பற்றியிருந்தது.


சேலம் சிறை வாழ்வை முறித்துக்கொண்டு அன்பு மைசூர் சிறைக்கு மாற்றப்பட்டான். முற்றிலும் புதிய மொழி தெரியாத மனிதர்கள். தமிழன் மீது கூடுதல் வன்மம். சேலத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் அந்தியூர் என மனம் நம்பியிருந்த ஆன்ம பலத்தை அது குறைத்தது. மனரீதியான சோர்வு அவனை சூழ ஆரம்பித்தபோது உடனே சுதாரித்துக் கொண்டான். தான் தனக்கானவன் அல்ல. தனக்கு குடும்பம் என்ற அமைப்பு இல்லை. இன்னும் வாழும் நாட்களையெல்லாம் சகமனிதன் மேம்பாட்டிற்கும் சமூகத்திற்கும் வாழ்ந்துவிட்டு அவர்கள் சொன்ன மாதிரியே கடைசி மூச்சை இந்த மைசூர் ஜெயில்கொட்டடியில் விடுவது என அவன் உள்ளுக்குள் உறுதிப்பட்டிருந்தான். சேலத்தில் தன் ஆசான்கள் நெடுஞ்செழியனும், தங்கவேலுவும் கற்றுத்தந்த எவ்வளவு அடியையும் வாங்கிக் கொள்ளுதல், அடிபணியாது இருத்தல், நிராகரித்தது மறுத்தல் இவைகளை மிச்சமிருக்கும் வாழ்வின் தாரக மந்திரங்களாக தனக்குள் வகுத்துக்கொண்டான். சக கைதிகளின் கதை கேட்க, வலி உணர, நியாயம் கேட்க மொழி அவனுக்கு ஒரு தடையாக இல்லை.

இப்போது அன்பு கன்னடமும் கற்றுக் கொண்டிருந்தார். இலக்கிய படைப்புகளில் வேறெந்த வடிவத்தைவிடவும் நாடகமாக்கங்கள் அவனை வசீகரித்திருந்தன. குறிப்பாக கிரிஷ் கர்னாடு. நம் மரபான கதைகளை அவர் நவீனபடுத்தியிருந்த ஆக்கங்களை அவன் வெறி கொண்டு வாசித்தான். தான் ஒரு அரங்க கலைஞனாக ஆவது என்று அவன் தனிமைச் சிறையில் இருந்த சிறுஅறையில் இருந்து முடிவெடுத்தான். கலைஞர்கள் எங்கிருந்தும் உருவாவார்கள். அவர்களை கடவுள் கூட தடுத்து விட முடியாது. அன்பு ஒரு அரங்கக் குழுவை சிறைக்கைதிகளை ஒன்றிணைத்து உருவாக்கினான். மனம் வேறு ஒன்றில் சாய்ந்து கொண்டது. அவனின் கடந்த கால வலிகளை அது உறிஞ்சி எடுத்தது. அவன் வெறி கொண்டு இயங்கினான். ஒரு நாளைக்கு இருபத்திநாலு மணி நேரம் என்பது நாற்பத்துஎட்டு மணி நேரம் என நீண்டு விடாதா என ஏங்கினான்.


மைசூர் சிறை அதிகாரிகளுக்கு அன்பு ஒரு தமிழன் என்பதை மீறி அவன் அறிவு வசீகரித்தது. கடிதங்களை சென்சார் செய்யும் பிரிவுக்கு அவன் பணிக்கப்படுகிறான். அங்கு அவன் படித்த கடித நினைவுகளை எழுத்தில் கொண்டுவர முடிந்தாலே அது ஒரு மக்கள் காவியம்’.  அப்பாவை பிரிந்த மகன், மகனை கொன்ற அப்பா, காதலுக்காக மகனை கொன்ற அம்மா, எந்த எதிர்பார்ப்பும் இன்றி இரண்டு அப்பாவிகளை கொலை செய்த அந்த கவுடா, எந்த குற்றமும் செய்யாமல் ஆயுள்பெற்ற பலபேர் அவர்களுக்காக எழுதப்பட்ட கடிதங்கள், அவர்கள் எழுதிய கடிதங்கள் என எழுத்தில் வாழும் வாழ்வை அன்புவுக்கு மைசூர் சிறைத் தந்தது. மைசூர் சிறையிலிருந்து போலீஸ் லாக்கப்பிற்கு தான் விசாரணைக்கான கொண்டு போகப்பட்ட ஒரு அதிகாலையை அன்பு தன் முகத்தில் எந்த பதட்டமும் இன்றி நினைவு கூர்கிறார்.

 போலீஸ் வேன். எங்கெங்கோ சுற்றுகிறது. வழி நெடுக அடி விழுகிறது. என் கண்கள் வண்டி எங்கு அலைகிறது என்பதை அதன் மேடு பள்ளங்கள் எனக்கு உணர்த்தியது. இரவு எட்டு மணிக்கு வண்டி நிற்கிறது. ஒரு நிமிடம் என் கண்களுக்கு பார்க்க அனுமதி கிடைக்கிறது. சுற்றிலும் மலை. கேட்பாரற்ற வனாந்தரம் அது. அந்த இடமே ஒரு மனிதன் மரணத்திற்கு போதுமான சூழல். மீண்டும் கண்கள் கட்டப்படுகிறது. ‘ஏதாவது வேணுமா? என ஒரு கர்நாடக காக்கியின் குரல் வந்து ஒலிக்கிறது.

 இல்ல வேணாம்.

மண்டியிட்டு தரையில் அமர்த்தப்படுகிறார் அன்பு. கைகள் பின்புறம் கட்டப்படுகிறது. ஆணைகளுக்கு மறு; நிராகரி; எதிர்த்து நில் என்ற நெடுஞ்செழியன் வாத்தியாரின் குரல் ஒலிக்கிறது. அவன் திமுறுகிறான். துப்பாக்கி கட்டையின் பின்புறமிருந்து அடி விழுகிறது. அதிகாரியின் வாக்கிடாக்கி ஒலிக்கிறது. அன்புவுக்கு கேட்காதவாறு தூர நின்று அந்த அதிகாரி உத்தரவுகளை கேட்கிறான். மிகுந்த வெறுப்போடு திரும்பி வந்து அவனை பின்புறமிருந்து எட்டி உதைக்கிறான். தேவ்டியா மவனே என கன்னடத்தில் திட்டுகிறான். கண்கட்டும் கைக்கட்டும் தெறிக்கின்றன. அவனை மீண்டும் வண்டியில் ஏற்றுகிறார்கள். வழியில் அந்த அதிகாரியை ஆறேழு முறை சோனானி என்ற பெயரை உச்சரித்ததும் சோனானியின் சொந்தக்காரர் கர்நாடகாவின் முதலமைச்சர் J.H. பட்டேல் இருப்பதும் அன்புவின் காதுகளில் காற்றின் இரைச்சலூடே கேட்கிறது.


மீண்டும் மைசூர் சிறையில் அதே தனிமைச் சிறை. அதன்பின் அன்பு தன்னை ஒரு அரங்கக்காரனாக வடிவமைத்து கொண்டான். 45-க்கும் மேற்பட்ட நாடகங்களை அவர்களின் சிறை கூறு 100 முறைகளுக்கு மேல் சிறையில் உள்ளும் சிறைக்கு வெளியிலும் அரங்கேற்றியது. கடும் போலீஸ் பாதுகாப்பில் அவர்கள் நாடகம் நிகழ்ந்தினாலும், தப்பிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாயிருந்தது. அவன் அதற்கு முயலவேயில்லை. இந்த வாழ்வுக்கு அவன் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்திருந்தான். கர்நாடக முதல்வர் பட்டேல் வரை அவர்களின் நாடகத்துக்கு பார்வையாளர்களாயிருந்தார்கள். க்ரிஷ் கர்னாட்டின் தலைதண்டா தாங்கள் நிகழ்த்திய நாடகங்களில் முக்கியமானது என அன்பு நினைவு கூறுகிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பசவண்ணா என்ற சமூகப் போராளி பற்றிய கதை அது. இறுதியில் பசவண்ணா பிராமண சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். நாடக இறுதி தந்த மௌனம் யார் மனதையும் பிறாண்டும். அக்கைதிகள் கேட்ட எல்லாமும் அவர்களுக்கு கர்நாடக அரசிடம் இருந்து கிடைத்தது. 12 பெண் நடிகைகள் தேவை என்ற கோரிக்கையை பெண் கைதிகளை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்ற அரசாணை மூலம் நிறைவேறியது. அன்பு, ரேவதி என்ற தன் ஆத்மார்த்தமான மனுஷியை அந்த அரங்கிலிருந்தே  கண்டடைகிறான். ரேவதியும் அன்பும் ஆயிரத்திற்கும் மேல் கடிதம் எழுதிக் கொள்கிறார்கள். சிறப்பு அனுமதி பெற்று அவன் ரேவதியை திருமணம் செய்து கொள்கிறான்.






எல்லாமே மாறக்கூடியது என்றுதானே மார்க்சியம் சொல்கிறது. நீதியும், ஆணையும், அதிகாரமும் அதில் அடக்கம் தானே. அன்பும் ரேவதியும் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்படுகிறார்கள். கடைசி மூச்சு சிறைக் கொட்டடியில்தான் என்ற தீர்ப்பு அர்த்தமிழந்து போகிறது. சிறையிலிருந்து வெளிவந்த அன்பு குற்ற உணர்வால் அழுத்தப்படுகிறான். தன் வனநாட்களில் தாங்கள் கடத்திய பலபேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோருகிறான். உங்களுக்கும் எனக்கும் என்ன பகை? என்ற அந்த போர்வீரனின் குரலில் பேசுகிறான். சிலரை நேரடியாக சந்தித்து மனம் வருந்துகிறான். சோனானி, கிருபாவை சந்தித்து பேசுகிறான். ஒரு என்கவுண்டரில் இருந்து தன்னை காப்பாற்றிய சோனானிக்கு கண்களால் நன்றியைத் தெரிவிக்கிறான். அவனைப் பற்றி ஒரு பெரும் நாவல் எழுத சொல்லி என்னை அவன் வாழ்க்கை உந்தித் தள்ளுகிறது.

No comments:

Post a Comment