Friday, April 3, 2020

அவனைப்போல் நான் - ஆர்.ஆர்.சீனிவாசன்


தொண்ணூறுகளின் துவக்கத்தில், இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, தெருவில் படம் போடுவது, ஏரிக்குளங்களை சீரமைப்பது, இயற்கை விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்வது, நம்மாழ்வாரைப் போய் பார்த்து வருவது, கே.ஜி.குமரப்பாவை வாசிப்பது என திருநெல்வேலியிலிருந்து சீனுவும், திருவண்ணாமலையில் நான்தமுஎச’வோடு இணைந்தும் செயலாற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

            சீனுவை சந்திப்பவர்கள் பவாவை ஒருமுறை சந்திக்க வேண்டும் எனவும் என்னை சந்திப்பவர்கள் பலர் காஞ்சனை சீனிவாசனின் செயல்பாடுகளை சொல்லியும், அவரை சந்திப்பதற்கான உத்வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் ஐநூறு கிலோமீட்டரை ஒரு இரவில் கடந்துவிடாமல் நாங்கள் இருவரும் எங்கள் சொந்த நிலப்பரப்புக்களிலிருந்து தனித்தனியே இயங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது எஸ்.வி.ராஜதுரைஇனி’ என்றொரு சிறுபத்திரிகையை அதன் உச்சபட்ச அழகியலோடும் உள்ளடக்கத்தோடு நடத்திக்கொண்டிருந்தார். கோவை ஞானியின்நிகழ்’ அதே காலத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் தராத, கனமான உள்ளடக்கத்தோடு வந்துகொண்டிருந்தது. ஜெயமோகனின் பல அற்புதமான ஆரம்பகால சிறுகதைகளை நான்நிகழ்’லிலும்சுபமங்களாவிலும்தான் வாசித்தேன்.

 இனி’-யில் ஐந்தாறு எருமைமாடுகள் ஒரு குளத்தில் ஏகாந்தமாக குளித்துக்கொண்டிருக்கிற ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அட்டைப்படமாக வந்தது. ஒரு பகலிலும், அன்றைய இரவிலும் அப்புகைப்படத்தையே விட்டுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் அப்படம் அப்படியே கண்முன் இருக்கிறது.  சூரிய வெளிச்சம்பட்டு ஒளிரும் அக்குளத்து நீரும் அந்த எருமைகளின் முதுகும் என்னை என்னமோ செய்தது. எஸ்.வி.ஆருக்குஇனி’யின் மற்ற பிரதிகளைக் கேட்டு அஞ்சலட்டை எழுதினேன்.எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்?’ என்றும் எழுதினேன். அடுத்த வாரத்தில் எனக்குஇனி’யின்  எல்லா இதழ்களும் போஸ்டலில் வந்தது. பணம் எதுவும் அனுப்ப வேண்டாம் எனவும், வாசித்தால் போதும் எனவும் எழுதி கீழே எஸ்.வி.ஆர் எனக் கையெழுத்திட்டிருந்தார். அவைகளை பைண்ட் செய்து பொக்கிஷமாக்கி வைத்துக்கொண்டு வாசித்தேன்.ஆனாலும் அந்தப்புகைப்படம் மீண்டும் மீண்டும் என்னைத் துரத்திக் கொண்டேயிருந்தது. அதை எடுத்தவர் பெயர் ஜான் கருணாகரன் ஐசக் எனவும், அவர் தியோடர் பாஸ்கரனின் மைத்துனர் எனவும், அவர் உலக பிரசித்தி பெற்ற புகைப்படக் கலைஞன் எனவும், அப்புகைப்படத்திற்கு பின்னால் இருந்த எல்லா செய்திகளையும் என் மனம் சேகரித்துக் கொண்டே இருந்தது. அப்போதிலிருந்துதான் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் மீதான எனக்கு தீராத காதல் ஏற்பட்டது. ஜான் கருணாகரன் ஐசக்கைத் தேடுகையில் நான் கண்டடைந்தது காஞ்சனை ஆர்.ஆர்.சீனிவாசனை.

 அப்படத்துக்கு ஒரு துளியும் குறைவின்றி சீனு எடுத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களை நான் கண்ணுற்றேன். ஒரு கேமராவுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமென அக்கலைஞனை இன்னும் தீவிரமாக தேட ஆரம்பித்தேன். அவர் திருநெல்வேலியிலிருந்து செயல்படும் முழுநேர புகைப்படக் கலைஞனும், செயற்பாட்டாளனும், மாற்று சினிமா மீது மிகுந்த அக்கறை கொண்டுகாஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து, நமக்கு காணக் கிடைத்த பல அருமையான திரைப்படங்களை 16MM புரொஜெக்டரில் ஊர், ஊராக போய் திரையிடுகிறார் என்றும், காற்றிலும், கடிதங்களிலும் செய்திகள் வந்துகொண்டேயிருந்தன.

    அவரை சந்திக்காமலேயே அவரை முன்மாதிரியாக்கி நாங்களும் அதே போல் புகைப்படக் கண்காட்சிகள் நடத்துவது, திரைப்படங்களை கிராமங்களிலும், நகரத்தெருக்களிலும் திரையிடுவது என எங்கள் நாட்களை வடிவமைத்துக்கொண்டோம். மற்ற ஊர்களின்தமுஎசவின் வழமையான, நீர்த்துப்போன செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுமாதிரி செயல்படுவதென யாரும் சொல்லித்தராமலேயே எங்கள் வேறுபட்ட வாசிப்பின் மூலமும் தொடர்புகளின் மூலமும் எங்களை புதுசாக்கி கொண்டேயிருந்தோம். கண்ணுக்குத் தெரியாமலேயே என்னை இந்தளவுக்கு பாதித்த சீனுவுடனான சந்திப்பை முடிந்தவரைத் தள்ளிப்போடுவது என மனதுக்குள் தீர்மானித்தேன். அதே போல அப்போது தன் எழுத்துக்களால் என்னைக் கட்டிப்போட்ட வண்ணநிலவனுடனான சந்திப்பையும் தாமதப்படுத்திக் கொண்டேயிருந்தேன்.


கலைஞர்களை தூர இருந்து தரிசிப்பது ஒருவகையான ஏக்கம் தரும் போதை. அதை அருந்திவிடவேக் கூடாது. போதையேறி அப்புறம் தெளிந்துவிடும். கிட்டாத அந்த போதைக்காக ஏங்கும் ஒரு தவிப்பு தேடுபவனிடமே தேங்கிவிட வேண்டும். அத்தவிப்பு என்னுடனே இருந்துவிட வேண்டும்மென உள்ளூர விரும்பினேன். ஆனால் சீனுவின் ஒவ்வொரு நாளையும், செயலையும் பின்தொடர்ந்தேன். விசாரித்தறிந்தேன். தொடர்ந்து ஏதாவதொரு சிறு பத்திரிகையில் அவர் புகைப்படம் அச்சேறாதா? என அநியாயத்துக்கு ஆர்வப்பட்டேன். சில புத்தகங்களின் அட்டைப்படத்திற்கு அவர் புகைப்படங்கள் எவ்வுளவு பொருந்துமென மனதுக்குள் Layout செய்துபார்த்தேன். அந்த ஆசையின் ஒரு துளி மிச்சம்தான் நாங்கள்  பதிப்ப்பித்த லட்சுமணபெருமாள் கதைகள்,  சிதம்பர நினைவுகள் போன்ற புத்தகங்களுக்கு அவர் படங்களை பயன்படுத்தியது.

 சீனுவுடனான என் முதல் சந்திப்பு எப்போது என எனக்கு நினைவில் இல்லை. அது அவசியமுமில்லை. அது அப்படி நினைவில் இருந்திருந்தாலும் நிச்சயமாக நெகிழ்ச்சியானதல்ல. நெகிழ்வை அவர் தன் காத்திரமான படைப்புகளாலும், செயற்பாடுகளினாலும் கடந்திருந்தார். ரஷ்ய கலாச்சார மையத்தில் பத்து நாட்கள் நடந்த ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படக் கண்காட்சிக்கு அவருக்குத் தெரியாமல் ஒருநாள் போய், சீனுவின் புகைப்படங்களை ஏறெடுத்து தரிசித்து எனக்குள் மதிப்பிட்டுக் கொண்டேன். வெள்ளாடுகள் கூட்டத்தினூடே போகும் அந்த மேய்ப்பனையும் சேர்த்து எங்கள் நிலத்திற்கு கூட்டி வந்துவிட வேண்டுமென நன் ஒரு புகைப்படத்தைப் பார்த்து ஆசைப்பட்டேன்.

தலைப்பாய் கட்டி, இடுப்பளவு உயர்ந்து வளர்ந்த கோரைப்புற்களுக்கு நடுவே அசையாமல் தூண்டில் போடும் இரு கிராமத்து மனிதர்களை அருகிலிருந்தும், தொட்டுப்பார்த்தும் புளங்காகிதம் அடைந்தேன். ஏனோ அப்போதும் சீனுவை மனம் தேடியலையவில்லை. இப்படங்கள் போதும், அவனை  தரிசித்துக்கொள்ள. அக்கண்காட்சியில் நான் பார்த்த படங்கள் ஏனோ ஜான் ஐசக்கை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன. இவன் இன்னமும் கவனிக்கப்பட வேண்டியவன் என உள்மனம் சொல்லிகொண்டே  இருந்தது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக திருநெல்வேலியில் நடத்திய ஒரு மகத்தான மக்கள் போராட்ட ஊர்வலத்தை சிதைக்க, அப்போதைய திமுக ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு நடந்த சமயம் சீனுவின் கையில் ஒரு  கேமரா மட்டுமே இருந்தது. மக்கள் என்ன செய்வது என்பதறியாமல், தறிகெட்டு ஓடி தாமிரபரணி நதியில் மூழ்கி பதினேழு பேர் செத்ததைப் அவன் எல்லா போலீஸ் அடக்குமுறைகளையும் மீறி பதிவு செய்துகொண்டேயிருந்தான்.

புகைப்படங்கள் எப்போதுமே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் காட்சிப்படுத்தும்  மாபெரும் ஆவணம்.  அது நிகழும்போது அதை நிகழ்த்தும் படைப்பாளிக்கு அது ஒருபோதும் தெரிவதில்லை. ஒரு சின்னஞ்சிறிய வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் செய்வதறியாது நிர்வாணமாக சாலையில் ஓடிவந்த அந்தச் சின்னஞ்சிறுமியின் புகைப்படம் வியட்நாம் போரின் எல்லா கொடூரத்தையும் உலக மக்களுக்கும், அதைப் பார்த்தறியாதவர்களுக்கும் இன்னமும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறதில்லையா?

 சீனுவுக்கும் இது உலக மக்களுக்கு, சாதாரண தொழிலாளர்களை ஒரு அரசு எப்படி இரும்பு கரங்கொண்டு அடக்கும் என்பதை, தான் அடுத்த தலைமுறைக்கும் சொல்வதற்காக இதை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது அப்போது தெரியாது. பாலத்துக்கு அடியிலும் ஓடும் நீரிலும் பதுங்கி இறங்கி, அவன் அந்த மனிதக் கொடூரத்தை ஆவணபடுத்திக் கொண்டேயிருந்தான். எப்போதுமே வரலாறுகளை அரசு அதற்குத் தகுந்த மாதிரியும், தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் எல்லா சாதுரியத்தையும் கைக்கொண்டே மீடியாக்களுக்குத் தருகிறது. ஆனால் மக்கள் கலைஞர்களின் பார்வை மட்டுமே நிதர்சனமானது. ஜாலியன் வாலாபாக்கில் இருந்து இதை பின்னோக்கிக்போய் ஒரு சாதாரண மனிதன் கூட  புரிந்துகொள்ள முடியும்.

 சீனு தான் காட்சிப்படுத்திய காட்சிகளை ஒரு ரகசிய இடத்தில் எடிட் செய்து ஆவணப்படுத்தினார். மனிதர்களின் மரணத்தை சொல்ல வலுவற்ற அவன் மனது அதற்கு ’ஒரு நதியின் மரணம்’ எனப் பெயரிட்டது. அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மாரிசெல்வராஜ் அந்நிகழ்வைதாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என சிறுகதையாக்கினான். பெயர்தெரியாத பல கலைஞர்கள் காட்சிகளை வெறிகொண்டு வரைந்தார்கள். பதினேழு மனித உயிர்களின் சடலங்களை வெளியேற்றிவிட்டு தாமிரபரணி தன்பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருந்தது. அதன் படித்துறையில் உட்கார்ந்து மக்கள் குடும்பம் குடும்பமாய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். ரத்தக்கவிச்சி வீசின அந்த ஆற்றங்கரை காற்றை கைக் கொண்டு மறைத்துக்கொண்டார்கள்.

 சீனு மட்டும்தான் அக்காட்சிகளை உலகிற்குத் தந்தான். 16MM புரெஜெக்டரோடு தான் எடுத்தஒரு நதியின் மரணம்’ டிவிடியோடு  நகரத் தெருக்களிலும், அரங்குகளிலும், கிராமங்கங்களின் சேரிகளிலும் அவன் ஒரு ராத்திருடனைப் போல இறங்கி வேலை பார்க்க வேண்டியிருந்தது. அரசுதேடப்படும் குற்றவாளி’ என சீனுவின் புகைப்படத்தைப் போட்டு தொலைக்காட்சிகளில் பிரகடனப்படுத்தியது. பல தேடப்படும் குற்றவாளிகள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஒரு கலைஞனை வேட்டையாட அதிகார உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சீனுவை திருவண்ணாமலைக்கு அழைத்து, ஆசைதீர கட்டித்தழுவி அவன் நெற்றியில் முத்தமிட வேண்டுமென ஆசைப்பட்டேன். தூரமும் மறைந்து திரிதலும் அந்த ஆசையையும் எனக்கு நிறைவேற்றி தரவேயில்லை.

அப்புறம் ஒரு சமாதானமான காலத்தில்தான் நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். எந்த சொரணையும் இல்லாத ஸ்பரிசம் அது என என்னை நானே சபித்துக் கொண்டேன். ஆனால் சீனுவோடு சேர்ந்து இயங்க வேண்டுமென அந்தக் கைக்குலுக்கல் எனக்கு சொன்னது. அதன்பிறகு முக்கியமான மூன்று சமூக விஷயங்களிலும் உப்புச்சப்பில்லாத ஒரு சொந்த விஷயத்திலும் நாங்கள் இணைந்து பயணித்தோம். நம்மாழ்வார், மோகன்ராம், அந்தோணிசாமி, விதைநெல் ஜெயராமன், பாமயன் என நம் காலத்திய மிக முக்கியமான மனிதர்களை சீனுவின் விரல்கள் எனக்கு சுட்டிக்காட்டிக்கொண்டேயிருந்தன.

அவர் காட்டிய திரைப்படங்களும், ஆவணப்படங்களும், மண்ணும், மரங்களும், நதிகளும், வயல்களும், பழங்குடிகளும், நாம் தவறவிட்ட காய்களும், கனிகளுமாய் முற்றிலும் ஒரு புதிய உலகத்திற்குள் நான் பிரவேசித்தேன்.

மாம்பழப்பட்டு நரிக்குறவர்களின் வாழ்வையும், கடந்தகாலத்தின் கறுமையேறியிருந்த திரேகங்களையும், நரிக்குறவப்பெண்களின் பேரழகையும் அநியாயத்துக்கு சீனுவின் கேமரா பதிவு செய்துகொண்டேயிருந்தது.  சுத்தமாக  பணமற்ற அந்த நாட்களிலும், கடன்வாங்கி அவைகளை பிரேம் போட்டு வீட்டில் மாட்டினேன்.

எனக்கு வரையத் தெரியாது. என் அம்மாவை யாராவது வரையச் சொன்னால் ஒரு கவளம் சோற்று உருண்டையை வரைய முடியும் என்னால். அதுதான் அம்மா. வாழ்ந்தவரை மற்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம்    
                   
                                  சாப்ட்டியாப்பா ’

என்கிற ஒற்றை சொல்லை மட்டும்தான் கொண்டிருந்தாள். அவள் ஆக்கிப்போட்ட சோறு இன்னும் பத்தாண்டுகளுக்கு மீறும். 

அம்மா நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் அவள் அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து, அவளுக்கு முன் இருந்த ஒரு இரும்பு டிரங்க் பெட்டியின் மீது சோற்றுத்தட்டை வைத்து, பருக்கைகள் உதட்டோரத்தில் ஒட்டியிருக்க சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சியை சீனு அவளுக்குத் தெரியாமல் படமாக்கியிருந்தார். அவரே அதை ஃப்ரேம் போட்டுத் தந்தார். அதுதான் அம்மா.

 அம்மாவின் எழுபது வயது வாழ்வையும் அப்புகைப்படத்தில் அடக்கிவிட முடிந்திருந்தது ஒரு கலைஞனால். அம்மா இறந்த போதும், அவள் அஞ்சலிக் கூட்டத்தின்போதும், எங்கள் வீட்டின் அம்மாவின் அறையிலும், அவள் நினைவாக அந்த ஒற்றைப் புகைப்படமே இன்னமும் இருக்கிறது.

போதும்.

 அம்மாவின் வாழ்வை எங்கள் அடுத்த தலைமுறைக்கும் அப்புகைப்படம் சொல்லிவிடும். அப்புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தை எப்போது நினைத்தாலும் அம்மாவின் கைகள் மட்டுமே நினைவில் எழுந்தடங்கும்.

 அம்மாவின் மறைவுக்குப் பின் நாங்கள் இருவரும் ஒரு வீட்டின் அண்ணன் தம்பிகளானோம். அல்லது இரட்டைப் பிறப்புகள் ஆனோம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு அண்ணன், அல்லது தம்பி உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மனிதர்களின் வாழ்வை புகைப்படங்களாக, ஆவணங்களாக்கிக் கொண்டிருக்கிறான் என்றே நினைத்துக் கொள்வேன். விதவிதமான நரிக்குறவப் பெண்களின் படங்களை ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வேன். வீட்டிற்கு வரும் நண்பர்கள் அவர்களைப் பற்றி கேட்கும்போது, சொந்தக்காரர்கள், இப்போது மாம்பழப்பட்டு மைதானத்தில் வாழ்கிறார்கள் எனச் சிரிக்காமல் சொல்வேன். அவர்களின் வியப்பேரிய முகம் பார்ப்பதற்கு முன்னிலும் அழகாயிருக்கும். இத்தனை பேரழகிகளை உறவினர்களாக பெற்ற ஒருவனின் பெருமிதம் அது.

அதன்பின் சீனுவோடு வாய்த்த அந்த தொலைதூர மலைப்பயணம் அலாதியானது.தண்டாஎன்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த மலைகள் கூரைகள் மேல் கவிழ்ந்த அக்கிராமத்தை அழகென்று ஒற்றை வார்த்தையால் சொல்லவிட முடியாது. ஆனாலும் அந்தக் கிராமத்து முகப்பில் பிராய்லர் சிக்கன் கடையும், மினரல் வாட்டர் பாட்டில்களும் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை இருவருமே கவனித்தோம். மலைகளின் உடலெங்கும் சிறுசிறு அருவிகள் வழிந்துகொண்டிருந்ததை மனிதர்கள் கவனிக்கத் தவறியிருந்ததையும், அல்லது வியாபார பிரச்சாரம் அதையும் மீறி டெம்போக்களில் அடைத்து மினரல் வாட்டர் பாட்டில்களை அக்கிராமத்து கடைகளின் முன் கொட்டிவிட்டுப் போகிற ஆணவமும், பெருங்கோபமும் இருதரப்பினர் மீதும் எங்கள் இருவருக்குமிருந்தது.

 நாங்கள் அதுவரை காணாத மனிதர்கள் அக்கிராமத்து தெருவெங்கும் நிறைந்திருந்தார்கள். உடலெங்கும் பச்சைக்குத்தி, வண்ண உடைகள் அணிந்து, கைநிறையுமளவிற்கு வளையல்கள் போட்டு, காதுகளிலும் மூக்கிலும் அது கொள்ளாத அளவிற்கு அணிகலன்கள் அணிந்து அம்மலையின் கீழ் தங்கள் எளிய வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

 சீனு எங்கள் வண்டியிலிருந்து இறங்கி தன் கேமராவோடு ஓடின காட்சி, ஒரு திரைப்படத்தின் நினைவில் அகலாத காட்சியைப் போல இப்போதும் நினைவிருக்கிறது. அவ்வளவுதான், சற்றுமுன்புவரை என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து வந்த மனுஷன் இல்லை இவன். இவன் வேறு. பிசாசுபிடித்து, அது தன் மொத்த லாவகத்தையும், அவன் கைகளில் புரளும் கேமராவுக்குள் இறக்கி, சீனு வேறொரு ஆளாக இயங்கிக் கொண்டிருந்ததை தூர நின்று கவனித்தேன். கிட்டத்தட்ட அக்கிராமத்துப் பழங்குடி லம்பாடி மக்களை ஒருவர் மிச்சமில்லாமல் அவன் தன் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டான். ஒரு மொத்த கிராமத்தின் மனிதர்களையுமே, அவர்களின் துக்கத்தையும், சந்தோசத்தையும், வாழ்ந்த வாழ்வையும் சேர்த்து ஒருவன் தன் சின்ன கேமராவுக்குள் அடக்கிவிட முடியுமெனில், அது ஒரு மகா கலைஞனால் மட்டுமே முடியும். சீனு ஒரு மகா கலைஞன். எடுத்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து சுருக்கி, ப்ரேம் போட்டு ஒரு கண்காட்சி நடத்தினோம். நகர மக்களால் அந்த லம்பாடிகளின் வாழ்வின் நுனியைக்கூடத் தொடமுடியவில்லை. அவர்கள் மேலிருந்து வீசும் பரிசுத்தமான காற்றை சுவாசிக்க கொடுத்துவைக்கவில்லை. அவரவர் அவர்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார்கள். நாகரீகமடைந்த சமூக மக்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் குழந்தைகளைக் கூட்டி வந்து அந்த ஆதிமனிதர்களுக்கு முன் நிறுத்தி, அவர்களே உங்கள் மூதாதையர்கள் என் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டாமா? குழந்தைகளின் மூச்சுக்காற்று, அந்த தாத்தன் பாட்டிகளின் மீது படும்படி நெருங்கி நிற்க வைத்திருக்க வேண்டாமா? நாம் அவர்களை நிராகரித்துவிட்டு, குழந்தைகளை மஞ்சள்கலர் வேன்களில், வத்திப்பெட்டிகளைப் போல அடக்கி ஸ்கூலுக்கு அனுப்பினோம். தங்கள் வேர்களை தவறவிட்ட குழந்தைகள் சிறு காற்றின் அசைவிற்கே முறிந்துவிடும் மரங்களைப்போலவே வளர்க்கிறார்கள். இந்த இருவருக்குமான இடைவெளிகள் சுருங்கி கரைந்துவிடும் காலமே நம் மானுடத்தின் மகத்தான நாள்.

ஒரு கலகக்காரனின் கதைஎன்று ஜான் ஆபிரகாமின் மொத்தப் படைப்புகளையும், ஜானைப் பற்றிய மற்ற கலைஞர்களின் பதிவுகளையும் சேர்த்து சீனு ஒரு புத்தகத்தைத் கொடுத்தார். அது புத்தக கண்காட்சிக்கு முந்தையதொரு மழைக்காலம். மழையும் குளிருமான அந்த நாட்களில் எங்கள் கல்வீட்டு வெற்றுத்தரையில் உட்கார்ந்து அப்புத்தக செறிவூட்டலுக்கு சீனு ராப்பகலாக வேலை பார்த்ததை, நான் தூங்கி எழுந்த கண்களோடு பார்த்ததை இப்போது நினைத்தால் வெட்கமாயிருக்கிறது. அத்தருணத்தில் எனக்கு வந்த ஒரு தொலைபேசிதான் எனக்கும் சீனுவுக்கும்மின்னல்என்ற ஒரு மகத்தான மனிதனை அறிமுகப்படுத்தியது.

மின்னல் வித்யார்த்திகளே இதோ இதோஎன்ற ஜான் ஆப்ரகாம் இயக்கிய படத்தின் தயாரிப்பாளர். அவர் வயதில் அத்தனை சுவாரஸ்யமான ஒரு மனிதனை நாங்கள் பார்த்ததில்லை. அத்தொலைபேசி உரையாடல் மின்னல் ஐயாவின்விலகி ஓடிய கேமராபுத்தகத்தையும் வம்சியில் பதிப்பிக்க வைத்தது. வித்தியாசமான அத்தலைப்பை புத்தகத்துக்கு சீனுவே சூட்டினார்.

அதற்கொரு பிரம்மாண்டமான வெளியீட்டை ரஷ்ய கலாச்சார அரங்கில் நாங்கள் நிகழ்த்தினோம். மின்னல் அய்யாவின் மரணம் வரை மூத்த பிள்ளைகள் மாதிரி நாங்களிருவரும் இருந்ததாக அவர் பல நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.

 என் வாசகனும், வெகு தூரத்திலிருந்து என்னை நீண்ட நாட்கள் அவதானித்தவனுமான செந்தழல் ரவி (இப்போது ஸ்வீடன் ரவி)  என்னை ஒரு ஆவணப்படமெடுக்க வேண்டுமென கேட்டார். முதல் அழைப்பிலேயே அதை நிராகரித்தேன். ஆவணப்படமெடுக்கிற அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லையென அவர் சொற்களை மறுதலித்தேன். என் வாழ்வின் எல்லா பக்கங்களையும் அப்படியே எதிர்காலத் தொடர்ச்சிக்கு விட்டுவிட்டு, நான் கதை சொல்வதை மட்டும் எடுக்கப் போகிறேன் என ரவி தன் சொற்களால் என்னை கடந்தார். இறுதியில் அந்த ஆவணப்படத்தை சீனு இயக்கினார். நண்பன் சரவணக்குமார் ஒளிப்பதிவு செய்தார். என் வாழ்வின் மறக்கமுடியாத நாட்கள் அவை. எனக்குப் பிடித்தமான கலைஞனின் முன் நின்று, அவன் சொல்வதையெல்லாம் செய்வது என்பது வாய்த்தவர்களாலேயே சொல்ல முடியும்.வேட்டவலம் ஜமீன், சிங்காரகுளம், அண்ணாமலைபுரம், பத்தாயம், எங்கள் நிலம், என் பால்ய காலத்து தோழி, நான் கதை சொல்லும் குவா வாடீஸ்’,  நான் தவறவிட்ட ஜெயந்தி, என்னை விரும்பிய ஆளுமைகள் பிரபஞ்சன், பாலுமகேந்திரா, பிசி ஸ்ரீராம், மிஷ்கின், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என எல்லோரையும் அச்சிறிய படத்திற்குள் சீனு கொண்டுவந்திருந்தார்.

ஒரு துளியும் செயற்கைத் தனமில்லாத அப்படம், நான் பார்த்த ஆவணப்படங்களிலே ஆகச் சிறந்ததென பாலுமகேந்திரா சார் அப்பட வெளியீட்டின் போது சீனுவை உச்சி முகர்ந்தார்.வினவுஅப்படத்தை விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது. அதற்கு ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் எதிர்வினையாற்றினார்.

ஸ்கூல் கட் அடித்துவிட்டு வந்து, கரையில் நின்று நதியின் சுழிப்பை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு சிறுமியைப் போல, நான் என்னின் கொள்ளளவுக்கும் மீறின இச்சுமையை சுமந்துகொண்டிருந்தேன். ஆனால் உள்ளூர சந்தோஷம் நிறைந்திருந்தது. அப்பட வெளியீட்டு அன்றுதான் வம்சி ஒரு கேமரா வாங்கியிருந்தான். அவன் முதல் படம் எடுத்ததே, அவனுக்குப் பிடித்தமான பாலு சாரின் முக உணர்வுகளைத்தான். அப்படத்தை ஆவணப்படுத்தியவன் என்ற முறையில் சீனு ஒரு ஏற்புரையாற்றினார். மூன்று நிமிடத்திற்கும் குறைவான ஒரு ஏற்புரை அது.

 பவா கதை சொல்வது, கதை எழுதுவது, இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது என எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கிறேன். அவர் தன் நிலத்தருகே கேட்பாரற்றுக் கிடந்த ‘செவடன்குளம்என்ற குளத்தை சீமைக்கருவேல மரங்களிலிருந்து மீட்டெடுத்தார். பாழடைந்த ஒரு நீர்நிலை மீட்பு என்பது மானுடத்தை மீட்பது மாதிரி’.

போதும் சீனு...

என் நண்பனை அல்லது என் சகோதரனை அம்மக்கள் முன் கட்டியணைத்து நெற்றிலில் முத்தமிட முடியவில்லை. இதோ இந்த எளிய எழுத்தை அவன் முன் சமர்ப்பிக்கிறேன்.


No comments:

Post a Comment