Sunday, December 18, 2016

பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல


கடந்த மாதம் அக்டோபர் 28ம் தேதி நானும், மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.வெங்கடாசலமும், தோழர். கோபாலன்குட்டியும் கோழிகோடு, பேப்பூர் சுல்தான் என இன்றளவும் அழைக்கப்படும் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டுக் கதவின் முன் நிற்கும்போது நான் மட்டும் மணி பார்த்தேன் பிற்பகல் 3.50. அப்போதும் கோழிகோட்டு வெய்யிலின் உக்கிரமிருந்தது.

காத்திருக்க வைக்காமல்  ‘சந்தமுள்ளஒரு பெண் எங்களை புன்னகையைக் கொட்டி வரவேற்கும்போது வெங்கடாசலம் சார் சொன்னார்.

‘‘பவா, இது பஷீரோட மருமக அஞ்சு’’

அவள் தன் கையிலிருந்த சாவியால் தங்கள் வீட்டு முன்னறையைத் திறக்க பெரும் முயற்சி செய்தாள். நான் வாசற்படியிலேயே மாட்டப்பட்டுள்ள பஷீரின் கறுப்பு வெள்ளைப் படத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.

அங்கிருந்தே பார்வையை இன்னும் கொஞ்சம் உள்ளனுப்பினால், பஷீர் தன் அன்பு மனைவி பாபியோடு கடலைப் பார்த்து நிற்கும் இன்னொரு கறுப்பு வெள்ளைப் படம். அப்போது என்னைச் சுற்றியிருந்த அந்த மூன்று நான்கு பேருமே என்னைவிட்டு அகன்றிருந்தார்கள்.

என் முன் பேப்பூர் சுல்தான் மட்டுமே வியாபித்திருந்தார்.

மருமகள் அஞ்சுவால் அந்த அறையை இன்னமும் திறக்க முடியவில்லை.

 “ஒரு எழுத்தாளனின் அறையில் நுழைவது அவ்வளவு எளிதல்ல அஞ்சுநான் கிண்டலாக சொன்னாலும். எல்லோருக்கும் அது பிடித்திருந்தது.

‘‘பாப்போம் சேட்டா’’

அவள் இன்னும் அந்த துருவேறிய தாழ்ப்பாளோடு மல்லுக் கட்டினாள்.

பார்த்தவுடன் கன்னத்தைக் கிள்ளத் தோன்றும் வசீகரத்தோடிருந்த ஒரு சிறு பையனை என்பக்கமிழுத்து,

‘‘உன் பேரென்ன?’’

‘‘வாசிம்’’

‘‘உங்க முத்தச்சன் பேரு?’’

‘‘வைக்கம் முகமது பஷீர்’’



கதவு திறந்து கொண்டது.

இத்தனை நேரம் தாத்தா தன் பேரனின் வார்த்தைகளின் வாத்சல்யத்துக்காக முரண்டு பிடித்திருக்கக் கூடும்.

அந்த அறையில் நாங்கள் பிரவேசித்தோம். புராதனமானதொரு வாசனை அவ்வறையில் நிரம்பியிருந்தது. அந்த அறை முழுக்க பஷீரின் புகைப்படங்கள், சிற்பங்கள், கார்ட்டூன்கள், ஓவியங்கள், அவர் பெற்ற விருதுகள், அவர் புத்தகங்கள், இரண்டு மூன்று மூக்கு கண்ணாடிகள், அவர் கடுங்காப்பிக் குடிக்கும் அலுமினிய லோட்டா, பட்டாபட்டி துணிப்போட்ட ஈசிச்சேர், அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நான் வெங்கடாசலம் சாரிடம்,

‘‘இது என்ன சார்?’’

என மேலோங்கி தொங்கும் இருபது ஓவியங்களை நோக்கி கை நீட்டுகிறேன்.

‘‘அவைகள் பஷீர் கதைகளின் பார்த்திரங்கள்’’ என் உடல் மேலும் சில்லிடுகிறது.
சரியாக இதற்கு இரு மாதங்களுக்கு முன்தான் மாஹியில் விரிந்திருக்கும் அரபிக் கடலின் பெருமிதத்திற்கு முன் ஒரு சிறு துரும்பென நின்ற இளங்காலை நினைவுக்கு வந்தது.



அப்போதைய டச்சுக்கார்களின் கோட்டை, இப்போது பாண்டிச்சேரி அரசின் கீழ் விருந்தினர் மாளிகையாக்கப்பட்டுள்ளது. நெடிதுயர்ந்த அதன் மதில் சுவரின் கம்பீரத்திற்காக அதில் கண் புதைத்த போது, மதிலெங்கும் வெங்கல முலாம் பூசப்பட்ட சிற்பங்கள், உடன் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் விவரிப்புகள்.

‘‘நஜீப் சேட்டா இது என்ன?’’

முகுந்தன் சாரின்மய்யழிக் கரையோரம்நாவலின் உரைநடையும், சிற்பமும்.

நான் அப்பிரமாண்ட கடலின் முன் உறைந்து நின்றேன்.

ஒரு அரசு தன் எழுத்தாளனுக்கு இதைவிட வேறெதைத் தந்துவிட முடியும்?

மயக்கமூட்டும் மாஹி என்ற அச்சிறு நகரம் முகுந்தனுக்கானது. அவனே அதன் அரசன். அதன் ஆத்மாவை அறிந்த ஒரே ஜீவன்.

இதையெல்லாம் ஒரு அரசு நம்புகிறது. அங்கீகரிக்கிறது.

நான் அச்சிற்பங்களில் என் தாசனைத் தேடினேன். எல்லா சிற்ப வார்ப்பிலேயும் தாசன் உண்டு. தாசன்தான் மய்யழியின் நாயகன். நான் என் கல்லூரி நாட்களில் தாசனையும் என் ஆதர்சங்களில் ஒருவனாக நினைத்து ஜோல்னாப்பை மாட்டி புரட்சிக்காக அலைந்தவன். ஒரு கடல், அதன் முன் விரிந்த ஆல மரம், அச்சிற்பம், முகுந்தன் எழுத்து, தாசன், எல்லாமும் சேர்ந்து என்னை அலைக்கழிக்கிறார்கள். நான் மூர்ச்சையாகப் போகக்கூடும் என உணர்ந்த நிமிடம் அங்கிருந்து பௌதீகமாக அகன்றேன்.



பஷீரின் அந்த அறையிலேயும் எனக்கு அப்படியே ஆனது.

ஒரு தட்டு நிறைய நிரப்பட்டபட்ட தேநீர்க் கோப்பைகளோடு எங்கள் முன் நின்ற அஞ்சுவிடம் நான் சொன்னேன்.

‘‘பஷீருக்கு பிரியமான அந்த மங்குஸ்தான் மரநிழலில் நாம் இத்தேநீர் கோப்பைகளை அருந்தலாம்’’

அவள் சிரித்துக் கொண்டே,

‘‘அப்படியென்றால் நான் கடுங்காப்பியே போட்டிருப்பேன். அதுதான் அவருக்கு எப்போதும் பிரியமானது’’

பெரும் சிரிப்பினூடே நாங்கள் எல்லோரும் அந்த அறையிலிருந்து வெளியேறி அந்த மங்குஸ்தான் மரத்தடிக்குப் போகும்போது உணர்ந்தேன் வாசிமின் கை விரல்கள் என் கையைப் பற்றியிருந்ததை.

பருண்மையான அதன் அடியில் நின்று அம்மரத்தின் உச்சியைப் பார்த்தேன்.

கண்களுக்கும் அப்பாலானது அது. அம்மரம் பஷீரால் வைக்கப்பட்டதாயிருக்கலாம். ஆனால் அவர் பால்ய ஸ்பரிசம் பட்டு வளர்ந்ததல்ல அது. அப்பாவின் பிரம்படி பொறுக்க முடியாமல் தலையோலப் பரம்பிலிருந்து கால்நடையாகவே நடந்து போய், வைக்கம் படகுத் துறையை அடைத்து இரவெல்லாம் பயணித்து எர்ணாகுளம் வந்து, அதிகாலையில் அங்கிருந்து எடப்பள்ளி ரயில்வே ஸ்டேஷன்வரை நடந்து, கோழிக்கோடு ரயிலேறிய அன்று ஏற்பட்ட அலைவுறுதல் அது. அதுவே அவரின் ஜீவிதமானது. நடையும், ஓட்டமும், பயணமும் பல நாடுகள் வரை நீண்டது. இந்து சாமியாராக, முஸ்லீம் சூஃபியாக, பாத்திரம் கழுவுபவனாகவரிகளின் நீளம் பத்தாது பஷீர் செய்த வேலைகளை எழுத.

அனுபவச்சாரமேறிய அவர் சரீரம் கடைசியாய் கண்டடைந்த இடமே பேப்பூர். அது கோழிக்கோட்டிலிருந்து கூப்பிடுந்தூரந்தான். ஏதோ ஒருதிரைப்படத்திற்கு அவர் எழுதியதற்கு சன்மானமாகக் கிடைத்த பணத்தில் தன் சக எழுத்தாளன் எம்.டி.வி. வாங்கித் தந்த விசாலமான இந்த இடமும், வீடும். அவர் சொன்ன பின்பே கல்யாணமும். இதற்கெல்லாம் பின்புதான் இம்மங்குஸ்தான் மரம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

‘‘முதுமை ஒரு பின்னோக்கி நகரும் நதி’’ எனவும், மரணத்தின் கைகளில் எப்போதும் நினைவுகளின் கற்கள் குவிந்திருக்கின்றன. காலத்தின் கல்லெறிதலின் வீச்சைத் தாங்க முடியாதபோது மனிதர்கள் வீடு திரும்புகிறார்கள் என சந்தோஷ் ஏச்சிக்கானம் தன் கதையொன்றின் வரிகளில் நம்மை அதிரவைக்கிறான்.

பஷீருக்கும் அதுவே நேர்ந்தது. அலைவுறுதல், ஒரு துண்டு பீடிக்குக் காத்திருத்தல், சிறைபடுதல், போலீசிடம் மிருக அடிபடுதல், சுற்றி அலைதல், வியர்வையில் கிடைத்த ஓராணாவையும், இரண்டணாவையும் வேட்டித் துணியில் மடித்து வைத்து ஒரு கருமியைப் போல செலவழித்தல்.



அதன் உக்கிரம் தாங்க முடியாத போது இதோ தன் சொந்த வீட்டின் மங்குஸ்தான் மர நிழல். தனக்குப் பிடித்த துணிப்போட்ட ஈசிச்சேர், பக்கத்தில் எப்போதுமிருக்கும் ஒரு அலுமினியக் கோப்பையில் கடுங்காப்பி. அனுபவ வாழ்க்கை அவர்முன் ஒரு யாசகனைப் போல நின்று தன்னை எழுதச் சொல்லிக் கேட்ட போது மறுக்க மனமின்றி எழுதினவைகள் பால்யகால சகி, பாத்துமாவின் ஆடு, சப்தங்கள், மதிலுகள், தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது.

மற்ற படைப்புகளிலிருந்தும் சப்தங்களும், பால்யகால சகியும் வேறுபட்டவைகள். என் நண்பன் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் சப்தங்களைக் கேட்டிருக்கிறேன். மிலிட்டிரியிலிருந்து பணி முடித்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவனின் உள்குரல்.

‘‘மிலிட்டிரிக்காரனின் கடமை என்ன? வாய்ப்புள்ள இடத்திலெல்லாம் மனிதர்களைக் கொல்வது. அப்படித்தான் நான் கொன்றேன்.

சில கேவலமான அற்ப ஜந்துக்கள் இந்த தேசத்தை அமைதியாக ஆள வேண்டுமென்பதற்காக நான் உயிரைவிட மேலாக நேசித்த மக்களை சகட்டு மேனிக்கு கொன்று குவித்தேன்’’

என வாக்கு மூலம் தரும் ஒருவனின் கதை. தன் எல்லாத்துயரங்களையும் அப்படியே கொட்டித் தீர்க்க வல்லமை வாய்ந்ததாக ஒரு எழுத்தாளனின் மடியைத் தேர்ந்தெடுக்கிறான் அவன்.

பஷீர், அவனுக்கான ஒரு காதலையும் நமக்குச் சொல்கிறார்.

தன்னை தொடர்ந்து பின்தொடரும் அவனிடம் ஒருநாள் அவளே பேச்சுக் கொடுக்கிறாள்.

‘‘என்ன வேணும் உனக்கு?’’

நீதான் என்பது வார்த்தையாக்கபடாமலேயே அவளுள் செல்கிறது.

‘‘வா’’

ஏசுவின் கருணை அக்குரலில் ததும்புவதை அவனால் உணரமுடிகிறது.

மனித ரத்தமும், தேச துரோகமும், பெரும் சண்டைகளும் நிறைந்த தன் கடந்த வாழ்வை நனைக்கும் ஒரே ஜீவி நதி இவள் மட்டுந்தான். அவள் இலகுவாகிறாள். தன் மேலுள்ள இரத்த வாடை போகுமளவு குளிக்கிறான்.

படுக்கையில் அவள் ஒரு பெண் அல்ல திருநங்கை என்பதை உணர்ந்து துடிக்கிறான்.
அவன் வாழ்நாள் முழுவதுமே அவள் சப்தம் கேட்பாரற்று நதியில் கரையும் மண்மாதிரி ஆகிவிடுகிறது.

பஷீரின் கதைகள் எளிமையானவைகள். அதை யாரும் எழுதிவிடக்கூடும் என இப்போது கணிக்கும் கணவான்கள் ஒரு கலைஞனை காலத்தோடு சேர்த்தே மதிப்பிட வேண்டும். காலத்தை மீறினதுதான் எழுத்து. ஆனாலும் எக்காலத்திலேயும் எளிமையான எழுத்துக்கள் நம்மை பின்தொடர்ந்தே வருகின்றன. அழகிரி சாமியும், கு..ராவும், கி.ராவும் தங்கள் எளிமையான எழுத்தினாலேயே மொழிக்கு வலு சேர்த்தவர்கள்.



சச்சிதானந்தன் சொல்வார்,

‘‘பைத்தியத்திற்கும், கவிஞனுக்குமான இடைவெளி ஒரே ஒரு மெல்லிய கோடு மட்டுமே’’

பஷீரின் வாழ்வில் அக்கோடு இருபக்கமும் மாறி மாறி நகர்ந்தது. ஊர்ப்பையன்கள் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதறியாது ஓடும் நதிநீரில் மல்லாக்கப்படுத்து பலமணி நேரம் அப்படியே கிடந்தவை நாம் தவமெனலாம், யோகா எனலாம். ஆனால் அது தணிப்பு. சமூக உஷ்ணத்தை அரசியல் தகிப்பை எதிர்கொள்ளமுடியாத ஒரு எளிய மனிதனின் வேட்கையை நீர் கொண்டு போகுமோ என்ற தற்காலிக ஆசை.

தன் சொந்த வாழ்வின் சாரத்திலிருந்தே பஷீர் தன் படைப்புகளை உருவாக்கினார். உலக இலக்கியம் இன்றளவும் நாயகர்கள் என கொண்டாடும் வேசிகள், குற்றவாளிகள், திருடர்கள்,  கூட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே பஷீரின் கதாநாயகர்கள். அவர்களுள் சுரக்கும் ஈரக்கசிவை பஷீர்

 தன் கதைகளால் ஸ்பரிசித்தார்.

அச்சிறுநகரின் புகழ்பெற்ற திருடனொருவன் இன்ஸ்பெக்டரால் பிடிபடுகிறான். கையில் விலங்கிடப்பட்டு சாலையில் அழைத்து வரப்படுகிறான். இருபக்கமும் யோக்கியவான்கள் நின்று வேடிக்கைப்பார்க்கிறார்கள்.

அவனைப்பார்த்ததும் பஷீர் லேசாக அதிர்கிறார். அவன் தன்னை நோக்கி பார்க்க வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் அவன் இலக்குத் தீர்மாணிக்கப்பட்டதை போல நேராக பார்த்து நடக்கிறான். அவன் திரும்பி அவரைப்பார்த்தால்

“ஒன்றுமில்லை சகாவுக்கு ஒரு சலாம் போடலாம்என்கிறார் பஷீர்.

தன் பழைய நினைவொன்றிலிருந்து அந்த சலாமுக்கு காரணத்தை விளக்குகிறார்.

பசி மயக்கத்தில் ப்ளாட்பாரத்தில் விழுந்து கிடந்த முகத்தில் நீர் தெளித்து தான் எழுப்பப்பட்ட போது, இவன் மடியில்தான் நான் ஒரு குழந்தையைப் போல கிடந்தேன். பாலும் ரொட்டியும் வாங்கித் தந்து என் பசியாற்றி, அப்புறமும் சில நாட்கள் என் பட்டினியைத் தவிர்க்க என் ஜிப்பாவில் பணம் வைத்துவிட்டுப்போன அம்மனிதனுக்கு நான் என்ன செய்துவிடப்போகிறேன்.

ஒரு சலாம் போடுவதை தவிர?

சமூக ஒழுக்கம், என்ற வரையறைகளின் மீது தன் பீடிப் புகைப்படிந்த எச்சிலைப் துப்புகிறான் அக்கிழவன். 

“உரைகளில், படைப்புகளில் எத்தனை அலங்காரப்படுத்தப்பட்டாலும் அசல்வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அனாதை தான்என்கிறார் பஷீர்.

தன் வாழ்நாளெல்லாம் மட்டாஞ்சேரியில், கொச்சின் படகுத்துறையில், பேப்பூரில் சுற்றி திரிந்த ஒரு அனாதையான பயணியே பஷீர்.

எழுதி முடித்து சோர்ந்து போன ஒரு கணத்தில்தான் உடல் பசியை உணர்த்துகிறது.

ஒரு ஹோட்டலில் வழக்கத்திற்கும் அதிகமாக அன்றிரவு சாப்பிட்டு முடித்து தன் பர்சைத் துழாவுகிறார். அது இல்லை. கடை முதலாளி முன் அவமானப்பட்டு நிற்கும்போது அவர் தனக்கு ஏதாவது வேலைக் கொடுக்கக்கூடும் என நினைக்கிறார். மாறாக அவன் அவர் உடைகளைக் களையச் சொல்கிறான்.

தன்னைச் சுற்றிலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களின் கவனம் வேண்டி அவர்களைத் திரும்பிப்பார்க்கிறார். அவர்களிடம் இரக்கம் கொண்ட ஒரு முகத்தையும்  காணவில்லை. பசித்த ஓநாய்களைப் போல அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என் உள்ளாடையையும் கழற்றச்சொல்லி நான் நிர்பந்திக்கப்பட்டபோது ஒரு மனிதனின் கைகள் எனக்கான பணத்தோடு நீண்டது.

நடுங்கும் கைகளில் என் உடைகளை நான் மீண்டுமெடுத்து உடுத்திக்கொண்டேன்.



அவன் பின்னால் நடந்தேன். ஒரு இருட்டில் அவன் என்னை மிக சமீபித்துக் சொன்னான்.

“என்ன மனுஷன் இவன்? சகமனுசனை  நிர்வாணமாக்கி பார்க்கத் துடிக்கிற நாய்எனச் சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டிலிருந்து ஐந்தாறு பர்ஸ்களை எடுத்து என் முன் போட்டு

“இதில் எது உனது பெரியவரே”?

நான் நிதானமாக என் பர்சை எடுத்துக் கொண்டபோது அவன் என்னிலிருந்து வெகுதூரம் போய்விட்டிருந்தான்.

அவன் பெயரைக் கேட்க மறந்துவிட்டேன். அதனாலென்ன அவன் பெயர் அறமாகவோ அல்லது கருணையாகவோ இருக்கலாம்!

இதுதான் பஷீர் என்ற அசல் கலைஞனின் வார்த்தை அன்று இருட்டும் வரை அம்மங்குஸ்தான் மர அடியிலிருந்து அகன்று வர மனமேயில்லை.


நேற்று தமுஎச திருச்சியில் நடத்திய சிறுகதை நூற்றாண்டுவிழா எல்லா வகையிலும் வெற்றிகரமான  நிகழ்ச்சிதான்.

குறிப்பாக பிஷப்ஹீபர் கல்லூரி வளாகம். அது நான் ஒரு பெரும் வனத்திலிருப்பதை உணர்த்திக்கொண்டேயிருந்தது.

ஆதவனும், வெண்ணிலாவும் சிறப்பாக பேசினதாக நண்பர்கள் சொன்னார்கள். என்னால்தான் பங்கெடுக்க முடியாமல்போனது.




மாலை ஆறரை மணிக்கு நான் அக்கலையரங்கிற்குப் போனபோது மேடை நிறைந்திருந்தது. இயக்குநர் ரஞ்சித், கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் மேடையிலிருந்தார்கள்.

ஜோக்கர் புகழ் பவா செல்லதுரை என நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.

என் எழுத்து, செயல்பாடு எல்லாவற்றையும் எப்போது சினிமா முந்திக்கொண்டது எனத் தெரியவில்லை.

கிருஷ்ணாவும், ரஞ்சித்தும் பேசும் முன் நான் கதைசொன்னேன்.

நான்கு கதைகளை நான் மனதால் வரிசைப்படுத்தியிருந்தேன்.

என் நீர், பிரபஞ்சனின் ஒருமனுஷி, சந்தோஷ் ஏச்சிக்கானத்தில் பிரியாணி, அழகிரிசாமியின் இரு சகோதரர்கள், ஆனால் மனம் ஏனோ குவியமறுத்தது. அப்பிரமாண்ட மேடையும், பெரு ஒளியின் நிறைதலில் இன்னும் உயர்ந்திருந்த மேடையும் எதனாலோ எனதல்ல எனத்தோன்றியது . 

நான் மண்தரையில் நின்று, மரங்களுக்கிடையே கதைசொல்பவன்.

‘நீர்கதையோடு முடித்துக்கொண்டேன்.




டி.எம். கிருஷ்ணாவும், ரஞ்சித்தும் சமத்துவமின்மை பற்றியும், அதை நோக்கிய நம் பயணம் பற்றியும் அற்புதமாகப் பேசினார்கள்.

நான் பாதிக்கதை சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவரின் வருகையால் அரங்கு லேசாக அதிர்ந்தது.

அவர் திருச்சி மாவட்டத்தின் காவல்துறைக்கண்காணிப்பாளர். செந்தில்குமார்  என்னருகில் அமரவைக்கப்பட்டவுடன் அவர் என்னிடம் இன்னும் நெருங்கி நான் உங்கள் வாசகன் சார், எப்போதும் உங்கள் கதைகளை Youtubeல்  கேட்பேன். நீங்கள் கதைசொல்வது அத்தனை இயல்பு.

உங்கள் கதைகேட்கவே இத்தனை அவசர அவசரமாக வந்தேன். ஆனாலும் பாதி கதையைதவற விட்டுவிட்டேன். வருத்தமாக இருக்கிறது.

எனக்காகவே இன்னும் ஒரு கதை சொல்லமுடியுமா?

அதற்குச் சூழல் கொஞ்சமும் அனுமதிக்கவில்லை.




 நானும் செந்தில்குமார் சாரும் அரங்கின் வெளியே நின்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அவர் என்னை அவர் அலுவலகத்திற்கு அழைத்தார். நான் லேசாக சிரித்துக் கொண்டேன்.
அவர் வீட்டிற்கு அழைத்திருந்தால் உடனே போயிருப்பேன் முப்பதாயிரம் புத்தகங்கள் உள்ள மிகப்பெரிய நூலகம் இருக்கிறதாம் அவர்வீட்டில் அதன் பொருட்டே அந்த ஆர்வம்.
மனதில் எஸ்.பி. ஆபீஸ் ஏனோ பயமாயிருந்தது.

அதை கலைப்பது போல அவர்,

“சார் நீங்க எங்க போலீஸ்காரங்களுக்கு  கதை சொல்லணும் சார்

முதலில் 500 போலீசும் அவர்களுடன் அவரவர் குடும்பமும்.

ஆயிரத்து ஐநூறுபேர் வரை…

இடம் ஆயுதப்படை போலீஸ் மைதானம்

உங்களுக்கு பிடித்தமான மண்தரை.
செடிகளுக்கிடையே அந்த ஆரஞ்சு ஒளி.




போதுமா சார்?

நான் உள்ளுக்குள் வியந்து கொண்டேன்.

இம்மனிதன் கதைகளையும், அதைச் சொல்பவனையும் எத்தனைதூரம் ஊடுறுவியிருக்கிறார்.

விரைவில் சந்திக்கலாம் செந்தில்குமார் சார்.

அப்போது

அந்த ஆரஞ்சு விளக்கொளியும் இல்லாத அடர் இருட்டில் நின்று கொஞ்சம் இலக்கியம் பேசலாம்.



Tuesday, December 13, 2016

காத்திருத்தல்


ஓவியர் கே.பாலசுப்ரமணியன்


நாம் நம் வாழ்நாளில் யாருக்காக அதிக நேரம் காத்திருந்திருக்கிறோம்?

யோசித்தால் நமக்கே ரொம்ப வெட்கமாக இருக்கிறது.
அதிகாரத்திலிருப்பவனின் பார்வையில் படவேண்டுமென பல மணி நேரம் காத்திருந்திருக்கிறோம்.

காதலியின் வருகைக்காக ரயில்நிலைய ப்ளாட்பாரம் தேயுமளவிற்கு நடத்திருக்கிறோம்.

கோவிலுக்கு குடும்பத்தோடு வரப்போகும் ஒரு அதிகாரிக்காக சர்க்யூட் ஹவுஸ் வாசலில் நாட்கணக்கில் உட்காரிந்திருக்கிறோம். அல்லது நின்றிருக்கிறோம்.
அவ்வளவுதான் இல்லையா?

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு சாயங்காலத்தில் ‘வம்சி’யின் வாசலுக்கு, கையில் பேக் செய்யப்பட்ட ஒரு ப்ரேமுடன் ஒரு மனிதன் வருகிறார். அவர் நடையிலோ, பேச்சிலோ, வாழ்விலோ ஒரு பதட்டமுமில்லை.
அருணாசலேஸ்வரர் கோவிலிருந்த கற்சிற்பம் ஒன்று ஒருநாள் விடுமுறை கேட்டு வெளியேறி வந்தது போன்ற முகம். நிதானம். வாசல் முன் நின்றவர் ஷைலஜாவைப் பார்த்துக் கேட்கிறார்.

‘‘நான் பவா சாரைப் பார்க்க வேண்டும்’’

இன்று அவர் அலுவலகத்திலிருந்து அப்படியே ஒரு கிராமத்திற்குப் போய் தாமதமாகத்தான் வருவேன் எனச் சொன்னார் என தன் கைபேசியால் என்னை அழைக்க முயல அவர் அதே நிதானத்தோடு அதை தடுக்கிறார்.

வேண்டாம் மேடம், அவர் வரும் வரை காத்திருப்பேன் வாசலிலிருந்த ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். கடைக்கு உள்ளே ஆயிரக்கணக்கில் உள்ள புத்தகங்களும், வெளியே விரிந்திருக்கும் சிறுபத்திரிகைகளும் இப்போது அவருக்கு தேவையில்லை. ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இது. இந்நேரத்தை எது கொண்டு நிரப்பிக் கொள்ளவும் அவருக்கு சம்மதமில்லை.

டீ சொல்லட்டா சார்,

வேண்டாம் மேடம் பழக்கமில்லை.

உங்க பேர் என்னன்னும், எங்கிருந்து வர்றீங்கன்னும்
எதுக்காக பவாவை பாக்கணுன்னும் தெரிஞ்சிக்கலமா சார்,

பாலு மேடம், நான் ஒரு ஓவியன். என் சமீபத்திய ஒரு ஓவியத்தை பவா சாருக்கு தரணும் அவ்ளோதான்.
அவரை பாத்திருக்கீங்களா?

அருகிலிருந்து இப்போதுதான் பார்க்கப் போகிறேன்.

‘‘நீங்கள் அவருக்கு ஏன் உங்கள் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும்?’’

‘‘நான் அவரின் குறைந்த எழுத்துக்கு வாசகன்’’

அதன் பிறகு அவரிடம் எதைப் பேசவும் எனக்கு திராணியில்ல பவா, இரவு எட்டுமணி வரை வாசலிலேயே காத்திருந்துவிட்டு, கடையை சாத்துகிற நிமிடம் எழுந்து நின்று அந்த ஓவியத்தை என் கையில் தந்து,

இதை அவருக்கு நான் தந்தேன் என சொல்லிவிடுங்கள்.
நன்றி. என திரும்பாமல் அவர் சாலையில் ஓடிக்கொண்டிருந்த பல ஆயிரம் மனிதர்களோடு தனி ஒரு மனிதனாக போனார் பவா என அன்றிரவு அவ்ஓவியத்தை ஒரு ஹாலில் வைத்து பிரித்துக் கொண்டே ஷைலஜா சொன்னபோது, மனிதர்களின் இயல்புகள் குறித்து என் ஆச்சர்யம் பல ஆயிரம் மடங்குக் கூடியது.

பாலசுப்ரமணியன் என்ற பாலு சார் மற்றவர்களுக்கு எங்களுக்கு எங்கள் பாஸ்.



சந்திப்புகளற்ற பொழுதுகளிலும்கூட அவர் குறித்த ஆச்சர்யங்கள் எனக்குள் கூடிக் கொண்டேப் போகின்றது. அவதானிப்பின் உச்சம் என நான் கருதும் நண்பன் மிஷ்கின் ஒரு மதிய உணவின் போது சொன்னது நினைவுக்கு வருகிறது.

பாலு, குளத்தாமரை பூவைப் போல தன்மீது படியும் அழுக்கு, மழைநீர், பறவை எச்சம், மனித கொய்தல் எதுவும் அத்தாமரையின் இலைகளையோ பூக்களையோ என்ன செய்துவிடமுடியும். அதைத் தழுவி செல்வதைத் தவிர. அதன் பிறகும் அது புதிதாய் துளிர்விடும், புதிது புதிதாய் பூக்கும்.

தாமரை கொடியென அவரைச் சொல்வது கூட பொருந்தாது. தாமரைப்பூ. அதன் உயிர்ப்பை கவனித்திருக்கிறீர்களா பவா, அது யாருக்காகவும், எதற்காகவும் பக்கவாட்டில் சாயாது. அதன் ஒரே நீட்சி சூரியன்தான். அது சூரியனை நோக்கி மட்டுமே உயரும். இதழ்கள் வாடி நீரில் வீழ்ந்து அழுகிய போதும் தன் அடுத்த மலர்தலையும் அது சூரியனை நோக்கியே அனுப்பும்.

நம் பாலு அத்தாமரைப்பூ மாதிரிதான் பவா.

எளிய மனிதர்களுக்காக தினம் தினம் பூக்கிற கலைஞன் பாலு.

அவரின் நாட்களை நட்புகளிலிருந்து அவதானித்தால் மூன்று சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஜீவிதம் பாலு சாருடையது.

காத்திருத்தல், துறத்தல், ஒப்புக்கொடுத்தல்.

சீனு எங்கடா இருக்க?

‘‘வீட்ல பாஸ்’’

பொறப்பட்டுப் போய் ஜிம்மி பில்டிங் வாசல்ல நில்லு நான் எட்டரைக்கு வந்தடறன்.

சரி பாஸ்,

அவரின் சக ஹிருதயன், சக ஓவியன் சீனுவாசனுக்காக அதிக வார்த்தைகளை செலவழித்து அவர் நடத்திய உரையாடல் இது.

தன் யமஹாவில் ஜிம்மி பில்டிங் வாசலில் காலை எட்டரைக்கு நிற்க ஆரம்பிக்கிறார் சீனு,

சீனுவாசன் ஒருமுறைகூட தன் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. அருகிலுள்ள போன் பூத்துக்குப் போகவில்லை. அவர் மறந்துவிட்டாரா என நினைவு படுத்தவில்லை.

பல கோல்ட் பிளாக் பில்டர் கிங்ஸ் காலடியில் நசுங்க அங்கேயே கிடக்கிறார். இரவு எட்டு மணிக்கு பாலுசார் அங்கு வருகிறார். ஏன் தாமதம் என்ற கேள்வியே அங்கு இருவருக்குமே எழவில்லை.

இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம். அல்லது அபத்த நாடகத்தின் ஒரு காட்சி. அப்படித்தானே!

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அவர் தன் நண்பனுக்காக காத்திருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமற்ற காத்திருந்தல் அது. காதலிக்காக காத்திருத்தல் கூட சில முத்தங்களை யாசித்தாப் பெறுவதற்காக இருக்கலாம். இது அதுகூட இல்லை. சரி அப்படி காத்திருக்காமல் நீங்கள் பரபரப்பாக இயங்கினீர்களே என்ன செய்துவிட்டீகள் நண்பர்களே! பாலு சாரைவிட அதிகமாய் எதை நீங்கள் பெரிதாய் சாதித்துவிட்டீர்கள்?

பல நாட்களாய் தைல வண்ணம் பூசப்பட்டு தன் மர ஸ்டேண்ட் முன் நிற்கும் கேன்வாசில் எங்கு இந்த இரத்த சிவப்பு புள்ளியை வைப்பது என அவர் அவதானித்து வைப்பாரே! அக்கணத்தின் பெருமிதத்தை விட பெரிதா உங்கள் ஓட்டமும், பரபரப்பும், சாதனையும்?

யோசித்துப் பார்த்தால் காத்திருப்புகள்தான் மிகப்பெரிய சாதனைகளை அள்ளிவந்து உங்கள் உள்ளங்கைக்குள் வைக்கிறது. சாமியார்களின் காத்திருப்புகள் எதிர்பார்ப்புகளானது. வீழ்த்துவதற்கான காத்திருப்புகள் துரோகத்தாலனது. தான் அடைய விரும்பும் லட்சியத்திற்கான காத்திருப்பு எத்தனை காலமானாலும் கனியக்கூடியது.

இந்திய திரைப்படங்களின் ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம் அந்த மே மாதம் தன் காரில் வீட்டைவிட்டு வெளியே வருகையில் அம்மரத்தடியை கவனிக்கிறார்.

ஒரு இளைஞன் அவரை எதிர்பார்த்து, அவர் கண்களில் பட்டுவிட வேண்டுமென நிற்கிறான்.

அவர் கார் அவனை சுலபமாக கடந்துவிடுகிறது. மனம் பின்னோக்கி போய் அப்பையனை விசாரிக்க விரும்புகிறது.
சரி இருக்கட்டும் என அவர் காத்திருக்கிறார். மூன்று மாதங்களில் அடித்த வெய்யில், பெய்த கோடை மழை, கிளம்பிய புழுதி, கேட்ட சப்தம், நிலவிய அமைதி எல்லாவற்றையும் அவன் ஒரு திரவத்தை மாதிரி குடித்து அங்கேயே நிற்கிறான்.

ஒரு படபிடிப்பின் இடைவெளியில் ஏதோ ஞாபகம் வந்தவராக தன் மனைவியை தொலைபேசியிலழைத்து,
கேட்டுக்கு வெளியே அப்பூம்மரத்தடியில் ஒரு பையன் நிற்கிறானா? என கேட்கும்போது தன் கடிகாரத்தைப் பார்க்கிறார். பிற்பகல் இரண்டு.

மாடியிலிருந்து பார்த்துவிட்டு அந்த அம்மா சொல்கிறார். ஆம் நிற்கிறான். என்ன? எதற்கு அவன் நம் வீட்டையை நோக்கி நிற்கிறான்?

அவர் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறார். எனக்கு மட்டும் என்னத் தெரியும்? அவனுக்கு ஒரு டம்ளர் மோர் கொடு.

அடுத்தநாள் படபிடிப்பிற்கு போகும்போது அப்பூமரத்தடியில் அவர் வண்டி நிற்கிறது. கார் கண்ணாடி இறக்கிவிடப்படுகிறது.

‘உள்ள ஏறு’

அவன் காலியாயிருந்த பின் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொள்கிறான். ஆனால் இருப்பு கொள்ளவில்லை.

யாரிடமோ கேட்டது போல முன்பக்க சாலையைப் பார்த்துக் கொண்டே பி.சி. கேட்கிறார்.

உனக்கு என்ன வேணும், ஏன் இங்கேயே நிக்கற?

உங்க உதவியாளனா சேரணும் சார்,

பேர் என்ன?

திருமூர்த்தி.

அந்த திருமூர்த்திதான் ‘திரு’ என்கிற நவீன இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை ஓவியமாக மாற்றி பல கோடிகள் ஊழியமாக பெறும் புகைப்பட கலைஞன்.

காத்திருப்பின் மகத்துவங்கள் வரலாறு முழுக்க இப்படி கொட்டிக் கிடக்கின்றன.

நான் என் ‘எல்லா நாளும் கார்த்திகையை’ மீடியா வாய்ஸில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. புதன் கிழமை அதிகாலையில் சென்னையில் இதழ் கிடைக்கும். அடுத்த நாள் தான் வெளியூர்களுக்கு.

காலை நான்கு மணி நடைப்பயிற்சியினிடையே அவர் வழக்கமாக இதழ்கள் வாங்கும் பெட்டிக் கடைமுன் போய் நிற்பார்.

அவரே கட்டைப் பிரித்து ஒரு இதழை எடுத்து அப்பெட்டிக்கடை மஞ்சள் விளக்கின் குறைந்த ஒளியில் அக்கட்டுரையைப் படிப்பார். மீதி நடையெங்கும் அதே நினைவுகளில் சுழன்று விடியலுக்காக காத்திருந்து அதிகாலை நான் எழும் நேரமான ஆறுக்கும் ஆறறைக்குமிடையே என்னை அழைத்து,

‘‘பாலு மகேந்திரா சாரை பற்றி படிச்சேன் பவா, என்ன சொல்ல?’’

ஒன்றும் சொல்லமாட்டார். இந்த மூன்று வார்த்தைகளுக்காகத்தான் இரண்டு மணி நேர காத்திருப்பு.

கடந்த வாரம் நான் என் இதய அடைப்பின் பொருட்டு மருத்துவமனையில் இருந்தபோது பாலு சார் ஒரு பூனைக்குட்டியின் மென்மையோடு என் படுக்கைக்கருகில் நின்றதை, என் தூக்கம் பிரிந்த போதுதான் பார்த்தேன்.

தன் இயல்புடி அவர் வெகுநேரம் நின்றிருக்கக்கூடும் என்ற எண்ணமே என்னை பதட்டமடைய வைத்தது.



‘வாங்க பாஸ்’

‘‘என் கைகளைப் பற்றிக் கொண்டார். ஓய்வெடுங்கள் பவா,
வருகிறேன்’’ அவ்வளவுதான்.

அவ்வளவுதானா பாஸ்?

என் நண்பனும் தம்பியுமான கார்த்தியை தொலைபேசியில் அழைத்து,

நாளை மாலை பவா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வரும்போது அவர் கையில் அவருக்குப் பிடித்த என் ஓவியம் ஒன்றிருக்க வேண்டும் கார்த்தி.

நீங்கள் கேலரிக்குப் போய், நான் சொன்னேன்னு சிகப்பு பட்டில் நான் வரைந்த அந்த எளிய ஓவியத்தை பவாவுக்கு தந்து அவரை வெளியே அழைத்து வாங்க கார்த்தி.

கார்த்தி அண்ணன்களின் சொற்களை அப்படியே நிறைவேற்றித் தருகிற அனுமன்.

மருத்துவமனை வாசலில் நின்ற கார்த்தியின் கையிலிருந்த அந்த ஓவியத்தின் மீது சுற்றப்பட்டிருந்த வண்ண காகிதத்தை ஆர்வங்கொண்டு அகற்றினேன்.



அதே. ஒரு சிகப்பு பட்டுத்துணியில் வாழ்வின் சிந்தல்களை அங்கங்கே தூவியிருப்பார். வெற்றிடம்தான் அதிகம். மனித ஜீவிதத்தில் இன்னமும் யாராலும் நிரப்பப்படாத வெற்றிடம்தானே அதிகம்.