Sunday, December 18, 2016

பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல


கடந்த மாதம் அக்டோபர் 28ம் தேதி நானும், மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.வெங்கடாசலமும், தோழர். கோபாலன்குட்டியும் கோழிகோடு, பேப்பூர் சுல்தான் என இன்றளவும் அழைக்கப்படும் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டுக் கதவின் முன் நிற்கும்போது நான் மட்டும் மணி பார்த்தேன் பிற்பகல் 3.50. அப்போதும் கோழிகோட்டு வெய்யிலின் உக்கிரமிருந்தது.

காத்திருக்க வைக்காமல்  ‘சந்தமுள்ளஒரு பெண் எங்களை புன்னகையைக் கொட்டி வரவேற்கும்போது வெங்கடாசலம் சார் சொன்னார்.

‘‘பவா, இது பஷீரோட மருமக அஞ்சு’’

அவள் தன் கையிலிருந்த சாவியால் தங்கள் வீட்டு முன்னறையைத் திறக்க பெரும் முயற்சி செய்தாள். நான் வாசற்படியிலேயே மாட்டப்பட்டுள்ள பஷீரின் கறுப்பு வெள்ளைப் படத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.

அங்கிருந்தே பார்வையை இன்னும் கொஞ்சம் உள்ளனுப்பினால், பஷீர் தன் அன்பு மனைவி பாபியோடு கடலைப் பார்த்து நிற்கும் இன்னொரு கறுப்பு வெள்ளைப் படம். அப்போது என்னைச் சுற்றியிருந்த அந்த மூன்று நான்கு பேருமே என்னைவிட்டு அகன்றிருந்தார்கள்.

என் முன் பேப்பூர் சுல்தான் மட்டுமே வியாபித்திருந்தார்.

மருமகள் அஞ்சுவால் அந்த அறையை இன்னமும் திறக்க முடியவில்லை.

 “ஒரு எழுத்தாளனின் அறையில் நுழைவது அவ்வளவு எளிதல்ல அஞ்சுநான் கிண்டலாக சொன்னாலும். எல்லோருக்கும் அது பிடித்திருந்தது.

‘‘பாப்போம் சேட்டா’’

அவள் இன்னும் அந்த துருவேறிய தாழ்ப்பாளோடு மல்லுக் கட்டினாள்.

பார்த்தவுடன் கன்னத்தைக் கிள்ளத் தோன்றும் வசீகரத்தோடிருந்த ஒரு சிறு பையனை என்பக்கமிழுத்து,

‘‘உன் பேரென்ன?’’

‘‘வாசிம்’’

‘‘உங்க முத்தச்சன் பேரு?’’

‘‘வைக்கம் முகமது பஷீர்’’கதவு திறந்து கொண்டது.

இத்தனை நேரம் தாத்தா தன் பேரனின் வார்த்தைகளின் வாத்சல்யத்துக்காக முரண்டு பிடித்திருக்கக் கூடும்.

அந்த அறையில் நாங்கள் பிரவேசித்தோம். புராதனமானதொரு வாசனை அவ்வறையில் நிரம்பியிருந்தது. அந்த அறை முழுக்க பஷீரின் புகைப்படங்கள், சிற்பங்கள், கார்ட்டூன்கள், ஓவியங்கள், அவர் பெற்ற விருதுகள், அவர் புத்தகங்கள், இரண்டு மூன்று மூக்கு கண்ணாடிகள், அவர் கடுங்காப்பிக் குடிக்கும் அலுமினிய லோட்டா, பட்டாபட்டி துணிப்போட்ட ஈசிச்சேர், அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நான் வெங்கடாசலம் சாரிடம்,

‘‘இது என்ன சார்?’’

என மேலோங்கி தொங்கும் இருபது ஓவியங்களை நோக்கி கை நீட்டுகிறேன்.

‘‘அவைகள் பஷீர் கதைகளின் பார்த்திரங்கள்’’ என் உடல் மேலும் சில்லிடுகிறது.
சரியாக இதற்கு இரு மாதங்களுக்கு முன்தான் மாஹியில் விரிந்திருக்கும் அரபிக் கடலின் பெருமிதத்திற்கு முன் ஒரு சிறு துரும்பென நின்ற இளங்காலை நினைவுக்கு வந்தது.அப்போதைய டச்சுக்கார்களின் கோட்டை, இப்போது பாண்டிச்சேரி அரசின் கீழ் விருந்தினர் மாளிகையாக்கப்பட்டுள்ளது. நெடிதுயர்ந்த அதன் மதில் சுவரின் கம்பீரத்திற்காக அதில் கண் புதைத்த போது, மதிலெங்கும் வெங்கல முலாம் பூசப்பட்ட சிற்பங்கள், உடன் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் விவரிப்புகள்.

‘‘நஜீப் சேட்டா இது என்ன?’’

முகுந்தன் சாரின்மய்யழிக் கரையோரம்நாவலின் உரைநடையும், சிற்பமும்.

நான் அப்பிரமாண்ட கடலின் முன் உறைந்து நின்றேன்.

ஒரு அரசு தன் எழுத்தாளனுக்கு இதைவிட வேறெதைத் தந்துவிட முடியும்?

மயக்கமூட்டும் மாஹி என்ற அச்சிறு நகரம் முகுந்தனுக்கானது. அவனே அதன் அரசன். அதன் ஆத்மாவை அறிந்த ஒரே ஜீவன்.

இதையெல்லாம் ஒரு அரசு நம்புகிறது. அங்கீகரிக்கிறது.

நான் அச்சிற்பங்களில் என் தாசனைத் தேடினேன். எல்லா சிற்ப வார்ப்பிலேயும் தாசன் உண்டு. தாசன்தான் மய்யழியின் நாயகன். நான் என் கல்லூரி நாட்களில் தாசனையும் என் ஆதர்சங்களில் ஒருவனாக நினைத்து ஜோல்னாப்பை மாட்டி புரட்சிக்காக அலைந்தவன். ஒரு கடல், அதன் முன் விரிந்த ஆல மரம், அச்சிற்பம், முகுந்தன் எழுத்து, தாசன், எல்லாமும் சேர்ந்து என்னை அலைக்கழிக்கிறார்கள். நான் மூர்ச்சையாகப் போகக்கூடும் என உணர்ந்த நிமிடம் அங்கிருந்து பௌதீகமாக அகன்றேன்.பஷீரின் அந்த அறையிலேயும் எனக்கு அப்படியே ஆனது.

ஒரு தட்டு நிறைய நிரப்பட்டபட்ட தேநீர்க் கோப்பைகளோடு எங்கள் முன் நின்ற அஞ்சுவிடம் நான் சொன்னேன்.

‘‘பஷீருக்கு பிரியமான அந்த மங்குஸ்தான் மரநிழலில் நாம் இத்தேநீர் கோப்பைகளை அருந்தலாம்’’

அவள் சிரித்துக் கொண்டே,

‘‘அப்படியென்றால் நான் கடுங்காப்பியே போட்டிருப்பேன். அதுதான் அவருக்கு எப்போதும் பிரியமானது’’

பெரும் சிரிப்பினூடே நாங்கள் எல்லோரும் அந்த அறையிலிருந்து வெளியேறி அந்த மங்குஸ்தான் மரத்தடிக்குப் போகும்போது உணர்ந்தேன் வாசிமின் கை விரல்கள் என் கையைப் பற்றியிருந்ததை.

பருண்மையான அதன் அடியில் நின்று அம்மரத்தின் உச்சியைப் பார்த்தேன்.

கண்களுக்கும் அப்பாலானது அது. அம்மரம் பஷீரால் வைக்கப்பட்டதாயிருக்கலாம். ஆனால் அவர் பால்ய ஸ்பரிசம் பட்டு வளர்ந்ததல்ல அது. அப்பாவின் பிரம்படி பொறுக்க முடியாமல் தலையோலப் பரம்பிலிருந்து கால்நடையாகவே நடந்து போய், வைக்கம் படகுத் துறையை அடைத்து இரவெல்லாம் பயணித்து எர்ணாகுளம் வந்து, அதிகாலையில் அங்கிருந்து எடப்பள்ளி ரயில்வே ஸ்டேஷன்வரை நடந்து, கோழிக்கோடு ரயிலேறிய அன்று ஏற்பட்ட அலைவுறுதல் அது. அதுவே அவரின் ஜீவிதமானது. நடையும், ஓட்டமும், பயணமும் பல நாடுகள் வரை நீண்டது. இந்து சாமியாராக, முஸ்லீம் சூஃபியாக, பாத்திரம் கழுவுபவனாகவரிகளின் நீளம் பத்தாது பஷீர் செய்த வேலைகளை எழுத.

அனுபவச்சாரமேறிய அவர் சரீரம் கடைசியாய் கண்டடைந்த இடமே பேப்பூர். அது கோழிக்கோட்டிலிருந்து கூப்பிடுந்தூரந்தான். ஏதோ ஒருதிரைப்படத்திற்கு அவர் எழுதியதற்கு சன்மானமாகக் கிடைத்த பணத்தில் தன் சக எழுத்தாளன் எம்.டி.வி. வாங்கித் தந்த விசாலமான இந்த இடமும், வீடும். அவர் சொன்ன பின்பே கல்யாணமும். இதற்கெல்லாம் பின்புதான் இம்மங்குஸ்தான் மரம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

‘‘முதுமை ஒரு பின்னோக்கி நகரும் நதி’’ எனவும், மரணத்தின் கைகளில் எப்போதும் நினைவுகளின் கற்கள் குவிந்திருக்கின்றன. காலத்தின் கல்லெறிதலின் வீச்சைத் தாங்க முடியாதபோது மனிதர்கள் வீடு திரும்புகிறார்கள் என சந்தோஷ் ஏச்சிக்கானம் தன் கதையொன்றின் வரிகளில் நம்மை அதிரவைக்கிறான்.

பஷீருக்கும் அதுவே நேர்ந்தது. அலைவுறுதல், ஒரு துண்டு பீடிக்குக் காத்திருத்தல், சிறைபடுதல், போலீசிடம் மிருக அடிபடுதல், சுற்றி அலைதல், வியர்வையில் கிடைத்த ஓராணாவையும், இரண்டணாவையும் வேட்டித் துணியில் மடித்து வைத்து ஒரு கருமியைப் போல செலவழித்தல்.அதன் உக்கிரம் தாங்க முடியாத போது இதோ தன் சொந்த வீட்டின் மங்குஸ்தான் மர நிழல். தனக்குப் பிடித்த துணிப்போட்ட ஈசிச்சேர், பக்கத்தில் எப்போதுமிருக்கும் ஒரு அலுமினியக் கோப்பையில் கடுங்காப்பி. அனுபவ வாழ்க்கை அவர்முன் ஒரு யாசகனைப் போல நின்று தன்னை எழுதச் சொல்லிக் கேட்ட போது மறுக்க மனமின்றி எழுதினவைகள் பால்யகால சகி, பாத்துமாவின் ஆடு, சப்தங்கள், மதிலுகள், தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது.

மற்ற படைப்புகளிலிருந்தும் சப்தங்களும், பால்யகால சகியும் வேறுபட்டவைகள். என் நண்பன் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் சப்தங்களைக் கேட்டிருக்கிறேன். மிலிட்டிரியிலிருந்து பணி முடித்து நாட்டிற்குத் திரும்பிய ஒருவனின் உள்குரல்.

‘‘மிலிட்டிரிக்காரனின் கடமை என்ன? வாய்ப்புள்ள இடத்திலெல்லாம் மனிதர்களைக் கொல்வது. அப்படித்தான் நான் கொன்றேன்.

சில கேவலமான அற்ப ஜந்துக்கள் இந்த தேசத்தை அமைதியாக ஆள வேண்டுமென்பதற்காக நான் உயிரைவிட மேலாக நேசித்த மக்களை சகட்டு மேனிக்கு கொன்று குவித்தேன்’’

என வாக்கு மூலம் தரும் ஒருவனின் கதை. தன் எல்லாத்துயரங்களையும் அப்படியே கொட்டித் தீர்க்க வல்லமை வாய்ந்ததாக ஒரு எழுத்தாளனின் மடியைத் தேர்ந்தெடுக்கிறான் அவன்.

பஷீர், அவனுக்கான ஒரு காதலையும் நமக்குச் சொல்கிறார்.

தன்னை தொடர்ந்து பின்தொடரும் அவனிடம் ஒருநாள் அவளே பேச்சுக் கொடுக்கிறாள்.

‘‘என்ன வேணும் உனக்கு?’’

நீதான் என்பது வார்த்தையாக்கபடாமலேயே அவளுள் செல்கிறது.

‘‘வா’’

ஏசுவின் கருணை அக்குரலில் ததும்புவதை அவனால் உணரமுடிகிறது.

மனித ரத்தமும், தேச துரோகமும், பெரும் சண்டைகளும் நிறைந்த தன் கடந்த வாழ்வை நனைக்கும் ஒரே ஜீவி நதி இவள் மட்டுந்தான். அவள் இலகுவாகிறாள். தன் மேலுள்ள இரத்த வாடை போகுமளவு குளிக்கிறான்.

படுக்கையில் அவள் ஒரு பெண் அல்ல திருநங்கை என்பதை உணர்ந்து துடிக்கிறான்.
அவன் வாழ்நாள் முழுவதுமே அவள் சப்தம் கேட்பாரற்று நதியில் கரையும் மண்மாதிரி ஆகிவிடுகிறது.

பஷீரின் கதைகள் எளிமையானவைகள். அதை யாரும் எழுதிவிடக்கூடும் என இப்போது கணிக்கும் கணவான்கள் ஒரு கலைஞனை காலத்தோடு சேர்த்தே மதிப்பிட வேண்டும். காலத்தை மீறினதுதான் எழுத்து. ஆனாலும் எக்காலத்திலேயும் எளிமையான எழுத்துக்கள் நம்மை பின்தொடர்ந்தே வருகின்றன. அழகிரி சாமியும், கு..ராவும், கி.ராவும் தங்கள் எளிமையான எழுத்தினாலேயே மொழிக்கு வலு சேர்த்தவர்கள்.சச்சிதானந்தன் சொல்வார்,

‘‘பைத்தியத்திற்கும், கவிஞனுக்குமான இடைவெளி ஒரே ஒரு மெல்லிய கோடு மட்டுமே’’

பஷீரின் வாழ்வில் அக்கோடு இருபக்கமும் மாறி மாறி நகர்ந்தது. ஊர்ப்பையன்கள் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதறியாது ஓடும் நதிநீரில் மல்லாக்கப்படுத்து பலமணி நேரம் அப்படியே கிடந்தவை நாம் தவமெனலாம், யோகா எனலாம். ஆனால் அது தணிப்பு. சமூக உஷ்ணத்தை அரசியல் தகிப்பை எதிர்கொள்ளமுடியாத ஒரு எளிய மனிதனின் வேட்கையை நீர் கொண்டு போகுமோ என்ற தற்காலிக ஆசை.

தன் சொந்த வாழ்வின் சாரத்திலிருந்தே பஷீர் தன் படைப்புகளை உருவாக்கினார். உலக இலக்கியம் இன்றளவும் நாயகர்கள் என கொண்டாடும் வேசிகள், குற்றவாளிகள், திருடர்கள்,  கூட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே பஷீரின் கதாநாயகர்கள். அவர்களுள் சுரக்கும் ஈரக்கசிவை பஷீர்

 தன் கதைகளால் ஸ்பரிசித்தார்.

அச்சிறுநகரின் புகழ்பெற்ற திருடனொருவன் இன்ஸ்பெக்டரால் பிடிபடுகிறான். கையில் விலங்கிடப்பட்டு சாலையில் அழைத்து வரப்படுகிறான். இருபக்கமும் யோக்கியவான்கள் நின்று வேடிக்கைப்பார்க்கிறார்கள்.

அவனைப்பார்த்ததும் பஷீர் லேசாக அதிர்கிறார். அவன் தன்னை நோக்கி பார்க்க வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் அவன் இலக்குத் தீர்மாணிக்கப்பட்டதை போல நேராக பார்த்து நடக்கிறான். அவன் திரும்பி அவரைப்பார்த்தால்

“ஒன்றுமில்லை சகாவுக்கு ஒரு சலாம் போடலாம்என்கிறார் பஷீர்.

தன் பழைய நினைவொன்றிலிருந்து அந்த சலாமுக்கு காரணத்தை விளக்குகிறார்.

பசி மயக்கத்தில் ப்ளாட்பாரத்தில் விழுந்து கிடந்த முகத்தில் நீர் தெளித்து தான் எழுப்பப்பட்ட போது, இவன் மடியில்தான் நான் ஒரு குழந்தையைப் போல கிடந்தேன். பாலும் ரொட்டியும் வாங்கித் தந்து என் பசியாற்றி, அப்புறமும் சில நாட்கள் என் பட்டினியைத் தவிர்க்க என் ஜிப்பாவில் பணம் வைத்துவிட்டுப்போன அம்மனிதனுக்கு நான் என்ன செய்துவிடப்போகிறேன்.

ஒரு சலாம் போடுவதை தவிர?

சமூக ஒழுக்கம், என்ற வரையறைகளின் மீது தன் பீடிப் புகைப்படிந்த எச்சிலைப் துப்புகிறான் அக்கிழவன். 

“உரைகளில், படைப்புகளில் எத்தனை அலங்காரப்படுத்தப்பட்டாலும் அசல்வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அனாதை தான்என்கிறார் பஷீர்.

தன் வாழ்நாளெல்லாம் மட்டாஞ்சேரியில், கொச்சின் படகுத்துறையில், பேப்பூரில் சுற்றி திரிந்த ஒரு அனாதையான பயணியே பஷீர்.

எழுதி முடித்து சோர்ந்து போன ஒரு கணத்தில்தான் உடல் பசியை உணர்த்துகிறது.

ஒரு ஹோட்டலில் வழக்கத்திற்கும் அதிகமாக அன்றிரவு சாப்பிட்டு முடித்து தன் பர்சைத் துழாவுகிறார். அது இல்லை. கடை முதலாளி முன் அவமானப்பட்டு நிற்கும்போது அவர் தனக்கு ஏதாவது வேலைக் கொடுக்கக்கூடும் என நினைக்கிறார். மாறாக அவன் அவர் உடைகளைக் களையச் சொல்கிறான்.

தன்னைச் சுற்றிலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களின் கவனம் வேண்டி அவர்களைத் திரும்பிப்பார்க்கிறார். அவர்களிடம் இரக்கம் கொண்ட ஒரு முகத்தையும்  காணவில்லை. பசித்த ஓநாய்களைப் போல அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என் உள்ளாடையையும் கழற்றச்சொல்லி நான் நிர்பந்திக்கப்பட்டபோது ஒரு மனிதனின் கைகள் எனக்கான பணத்தோடு நீண்டது.

நடுங்கும் கைகளில் என் உடைகளை நான் மீண்டுமெடுத்து உடுத்திக்கொண்டேன்.அவன் பின்னால் நடந்தேன். ஒரு இருட்டில் அவன் என்னை மிக சமீபித்துக் சொன்னான்.

“என்ன மனுஷன் இவன்? சகமனுசனை  நிர்வாணமாக்கி பார்க்கத் துடிக்கிற நாய்எனச் சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டிலிருந்து ஐந்தாறு பர்ஸ்களை எடுத்து என் முன் போட்டு

“இதில் எது உனது பெரியவரே”?

நான் நிதானமாக என் பர்சை எடுத்துக் கொண்டபோது அவன் என்னிலிருந்து வெகுதூரம் போய்விட்டிருந்தான்.

அவன் பெயரைக் கேட்க மறந்துவிட்டேன். அதனாலென்ன அவன் பெயர் அறமாகவோ அல்லது கருணையாகவோ இருக்கலாம்!

இதுதான் பஷீர் என்ற அசல் கலைஞனின் வார்த்தை அன்று இருட்டும் வரை அம்மங்குஸ்தான் மர அடியிலிருந்து அகன்று வர மனமேயில்லை.


No comments:

Post a Comment