‘ஆன்மீகம்’ என்ற ஒற்றைச் சொல் வெவ்வேறு விதமாக வெவ்வேறுத் தருணங்களில் அர்த்தப்படுகிறது. ஒரே மனிதனின் வாழ்விலும் கூட அது ஒவ்வொருக் காலத்திற்கும் வேறு வேறு விதமாக வெளிப்படுகிறது.
நம்மைக் கடந்து போகும் ஒரு மனுஷனோ மனுஷியோ தங்கள் உடலில் ஏறிய அனுபவச் செறிவுகளின் அடர்த்தியில் ஏதோ ஒரு நாளில் ரகசியமாகவேணும் ஆன்மீக வயப்பட்டவர்கள்தான்.
இரண்டுக்கு இரண்டு கிலோ மீட்டர் விஸ்தீரணத்தில் அடக்கி விடலாம் திருவண்ணாமலை என்ற இச்சிறு நகரத்தை. அதன் வளர்ச்சியென்பதை கான்க்ரீட் கட்டிடங்களை வைத்து மதிப்பிடுவதல்ல. பன்னாட்டு வங்கிகள், உணவு விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என வளர்ச்சியின் அடையாளங்கள் உடலின் மேலெழும் பெரும் கொப்புளங்கள் போல எழலாம்.
ஆனால் இவை அனைத்துமே மனிதர்களைச் சார்ந்தது. அவர்களை எதிர்பார்த்து, அவர்களை நம்பி உருவாகும் சித்திரங்கள்தான். அவர்களே இல்லாமல் போகும்போது இவை கேலிச் சித்திரங்களாகக்கூட மாறுவதில்லை. மாறாக கலைந்துப் போகின்றன.
மனிதர்களே எதையும் தீர்மானிக்கும் சக்தியாக வரலாற்றின் எப்பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலையின் ஒரு பக்கமாக மனிதனின் இதயம் போல ஒரு பசுமையற்ற மலை வியாபித்திருக்கிறது. கரும்பாறைகளும், அதனிடையே கசியும் சிறு ஊற்றுகளும், சுனைகளும், குகைகளும் நிறைந்த இதன் மேலோங்கிய வளர்ச்சி விலங்குகளையும், பறவைகளையும், தன் பரிவு மிக்க கரங்களை நோக்கி அழைக்கலாம். மாறாக இம்மலை உலகமெங்கிருந்தும் மனிதர்களை, அதிலும் கலைஞர்களை, ஓவியர்களை, எழுத்தாளர்களை, சிற்பிகளை தன்னில் புதைத்துக் கொள்ள அழைத்த வண்ணமிருக்கும் விந்தைதான் யாராலும் புரிந்து கொள்ள முடியாததாயிருக்கிறது.
நான் கதைசொல்லிக் கொண்டிருந்த ஒரு இரவில் கடைசி வரிசையிலிருந்த அந்த மூதாட்டியைப் பார்த்தேன். தூய வெள்ளாடையில், முதுமையேறியிருந்த உடல்வாகில் அவர் மனதால் துள்ளிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அங்கிருந்து அகலமுடியாத அவஸ்தை அது.
நிகழ்ச்சி முடிந்து நான் அவரை நோக்கியும், அவர் என்னை நோக்கியும் ஒரு புள்ளியில் குவிந்தோம்.
அம்முதிய கைகள் தானாக என்னைப் பற்றிக் கொண்டன. அக்கைகள் நடுங்கியதை உணரமுடிந்தது. எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் அவர் சற்றுமுன் கதை கேட்ட அனுபவத்தை பகிர்ந்தார்.
பகிர்ந்தாரென்றா சொன்னேன்?
இல்லை.
அழுதார்.
மொழி தெரியாத இம்முதியவளுக்கு அப்படி என்னப் புரிந்துவிட்டது? மீண்டும் என் அறிவின் துள்ளல் மீது பலத்த அடி விழுந்து அடங்கியது.
அங்கிருந்த பல பேர் அவர்களை ‘ஜோதி அம்மா’ என்று அழைத்ததையும், சிலபேர் அவர்களிடம் ஆசிவாங்கி அவர்களின் பாதம் தொட்டதையும் கவனித்தேன்.
அந்த இரவில் அவர்கள் என்னோடு மட்டுமேயிருந்தார்கள். ஆங்கிலமல்லாத மொழியில் அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டே வந்தார்கள்.
குவாவாடீஸ் கேட்டில் நின்று மறுபடியும் என் கைப்பற்றி,
“உன் கதைகளைப் படிக்கவாவது நான் தமிழ்க்கற்றுக் கொள்வேன்”
குரல் கலைவதற்குள் நான் ஜோதி அம்மாவைத் தேடினேன். சற்றுமுன் நின்றுபோன மழைமாதிரி அவர்கள் காணாமல் போயிருந்தார்கள். ஈரத்தையும், குளுமையையும் மட்டும் மனதால் உணரமுடிந்தது.
அதன் நீட்டிப்பு அடுத்த நாள் விடியும் போதும் கூடவேயிருந்தது.
ஜோதி அம்மாவின் சொந்த பெயரென்ன?
‘‘Hike hildebrand”
ஜெர்மனி
இப்போது அவர்களுக்கு என்ன வயதிருக்கும்?
எண்பது.
இத்தனை வயதைக் கடந்து அவர்கள் ஏன் தன் தேசத்தைவிட்டு இங்குவந்தார்கள். என்ற அபத்தத்தின் உளரல் என்னிடமில்லை.
இந்த ஆஸ்ரமத் தெருவில் நம் பார்வைக்கு அர்த்தமற்றும், அவர்களுக்கு ஏதோ வாழ்வின் முழு அர்த்தமும் இங்கு மட்டுந்தான் முகிழ்ந்திப்பதாக உலவும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய மனிதர்களை தினம் தினம் பார்த்துவிட்டு அப்படி ஒரு கேள்வியை நான் மனதால் கூட எழுப்பி விட முடியாது.
ஜோதி அம்மா என்பதைத் தொடுமுன் ‘ஸ்நேக ஜோதி’ என அறியப்பட்டவர். இப்போது அவர்களுக்கு Hike bildebrand என தன் பாஸ்போர்ட்டில் படிக்கும் போதுகூட யார் இவர் என கேட்கத் தோன்றலாம்.
தன் பூர்வீக தேசம், இறந்தும் உயிர்த்துமிருக்கிறது. ஐந்துக் குழந்தைகளையும். அவர்களின் குடும்ப நலன்கள் எதையும் தனக்குள் சேமித்துக் கொள்ளவில்லை ஜோதி அம்மா.
உறவுகளைக் கடந்துவிடுவது அத்தனை சுலபமானதல்ல. ஆனால் தன் குஞ்சுகளுக்கு இறக்கைகள் துளிர்த்து விட்டன என்பதை அறிந்த தாய்ப் பறவை ஏழு கடல் தாண்டி வந்து ஒரு வறண்ட மலையின் கீழ் கூடடைந்துவிட்டது.
தன் சொந்த நாட்டிலும், வந்த இடத்திலும் யாரையாவது தத்தெடுத்துக் கொள்வதென்பதை ஜோதி அம்மா தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
தன் ஐந்து வயதில் புளியங்குடியிலிருந்து ரயில் தவறி ஆலப்புழைக்குப் போய் ஐம்பதாவது வயதில் அங்கிருந்து வந்து, வாழ்வின் விசித்திர சித்திரங்களில் ஒன்றாக ஸ்நேக ஜோதி அம்மாவை அடைந்து ஹனீபா அவர்களின் எத்தனையாவது தத்துப் பிள்ளையென அவர்களுக்குத் தெரியாதது.
பியோனோ, ரிக்கார்டர், என இசைக்கருவிகளோடும், இசையோடும் ஒரு தூய நதியின் நீர்த் துள்ளலைப் போல இருந்தது என் இளமைக் காலம் என நினைவுகூறும் Hike Hildebrand-டை அவள் அம்மா திருண்ணாமலையிலிருந்து மனதாலும் கடிதங்களாலும் அழைத்துக் கொண்டேயிருந்தாள். மகளின் தொடர் நிராகரிப்பு அந்த தாய்க்கு ஒரு பொருட்டல்ல. அவர் ரமணர் அருகிலேயே இருந்து, அவரின் சொற்களை உண்டு வாழ்ந்தவள். ரமணாஸ்ரம வரலாற்றில் ரமணரின் சமாதிக்கு அருகிலேயே இன்னொரு சமாதி, அதுவும் ஒரு வெளிநாட்டு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தப் பெண்ணுக்கு என்பது அபூர்வமானதுதான்.
தன் மகளின் நிராகரிப்புகளினூடே அத்தாயின் சமாதி மூடப்பட்டது.
தன் பியோனோவிலிருந்து மேலெழுந்து வரும் இசையின் நிரம்பலில், தூரத்திலிருந்து அழைத்த தன் தாயின் குரல் தனக்கு சரியாகக் கேட்கவில்லையென்கிறார் ஜோதி அம்மா.
எனக்குத் தெரிந்து திருவண்ணாமலை என்ற ஒற்றை நகரம் மட்டுமே தன்னிடம் விருந்தினர்களாக வரும் மேற்கத்திய மனிதர்களை அப்படியே இருத்திக் கொள்கிறது.
இதன் அன்பில் அகப்பட்டு மீளமுடியாத பலபேரை நான் சந்தித்திருக்கிறேன்.
எதனால் இங்கு வரத் தோன்றியது மைக்கேல்?
எங்கள் நாட்டு நூலகத்தில், ஒரு இரவு புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்த ஒரு ஒற்றைப் படம்.
என்ன மாதிரியான படம் மைக்கேல் அது?
இந்த மலையின் படம். மலையிலிருந்து ஒரு தாயின் பரிவின் இரு கரங்கள் என்னை நோக்கி நீண்டு அப்படியே அணைத்துக் கொண்ட அனுபவத்தை அடைந்தேன்.
என் வாழ்நாள் முழுக்க அந்த அன்பின் அரவணைப்பிலேயே கிடக்க விரும்புகிறேன்.
ஒரு கனவு, ஒரு ஓவியம், ஒரு புகைப்படம், ஒரு சிற்பம், ஒரு புத்தகம், ஒரு வரி, ஒரு சொல் ஒரு உறவின் உதாசீனம் என நீள்கிறது அவர்களுக்கான அழைப்பின் குரல்.
இதன் மீதான மூர்க்கத்தனமான நிராகரிப்பு வலுவற்றதாய் உதிர்கிறது. தன் இசை வாழ்வில் ஏதோ ஒரு அபூர்வ விநாடியில் ரமணருக்கு அருகிலிருந்த தன் அம்மாவைப் புகைப்படத்தில் புதிதாய் பார்க்கிறாள் Hide.
எப்போதும் பார்த்த அம்மாதான். ஆனால் அன்று அவர் மனநிலைக்கு வேறு மாதிரித் தெரிகிறாள்.
‘‘என் தொடர் அழைப்புகளை தாட்சண்யமின்றி ஏன் நிராகரித்தாய் மகளே?’’ புகைப்படத்திலிருந்த அம்மாவின் குரல் தெளிவாய் கேட்டது.
அழுகை தன் கண்களில் இருந்தல்ல. தன் பியோனோவிலிருந்து வழிந்ததாக அந்நிமிடத்தை மீட்டெடுக்கிறார் Hike.
அப்புகைப்படத்தின் அழைப்பு எல்லாவற்றையும் உதறவும், நிராகரிக்கவும் வைத்தது.
தன் மக்கள், தன் ரெக்கார்டர் கருவி, தன் பியோனோ எல்லாமும் ஒரு ஜெப அறைக்கு முன் அர்ப்பணிக்கப்படுகிறது.
அதன் பின்பே Hike – ன் முழு துறத்தலும் நிகழ்ந்தது.
Hike என்ற அந்த ஜெர்மானிய இசை மகளை ரமணாஸ்ரமம் தன் இருகரங்களாலும் அணைத்துக் கொள்கிறது. Hike என்ற தன் பெயரை உதிர்த்து ஸ்நேகஜோதி என இம்மலைக்கும், அதன் சுடருக்கும் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறாள்.
மலை, ஆஸ்ரமம், தாயின் சமாதி இவைகளே தன் வாழ்விடம் என உணர ஆரம்பிக்கிறார் ஸ்நேகஜோதி. அவரும் அங்கேயே நின்றிருந்தால் அங்கிருக்கும் பலநூறு பெயர்த் தெரியாத வேற்று மனுஷிகளில் ஒருத்திதான் எனக்கு அவர்.
தன் தாயின் கைகளும், இம்மலையின் கைகளும் பல ஆயிரம் மைல் கடந்து தன்னை நோக்கி ஆதூரத்துடன் நீண்டது போல ஸ்நேகஜோதி அம்மாவின் முதியக் கரங்கள் சாதாரண மனிதர்களை நோக்கி எப்போதும் நீள்கிறது. அந்த கைகளை தன் சக மனிதர்களுக்குத் தர எதுவுமற்ற வெற்று கைகளென யாரும் எப்போதும் நினைப்பதில்லை.
உலகின் மிகப்பெரும் கருணையும், தாய்மையும் சுரக்கும் அக்கைகளில் அடைக்கலமாகவே பலரும் விரும்புகிறார்கள்.
சமீபத்தில் நான் திடீர் உடல் நலிவடைந்தபோது, அடுத்த அரை மணி நேரத்தில் என்னருகிலிருந்து என் தலையைக் கோதிக் கொடுத்த கைகள் அவை.
மருத்துவமனையிலிருந்து என் வீடு திரும்பலை எதிர் நோக்கிக் காத்திருந்து என்னை அணைத்து என் நெற்றியில் முத்தங்கள் தந்து,
உன் கதைகளை மொழிப் பெயர்க்க தமிழ் கற்றுக் கொள்கிறேன். பாதி தூரத்தை கடந்து விட்டேன் மகனே! எனத் ததும்பிய அத்தாயின் சொற்கள் என் அம்மாவின் இடத்தை அவர்களுக்குத் தந்திருந்தது.
நவீன உலகில் சக மனித அன்பை முற்றிலும் இழந்தவர்களாக, சுயத்தின் மிக பலஹீனமான பலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு பலமான தள்ளுதலில், காற்று வீச்சில், சீண்டலில் நாம் உலர்ந்த நண்டுகளின் ஓடுகளைப் போல உதிரப் போகிறவர்கள்தான்.
ஆனால் அன்பினால் களிம்பேறிப் போன இத்தாயின் முதிர்ந்த வலுவான கரங்களால் தாங்கிப் பிடிக்கப் பட்டிருக்கும் ஒரு மனிதனின் வீழ்தல் அத்தனை எளிதல்ல யாருக்கும்.
நன்றி இவ்வார சக்தி விகடன்
No comments:
Post a Comment