Thursday, December 8, 2016

சோ எனும் சனாதனவாதி...

என் அப்பா ஒரு தீவிரதுக்ளக்வாசகர். திராவிட இயக்கங்களின் மீது அவருக்கிருந்த ஒவ்வாமைதான் எப்போதும் காங்கிரஸ்காரனா அவரை வைத்திருந்தது. அவருடைய எந்த கனவின் வடிகாலாகவும் காங்கிரஸ் கட்சி இல்லாமலானபோது துக்ளக் பத்திரிகையும், அதன் ஆசிரியர்சோவும் அவரை சுலபமாக ஈர்க்க ஆரம்பித்தார்கள்.

அப்பாவுக்கு அவரைப் பிடிக்கும் என்பதாலேயே என் சிறுவயதிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்காமல் போனது.

என் மார்க்சிய நூல்களின் வாசிப்பிற்குமுன் துக்ளக் ஒரு நடுநிலமையான அரசியல் பத்திரிகை என நானும் பல ஆயிரம் அதன் வாசகர்களைப் போலவே நம்ப ஆரம்பித்தேன்.


வெகு சீக்கிரத்தில் அது அப்படியில்லை அது முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவ சார்புடைய பத்திரிகை என்பதும், அதன் ஆசிரியர் சோ ராமசாமி ஆர்.எஸ்.எஸ். சிந்தனையின் பிரதிநிதி எனவும் எனக்கு சுலபமாக புரிய ஆரம்பித்தது.

அதன்பிறகான என் துக்ளக் வாசிப்பு மிகுந்த கவனத்துடன் இருந்தது. வெகு சீக்கிரமே  அதிலிருந்தும் விலக ஆரம்பித்தேன்.

அதன்பின் துக்ளக் வாசிக்கிறவர்களை பார்க்கும்போதெல்லாம் அவர்களின் போதமை குறித்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேன்.

சோ ராமசாமி தன் இறுதிநாள் வரை மார்க்சிய வெறுப்பும், திராவிட எதிர்ப்பும் கொண்டிருந்த சனாதனவாதியாகயிருந்தார். எதன் பொருட்டும் அவர் பார்வை அதிலிருந்து விலகியிதில்லை.

வாஜ்பாயின் எளிமையைப்பற்றி பல பக்கங்கள் எழுதமுடிந்த அவரால் நிருபன் சக்கரவர்த்தியின் எளிமை குறித்தோ, மாணிக்சர்க்கார் பற்றியோ அச்சுதானந்தனின் அரசியலின் எளிமைக் குறித்தோ  வாய்த்திறந்ததில்லை.
தன்னை ஒரு இந்துத்துவாவின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்வதில் அவர் எப்போதுமே தயங்கினதில்லை. மாறாக பெருமிதமடைந்தார்.

அதிலும் உயர்சாதி மேட்டிமையை கட்டிக்காப்பதற்கு தன்னால் முடிந்தவரை கருத்தியல் உலகில் செயலாற்றினார்.

இத்தேசத்தின் சாமன்ய மனிதர்களின் வாழ்வு குறித்தோ, இருப்புகுறித்தோ தன் வாழ்நாளில் அவர் ஒருவரி எழுதினதாக எனக்கு நினைவில்லை.

ஜெயகாந்தன் மாதிரி பல எழுத்தாளர்கள் அவர்களின் எளிய வாழ்வின் மேன்மைப் பற்றியும், அதில் கசிந்த மனிதம் பற்றியும் பல நூறு பக்கங்கள் எழுதிய போதெல்லாம் அவர்களை தன் கட்டுரைகளில் உதாசினப்படுத்தினார்.

துக்ளக்ஆண்டு விழா மேடை மாற்றுக் கருத்தாளர்களை அனுமதித்தாலும் இறுதியில் அக்கருத்துக்களை மறுத்து. இந்துத்துவ அறிவு ஜீவிகளின் ஒற்றைக் கருத்தை பிரதிபலிக்கும் மேடையாகவே அது இறுதிவரை நீடித்தது.

மார்க்சிய எளிமையை அவர் எப்போதும் பொருட்படுத்தத்தகுந்ததாக மதித்ததில்லை.

அவர் நேர்மையானவர் என்றும், அவர் பத்திரிகை நடுநிலைமையானது என்பதையும் ஒருபோதும் ஒரு படைப்பாளியாக நான் நம்பினதில்லை.
நேர்மை என்பதே என் பார்வையில் வேறு அர்த்தமுடையது.

என் பிரியத்திற்கும், மதிப்பிற்குமுறிய எழுத்தாளர் வண்ணநிலவன் அப்பத்திரிகையில் பல ஆண்டுகள் ணிபுரிந்தார் என்பதே என்னால் நம்பமுடியாததாக இருந்தது.

ஈழ பிரச்சனையில் துக்ளக் பத்திரிகையும், சோ ராமசாமியும் காட்டிய மூர்க்கத்தனமான எதிர்ப்பின் வெப்பம் தாங்காமல் வண்ணநிலவன் அங்கிருந்து வெளியேறினார்.

கருத்தியல் ரீதியான எங்கள் வலிமையை எதிர்கொள்ள முடியாமல் எங்கள் எதிரிகள் இப்படி மரணத்தின் மூலம் தொடர்ந்து தப்பித்துக் கொள்வது எங்கள் விருப்பமல்ல .
  

நன்றி தேசாபிமாணி 08.12.2016

No comments:

Post a Comment