Monday, January 7, 2019

தீக்குச்சி



பிரபஞ்சன்

என் தொலைபேசி மத்தியானத்திலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சில அழைப்புகளை எதிர்கொள்ள திராணியற்றுத் தவிக்கிறேன். பல அழைப்புகளை எடுத்து விம்மல் ஒலியை கேட்டு அணைக்கிறேன். பவாண்ணா என்ற கேவலில் நம் பிரபஞ்சனை விட்டுட்டோமே என்கிற குற்றச் சொல் என்னை கிழ்நோக்கி அழுத்துகிறது.

எல்லோராலும் மரணம் எதிர் பார்க்கப்படுகிற ஒன்றுதான் என்றாலும், அது நமக்கு பிரியாமானவர்கள், நம் வீட்டு மனிதர்களை அழைத்துப்போக வரும்போது மட்டுந்தான் நாம் துடித்துப் போகிறோம்.



இன்று காலை அது தன் வாழ்நாள்  முழுக்க ஒரு கையில் தன் அன்றாடத்திற்கான ரொட்டித்துண்டுகளை சேகரித்துக் கொண்டே மொத்த மானுட விடுதலைக்காக கீதம் இசைத்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான கலைஞனை அழைக்க வந்திருந்தது. முன்னமே அறிந்திருந்தால் அவரை அரண் அணைத்து  மறைத்திருப்போம். எங்கள் சரீரத்தை அதற்கு தின்னக் கொடுத்திருப்போம். மனிதர்களைப் போல, அரசைப் போல மரணமும் எங்களை இன்று வஞ்சித்தது. குழந்தைகளுக்கு பலூன் கொடுத்து போக்குகாட்டி அது எங்கள் அப்பனை எங்களிடமிருந்து   பறித்ததுவெறும் கையோடு தெருவில் நிற்கிறோம்.

பிரபஞ்சனுடன் என் நட்பு இறுதி கால் நூற்றாண்டைக் கடக்கிறது. மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையைப் போல நாற்றுகளிடையே இட வேண்டிய இடைவெளி குறித்து துல்லியமான கணக்கிருந்தது எங்கள்  இருவருக்கும். நீர் பெருகும் போதும், வேர் காயும்போதும் அது ஒரு விலகல்மாதிரியோ, அழுகல் மாதிரியோ மற்றவர்களுக்குத் தெரியலாம். ஒரு விவசாயிக்குத் தெரியும், அது வேர் பிடித்தல், பச்சையம் பெருகுதல், பயிர் எழும்புதல்.

இந்த உணர்வு பிரபஞ்சனோடு தொடர்பிலிருந்த ஒவ்வொரு படைப்பாளருக்கும், வாசகனுக்கும் எப்போதும் ஏற்பட்டிருக்கும். கருணை மிகுந்ததும், கருணையற்றதுமான இந்த வாழ்வை அதன் சகல அகங்காரத்தோடும் எதிர் கொண்டவர் பிரபஞ்சன். குரூரமான கோரப் பற்களை துருத்திக் கொண்டு வெளிவரும் அதனை எதிர்கொள்ள அவருக்கு ஒரு நல்ல காபி மட்டும் போதுமானதாயிருந்தது.



பிரபஞ்சன் 55, என்று அவருக்கு நாங்கள் ஒரு விழா எடுத்தோம்தமிழ் சமூகம் அவருக்குப் பங்களித்த  12 லட்ச ரூபாயை ஒரு ட்ரேவில் வைத்து  பிரபஞ்சனை எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.

இதழோரம் துளிர்க்கும் வழக்கமான புன்னகையால் அவர் எங்களை ஏறெடுத்தார்.
நான் உரக்க குரலுயர்த்தி சொன்னேன்.

இது உங்கள் பணம். இதை வங்கியில் போட்டு வட்டி வாங்கி சாப்பிடுங்கள் என ஒருபோதும் சொல்லமாட்டோம். நீங்கள் ஓய்வுபெற்ற அரசு ஊழியன் அல்ல. ஒன்றாம் தேதியை எதிர்பார்த்து வாழ
நீங்கள் கலைஞன், எழுத்தாளன், இந்நிமிடத்திலிருந்து இதை எடுத்து செலவழியுங்கள்.”

அரங்கம் எழுந்து நின்று ஆர்பரித்தது, அதைப்பற்றிக் கொண்டு மீண்டும் சொன்னேன்,
 “செலவழித்தவுடன் சொல்லுங்கள், மீண்டும் தருகிறோம்.”

ஆசுவாசத்தோடும், பெருமிதத்தோடும், பிரபஞ்சன் தன் வாசகர்களைப்  பார்த்த அக்கணத்தை புகைப்படக்காரன் சேலம் வேலு அப்படியே பதிவு செய்திருக்கிறான்.  

லௌகீக வாழ்வின் அவலத்தை, போதாமையை கலைஞனையே பலிகேட்கும் அதன் அகோர பசியை அவர் தன் புறங்கையால் தள்ளினார். வாசிப்பும், எழுத்தும் அவரை ஒவ்வொரு நிமிடமும் அதிலிருந்து விடுவித்துக் கொண்டே இருந்தன.

பசியில் துவண்ட வயிற்றோடு அவர் எழுதிய கணங்களில் அப்பங்களோடு  காத்திருந்த லௌகீகம் ஏமாற்றத்தோடு காய்ந்த அப்பங்களோடு திரும்ப வேண்டியிருந்தது.

எழுத்து அவருக்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் மனிதர்களுக்கு மட்டுந்தான். எல்லாத் தரப்பு மனிதர்களிடமும் அவருக்கு வாஞ்சையிருந்தது. வசதியாய் ஊரில் பெருத்த பணக்கார்களிடம்  ஒரு அசட்டையிருந்தது. தன்னைப்போல ஒருவேளை சாப்பாட்டை இழந்து வாழ்ந்தவன் மீது பரிவிருந்தது. அது மகத்தான மானுட பதிவு. அதுவே அவர் எழுத்து.

மறைவாய் குளிப்பதற்கு ஒரு இடம் தாரும் கத்தாவேஎன இறைந்து மன்றாடிய ஒரு பெண்ணின் குரல் கர்த்தரை எட்டுதவற்கு முன்பே பிரபஞ்சனை எட்டியிருந்தது.

இருபத்தி மூன்று வயது நிறைவதற்குள் நியாயம் கேட்க எழுந்த ஒரு இளம் நக்சலைட் தோழனின் சரீரம் அற்ப போலீஸ்காரன்களால் குற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு மனித போலீஸ்காரனை விட்டு துப்பாக்கியால் சுடவைத்து அவனை மரணத்தால் விடுவித்தது.



கேமராவில் ஃபிலிம் இல்லாமல் தன்னைப் புகைப்படம் எடுப்பதாய் ஏமாற்றுகிற இந்த போட்டோகாரனை ஐம்பது ரூபாய் கடன்வாங்கிக் கொடுத்து, பத்தாததற்கு,  “எங் கூட இருந்துட்டு போறீயா?” என கேட்கவைத்தது.

தன் மனைவி ராணியின் மரணத்தின் போது சா நிழலின் பள்ளத்தாக்கில் நின்று சொன்னார்.

நான் ராணிக்கு நல்ல கணவனாக ஒரு போதும் இருந்ததில்லை, ராணி வேறு யாரையாவது திருமணம் செய்திருத்தால் இன்னும் நன்றாக வாழ்ந்திருப்பாள்.”

உங்களுடன்தான் சார் வாழ்வை வாழ்ந்தார்கள் அவர்கள்.

பெண்குழந்தைகளற்ற அவர் நண்பர்களின் பெண் குழந்தைகளை பார்க்கிற போரதல்லாம் வாரி அணைத்து உச்சி மோந்து ஆசிர்வதிப்பார். அது இப்பிரபஞ்சத்தில் பிறந்த எல்லா பெண் குழந்தைகளுக்கும் சேர்ந்து ஒரு தகப்பன் பொழிந்த அன்பின் பெருமழை.

பெண்கள் எழுத வந்தபோது, தன் இருகரம் விரித்து தன் கதகதப்பான செட்டைக்குள் வாரி அணைத்துக் கொண்டார்.

அது ஒரு தாயின் கருவறை மாதிரி, அவர்களுக்கு பாதுகாப்பாய் இருந்தது.

கலைஞர்களை வெற்றிபெற்றவன், தோல்வியுற்றவன் என பிரிக்கத் தெரியாதவர் பிரபஞ்சன். அதற்கான அளவீடுகள் இன்னும் கடவுளுக்கு கூட வசப்படவில்லை என சந்தோஷப்பட்டுக்கொண்டார். ஆனால் மற்றவர்களின் மதிப்பீடுகளில் தோல்வியுற்றவர்களின் தலையை தன் பக்கமிழுத்து தன் மடியில் சாய்ந்துக்கொண்டவர்.

பிரபஞ்சனுக்கு எந்த மதிப்பீடுகளும் நிரந்தரமானவை அல்ல. எவரும் அவரை ஏமாற்றலாம். எவரும் மற்றவர்களைப் பற்றிய இழிவை, அவர் உடலில் குளூகோஸ் ஏற்றுவதை மாதிரி நீடில் கொண்டு ஏற்றிவிடலாம்.

ஏற்றிமுடித்த அடுத்த நொடி அதிலிருந்து உற்சாகமடைந்து, எந்த மனிதனின் இழிவை தன் மீது ஒருவன் ஏற்றினானோ அவனை நிராகரித்து, முன்னவன் மீது முன்னிலும் அதீத அன்புற்று அவனை மேன்மையால் இன்னும்  மேன்மையுறச் செய்வார்.



இது மானுடப் பண்புகளிலேயே மிக உயர்வானது. எவராலும் கைக்கொள்ள முடியாதது. அபூர்வமாக பிரபஞ்சனுக்கு அது வாய்க்கப் பெற்றிருந்தது.

பாண்டிச்சேரியில் ஏழெட்டு வீடுகள், கள்ளுக்கடைகள், நிலபுலன்கள் என வாழ்ந்த பிரபஞ்சனின்  அப்பாவின் லௌகீக சரிவு, பிரபஞ்சனை ஒரு வகையில் சந்தோஷப்படுத்தியது. மனிதர்கள் இப்படி செல்வத்தால் ஊதக்கூடாதென அவர் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

கொள்கைகள், கோட்பாடுகள் இயல்பாகவே ஒரு படைப்பாளிக்குள் பிடித்துவிடும், தான் மரண இருளின் பள்ளதாக்கில் நடந்தாலும் மானுடத்தின் விடுதலையை எளிய மனிதர்களின் பக்கம் நின்றே போராடி வெல்ல நினைத்தவர்.

தன் பலம் என்பது தன் எழுத்து மட்டுமே. வேறெதுவும் அற்றவன் நான். எனக்குப் பின்னால் சாதியோ, மதமோ, குடும்பமோ, பாரம்பரியமோ இல்லை. நான் மட்டுமே. எனக்குப் பின்னால் வெறும் வெளி மட்டுமே. என்னிலிருந்துதான் இம்மானுடத்திற்கு என் எழுத்து மூலம் ஒளியூட்ட வந்திருக்கிறேன். இதில் தோல்வியுற்றால் இம்மானுட விடுதலையின் தொடர்ச்சிக்கு  என் சரீரத்திலிருந்தது ஒளியையல்ல நெருப்பை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என காலத்தின் முன் கம்பீரமாய் நின்று பெருங்குரலெடுத்து பிரகடனப்படுத்திய  படைப்பாளி அவர்.

அறுபதாண்டுகளுக்கும் மேலான தன் படைப்பு வாழ்வில்  தினம்தினம் லௌகீகதோடு மல்லுகட்டுவது அத்தனை சுலபமானதா என்ன? அதில் தோல்வியுற்று வீழ்ந்தவர்களே, பலியானவர்களே, அல்லது மற்றவர்களை பலிகொடுத்தவர்களே அதிகம்.

பிரபஞ்சன் இந்த அதிகார வெறியிலிருந்து ஒதுங்கி நின்று, ஒரு சிகெரெட் பற்ற வைத்துக் கொண்டு ஆசுவாசமாக அதை எதிர்கொண்டார்.

அந்த எளிய கலைஞன் மீது தமிழ்சமூகம் அன்பு கொண்டது. அவர் பசி என்று சொன்னபோது, அது ஒரு அன்னச்சத்திரத்தையே அவருக்காக அமைத்து தந்தது.

அவர் நோயில் உடல் தளர்ந்து படுக்கையில் சாய்கிறபோது, பல மனிதர்கள் தங்கள் உடல்களால் முட்டுக்கொடுத்துத் தாங்கிக் கொண்டார்கள்.

பெருமிதமான படைப்பாளிதான் பிரபஞ்சன் நீங்கள். எங்களுக்கு அதைத்தானே வாழ்நாளெல்லாம் சொல்லிக் கொடுத்தீர்கள்! முதுகெலும்பு நிமிர்வதற்காக மட்டுந்தான் என உங்கள் சொற்களால் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தீர்கள். அதை எங்கள்  சந்ததிக்கும் நாங்கள் கைமாற்றிக் கொடுக்க அணையா தீ துகள் ஒன்றை உங்களிடமிருந்து இப்போது எடுத்துக் கொள்கிறோம் பிரபஞ்சன்



நன்றி : ஜனவரி மாத: உயிர்மை

Wednesday, December 26, 2018

இந்த வார தேசாபிமானியில் மேலாண்மைப்பொன்னுசாமி எனும் எளிய எழுத்தாளன்








தமிழில் : 

அசல் மனிதர்களை எழுத்தில் அடைந்த

மேலாண்மை பொன்னுச்சாமி
                               
   என் ஞாபகம் இன்னமும் மங்கத் துவங்கவில்லையென்பது நிஜமெனில், மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிபிகள் என்ற கதையே நான் முதன் முதலில் கல்கியில் வாசித்தது. இன்னும் நினைவு கூர்மைதானெனில் அக்கதை முதல் பரிசு பெற்று பிரசுரமாகியிருந்தது.

 பன்றி மேய்க்கும் ஒருவனின் வரைபாடு அக்கதை. ஊருக்கு ஒரு குடும்பமோ, இரண்டு குடும்பமோ ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, பன்றி வளர்த்து, பன்றி மேய்த்து, பன்றி விற்று, அல்லது அறுத்து என தினம், தினம் அல்லல்படும் ஒருவனையே மேலாண்மைப் பொன்னுச்சாமி ‘சிபி’ என வாஞ்சையாய் அழைப்பார்.
அந்த அழைப்பு எனக்கும் சேர்த்து என்பது போல நான் அப்படைப்பாளியைத் தேட ஆரம்பித்தேன்.
அது ஒரு புனைவைவிட புதிர் நிரம்பியதாகவும், சிறுகதையைவிட சுவாரஸ்யம் மிக்கதாகவும் அந்த வயதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

மேலாண்மறை நாடு என்பதே பொன்னுசாமியின் சொந்த ஊர்.

படிப்பு ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. ஸ்கூல் வாசலில் ரோஸ் கலரில் பஞ்சுமிட்டாய் சுற்றிய கழியோடு சத்தம் எழுப்பும் மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?
அவர்களில் ஒருத்தர்தான் இக்கதைகளை எழுதுவது என்பதெல்லாம் என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனது.
நான் இன்னும் தேடி அவரின் பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அச்சிடப்பட்ட அப்பக்கங்கள் முழுக்க சராசரிக்கும் கீழான எங்கள் மக்கள் மிதிபட்டார்கள். அவர்களிலிருந்தே ஒருவன் எழுதத் துவங்கியிருக்கிறான் என்பது இன்னும் எங்கள் தூரத்தைக் குறைத்தது.
மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் என்ற வாக்குமூலத்திற்கு ஒருவர் மட்டும் சொந்தமில்லை என புரிய ஆரம்பித்தது. அம்முன்னத்தி ஏரைப் பின் தொடர எத்தனையோ பின்னத்தி ஏர்க்காரர்களின் அணிவகுப்பு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.

எழுபதுகளில் கிராமங்களுக்குள் வந்து போகும் பஸ்கள். அல்லது ராத்தங்கிப் போகும் பஸ்களின் இன்னும் எழுதப்படாத ஒரு நூறு கதைகள் மிச்சமிருக்கின்றன. பேருந்தை மையப்படுத்தி, அல்லது பேருந்து மனிதர்களை முன் வைத்து என்னால் ஒரு கதையும் எழுத முடிந்ததில்லை. இனிமேலும் எழுதிவிட முடியுமெனத் தோன்றவுமில்லை.
பேருந்து வந்து போகும் கிராமத்தில் என் வாழ்வு இல்லை. அது நகரமும் இன்றி, கிராமமுன்றி இரண்டுங்கெட்டானாய் கிடந்த ஒரு நிலப்பரப்பில் இருந்துதான் நான் எழுத வந்தேன்.

மேலாண்மைக்கு அப்படியில்லை. அவர் ஆற்றங்கரைக்கு அப்புறமாய் அமைந்த வறண்ட கரிசல்மண் கொண்ட ஒரு கிராமத்திலிருந்து எழுத வந்தவர்.
கால்நடையாய் பிழைப்பைத் தூக்கிச் சுமந்து சோர்வுற்று, பேருக்கு ஒரு பெட்டிக்கடை அல்லது பலசரக்குக்கடை என பெயரிட்டு அதில் நின்றுகொண்டு சம்சாரிகளின் சாமார்த்தியத்தை, சாமான்யர்களின் அன்பை, காதலை, காமத்தை எல்லாம் கண்களால் பருகி, கைக்கு கொண்டு வந்தவர்.

நசநசக்கும் வியர்வையினூடே வெயிலோடு நகரும் ஒரு டவுன் பஸ் மனிதர்களை மனிதல் கொண்டு கி.ரா. ‘மின்னல்’ என்ற ஒரு கதை எழுதியுள்ளார்.
மனிதர்களின் வெறுப்புமிக்க, கசப்பான மனநிலையை ஒரு குழந்தையின் இருப்பு, ஒரு இளம் பெண்ணின் சிரிப்பு எப்படி மாற்றும் வல்லமைக் கொண்டது என்பதே கதை.

ஒரு படைப்பாளிக்கு இப்படியான தருணங்களை எழுத்தில் கொண்டு வருவது பெரும் சவால் நிறைந்ததுதான்.
மேலாண்மை அதே சூழலை மையப்படுத்தி  ‘எட்டரை’ என்றொரு கதை எழுதியிருக்கிறார்.

மனிதர்கள் ஈரம் நிறைந்தவர்கள் தான். ஆனால் எப்போதும் அப்படி அல்ல.
அப்பேருந்தில் இடம் பிடிப்பதில் கிராமத்து மனிதர்களிடம் ஏற்படும் போட்டி, பெரும் சண்டையாக வெடிக்கிறது. நாம் கெட்ட வார்த்தைகளென வகைப்படுத்தி வைத்திருக்கிற சொற்களால் வசைமாரிப் பொழிகிறார்கள்.
பஸ் வேகமெடுக்கிறது. சண்டையும் வலுக்கிறது.

ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணின் வீறிட்டு அழும் குரல் கேட்டு பேருந்து நிற்கிறது. சண்டைக்கார முகங்கள் அனைத்தும் அப்பெண்ணின் இருக்கையை நோக்கிக் குவிகின்றன. அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி. விருதுநகர் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். போகிற வழியில் வலி தாங்க முடியாமல் கதறுகிறாள்.

மொத்த ஆண்களும், அவசரமாகப் பேருந்தைவிட்டு இறங்குகிறார்கள். ஒருவர் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ஜன்னல் வழி மறைப்புக்கு நீட்டுகிறார். கொஞ்சம் பேர் அவள் சுகப்பிரசவத்திற்கு கடவுளை வேண்டுகிறார்கள். வெயிலின் உக்கிரம் எதுவும் அவர்களை எதுவும் செய்துவிடவில்லை.
எல்லோர் காதுகளும் ஒரு குழந்தையின் அழுகைக்காகத் தவம் கிடந்து காத்திருக்கிறது.

அது அவ்விதமேயாகிறது.
குழந்தையின் அழுகைச் சத்தம் எல்லா மனிதர்களின் முகங்களிலும் புன்னகையைத் தருகிறது.

கண்டக்டர் விசில் ஊதுகிறார். அடித்துப் பிடித்து நெக்கித்தள்ளி அவர்கள் மீண்டும் இடம்பிடிக்க ஏறுகிறார்கள்.
அதே கெட்ட வார்த்தை, அதே சண்டை, சண்டையில் முன்னிலும் உக்கிரம் கூடியிருக்கிறது.

அசலான மனிதர்களை, பல வருட அனுபவங்களால் படித்தாலொழிய இப்படி ஒரு கதையை ஒரு படைப்பாளி தொடக்கூட முடியாது.
பேருந்துப் பயணங்களின் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் பல ஆண்டுகள் பயணித்த ஒரு எழுத்தாளனே தன் சக பயணிகளை இத்தனை நுட்பங்களோடு சித்திரிக்க முடியும்.

எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்த என்னைப் போல பலருக்கும் எழுத்தும், இயக்கமும் சரிசமமாய் மல்லுக்கு நின்றன. சிலர் எழுத்தையும் பலர் இயக்கத்தையும் கைக் கொண்டோம்.

ஆனால் இரு தரப்பினருக்குமே மேலாண்மை ஆதர்ஷமாக இருந்தார். பெரிய காலேஜிலெல்லாம் போய் படிக்காத ஒருத்தர், பலசரக்குக் கடையில் நின்று எழுதுகிற கதைகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் எங்களை மேலும் மேலும் வியப்பூட்டின.

ஒரு தருணத்தில் தமிழ்நாட்டில் வெளியான எந்த நடுநிலைப் பத்திரிகையிலும் அவர் படைப்புகள் இல்லாமல் இல்லை.

ஆனந்தவிகடனில் ஜெயகாந்தனுக்கு அப்புறம் அதிகம் கதை எழுதியவராக மேலாண்மையையே சொல்ல முடியும்.

ஒருவேளை தோழர் தனுஷ்கோடி ராமசாமிக்கு திடீர் மரணம் சம்பவிக்காமல் தள்ளிப் போயிருந்தால் அவரும் அவ்வரிசையில் நின்றிருப்பார்.

சுபமங்களாவில் ஆரம்பித்து, கல்கி, குமுதம், தாமரை, செம்மலர் என விருதுநகர் மாவட்ட வெயிலேறிய மனிதர்களின் உடல் வெப்பம் பரவின எழுத்தை என்னைப் போல வட தமிழ்நாட்டிலிருந்தவர்களும் உணரத் தொடங்கினோம்.
தமுஎச-வின் ஒரு மாநில மாநாட்டில்தான் நாலுமுழ வேட்டியைத் தூக்கிக்கட்டிய குள்ளமான அம்மனிதனை, ‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’ என என் தோழர் வெண்மணி அறிமுகப்படுத்தினார்.

உள்ளங்கைச் சூட்டைப் பரிமாறிக் கொண்டோம். ‘பூக்காத மாலை’ என்ற அவரின் அப்போதைய கதையைப் பற்றிய எங்கள் இருவரின் விவாதம் நிறைந்தபோது பிரதிநிதிகள் மாநாடு முடிந்திருந்தது.

தன் படைப்பின் திசை மாறிவிடக் கூடாது என்பதில் அவருக்கு எப்போதும் ஒரு கவனமிருந்தது. வாசிக்கும் இலக்கியத்தினூடே, மார்க்சியம், தத்துவம் என சமமாகக் கலந்து படிக்கும் பழக்கத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தார்.
அவரால் இரண்டுமணி நேர மார்க்சிய வகுப்பை தனியாக இளைஞர்களுக்கு எடுக்க முடியும். அத்தனையையும் வாழ்விலிருந்தும், இயக்கத்திலிருந்தும் அவர் அடைந்தவையே.

கரிசல் மண்ணின் ஒரு பெரும் வாழ்வை  ‘கோபல்ல கிராமம்’ மாதிரியோ,  ‘அஞ்ஞாடி’ போலவோ எழுத வேண்டிய முனைப்பு அவருக்குக் கடைசிவரை கைக்கூடிவிடாமல் போனது, ஒரு வகையில் தமிழிலக்கியத்திற்கு அதிர்ஷ்டமின்மைதான்.

புதுமைப்பித்தன் போலவே, வண்ணதாசன் போலவே, மேலாண்மையும் தன் வாழ்வின் பாட்டையும், மனிதர்களின் இயல்பையும் சிறுகதைகளாகவே முடித்துக் கொண்டார்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு மூத்த அண்ணன் ஸ்தானம் எப்போதும் அவருக்கு உண்டு.

அவரையும், அவர் படைப்புகளையும் நானும் ஷாஜகானும் எல்லாத் தோழர்கள் மத்தியிலும் கிண்டலடிப்போம். ஒரு போதும் அவர் முகத்தில் கோபமேறிப் பார்த்ததில்லை.

அவர் தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த சமயம் அது. நான் கல்லூரிப் படிப்பை பாதியில்விட்டு இலக்கியம், இயக்கம் என இயங்கிக் கொண்டிருந்த எண்பதுகளின் இறுதி நாட்கள்.

எங்கள் வீட்டு சாலிடர் டி.வி. தெருவில் ஒரு டேபிள் போடப்பட்டு தினம் தினம் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டு, தெரு மக்களுக்கு படம் போட்டுக் காண்பிக்கும் மாபெரும் உபச்சாரத்தை அப்பா தனக்கோட்டி வாத்தியர் தவறாமல் செய்து கொண்டிருந்த நாட்கள்.

தோளில் மாட்டின பையோடு டி.வி. பார்க்கும் ஜனக்கூட்டத்தில் வந்து நின்ற அந்த நடுவயது மனிதனை உட்காரச் சொல்லி அப்பா கைக்காட்டின இடம் தெருவை அடைத்து அம்மா கட்டியிருந்த கோழிக் கூண்டு.
எதுவும் பேசாமல் அவர்களோடு உட்கார்ந்து ‘சவாலே சமாளி’ பார்த்து முடித்து, எல்லா மக்களும் போன பின்பும் கோழிக் கூண்டைவிட்டு எழாமலிருந்த அம்மனிதனைப் பார்த்து,

‘‘என்ன ஊர்ப்பா?’’ இது அப்பா,
‘‘தெக்க, விருதுநகர் பக்கம்,’’
‘‘பரவாயில்லை வந்து சாப்புடு’’ இது அம்மா.
‘‘நான் பவாவைப் பாக்கணும்’’ இது அவர்.
‘‘அவன்ல்லாம் ஒரு ஆளு. என் சம்பாதியத்துல தின்னுட்டு ஊர் சுத்திட்டு ஊரடங்குன நடுச்சாமத்துலதான் வருவான், நீ சாப்புடு’’
அவர் தரையில் உட்கார்ந்து கை நனைக்கையில்,
‘‘அவனைப் பாக்கவா இம்புட்டு தூரம் வந்திருக்க, நீயும் அவன மாதிரியே…’’
எதுவோ பொறி தட்ட
‘‘உன் பேரு?’’
‘‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’’

வாயில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளினூடே அவர் வார்த்தைகள் தடுமாற…
அப்பாவின் கைகள் அவரை நோக்கிக் குவிகின்றன.

ஒரு எழுத்தாளனுக்கான மரியாதையும், அன்பும் அதற்குள் அடங்கியிருந்தன.
அதுவரை வந்த அவரின் எல்லாக் கதைகளையும் அப்பா வாசித்து தனக்குள் ஏற்றிக் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் அவை.
நான் நள்ளிரவு வந்தபோது இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரும், ஈசிச் சேரில் அப்பாவும் தூங்கிக் கொண்டிருந்ததைக் கலைக்க மனமின்றி, திருட்டுப் பூனையின் கால்களில் நடந்து நடையில் பாய் விரித்துப் படுத்தேன்.

விடிந்த காலைதான், இரவு வந்திருந்த அதிதி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன் என்பதை எனக்குச் சொன்னது.

அடுத்த இருநாட்களும் எங்கள் கொல்லை மேடுகளில் சுற்றிச்சுற்றி நாங்களிருவரும் இலக்கியம் பேசினோம். கிராமத்து மனுஷாளையெல்லாம் அவர் வார்த்தை அப்பங்களாய் எனக்கு ஊட்டினார்.

எங்கள் நிலப்பரப்பு ஊற்றுநீரை திராட்சை ரசமாக்கி நான் அவருக்குப் பருகத் தந்தேன்.

இதோ முப்பது வருடங்கள் சுலபமாகக் கடந்துவிட்டன.

எதனாலோ சொந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, அவர்களின் அப்பாவித்தனத்தை, அல்லது அடாவடியை எல்லாம் இழந்து சென்னையில் மகள் வீட்டு அப்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு அறையில் அப்படைப்பாளியின் வாழ்வு சுருங்கிவிட்டது. எதிரே அவர் எழுதி முடித்து தொகுப்புகளாய் வந்த புத்தக அடுக்குகளில் ஒளிந்திருக்கிறார்கள் அவரின் அசல் மனிதர்கள்.