Wednesday, May 27, 2009

வாழ்வை கொண்டாடிய கலைஞன் : சந்தானராஜ்


பாராளுமன்ற தேர்தலன்று காலை என் பைக் விபத்துள்ளாகி கையையும், காலையும் உடைத்துக் கொண்டு பத்து பதினைந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுகிடக்கிறேன். நண்பர்களின் வருகைகக்காக மனம் ஏங்கி தவிக்காமல் அறை முழுவதும் கொத்து கொத்தாய் நண்பர்கள் பூத்த வண்ணம் காயத்திலிருந்து வெறுமையை துடைத்து ஆறுதலை பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று மதியம் என் ஆத்மார்த்த சகா ஆனந்த் ஸ்கரியா தொலைபேசியில் அழைத்து, "பவா, நம் சந்தானராஜ் மறிச்சு போயி" என தழுதழுத்தார்.
எந்த பதட்டமுமின்றி நான் மௌனமானேன். அசைவற்று கிடந்த என்னிலிருந்து சந்தானராஜ் என்ற அந்த மகாகலைஞனை நான் அறிந்த அந்த முதல் நிமிஷத்திற்கு சில விநாடிகளில் பயணிக்க முடிந்தது. முதன் முதலில் சா. கந்தசாமி தான் எனக்கு சந்தானராஜைப் பற்றி சொன்னார்.

சந்தானராஜ் வீட்டிற்கு ஒரு நாள் காலை டிபன் சாப்பிட போயிருந்தோம். ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளை என் தட்டில் வைத்துவிட்டு ஓடிப்போய் பேன் ஸ்விச்சை அணைத்து விட்டு "இட்லி பறந்திடும்" என எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார்.

கொஞ்சம் கொஞ்சமாய் அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் ஓவியங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்து சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் அவருடைய உடல் அடக்கத்திற்கு முன் அவருடனான எனது அனுபவங்களை தனிப்புத்தகமாக எழுதலாம். பொங்கி பொங்கி வரும் உணர்வுகளை வார்த்தைப் படுத்தும் முன் மீன்குஞ்சுகள் மாதிரி துள்ளி விடுகின்றன.

ஒரு நாள் காலை டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேன் மிஷன் செகரட்ரியோடும் அவருடைய மகளோடும் சந்தானராஜை அவருடைய சென்னை வீட்டின் மூன்றாவது மாடியில் சந்தித்தோம். ஒரு காவி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டை அணியாத உடலோடு ஒரு கேன்வாசில் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஒரு திரும்பலுக்கான காத்திருப்புதான் அது எனினும் அது நிகழாமலிருக்க மனதளவில் பிராத்தித்தோம். ஒரு சிறு அசைவின் அறுதலில் அவர் எங்களோடு இருந்தார்.

நான் அவரை அறிமுகப்படுத்தினேன். கண்கள் விரிய தன் நெஞ்சோடு அவரை அணைத்துக்கொண்டு, "உன் பள்ளிக்கூடத்துலதான்யா நான் படிச்சேன்". டென்மார்க்கிலிருந்து வந்து என் கல்வி கண்ணை திறந்தேயே அதுக்கு என அவர் கையை பரிசித்து முத்தமிட்டார்.
உடனே தன் முன் தயாராக வைக்கப்பட்டிருந்த பாட்டிலை திறந்து விஸ்க்கியை ஊற்றி "எடுத்துக்கோ, இது என் நன்றி காணிக்கை" என்றார். தன் மீதேறியிருந்த கௌரவம் உதிர அந்த வெள்ளைக்காரன் ஒரு குழந்தை பால் குடிப்பது மாதிரி அந்த அதிகாலையில் விஸ்க்கியை அருந்திக் கொண்டிருந்தான்.

ஒரு அமானுஷ்ய கணத்தில் ஒரு அமானுஷ்ய மனுஷனோடு இருப்பதாக நான் உணர்ந்தேன். பேச்சு ஓவியம் பற்றி, கலையின் உன்னதம் பற்றி, கோடுகள் பற்றி, அதன் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிப்பற்றி சுழன்று சுழன்று விஸ்க்கி டம்ளருக்குள் மையமிட்டது.
அவரிடமிருந்து விடைபெறும் போது அந்த வெள்ளைக்காரனின் கண்கள் அவருடைய ஒரு ஓவியத்தின் மேல் நிலைபெற்றிருந்தது. எத்தனை பணமும் தரக்கூடிய மனநிலை அவனுக்கு இருந்தது. சந்தானாராஜ், "இது இந்திய ராணுவ தலைமையகத்திற்கு நான் தர ஒப்புக்கொண்டு செய்து கொண்டிருக்கும் ஒர்க். நீ எனக்கு கல்வியே தந்தவனாயினும் உனக்கு இதை தரமுடியாது".

அவன் என் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து போவான் என பாவனையால் நடித்துக் காட்டினார்.
எனக்கு சா. கந்தசாமி சொன்ன பறக்கும் இட்லிகள் நினைவுக்கு வந்தன.
அச்சந்திப்பிற்கு பிறகு அவருடனான நெருக்கம் இடைவெளியற்றது.

திருவண்ணாமலையிலேயே வீடு வாங்கி தன் கேன்வாஸ்களோடு வாழ நேர்ந்த பல நாட்கள் நான் அவரோடு இருந்திருக்கிறேன் அவருடைய முதுமையின் நாட்கள் வலி நிறைந்தது. "நான் ஒரு பணப்பிசாசு" என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டார் அதிகாரங்களின் மீதான மனச் சாய்வுக்கு இடம் தந்தார். ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவருடனான மூன்று மணி நேரத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து முடித்தார். தன் உடல் உபாதைகளை தீயாய் எரிந்துக் கொண்டிருந்த தன் ஓவியத் தகிப்பில் பொசுக்கிவிட முயன்றார்.

சமீப நாட்களில் என்னை தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஒதுக்கி அவரை சந்தித்த போதெல்லாம் மிகுந்த மன வெறுமையில்தான் திரும்பியிருக்கிறேன். தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை வசனம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்.

நான் ஒரு வார பத்திரிக்கைக்கு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பிரதியோடு அவரைச் சந்தித்து அதை படித்துக் காட்டினேன். என்னை கட்டி தழுவி, "என்னை நானே கண்ணாடி முன் நின்று பார்த்து பேசிக்கொள்வது மாதிரி உள்ளது" என திரும்பத் திரும்ப சொன்னார்.

வம்சி புத்தக நிலையத்தில் சந்தானராஜ், பி. கிருஷ்ணமூர்த்தி, காயத்ரி கேம்யூஸ், ஆகியோரின் ஓவியங்களை "மூன்று ஓவியர்களும் 16 படங்களும்" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினோம். ஒரு மணி நேர மேக்கப்பிற்கு பிறகு ஒரு இளைஞனான உணர்வில் எங்கள் கடைக்கு வந்தார். ரொம்ப நேரம் எங்களோடு இருந்த நாள் அது. எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை தேக்கி வைத்திருந்தார். லௌகீகமான அவரின் சில அதீத அக்கறைகளை நான் புறந்தள்ளினேன். எங்கள் இருவருக்குமான நட்பு இனைக்கப்படாமலேயே விலகிக் கிடந்ததாகவே உணர்கிறேன்.

நான் அழைத்து போன சில நாண்பர்களுடனான போதையூட்டின கொண்டாட்டங்கள் அபூர்வமானவை. காயத்ரி கேம்யூஸ்ஸின் படங்களை ரொம்ப பிடித்திருப்பதாக திரும்ப திரும்ப சொன்னார். ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி சுழன்று சுழன்று பயணித்து நிலை பெறாமல் காற்றில் அலையும் உரையாடல்கள் அவருடையது. மரணத்திற்கு மிக அருகில் அவருடைய படுக்கை இருந்தது. தன் மனைவி மகாலஷ்மிதான் அதை இன்னும் நெருக்கமக்குகிறாள் என சொல்லிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்த தன் மனைவி மகாலட்சுமியின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். மிதமிஞ்சிய அக்காதலே ஒரு ஓவியரான மகாலஷ்மியால் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் வரைய முடியாமல் போனதிற்கு காரணம்.

"குக்கூ" நடத்தின குழந்தைகள் திருவிழாவிற்கு அவரை அழைத்து டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் பேசசொன்னோம். மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்தார்.
இதோ இதுதான் என் வகுப்பறை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மீதிருந்து பீடி நாற்றம் வருவதாக (பீடி பிடித்தால் பீடி நாற்றம் வரும்தானே) என் வாத்தியர் அடித்து துரத்தினார். அதன் பிறகு எழுவது வருஷத்திற்கு அப்புறம் இப்போதுதான் இந்த ஸ்கூலுக்கு வருகிறேன். என குழந்தைகளின் குதுகலத்திற்கிடையே நீண்ட நேரம் பேசினார். அண்ணாமலையார் கோவிலுக்கு போனால் "சித்த நேரம் இருந்து விட்டு போகத் தோனுதே, ஏன் சர்ச்சுக்கு போனா உடனே வீட்டுக்கு போகலாம்ணு தோணுது? கடைசி ஜெபத்திற்கு முன்னாலேயே அங்கிருந்து வந்துடறோம்" என துவங்கிய அவரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல், "அது அந்த கட்டிட கலை சம்மந்தப்பட்டது. கிருஸ்துவ சர்ச்சுகள் வெளிநாட்டு கட்டிட கலைகளால் ஆனாது. லௌகீக வாழ்விற்கு அது உந்தும். இந்து கோவில்கள் தமிழ் மரபு சம்மந்தப்பட்டது. அது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லும். அதனால் இனி சர்ச்சு கட்டுகிற போது அதை மரபுப் படுத்தனும். நவீனத்திலிருந்து அதை மீட்டெடுக்கலாம் என்பது மாதிரியான தர்க்க ரீதியான உரையாடல்கள் என் வாழ்வில் மிக முக்கியமானது. நான் சந்தித்த பல ஓவியர்கள், குறிப்பாக மருது, ஆதிமூலம், வல்சன் என்று எல்லோருக்குமே சந்தானராஜ் ஆதர்சமாக இருந்தார். அவரை நீண்ட பேட்டி எடுக்க வேண்டுமென்று நானும் சிநேகிதி திலகவதியும் எடுத்த முயற்சி, அவருடனான ஒரு நாளை படமாக்க வேண்டும் என நானும் காஞ்சனை சீனுவாசனும் எடுத்த முயற்சி, அவரை எனக்காக மட்டும் ஒரு படம் வரையச்சொல்லி வாங்கி விட வேண்டும் என நான் ரகசியமாய் நான் எடுத்த முயற்சி எல்லாமும் நொடிகளின் இடைவெளிகளில் தோற்றுவிட்டது.

Wednesday, May 13, 2009

மதிப்புரை : த. எ. மாலதி.

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை.- த. எ. மாலதி.

கலைமனம் என்பது மனித மரபுகளை, கட்டுப்பாடுகளைத் தாண்டி தனக்கான உள்ளுணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்திக் கொள்வது கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல்வேறுவித போராட்டங்கள் நடைபெற்றாலும் தனக்கான வாழ்வியில் பாதையில், இழந்த உணர்வுகளின் ஆழத்தில் மீண்டும் மனம் சென்று இழப்புகளை மீட்டெடுக்க முயல்கிறது. ஏனோ காலச் சக்கரத்தின் இறுகிய பற்களில் ஒவ்வொரு தனிமனிதனின் விருப்புகள் துண்டிக்கப்பட்டு அந்தர வெளிகளில் தொங்க வைத்துவிடுகிறது. மரபுகளற்ற வெளிகளில் திரைகளின்றி பரிபூரணத்துவத்தோடு இயங்கும் முகங்கள் சிலவே. கலைஞன் பவாசெல்லதுரையும் ஆழ்மனப் பதிவுகளை மீட்டுக் கொணர்ந்து, மனிதத்தை மறந்த அரைமனிதர்களையும், தன் இயற்கை வாழ்வைத் துய்த்த அலாதியான தருணங்களையும், தன் உணர்வுகளோடும், ஆளுமையோடும் வாழும் பெண்களையும் இவர் கதை பரப்புகளில் நிரம்ப வைத்துள்ளார்.

பவாவின் கதைகளில் தனிச்சிறப்பாக வெளிப்படுவது, ஒவ்வொரு கதையின் உள்ளூட்டத்திலும் வீழ்படிவாக விளங்குவது மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சியும், மனித குலம் இயங்குவதற்கு ஆதார அச்சாணியாய் இருக்கும் தூய அன்பும், தனிமனிதனின் அடிப்படைத் தேவை நிறைவேறாதபொழுது, வன்முறை உயிர்த்தெழும் தீவிரமும், நேசமற்ற மனிதர்களின் உயர்சாதி இறுக்கத்தின் வெறித்தனமும், ஒவ்வொரு இழைகளாக மனிதர்களை இணைத்து இறுக்கிப் பிடித்து வாழ்வைக் கொண்டாட வைக்கும் காதலும், தம் வாழ்வோடு ஒருங்கிணைந்த பண்பாட்டுக் கலைகளும், அவைகள் தனிமனித உணர்வுகளில் உயிரோடு கலந்திருக்கும் பாங்கும், இயற்கையோடு கரைந்து வாழ்ந்த வாழ்வனுபவங்களின் நம்பகத் தன்மையும், நேசமும் உயிர்ப்பும் என்று விரவிக் கொண்டிருக்கும் பல உணர்வுகள் எச்சத்தில்...

தன் மண்ணின் விழுமியத்தோடும், இயற்கையோடும் கலந்த தன்மையால் பவாவின் கதைகளில் மாறாத உயிர்ப்புத் தன்மை மிளிறிக் கொண்டேயிருக்கிறது.
என் மனவெளிகளில் ஓயாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கதைகளில் சில "முகம்"கதை சராசரியான மனித இயல்பை, குடும்ப நிறுவனத்தில் மனித உணர்வுகள் சிதைக்கப்பட்டு தன் மனம் சார்ந்த வாழ்வை வாழ முடியாத மனிதனின் இயல்பும் முகமுடி அணிந்து அருவமாய் இயங்கும் உறவுகளின் போலித் தனமும் வெளிச்சமிட்டுக் காட்டி தன் சுய முகத்தை தொலைக்கும் மனிதர்களை குழந்தை மனத்தின் புனிதத்தை வெளிப்படுத்தி நம் முகத்திரையை கிழிக்கிறார்.

கபடமற்ற மனிதனின் உணர்வுகள் உறிஞ்சப்பட்டு ஆதிக்க வெறியர்களால் சுரண்டப்படும் அவலமும், அதனால் அவரைச் சார்ந்துள்ள குடும்பம் சிதைவுறும் அவலத்தையும், உள்ளத்தை மறைத்து உதட்டளவில் உரையாடும் நவீன நாகரிகத்தின் இழிதன்மையும் கலைத் தன்மையோடு வெளிப்படும் "வேறுவேறு மனிதர்கள்" ஒரு முக்கிய பதிவு.

அன்பைப் பருக முடியாத குழந்தைகளின் ஏக்கத்தையும், மன உலகத்தையும் பதிவு செய்து, தடம் மாறும் வாழ்வின் வலிகளை வெளிப்படையாய் காற்றின் அதிர்வுகளில் செவிப்பறைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்து, விளிம்புநிலை மக்களின் வலிகளை இனங்காட்டுகறது "மண்டித்தெரு பரோட்டா சால்னா"

கலைஞனின் உயிரோடும், உணர்வோடும் கலந்திருப்பவை கிராமியக் கலைகள். தலைமுறை, தலைமுறையாய் இதிகாசங்களையும் புராணங்களையும் நடித்துக் காட்டி, மனிதர்களின் ஆன்மாவோடு கலநது புத்துயிர்ப்பூட்டி, உழைப்பின் கடுமையை மறக்கச் செய்து ஆடலில் மகிழ்ச்சிப் பிரவாகத்தை கண்டடைவது கலைமனம்.
கலைகளின் இழப்பு, பண்பாட்டைச் சிதைத்து நாகரிகப் போர்வையின் விளிம்பில் சிக்கி, தத்தளிக்கும் மனங்களை வெளிக் கொணர்கிறது "ஏழுமலை ஜமா" எழுத்தோவியம்.

மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் வர்க்கத்தின் உச்சக்கட்ட கோரப் பற்களை உடைத்தெறிகிறது "சிங்காரக் குள மல்லிகாவின் ஆண்மைத் திறம்". ஆம், பலவேளைகளில் ஆண்கள் ஆமையாய் உள்ளொடுங்கும் நிமிடங்களில் பெண்களின் புலித்திறம் வெளிப்பட்டு வரலாற்றின் கண்களை விழிக்கச் செய்கிறது. இதோ ஒரு தலைமுறையின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது சிங்காரக்குளம். இரட்டைக் குவளை முறையும், தீட்டும், ஏளனப் போக்கும், போராட்டமும் என பல வலிகளின் உட்பிரிவுகளை ஒரு முகமாய் தாங்கித் துயருரும் அடித்தள மக்களின் உணர்வுகளை அப்பட்டமாய் விளக்கிக் காட்டுகிறது சிங்காரக் குளம். பெண்மையின் ஆற்றலை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளும் பவாவின் நேர்மை பாராட்டிற்குரியது.

காட்டு வாழ்க்கையை அங்குலம், அங்குலமாய் துய்த்துப் படர்ந்திருக்கும் கலைமனம் அவற்றின் ஏறற, இறக்கங்களையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தி, மனித உணர்வுகள் நாகரிக முதிர்ச்சியில் செயல்படுவதாய் வெளிப்படுத்திக் கொண்டாலும் இயற்கை மடியில் தவழ என்றுமே மறுப்பதில்லை. தாய்மண்ணின் மடியோடு தவழ்ந்து, தவழ்ந்து உறைவதையே பெரிதும் பேறாகக் கருதுகிறது.

"ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்" வாசித்து முடித்தவுடன் என் மனத தோணிகளில், ஆயிரமாயிரம் தேவதைகள் வெண்சிறகோடு சிறகடித்துப் பறந்து பயணிப்பது போன்ற லயிப்பு.நிறைந்த ஆசைகளின் வெளிப்பாடுகள் கற்பனை வெளிகளில் சரம்பாடி இதம் சேர்க்கிறது கவிமனத்தில் இழந்த அன்பினை அழகினை மீட்டுக் கொணர்ந்து சுகம் சேர்க்கிறது நினைவின் அதிர்வுகளில் ராஜாம்பாள் என் நினைவுக் கிளைகளிலும் தொற்றி, உணர்வுக் காம்பினைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறாள். என் இரவின் மணித் துளிகளை இனிமையாக்கி மகிழச் செய்தது இக்கதை. இதுதானே படைப்பின் உச்சம்.
தன் படைப்பின் மூலம் வாசிப்பை ருசிபடுத்தலே கலைஞனுக்குக் கிடைக்கும் வெற்றி. இதனுள்ஒரு சாதி பேதத்தை தாண்டும் உயிர்மீட்டும் மனிதம் வெளிப்பட்டு வாழ்வியல் குறிக்கோளை எடுத்துக் காட்டும் திறம், பவாவிடம் வாய்த்துள்ளமையால், ஒரு படைப்பாளனாக வெற்றி பெற்றிருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம், தனியுடைமை ஆக்கப்பட்டு சூரர்களின் சொர்க்கமாக சமூகம் மாறும்போது, உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகளில் குருதிகளைத் தேக்கும் மனிதர்கள் தடம் மாறுவது இயற்கையே. அப்படித்தான் "சத்ரு" கதையிலும் இருளன் சித்தரிக்கப்பட்டுள்ளான். இப்பதிவு சமூகத்தில் வாழும் எத்தனையோ அப்பிராணிகளை வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கை பொய்க்கும் நிலையில் மனித சமூகம் வன்முறைச் செயல்பாடுகளில் இறங்கி மனித நேயத்தைத் தொலைக்கும் அவலத்தை சித்தரிக்கிறது. அதனால்தான் இயற்கையின் மீது மனம் கவிந்த நம் முன்னோர்கள்.
"நீரின்றி அமையாது உலகு" - என்றனர். எவ்வளவு நுட்பமாக இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அறியச் செய்திருக்கிறார் பவா. வன்முறையின் ஆணிவேரை, ஆழப்பிடுங்கி வெளிக்காட்டி விநோதப்படுத்துகிறார்.

மனிதர்கள், அவரவர்களின் உணர்வுகளைப் பிறருக்காக தியாகம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் சிதைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக தன் மனச் சிந்தனைகளின் விடுதலை உணர்வோடு செயல்பட்டு வாழ்வதே வாழ்தலின் இயல்பு. முகமூடி வாழக்கை அருவருக்கத்தக்கது. சிதைவுகள் மீண்டும் சேர்வதுமில்லை வாழ்வதுமில்லை.
குழந்தையை விரும்பும் பெண்ணின் உளவியலுணர்வை மையமிட்டுள்ளது "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை". ஆம். கருவறைகள், இருளறைகள் அல்ல.

நட்சத்திரங்களையும், முத்துக்களையும் உருவாக்கும் ஒளியறைகள். மானுடத்தை ஜனிக்க வைக்கும் ஆதார உறுப்பறைகள். தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் மனவுணர்வு, புற வெளிகளில் காணும் காட்சிகளிலும் படிந்திருப்பதை அழகுபட வருணித்திருக்கிறார்.
தன் உளவலிகளை, மனச்சிதைவுகளை, புறக்காட்சிகளில் காணும் இயேசு பிறப்பு நிகழ்ச்சியின் வழி ஆற்றிக் கொள்ளும் பெண்ணின் இருப்பை அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது இக்கதை. குழந்தைப் பெறுதலை முக்கியப்படுத்தும் சமூகத்தின் மனோநிலையும் அதன்வழி பெண்ணின் உணர்வு சார்ந்த வலிகளையும் வெளிப்படுத்துகிறது இக்கதை.
மொத்தத்தில் மனிதனின் கூருணர்ச்சிகளை மையமிட்டு, புடம்போட்டு, சமூகத்தின் தனிமனித உணர்வுகளின் சிதைவு நிலைகளையும், மனிதத்தின் இழப்பையும், சாதிவேரை, ஆழத்தோடு பிய்த்தெறிய முனையும் போராட்டமும், சராசரி மனிதன் சமூக மரபுக் கட்டுக்களுக்கு அஞ்சி, தன் அகத்திற்குள் வாழும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் அவை வெளிப்படுத்த இயலா நிலையில் கற்பனைகளோடு இயங்கும் யதார்த்த வாழ்வின் இயல்பையும் தன் படைப்பின் மூலம் வெளிப்படையாகவே பேசுகிறார் பவா.

இச்சிறுகதைத் தொகுப்பு காட்டும் நில வருணனைகளின் தனிச் சிறப்பும், மனித இயல்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் தன்மையையும் இழைத்துக் கொடுத்திருக்கும் பவாவின் உயிர்போடு கூடிய இக்கதைகள் மனிதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உச்சத்தை எட்டியுள்ளது.

Friday, May 8, 2009

மெளனம் கலைந்து மன்னிப்பு


"ஆசிரியைக்கு அன்புடன்" - ஆவணப்படம்

நெய்வேலி செல்வன், நவீன கலை இலக்கியச் சூழலிலில் தொடர்ந்து புழங்கும் பெயர். அவர் ஒர் புகைப்பட கலைஞர். தேடித் தேடி வாழ்வின் அவலத்தையும், அழகையும் தன் புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் நாங்கள் நடத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டிற்கு அவர் புகைப்படங்களை காட்சிப்படுத்த நினைத்து பெரும் ஆர்வத்துடன் அவரிடமிருந்து அவர் படைப்புகளை பெற்றோம். சிலர் மீது மட்டுமே குவியும் வேலைப் சுமையில் மூச்சுதிணறி, அவர் புகைப்படங்களை கௌவரமாக காட்சிக் படுத்தாதது மட்டுமல்ல, மதிப்புமிக்க அப்புகைப்படங்களை அவரிடம் திரும்பவும் ஒப்படைக்க முடியவில்லை. அவர் என் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். உணர்ச்சி குவியாலாகி எல்லாவற்றையும் உடனே நிறைவேற்றிவிடவேண்டும் என்ற மனநிலையிலிருந்து சற்றேனும் விலக வேண்டும் என்றுணர்ந்தேன்.

ஓராண்டுக்கு பிறகு அவர் புகைப்படங்களின் அத்தனை பிரதிகளையும் சேலம் மணியண்ணனிடம் சொல்லிலி அவர் விரும்பியபடியே திருப்பி கொடுத்த பின்புதான் என் குற்றவுணர்வு குறைந்தது.மௌனம் எங்கள் இருவருக்குமான இடைவெளியை மூன்று வருடங்களாக அடைகாத்தது. கடந்தமாதம் செல்வனிடமிருந்து ஒரு கூரியர் வந்திருந்தது. இன்னும் மிச்சமிருந்த சிறு நடுக்கத்துடன் பிரித்தேன். இரண்டு ஈயஈ – கள். அன்றிரவே அவருடைய "ஆசிரியைக்கு அன்புடன்" படத்தை ஷைலஜா மற்றும் என் குழந்தைகளோடு பார்த்தேன். எல்லோருக்குமே அப்படம் பிடித்திருந்தது.

நெய்வேலிலி குளோனிலி பள்ளியில் பாட்டாசிரியையாக பணிபுரிந்த ஸ்டெல்லா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியைப் பற்றியது அப்படம்.குளோலினி பள்ளியின் ஒரு வெள்ளிவிழா கூடுகையில் பழைய மாணவர்கள் சங்கமித்திருக்கிறார்கள். பேச்சு தங்கள் பிரியத்திற்குரிய ஸ்டெல்லா டீச்சரை மையம் கொண்டிருக்கிறது.அவர்களின் தற்போதைய வசிப்பிடம், வாழ்நிலை எல்லாவற்றையும் தேடி கண்டைந்து சக நண்பர்களிடம் பகிரவேண்டிய பொறுப்பு பொறியாளராகி பெங்களூரில் வசிக்கும் ஆனந் (பழைய மாணவர்) என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஆனந் தன் பழைய இரட்டை ஜடை போட்ட அழகிய ஸ்டெல்லா டீச்சரை முதுமையேறி, வறுமைதின்று கொண்டுயிருக்கும் ஒரு கிழிந்த பழத்துணி மாதிரி தனிமையுற்று, தான் வளர்க்கும் இரண்டு கிளிகளிடம் தன் தனிமையின் கதையை ஒப்புவித்திருக்கும் எவ்வித ஆதரவற்றவளாக ஸ்டெல்லா டீச்சரை கண்டைகிறான்.

தன் பழைய டீச்சரின் நிகழ்காலம் ஆனந்தை பல கேள்விகளுக்கிடையே சிக்கவைக்கிறது. முதலிலில் ஒரு ஸ்ரீங்ப்ப்ல்ட்ர்ய்ங் – வாங்கி தன் நண்பர்களின் (ஸ்டெல்லா டீச்சரிடம் படித்தவர்கள்) எண்களை பதிந்து அவர்களுக்கு பரிசளிக்கிறார்.

தனிமையின் சகிக்க முடியாத மௌனத்தை சத்தம் கலைத்து கொண்டேயிருக்கிறது. தன் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரிடம் நீளும் உரையாடல்கள், ஸ்டெல்லா டீச்சரின் பகல்களை ஈரப்படுத்துகிறது. தன் முகத்தில் தோன்றும் புதிய பொலிவையும், உதட்டோரம் துளிர்க்கும் ஒரு புன்னகையையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. அந்த மாணவர்களின் எதிர்பார்ப்பும் அது தான். வெறும் 1250 - ரூபாய் ஓய்வூதியத்தில், பெங்களுரில் வாழநேரும் அவலத்திலிருந்து ஸ்டெல்லா டீச்சரை அந்த பழைய மாணவர்கள் மீட்டெடுத்து நெய்வேலிலியிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன் தாயைப்போல அவளை பராமரிக்கிறார்கள்.

ஒரு நாள் தான் பணிபுரிந்த குளோனிலி பள்ளிக்கு கைத்தாங்கலாக அழைத்துபோய் பழைய ஞாபங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். தான் பாடலெடுத்து பாடிய அறை, தான் தங்கியிருந்த – தனக்கு பிரிவுஉபச்சார விழா நடந்த மேடை, தான் பிரியத்தோடு வாசித்த பியானோ- கவிதையான காலங்கள் அது.

நாற்பதாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தன் மாணவர்களின் குரூப் போட்டோ அவர் முன் காட்சிப்படுத்தப்படுகிறது. இரட்டை ஜடைபின்னலோடு ஸ்டெல்லா டீச்சர் ஒரு மர நாற்காலிலியில் உட்கார்ந்திருக்க, உட்கார்ந்தும், நின்றுமாய் அம்மாணவர்கள்.
இப்போது அதே நெய்வேலியில் பிரபல மருத்துவராயிருக்கும் டாக்டர் செந்தில் அப்புகைப்படத்தை ஸ்டெல்லா டீச்சரிடம் காண்பித்து.

"இவர்களை தெரிகிறதா டீச்சர்?"

இது பி. சாந்தி. இவன் கே. செந்தில் இவன் ஆனந் ….. இவ ஹேமலதா…
அற்புதம்… ரத்தத்தோடும் ஜீவனோடும் தன் மாணவர்களை ஸ்நேகித்த ஒரு ஆசிரிய மனசுக்கே இது சாத்தியம்.

நிற்கிறவர்களின் வரிசையில் மூன்றாவதாக காக்கி கால் சட்டையும், வெள்ளைசட்டையும் போட்டு, மிலிலிட்ரி விறைப்போடு நிற்கும் அச்சிறுவன்தான். இன்று இப்படத்தை தன் ஆசிரியைக்காக எடுத்து நமக்கு தந்து, நம் சக மனிதர்கள் மீதான பொறுப்பின்மையை குற்றவுணர்வுக்குள்ளாக்கி நிற்கும் ந. செல்வன்.

இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியைகள் ஞாபங்களில் ஒளிருவார்கள். அதுதான் செல்வன் என்கிற புகைப்பட கலைஞன் கரடுதட்டி போயிருக்கிற நம் வறண்ட வாழ்வில் மழைமாதிரி நீரைப்பொழிகிறான்.

அக்கலைஞனிடம் எனக்கிருந்த நீண்ட மௌனத்திற்காக ஸ்டெல்லா டீச்சரின் வழியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, May 6, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே - நீ
பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ...
நித்யபிதா ஒருவருக்கே
நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் - இங்கே
பங்கமுற்ற பசுந்தொட்டியில்
படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.

Tuesday, April 28, 2009

மதிப்புரை - 3

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை தொகுப்பிற்காக

முடிவற்ற வசீகர வெளியில் வலி உணரும் தருணங்கள் -உதயசங்கர்.

கலை ஒரு வசீகரம், கலை ஒரு வலி மிக்க வேதனை, கலை ஒரு துயர் மிகுந்த பாடல். கலை ஒரு நம்பிக்கைக் கீற்று. கலை ஒரு புலம்பல். கலை வாழ்வின் உயிர்த்துடிப்பு. கலை ஒரு விந்தைவெளி. கலை ஒரு இன்பம். கலை ஒரு மாயஜாலம். கலை தனக்கான இரத்த பலிகளைத் தானே வேட்டையாடிக் கொள்ளும் காட்டுத் தெய்வம். கலை உக்கிரம் மிகுந்த அக்னிக் குண்டம். கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்களின் பட்டியலில் இதோ இன்னுமொரு புதிய வரவு. ஒரு புதிய கலைத்திறப்பாய் நம் முன் விரிந்து படபடக்கிறது üநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைý பவாசெல்லதுரையின் சிறுகதைத் தொகுப்பு.
புத்தகத்தை விரித்தவுடன் கல்லும் முள்ளும் கீறிப் பிறாண்டி ரத்தம் துளிர்க்கும் திரேகம். எதையும் ஊடுருவி உள்ளொளி காணும் தீர்க்கமிக்க கண்கள். தீராத வாழ்க்கையை நடந்தே தீர்க்க முளைத்த உறுதியான கால்கள். எதையும் எதிர்கொள்ள, எதையும் புரட்டிப்போடும் வல்லமை கொண்ட கவிச்சி வாடை வீசும் கைகள். பச்சை மணம் கமழும் முறுக்கேறிய உறுதியான உடலோடு மரணத்தையும் நேர்கொள்ளும் தைரியத்துடன் நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில் நம்முன்னே வந்து நிற்கும் ஜப்பான் கிழவன் இல்லை பச்சை இருளன் இல்லை பொட்டு இருளன் இல்லை பவாசெல்லதுரை.

அன்றாடத்தின் செயற்கை நீருற்றின் செயற்கையான சுழிப்புகளோடு ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் கணங்கள் திகைத்து நிற்கின்றன. மூச்சுத் திணறுகிறது. உடல் பதறுகிறது. நா நடுங்க எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் நிலைகுலைந்து யார் நீ என்று குழளுகிறது வாய். போலியான இந்த நாகரீக வாழ்க்கையின் அந்தப் பக்கத்திலிருந்து தன் முரட்டுக்கைகளை நீட்டுகிறான். தப்பிக்கவே முடியாத முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நாம் சந்தேகத்துடனும் பயத்துடனும் தயங்கித் தயங்கி நம் கைகளை நீட்டித் தொடுகிறோம். தொட்ட கணத்திலேயே நம் வாழ்வு மாறி விடுகிறது. வாழ்க்கை பற்றிய நம்மதிப்பீடுகள் சுக்குநூறாகித் தகர்ந்து விடுகின்றன. ரசவாதம் நிகழ்ந்தது போல காட்டின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்குமுன்னால் ஜப்பான் கிழவன் போய்க் கொண்டிருக்கிறான் திப்பக்காட்டிற்குள். அவனுடைய வேட்டையின் தந்திரங்களை காடு முறியடிக்கிறது. தற்காலிகமாய் தோல்வியடைந்த அவன் ஸ்தோத்திரப் பாடல்களுக்குள் அடைக்கலம் புகுவதற்குப் புறப்படுகிறான். ஆனால் இன்னமும் வேட்டையின் கண்ணிகள் அவன் நெஞ்சில் பத்திரமாகவே இருக்கின்றன. திரும்பி வரும் பெரும் நம்பிக்கையோடு.

கண் மூடித்திறப்பதற்குள் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்ட திருட்டு இருளன், விசித்திரங்களால் அடுக்கப்பட்ட பஞ்சத்தினால் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த ஊரின் பாறை வீட்டில் மரணத்தின் கடிவாயில் கிடக்கிறான். அனுக்குமலை காட்டின் பச்சிலைச் சாற்றினால் உடல் ஊதிச் செத்துப்போகக் காத்திருக்கிறான். பஞ்சத்தினால் வன்மமும், குரோதமும் கொலைவெறியும் ஏறிய மனிதர்கள் ஓரிரவு மழையினால் கருணை நிரம்பி வழிகிறார்கள். மழை கருணையைப் பொழிகிறது. பவாசெல்லதுரையின் கலை நம் உயிர்வரை பாய்கிறது நமக்குள் தூர்ந்து போன ஊற்றுக்கண்ணைப் பொத்துக் கொண்டு கருணை பொங்குகிறது.

கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சை இருளன். நரியின் பற்களையே ரம்பமாக்கி கூண்டை உடைத்து ஜமீன் மாளிகையிலிருந்த மரகதப்பச்சை ஒளி பின் தொடர பாய்ந்து செல்கிறான் கோட்டங்கல் குன்றை நோக்கி அதிகாரங்களுக்கு எதிரான கலகக்குரல் எழுப்புகிறான்.
எல்லோரிடமும் மனசின் ஒரு நிலவறையில் கருமியின் கைக்காசு போல பத்திரப்படுத்திய ஈரமும் கதகதப்பும் நிரம்பிய ஒரு ராஜாம்பாளின் நினைவுகள் இருக்கும். மனசு துயருரும் போதெல்லாம் அந்த நினைவுகளை எடுத்துப்போர்த்தி மீண்டும் வாழ்வை எதிர்கொள்ளும் வலிமை பெறவைக்கும். ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள், ரயில்வண்டி விளையாட்டில் பின்னால் கொத்தாய் சேர்த்துப்பிடித்த உணர்வில் ததும்பிக் கொண்டிருக்கிறது. அங்கே ராஜாம்பாள் இல்லை. ஆனால் அவள் சேர்த்துப்பிடித்து கசக்கிய சட்டையின் கசங்கல் இன்னும் இருக்கிறது. ராஜாம்பாளும் தோழர்களும் நதியின் அக்கரையிலுள்ள காட்டின் முகப்பிலிருந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஏரோதின் வாளின் கூர்மை மேரியின் எத்தனை குழந்தைகளைப் பலி கொண்டு விடுகிறதுஙு கன்னிமரியாளின் பிரசவவலியினூடாக தன் குழந்தையையும் காப்பாற்றி ஆசீர்வதிக்க ரட்சகர்களைத் தேடுகிறாள். வழிகாட்டும் நட்சத்திரமும் வழிமறந்து மறைந்து விடும் போது துயருற்ற மேரி கன்னிமரியாளுக்குச் சுகப்பிரசவம் என்ற சேதிகேட்டபோதுதான் நம்பிக்கை கொள்கிறாள். பரிதவித்து வலியும் வேதனையும் இறைஞ்சுதலுமான மேரி நம்மையும் ஆட்கொண்டு விடுகிறாள்.

எத்தனையோ தலைமுறைகளாய் யாரும் காணாத மர்மமான சிங்காரக்குளம் ஒரு குறிலிடாகிறது. குளத்தில் விழுந்து இறந்து போன மல்லிகா தன் மரணத்தின் மூலம் ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிறாள். அந்த ஆத்திரம், கோபம், பயம், இயலாமை சிங்காரக்குளத்தை வெவ்வேறு தளங்களில் வாகிக்கத் தூண்டுகிறது.

கலையின் உயிர் எது என்றறிந்த கலைஞனான கோணலூர் ஏழுமலை நவீன வாழ்க்கையின் கோரநகங்களில் சிக்கிச் சிதறுண்டு போகிறான். வாழ்க்கை அவனை பெங்களூர் மார்க்கெட்டில் மூட்டை சுமக்கச் சொல்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. அவனுடைய கலையை இழிவு படுத்துகிறது. கோணலூர் ஏழுமலை சவால் விடுகிறான். அடங்க மறுக்கிறான். கலகம் செய்கிறான், மீறலின் துடிப்பு கோணலூர் ஏழுமலையை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கிறது. இரத்தபலி கேட்கும் வாழ்க்கைக்கு எதிராக போராடத்தயாராகிறான் கோணலூர் ஏழுமலை.
üமண்டித்தெரு பரோட்டா சால்னாýவில் தன் வாழ்வை கடைத்தேற்றும் ஈஸ்வர் தாயின் அரவணைப்பறியாமல் தந்தையின் லட்சியச் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டு நிராதரவான நிலைமையில் அலையும் ஈஸ்வரன் வாழ்வின் விசித்திரமான இன்னொரு பக்கம்.

தன் உடலை அர்ப்பணித்து, எந்த ஜாமத்திலும் யாருடனும் சைக்கிளின் பின்னால் ஏறிச் சுற்றும் சுதந்திரத்தை விஜயாவின் சத்தமான சிரிப்பின் பின்னாலுள்ள வாழ்வின் துயரம். உறவுகளின் போலிமையை முகங்களிலும், வாழ்வின் அவலத்தை வேறு வேறு மனிதர்களிலும் எதிர்கொண்டு திகைத்து நிற்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறோம். நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

கூர்ந்த வாசிப்பைக் கோரும் பவாசெல்லதுரையின் கதைகள் தமிழிலக்கியத்தின் பரப்பை இன்னும் விரிவாக்கி இருக்கின்றன. முதல்தொகுப்பு என்று யாராலும் சொல்லமுடியாதபடிக்கு கதைகளை தேர்ந்த சிற்பியைப்போல செதுக்கியிருக்கிறார். மௌனமான பல இடங்களில் கலை ஆட்சி செய்கிறது. புனைவின் உச்சத்தையும், ஒரு புதிய யதார்த்தவாதத்தையும் இவருடைய கதைகள் கட்டமைக்கின்றன.

அனுபவங்களின் சாரம் ஏறிய முதிர்ந்த மொழிநடை, அடர்த்தியான இந்த வாழ்வைச் சொல்ல அடர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல ஒற்றை வரிகளில் வாழ்வின் தரிசனமும் கவித்துவமும் பொங்கி வழிகின்றன. வாசிக்கும் போது தான் அதை உணர்ந்து அனுபவிக்க முடியும்.

தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் இது ஒரு முக்கியப் பதிவு. ஒரு புதிய கொடை. உலகத்தின் எந்தமொழியிலும் இந்தத் தொகுப்பிலிருந்து குறைந்தது நான்கு கதைகளையாவது மொழிபெயர்க்க முடியும். அதற்கான வலிமையும் கலை உச்சமும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. பவாசெல்லதுரை என்ற கலைஞனுக்கு கலை கைவரப்பெற்றுள்ளது. எனவே தான் தொகுப்பை வாசிக்கும் போது நம்முடனேயே இருக்கிறார் பவாசெல்லதுரை அழுகையும் கோபமும் கண்ணீரும் ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது. வாசித்து முடிக்கும் போது பித்துப்பிடித்த நிலையில் நீண்ட பெருமூச்சுகள் விடுகிறோம். நாம் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் பவாசெல்லதுரை என்ற ஜப்பான் கிழவன் என்ற பச்சை இருளன் மீது படும்போது அவர்கள் சிரிக்கிறார்கள். அது பைத்தியக்காரனின் வசீகரமான சிரிப்பு. கலையும் மர்மமாய் நம்மை நோக்கிச் சிரிக்கிறது.

Sunday, April 19, 2009

மண்டித்தெரு பரோட்டா சால்னா

கேட்க நினைத்து, கேட்க நினைத்து இருபத்தாறு வருடங்கள் போய்விட்டன, அப்பா! கேட்க முடியாத கேள்விகளைத்தான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைதான் கவிதைகள் என்கின்றனர் நண்பர்கள். சுய புலம்பல்கள் என்கின்றனர் இலக்கிய நண்பர்கள். எனக்கு ஏதப்பா கவிதையும், கதையும்? எனக்குச் சொந்தமானதெல்லாம் ஒரே கவிதையும் ஒரே கதையும்தானே! இரைச்சலால் கேட்டு அடைந்து போயிருக்கும் என் காதுகளுக்கும், சோடியம் வேப்பர் வெளிச்சத்திலேயே இத்தனை வருஷமும் தூங்கிப் பழக்கப்பட்ட என் கண்களுக்கும், தூக்கம் மிகுந்த கண்களைக் கசக்கி முன் ஜாமத்திலேயே மண்டிக்காரர்களுக்கு "டீ" வாங்கிவர ஓடிக் கொண்டிருந்தவனுக்கு எப்படி அப்பா கதையும், கவிதையும் சாத்தியம்?

உன் அன்பின் வன்முறைதான் இந்த மாதிரியான நிறைய்ய கேள்விகளைக் கேட்க முடியாதவனாக்கி விட்டது அப்பா. பாசம், ஆறுதல், கட்டுப்பாடு இப்படி நிறைய வார்த்தைகளால் நீ போட்டு வைத்திருந்த இரும்புக் கம்பிவேலிகளுக்குப் பின்னால், புது மழையில் பூத்த சிறு பூக்களைக்கூட நான் நின்று கவனித்ததில்லை. எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விடும். அந்தத்தேவடியாவுக்கு எதிரா நான் படிச்சி கலக்டராவணும். இதையெல்லாம் அந்தச் சின்னஞ்சிறிய பூக்களின் மென்மையும் அழகும் பாதிக்கலாம், இல்லையா அப்பா!

ஒரே ஒரு கேள்விதான் அப்பா எனக்கு.

கெட்ட வார்த்தைகளற்ற அம்மாவின் பெயரை ஒரு முறை நீ சொல்லி நான் கேட்க வேண்டும். சொல், எளிமையாக.... நிதானமாக. என் மீதான உன் பாச வன்முறையை எல்லாம் தூரத் துடைந்தெறிந்து விட்டு,

மூன்று மாதக் குழந்தையாய்,அம்மாவின் இளஞ்சூட்டில் ஒட்டிக்கிடந்து அவள் கவுச்சி யேறிய உடலிது.உன்னையும், என்னையும் ஒரே நிமிடத்தில் உதறிஎறிந்தாளா?
இதை ஒரு குற்றமாக, கையாலாகாத்தனத்திற்காகவெல்லாம் கேட்கவில்லை. தாய்ப்பறவை தன் செட்டைக்குள் தன் குஞ்சை வெதுவெதுப்போடு வைத்திருந்ததை விடவும் பாதுகாப்பாக, நீ என்னை வைத்திருந்தாய். நீ பறக்கச் சொன்னபோது நான் பறந்தேன். நீ சொன்ன மரக்கிளைகளில் மட்டும் பழருசி அறிந்தேன்.

உடன் வேலை பார்ப்பவர்கள் இசை பற்றி பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். இசை மனிதனை மெய்மறக்க வைக்கிறது என்கிறார்கள். நீ தூங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னரவில் நானும் மிக ரகசியமாய் இசை கேட்டேன் அப்பா.

கடா முடா சத்தங்களும் நவுரு, நவுரு என்கிற இரைச்சலும் இடைஇடையே மாடுகளின் குரலும், வண்டிகளின் ஹாரன் ஒலியும்... முடியலை அப்பா, இதற்கு மேல் போக தூக்கமும், துக்கமும் அழுத்துகிறது. முப்பத்தி மூன்று வருஷமாக காது இச்சத்தத்திற்குப் பழக்கப்பட்டு பழுத்துப்போயிருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சத்தங்கள்தான் இசையாம்! நான் கேட்க நேரும் சத்தங்கள் எப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டன?

ஸ்கூலில் படிக்கிறபோது எந்த வாத்தியாரும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்ததில்லை.
"உங்க வீடு எங்க இருக்கு?"

எல்லோரும் தெரு சொல்வார்கள். சிலர் வீட்டின் எண் சொல்வார்கள். இன்னும் சிலர் வீட்டுக்குப் பேர்கூடச் சொன்னார்கள். நான் மட்டும்தான் எழுந்து "மண்டித்தெரு" என்பேன்.

"மண்டித்தெருவுல எங்க? "

இந்த கேள்வி என்மீது எறியப்படும் தீஜ்வாலை. என்ன சொல்வது? மணி முதலியார் மண்டி, ராஜமாணிக்கம் கமிஷன் மண்டி, சீத்தாபதி நாய்க்கரின் நெல்தரகு மண்டி என நீளும் என் பட்டியலில் எந்த மண்டி சீக்கிரம் மூடுவார்களோ அதுதான் அன்றைய இரவு என் வசிப்பிடம். அசைவற்றிருந்த அந்த கணங்கள் நினைவிலிருந்து அகலாதவைகள் அப்பா. தொண்டை அடைக்க, உடல் நடுங்க மொய்க்கும் பார்வைகளைத் தவிர்த்து, சொல்லி முடித்து ஒரு பிணம் மாதிரி...

எல்லோரும் கேட்டார்கள். உன் அப்பா இல்லாத நீ சாத்தியமே இல்லையா?

சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சம் விழும் மண்டிகளின் வராண்டாக்களில் நான் படித்து முடிக்கிற வரை என்றைக்கு நீ தூங்கி இருக்கிறாய்? என் விழிப்பிற்குப் பிறகு ஒருநாளும் நீ எழுந்ததில்லை, ஒரு வீட்டைப் பாதுகாக்கும் கூர்காவின் கூர்மையை விட நுட்பமானது உன் விழிப்பு. வரம் வேண்டும் ஒரு முனிவனின் தவம் போல எனக்காக நீ காத்திருந்தாய்.

குளிரில், புழுக்கத்தில், நடத்திக் கூட்டிப்போய் டீயும், எப்போதாவது பன்னும் வாங்கித் தந்து என் விடிதல்களை உற்சாகப்படுத்திய கூட்டாளி நீதான் அப்பா.

இருட்டு பிரியும் முன்பே, ஒரு மைலுக்கும் அப்பால் இருக்கிற தாமரைக்குளத்துக்குக் கூட்டிப் போய், குளிர்ந்த தண்ணீரில் என்னை முக்கி, சோப்பு போட்டு உடம்பு கழுவி நூலிழைத் துண்டால் துவட்டிவிட்டதெல்லாம் எந்த அப்பனும் செய்யாததுதான். பத்தாவது படிக்கிறவரைகூட கால் சட்டையோடு நிற்கவைத்து குளிப்பாட்டிவிடுவாய். ஒரு நாளும் அடுத்த படியில் இறங்கவிடவோ நீந்தத் துடித்த என் சிறகுகளையோ நீ கவனித்ததேயில்லை. எனக்கு ஏதாவதொன்று ஆகிவிட்டால் உனக்கு யார் இருக்கிறார்கள் அப்பா? இதைத்தான் அப்பா அன்பின் வன்முறை என நான் வார்த்தைப்படுத்தி இருக்கின்றேன்.

முதல்முதலில் நாம் வீடு என்று வாடகைக்கு வந்தது என் பிரைவேட் ஸ்கூல் வாத்தியார் வேலைக்குப் பிறகுதானே. என் அவஸ்தையின் உச்சம், நான்கு சுவர்களாலான ஒரு அறையில் படுப்பதென்பது. ட்யூப் லைட்டும், ஸிக்ஸ்டி வாட்ஸ் பல்பும் போட்டுப் படுத்தால்கூடத் தூக்கம் வர மறுக்கிறது. சோடியம் வேப்பருக்குப் பழகிய தூக்கம். அதைவிட புது அனுபவம் கக்கூஸில் உட்கார்ந்து வெளிக்கிருப்பது. ஸ்கூலில், காலேஜில் மட்டும் பார்த்து, எப்போதாவது ஆசையாய்ப்போனது. தினம் தினம் அதில்தான் எனும்போது பரவசமாகிறது. பன்னிரண்டுக்கும் இரண்டுக்குமான இரவின் இடைவெளியில் தானே அப்பா வழக்கமாக நாம் சேர்ந்து போவோம். வெங்காயத்தோல்களும், அழுகிய காய்கறியும், புடைத்த மிளகாய் வத்தலில் மீந்த காம்புகளும் மிதக்கும் முனிசிபாலிட்டி கால்வாயில் கால்களை அகட்டி...

இரவின் அடர்த்திகளானாலும் அப்பாவும் மகனும் எதிர் எதிர் கால்வாய்களில் உட்கார்ந்து கழிப்பதென்பது கல்லூரிப் படிக்கிற எந்தப் பையனையும் நடுங்க வைத்துவிடும்தானே அப்பா?

அதைவிட அவஸ்தை, இதே மாதிரி நீயும் கால்களை அகட்டி எதிர்க் கால்வாயில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே கழிப்பது. இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகிறவர்களைப் பார்த்து பார்த்து எழுந்து முகத்தைத் திருப்பி நிற்பது. நிழல்கள் மறைகிற வரை காத்திருப்பது.

இறந்த கால அவமானங்களால் நத்தை கூட்டுக்குள்ளே உடலை இழுத்துக்கொள்வது மாதிரி என்னைச் சுருக்கிக் கொள்கிறேன் அப்பா. எப்போதுமே மண்டித்தெருவின் நெரிசல் மிகுந்த சாலைகளைத் தவிர்க்கிறேன், எதேச்சையாகத் திரும்ப நேர்கிற மண்டிகளின் வராண்டாக்கள் உடம்பு முழுக்க எதையோ பாய்ச்சுகிறது.

காக்கி கால்சட்டைத் துணிக்கும், எட்டு ரூபாய்க்கும் குறைவான கஞ்சி வடிக்கும் வெள்ளைத்துணியைச் சட்டைத்துணி என அவர்கள் வாங்கிக் கொடுத்ததற்கும் நீ பல நாட்கள், இந்தப் பெரிய மனிதர்களின் முன்னால் கூனிக் குறுகியும், நான் டீ வாங்கி வரவும், அவங்க வீட்டு அம்மாக்களுக்குப் புடவை தேய்த்துக் கொண்டுபோய் கொடுக்கவுமான என் இறந்தகால நடுக்கம் இன்னும் நீடிக்கிறதப்பா.

நடுத்தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் "டேய் ஈஸ்வரா ஓட்றா ஓட்றா நாலு ஸ்டிராங் டீ," என்று ஒரு குரல் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வாத்தியார் வாழ்ந்து கொண்டிருப்பதின் அதிகபட்ச காயம் உனக்கு இன்னும்கூடப் புரிப்படவில்லை என்பது பெரிய துயரம்தான்.

உனக்கு, நான் இன்னமும் மண்டிக்காரர்களுக்கு ஓடுகிறவனாக, கால்சட்டை போட்டுக்கொண்டு, உன்னைக் கழுவிவிடச் சொல்லித் தாமரை குளக்கரையில் தலைகுனிந்து நிற்பவனாக நீடிப்பது சந்தோசமாக இருக்கலாம்! என் உடல் முழுக்க அவமானம் சேறு மாதிரி பூசப்பட்டிருக்கிறது. நானேக் கழுவிக் கொள்கிறேன், கொஞ்சம் வழி விடு அப்பா!

பரோட்டா சால்னா பார்க்கும் போதல்ல, நினைக்கும்போதே குமட்டுகிறது அப்பா. மீந்த காய்கறிகளும், அழுகிய தக்காளியும், நம் நிலைமைக்கு இதுதான் என்ற உன் நியாயமும் சேர்த்து குமையவைக்கிறது. தர்மலிங்க நாயக்கர் வீட்டில், பவுர்ணமிக்கு, இலைபோட்டுப் பரிமாறிய சுடுசோற்றை, சாப்பிட முடியாமல் திணறி, பிசைந்துகொண்டே இருந்தேனே. அது பரோட்டா சால்னாவைத் தாண்டிப் போய்விட்டோம் என்ற ஆனந்தமில்லை. "தின்னு தின்னு"என்ற உன் வார்த்தைகளுக்குப் பதிலாக, என் கண்கள் இத்தனைக்காலம் கழித்துத் திரண்டிருந்ததே, அதுதான் அப்பா பதில்.

இதெல்லாம் சொல்ல என்ன வந்தது எனக்கு இப்போது? இதுதானே நீ?

மூன்று மாதக்குழந்தையை அம்மாவின் பழம்புடவையால் சுற்றித் தூக்கிக்கொண்டு வந்து, மாரி மண்டி வாசலில் கிடத்தி விட்டு மூட்டை தூக்கிச் சம்பாதித்துக் காப்பாற்றி இருக்காவிட்டால் தெரியும், நான் எப்படிப்பட்ட பொறுக்கியாய் மண்டித் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பேன் என்று.

"ராக்கண் முழிச்சி உனக்கு பசிக்கிறபோது, எனக்கும் பசித்து, உன் வயிற்றைக் கழுவின மிச்சத்தில் நானும் வாழ்ந்த வாழ்க்கையைக் குத்தம்னா சொல்ற?" என்று நீ ஆத்திரப்படாதே அல்லது ஆத்திரப் படு. யாரைப் பார்த்தாலும் அவமானப்பட்டு, உள்ளடங்கி பதுங்கிப் பதுங்கி ஒரு மனிதன் வாழ நேர்ந்த அவலத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல், அல்லது உன் வாக்குப்படியே உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியலை அப்பா.

கடைசியாக ஒன்று,

மனசுக்குள்ளேயே தேக்கி, தேக்கி வைத்த இந்தக் கேள்வி ஊத்துக்கண் மாதிரி கசிந்து, சில நேரம் பீச்சியடித்து, சில நேரம் வற்றி...

அம்மா செத்தா போனாள்?

திரும்பும் பக்கமிருந்தெல்லாம் புறப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கேள்வியால் நொறுங்கி, சாவின் விளிம்பில் நின்றபோதெல்லாம், ஒரு நிழல்... ஒரு நிழல்...

கைப்பிடித்திழுத்து, உச்சிமோர்ந்து, தலைக் கோதி, என் துக்கங்களை, உறிஞ்சிவிடத் துடிக்கும் கருணையும், காதலும் நிரம்பித் ததும்பும் அந்தக் கண்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் தப்பிக்கிறேன் அப்பா.

மரத்திலிருந்து கழித்துப் போடப்பட்ட தனிக்கிளையாய் மண்டித்தெரு மூலையில் யாரோ ஒரு மூட்டைதூக்கும் குடிகாரனோடு சதா சண்டையும், சச்சரவுமாய் காலம் தள்ளும் அவளின் கண்களுக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றிப் பொத்தி வைத்திருக்கும் வல்லமையும் ஜீவனும் எப்படி அப்பா சாத்தியம்?

ஒத்துக் கொள்கிறேன் அப்பா, அவளுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எனக்கு?

Friday, April 17, 2009

மதிப்புரை - 2 : ந. முருகேசபாண்டியன்

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - ந. முருகேசபாண்டியன்.

பல்வேறு சோதனை முயற்சியின் வழியே, தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் சாதனை படைத்திட்ட போச்சானது, கடந்த பத்தாண்டுகளில் பின்னடைவுக்குள்ளாகியுள்ளது. சிறுகதை அற்புதமான என்ற, வடிவத்தைப் ப்ரியமுடன் கையாண்டு, வாழ்வின் மேன்மைகளையும் சிழிவுகளையும் பதிவாச்சிட முயலும் படைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கறிது. இத்தகு சூழலில் புனைவு மொழியில் விசும்பிக்கொண்டு வெளிவர முயலும் பவா செல்லதுரை போன்ற கதைசொல்லிகளின் ஈடுபாடு நம்பிக்கை தருகின்றது. முரட்டுத்தனமான சம்பவங்களைக் கரடுமுரடான மொழியில் விவரிக்கும் பவாவிற்கு, சூர்யனுக்குச் கீழ் எல்லாவற்றின் மீதும் அக்கறை இருக்கின்றது. மொழி உருவாக்கிட முயலும் அதிகாரத்தைச் சிதைத்துப் புனைவின் வழியே சிறுக்கத்தை நெகிழ்விப்பது பவாவின் தனித்துவமாகும். அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவரும் பவாவின் முதல் தொகுதியான ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ ஒட்டுமொத்த வாசிப்பினம் நம்பிக்கை தருவதாக உள்ளது.

யதார்த்தமான சித்திரிப்பின் மூலம் கதை சொல்லுவது போன்று பவாவின் புனைக்கதைகள் இன்னொரு நிலையில் கலங்கான பயணிக்க முயலுகின்றன. வெறுமான சம்பவங்கள்/ அனுபவங்களின் தொகுப்பாகக் கதை சொல்லுவதில் பவாவிற்கு நம்பிக்கை இல்லை. கிராமத்து அய்யனார் கோவில் சுடுமண் குதிரை சிற்பங்கள் போல, யதார்த்ததிலிருந்து விலகி, கலையழகுடன் வேறு ஒன்றை வெளிப்படுத்த முயலுகின்றன. இயல்பான மொழியில், கட்டமைக்கப்பட்டுள்ள கதைகள், ஆழ்ந்த வாசிப்பின் போது நடப்பு வாழ்க்கை குறித்துப் பரிசீலிக்கத் தூண்டுகின்றன.

விளிம்புநிலை மக்கள் அன்றாடம் பொருளியல் ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் சொல்லுவது பவாவின் முதன்மை நோக்கமாக இல்லை. சூழலின் வெக்கை காரணமாக எல்லாவிதமான நெருக்கடிக்களுக்கிடையிலும் வாழப் பழகியுள்ளவர்கள், இக்கட்டான ஒரு கணத்தில் எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்பது பவாவின் கதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. இருளும் கசப்பும் நிரம்பி வழியும் வாழ்க்கைப் போக்கில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறித் தங்கள் இருப்பை அர்த்தமாக்கிட விழையும் விளிம்பு நிலையினரின் மனநிலை பவாவின் கதைகளில், முக்கியமான இடம் பெறுகின்றன.
‘ சத்ரு’ ‘பச்சை இருள்ன்’ ஆகிய இரு கதைகளிலும் திருடர்களுக்கும் கிராமத்தினருக்குமான உறவு நுட்பமான களத்தில் விரிகின்றது. எப்பொழுதும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் பகடி செய்யும் திருடர்களின் தந்திரங்களை ‘ஆறலைக் கள்வர்’ வழிப்பட்ட தமிழ் மரபில் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நாட்டார் கதை சொல்லலில் புத்திசாலித்தனத்துடன் நிறுவனம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகளை திருடர்கள் லாவகமாகச் சிதைக்கின்றனர். அதிகாரபீடங்களான ஜமீன்தார், பண்ணையார், அதிகாரி போன்றவர்களை எதிர்க்கும் திருடர்கள் எப்பொழுதும் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

பல்லாண்டுகள் தொடர்ந்து மழை பெய்யாமையினால் எங்கும் கடுமையான வறட்சி கொடிய பஞ்சம். உணவுக்காகக் கண்ணில் தென்படும் எந்த மனிதச் சட்டம். உயிரைத்தக்க வைப்பதற்கான போராட்டத்தில் எல்லா மதிப்பீடுகளும் அர்த்தமிழ்கின்றன. அம்மனுக்குக் கூழ் படைப்பதற்காகச் சிரமப்பட்டுச் சேகரிக்கப்பட்ட தானியத்தைத் திருடியவன் கிராமத்தினரிடம் மாட்டிக் கொள்கிறான்; திருடனைச் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவெடுக்கின்றனர். அதற்காக நச்சு இலை பறிப்பதற்காக ரங்கநாயகி கிழவி காட்டில் அலைந்து திரிகிறாள். மாவுக்காகக் கம்பினை இடித்துக் கொண்டிருக்கும் வறுமையுற்ற பெண், தன்னிடம் பிச்சையாக மாவு கேட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மாவு தருவது சாதாரண விஷயமல்ல. மாவைப் பெறும் பெண்ணின் கண்ணிலிருந்து நீர் சொட்டுகிறது அம்மன் சிலையில் கண்ணிலிருந்து துளிர்க்கிறது நீர். திடீரென வானம் பொத்துக் கொண்டு பேய்மழை கொட்டுகிறது என்ற பவாவின் கதைசொல்லலை நாட்டார் மரபில் தான் புரிந்து கொள்ள முடியும் கொடுரமான சூழலிலும் மனதில் ஈரம் சொதசொதப்பது போல, வானமும் கருணையுடன் மழை பொழிவது ஒரு வகையில் விநோதம் தான். சூழல் காரணமாகக் கெட்டி கட்டிப் போயிருந்த மக்களின் மனங்களை மழை ஈரம் மிக்கவாக்குகிறது. திருடன் விடுவிக்கப்படுகிறான். எல்லோருக்குள்ளும் இயல்பிலே இக்கட்டான நேரத்திலும் நுட்பமாக வெளிப்படும் என்பதனைச் கதை அதியற்புதமாக விவரித்துள்ளது. விளிம்பு நிலையினர் முரட்டுத்தனமானவர்கள்; நாசுக்கற்றவர்கள்; பாசங்கற்றவர்கள்; கருணையாளர்கள் என்று பவாவின் எழுத்து வழியே புனைவினைக் கட்டமைக்கலாம். அப்பொழுதுதான் திருடன் விடுவிக்கப்பட்டதற்கான தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பவாவின் கதைகளில் இருள் முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் என்பது புரியாத புதிராகப் பல்வேறு விநோதங்களுக்கு வாயிலாக இருக்கின்றது. இருளுக்குள் பலர் உறங்கிடும் வேளையில் சிலர் ஆந்தையைப் போல அறிவுக் கூர்மையுடன் பரபரத்துக் கொண்டிருக்கின்றனர். இருளுக்குப் பழகியவர்களுக்கு எல்லாப் புலன்களும் கூர்மையுடன் செயற்படும்’ வேட்டை’ கதையில் வரும் ஜப்பான் கிழவனின் உலகம், இருள்டைந்த காட்டிற்குள் உறைந்திருப்பது தற்செயலானது அல்ல. அவனுடைய நினைவுப் பரப்பில், இழந்து போன ‘காடு’’பற்றிய எண்ணம் தவிக்கிறது. இரவு முழுக்கத் தனியாகக் காட்டினில் அலைந்து திரியும் ஜப்பான் கிழவனின் நோக்கம் விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்ல என்று தோன்றுகிறது. சோடியும் வேப்பர் விளக்குகளின் ஒளியில் ஜொலித்திடும் நகர்ப்புற வாழ்க்கையுடன் இசைந்து வாழமுடியாமல், தணிந்த மனநிலையுடன் வாழ்கிறவனுக்கு அமாவாசையை ஓட்டிய இரவினில் காடு முழுக்கத் திரிவது யதார்த்தமாக இருக்கின்றது. அவன் வேட்டைக்காகக் கண்ணிகளை விரித்துக் காத்திருத்தல் என்பது, இடிந்துபோன அவனுடைய பூர்விக வாழ்வை நினைத்துப்பார்த்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேட்டையில் எதுவும் சிக்காமல், வெறுமையுடன் திரும்பும் கிழவனுக்குக் கிறிஸ்தவ துதிப்பாடல், மனதுக்கு ஒத்தடம் தருகின்றது. இயற்கையுடன் போராடித் தோல்வியடையும் மனிதனின் மனக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த மதம் அல்லது அதியற்புத ஆற்றல் தேவைப்படுகிறது என்றும் கதையை வாசிக்கலாம். எனினும் ‘ அவனுடைய பையில் பத்திரமாகக் கண்ணிகள் இருக்கின்றன’ என்ற கடைசி வரிகள் கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றன. வேட்டை என்ற கதைத் தலைப்பு, நவீன உலகில் ஜப்பான் கிழவனே வேட்டைப் பொருளாக மாறுவதைச் சூசகமாக உணர்த்துகின்றது.

பெண் மனதின் நுட்பங்களைச் சித்திரிக்கும்’ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ மாறுபட்ட புனைவுமொழியில் விரிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான மேரி வில்லியம்ஸ், வீட்டின் முன் இரவு வேளையில் குறிசொன்ன ஊமையனின் குரலைக் கேட்டு நடுங்குகிறான். ‘ இந்தக் குழந்தையும் தனக்குத் தங்காமல் போய் விடுமோ’ என்று நினைத்துக் கலக்கமடைகின்றான். இருளின் சிறகுகள் எங்கும் நீக்கமறப் பரவுவது போல மனம் புணைந்திடும் வேதனைகள் உலுக்கியெடுக்கின்றன. ஊமையனின் குழறலான மொழியினால் மன அமைதியை இழந்திடும் மேரியின் துயரம் அளவற்றுப் பொங்குகின்றது. "குழந்தை யேசு பிறந்து விட்டார் நலமுடன்" என்ற சேதியுடன் சாக்லேட் வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தாவின் பேச்சு, அவளுக்குள் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. "எந்தச் சேதாரமும் இன்றி குழந்தை பிறந்ததா" என்ற, அவனுடைய கேள்வியும், "தாயும் சேயும் நலம்" என்ற பதிலும் நுட்பமானவை. மேரி தனது துயரத்தை யேசுவின் பிறப்புடன் ஒப்பிட்டு அடையும் மன அமைதி முக்கியமானது. மனம் ஏதோ ஒன்றின் காரணமாக அடையும் வேதனையும் பின்னர் அதிலிருந்து விடுபடுவதும் மேரியை முன்னிறுத்திப் பவா கட்டமைக்கும் புனைவு சுவராசியமனாது. இந்தக் கதையும் முழுக்க இருளில் நடைபெறுவதாகப் புனையப்பட்டுள்ளது. சிதைவு, பச்சை இருள் ஆவிய கதைகளிலும் இருட்டு முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் மனிதனின் மனநிலையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் பவாவின் கதைசொல்லலின் முக்கிய இடம் வகிப்பது தற்செயலானது அல்ல.

நவீன உலகில் தமிழர் வாழ்க்கையில் நசித்துப்போன மேன்மையான விஷயங்களில் தெருக்கூத்துவும் ஒன்று. மரபு வழிப்பட்ட உன்னதமான கலையைத் தொலைத்துவிட்டு, அது குறித்து எவ்விதமான பிரச்ஞையுமற்று வேறு ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பது, காலந்தோறும் தொடர்ந்து நடைபெறுகின்றது. கலையின் மேன்மையும் சீரழிவும் யாருடைய கையிலும் இல்லை. ஆனால் அந்தக் கலையுடன் தன்னுடைய வாழ்வைப் பிணைத்துக் கொண்ட ஏழுமலையின் இருப்புதான் பிரச்சினை. வேறு ஒன்றில் பொருத்திக் கொண்டு, சராசரியாக வாழ்வது என்பது அடையாளச் சிக்கலை ஏற்படுத்திகின்றது. பலரின் மத்தியில் வேடம் தரித்து, அடவுகளுடன் ஆடிக் குதிக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடிச் கொண்டிருக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஏழுமலையின் காலடிகள், எப்பவும் கூத்துக்கான அடவுகளுடன் இயங்குகின்றன என்பது வலியைத் தரும் உண்மை. சாராய போதையில் துள்ளிக் குதித்து அடவுகளை ஆடிடும் ஏழுமலை மயங்கி விழுந்தவுடன், அவருக்குத் தண்ணீர் தர பல கால்கள் ஓடின என்பது கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றது. விடுவிப்பு இல்லாத இக்காட்டான நிலையிலும் நம்பிக்கையின் ஒளிச்சீற்றுப் பரவிட எழுதுவது பவாவின் கதைகளில் தென்படும் சிறப்பம்சம். இருளுக்குள் ஒளியைக் காண்பது போல, இடைவிடாத துயரங்களுக்கிடையிலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் பவாவின் கதைகள் வாழ்வின் மீதான நேசிப்பைச் சொல்லுகின்றன.

முகம், வேறுவேறு மனிதர்கள், சிதைவு, மண்டித்தெரு பரோட்டா சால்னா போன்ற கதைகள் நகர்ப்புற வாழ்க்கையிலூட்ட, மனித இருப்பை விசாரிக்க முயலுகின்றன. எனினும் மலைகளும்,நிரம்பிய காட்டுப் பிரதேசத்தைப் பின்புலமாகக் கொண்ட கதைகளில் பவாவின் புனைவுகள் அளவற்றுப் பொங்குகின்றன. காட்டிற்கும் மனிதனுக்கென பூர்விகக் தொடர்பானது வெவ்வேறு காட்சிகளாக விரிந்திருப்பது கதைகளில் பலமாக உள்ளது.
வாழ்க்கை தரும் நெருக்கடிகளின் ஊடே மனஇருப்பின் அவஸ்தைகளை விவரிப்பது பவாவின் தனித்துவம். யதார்த்தம் சூழலில் நம் அடையாளம் எப்படியும் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்திப் புனைவின் வழியே, பவா கட்டமைக்க முயலும் கதைமொழி, வாசிப்பால் தொந்தரவை ஏற்படுத்துகின்றது. "முகம்"கதையில் புகைப்பட ஆல்பத்தில் பதிவாகியிருக்கும் பெருங்கதையாடல் வேறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகிறது. சாதாரண விஷயத்தையும், தன்னுடைய மொழி ஆளுமையின் வழியே வேறு ஒன்றாகப் படைப்பது பவாவின் கதைசொல்லலை வளம் மிக்கதாக்குகிறது. அசலான தமிழ்ப் புனைகதை ஆக்கத்தில் பவா படைப்பளுமையின் மூலம் தனக்கான இடத்தினை உறுதி செய்துள்ளார் என்றும் தொகுப்பினை மதிப்பிட இடமுண்டு

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,

டாக்டர். கே. எஸ். சுப்பிரமணியன்


நண்பர் பவா செல்லதுரையின், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர் பவா இலக்கியக்களனில் ஒரு படப்பாளி; ஓர் ஆர்வலர்; ஒரு செயல்பாட்டளர் அல்லது தேர்ந்த இலக்கியவாதிகளை, வயது என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டு, இனங்கண்டு அவர்களுக்கு ஒரு களம அமைத்துக் கொடுப்பது; படைப்பாளி - வாசகர் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில கருப்பொருள்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைக் கட்டமைப்பது - இவை போன்ற பணிகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருபவர் பவா. இன்று, அவரது நூலுக்கு வெளியீட்டு விழா என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளின் அடிநாதம் காட்டு மணம். காட்டின் குளுமையும், அச்சுறுத்தும் தன்மையும்; காட்டில் வியாபித்திருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், பச்சிலைகள், மலர்கள், முட்கள், வனாந்திரத்தில் அலைந்து திரியும் விலங்கினங்கள்; பாடிப் பறந்து இனிமையை விநியோகிக்கும் பறவைகள்; வாழ்க்கைக்காக அயராது போராடி, அதே நேரத்தில் வாழ்க்கையை ருசித்து ரசிக்கும் வனவாழ் மக்கள், கானக மணம் நம்மேல் இதமாகக் கவிகிறது. வானம் பொய்த்தால், அம்மக்கள் எதிர்கொள்ளும் வரட்சியும் சோகமும் நம் இதயத்தில் வண்டாய்க் கரிக்கிறது.
காட்டைச் சார்ந்த, இத்தகைய அதீதமான மன ஆக்கிரமிப்பு அல்லது அள்ங்ள்ள்ண்ர்ய் ஏன் என்ற வினா இயல்பாக எழுகிறது. பாவவின் சொந்தஊர் காட்டின் எல்லையுடன் ஒட்டி உறவாடும் கிட்டத்தில் உள்ளது. அவரது தந்தையார் இருளர் இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தனர். பவாவின் பால்ய இருளர் இன மக்களாலானது.

இந்தப் பின்புலத்தில், ‘முல்லை’ என்ற பெயர் தாங்கிய முன்னுரையில் பவாவின் வாககுமூலம் அர்த்தம் உள்ளதாக விளங்குகிறது. இதோ பவா:
“ நான் திமிரத்திமிர காலம் என்னை அங்கிருந்து அறுத்துக்கொண்டு வந்து, இந்த நகரத்தில் போட்டது. என்னை ஆக்ரமித்த ஈரமான, குதூகல ஞாபகங்களை அதனால் இன்னும் கூட அழிக்க முடியவில்லை.
.............
நான் விட்டுப் பிரிந்த பதுங்குமுயலையும், ஒழக்குள்ள நரியையும், தவக்கரடியையும் சந்திக்கவே முடியாத துயரத்தை காலம் என்மேல் ஏற்றியிருக்கிறது. என் படைப்பின் மூலமாவது மீண்டும் அந்த நிலப்பரப்பை, பழங்களை, விலங்குகளை, பால்யகாலத் தோழர்களை சென்றடைய எத்தனிக்கும் முயற்ச்சியே இந்நூல்” என்கிறார்.
இம்முயற்ச்சியில் பவா கணிசமாக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லை அவரது காடுகள் பாலும், அங்கு வாழும் மக்கள் பாலும், ஓர் ஒற்றுணர்வை, ஓர் அன்யோன்யத்தை வாசகர்களிடமும் ஊக்கி யிருப்பது அவரது படைப்பாக்கத்தின் வெற்றி.

இத் தருணத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியக் களத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவிவரும் ஒரு செல்நெறியை விமரிசப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், கிராமப் புறங்களிலிருந்து நகர்களையும் பெருநகர்களையும் நோக்கி புலம் பெயர்தல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. இந்தப் பின்புலத்தில் இழந்த கிராம வாழ்வு சார்ந்த பின்னோக்கிய ஏக்கம் அல்லது சர்ள்ற்ஹப்ஞ்ண்ஸ்ஹ இயல்பாக விளைகிறது. இந்த யதார்த்தப் பின்னணியில் சொந்த மண்சார்ந்த ஏக்கம் ஒரு சோகமாக, ஒரு கையறு நிலையாக இலக்கியப் படைப்புக் கருவாக இடம்பெற்று வருகிறது. பல தரமான இலக்கியப் படைப்புகள் செழுமையான அறுவடையாக விளைந்துள்ளன.

இந்தத் திக்கில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தப் பிரிவு ஏக்கம் நிரந்தரமான ஒன்று இல்லை. முதல் பத்தாண்டு காலத்தில் இந்த ஏக்கத்தில் உண்மை இருக்கும் காலப்போக்கில், புதிய களத்தில் இயன்ற அளவு புலம் பெயர்ந்தவன் காலூன்றுகிறான்,வேர் பாய்ச்சுகிறான். புதிய களத்தின் இயங்கு நெறிகளை உள்வாங்கிக் கொள்கிறான். புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்கிறான். அவனது சாமர்த்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்ப வெற்றி / தோல்வியை எதிர் கொள்கிறான். இது அவனது யதார்த்த இயங்கு களனாகவே உருப்பெற்று விடுகிறது.

மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்த பின்பும், பின்னோக்கிய ஏக்கத்தைக் கட்டிக்கொண்டு புலம்புவது ஒரு மாயை ; ஒரு சுயஏமாற்று; ஒரு பொய்யான சுய ஒத்தடம். ஒரு படைப்பாளி இதைச் செய்யும் போது சுயஏôமாற்றுதலை மீறி இந்தப் போக்கு ஒரு பொய்யான வியாபார்ச் சரக்காகும் அபாயத்துக்கு ஆளாகிறது. இந்த சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ உத்தி, வேர்மண் விநியோகம் செல்லுபடியாகும் வியாபாரமாக வடுப்பட்டு விடுகிறது. இது குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற எல்லாத் திணைகளுக்கும் பொருந்தும்; எல்லா நிற மண்ணுக்கும் பொருந்தும்.

இரண்டு / மூன்று பத்தாண்டுகள் நகரிலோ, பெருநகர்லோ வாழ்ந்த பிறகு, தன் வேர்மண்ணிலிந்தே அந்நியப்பட்டுப் போதல் நிகழ்கிறது. இது ஒரு சோகம் இது ஓர் இழப்பு. நகர மண்ணிலும் வேர்பாய்ச்ச முடியாமல் இருப்பது ஒரு துயரமான இயலாமையும் உயிர்ப்புள்ள, படைப்புக்கு உகந்த கருப்பொருளாக அமையும்.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போதும், காடுகள் சார்ந்த பவா செல்லதுரையின் ககைகளில் வனாந்திர மணத்தில் கலப்படம் இல்லை, அவற்றில் உள்ள உண்மையின் கதகதப்பு நம்மைத் தொடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை இனங்காண முடிகிறது. பவா இப்போது வாழும் திருவண்ணாமலை நகரம் அவரது படைப்புக் களனான காட்டுப் பகுதிக்கு மிகவும் அருகிலேயே உள்ளது என்று பவாமிடமிருந்து அறிகிறேன். இரண்டு: அவரது இயல்பான சார்பை ஒட்டி, பவா இருளர் இனத்தை, உள்ளடக்கிய வேர்மட்ட மக்கள் நலவில் தீவிரமான, தொடர்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். எனினும், காலம் போக்கில் பவாவின் படைப்புலகம் காட்டிலிருந்து மெல்ல விலகி நகர்ப்புற வாழ்வியல் கரிசனைகளை நோக்கிப் பயணிப்பது இயல்புக் கட்டாயம் என எண்ணுகிறேன்.

காட்டுமணம் முன்னுரிமை பெற்றுள்ள அதே நேரத்தில், இந்தத் தொகுப்பில்உள்ள கதைகள் அழகான ஒரு நிறப்பிரிகை போல் காட்சி அளிக்கின்றன. முத்தான கதைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவம் உள்ள நிகழ்வுக்களன்; இயல்பான மொட்டவிழ்ப்பு; இறுதியில் எதிர்பாராத ஒரு ‘சுளீர்’.

சிறப்பாக அமைந்துள்ள கதைகளில் ஒரு சிலவற்றையாவது தொட்டுச் செல்லாவிட்டால் என் உரை மூளியாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு.

‘’ஏழுமலை ஜமா’ பின்னோக்கிய ஏக்கத்தின் வார்ப்படம். கோணலூர் ஏழுமலை. கூத்து ஐமாவின் முக்கிய அங்கம். வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அவனை பெங்களூருக்குத் தள்ளியது. சில ஆண்டும் பெருநகர வாழ்க்கை அவனுக்கு மூச்சு முட்டியது பாட்டின் சத்தமும், லயமும், பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகளும்; அவனை பஸ் ஏற்றி விட்டிருந்தது. கிராமத்தின் முகமோ மாறியிருந்தது. சினிமா ஸ்டார்களின் ஆக்கிரமம் மதுவில் மனவேதனையை மழுங்கடிக்கும் முயற்சியூடே தொலைவிலிருந்து கூத்துப் பாட்டின் மெலிந்த ஒலி ஒலி நோக்குத் தள்ளாடுகிறான். ஜமாவில் சங்கமிக்கிறான். சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ வின் கலாநேர்த்தியான, உள்ளத்தைத் தொடும் படைப்பு.

‘வேட்டை’ வேட்டைதான் ஜப்பான் கிழவனின் குலத்தொழில்; வாழ்வாதார ஈடுபாடு. அவனது கண்ணின் வீரியமும், கண்ணியின் வெறியும், அம்பின் குறியும் எதையும் தப்ப விடாது. பறவையாயினும் சரி, குஞ்சானாலும் சரி; காட்டுப் பன்றியாயினும் சரி, குட்டியாயினும்சரி. ஒரு பேரிழப்பு; அதைத் தொடர்ந்து ஒரு ரசவாதம். இதோ பவா:

“ ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து.... ஜன்னி வந்து செத்துப் போனதுக்கு அப்புறம் ..... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக”.

‘சத்ரு’: அருமையான சிறுகதை வடிவத்துக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு பொட்டு இருளனின் திருட்டு சாகசங்கள் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் அவனுக்கு ஓர் இதிகாச பிம்பத்தை உருவாக்கி இருந்தது. காட்சி மாற்றம். பல்லாண்டு வரட்சியில் வதங்கி ஒடுங்கிப் போயிருந்தது கிராமம். இறுதி முயற்சியாக சாமிக்குப் படையால். மணி மணியாகச் சேகரித்த சோளம் மாவாக்கப்பட்டது. அதிலேயே கைவைத்துடன் உயிர்மாய்க்க உறுதிபூண்டது கிராமம். திடீரென்று, ‘மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது. பூமி நனைகிறது; உள்ளம் குளிர்கிறது; வன்மம் மறைகிறது.

இனி ஜென்மத்தும் திருடாத மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா போ, போய் பொழச்சிக்கோ, எல்லோர் குரலும் நனைந்திருந்தது

சினமும், சீற்றமும் கருணையாய்ப் பரிணமிக்கும் மந்திர தருணத்தில் நாமும் நனைந்து கரைகிறோம். நம்மை அறியாமல் நம் கண்கள் பனிக்கின்றன.

பவாவின் இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டத்தக்க இன்னோர் அம்சம் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி. வீரியமும், நளினமும், கவித்துவமும் இயல்பான மீட்டலில் நம்மைத் தொடுகின்றன.

பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்கள்; சிங்காரக் குளத் தண்ணீர் முழுவதுமே, ‘பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?’ என்ற பிரமிப்பு; ‘மண்ணில் ஊனப்பட்ட விதைகளில் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முறைத்தும், மறைந்தும் போக்குக் காட்டிடும்’ காட்சி; ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களில் காத்திருத்தல்,’ பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு, அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த யாருமற்ற தனிமை - இவ்வாறு கவித்துவம் நம்மை ஆங்காங்கு ஆலிங்கனம் செய்கிறது.

இறுதியாக, வரட்சியின் வெம்மையையும், பஞ்சத்தின் குரூரத்தையும் நம் கண்முன் நிறுத்தம், கந்தகச் சொற்களால் வடிக்கப்பட்ட சித்திரம்:“ தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.

பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில், உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபத்தில் மீந்தது”.

சொல்லின் சக்தியை நம்முள் விதைத்து, நம் உள்மன ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். படைப்பாளி. பவாவின் படைப்புலகம் மேலும் ஆழமும், அடர்த்தியும் கொண்டு சிறக்க என உளமார்ந்த நல்லாசிகள்.

Wednesday, April 15, 2009

நான் கடவுள் - சில மனப்பதிவுகள்



நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த "ஏழாம் உலகம்" நாவல் என் வாசிப்பனுபவத்தில் முற்றிலும் வேறுபட்டது. எனக்கு காய்ச்சல் உச்சத்தை அடைந்திருந்த போது நான் அந்நாவலை முடித்திருந்தேன். என் தூக்கத்தையும், சாப்பாட்டையும், அன்றாட வாழ்தலையும் அந்த உருப்படிகள் வன்மத்துடன் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். என் நினைவைத் திசைதிருப்ப எடுத்த முயற்சிகளில் நான் தோற்றுக் கொண்டிருந்தேன். என் சௌகர்ய வாழ்வு எனக்கே குமட்டத் தொடங்கின நாட்களவை.

ஏழாம் உலகத்தின் திரை வடிவம்தான்"நான் கடவுள்" என நண்பர்களால் சொல்லப்பட்டபோது ஒரு பயம் தொற்றிக் கொண்டது. புத்தகத்திலிருந்து திரைக்கு கொண்டு செல்பவர்களின், அக்கறையற்றதனமும், சினிமா ரசிகர்களை சாக்கு சொல்கிற அவர்கள் செய்யும் அதிகபட்ச சிதைத்தலின் மீதான பயம் அது.

அதிகம் பேசாத, அதிகம் வாசிக்காத, அதிகம் வியக்காத, எந்த செதுக்கல்களும், அழகூட்டல்களுமற்ற தன் முந்தைய இரு படங்கள் மூலம் ஒரு "ரா"வான கலைஞனாக என்னுள் பதிவாகியிருந்த பாலாவின் கைகளில் இப்படைப்பு ஒப்படைப்பில் என் நம்பிக்கை உட்கார்ந்திருந்தது.

ஏழாம் உலகத்தின் உருப்படிகள் அப்படியே திரையில் வாழ்கிறார்கள். எழுத்தில் இருந்த அதன் உச்சபட்ச குரூரம் தமிழ்த்திரை தாங்காதென்பதால் காட்சிப்படுத்தலில் தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திரைப்பட இயக்குநருக்கே சாத்தியம்.

நம் தெருக்களில், கோயில் வாசல்களில், திருவிழாக்களின் நெரிசல்களில், கடைவீதிகளில், பேருந்து நிலையங்களில் நம்மிடம் கையேந்தும் குரூபிகள், ஊனமுற்றவர்கள், குருடிகள், உடல் மற்றும் மனம் சிதைந்த மனிதர்கள், சாமியார்கள் இவர்கள் மீதான இந்த சௌகர்ய மனிதர்களின் அவதானிப்பென்ன? இவர்கள் சுண்டியெறியும் எட்டணாவும், நாலணாவும் எங்கே போகிறது? அவர்களின் வசிப்பிடம் எது? அவர்களின் காலைக்கடன், குளியல், உடலுறவு இவைகளின் நிகழ்விடம் எது? வெறும் துக்கத்திற்கும், கொடுமைக்கும், சாவுக்கும் மட்டும் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களா அவர்கள்? அவர்களின் உலகத்துக் கிண்டல்கள், பகடிகள், பாடல்கள், பொறாமைகள், கொண்டாட்டங்கள், பொங்கிப்பெருகும் மனிதப் பேரன்பு இவைகளை நினைத்துப் பார்க்கவும் முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் "சௌகர்ய மனிதனே"ஒரு நிமிடம் உன் புறக்கடைக் கதவைத் திற. முகத்திலடிக்கும் முடைநாற்றத்தைப் பழகிக்கொண்டு, உன் பார்வையால் ஊடுறுவிப் பார். உனக்கு இந்த உருப்படிகளும் மனிதர்கள்தான் என்ற உண்மை எரியும் நெருப்பின் சரீரத் தொடுதல்போலச் சுடும்.

இக்கூட்டத்திலிருந்து ஏதோவொரு காரணத்திற்காக பிடுங்கப்படும் ஒரு குழந்தையை, ஒரு கிழவியை, ஒரு குருடியை, தடுக்கமுடியாமல் போன கையாலாகததனத்திற்கான அந்த மொத்தக் கூட்டத்தின் துடிப்பும், பிற மனிதர்கள் மீதான அக்கறையற்றுப்போன நம் நவீன வாழ்வின் மீதான காறித்துப்பல்கள்.

பாலாவின் முதல் இரண்டு படங்களுமே என்னை வசீகரித்ததில்லை. எந்த தீர்க்கமான பார்வையும், தீர்மானமுமின்றி எடுக்கப்படும் அவர் படங்களில் நாம் பார்த்தறியாத குரூரமும், வன்மமும் மிக்க மனிதர்கள் வந்து போகிறார்கள் என்பது மட்டுமே புதிதாய் இருந்தது. மானுடவாழ்வின் அழகான பதிவுகள் இம்மனிதனின் பார்வைக்கு படவே இல்லையோ என்ற என் சந்தேகத்தை பிதாமகனில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ் எல்லோரும் சோர்ந்து பங்கெடுக்கும் ஒரு பாடலில் விக்ரமையும், சங்கீதாவையும் ஒப்பிட்டு சூர்யாவின் கண்சிமிட்டலுக்கு சங்கீதா படும் ஒரு வினாடி வெட்கத்தில் தீர்த்து வைத்தவர் பாலா.

திரைப்படமாக்கலுக்காக அவர் மெனக்கெட்டிருக்கும் நாலு வருட உழைப்பேறிய வடிவமே நமக்கு பார்க்கக் கிடைக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும், கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையும், இளையராஜாவின் அடக்கி வாசித்தலும், இடத்தேர்வும் - ஜெயமோகன், பாலா என்ற இரு பெரும் கலைஞர்களின் கூட்டுழைப்பும் நம்மை நாம் அறிந்திராத வேறொரு உலகத்திற்கு இட்டு செல்கின்றன என்ற உண்மையோடு, தமிழ்சினிமா போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத இலட்சுமணனின் கோட்டை இப்படமும் தாண்டவிடவில்லை என்ற உண்மையையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆர்யாவின் பாத்திரப்படைப்பே இத்திரைப்படத்தோடு சம்பந்தமில்லாத ஒன்று. காசியிலிருந்து அவனுடைய தமிழ்நாட்டின் வருகையின் நோக்கமே ரொம்ப பலவீனமானது. அவனுடன் அவன் தாய் நடத்தும் உரையாடல்கள் பெரும் சலிப்பை உண்டாக்குபவை. அவன் அம்மாவின் அழைப்பினை ஏற்று அவனை வீட்டுக்குப் போகச் சொல்லி பூஜா நடத்தும் இறைந்த மன்றாடல் அதிகமும் செயற்கைத் தன்மை வாய்ந்தது. அந்த மலைக்கோவில் மீது ஏறி, இறங்கும் கால்களுக்கு மேல் இதைவிட உருக்கமான உரையாடல்கள் நிறைந்திருக்கும் அதிலெல்லாம் நுழையாத இக்குருட்டுப்பிச்சைக்காரி இவளிடம் ஒரு பக்க வசனம் பேசி அடிவாங்குவது அபத்தம்.

தம்பித்துப்போகும் பூஜா தனியாளாக ஒரு மாதாக்கோவிலுக்கு எதிரில் ஒரு கன்னியாஸ்திரி முன்னால் உட்கார்ந்திருப்பதும் அவள் போதிப்பதுமான காட்சி முடிந்து, பிறிதொரு காட்சியில் அவள் தன் பழைய வசிப்பிடத்திலேயே, கிருஸ்துவ வசனங்களை பேசுவது என்பதெல்லாம் படக்கோர்ப்பின் அக்கரையின்மையைத் தெளிவுபடுத்துகிறது.

பாலாவுக்கு பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை ரெக்கார்டரில் போட்டு ஆடவைப்பதில் ஒரு அலாதி சுகமிருப்பது அவருடைய பிதாமகனிலும், இப்படத்திலும் அது தொடர்ந்தாலும் அக்காட்சிகளில் நாமும் லயிக்க முடிகிறது. காவல் நிலைய கொண்டாட்டம் அறுந்து, சற்றுமுன் வரை தன் நெகிழ்வூட்டும் குரலால் நம்மை ஆட்கொண்ட நம் பார்வையற்ற ஸ்நேகிதி, ஒரே விநாடியில் ஒரு டெம்போவில் உருப்படியாக்கி ஏற்றப்படும்போது பதைக்கும் மனதுடன் கொஞ்ச தூரம் டெம்போ பின்னால் கண்ணில் இருந்து தூசியை தட்டிக் கொண்டு நாமும் ஓடி, எதுவும் செய்யமுடியாதவர்களாகத் திரும்புகிறோம்.

இப்படத்தின் நாயகன் ஆர்யா இல்லை. தாண்டவன்தான். அவன் முகத்தில் உறைந்திருக்கும் குரூரம், புன்னகையே மரணம் போல் நிகழ்வதும், தூக்கிக்கட்டிய பச்சை லுங்கியும், தன் உருப்படிகளினூடே அமைக்கப்பட்ட சாமிப்படங்களுக்கு தீபம் ஏற்றி கும்பிடுவதும் குற்ற உணர்வை குறைந்து கொள்ள பயந்து

கடந்த நான்காண்டுகளாக ஆர்யா என்ற நடிகனின் இப்படப்பங்கு குறித்து ஊடகங்கள் நம் மீது ஏற்றியிருக்கும் பிம்பம், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காஸ்ட்யூம், மூக்குத்தி போடப்பட்டிருக்கும் வெள்ளி வளையம், ஜடாமுடி, அரேபியக் குதிரையின் கண்கள், கஞ்சா புகைக்க அவன் செய்யும் முன்னேற்பாடுகள், இவைகள் எல்லாமும் சேர்ந்து நம்முள் ஏற்படுத்தும் அதிர்வுகளைவிட, தாண்டவனின் அம்மண்டபத்தை நோக்கிய வேக நடை ஒன்றே பல மடங்குகளை கடக்கிறது.

நீதி மன்றக் காட்சியில், இன்ஸ்பெக்டரின் பல்டியும், ஆர்யாவின் விடுவிப்பும் யதார்த்ததிற்கு வெகு தொலைவில் நிற்பவை.

கேரள நாயர் முதலாளியாவது, அக்குருடியின் கடத்தலுக்கான நேரடி முயற்சியில் ஆர்யாவால் குற்றுயிராக்கப்பட்டுத் தொலைந்து போகிறான்.

தாண்டவனின் உலகம் அவன் அறியாதது. அவனின் குரூரமும், ஈவிரக்கமின்றி காசுக்குச் சோரம்போய், எதையும், எவரையும் பலியிடத்துணியும் அவனின் செய்கைகள் மற்ற பிச்சைக்காரர்களின் வழியாகக்கூட ஆர்யா அறியாதது. அப்படிப்பட்ட ஒருவனோடு அத்தனை குரூரமான மோதலுக்குப்பிறகு அவன் பிணம் ஒரு சுடுபாறையின் மீது ரத்தத் தொய்தலுக்கிடையே கிடப்பது நமக்கு சம்மதமே. "நானே பிரம்மா நானே கடவுள்" என சமஸ்கிருதத்தில் சதா உச்சரிக்கும் அச்சாமி?

கெட்டவர்களைப் பார்த்தவுடன் அறியும் ஆற்றல் அவனுக்கு உண்டென்றால், ஐந்து நாட்கள் அவனுடனே சுற்றித்திரியும் அந்த இன்ஸ்பெக்டர் மீது அதில் ஒரு துளி வன்மமும் வெளிப்படாதது ஏன்?

ஏஜண்ட் முருகன், ஒரு பின்னிரவு போதையில் தன் உருப்படிகளிடம் நிகழ்த்தும் உரையாடலும், அதனூடே மனப்பிறழ்வுற்ற ஒரு குழந்தைக்குத் தன்னிடமிருந்து ஒரு குருவி பிஸ்கெட்டை எடுத்துத் தந்து அக்குழந்தையை தன் இடுப்பில் எடுத்து வைத்து உருகுவதும் படைப்பின் உச்சம்.

வேறுமாதிரியான கதை இருந்தும், தமிழ்த்திரை இதுவரை பார்த்தறியாத மனிதர்கள் நிறம்பிய காட்சியமைப்பிருந்தும், ஜெயமோகன், கிருஷ்ணமூர்த்தி , ஆர்தர் வில்சன் ஆகிய ஆளுமைகளின் கண்ணுக்குத் தெரியாத லட்சுமணன் போட்ட மாயக்கோட்டைத் தாண்டுவதற்காக வந்து அதன் விளிம்பிலேயே பாலா நின்றுவிட்டலும், ஆர்யா என்ற கதைக்கு சம்மந்தமில்லாத நாயகனும், பரிட்சார்ந்த முயற்சியில் பணத்தைத் தொலைத்த தயாரிப்பாளரின் நீண்ட பட்டியலும் அவர் கையைப் பிடித்திழுப்பதையும் பார்க்கமுடிகிறது.

அம்ருதா மாத இதழ் மார்ச் - 2009"

Tuesday, April 14, 2009

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள் மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.

அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.

குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.

நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள்.சனிமூலை 'மென' பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.பிடித்தாள்.

கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.

'கெழக்கத்தி ஆளுங்களா?'

அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.

துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.

மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.

தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.

புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.

முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.

பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.

அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.

அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.

சொம்பு நிரம்பியதும் 'உரிச்சி துண்ணு'என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.

ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,
இதோ இன்னொரு இளவரசி.

இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.
உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.

துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.

இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
'இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு' என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.

அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.

ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.

சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.

மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.

ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது.

எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.

அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.

இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.

இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.

காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது.ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.

கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
”கண்ணாமூச்சி ஆடலாமா”

உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.

மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.
ஒண்ணு... ரெண்டு... மூணு... நூறு... நூறு...

கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...

”ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...”

அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.

இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அன்று ”எட்டுக்கு ஒண்ணு” என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.

இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள்.
பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.

அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.