Thursday, December 15, 2011

வரைய முடியாத சித்திரம்

திலகவதி ஐ.பி.எஸ்.

அப்போது அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்பது நினைவில்லை. ஒரு பத்திரிகையில் படித்த அவர்களின் நீண்ட நேர்காணலே, அவர்களை நோக்கி என்னைத் தேட வைத்தது. பெண்களின் ஆழ்மன வலி, எப்போதாவது ஒருமுறை எல்லாவற்றையும் மீறி இப்படி வெளிப்படும். எழுத்தாளரும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான திலகவதியே, இப்படியான என் தொடர் தேடுதலில் நான் கண்டடைந்த என் ஆத்மார்த்த ஸ்நேகிதி.

அந்நேர்காணல் வாசித்த எனக்கே வலி நிறைந்தது. வாழ்ந்தவருக்கு? அவள் விகடன் துவங்கிய புதிதில் ராசாத்தி அம்மாள் ‘என் சிரிப்பு சிங்கப்பூருக்கு போய்விட்டது’ என பத்து பக்கத்துக்கு ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில்தான் நான் அந்தம்மாவின் ஆத்மாவை, உள்மனதை, அதன் ரணத்தை உணர்ந்து கொண்டேன். நம், பொது புத்திகளிலிருந்து விலகி நின்று சிலரை உள்வாங்கும்போதுதான், அவர்களின் ஸ்நேகமும், சமூகம் அவர்கள் மேல் ஏற்றியிருக்கிற பிம்பம் கலைந்து, அவர்களை நம் சக மனுஷியாக, தோழியாக, நின்று நம்மில் ஒருவராக உணர முடியும்.

அதேபோல், எழுத்தாளர் திலகவதியுடனான என் முதல் தொலைபேசி உரையாடலில் நான் அடைந்த அனுபவம் அலாதியானது. அதிகாரம், பதவி இவைகளை மீறி, ’பூ, நதி, வனம், அனில்’ என மீறத் துடித்த ஒரு மனுஷியிடம் நான் நட்பானேன்.


முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நாங்கள் ஒரு மாவட்ட மாநாட்டையே, மாநில மாநாட்டுக்கும் மேலே போய் நடத்தினோம். சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில் அன்று குவியாத படைப்பாளியோ, கலைஞனோ இல்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி என ஆரம்பித்து, ஓவியர் சந்துரு, ட்ராட்ஸ்கி மருது, எடிட்டர் லெனின் என அந்த ஆளுமைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

அம்மைதானத்தில் ஆங்காங்கே கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்த படைப்பாளிகளுக்கிடையே, ஒரு சைரன் வைத்த காரிலிருந்து இறங்கி, கம்பீரமும், பேரழகும் மிக்கவராக அவர் நடந்து வந்த காட்சி இலக்கியவாதிகளுக்கு பழகியிராது. அவர் எங்களோடு சகஜமாய் இருக்க முயன்றதும், நாங்கள் விலகிச் சென்றதுமாக அந்த டிசம்பர் ஞாயிறு மெல்ல என் நினைவில் துளிர்க்கிறது.
அப்பள்ளி மைதானத்து கல்மேடையில் உட்கார்ந்து நானும் அவரும் எங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டோம். ஏதோ ஒரு புள்ளி, இந்த துளிரும் நட்பை இன்னும் அடர்த்தியாக்கியது. எல்லா மேடைகளிலும், ‘‘பவா என் மூத்த மகன்’’ என்று சொல்லுமளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவரானார் திலகவதி. தொடர்ந்து வாசிப்பையும், எழுத்தையும் ஒரு ஜீவனோடே தனக்குள் பழகி வைத்திருந்தார் திலகவதி. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில், 20 மணி நேரத்திற்கும் மேல் உழைத்துக் கொண்டேயிருந்த அசாத்தியமான மனுஷி திலகவதி.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது, போலீஸ்காரர்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டி ‘பாலின நிகர்நிலைப் பயிலரங்கம்’ என்ற ஆறு மாத பயிற்சி வகுப்பு ஒன்று திலகவதி மேடம் தலைமையில் தமிழகம் முழுவதும் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நானும் என் ஸ்நேகிதி லஷ்மி மேடமும் இயங்கினோம். அது, கருத்துக்களால் நிறைந்த ஒரு காலம்.

போலீஸ்காரர்கள் மனரீதியாக எவ்வளவு கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதறிந்து அதிர்ந்தோம். பெண்களை படுப்பதற்கான இயந்திரங்கள் என்பதுக்கு மேல் அவர்களால் கருத முடியவில்லை. தாய்வழிச் சமூகத்திலிருந்து ஆரம்பித்து, வரலாறு நெடுக ஆண்கள் அவர்களை எப்படியெல்லாம் இம்சித்திருக்கிறார்கள் என்ற எங்கள் உணர்வுபூர்வமான உரைகள், அவர்களின் இறுகியிருந்த மனங்களை கொஞ்சம் ஈரப்படுத்தியிருக்கலாம். அதற்குமேல் எதுவும் நிகழவில்லை.
ஆனால், அந்த பயிலரங்குக்கு திலகவதி மேடம் எடுத்த ஆத்மார்த்த முயற்சிகள், உழைப்பு, பயணம் எல்லாம் எந்த பதிவுகளுமின்றி போனாலும், பல போலீஸ்காரர்களின் வாழ்வியல் அறத்தின் மீது எழுப்பிய கேள்விகள், என்றென்றும் நிற்கும். ரீட்டா மேரி என்ற பெண்ணை திண்டிவனத்தில் ஒரு வீட்டிலிருந்து மீட்டு, போலீஸ்காரர்களும், சிறைக்காவலர்களும் சீரழிந்த கொடுமை தமிழகத்தை வழக்கம்போல் ஓரிரு நாட்கள் உலுக்கிய செய்தியாக மட்டும் பார்க்கப்பட்டபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதன் விசாரணை அதிகாரியாக திலகவதியை நியமித்தார். அதன் விசாரணைக்கென்று அவர்கள் செஞ்சிக்கு வந்திருந்தபோது, என்னையும் வரச்சொல்லி தொலைபேசியில் அழைத்தார். அவ்விசாரணயின் முழுமையிலும் நான் அவருடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, எனக்குள் திலகவதி வேறு வேறு மனுஷியாக ஒரு படச்சுருளாக பதிவாகிக்கொண்டேயிருந்தார்.

கோபம், உக்கிரம், கவலை, கண்ணீர், ரௌத்ரம், சாந்தம் என பலவிதமான மன உணர்வுகளை அவர்கள் முகத்தின் வழியே நான் உணர்ந்தேன். வரிசை கட்டி நின்று எங்கள் மீது வீசிய, மீடியா ஒளியை மீறி என்னை அவர் காரின் பின் இருக்கைக்கு போய் உட்காரச் சொன்னார்.
கையில் கனத்த ரீட்டா மேரியின் விசாரணை பைலில் முகத்தை மூடிக்கொண்டு, காரில் ஏறி செஞ்சி சப்ஜெயிலுக்கு போகச் சொன்னார். அப்போது இருள் கவ்வியிருந்தது. இதே போலொரு மங்கிய இருளில்தான் அச்சகோதரி இச்சிறைச்சாலை காவலர்களால் சிதைக்கப்பட்டது என காலத்தை சாட்சிபடுத்தினார்.

அங்கு நிலவிய அசாத்திய மௌனம் எதன் பொருட்டாவது கலைய வேண்டுமென மனம் விரும்பியது. அங்கிருந்து திண்டிவனத்திற்கு ரீட்டாமேரிக்கு சிறை தண்டனை கொடுத்த பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்றோம். வழிநெடுக, வரலாறு நெடுக பெண்களுக்கு நாம் இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டார். ‘இதில் நானும் ஒருத்தி’ என வெடித்தழுதார்.

‘‘ரீட்டாமேரி என் மக பவா. ஒரு சின்னக் குழந்தை எத்தனை பலமான மிருகங்களால் சிதைந்திருக்கிறது பாருங்க’’ என அந்தக் கார் பயணம் துயரத்தால் நிறைந்தது. நான் காரில் காத்திருந்தேன். அவர் நீதிபதியின் வீட்டிற்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார். ‘மேடம் இன்னிக்கு நைட் எங்க சாப்புடுவாங்க?’ என்ற அங்கலாய்ப்பில் ஒரு டி.எஸ்.பி. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

‘செஞ்சி கெஸ்ட் ஹவுஸ்ல, திண்டிவனம் சாரம் கெஸ்ட் ஹவுஸ்ல.. அதிலில்லாம செங்கல்பட்ல’ என்று அவர் இரவு உணவு ஏற்பாட்டின் விஸ்தீரணத்தை, சூழலின் கணமறியாமல் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தது சகிக்க முடியாததாய் இருந்தது. தங்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்த இவர்கள் எடுக்கும் அக்கறையில், நூறில் ஒரு பங்கையாவது ரீட்டாமேரி மாதிரியான சராசரி பெண்களை காப்பாற்ற எடுக்கத் தவறிவிடுகிறார்கள்.

இரவு 12 மணிக்கு விசாரணை முடிந்து, இறுகிய முகத்தோடு நீதிபதியின் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவசரமாக காரில் ஏறி

‘‘ரவி, பவா வீட்டுக்கு போ’’ என உத்தரவிட்டார். ‘‘பவா, ஷைலுகிட்ட சொல்லி சாப்பிட ஏதாவது செய்யச் சொல்லு’’ என்றார்.
அன்று நாங்கள் பயணித்த வேகம், அதற்கு முன்னும் பின்னும் எப்போதும் இல்லாதது. அவ்வேகம் என்னை நிலைகுலைய வைத்தது.

‘‘மேடம், இத்தனை வேகம் அவசியமா?’’

‘‘இந்த வேகத்தில் விடுபட்ட ஒன்றிரண்டைச் சேர்த்து செய்யலாம் பவா.’’

இரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தோம். வீட்டில் நுழைந்து வழக்கமாக அவர்கள் உட்காரும் அந்த சின்ன ஹாலின் நடுவே தரையில் கால் நீட்டி உட்கார்ந்தார். கொஞ்சம் நிதானப்பட்டிருந்தார். அப்பெண்ணின் சிதைவை உணர்வுகளற்று ஒரு ரிப்போர்ட் மாதிரி சொன்னார்.

‘‘ரவி வண்டில பவாவுக்கும் ஷைலுவுக்கும் டிரெஸ் வச்சிருக்கேன். எடுத்துகிட்டு வா’’ என்றார்.

‘‘மேடம் இந்த சூழல்ல எங்களுக்கு எதுக்கு புதுத்துணி மேடம்?’’

‘‘நாளை காலைல பத்து மணிக்கு ரீட்டாமேரியைப் பார்க்க சென்னை ஜி.ஹெச்.சுக்கு போறேன். அந்தப் பொண்ணுக்கு ஆறு சுடிதார் வாங்கி கார்ல வச்சிருக்கேன். அப்படியே எம் புள்ளைகளுக்கும் வாங்கினேன்.’’

இந்தப் பேரன்பு, எப்போதும் எங்களை நிலைகுலைய வைக்கும். எனக்கு, ஷைலுவுக்கு, வம்சிக்கு, மானசிக்கு, எங்கள் வீட்டு சாந்திக்கு, தனித்தனியே என் நண்பர்களுக்கு என்று, அவர்கள் எப்போதும் அன்பைக் கொட்டின காலம், ஒரு படைப்புக்கு நிகரானது. நாங்கள் ‘வம்சி புக்ஸ்’ ஆரம்பித்தது, அதை ஒரு மேலான இடத்திற்கு கொண்டு போனது எல்லாவற்றிலும் அவர்களே முதன்மையானவர்.

ஒரு பத்திரிகையில் திலகவதியின் ஒரு பக்க கதை படித்து, நேரத்திற்காக காத்திருக்காமல் ஒரு நள்ளிரவில் அழைத்தேன்.

‘‘மேடம், குமுதத்துல உங்க கதை அருமை.’’

‘‘அப்பா, உங்கிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சி.’’

‘‘அதில்ல மேடம்’’ என வழுக்கினேன்.

அக்கதை தமிழின் பிரபலமான ஒரு நடிகருடையது. அவர் நலிந்த சில கலைஞர்களுக்கு உதவ நினைத்து, தன் வீட்டிற்கு அழைக்கிறார்.

நீண்ட நேரம் காத்திருந்து அவ்வயதான கலைஞர் உள்ளே போகிறார். அப்பிரபல நடிகர் ஓடிவந்து அவர் கைப்பற்றி,

‘‘சொல்லுங்க அய்யா. நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?’’
நிதானமாக அப் பெரியவர் சொல்கிறார்

‘‘எதுவும் பண்ணாத. கலைஞன்ல நல்ல கலைஞன், நலிந்த கலைஞன்னுல்லாம் யாருமில்லப்பா. எங்கிட்ட பணம் இல்லாம இருக்கலாம். உங்கிட்ட அது கொட்டி கிடக்கலாம். ஆனா, நான் என்னிக்குமே கலைஞன்தான். இனிமே எங்களை நலிஞ்ச கலைஞர்கள்னு சொல்லி அவமானப்படுத்தாதே.’’


இவ்வரிகள் என்னை சுழன்றடித்தது. மகாகவி பாரதியின் கம்பீரத்திலிருந்து ஆரம்பித்து, தமிழின் மகத்தான பல கலை ஆளுமைகளை என்னருகே கொண்டு வந்தது. சொல்ல முடியாத ஒரு உணர்வுத் தருணத்தில், நான் என் மரபுகளின் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து, அவர்களின் கால்களைப் பற்றி, இளம் தலைமுறையின் சார்பில் என் நன்றியை சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் கால்களும், என் கண்களும் ஈரத்தில் நிறைந்திருந்தது.

-நன்றி மீடியா வாய்ஸ்


Wednesday, December 7, 2011

தொடர் - 18


எனக்கு சினிமா மொழி தெரியாது. கேமரா ஆங்கிள் என்பதை மட்டும் நண்பர்களின் உரையாடல்களின்போது கவனித்திருக்கிறேன். ஆனால், பத்திருபது வருடங்களுக்கு முன்பே, சினிமா தெரியாத என்னை மாதிரியான பார்வையாளர்களை, தன் கேமராக்களின் ஜால வித்தைகளால் இரண்டு பேர் ஈர்த்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பாலுமகேந்திரா, இன்னொருவர் பி.சி.ஸ்ரீராம்.

‘மௌனராகம்’ அதன் கதையை மீறி, காட்சி அமைப்புகளை மீறி, என்னை என்னவோ செய்தது. படம் பார்த்த உணர்வுகள் அப்படியே என்னுள் படிந்திருந்தது. அதிலிருந்து மீள முடியாமல், அதனுள்ளே சுழன்று கொண்டிருந்தபோதுதான், ‘அது எதுவென’ ஒரு புள்ளியில் மனது நின்றது. அது, அப்படத்தின் இசையும், ஒளிப்பதிவும். அதுவரை கேட்டறியாத, ஒரு பெயர் தெரியாத பூச்சியின் ரீங்காரத்தையும் மீறி மனம் அப்படத்தின் ஒளியை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.

என்ன முயன்றும் அப்படத்தின் நாயகன் மோகனால், ரேவதியின் மனமொழியை அறிய முடியாமல்போய், அவன் பிரிந்து போவதென முடிவெடுக்கும் ஓர் இரவு அது. வெளியில் நிலா. அவன் தன் மென் மன உணர்வுகளை ஓர் பாடலாக உருமாற்றி, ‘நிலாவே வா’ என அதனோடு தன் துக்கத்தை பகிரத் துடிக்கும் காட்சி அது. கறுப்பு நிறமிட்ட கண்ணாடி ஜன்னல்கள் திறந்திருக்கின்றன. தன் மனைவி ரேவதி, தூரத்தில் இருட்டில் ஒரு ஓவியம் மாதிரி உட்கார்ந்திருக்கிறாள்.

அவன் பாடிக்கொண்டே அக்கண்ணாடி பிம்பத்தை பார்த்து நகர்கிறான். ‘கலைந்த, முழுமையடையாத அந்த ஓவியம் அவனிடமிருந்து நகர்ந்து, நகர்ந்து போய்க்கொண்டேயிருக்கும் அக்காட்சியை, ஸ்ரீராம் மாதிரியான மேதைகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்’ என்பதை அப்படத்தின் காட்சிகளே முதன்முறையாக எனக்குணர்த்தியது.

அதன்பிறகான என் படத்தேர்வுகளில், ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டது. ‘நாயகன்’ என்னை உறைய வைத்த ஒளிப்பதிவு. அப்படத்தின் மீது ஏதோ ஒரு செம்மண் நிறம் பூசப்பட்டதுபோல, அது ‘என்னை தனியே பதித்துக்கொள்’ என்ற பிரத்யேகத்தோடு என் முன் முகிழ்ந்தது. எவ்வளவு தடுத்தும் கேட்காத மகன், சடலமாக அந்த ஹாலில் கிடத்தப்பட்டிருப்பான். கமலஹாசன் மெல்ல, மெல்ல, உறுதி குலையாமல் நடந்து வருவார். கேமரா அவர் பின்னாலேயே ஒரு காலடித் தடமற்ற பூனைக்குட்டியின் நடைபோல பயணிக்கும். மரண அமைதி என்ற சொல் எல்லோர் முகத்திலும் படிந்திருக்கும்.

தன் மகனின் உயிரற்ற உடல்முன், அத்தகப்பன் நின்ற கணத்தில், திடீரென கேமரா டாப் ஆங்கிளுக்குத் தாவும். இதுவரையிலான நம் மன உணர்வுகளை சிதைத்து, வேறொன்றாய் மாற்றி, நம் துக்கத்தை சிந்தாமல் பிடிக்கும் அக்காட்சி அமைப்பும், டாப் ஆங்கிளிலிருந்து கீழே மகனையிழந்த அத்தகப்பனும், அவனைச் சுற்றி அதே உணர்வோடு நிற்கும் மனிதர்களில் ஒருவராக, பார்வையாளனை மாற்றும் அசாத்திய முயற்சியில், ஒரு கலைஞனுக்குக் கிடைத்த வெற்றியாக நான் பி.சி.யை நினைத்தத் தருணமது.

ஒரு கடுங்கோடையின் புழுக்கத்தில், படம் பார்க்கும் பார்வையாளனை, குளிரின், பனியின் காட்சிபடுத்தலை அப்படியே உணர வைப்பது ஒன்றும் சாமான்ய காரியமல்ல. தொடர்ந்து தன் எல்லா படங்களிலும் பி.சி. இவைகளை அனாவசியமாக கடந்திருந்தார். அவர் என்னிலிருந்து வெகுதூரத்திலிருந்தார். பொது நிகழ்வுகளில் அதிகம் தலைகாட்டாதவர் என்றும், தன் படங்களுக்கு ஒளியின் அளவை கூட்டியும், குறைத்தும் கொடுத்துக் கொண்டிருந்த அக்கலைஞன், தன் மீது எந்த மிகை ஒளியும் விழ அனுமதிக்காதவர் என்றும் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன்.


‘வம்சி’ புக்ஸ் ஆரம்பித்து எழுத்தாளர் திலகவதியின் மொத்த குறுநாவல்களின் தொகுப்பை முதல் வெளியீடாக கொண்டுவந்தபோது, அதன் வெளியீட்டு விழாவை திருவண்ணாமலையில் நடத்தினோம். அப்போது என் ஆத்மார்த்த நண்பன் வைட் ஆங்கிள் ரவிசங்கர், பி.சி.யின் உதவியாளராக சேர்ந்திருந்தார். அவர் மூலம் அந்நிகழ்வுக்கு வர பி.சி. சம்மதித்து, அன்று மதியம் எங்கள் வீட்டிற்கு தன் ஏழெட்டு உதவியாளர்களோடு வந்திறங்கின மௌனராக காட்சியை மறக்க முடியாதது.

‘‘இவ்வளவு நல்ல பிரியாணியை இதற்கு முன் சாப்பிட்டதில்லை’’ என்பதையே இன்னும் சுருக்கி சொன்னார். அவர் பிரயோகப்படுத்தின மொழி சிக்கனம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவருடனான ஒரு முழு பகிர்தல் இதுவல்ல என என் உள்மனம் நினைத்தது. அன்று மாலை அப்பரந்த மைதானத்தில் ‘பாப்பம்பாடி’ ஜமாவின் ஊரைக்கூட்டும் இசை அதிர்வுகளை ஸ்ரீராம் கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கணமும் அவர் வேறொன்றாய் மாறிக் கொண்டிருந்தார். எந்த நிமிடமும் அவர் அந்த இசைக்கலைஞர்களோடு களமிறங்கி ஆடக்கூடும் என்ற என் அவதானிப்பு, நிகழ்ச்சித் துவங்குதலின் பொருட்டு பொய்யானது.

அவரால் எப்போதும் குறைவாகவே பேசமுடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அன்று அந்த பேரிசையின் அலையடிப்பில் திகைத்துக் கொண்டிருந்த அவர் மனம், வேறெதிலும் ஒட்டவில்லை. ‘இம்முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்’ என்ற ஒற்றைச் சொல்லுக்காக நானூறு கி.மீ. பயணித்து வந்திருந்தார். நான் உள்ளூர அவரை ரசித்தேன். எல்லா மனிதர்களும் ஒன்றுபோலில்லை. தன் பிரியத்தை, உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவைப்படாத கலைஞர்களும் உண்டுதானே. பி.சி.யின் உடல்மொழியே ஒளிதான். அதை முழுமையாய் தரிசிக்கும் ஒரு தருணத்திற்காக, நீண்டநாட்கள் காத்திருந்தேன்.
சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல-
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
தன் விரலைக் கத்தியாக்கி
தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி.

அந்நிமிடம் மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை வரிகள் நினைவிற்கு வந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதம். நாடெங்கும், நகலெடுக்கப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்கள் சகிக்க முடியாதவைகளாகியிருந்தன. கலெக்டர்களுக்கு முன், அப்போதைய பிரபலமான குத்துப்பாடல்களுக்கு, எங்கள் குழந்தைகளின் அசிங்கமான அசைவுகள் எனக்கு குமட்டின. அதை மாற்ற எந்த சாமான்யனாலும் இயலாததெனத் தெரிந்து, அதிலிருந்து தப்பித்து வெகுதூரம் போக நினைத்தோம்.
சுனாமியில், எய்ட்ஸில் அப்பா, அம்மாக்களை இழந்து, சமூகத்தின் முன் யாருமற்றவர்களாக நின்ற முன்னூறுச் சொச்ச குழந்தைகளை விடுதிகளிலிருந்து சேகரித்தோம். திருவண்ணாமலை, சமுத்திர ஏரிக்கரையின் கீழ் விரிந்த மரச்செறிவுகளுக்கு அவர்களைக் கொண்டுவந்தோம். அப்புதிய இடமே அவர்களை ஓர் குதூகலமான உலகிற்குக் கொண்டு போனது. ஏற்கெனவே ஒரு வண்டி நிறைய களிமண் அடித்து பதப்படுத்தி வைத்திருந்தோம். வண்ண பலூன்கள் ஒரு மரத்தடியில் கொட்டிக் கிடந்தன. பாட்டும், இசையும், அக்குழந்தைகளின் உற்சாக பீறிடலும் எந்த மனசையும் பறிகொள்ளும்.

அதில் ‘‘ஐம்பதுக் குழந்தைகளுக்கு கேமரா கற்றுக்கொடுக்க வரமுடியுமா சார்?’’ என பி.சி.யிடம் தயக்கத்தோடு, ஆனால் உரிமையோடு கேட்டேன்.

‘அதைவிட எனக்கு என்ன புடுங்குற வேல’ என பதிலளித்தார். அதில் சென்னை நகர சலிப்புத் தெரிந்தது. தன் மனைவியுடன் அந்த ஏரிக்கரைக்கு வந்திறங்கியபோது, நான் கையில் வைத்திருந்த ஒரு பூங்கொத்துடன் அவரை எதிர்கொண்டேன்.

அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். உடல் மொழியால் எங்கள் பிரியங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டபோது, அவர் மனைவியின் கைக்கு அப்பூங்கொத்து மாறியிருந்தது. நாங்கள் எல்லோருமே குழந்தைகளாக மாறியிருந்தோம்.
காலையில் ஒரு சின்னப்பையன் கையில், விலை உயர்ந்த நிக்கான் கேமராவைக் கொடுத்து, வித்தை கற்றுத் தந்துகொண்டிருந்ததை சற்று விலகி நின்று கவனித்தேன். இதற்கு என்ன அர்த்தம்? உலகமே வியந்து பார்க்கும் ஒரு இந்திய ஒளிப்பதிவின் மேதை, ஒதுக்குப்புறமான இந்நகரில் அப்பா அம்மாவற்ற இந்த குழந்தையின் கையில் கேமராவைத் தந்து ஆங்கிள் பார்க்கும் காட்சி என்னுள் என்னென்னவோ உணர்வுகளைத் தந்தது. ஓடிப்போய் மீண்டும் ஒருமுறை அக்கலைஞனை ஸ்பரிசத்தால் கௌரவப்படுத்த நினைத்தேன்.

அக்குழந்தை வளர்ந்து, படித்து, அவனுக்குத் திருமணமாகி தன் மனைவியிடம் அப்புகைப்படம் காண்பித்து, ‘‘என்னை அணைத்து நின்று சொல்லிக் கொடுப்பவர்தான் இந்திய ஒளிப்பதிவின் உச்சம் பி.சி.ஸ்ரீராம்’’ என சொல்லும்போது, அம்மனைவியால் இதை நம்ப முடியுமா? நான் கலவையான உணர்வுகளால் குழைந்திருந்தேன்.

அன்று இருட்டும்வரை அந்த ஐம்பதுக் குழந்தைகளுக்கும் அவர் தனித்தனியே ஒளிப்பதிவு சொல்லிக் கொடுத்தார். அவர் பின்னால் அக்குழந்தைகள் அணிவகுத்து படமெடுக்க, ஏரிக்கரை மீது நடந்து சென்ற காட்சி இதுவரை எந்த சினிமாவிலும் நான் பார்க்காதது. ஐம்பத்தியோராவது குழந்தையாக அவர் மனைவியும் இந்நிகழ்வுகளில் கலந்திருந்தார்.
குழந்தைகள் எடுத்த அத்தனைப் படங்களும் உடனே பிரிண்ட் போடப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் அவர் கையெழுத்திட்டார். அது பிரேம் செய்யப்பட்டு அக்குழந்தைகளுக்கு தரப்பட்டது. இந்நிகழ்வு ஒரு பத்திரிகையாளரால் பதிவு செய்யப்பட்டு ‘பூக்கள் பூத்த தருணம்’ என அவ்வார விகடனில் வெளியாயிற்று. அதைப் பார்த்த கோவை வாசகர் ஒருவர், விகடன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு என் தொலைபேசி எண் வாங்கி, என்னை அழைத்தார். அவர் குரல் கம்மியிருந்தது.

சுற்றி நின்றிருந்த அக்குழந்தைகளினூடே, வளர்ந்த குழந்தையான பி.சி.ஸ்ரீராம் குனிந்து நின்று ஒரு குழந்தைக்கு கேமராவை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த ஸ்டில் பிரசுரமாகியிருந்தது. அருகில் கொப்பளித்த சந்தோஷத்தை மீறி, ஒரு குழந்தையின் முகத்தில் படிந்திருந்த சோகத்தை அந்த வாசகர் அச்சின் வழியே உணர்ந்திருந்தார்.


அதை ஜெராக்ஸ் எடுத்து அப்பையனின் முகத்தை ரவுண்ட் செய்து, ‘‘இப்பையனுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை இவன் படிப்பு முடியும்வரை நான் அனுப்பி வைக்கிறேன்’’ என கடிதம் எழுதியிருந்தார். அவசர அவசரமாய் நான் அந்த ஜெராக்ஸில் இருந்த அப்பையனின் முகத்தைப் பார்த்தேன். அவன் என் மகன் வம்சி.

எல்லாத் துயரங்களையும் உதறி, வாழ்வு நம்மை ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.

Saturday, December 3, 2011

தொடர் - 17


ஒரு நாற்றுக்கும்

இன்னொரு நாற்றுக்கும்

ஒரு தென்னங் கன்றுக்கும்

இன்னொரு தென்னங் கன்றுக்கும்

விடவேண்டிய இடைவெளிக்கு

துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும் புலப்படவில்லை

நீயும் நானும்

செழித்து வளர

வேண்டிய இடைவெளி எதுவென்று

கிடந்தால் பின்னிக் கிடக்கிறோம்

நின்றால் ஒற்றையாய் நிற்கிறோம்.

-மனுஷ்யபுத்திரன்.


இந்த இடைவெளிகளை இட்டு நிரப்பி வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட்ட மனிதர்கள், நானறிந்தவரை குறைவு. ஏதாவதொரு அதிர்ஷ்ட அல்லது துரதிர்ஷ்ட நிமிடத்தில் இவ்விடைவெளிகளை அறிந்தோ, அறியாமலோ கடந்துவிடுகிறோம். ஒரு நிமிடத்தில், நதியோரப் பெருமரத்தின் நட்புக் கிளையொன்று சகல சப்தத்தோடும் முறிந்து விழுந்து, பச்சை வாசனையோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, வெளியை வெறுமையாக்கி விடுகிறது.

கிளை இழந்த மரத்தின் காயம், மரம் சார்ந்தது. அடித்துச் செல்லப்பட்ட கிளையின் வலி, கிளை சார்ந்தது. ஒரு வார்த்தையை, இப்படி வெவ்வெறாகப் பிய்த்துப்போட்டு விளையாடுவதில்தான் காலம் ஏத்தனை திருப்தியடைந்துவிடுகிறது. ஒரு வார்த்தை அல்லது ஒரு உடலசைவு போதும், இத்துயரம் நிகழ. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் வாழ்வின் ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த உங்கள் ஆத்மார்த்த நட்பிழப்பை ஞாபகப்படுத்தினால், உங்கள் அறை கொஞ்சநேரம் தோழமையின் வாசனையாலோ, தூரோகத்தின் துர்நாற்றத்தாலோ நிறையலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளத்தில் காப்பாற்ற வேண்டி, உயிரை உள்ளங்கைக்கு இறக்கி, உன்னை நோக்கி நீண்ட கரங்களைப் புறந்தள்ளி, மரத்தடி பருண்மையில் மறைந்த உன் ஆண்மை, நீ நினைக்கிற மாதிரி நீ மட்டும் அறிந்த ரகசியம் அல்ல. நண்பனே, அது நிர்வாணம், முழு நிர்வாணம். தூய வானில் ஒளிரும் பேரழகோடு பயணிக்கும் ஒரு நிலவைப்போல அது உலகறிந்தது. வெகுநேரம் உள்ளங்கையில் தேங்கியிருக்கும் அக்கசப்பை விழுங்கு அல்லது சிந்து.

உன்னிடம் விரோதமில்லை, அன்பைப் போலவே

- சுகுமாரன்.

இழந்த நட்பு மீட்டலில், எழுத்து சம்மந்தமின்றி இப்படித்தான் சுழன்றடிக்கிறது. ஓரு பசிய விலங்கின் இரை தேடலுக்கான ஆவேசமும் அலைச்சலுமான தேடலும், மீட்டலும் அது.

கடந்த வாரம். வெயிலடிக்காத மதிய வேளை. நண்பனுடைய அம்மாவின் கடைசி நிமிட அடங்குதலுக்கு, எல்லோரும் காத்திருக்கிறார்கள். நாடி பார்த்து, ரத்த அழுத்தத்தின் அளவுப் பார்த்து, சுவாசம் பார்த்து, உயிரடங்குதலை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் அந்நிமிடத்தில், நான் அவர்களுடன் இருந்தேன். என் தொலைபேசி ரகசியமாய் அழைத்தது. அங்கிருந்து சப்தமின்றி வெளியேறி, அச்செய்தியைக் கேட்கிறேன். மனம் அடங்க மறுத்து ஆவேசத்துடன் துடிக்கிறது.

சீனுராமசாமி, தன் கவிதையால் என்னோடு இரு வரிகளில் பேசுகிறான்.

எல்லோரும் வெளியேறுங்கள். நான் அழவேண்டும்.

அங்கு யாரும் வெளியேறவில்லை. அழ எனக்கு அறை வேண்டாம். நடுத்தெரு போதும்.

ஷைலஜாவின் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று, அடுத்த பத்தாவது நிமிடம், கிரேஸ் மருத்துவமனை வாசலில் நின்றோம். அறுபது எழுபது சோகம் கப்பிய முகங்களிலிருந்து அந்த அப்பாவைத் தனியாகக் கண்டடைகிறோம்.

‘‘எப்பவுமே உங்களைப் பத்திதாம்மா பேசுவான். எனக்கு எல்லாமே பவா சாரும், ஷைலஜா மேடமும்தாம்பான்னுவான். நம்மை எல்லாரையும் மீறிட்டுப் போயிட்டானேம்மா...’’ என அவள் கரம் பற்றிக் கதறினார்.

‘‘குளுருது குளுருதுன்னு எப்பவுமே பெனாத்துனாருங்க’’ அவன் மனைவி, ஷைலஜாவிடம் ஏதேதோ சொல்ல முயன்றாள். எனக்கு ஜி.நாகராஜனின் கடைசி நாளைப் பற்றி சி.மோகன் நினைவு கூர்ந்தது ஞாபகம் வந்தது.

ரொம்ப குளுருதுப்பா.

சிதையில வச்சாத்தான் இந்தக் குளுரும் போகும்போல

படைப்பாளிகளோ, சாதாரணமானவர்களோ, எல்லோரும் மரணத்தை முன்கூட்டி தெரிந்துகொள்கிறார்கள். அதன்பிறகான அவர்களின் மிதந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வாழ்வின் அனுபவம் ததும்பும்.

நான் வைராக்கியத்தோடு அழாமலிருந்தேன். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து உள்ளறைக்கு நகர்ந்தேன். பணியிலிருந்த அந்த இளம் மருத்துவர் என்னைப் பார்த்ததும், அவசரமாக எழுந்து என் கரம் பற்றி, சுய அறிமுகம் செய்தார். நான் யாரைத் தேடி வந்திருக்கிறேன் என்பதை, என் முகம் பார்த்தும், என்னோடு நின்ற நண்பர்களைப் பார்த்தும், ஒரு நிமிடத்தில் யூகித்தறிந்து,

‘‘த்ரோட் கேன்சர் சார். பத்து நாளைக்கு முன்ன, சேரும்போதே சீரியஸ்தான். மதியம் ரெண்டரைக்கு நர்ஸ் கூப்புடறாங்கன்னு அந்த ரூமுக்குப் போனேன். ஒரு வெயின் டிஸ்ட்ரப் ஆகி, சுமார் ரெண்டு லிட்டர் ரத்தம் பெட்ல கொட்டிடுச்சி சார். பல்ஸ் பார்த்தேன், அடங்கியிருந்திச்சு.’’

பச்சை ரத்தம் பார்த்து, முகர்ந்த அதிர்வு, அந்த இளம் மருத்துவரின் முகத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் தங்கியிருந்தது. நான் அழாமல் நின்றிருந்தேன். அம்மருத்துவர், என் தோளுக்கிணையாய் நின்று, அடுத்த வார்த்தையை எங்கிருந்து ஆரம்பிக்கவெனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

‘‘சார் மட்டும் பாடியைப் பாக்கறீங்களா?’’

நான் தலையசைத்தேன்.

அவர் அனிச்சையாய் முகத்தில் கவசமணிந்து, கையுறையிட்டு என் முன் நடந்தார். அந்த எட்டுக்கு எட்டு குறைவான சிறு அறையை அவர் திறந்தார். முழுக்க போர்வையால் மூடப்பட்ட ஓருடல், அப்படுக்கை நீளத்திற்கு நீண்டிருந்தது. என் முகத்தைப் பார்த்தவாறே போர்வையை விலக்கினார்.

முகத்திலும், கழுத்திலும் உறைந்திருந்த ரத்தத்தோடு, அப்போதுதான் இறந்திருந்த என் நண்பன் ராஜவேலு.

அம்முகம், அவ்வுடல், அந்த மௌனம், அந்த மூடிய அறை, எதுவும் அவனுடையதல்ல. அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டேயிருந்த ஓர் இளங்கன்று. என் அலுவலக வாசல் டீக்கடையில், ராஜவேலு சொடக்குப் போட்டுப் பேச ஆரம்பித்தால், கூட்டம் மொய்க்கும். அவன் தீவிர அ.தி.மு.க. அம்மாவின் மீது பற்றும் மரியாதையும் இருந்தது. அது, அவர் மீது எழுந்ததல்ல. தி.மு.க.வின் மீது எழுந்த எதிர்ப்புணர்வின் வடிகாலென, ராஜவேலுவைச் சந்தித்த பத்தாவது நிமிடத்தில் நானறிந்து கொண்டேன்.

மதுரை அவனுக்குச் சொந்த மாவட்டம். அப்பாவின் மின்வாரிய பணி நிமித்தம், குடும்பம் திருவண்ணாமலைக்கு குடி பெயர்ந்திருந்தது. வாசிப்பின் ருசி அறிந்தவன். கொண்டாட்டங்களை எப்போதும் தனதாக்கிக் கொண்டவன். வீடு, அலுவலகம், பயணம், பார், அறை எல்லாமும் அவனுக்கு சந்தோஷங்களால் நிறைய வேண்டும். ‘இனக்குழுக்கள், கொண்டாட மட்டுமேயானவை’ என்று நினைத்த பேராசை மனம் அவனுக்கு.

சமூகத்தின் எந்நிகழ்வுகள் குறித்தும், ராஜவேலுவுக்கு எதிர்மறைக் கருத்துகள் உண்டு. அக்கருத்தின் வலிமையை, நான்கு பேருக்கு முன்னால் சொடக்குப் போட்டு ஸ்தாபிப்பான். ராஜவேலுவால் காயப்பட்ட ஒரு மனிதனையும் நானறியேன். சகமனித மன ஸ்பரிசமற்று, சுடுகாடுகளாகிப்போன அரசு அலுவலகங்களை, ராஜவேலு எப்போதும் தன் வார்த்தைகளால் உயிர்ப்பிப்பான். தன் வெடிச் சிரிப்பால் ஒளியூட்டுவான். எல்லாம் ஒரு நிமிடத்தில் அடங்கியிருந்தது.

‘‘பாடியைக் கொண்டுபோக ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா?’’

அப்படியென்றால், அவன் பேச்சு, அவன் வாசிப்பு, அவன் தர்க்கம், அவன் கொண்டாட்டம், அவன் சொடக்கு, எதுவுமே மிச்சமில்லையா? எல்லாம் துடைத்தெறியப்பட்ட மீந்த ஞாபகங்களா?

அவ்வறையிலிருந்து பத்து நாட்களாய் பயன்படுத்தின பொருட்கள், துணிகள், போர்வை, எல்லாம் இரு பிக் ஷாப்பர்களில் அடைக்கப்பட்டு, வெளியே எடுத்துச் செல்லப்பட்டன.

இறந்தவனின் ஆடைகளை

என்ன செய்வதெனத் தெரியவில்லை

மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகள் நெஞ்சில் முட்டுகிறது.

ஆம்புலன்ஸும், அதன் பின்னாலேயே நாங்களும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் எதிரே தனித்திருந்த அவ்வீட்டை அடைந்தபோது, ஒரே ஒருவர் மட்டும் எங்களை எதிர்கொண்டு நின்றிருந்தார். மரணத்தின் பரபரப்பின்றி சடலம் இறக்கப்பட்டது. வீட்டு ஹாலில் பென்ச் போட்டு படுக்க வைக்கப்பட்டபோது, ‘கிழக்கு மேற்கால’ என்று எங்கிருந்தோ ஒரு சம்பிரதாய குரல் ஒலித்தது.

ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா.

எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார்.

‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?

ராஜவேலு என்ற என் அலுவலக நண்பன், தன் வாசிப்பாலும், பேச்சின் வசீகரத்தாலும், எல்லோரையும் பின் தள்ளி, என் கைகளைப் பற்றிக்கொண்டவன். நாங்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களின் வெளிச்சமற்ற ஓர் இருட்டில், தனியாக நின்று உரை அருந்துபவன். ‘‘பார் இருட்டு மனசுக்குப் பழகிடுச்சுண்ணே’’ எனச் சிரிப்பான். நானறிந்து, உள் ரகசியங்களற்ற மனிதன்.

நம் மனக்கதவுகள், மரவட்டை பூச்சியின் கால்களைப்போல நீண்டு ஊர்ந்துகொண்டே இருக்கிறது. நாம் இருக்கிற அவசரத்தில், எத்தனைக் கதவுகளை அடைக்க முடியும்? ஒன்றை அடைத்தால், புதிதொன்று முளைக்கிறது. எத்தனையோ பூட்டுகளுடன், எத்தனை எத்தனை சாவிக் கொத்துகளுடனும், நம் ரகசியங்கள் தினம் தினம் மறைக்கப்படுகின்றன.

ராஜவேலுவின் உலகம் கொண்டாட்டங்களால் மட்டுமல்ல, வெளிப்படைகளால் ஆனதும்கூட.

‘‘அண்ணே, இன்னிக்கு ஒரு எஸ்ட்டிமேட் போட ஒருத்தன்கிட்ட முன்னூறு ரூபா கேட்டேன். ஐநூறா கொடுத்தான். எஸ்.ராமகிருஷ்ணனோட ‘உபபாண்டவம்’ என்ன வெல?’’

வம்சிக் கடை பணியாளர்கள், அவனின் இந்த அப்பழுக்கற்ற வார்த்தைகளுக்கு ரசிகர்கள்.

‘‘படிக்க படிக்க, லஞ்சம் வாங்க வேணான்னுதாண்ணே தோணுது. ஆனா குடிக்கவும், படிக்கவும், நான் வாங்கற சம்பளம் பத்தல.’’

‘‘உங்களுக்கு எப்படி ராஜவேல் என்னைத் தெரியும்?’’

‘‘தரிசனம் பெற நாள் முழுக்க யோகி ராம்சுரத்குமாரின் சன்னதி தெரு வீட்டு முன்னாடி நான் நிற்கும்போதெல்லாம், அவரு உங்களைப் பக்கத்துல ஒக்காரவச்சி பேசி சிரிப்பாரே, அப்பயிருந்துண்ணே’’

கழுத்தில் ஒரு சிறு ஆபரேஷன் செய்த வடுவோடு, ஆறேழு மாதங்களுக்கு முன், என் இருக்கைக்கு முன் நின்றவனை, கொஞ்சம் பதட்டத்துடன் பார்த்தேன்.

‘‘அண்ணே கவலைப்படாதீங்க. கேன்சரை, தொடச்செறிஞ்சிட்டேன். ரொம்ப வாய் பேசறேன்னுட்டு, தேவையே இல்லாம பத்து பல்லை புடுங்கிட்டாண்ணே அந்த டாக்டரு.’’

எனக்கு கணக்குப் போட முடியவில்லை. வாழ்வை இவன் மட்டும் எப்படி இத்தனை அநாவசியமாக எதிர்கொள்கிறான்? எது இவனுக்குள் இத்தனை அசாத்தியமான தைரியத்தை விளைத்திருந்தது?

‘என் கேன்சரை இடது கையால் நானே துடைத்தெறிந்துவிட்டேன். என்னைக் கொண்டாடு’ என்று காலத்தின் முன் துள்ளும் மனதைப் பார்த்து, அது முறுவலித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் காலம்காலமாய், காலம் தனக்குள் மறைத்து வைத்திருந்த குரூரம், என் நண்பனைக் கீறி, இரண்டு லிட்டர் ரத்தத்தை உறிஞ்சியிருக்கிறது.

நட்பின், தோழமையின், துரோகத்தின், மரணத்தின், நீள அகலங்களை அமைக்கத் தெரியாத நம் குதூகல விளையாட்டினூடே, மெல்ல ஒரு விஷக் காற்று மாதிரி பரவிவிடுகிறது காலம்.

Tuesday, November 22, 2011

தொடர் - 16

என்ன நினைவுப் பிழையெனினும் பத்து வருடங்களுக்கு முன்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் என்பதுகூட நினைவிருக்கிறது. எங்கள் வீட்டு தெரு முக்கில், ஆட்டோவுக்காக காத்திருக்கிறோம். என்னோடிருப்பவர்கள், அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமியும், அவர் மனைவியும்.

ஞாயிறு ஆராதனை முடிந்து, வண்ண வண்ண உடைகளோடும் பொங்கி வரும் சிரிப்போடும், தேவாலயத்திலிருந்து வெளிவரும் மனிதர்களில் நானும் அவரும் வெவ்வேறு விதமாக ஒன்றியிருந்தோம். கொஞ்சமும் திர்பாராத விதமாக, திடீரென எழுந்த ஓர் அலறலும் அதைத் தொடர்ந்து கூடிய கும்பலும், அச்சூழலை மட்டுமின்றி எங்களையும் குலைத்தது. எல்லாவற்றிலிருந்தும் அறுத்துக் கொண்டு ஓடினோம்.

அந்த சர்ச்சின் பாதிரியார், மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து கொண்டிருந்தார். அங்கி முழுக்க மண் ஒட்டியிருந்தது. உதட்டோரம் கொஞ்சமே கொஞ்சமாக ரத்தக் கசிவு. கீழே விழுந்துவிட்டாரோ என்ற எங்கள் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக, ஒருவன் தேவனுக்கு விரோதமான தமிழ் வார்த்தைகளில் அவரை திட்டிக்கொண்டிருந்தான். அவனிருந்த மூர்க்கம், மீண்டும் அவரை தாக்கக்கூடுமோ என அச்சமூட்டியது. நாங்கள்தான் அவனை விலக்கிவிட்டோம்.

நான் தற்செயலாய் கந்தசாமி சாரை கவனித்தேன். ஒட்டுமொத்த முகமும் கருத்து, ஒதுங்கி நின்று சற்று முன் விழுந்த அடிகள், தன்மீது விழுந்த வலியோடும் வேதனையோடும் நின்றிருந்தார். கூட்டத்திலிருந்து தனித்திருந்தோம்.

‘‘எனக்கு மதம் மீதெல்லாம் பெரிய நம்பிக்கையில்லை பவா. ஆனா, ஒரு பாதிரியாரை அடிப்பதென்பது கடவுளை அடிப்பது மாதிரி’’ அவர் வார்த்தைகளில் துயரம் தோய்ந்திருந்தது.

கடந்த இருபதாண்டுகளில் இந்த இறை நிலையையும், நன்னெறியையும் திருச்சபைகளே முற்றிலும் இழந்துவிட்டதென்றும், வெறும் பதவி, பணம், சொத்து என அது ஒரு கிணற்றுப் பிணம் மாதிரி உப்பியிருப்பதையும் அவருக்குச் சொன்னேன். பதிலுக்கு, ‘‘அதுபற்றி அக்கறையோ, கவலையோ படவேண்டியது என்னைவிடவும் அதன் எளிய மக்கள்தான். அப்பாதிரியார் அடிபட்டு நடுரோட்டில் விழுந்த காட்சி, எத்தனை ஜென்மத்திலும், என்னால் எதன்பொருட்டும் மறக்க முடியாதது’’ என்ற ஒரு படைப்பாளியின் பதைபதைப்பை அப்போது உள்வாங்கினேன்.

சா.கந்தசாமி கலை, ஓவியம், சிற்பம், சினிமா, புனைவு என்று எல்லா நுண்கலைகளின் மீது மிகுந்த ஆர்வமும் அக்கறையுமுள்ளவர் மட்டுமல்ல, புனைவில்கூட மிகையை எப்போதும் மறுதலிப்பவர். ‘‘ஒரு படைப்பாளி, எழுதி முடித்த தன் படைப்பிலிருந்து மிகுதியான ஜோடனைகளை, அன்னப்பறவை மாதிரி உறிஞ்சி எடுத்துவிட்டால் மட்டுமே தெளிந்த நீரைப்போல அவன் படைப்பு வாசகனுக்கு அருந்தக் கிடைக்கும்’’ என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சா.கந்தசாமி, தமிழ் படைப்பிலக்கியத்தில்சாயாவனம்என்ற நாவல் மூலம், தன் இடத்தை மிக சுலபமாக அடைந்தவர் எனினும், ‘தொலைந்து போனவர்கள்’, ‘சூர்யவம்சம்என்ற அவரின் நாவல்களும் பொருட்படுத்தத் தக்கவைகளே.

எழுத்தாளன் என்பதைத் தாண்டி, வேறு எந்த வெளிச்சமும் தன்மீது படுவதைக்கண்டு கூச்சத்தோடு ஒதுங்கிக் கொள்பவர் அவர். முற்றத்தில் அவர் உரையாற்ற வந்தபோது, அவரை அறிமுகப்படுத்திப் பேசிய நான், அவருடைய பல படைப்புகளை சொல்லிவிட்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஒருவரின் சம்பந்தி என்பதையும் சொல்லிவிட்டேன். தன் பார்வையிலேயே என்னைக் கண்டித்தார். ‘அதெல்லாம் என் தகுதியல்லஎன்று மறுத்த ஒரு படைப்பாளியின் நேர்கொண்ட பார்வை அது.

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான அவரை, தன் வீட்டிற்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார் கந்தசாமி. எழுத்தாளர்களின் விருந்தென்பது உணவு சாப்பிடுவதா? அந்த நேரத்திலான உணர்வு பகிர்தலும்தானே! விருந்து முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. அந்த பெண் எழுத்தாளரை, அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு கொண்டு போய்விடத் தயாராகும் கந்தசாமி சாரை, அவர் மனைவி ஒரு நிமிடமென உள் அறைக்கு அழைக்கிறார். சில நிமிடங்களில் வெளியே வரும் அவரைப் பார்த்து,

‘‘என்ன கந்தசாமி, உங்க மனைவி என்னை விட்டுட்டு உடனே வந்துடுங்கன்னு தனியே கூப்பிட்டு சொல்றாங்களா?’’ என நக்கலோடு சிரிக்கிறார் அந்த எழுத்தாளர்.

கந்தசாமி சார் மிகுந்த நிதானத்தோடு, ‘இல்லையே, நைட் ரொம்ப லேட் ஆயிடிச்சி. அங்கேயே தங்கிட்டு, காலைல வந்தாப் போதும்னு சொல்றாஎன்கிறார். பெண்ணியவாதத்தை இப்படிக் கோட்பாடுகளின்றி, புத்தகங்களின்றி, தத்துவங்களின்றி, இவைகளை விடவும் வாழ்விலிருந்து எடுத்தாளும் பெண்களே, எப்போதும் வரலாற்றில் மகத்தானவர்கள். அறிவு ஜீவிகளின் பார்வைகளில் வேண்டுமானால் இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லது சராசரிகள். ஆனால், இந்த சராசரிகளும், சாதாரணங்களுமே எப்போதும் மானுடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

மற்ற எழுத்தாளர்களுடனான நட்பைப்போல மிக வாஞ்சையாகவும், உரிமையாகவும் என்னால் கந்தசாமி சாரை அணுக முடிந்ததில்லை. முதல் பார்வையில் அவர் மீது எனக்கேற்பட்டது மரியாதையும், கொஞ்சம் பயமும். ‘எளிதில் அணுக முடியாதவரோ?’ என்ற தயக்கமும், எல்லாவற்றையும் அவரும் அவர் மனைவியும், திருவண்ணாமலை வந்து எங்களோடு தங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் தகர்த்தெறிந்துவிட்டன.

நம் பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்திருந்த அரசியல் கட்சிகள் மீது, மிகப்பெரும் கோபத்துடனேயே எப்போதுமிருப்பார். ‘‘சார், உங்க பிறந்தநாளைக்கு நீங்க ஒரு கேக்கோட உங்க ஃபிரெண்ட் வீட்டிற்கு போவீங்க. உங்க ஃபிரெண்ட் பிறந்த நாளைக்கு ஒரு கேக்கோட உங்க வீட்டிற்கு வருவான். இதான் நம்ம மரபு இல்லையா? ஆனா இந்த தலைவனுங்க பண்றக் கூத்திருக்கே... உங்க பொறந்த நாளுன்னாலும், உங்க தலைவன் பொறந்த நாளுன்னாலும் நீங்கதான் அவங்களைப் போய்ப் பாக்கணும். இது கேக்க ரொம்ப சாதாரணமா இருக்கலாம். இதெல்லாம் ஒரு கலாச்சாரத்தோட சீரழிவு. நம்ம வேர்கள்ல, அதிகாரம்ங்கிற பேர்ல இவங்க ஊத்தற கொதிநீர்’’ என கொதித்திருக்கிறார்.

அவரோடிருந்த பல தருணங்களில் என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது. அவருக்கு சொல்லவும் கொட்டவும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களை இந்த பெருவாழ்வு ளித்திருக்கிறது.

அவர் வந்திருந்த முற்றத்திற்கு அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராயிருந்த கண்ணகி பாக்யநாதன், பார்வையாளராய் வந்திருந்தார். எப்போதும் அதிகார ஒளி உமிழும் சிவப்பு விளக்கிட்ட காரை கண்ணுக்குத் தெரியாத தொலைவிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பெரிய டைரியோடு வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கையில் சந்தேகம் வந்த ஒரு ஹைஸ்கூல் மாணவி மாதிரி, நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வந்து, தரையில் உட்கார்ந்து, கூட்டம் முடிய ஐந்து நிமிடங்களுக்கு முன்னமே போய்விடுவார். கலெக்டர் என்ற அதிகார முகமூடியை கழட்டி வைத்துவிட்டு இளைப்பாறும் இடமாக அவர் அந்த முற்ற மைதானத்தை உணர்ந்தார். தமிழ்நாட்டில் அப்போது கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் முன்னணியில் இருந்த கலெக்டர் என்று பெயரெடுத்திருந்தார்.

அன்று ஜெயகாந்தன் பேசிய முற்றத்திலும் அவர் பார்வையாளராய் தரையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த அன்றிரவு, அறையின் உற்சாகம் ஆரம்பிக்கும் முன்பு ஜே.கே. என்னைப் பார்த்துக் கேட்டார்.

‘‘அந்த இடது பக்கம் உட்கார்ந்து மாய்ஞ்சி மாய்ஞ்சி சிரிச்சிட்டிருந்தாங்களே, அவங்கதான் உங்க கலெக்டரா?’’

நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். திடீரென வேறு ஒரு மனநிலையில் ஜே.கே. சொன்னார்.

‘‘சாராயத்துல நல்ல சாராயம், கள்ளச் சாராயம்னு எதுவும் இல்லை பவா. சாராயம் சாராயம்தான். இந்தம்மா பாவம். ஓடி, ஓடி அதை அழிக்க பாடுபடுது. ஆனா, நாளைக்கே கவர்மெண்ட் சாராய கடையை சட்டபூர்வமா அனுமதிச்சா, இந்தம்மா யாரையெல்லாம் அரெஸ்ட் பண்ணுச்சோ, அவங்கள்ளாம் கலெக்டர் சேம்பருக்கே வந்து, இவங்க கையால புதுக்கடையை தொறந்து வைக்க கேட்பாங்க. நீ, முடியாதுன்னு சொல்ல முடியாது. அது கவர்மெண்ட்டோட பாலிசி.’’ அவர் உற்சாகத்தில் பேசிக்கொண்டே போகிறார்.

கந்தசாமி சார் அதை இடைமறிக்கிறார். ‘‘இல்ல ஜே.கே., அதுக்காக இந்த நிமிஷத்திய அந்த அம்மாவின் முயற்சி தேவையில்லைன்னு சொல்றீங்களா?’’

‘‘அப்படியில்ல கந்தசாமி...’’

‘‘இல்ல. அந்த அம்மாவின் அதிகாரமற்ற ஆழ்மன விருப்பம் அது. தனக்கிருக்கும் அதிகாரத்தின் துணைகொண்டு அதில் ஒரு துளியையாவது நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தாயின் மனம் அது.’’

‘‘இல்ல கந்தசாமி. மது விலக்கு அமுல்ல இருந்தப்போ தமிழ்நாட்டுல குடிச்சா குற்றம், ஜெயில். இதையே அரை கிலோமீட்டருக்கு அப்பால போய், பாண்டிச்சேரி பார்டர்ல நின்னுக் குடிச்சா குற்றமில்ல. இது அபத்தமில்லையா?’’

‘‘இந்த அபத்தங்கள் அவ்வப்போது அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன.’’ இது கந்தசாமி சார்.

‘‘அதான், அந்த அரசுகளோட கூலிங்கதான் இந்த ..எஸ்., .பி.எஸ். எல்லாம்.’’

‘‘இல்லையில்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு அதிகாரத்தைக்கொண்டு, எதையாவது செய்திட முடியுமான்னு முயற்சி பண்றவங்கள உங்க வாதம் முடக்கிடும் ஜே.கே.’’

அன்றிரவு அந்த அறைக்கு பக்கத்து அறையில அமர்ந்து, கண்விழித்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஓவியர்கள் சந்தானராஜ், தனபால் போன்றவர்களெல்லாம் எத்தனை பெரிய ஆளுமைகள்! அவர்களெல்லாம் தமிழகம் நமக்களித்த அற்புதக் கொடைகள்.

‘‘ஆனால், துரதிஷ்டம். தமிழ்த் தலைவர்களுக்கு இவர்களின் மேன்மை தெரியாது. சினிமா மீது வெறிகொண்டு, உலகம் முழுக்க சுற்றியலைந்து, அரிய பல பொக்கிஷத்தை நமக்களித்த .கே. செட்டியாரை எத்தனை சினிமாக்காரர்களுக்கு தெரியும்?’’ என்ற அவர் வெளிப்பாடுகளில் இருந்த உஷ்ணத்தை அந்த குளிரறையிலும் நான் ஸ்பரிசித்தேன்.

அவருடைய சாயாவனத்திற்கு நிச்சயம்சாகித்ய அகாடமிகிடைத்திருக்கவேண்டும். நிறுவன அரசியல் காரணமாக, அது வேறு ஒருவருக்கு இடம் மாறிப்போனது. அதைப் பற்றிய மனக்குறைகளற்று இலக்கிய, கலையின் பல துறைகளிலும் அவர் இயங்கிக் கொண்டிருக்கையில், அவர் பெயர் அந்த வருட சாகித்ய அகாடமியின் இறுதிப் பட்டியலில், மூன்று பெயர்களில் ஒன்றாக இருந்தது.

அன்று நடக்கவிருந்த அகாடமி கூட்டத்தில், மூன்றில் ஒருவர் அந்த வருட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். வழக்கம்போல் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள கந்தசாமி சார் காரோட்ட, அவருக்கு அருகாமையில் ஜெயகாந்தன் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கிறார். மௌனம் இருவருக்குமிடையே மிக நாகரீகமாக உட்கார்ந்திருந்தது. வழக்கம்போல் ஜே.கே.வே அதை உடைக்கிறார்.

‘‘கந்தசாமி, உன் பேரும் ஃபைனல் லிஸ்ட்ல இருக்கு தெரியுமா?’’

‘‘தெரியும் ஜே.கே.’’

‘‘ஆனா நான் உனக்கு ஓட்டு போடப்போறதில்ல.’’

‘‘நான் உங்ககிட்ட கேக்கலையே ஜே.கே.’’

‘‘உனக்குதான் போடலான்னு இருந்தேன். நேத்து லட்சுமி வந்து, நேரா பாத்து கேட்டுட்டா. என்னால மறுக்க முடியல.’’

ஒரு சிறு அசைவுமின்றி, காரோட்டிக்கொண்டே அவ்வார்த்தைகளை புறந்தள்ளுகிறது ஒரு நட்பு மனம். அந்த வருடம் கந்தசாமிக்கு அல்லாமல் ஒரு வணிக எழுத்தாளரான லட்சுமிக்கு அகாடமி விருது கிடைத்தது, தமிழ் வரலாற்றில் பிழைத்திருத்த வேண்டிய பக்கம். தக்கையின் மீது பதியும் கண்கள், மீன் வேட்டைக்கு வேண்டுமானால் சாத்தியம். படைப்பாளிக்கல்ல.