Thursday, October 6, 2016

சாம்பலில் பூக்கும் நட்புகள்

கேரள தலமைச் செயலாக ஊழியர்கள் சார்பில் நடத்தப்படும் மாத இதழின் ஓணப்பதிப்பில் எனக்கும் ஓணத்திற்குமான தொடர்பு பற்றிய க்ட்டுரை வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு திருவந்தபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
என்னுடன் அதிகபட்சம் இரண்டுமணி நேரமிருத்திருப்பார். அதைப் பற்றி அவர் மலையளத்தில் எழுதியிருந்த உரை நடை கவிதைக்கும் சற்று மேலே
அதை மலையாளத்திலும் தமிழிலும் உங்களுக்காக பகிர்கிறேன்.













சாம்பலில் பூக்கும் நட்புகள்
மலையாள மூலம் : ஜோதி சங்கர்
தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ
2016, செப்டம்பர் 16
இன்று நீயில்லாமல் நான் மட்டும் ஆரல்வாய் மொழியை தனியேக் கடக்கிறேன். பரந்த என் நெஞ்சில் பட்ட வெயில் உள் நரம்புகளில் ரத்தத்தை சூடாக்கிப் பாய்ச்சுகிறது. இப்போதும் அதே சுங்கப் பாதைகள் என் வழியில் குறுக்கிடுகின்றன.
  உன் பிரியத்தை வேட்டையாட வேண்டி பாறை ஓவியங்களில் என் ப்ரியம் கோர்த்து ஆரல்வாய்மொழியையும், காவேரியையும், கூவகத்தையும் கடந்து இதற்குமுன் நான் பல முறை தனியேப் பயணித்திருக்கிறேன். நெளிந்து, நெளிந்து மண்ணுள் புதைய விரும்பிய சுடுமண் பாதைகளும் ஒன்பது மலைக் கோவிலில் நின்றெரியும் மாலை விளக்குகளும் பாலுமகேந்திராவின் ‘யாத்ரா’வின் இறுதிக் காட்சிகளை நினைவிலேற்றுகிறது.
வால்நட்சத்திரங்கள் இதயத்தைச் சேர்த்து ஆக்ர்ஷிக்கும் தமிழ் மொழியில் தேர்ந்தெடுத்து வாசிக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே தமிழ் இலக்கியமும் என்னை தன்பக்கம் அழைக்கத் துவங்கியது.
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடர் இருளில் நடக்க திராணியற்று சாலையோர நடைபாதையில் அமர்ந்த அக்கணத்தில்தான் நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன்.
கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின்  ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
அக்கதையில் வரும் துர்சகுனங்களையெல்லாம் கற்பவதியான உனக்காக நான் மாற்றிப் படித்து சுபமுடிவோடு அக்கதையை உனக்காக சொல்லி முடித்தேன்.
ரயில் கடந்து கடந்து உண்டான தண்டவாளங்களின் காயங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு வாழ்வை, பிரிவின் துயரில் நகர்த்திய உன் முகத்தில் அக்கதை நீர் தெளித்தது.
நட்சத்திரக் கூட்டங்களைக்கூட, தாள்களில் எழுதுவதற்கான அனுபவங்களை, நட்பை அடைகாத்து வைத்திருக்கும் பவா தன் ஒவ்வொரு நட்பைப் பற்றியும் தன் எழுத்தால் நமக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.
என் முயற்சி வெற்றி பெறுமென்ற எந்த நம்பிக்கையுமற்று, எங்கள் மலருக்கான ஒரு கட்டுரைக் கேட்டு பவாவைத் தொடர்பு கொண்டேன். இன்னும் மிச்சமிருக்கும் கார்த்திகை தீப நாட்களில் ஒரு துளியையேனும் கேரள மண்ணுக்கு கொண்டு வந்துவிடவேண்டுமென்ற பிடிவாதமது.
ஆனால் ஆவணியில் பூக்கும் ஓண நினைவுகளை அவர் எனக்காக எழுதித் தந்தார். மொழியாக்கத்தின் செடியில், அச்செடியின் சுகந்தத்தில் அவர் எழுத்து மொட்டவிழ்ந்தபோது அலைவுறும் ஓவியன் ரஞ்சியின் கிரயான் பட்டாம்பூச்சிகளை பியூப்பாவிலிருந்து வெளியேற்றின.
திருவனந்தபுரம் கோட்டைகுள்ளிருந்த மணீஸ் மெஸ்ஸில் மதிய உணவிற்காய் சென்றபோது அவன் மனதால் சுவீகரித்திருந்த தமிழ்நாட்டு வீடுகளின் படங்களை ரஞ்சி காகிதத்தில் ஒற்றியெடுத்தான். தமிழ்நாட்டு பயணத்தினூடே பவாவின் நட்புகளை மனதால் கோர்த்துக் கொண்டே  டப்ளின் நகரமான திருவண்ணாமலைக்குள் நுழைந்தபோது அந்நகரம் இன்னும் விழித்திருக்கவில்லை.
ஸ்ரீமதி. ஷைலஜாவின் ‘வம்சிபுக்ஸி’ல் சென்றமர்ந்து ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களாக வாசித்துக் கொண்டிருக்கையில்தான் பவா நிலத்திலிருப்பதாகச் சொன்னார்கள்.
பவாவின் வாசனையை தன் மேல் பூசியிருக்கும் பழமரங்களினூடாக நான் அம்மனிதனை எதிர்கொண்டேன்.
என் கையிலிருந்து செக்ரெட்டிரியேட் சர்வீஸ் என மலையாளத்தில் தலைப்பிட்ட இரு இலக்கிய மலர்களையும் அவர் கைகளுக்கு மாற்றினேன்.
ஒவ்வொரு பக்கமாக அவர் புரட்ட புரட்ட நான் அவரின் கண்களையே கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
ஜான் பாலை மட்டும் ஏனோ கடந்துவிட்டார்.
அவர் நிலத்து வீட்டில் நட்பின் நிழல்கள் படர்ந்த இரவுகளை விவரித்தார். மம்முட்டி, ஜெயமோகன், பெருமாள் முருகனென எங்கள் உரையாடல் அந்நிலப்பரப்பில் விரிந்தன.
தேசிய விருது பெற்ற தன் ‘தங்கமீன்கள்’ முதல் script-டை இக்குடிசையிலிருந்தே ராம் எழுதினார் என்ற செய்தி என்னை காட்சிபடுத்தலுக்கு அழைத்துப் போனது.
ஒட்டர்கள் வெட்டிய கிணறுகள் பவாவின் பூமியை இன்றளவும் ஈரத்திலேயே வைத்துள்ளன.
எழுத்து குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும் எங்கள் உரையாடல் நங்கூரமிட்டது.
கப்பல் விசித்திரங்களின் நீர்த்தாரைகளை செதுக்கிய இந்துமேனன், சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகியை எழுத்தில் வரைந்த ட்டி.டி.ராமகிருஷ்ணன், சங்க காலத்தை மலர்களால் தொடுத்தெடுத்த மனோஜ் குரூர், வாசகர்களின் தேடலை தன் ‘பிரியாணி’யில் தீர்த்த சந்தோஷ் ஏச்சிக்கானமென நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
வி.ஜெ.ஜேம்சையும், கெ.வி.மணியையும் பவாவுக்கு நான் அறிமுகப்படுத்தினேன்.
சிறிது நேர நடைமுடியுமுன் பாலுமகேந்திரா படம் முற்றத்தில் தொங்கும் பூசாத ஒரு செங்கல் வீட்டைப் பார்க்க முடிந்தது. என் நினைவுகளின் அலையடிப்பில் பாலுமகேந்திரா மீண்டும் வந்தார்.
‘யாத்ரா’வின் எண்ணிக்கையற்ற அகல்விளக்குகளின் வெளிச்சத்தின் பிண்ணனியில் மின்னும் சோபனாவைப் பற்றி ஜான்பால் எழுதியிருப்பதை நான் நினைவுப்படுத்தினேன்.
தாங்கமுடியாத துயரத்தில் வேணு நாகவள்ளி சோபனாவை வரைந்து காட்டும் ஓ.என்.வி.யின் பாடல் வரிகளை நான் நினைத்துக் கொண்டேன்.
‘நஷ்ட வசத்தத்தில் சப்த ரிஸ்வாசமே’
பவா இன்னும் கூர்மையாக அவ்வரிகளை உள்வாங்கினார்.
புல்தரையில் தன்னந்தனியாக ஒரே ஒரு அகல் விளக்கிருந்தது.
‘யாத்ரா’வின் நினைவுகளுக்காகவா இது?
இல்லை அதனடியில் பாலு மகேந்திராவின் உடல் சாம்பல் புதைக்கப்பட்டிருக்கிறது என்றார் பவா.
நான் என்னிலிருந்து ஒரு நிமிடம் தொலைந்து போனேன்.
 ‘யாத்திரா’வை ஓலங்களில் ஒற்றியெடுத்த நட்புகளில் ஒன்றான பாலுமகேந்திராவின் சாம்பல் அவ்வீட்டின் மரங்களில் பூக்களாக பூக்கின்றன.
ஆயிரத்தோரு அகல்களின் வெளிச்சத்தைவிட பிரகாசமானது ஒரே ஒரு நட்பின் வெளிச்சம்.

திருவண்ணாமலையை விட்டு கிளம்பும்போது எதேச்சையாக திரும்பி சாரோன் தோட்டத்தைப் பார்த்தேன். அவ்வீட்டின் முன் நட்பின் சாம்பல் எங்கும் சிதறிக் கிடைப்பதை கவனித்தேன்.

Monday, October 3, 2016

கே.வி.ஷைலஜாவிடமிருந்து...

எங்கள் கவிஞனுக்கு ஒரு வீடு
உங்களிடம் மிச்சமானதை எங்களிடம் கொடுங்கள்
கனவாய் வாழ்ந்த எங்கள் மூத்த மகன் சிபியின் நினைவுநாள் நேற்று. அவனுடைய நினைவாக ஒரு பணியைத் தொடங்க நானும் பவாவும் முடிவெடுத்தோம். வம்சியும் மானசியும் சந்தோஷமாக அதனை ஏற்றுகொண்டார்கள்.
நண்பர்களே, நம்மோடு முப்பது ஆண்டு காலமாக மிக நேர்மையாக எந்த எதிர்பார்ப்புமின்றி , முக்கியமாக வாழ்வின் மீது எந்த புகாருமின்றி தன் இரண்டு பெண் குழந்தைகளோடு கவிஞர். பீனிக்ஸ் மகிழ்ச்சியாகயிருக்கிறார். அவருக்கு ஒரு வீடு என்பது பெரும்கனவு. அது அவருக்கு கனவு மட்டுமே. ஆனால் நம்மால் அதை சாத்தியப்படுத்த முடியும்.
நம்முடைய வீடுகளைக் கட்டி முடித்தபின் மிச்சமிருக்கும் மணல் , ஜல்லி, செங்கல், கம்பி என நம் புது வீட்டின் முன் துருத்திக்கொண்டிருக்கும் பொருட்கள் நமக்கு என்றுமே தேவைப் படாது. ஆனால் அது வீட்டின் ஒரு அங்கமாய் எப்போதுமே இருக்கும். அதை எங்களுக்குக் கொடுங்கள்.
திருவண்ணாமலை நண்பர்கள் அப்படி இருக்கும் பொருட்களின் தகவல் தந்தால் நாங்களே சேகரித்துக் கொள்கிறோம்.
வெளியூர் நண்பர்கள் வீடு கட்ட ஆகும் கூலி மற்ற செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வீட்டிற்கான 1000 சதுர அடி இடத்தை எங்கள் இடத்திலிருந்து நாங்கள் தருகிறோம். வீடு இங்கிலாந்தின் கட்டிடவியல் மேதை லாரி பேக்கரின் வடிவமாக பூசப்படாத செங்கலும் கருங்கல்லும் சேர்த்து இரண்டு படுக்கை அறையுடன் நல்ல வசதியாக, காற்றோட்டமாக, வெளிச்சமாக கவிஞரும் குடும்பமும் இனி வீடு குறித்த அல்லலின்றி வாழ நாம் எல்லோரும் கை கோர்ப்போம்.
இந்த நேரத்தில் நான் மொழிபெயர்த்த பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் நண்பர் கவிஞர்.ஸ்ரீவத்ஸனின் கவிதை நினைவிற்கு வருகிறது. இந்த துயரம் ஸ்ரீவத்ஸனோடு முடியட்டும். ஃபீனிக்ஸுக்கும் குழந்தைகளுக்கும் வரவேண்டாம்.
எதற்காக அப்பா நாம் வீடு மாறுகிறோம்,
இது என்னுடைய சொந்த வீடில்லையா?
இதைக் கேட்டபோது கவிஞனின் மனம் இப்படி விம்மி உடைகிறது.
நமதில்லை மகú ன,
இந்த வீடும் கதவுகளும்
மாடங்களும் படிக்கல்லும்
வெளிப்புற வேலிப்படர்ப்பும்
பொன் பூக்களும்
.
நமதில்லை மகனே,
இந்த வீடும் வாசலும்
நந்தியா வட்ட நிழலும்
அரளியும் இலஞ்சிப்பூ மணமும்.
நமதில்லை மகனே,
இந்த வீடும் குளமும்,
கோயிலும் குளிர்ச் சாமரம் வீசும் காற்றும்.
நமதில்லை மகனே,
இந்த வீடும் சித்திரவிதானங்களும்
கண்ணாடி பார்க்கும் மரச்சிற்பக்கன்னிகளும்
.
நமதில்லை மகனே,
இந்த வீட்டின் நடுமுற்றமும்
மழைக்கிசைவாய்க் கின்னரம் மீட்டிப் பாடும்
இந்தக் குயில் கூட்டங்களும்.
நமதில்லை மகனே,
இந்த வீட்டின் கோடியில்
தொங்கவிட்டிருக்கும்
ஆலோலம் கிளிக்கூடும்
நெல்மணிக் குதிர்களும்
(கூட்டில் வந்து உட்காரும்
கிளியைக் காணாமல் நீ
துக்கத்தில் தேம்பின எத்தனை
அந்திகள் போயிருக்கின்றன
இந்த வாசல் வழியாக)
நமதில்லை மகனே,
இந்த வீடும் வீட்டின் சங்கீதமும்.
நாம் போகிறோம்,
கால தேசங்கள் அறியாமல்
பூமியின் எல்லைக் கோடுவரை
முடிவில்லா யாத்திரையாய்...
யாத்திரையின் இடையில்
ஒரு நொடி தலைசாய்க்க
வீடு தேடிப்போகிறோம் மகனே நாம்.

Saturday, October 1, 2016

மீண்டும் கௌதமிடமிருந்து....

ஒருவனின் வாழ்க்கை முழுதும் செவ்வகக கட்டங்களாக படர்ந்து தொடரும் நாட்களின் பரப்பிலிருந்து சில நாட்கள் மட்டும் ஒரு எறும்பு புற்று போல மேலெழுந்து வந்துவிடுவதுன்டு. ஒரு கோபுரம் போலே நிமிர்ந்து வளர்ந்து நிற்பதுண்டு. பின்வரும் நாட்கள் பல இதை  திரும்பிப் பார்த்தபடி, இன்று பெற்றுக்கொண்ட வண்ணங்களை மீண்டும் மீண்டும் இட்டு நிரப்பியபடி செல்லும். எனக்கு அவ்வாறான நாட்களில் இது ஒன்று என ரிஷிவந்தியத்தின் தைலக்காடுகள் வழி ஊடுருவி வந்துதொட்ட அந்த வெய்யோனுக்கு தெரிந்திருக்கும்!

எனக்கு ஜெயஸ்ரீ அவர்களின் வீட்டுக்கு வழியை தொலைபேசியில் சொல்லிவிட்டு "அங்கே போய் இருங்கள் கெளதம், நான் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி அணைத்த சில நிமிடங்களில் ஜெயமோகனின் பதிவில் பார்த்திருந்த, எங்கள் பிற்கால வீட்டின் விதையாய் எங்கள் குடும்ப பேச்சுக்களில் கிடக்கும், தான் எழும்பி நிற்கும் நிலத்திலிருந்து எந்தவகையிலும் தன்னை துருத்திக்கொண்டில்லாமல் இருந்த  "கானகம்" வீட்டின் முன்னிருந்தேன். அளவான வண்ணம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டியின் அருகில் காரை நிறுத்த நேர்ந்ததின் துணுக்குறளை ஜெயஸ்ரீ மற்றும் அவர் கணவரின் மலர்ந்த முகங்கள் துடைத்துப்போட்டது.

அந்த அகன்ற, முழு  வீட்டுக்குமாய் நிலவின் இரண்டு பக்கங்களிலும்  விரிந்த முற்றத்தின் ஒரு பக்கத்தில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து கேரளா இலக்கிய சூழல் பற்றியும், நிலம் பூத்து மலர்ந்த மலர்கள் பற்றியும், அந்த வீட்டின் அழகு பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டதை லியோ டால்ஸ்டாய் இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டின் முன்பாய் பரந்து கிடந்தது தோட்டம்.

கொஞ்ச நேரத்தில் பைக்கில் வந்து கை பிடித்து அமரச்சொல்லி எங்களிடம் பேச தொடங்கிய பவாவிடம் முதல் முறை பார்ப்பத்திற்கான அளவிடுதல் எதுவுமில்லை. வந்தவர்களுக்கு மெகா முக்கியத்துவம் கொடுத்து, உபசரித்து அவர்களை அன்னியப்படுத்தி வைக்கும் "விருந்தோம்பல்" எதுவுமில்லை. ஒவ்வொரு இடமாக தோட்டத்தில் சுத்திவர தூரத்திலிருந்தே கவர்ந்திழுக்கிறது அந்த பெரிய உருண்டை கற்கள். என் கண்களும் கால்களும் செல்லும் திசை கண்டு "இத ராஜா கல்லுன்னு சொல்வாங்க கெளதம்! இங்க நிறைய கடந்தது" என்கிறார் பவா. 

தாழ்ந்து படர்ந்த இரட்டை மாமரத்தின் அடியில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் போல எழிலான ஒன்றை அன்று பிறகு நான் காணவில்லை. இயந்திர உலகின் விதியாய் ஆகிவிட்ட கச்சிதம் இல்லாத அதன் வடிவங்களும், முன் பின் அமைந்த வரிசைகளும், மார்பில் சாய்த்துக்கொண்டு மகனின் தலையை வருடும் அம்மாவின் கூந்தல் போன்று படர்ந்திருந்த மாமரமும் எழுச்சியை தந்த விஷயங்கள். அதில், கிட்டத்தட்ட அதே கலரில், அதே சீரின்மையுடன் கட்டியிருந்த வேட்டியை சுருட்டி, கால் மடக்கி அமர்ந்து, வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டே அடிக்கடி என் பக்கம் திரும்பி "இதுல பாருங்க கவுதம்" என்று அவர் பேசியபோது முதுகில் உறுத்தியது இருக்கையின் உடைந்த பிசிரா இல்லை என் தகுதியின்மையா என்று தெரியவில்லை. 

ஒருவரை கூப்பிட்டு "தம்பி மோட்டார் போட்டு இந்த மரத்துக்கெல்லாம் தண்ணி உடுப்பா....இப்பவே உடு. எப்படி வாடி போச்சு பார்" என்பதை அவர்குரல் தெரிந்தவர்கள் அவர் மொழியில் கற்பனை செய்துகொள்ளுங்கள் . அவரின் தாய்மையும், கெஞ்சலும்தான் அதில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியும் தானே?. அதன் குழந்தை வடிவத்தை தன் மகன் வம்சியிடம் "எவ்ளோ வருசமா இந்த மைக் செட் சொந்தமா வாங்கணும்னு நினைச்சோம். இன்னைக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கில்லடா!"  என்று அன்றிரவு கேட்டபோது காண நேர்ந்தது.

இந்த பதிவை "ரத்தின சுருக்கமாக"வைக்கும்  எண்ணத்தினால்மட்டும் பகலில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் தாண்டி மனம் இரவு 10:00 ஐ தொடுகிறது.



காட்சி 1:
இடம் : கானகம் 
நேரம் : பகல் 10 மணி 
சஹானாவிடம் நண்பர் : பாப்பா உனக்கு டீ போட தெரியுமா?
சகானா : ஹ்ம்ம்.
நண்பர் : எங்களுக்கு டீ போட்டு தரிய்யா
சகானா: ஹ்ம்ம் 
நண்பர் : [அடுத்த இரண்டு நிமிசத்திற்கு டீ போடும் முறையில்,  இடுபொருட்களின் அளவுகளில் பல மேற்குறிப்புகள் தருகிறார்]
சகானா அது ஒரு அருமையான டீ; நன்றி. 

பி. கு: அன்று யோசித்து ஆனால் பின் பாத்திரங்களை கழுவாமல் வந்துவிட்ட குற்ற உணர்ச்சியை அடுத்த முறை போக்கிவிட வேண்டும்.



காட்சி 2: 
இடம் :  19 டி ம் சாரோனின் மொட்டை மாடி 
நேரம் : இரவு 10 
கெளதம் குமாரின் அழகிய குறும்படம் ஒன்றை அவரின் மொபைல் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது நினைத்தாற்போல திரும்பி என் கைகளை கனமாக தொடுகிறார் பவா
பவா: கெளதம், இன்னைக்கு நீங்க இங்கேயே தூங்கறீங்க. 10.30 மணிக்கு மேல வண்டியில போகக்கூடாதுன்னு ஷைலஜா கண்டிப்பா சொல்லிட்டாங்க!
நான் :  [பேச என்ன இருக்கிறது அதில், மௌனத்துடன் கவுதம் குமாரின் படத்தில் ஆள்கிறோம் மீண்டும்]


காட்சி 3: 
இடம் : பவா/ஷைலஜா வின் உணவறை
நேரம் : இரவு 10:30 
பொருட்கள்: நானும் மாலதியும் கனவு கண்டுகொண்டிருக்கும் வகையிலான ஒரு டைனிங் டேபிள். அழகிய ஆனால் டேபிளுக்கு சற்றே உயரமான மூங்கில் இருக்கைகள். 

[ மேசை நடுவில் இரு நண்பர்களுடன் ]  பவா : எனக்கு இன்னும் ஒரு தோசை!  [அடுத்த அரை மணி நேரத்திற்கு இந்த வரி மீண்டும் மீன்டும் ஒலித்தது]


[தரப்பட்ட தோசைகளை சட்னியில் வழித்து வழித்து சாப்பிட்ட பின் பாயசம் டம்ளரில் வந்தது. முழு பச்சை பருப்பு போட்டு செய்த பாயசம். அவல் பாயசம் இல்லை என்று பிரகாசுக்கு சின்ன குறை போல. அந்த குறையுடன் ஒரு வாழை பழத்தை எடுத்து பிரகாஷ் தோலுரிக்க போக, ]

மானஷி : அண்ணா இருங்க இருங்க. இதுதான் கடைசி பழம் 
மானஷி : அண்ணா அத அந்தன்னா கிட்ட கொடுங்க 
[அவல் பாயசமும் இல்லாமல் இப்பொழுது பழமும்போய்விட்ட ஏமாந்த முகத்துடன் பிரகாஷ் பழத்தை நீட்டினார்]
வம்சி :  அந்த மிளகாய் கறிவேப்பிலையை என் ப்ளட்-ள்ள வைங்க [அதையும் வம்சியே செய்கிறான்]
வம்சி : பாயசத்தை பிளேட்-ள்ள ஊத்துங்க 
பிரகாஷ் : [ஒரு அப்பளத்தை போட்டு ] இதை ஒடைச்சு விடுங்க 

[நான் என் நுனி விரல்களால் அப்பளத்தை ஓடைக்க....எல்லாரும் சிரிக்க....பிரகாஷ் தன் கையால் உடைத்து காண்பிக்கிறார் - செம்புலம் கலந்த பெயனீர்]

மானஷி : முழு கையிலும் பாயசம் பட்டால் ஒன்னும் தப்பில்லை!

[இது எல்லாத்தையும் பார்த்துக்கொண்டே தன் பாயச டம்ளரை வாய்க்கு கொண்டுசெல்கிறார் பவா]
வம்சி : அப்பா, நீங்க மதியம் தான பாயசம் குடிச்சீங்க! [அவர் டம்ளர் பிடுங்கப்பட்டு என் தட்டில் ஊற்றப்படுகிறது]

[எல்லா திசைகளிலிருந்தும் வந்து விழுந்த கட்டளைகளின் பேரில் வாழைப்பழத்தையும், இரண்டு அப்பளங்களையும் பாயாசத்துடன் சேர்த்து பிசைய....என் விரலிடுக்குகளில் பாயசம் வருகிறதா என்று அந்த கும்பல் உறுதி செய்துகொண்டிருக்கொம்போதே லா. சா. ரா. நெய் விட்டு பிசையும் கதையை சொல்கிறார் அந்த அறையின் சிறந்த கதைசொல்லி. நான் படும் பாட்டை ரசித்தபடி ஷைலஜா]  

அமிர்தமாய் இனித்த அந்த பாயசத்தை பிரகாஷிடம் ஒரு கை கொடுத்துவிட்டு சாப்பிடும்பொழுது நான் அழுதுவிடுவற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதை உணர்ந்தேன்.


காட்சி 4: 
இடம் : வம்சியின் அறை 
நேரம் : இரவு 11:30 

இத்தனை அழகிய நாளின் பின்னிரவுக்கு மட்டும் சிறப்பாக அமைய அருகதை இல்லாமல் போய்விடுமா என்ன? வம்சி மற்றும் பிரகாஷ் எடுத்த புகைப்படங்களை வம்சியின் அறையில் இருட்டில் பார்க்கிறோம். வம்சியின் அற்புதமான படங்கள், நல்ல வேளை இவனிடம் 12 வது பற்றியோ, படிப்பு பற்றியே இதுவரை பேசவில்லை என என்ன வைக்கிறது. அழுத்தி பிசைகையில் பருப்பு பாயசம் போல விரலிடுக்கில் வெளிவருகிறவன் வம்சி என்று எண்ணிக்கொண்டேன். 

பிரகாஷ் கீழே படுத்துக்கொள்ள, நானும் வம்சியும் ஆளுக்கிரு தலையணை வைத்து இருட்டு நிறைந்த அறையில் பவாவின் இரன்டு "கதை கேட்க வாங்க" பதிவுகளை கேட்கிறோம். ஒரு மின்மினி அறையின் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு புத்த பிச்சுவின் நிதானத்துடன் எதையோ எழுதி அந்த இரவை ஆசிர்வதித்து சென்றது.


உயிரினங்களில் மரபணுக்களை படித்து அதன் பண்புகளை நிர்ணயிப்பது என் தொழில். அடுத்தமுறை இவ்விரு குடும்பங்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு துளி சதையை கிள்ளி எடுத்துவர திட்டம். விருந்தோம்பலின் மரபணுவை இவர்களிடம் கண்டறிய முடியாவிட்டால் வேறெங்கு முயல? 


பி. கு: இத்தனையும் சாத்தியாமாக்கி கொடுத்த முத்துராமன் சாருக்குக் நான் கடமைப்பட்டுள்ளேன்
15.09 GB (100%) of 15 GB used

Monday, September 26, 2016

சயாம் – பர்மா (மரண ரயில் பாதையில்)


ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து விட்ட அதன் இயக்குநர். குறிஞ்சி வேந்தனுக்கு என்னை எழுப்ப மனமின்றி, வம்சியை எழுப்பி பேச ஆரம்பித்துவிட்டிருக்கிறார்.



பிரகாஷ், வம்சி என அவர் மனநிலைக்கு ஏற்ற மனிதர்களிடம் அவர் காலை சாப்பாடு சாப்பிடாமல் கூட அப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.



அன்று காலையிலேயே என்னை சந்திக்க வந்திருந்த ஓவியர்கள் துரை, எழிலன், அவருடைய தாய்மாமாவும் (அவரும் ஓவியர்தான்) அவர்கள் உரையாடலுடன் சங்கமித்தார்கள்.



பாதி தூக்கமும், பாதி நடையுமாய் நான் மாலை நடைபெற உள்ள டெண்ட்கொட்டாய் நிகழ்விற்கு நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தேன்.



நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் இரு மடங்கு பார்வையாளர்கள் எங்கள் மொட்டைமாடியை ஆக்ரமித்து தரையில் உட்கார்ந்திருந்தாகள்.



ஒரு சிறு அறிமுகத்துடன் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து எப்படி ஒரு வார்த்தையும் என்னால் பேச முடியவில்லையோ அப்படியே இப்போதும் ஒரு வார்த்தையும் அதைப்பற்றி எழுதப் போவதில்லை.




ஆனால் திரையிடல் முடிந்து குறிஞ்சி வேந்தன் இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்ஸ் என பல நாடுகளிலும் தமிழ் நாட்டில் சென்னை, மதுரை இரு நகரங்களிளும், இப்போது திருவண்ணாமலையிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிகழ்வு எனக்குக் கொடுத்த மன நிலையை வேறெந்த நிகழ்விலும் நான் அடையவில்லை. என வார்த்தை தடுமாறினார். நான் பேச்சற்று போய் தாங்க முடியாத துக்கத்திலிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அடுத்த ஒரு மணி நேரமாகியும் யாரும் அங்கிருந்து போகாமல் திக்பிரமைப் பிடித்து  அங்கேயே நின்றுகொண்டும், அவரோடு சொல்ல முடியாத செய்திகள் இன்னும் இருக்கிறதா? என கேட்டு கொண்டிருந்தார்கள்.




இத்தனை லட்சம் மனிதப்படுகொலைகளுக்கு உலகம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.  



நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்


என் இருபது வருஷ E.B. சர்வீஸ்வில் இல்லாதவாறு அன்றிரவு பதினோறு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தேன். ஐம்பது பேருக்கு புது appointment  போட வேண்டியிருந்தது. சந்தோஷத்தோடு அதை செய்து முடிக்க அவ்வளவு நேரம் பிடித்தது.

கோவை, சத்தியமங்கலம், ஈரோடு என பல ஊர்களிலிருந்து ‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ அமைப்பின் சார்பில் என்னை சந்திப்பதற்கு வந்திருந்த நண்பர்களை நீண்ட நேரம் காக்க வைத்தது வருத்தமாயிருந்தது.



சில வார்த்தைகள் பேசியபின் நான் இருந்த சோர்வின் பொருட்டு அடுத்த நாள் காலைக்கு எங்கள் உரையாடலை தள்ளிப் போட்டோம்.

ஜெயஸ்ரீ வீட்டு மொட்டை மாடி அவர்களுக்கான தங்குமிடமென அவர்களே முடிவு செய்து கொண்டார்கள்.

பரந்த வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்த்து படுத்துக் கிடப்பது கொடுப்பினைதான்.



அடுத்த நாள் காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் கௌதமும், மைலத்திலிருந்து வந்திருந்த கார்த்தியும் உடன் இணைந்து கொள்ள மாமரத்தடி இளங்காலை காற்று மோத உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.



டிசம்பர் 24, 25, 26 மூன்று நாட்கள் ‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ எங்கள் நிலத்தில் முகாமிடப் போகிறார்கள். 200 பேரிலிருந்து 250 வரை வர வாய்ப்புண்டு. ஒவ்வொரு நாளும் அற்புதமான பல நிகழ்வுகளை முடிவு செய்தோம்.

கலை, இலக்கியம், இயற்கை வேளாண்மை, மாற்று கட்டிடக்கலை, நாடகம், சினிமா, ஆவணப்படம், சூழலியல், மாற்றுக் கல்வி என எங்கள் திட்டம் விரிவடைந்து கொண்டே போனது.



குழைந்தைகளுக்கென களிமன் சிற்பம் செய்தல், சேர்ந்திசைப் பாடல், குளத்தில் குளிப்பது, ஓவியம் வரைதல் என எங்கள் கேன்வாஸ் நீண்டது.

எல்லாவற்றையும் அமைதியாய் தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகள் மானசி சொன்னாள்.



‘‘நீங்கத் திட்டமிட்டதெல்லாம் நடந்துவிட்டால் அநேகமாக நான் பார்த்ததில் இதுதான் ஆகப் பெரிய நிகழ்வு’’ பெரிய மனுஷி சொல்லிவிட்டாள்.

அப்புறமென்ன?



அடுத்த நாள் மதியம் அவல் பாயசமின்றி சாப்பிட மாட்டோம் என அவர்கள் அடம்பிடித்து பத்து முழுத்தேங்காயை உரிக்க ஆரம்பித்தார்கள்.



அது அவ்விதமேயானது.


டிசம்பர் குளிரில், மலரப் போகும் அந்த மூன்று நாட்களின் மலர்தலுக்கு இப்போதியிருந்தே மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.