Tuesday, May 31, 2011

மூன்றாம் பிறை - மேலும் ஒரு கடிதம்

அன்பு கே வி ஷைலஜா அவர்களுக்கு

உங்களுக்கு என்னை நினைவில் இருக்க வாய்ப்பில்லை. இந்த அஞ்சலைப் படிக்க அது தடையுமில்லை. மூன்றாம் பிறை என்ற அருமையான - எளிய, ஆனால் அற்புதமான அனுபவத் தொகுப்பின் மொழி பெயர்ப்பை வாசித்து முடித்த திளைப்பில் எனது வாழ்த்துக்களைச் சொல்லும் அவசரத்தில் இந்த மடல்.

காஞ்சி நண்பர் மோகன் நேற்று இரவு என்னை அழைத்தபோது இந்தப் புத்தகத்தை அப்போதுதான் திருவண்ணாமலையில் இருந்து வாசித்துக் கொண்டுவந்த பரவசத்தில் பேசிக் கொண்டே இருந்தார். இன்று நான் வேறு ஒரு பணி நிமித்தம் காஞ்சி சென்றவனை வழியனுப்ப அவர் ரயிலடிக்குக் கொண்டு சேர்க்கும்போது, வழிப்பயணத்திற்கு வாசிக்க எனும் சாக்கில் ஞாபகமாக அந்தப் புத்தகத்தைக் கேட்டு வாங்கி வந்துவிட்டேன். மாம்பலத்தை எட்டும் போது உங்கள் எண் அந்தப் புத்தகத்தில் இருக்குமே, வாழ்த்திவிடலாம் என்று நான் பார்க்கும் அதே நேரத்தில் அத்தனை பொருத்தமாய் காஞ்சி தோழர் மோகன் என்னை அழைத்து, ஷைலஜா எண் புத்தகத்தில் இருக்குமே அதை அனுப்பி வையுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதும் நேர்ந்தது...சென்னை சேர்ந்த அடுத்த நிமிடம் உட்கார்கிறேன் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு எழுத..

மம்மூட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் அவரது எழுத்தின் மொழி பெயர்ப்பு இத்தனை கவிதையாய் இருக்குமானால், மலையாளத்தில் அது எப்படி ஒலிக்கும் என்று அறிந்து கொள்ள நெஞ்சு சிறகடிக்கிறது.

வளர்ந்த பிறகும் ஒரு மனிதர் குழந்தை போன்ற உள்ளத்தோடு விஷயங்களை அணுக இயலுமானால் அது வாழ்க்கை அவருக்குக் காட்டும் கருணை என்றே சொல்ல வேண்டும். தவறுகளுக்கு நாணும் தன்மையும், அதைக் கூச்சமின்றி சபையில் எடுத்து வைத்துத் தலைக் குனிவோடு அதிலிருந்து விடுதலை பெற்று வெளியேறும் துணிவும் வாய்ப்பது இயற்கையின் வரமாகவே இருக்க வேண்டும். அடுத்தவரது அதிகார அத்து மீறலை, போலித் தனத்தை, கூசாது பொய்யுரைப்பதை சலனமற்ற ஓடை ஒன்றின் தெள்ளிய நீரைப் போல் தனது கருத்தை அதில் தோய்த்தெடுக்காது பிரதிபலிக்கிற மம்மூட்டியின் பக்குவம் இரந்து கோள் தக்கதுடைத்து. தன்னை நேசிப்பவரை நாய் நேசிக்கும், பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியார் கலந்து வாழ்கிற பக்கங்கள் இருக்கின்றன இந்தப் புத்தகத்தில்.

தான் என்னவாய் இல்லையோ அதையும் சொல்லி, அப்படி இருக்கலாமே என்று அடுத்தவரோடு சேர்ந்து நின்று உறுதியெடுக்கும் இடங்கள் இந்தப் புத்தகத்தில் மகத்துவம் பெறும் பக்கங்கள்.

தனது பெயர் குறித்த அவஸ்தையின் பழைய நினைவுகூறலில் தொடங்கும் அவரது பயணம், விதவிதமான மனிதர்களின் நுழைவையும், அவர்களது வாழ்வில் இவரது நுழைவையும் கலந்து பேசிக் கொண்டு செல்கிறது. நன்றி பாராட்டும் போது மறக்காத பெயர்கள், நன்றி கொன்றவர்களைச் சொல்லும் இடத்து நாகரிகத்தோடு அடையாளமின்றி அடுத்த வரிக்குச் சென்றுவிடுவது கவனத்திற்குரியதாகிறது. ரத்தம் தோய்ந்த முகத்துடனான முதல் ரசிகனும், மிகவும் பரிச்சயமானவள் போல வந்து பழகிவிட்டுப் போகும் முதியவளும், ஆக் ஷன் பாபுவும், ரதிஷும்.....போலவே, நீதிமன்றத்தின் வெளியே பிரித்துவைக்கப்பட்டிருந்து, பரஸ்பரக் காதல் மனசு - அடைக்கும் தாழ் இன்றிப் புன்கணீர் பூசல் தருவதாய் ஒன்றிணைத்து விட காதல் இருவர் கருத்தொருமித்து வெளியேறும் அந்த மூத்த தம்பதியினரும், இன்ன பிறரும் என்றென்றும் எனதருகிலேயே குடியிருப்பார்கள் என்றே படுகிறது. அத்தனை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் ஆர்ப்பாட்டமற்ற பதிவு வியப்பூட்டுகிறது.

தன்னை இன்னும் அடையாளம் தெரியாத மனிதர்கள் புழங்கும் அதே பூமியில் தான் மிகப் புகழுடன் உலா வருகிறோம் என்பது அவரது பிரகடனம் போலவே ஒலித்தாலும், ஒரு ஞானியின் தெறிப்பு அதில் காணப்படுகிறது. சம காலத்தில் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகள், மனிதப் பண்புகள், பரஸ்பரம் மன்னிக்கும் பேராண்மை....எல்ல்லவற்றையும் பற்றிப் பேச வாழ்க்கை அவருக்கு சிறப்பான அனுபவத்தையும், அதைவிட அவற்றை எடுத்துரைக்கும் தேர்ச்சியான மொழியையும் அருளியிருக்கிறது.

ஒரு புன்னகை, கொஞ்சம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையாகப் புறப்படும் கண்ணீர், வசீகர சிரிப்பு, ஒரு குழந்தையின் கெஞ்சல், ஒரு ஞானியின் வாக்கியம், ஒரு திருந்திய மனத்தின் கேவல், ஒரு தடுமாறிய புத்தியின் அவசர வழி மீட்பு, ஒரு மன்னனின் கம்பீரம், ஒரு கொடையாளியின் தன்னடக்கம், ஒரு காதலனின் மன்னிப்பு கோரல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு, ஒரு பிரார்த்தனை, ஒரு சூளுரை.... இவை ஒவ்வொன்றும், இவை எல்லாமும் ஒளிரும் வித்தியாசமான அனுபவப் பகிர்வு இந்த நூல்.

மம்மூட்டி அருகே உட்கார்ந்தபடி தனது வேட்டியின் நுனி காற்றில் பறக்க தனது புருவம் உயர்த்திய பார்வையோடும், நினைவு நதியின் மீது அதைக் கலைத்துவிடாத கவனத்தோடு அன்பின் சிறு கல்லை வீசியபடியும் அப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த சுய சரிதையாகவே ஒலித்தது எனக்குள் இந்த வாசிப்பு.

மொழிபெயர்ப்பைப் பற்றி இப்படி ஒரு வாக்கியத்தில் சொல்லலாம்: இதைத் தமிழில் அவரே சொல்லிவிட்டுப் பின்னர் தான் தனது சொந்த மொழியில் அவராக எழுதியிருப்பார் மம்மூட்டி என்று கொள்ளலாம் போலிருக்கிறது. மிகச் சில இடங்களில் வேண்டாமே என்று அப்படியே மலையாளம் நனைந்த தமிழில் விட்டுவிட்ட இடங்களிலும் கூட (நித்ய யௌவனம் ! ) குற்றம் சொல்ல முடியாத மொழி பெயர்ப்பு...

வாழ்த்துக்கள் ஷைலஜா..

எஸ் வி வேணுகோபாலன்

Saturday, April 30, 2011

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன - நூல் வெளியீட்டு விழா


அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன - நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படங்கள்:




Tuesday, April 19, 2011

வம்சி வெளியீட்டரங்கம் - 4


எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22-04-2011) மாலை ஆறு மணியளவில் Front Line இணை ஆசிரியர் ஆர். விஜயசங்கர் எழுதிய "அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன" நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



அனைவரும் வருக...

Thursday, March 17, 2011

ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை / புத்தக வெளியீடு

சென்னையில் 11-03-2011 அன்று நடைபெற்ற ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா ஒளிப்படங்கள்



Thursday, March 3, 2011

வம்சி இரண்டு நூல்கள் வெளியீடு - திருவண்ணாமலை


12-02-2011 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து, மற்றும் ஷைலஜாவின் தென்னிந்திய சிறுகதைகள் நூல்கள் வெளியீட்டு விழா - காணொளி (Video)


குறிப்பு: வீடியோ 1 மணி நேரம், 20 நிமிடங்களுக்கு மேலாக ஓடக்கூடியது. எனவே வீடியோவை தொடர்ச்சியாக பார்க்க குறைந்த பட்சம் (532 KBPS) 20 நிமிடம் காத்திருந்து பின்னர் ப்ளே செய்யவும்.

Tuesday, March 1, 2011

வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா - சென்னை


நிகழ்வின் காணொளியைக் காண:
------------------------------------------------------------------------------------------------------------------------
29-01-2011 அன்று வம்சி புத்தக நிறுவனத்தார் நடத்திய இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. அதன் ஒருங்கிணைப்பை தமிழ் ஸ்டுடியோ செய்தது. விழா இரண்டு அமர்வுகளாக நடந்தது, முதல் அமர்வில் பாலுமகேந்திராவின் “கதை நேரம். பாகம்-2”ம். இரண்டாம் அமர்வில் மிஷ்கின் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------

கதைநேரம் – பாகம்-2

பாலுமகேந்திரா எழுதிய இப்புத்தகம் கதை. திரைக்கதை. குறுந்தகடு என மூன்று வடிவத்தினாலானது, எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டார், அதன் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------

நத்தை போன பாதையில்

நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வில் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மொழிபெயர்த்த “நத்தை போன பாதையில்” என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது, நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட ஓவியர் மருது அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்வின் காணொளியைக் காண:


Monday, February 21, 2011

இன்னுமொருக் கடிதம்

''மனிதன் பார்க்கிறான்
விஞ்ஞானி உற்றுப்பார்க்கிறான்
கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்''
என்று சொல்வார்கள். '' 19 டி.எம் சரோனிலிருந்து'' என்ற பவா. செல்லதுரையின் நூலைப் படிப்பவர்கள், பவா தன்னுடன் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்திருக்கிறார் என்பதையே உணருவார்கள். இந்த சிறிய நூலை ஒரு பெரிய வாகை மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, மண்வாசனையின் புதுமணம் மாறுவதற்குள் அதை முற்றிலும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மூச்சை ஆழ இழுப்பதைப்போல், கைபேசியில் பவாவை தொடர்பு கொண்டேன். என்னுடைய துரதிஷ்டம் அவர் எடுக்கவில்லை. பல நேரங்களிலும் இது நடப்பது தான். பிறகு. வழக்கம் போல் அவரே தொடர்பு கொண்டார். பகிர்ந்து கொண்டேன்.

''எழுத்துச் சோம்பேறி'' என்று அவரே அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானே பலமுறை அவரிடத்தில் சொல்லியிருக்கிறேன். ''ஏன் எழுதமாட்டேன் என்கிறாய். முன்னாள் எழுத்தாளர் என்று சொல்ற மாதிரி பண்ணிடாத'' என்று அவருக்கு நெருக்கமான பலருக்கும் அவரைப்பற்றி இப்படி ஒரு கருத்து உண்டு தான் ''எழுத்துச் சோம்பேறி”. ஆனால், இந்த நூலைப் படித்தவுடன் அந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்பதை எல்லோருமே ஏற்பார்கள் என்று நம்புகிறேன். ஆம். அவரின் இந்த கால இடைவெளி சோம்பேறித்தனமல்ல. மாறாக, ஒவ்வொன்றையும் தனக்குள்ளே அடைகாத்து, வளர்த்து, ஆரோக்கியமாய் வெளிப்படுத்தும் அவசியத்தின்பாற்பட்டதே இந்த அமைதி எனக்கருதுகிறேன்.

பிடித்தமானவர்களுடன் அளவளாவுவதில் அலாதி பிரியம் கொண்டவர் பவா. பேசும்போதே, புனைவுகளுடன் பேசி கேட்பவரை மதிமயங்கச் செய்யும் வல்லமை படைத்தவர். இந்தக் 'கலை' தனக்கில்லையே என கேட்பவரை ஏங்கச் செய்யும் அவருடைய சொல்லும் விதம். எழுத்திலும், அத்தகைய புனைவும், அழகும் வலிமையாய் இடம் பிடித்திருக்கிறது.

இந்த தொகுப்பிலேயே மிக, மிக, மிக பிடித்தமான, அழுத்தமான கட்டுரை 'அப்பா', தண்ணீரைத் தேடி மனிதர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஊருக்கு பொதுவாக கிணறு வெட்டும் போதே, ஊற்று தட்டுப்பட்டுவிட்ட தென்றால் ஊரே கூடி கொண்டாடும் காட்சியை இப்போதும் கிராமத்தில் காணலாம். அதிலும் சுவையான நல்ல தண்ணீர் கிடைத்துவிட்டால் நாடே நமது காலடியில் என்ற நினைப்பில் தான் நடமாடுவார்கள். தனக்கே சொந்தமான கிணற்றில் நல்ல வளமான ஊற்றுகிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும் குதூகலிப்புக்கு ''அப்பாவின் குதூகலம் என் வயதுக்கானது'' என்று ஒரு வரியில்அத்தனையையும் படம் பிடித்து காட்டிவிட்டார். 'கொட்டிக்கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?' எதைவிட? ஒவ்வொரு குழந்தைக்கும் தனது அப்பா, அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்தால் இத்தகைய கேள்விகள் எழவே செய்யும்.

மதச்சார்பற்றவராக மரணம் வரை வாழ்ந்தது மட்டுமல்லாமல் தன் மரணத்திற்கு பிறகும் அது தொடர மார்க்சீயவாதியாகிய தன் மகனை அவநம்பிக்கையுடன் கேட்ட அந்த மனிதரை, எந்த இயக்கத்திலும் இல்லையென்றாலும் கடைசி காலம் வரை கொள்கை பிடிப்புடன் அவர் வாழ்ந்தது கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 25 ஆண்டு கால தொடர்பும், நட்பும் எனக்கும் பவாவுக்கும். இந்நூலில் குறிப்பிட்டுள்ள ஆளுமைகள் அனைவர் குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் என்னோடு பேசியிருக்கிறார். விசிறி சாமியார் தவிர யோகிராம் சூரத் குமாரோடு அவருக்கு இவ்வளவு நெருக்கமான தொடர்பிருந்தது நான் அறியாதது. ஒருவேளை இந்து மத சாமியாரைப் பற்றி பேச வேண்டாமென்று நினைத்தாரா எனத் தெரியவில்லை. மதவெறி சக்திகளும், ஆளும் வர்க்கமும் மக்களின் நம்பிக்கைகளை இதுபோன்ற சாமியார்கள் மூலம் மிகவும் தந்திரமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் விசிறிசாமியார் என்ற பிச்சைக்காரன் மணி மண்டபத்துக்குள் மாற்றப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்திருக்கிறார்.
சிபியின் எதிர்பாராத இழப்பு எல்லோராலும் தாங்க முடியாத பெருந்துயரில் தள்ளியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் பவாவின் வீட்டிற்கு சென்ற போது ''குழாயைத் திறந்துவிட்டு அதன் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிபி'' குழந்தைக்கு சளிபிடித்துக் கொள்ளப் போகிறதென்று நான் பதறிப்போய் சொன்னேன்.''அவன் விருப்பம் போல் வளரட்டுமென்று நாங்கள் விட்டுவிட்டோம்'' இது பவா. ஷைலஜாவும், ''அவன் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நேரம் கூட இப்படி தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க அவன் விளையாடிக் கொண்டிருந்த காட்சி மனதில் ஆழமாய் இப்போதும் துருதுருவென திரிந்த குழந்தையைத் தேடி யோகி ராம்சூரத் குமாரிடம் சென்ற பகுதியை படிக்கும் போது நான் தவித்துப் போனேன். பவா, குழந்தையின் பிரிவால் தடுமாறிவிட்டானோ? என்று. ஷைலஜாவின் 'என் சிபி மீண்டும் வரும் வரை எந்த ஆறுதலும் ரத்தம் கசியும் என் மனதின் விளிம்பைக் கூடத் தொட முடியாது'' என்ற வரிகள் விடையாக வந்து என்னை ஆசுவாசப்படுத்தின.

பவா வீட்டில் உணவு என்றால் கட்டாயம் அசைவம் தான் என்பது அங்கு சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். ஷைலஜாவின் சுவையான சமையலுக்காகவே மீண்டும் மீண்டும் சாப்பிடச் செல்லலாம். நேரம் தான் வாய்க்கவில்லை. சாப்பிடும் வேளையில், பினுபாஸ்கர் எடுத்த குடும்பப்படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லாமல் பவா இருந்ததில்லை. அத்தனை அழகு பவாவின் அம்மாவை நான் பார்த்திருக்கவில்லை. ''அம்மாவிடமிருந்து அந்த வாஞ்சையை அப்படியே ஷைலஜா சுவீகரித்திருக்கிறாள்'' என்ற வரியின் மூலம் ஷைலஜாவை அறிந்த ஒவ்வொருவருக்கும் பவாவின் அம்மா எப்படி இருந்திருப்பார் என்பதை உணர்த்திவிட்டார்.

ஒவ்வொருவருடைய நட்பையும், ததும்பி வழியும் அளவுக்கு அவர் அனுபவித்திருக்கிறார் என்பதை இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். ஆனால் ஒன்றைச் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. பவாவும் - கருணாவும் திருவண்ணாமலை இரட்டையர்கள் என்பது அவர்களை பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். இப்போது இருவருமே பேசாமல் மௌனம் கடைபிடிக்கிறார்கள். இந்த இடைவெளியும் மௌனமும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, தெரியவும் வேண்டாம். ஆனால், இரட்டையர்களை அதே நெருக்கத்தோடு பார்த்துப் பரவசப்பட ஆசை.

மனதை புரட்டிப்போடும் வல்லமை மிக்க எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்ற பவா, இதுபோன்ற தலைசிறந்த படைப்புகள் மட்டுமே உன்னிடமிருந்து வெளிவரட்டும். பாலகுமாரனைப் போல் வகைதொகை இல்லாமல் ஏராளமாய் எழுதிக்குவிக்க வேண்டாம் எப்போதாவது எழுதினாலும் இதுபோல, இன்னும் அழுத்தமான படைப்புகளாகவே உன்னிடமிருந்து வரட்டும்.

இதுபோன்ற அட்டைப்படங்கள் இனி எடுக்கப்படுமா? அட்டைப் படமே ஒரு சிறுகதை, கட்டுரைக்கு சமமாக கவனமாய் பதிவு பெற்றிருக்கிறது. பவாவின் படத்தையும் சேர்த்துத்தான்.

வாழ்த்துகளுடன்,

தோழன், பெ. சண்முகம்
மாநில செயற்க்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Sunday, February 20, 2011

ஒரு கடிதம்

அன்பு பவா அவர்களுக்கு தாழ்ந்த வணக்கம்....

உங்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்... கடந்தவாரம் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எஸ்.ரா அவர்களுடன் வந்திருந்தேன்.. நாங்கள் அங்கு வரும்வரை மூவரும் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம் ... மறுநாள் சென்னை வந்தடையும் வரை பேச்சு உங்களை சுற்றியே இருந்தது..

நானும் எனது நண்பனும் ஒருமுறை கொச்சியில் நடந்த திரைப்படவிழாவில் அபர்னாசென்னின் 36chowrengi lane எனும் படத்தை பார்க்க நேர்ந்தது.... இரவுக்காட்சி... எப்போதும் படம் முடிந்ததும் அதை பற்றி விவாதிப்பது வழக்கம்..ஆனால் அப்படம் முடிந்ததும் நடந்தே ஹோட்டலுக்கு வந்தோம்... இருவரும் ஒருவார்த்தை பேசிக்கொள்ள வில்லை. அன்று என்னால் உறங்கமுடியவில்லை...அதற்குபிறகு உங்கள் விழாவிற்கு வந்தபின்புதான் மீண்டும் அந்த அனுபவத்தை அடைந்தேன்...

உங்கள் விழா என்னை பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பி அழைத்து சென்றது...அன்று வீதிநாடகம் மற்றும் தெருக்கூத்தின் மீது தீராத மோகம் கொண்டிருந்த காலம்...திரு புரிசை கண்ணப்பதம்பிரான் வீட்டில் தங்கியிருந்து அவர்களுடன் பயணப்பட்டு நேர்த்தியான அவர்களது கலை வடிவத்தில் கரைந்து போனதும்..கொட்டிவாக்கத்தில் திரு ந.முத்துசாமியுடன் இருந்த நாட்களும் கண்முன்னால் நிழலாடியது....

பின் சினிமாவிற்குள் வந்ததும் மெதுவாக அவற்றுடனான தொடர்பு மெலிந்து ஒரு காலத்தில் அறுந்தும் போயிற்று.. காரணம் தெரியவில்லை....ஒருவேளை அவற்றை பற்றி பேச எவரும் கிடைக்காமல் போனதால் இருக்கலாம்...

விழா முடிந்த அவ்விரவுப்பனியில் உணவருந்தியதும் விடை பெறும்போது நான் கை குலுக்கிய பின் என்னை அன்போடு மெல்ல அணைத்தீர்கள்...

இவரை ஏன் பல ஆண்டுகள் முன்பே நமக்கு அறிமுகமில்லாமல் போயிற்று என்று மிகவும் வருந்தினேன்..

நீங்கள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு தாமதமாக கிடைத்தீர்கள்..?

உங்கள் பணியில் இருக்கும் எளிமை, எழுத்திலும் இருக்கிறது என்பதை உங்கள் புத்தகங்களிருந்து அறிந்தேன்... மேற்கொண்டு என்ன எழுதுவது என்றறியாமல்...

அன்புடன்
மணிகண்டன்

Tuesday, February 15, 2011

வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011)



திருவண்ணமலையில் நடைபெற்ற வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011),

டேனிஸ் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை