Wednesday, October 9, 2013

அமெரிக்கன் கல்லூரி

சென்ற மாதம் ‘வம்சி’ பதிப்பித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு குழந்தைகள் புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு மதுரை போயிருந்தேன். நான் வருவதறிந்து நண்பர் ஸ்டாலின் ராஜங்கம் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் ஒரு மணி நேரம் பேச அழைத்தார். அமெரிக்கன் கல்லூரிக்குள் பேசுவதென்பது என் நெடுங்கனவு. என் மதிப்பிற்குரிய உதிரிப் பூக்கள் மகேந்திரன், பாலா, ராம் என பெரும் கலைஞர்கள், பாரதி கிருஷ்ணகுமார், ரா. கண்ணன் என்ற ஆளுமைகள் அங்கிருந்து வந்தவர்கள் தான்.

அக்கல்லூரிக்கு எதிரிலேயே ஹோட்டல் நார்த் கேட் வேயில் எனக்கு அறை போடப்பட்டிருந்தது. என் நீண்ட நாள் வாசகி தமிழ்ச்செல்வி அக்கா தன் மகன் சுரேஷோடும் நண்பர்களோடும் கிட்டதட்ட இருபது பேருக்கு ஆள் வைத்து சமைத்து சாப்பாட்டை அடுக்கடுக்காய் கொண்டு வந்து என் அறையை நிறைந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவுக்கு ஜீரமே வந்துவிட்டது (நிஜமாகவே) அறைக்கருகே இருந்த எல்லா நண்பர்களையும் சாப்பிட அழைந்தோம். கவிஞர் மனுஷயபுத்திரன், ஆத்மார்த்தி, இளம்பரிதி என நிறைய பேர் எங்களோடு அவ்உணவை பகிர்ந்து கொண்டார்கள்.
பாதிச் சாப்பாட்டில் பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் கைப்பிடித்து அக்கூட்டத்திற்கு அழைத்துப் போனார். நான் படித்த டேனிஷ் மிஷன் பள்ளியின் நீட்சி போல அச்சிவப்பு கட்டிடங்கள் மரச்செறிவினூடே என்னை வரவேற்றது. ஒவ்வொரு மர பருண்மையிலும் கயிறுகட்டி என் பெயரெழுதி தட்டி போர்டு வைக்கப்பட்டிருந்தது. கருங்கல் படிக்கட்டேறி மேல்மாடியின் அவ்விசாலமான அரங்கை சமீபித்தபோது இருநூறு பேர் சுமார் ஒரு மணி நேரமாக எனக்காகக் காத்திருந்தார்கள். ஸ்டாலின் அவசரம் புரிந்தது.

தமிழ் வாத்தியார்களால் எப்போதுமே முடியாத ஒரு நிமிடமும் வீணாக்கபடாமல் நான் பேச அழைக்கப்பட்டேன். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுக உரை என்னை கூச்சப்பட வைத்தது.
பட்டமேற்படிப்பு, M.Phil., Ph.d படிக்கும் மாணவர்கள், அவர்களின் பேராசிரியர்கள், தட்டிபோர்டு கண்டு வந்த மற்ற துறை பேராசிரிய, மாணவர்கள் இவர்கள் மட்டுமே பார்வையாளர்கள்.
என் கதைகளிலிருந்து ‘சத்ரு’, ‘வலி’, ‘நீர்’ ஆகிய மூன்று கதைகளை மட்டுமே மையப்படுத்தி ஒன்றரை மணி நேரம் பேசினேன். கிட்டதட்ட அவர்கள் உறைநிலையிலிருந்தார்கள். அதில் பெரும்பாலோர் என்னை முழுதும் வாசித்திருந்தார்கள். அதுமட்டுமே என் உரையை அத்தனை அமைதியாய் கேட்கவைத்தது.
பேராசிரியர் பூமிச்செல்வன், ஏற்கனவே தான் தொகுத்த திருடர்களைப் பற்றிய தமிழ் கதைகளுக்கு என் ‘சத்ரு’வை கேட்டு வாங்கியிருந்தார். இக்கூட்டம் முடிந்ததும் அதற்கு ‘வலி’யைத் தரமுடியுமா? என கேட்டார். கோணங்கியின் ‘தா’வரையிலான அவர் வாசிப்பு என்னை நானறிந்த தமிழ்ப் பேராசியர்களின் போதாமையோடு ஒப்பிட வைத்தது.

என் கதைகள் அக்கல்லூரியின் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் அரங்கிற்கு வெளியே வந்து புத்தகத்தில் கையெடுத்துக் கேட்டார்கள். மழைபெய்து முடிந்திருந்த அம்மாலையில் தட்டி போர்டுகள் சுமந்த அப்பெருமரங்களைக் கவனித்தேன். மழை நீர் பட்டு என் பெயர் அழியாமல் இருந்தது.

Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


டயலாக் அமைப்பின் சார்பாக சென்னையில் நடைப்பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  படத்திற்கான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் - பாலா மாரியப்பன் 


Thursday, October 3, 2013

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒரே குளத்தில் நீரருந்தும்

‘முகமூடி’யின் தோல்விக்குப்பின் சற்று மௌனத்திலிருந்த மிஷ்கின், உடன் அதிலிருந்து மீண்டு என்னுடனான தொடர் உரையாடலில் இரண்டு மூன்று கதைகருக்களையும், தலைப்புகளையும் விவாதித்தோம்.
 இருவருக்குமே மிகப்பிடித்தமான தலைப்பாக ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ அமைந்தது.
தன் அலுவலகத்திலேயே நடந்த அப்படத்தின் துவக்க விழாவிற்கு பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது, எஸ்.கே.பி. கருணா, என் நண்பர் ஜே.பி. இவர்களோடு நான் என நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தோம். கமீலா நாசர், இயக்குனர் சேரனின் மனைவி ஆகியோரும் எங்களுடனிருந்து குத்து விளக்கேற்றினார்கள். அப்படத் துவக்க விழாவில் என் நண்பனும் போதகருமான ஜே.பி.தான், திருவிவிலியத்திலிருந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குட்டையில் நீரருந்தும்’ என்ற இவ்வாக்கியத்தைப் பகிர்ந்தான்.
அதன்பிறகான தொடர் படப்பிடிப்பும், Post Production-ம் நடந்த இந்த நான்கு மாதங்களின் ஒவ்வொரு நாளும் எனக்குத் தெரியும். இடையில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களை தன் ஷீக்கால்களுக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டு எழுந்து நின்றான் இக்கலைஞன். புறச்சூழல்கள் எதுவும் தன் படைப்பு மனநிலையை சிதைக்க அவன் அனுமதித்ததேயில்லை. தாள முடியாத துயரத்தை இசை கேட்டும், வாசித்தும், தனித்திருந்தும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிகழ்த்துதலையும் ஒரு படைப்பாகவே கருதினான். இப்படத்தின் வணிக வெற்றி, அதன் மூலமான பணவருகை எதுவும் மிஷ்கினின் நினைவுகளில் நிழலாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு மிஷ்கினிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  ‘பவா இன்னும் இன்றைய படப்பிடிப்பு முடிவடையவில்லை. இரவு பத்து மணிக்கு எனக்கு ஸ்ரீ ஆப்ரேஷன் செய்யும் அந்த காட்சியைப் படமாக்கினோம். அத்தனை விளக்கொளியில், இருபதுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் முன் ஐந்து மணிநேரம் நிர்வாணமாகக் கிடந்தேன். ஒரு மாதிரியான Madness, எந்த Concious-ம் எனக்கு இல்லை என்பதுமட்டுமல்ல. என் சக கலைஞருக்கும் இல்லை’  களைப்பை மீறி குரலில் உற்சாகம் மேலேறியிருந்தது.
எனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ளது என்பதை அறிந்த அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் என்னுடன் எங்கள் நிலத்தின் வரப்பில் சுற்றிக் கொண்டிருந்தபோது திரும்பி, என்னிடம் பேசினார்.
இப்படத்தில் பத்து பேரையாவது நான் கொன்றிருப்பேன். ஆனால் ஒரு கையில் துப்பாக்கியும், தோளில் தங்கையையும் அம்மாவையும் சுமந்து கொண்டு படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பெரும் கார் பார்க்கிங்கிற்குள் நுழையும் காட்சியில்  எதிர்பாராமல் ஒரு வாட்ச்மேன் என்னெதிரே நிற்பான். அவன் கண்களில் தோன்றும் சந்தேகம் என்னில் ஊடுருவும். நான் அவ்வயதான அப்பனை ஏறெடுப்பேன். அவர் தன் கண்களாலேயே,
‘‘என்னடா எங்க போற’’ என விசாரிப்பார். பத்துபேரை சுட்டுத்தள்ளிய நான் அவர் முன் தலைக் கவிழ்த்து நிற்பேன். எங்கள் இருவருக்குமான மௌனம் கேட்டைத் திறந்து என்னை உள்ளே அமைதிக்கும். இருவருக்குமிடையே இரு வசனங்களை வைத்துவிட்டு பிறகு நீக்கினேன். இளையராஜாவிடம், ‘‘இந்த வசனங்களை எடுத்தர்றேம்பா, இசையால் நீ அதை நிரப்பு’’ என்றேன்.
‘‘டேய் கொன்னுடுவேன் படத்திலேயே மொத்தம் ரெண்டு பக்கம் வசனம்கூட இல்லை. அதையும் எடுத்துட்டா மியூசிக் போட சொல்ற?’’ என செல்லமாக முதுகில் தட்டினார். மகத்தான கலைஞர்களின் கோபமும், செல்லமும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்யம். நேரில் பார்ப்பவர்களும், கேட்வர்களும் கூட பாக்யவான்கள். நான் கேட்டேன். தன்னை எதுவுமற்றவனாக்கி ராஜா என்ற இசைமேதையின் கையில் ஒப்படைத்து அவர் பின்னால் ஒரு பார்வையற்ற மனிதனாய் படம் முழுக்க நடந்து போகிறார் மிஷ்கின்.
இத்தனை அனுபவங்களோடும், பட ரிலீஸ் அன்று ஏற்பட்ட பல்வேறு மன, பண நெருக்கடிகளிலும் நசுங்கி அன்று மாலை திருவண்ணாமலையின் ஒரு மோசமான தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். போனேனில்லை. போனோம். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். படம் துவங்கிய பத்து நிமிடங்களிலேயே, நாங்கள் வேறொரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். உடலில் படிந்திருந்த சராசரி தமிழ் சினிமா சனியன்களை ஒரு கலைஞன் தன் முத்தங்களால் துடைத்தெறிந்து இன்னொரு அனுபவத்திற்கு எங்களை அழைத்துப் போகிறான் என அறியமுடிந்தது.

மருந்துவக் கல்லூரியின் பேராசிரியருக்கு தொலைபேசி அழைப்புவரும்போது அவர் அப்பாவின் பிணத்துடன் ஒரு பின்னிரவில் விழித்திருக்கும் காட்சி செய்நேர்த்தியின் உச்சம். அவர் மறுப்பது, அவனை எச்சரிப்பது பின் தன் அப்பாவின் உயிரற்ற முகத்தைப்பார்ப்பது, மீண்டும் தன் மாணவனை அழைப்பது. யாராலும் கணிக்க முடியாத மனித மனதின் அல்லாடல்கள் அவை. லேசில் யாராலும் தொட்டுவிடக் கூடியதல்ல இதன் உயரம்.
என் சில நண்பர்கள் படத்தில் நிறைய Logic மீறல்கள் உள்ளன என்றார்கள்.
மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு மாணவன் எப்படி இத்தனை பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும்? Wolf எப்படி அது முடிந்த ஏழெட்டு மணி நேரத்தில் தப்பிக்க முடியும்? அதன் பிறகு இத்தனை கொலைகளை திட்டமிட்டு செய்ய முடியும்?
என் நண்பன் கற்றது தமிழ் ராம்தான் இக்கேள்விகளுக்கான விடைகளை தொலைபேசியிலும் நேரிலும் பகிர்ந்தான்.
அண்ணா உங்க ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையில் எப்படி ஒரு பச்சை மல்லாட்டையிலிருந்து ஒரு இளவரசி வருகிறாள்?
என்னிடம் பதிலில்லை.
இம்முழுப்படமுமே எதார்த்த மீறல்தான். மட்டுமல்ல, மிஷ்கினின் கதைமாந்தர்கள் எல்லோருமே உதிரி மனிதர்கள்.  ‘அஞ்சாதே’ வில் குருவி, நொண்டி,  ‘நந்தலாலா’ வில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே உதிரிகள். சராசரி சமூகம் கவனிக்க தவறியதை ஒரு கலைஞன் கவனிக்கிறான். தன் படைப்பில் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தருகிறான்.
ஸ்ரீ, மிஷ்கினை சுமந்துத் திரியும் காட்சிகளில் யாருமே அவனுக்கு உதவ முன் வராதபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் அவனைத் தாங்கிப் பிடிக்கிறான். அவனுக்கு ஸ்ரீ தன் பர்சில் இருந்து ஒரு நூறுரூபாயை எடுத்துத் தருவான். பெரும் சிரிப்பினூடே அதை தூக்கி தன் பின்பக்கமாக எறிவான். இது எப்பேர்பட்ட காட்சி சித்தரிப்பு. என் நண்பர் எஸ்.கே.பி.கருணா ஒரு கோவில் திருவிழாவில் தன் தங்கையின் ஒரே மகனை தவறவிட்டுவிடுகிறார். ஒரு மணிநேர அலைக்கழிப்புகளுப்புக்குப் பின் ஒரு கழைக் கூத்தாடியின் அரவணைப்பில் குழந்தையைக் கண்டடைகிறார்.
குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து, கண்களில் நீர் கட்டி தன் பர்சை எடுத்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் முன்னால் நீட்டுகிறார். அவன் அதை தன் பீச்சாங்கையால் தள்ளி விடுகிறான். மிஷ்கினை தாங்கி நிற்பது ஒரு உதிரிமனிதனின் உரமேறிய கைகளில்லை. அது இச்சமூகத்தை தாங்கி நிற்கும் கரங்கள், அதை எப்போதுமே கவனிக்கத் தவறிய நம்மைப்பார்த்துதான் அவர்கள் குரூரமாக சிரிப்பதும். நாம் கொடுக்கும் பணத்தை பீச்சாங்கையால் நிராகரிப்பதும்.
இப்படியான உதிரிகள் இப்படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பார்வையற்றவர்கள், திருநங்கை, ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனான ஸ்ரீயே தன் கழிப்பறையில் மறைந்து வைத்து போதை ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு உதிரி மாணவன்தான். மிஷ்கின் கூலிக்கு கொலைசெய்யும், சமூகத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு பெரும் உதிரிதான். இப்படிபட்ட மனிதர்களின் நேயம் நம்மை சில்லிட வைக்கிறது. சிலரை முகம் சுளிக்க வைக்கிறது.
 ‘மூன்று உயிரைக் காப்பாற்ற பத்து உயிரை பலிகொடுக்க வேண்டுமா?’
நிதானமாக யோசித்தால் நாம், அல்லது நம் குடும்பம் வாழ நாம் தினம் தினம் எத்தைன மனிதர்களை, சமூக விழுமியங்களை, நம் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கிறோம். துரோகங்கள், மறைந்து வைக்கப்பட்ட குரோதங்கள், பத்திரப்படுத்தப்பட்ட அநீதிகள் இவைகளை மறைந்துக் கொண்டுதான் ஜீன்ஸ் பேண்டும் வெள்ளைச் சட்டையுமாய் உலாவுகிறோம்.
ஒரு தேசத்தின் தலைநகரில் முன்னிரவில் ஒரு ஓடும் பேருந்தில் எல்லோரையும் இறக்கிவிட்டு, ஆறு பேர், ஒரு மருத்துவகல்லூரி மாணவியை சுற்றி சுற்றி பாலியல் வல்லூறு செய்ததும், அவளை மிகக் குரூரமாக சிதைத்து போட்டதும் வன்முறை இல்லையெனில், இப்படத்தில் நிகழும் கொலைகள் வன்முறையற்றதுதான்.
கூலிக்குக் கொலைசெய்யும் ஒரு தவறுதல்தானே படம். மிஷ்கின் படம் நெடுகிலும் ஒரு கொலையைக் கூட அநாவசியமாக செய்யமாட்டார். ஒரு இன்ஸ்பெக்டரை தன்னருகே வரவழைத்து முட்டியில் சுடுவார். எல்லா வாய்ப்புகளிருந்தும் ஒரு செக்யூரிட்டியை பார்வையால் கெஞ்சிக் கடந்துபோவார். அவர் கொல்லவதெல்லாம் கூலிப்படையின் சகாக்களைத்தான். அவர்கள் வாழத் தகுதியானவர்கள்தான் என நாம் தீர்ப்புரைப்போமேயானால், நாம் மனதளவில் அவர்களாக இருக்கிறோம் என அர்த்தம்.

இப்படத்தில் நடக்கும் மற்ற கொலைகள் கூலிப்படைத் தலைவனால் அவன் ஆட்களை வைத்து நிறைவேற்றப்படுவது. விசாரணைகளற்ற, கருணையற்ற அவர்கள் உலகில் மனித உயிர்கள் வெறும் அற்பம். கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த கூலிப்படைக் கொலைகளின் எண்ணிக்கையை நாம் இக்கலைப்படைப்போடு கவனப்படுத்த வேண்டியுள்ளது.
அக்கல்லறையில் முட்டிப்போட்டு மிஷ்கின் கண்ணிமைக்காமல் கதை சொல்லும் காட்சி படைப்பின் உச்சம். உடல் மொழியில் பாதியும், கண்களில் மீதியையும் ஒளித்துவைத்து வார்த்தைகளை மிச்சப்படுத்துகிறார். இதன் வசன ஒளிப்பதிவின் போது பலமுறை மிஷ்கினால் பேசமுடியாமல் திணறி வெறியேறியதை நண்பர்கள் சொன்னார்கள்.
இப்படத்தில் என் நண்பர்கள் ஷாஜி, ஷௌகத், என் நண்பரின் மகள் சைதன்யா (ஏழு வயது மொழிபெயர்ப்பாளர்) எல்லோரும் ஆத்மார்த்தமாய் கலந்திருக்கிறார்கள். நண்பன் புவனேஷ் மிஷ்கினைப் பின்னாலிருந்து தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பது திரையை மீறி யூகிக்க முடிகிறது.
படம் பார்த்து முடித்து மூன்று நாட்கள் நான் மிஷ்கினோடு எதுவும் பேசவில்லை. பேசமுடியவில்லை. அவ்வனுபவத்தை முற்றிலும் என்னுள் அடைகாத்தேன். முட்டைகளின் கதகதப்புக்கு வேண்டி தாய் கோழி கூடையை விட்டகலாது. சந்திக்கும் தருணம்  வெகு அருகிலிருந்தும் தவிர்த்தேன். எனக்காக இரவு பதினோரு மணி வரை சாப்பிடாமல் மிஷ்கின் காத்திருந்தும் அவர் அலுவலகத்தைத் திரும்பிப் பார்க்காமல் கடந்தேன். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாததொரு தவிப்பில் மிஷ்கின் என்னை தொலைபேசியில் அழைத்து,
‘‘பவா என்ன கோபமுன்னாலும், என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு, தாங்கிக்கிறேன் பேசாம மட்டும் இருந்திராத எனக்கு கேன்சர் அட்டாக் ஆனதுமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது’’  என்றார்.

மிஷ்கின், என் இனிய நண்பனே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை படைப்பின் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞனைப் பார்க்க திராணியற்ற ஒரு எளிய மனிதனின் ஓடி ஒளிந்து கொள்ளும் தற்காலிக விலகல் அது. 

Tuesday, October 1, 2013

கடந்த 48 மணி நேரத்தில்



நேற்று முன் தினம் விஜய் டி.வி.யின் அழைப்பின்பேரில் கோபிநாத் ஒருங்கிணைத்த ‘‘மகாபாரதம் மக்கள் முன்னால்’’ என்ற நிகழ்வில் பங்கெடுத்தேன். என்னுடன், பத்திரிகையாளர்கள் கடற்கய், தீபா, எழுத்தாளர் அராத்து, மருத்துவர் சுனில் ஆகியோர் விருந்தினர்களாக வந்திருந்தனர். ‘‘மகாபாரதம்’’ இந்தியாவின் மிகப்பெரிய காப்பியம். அதை ஒரு மணி நேர உரையாடலில் அடக்க எல்லோருமே சிரமப்பட்டோம். ஆனாலும் ஆன்டனியும், கோபிநாத்தும் அதை மிக எளிதாக கடந்தார்கள். நாளையும் நாளை மறுநாளும் (அக்டோபர் 2,3) மாலை 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.


இரண்டு
தொலைக்காட்சி பதிவு முடிந்து ஒரு மிகச் சிறந்த இரவு Dinner ரை என் நண்பர் ஓவியர் சீனிவாசன் எனக்கும் என் நண்பர்களுக்கும் அளிக்க, அதன் ருசியோடே இரவு பயணித்து அதிகாலை மூன்று மணிக்கு சேத்பட் வந்தோம். தூக்கம் கலைந்து நண்பர் கிருஷ்ணமூர்த்தி திடீரென கந்தர்வனின் சாசனம் கதைபற்றி பேச உற்சாகம் தொற்றிக் கொண்டது. திருவண்ணாமலை வரும்வரை கந்தர்வனின் பல கதைகளின் நுட்பம் எங்கள் காருக்குள் சுழன்றது. அந்த நினைவுகளினூடே அன்று அதிகாலை தூங்கியது சுகமாயிருந்தது.
மூன்று
காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டேன் வயலில் இன்று நெல் நடவு. முப்பது பெண்ஆட்களும் பத்து ஆணாட்களும் நிலம் நிறைந்து நின்றிருந்தது பெருமிதமான காட்சி.
மகள் மானசிதான் முதல் ஏழுநாற்றுகளை சனிமூலையில் நட்டு நடவைத் துவங்க வேண்டுமென நடவந்த பெண்கள் கோரிக்கை வைக்க, கொஞ்சமும் தாமதிக்காமல், அதற்காகவே காத்திருந்ததுபோல மானசி சேற்றுக்குள் இறங்கி ஏழு நாற்றுக்களை ஊன்றினாள். அக்கணம் எழுத்திற்கும் அப்பால்போய் இதிலிருந்து நழுவுகிறது.
‘‘கற்றதுதமிழ்’’ ராம் தான் அன்று அதிகாலை என்னை எழுப்பியது. ஒரு கூட்டத்திற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தவர் என்னோடு பைக்கிலேயே நிலத்துக்கு வந்தார். இரண்டு பேரும் வம்சியைத் தேடி நிலத்தைத் தாண்டி திப்பகாட்டின் விளிம்புக்கு போனோம். ஒரு ஆலமரத்தைச் சுற்றி இருநூருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சப்தமின்றி நின்றிருந்தார்கள். கூட்டத்தை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தால் ஈரமண் தரையில் பணியனைக் கழட்டிப் போட்டு அதில் முட்டி போட்டுக் கொண்டு தன்னெதிரே நடந்த கோழிச்சண்டையை வம்சி படமெடுத்துக் கொண்டிருந்தான். என்னுடன் ராமைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டித் தழுவிக் கொண்டான். ராமும் வம்சியும் அப்படியொரு நண்பர்கள். எனக்குக் கேட்காமல் வெகுநேரம் ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ பற்றி பேசிக் கொண்டே என் முன்னால் நடந்து வந்தார்கள். எங்கள் புது கிணற்றங்கரையில் ராம் பொறாமையுடன் பார்த்து நிற்க வம்சி கிணத்தில் துள்ளி குதித்து நீந்திக் காட்டினான்.



நான்கு
அன்று காலை 11 மணிக்கு ‘‘தங்கமீன்’’களுக்கு நடந்த கலந்துரையாடலில் ராம் 30 நிமிஷங்கள் பேசினார். ஆழம், கோபம், ரௌத்ரம் என அப்பேச்சு எல்லோரையும் உறைய வைத்தது. தமிழில் விமர்சன போதாமை படைப்பாளிகளையையே தன் படைப்பின் நுட்பங்களை பேச வைக்கும் கொடுமையை மிக உஷ்ணமாக பகிர்ந்து கொண்டார்.
ஐந்து
மதியம் நான்கு மணிக்கு மதுரை இறையியல் கல்லூரிப் பேராசியர் ராஜேந்திரன் தன் ஜெர்மன் மனைவியோடும், தன் இரு பெண்பிள்ளைகளோடும் என்னை சந்திக்க நிலத்துக்கு வந்திருந்தார்கள். பேச்சு இலக்கியம், கலை, நிலம் என பல திசைகளிலும் சுழன்றது. அக்குழந்தைகளுக்கு நெல், நாற்று, நடவு, சேடை என எல்லாவற்றையும் அவர் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார் பம்புசெட் தொட்டி மீதேறி அமர்த்திருந்த அப்பெண்கள் ஒரு கட்டத்தில் உற்சாகம் பீறிட தொட்டியில் குதித்து வெகுநேரம் குளித்தார்கள். ‘சளி பிடிச்சுக்கும் ஜூரம் வரும்’ ‘புது தண்ணி’ என்ற அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்கள் எதுவும் நல்லவேளை அங்கு கடைசி வரை பிரயோகிக்கப்படவில்லை.
ஆறு
மூன்று மணிக்கு என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவின் பால்ய நண்பன் கணேஷ் தன் மனைவி குழந்தையோடு நிலத்துக்கு வந்திருந்தார். (அமெரிக்கா ரிட்டன்) நிலம், மீன்குளம், ஜெயஸ்ரீயின் கருங்கல்வீடு, மரங்கள், கெஸ்ட் அவுஸ் எல்லாமும் அவர்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டது.
கணேஷ் தன் பெண்ணிடம்
இதாண்டா Paddy நாற்று. இது வளந்து நெல் வந்தாதான் நாம Rice சாப்பிட முடியும் என விளக்கிக் கொண்டிருந்தார்.
காலம் பின்னோக்கி சுழல நான் அக்குழந்தையிடன் உங்க தாத்தா காரபட்டார் என்னை மாதிரியே விவசாயிதான்மா என சொல்ல

‘‘விவசாயின்னா என்ன Uncle?’’
எப்போதும் போல் மீண்டும் ஒருமுறை அக்குழந்தையிடம் பதில் சொல்ல முடியாமல்த் தோற்றேன்.
ஏழு
மதியம் நடவு நட்டவர்களோடு ஜெயஸ்ரீ வீட்டு வராண்டாவில் இலைபோட்டு சாப்பாடு. உழைப்பின் வியர்வையோடு அவர்கள் சோற்றை அள்ளி அள்ளி சாப்பிட்டபோது எனக்குள் படிந்துவிட்டிருந்த மத்தியதரவர்க நாசூக்கு வெட்கியது.
எட்டு
ராம் போனபின் நானும் வம்சியும் வரப்பில் உட்கார்ந்து ஆட்கள் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன் பருமனான ஒரு பாம்பு வேகமாக வருவதைப் பார்த்தேன். அது மஞ்சள்சாரை என என் அனுபவம் உணர்த்தியது. வம்சியை பயப்பட வேண்டாமென சொல்லிவிட்டு ஏழுமலையையும், பலராமனையும் அதனோடு கொஞ்ச நேரம் விளையாடச்சொன்னேன். வம்சி என் கைப்பேசியில் அதனருகில் போய்ப்படமெடுத்தான். அடுத்தமுறை மஞ்சள்சாரையோடு தானும் விளையாடுவேனென அடம்பிடித்தான். சுமார் அரைமணிநேர விளையாட்டுக்கு பின் அது தன் தாவரச்செறிவினூடே நுழைந்து மறைந்தது அற்புதம்.


ஒன்பது
இரவு ஏழுமணிக்கு ஆர்.ஆர். சீனுவாசன், நண்பர்கள் கார்த்தி, முருகன், ஷைலஜாவோடு உட்கார்ந்து L.C.D யில் என் ஆவணப்படத்தை (பவா என்றொரு கதைசொல்லி) பார்த்து இறுதிசெய்தோம். நவம்பர் 10 அன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அப்பட திரையிடல். அதற்கான ஆயத்தங்கள் துவங்கிவிட்டன.


பத்து
எல்லாம் நிறைந்து பெரும்கலைப்புடன் இரவு பதினோரு மணிக்குத் தூங்க போவதற்கு முன் ஒரு கவிதை படிக்கத்தோன்றியது. அது ஒரு கழுகைப் பற்றிய ஆங்கிலக் கவிதை. என் நண்பர் மிஷ்கின் தமிழில் மொழிபெயர்த்தது. அந்நாளின் எல்லாவற்றையும் அக்கழுகு தனக்குள் உள்வாங்கிக்கொண்டது.
ஒரு முழு நாற்பத்தியெட்டு மணிநேரம் நகரமும், கிராமும் சாராத ஒரு எளிய மனிதனின் வாழ்வை எப்படி நிரப்பிக் கொள்கிறது என்ற நினைவே போதுமானதாயிருந்தது.

Saturday, September 21, 2013

கால்

சிறுகதை 

தான் யாருமற்று தனித்திருப்பதை திடீரென உணரமுடிந்தது. நிதானமாக எழுந்து மேல்மாடி அறையிலிருந்து வெளியேறி வராண்டாவிற்கு வந்து நின்று எதிரில் வியாபித்திருந்த மாமரத்தைப் பார்த்தான். கொத்து கொத்தாய் காய்கள் நிறைந்திருந்தன. ஆறேழு அணில்கள் இவை தங்களுக்கானவை என்ற உரிமையுடன் அக்கிளைகளில் இங்குமங்கும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. வெகு நாட்களாக கவனிக்காமலிருந்த அம்மரப் பருண்மை அவனை ஆச்சரியப்படுத்தியது.
மேல்மாடி அறைகளிலும், கீழ் அலுவலகத்திலும் குறைந்தது முப்பது பேர் பணியாற்றிக் கொண்டிருப்பினும் ஒரு சத்தமும் இன்றி அணில்களின் சத்தத்தை இன்றைக்கு மட்டும் தனியே உள்வாங்க முடிந்தது.
இப்படி ஒரு தனிமை வாய்த்து பல காலமாகியிருக்கும். பிரபலம் பிடுங்கி தின்கிற முதல் விஷயமே இத்தனிமைதான். அது தனக்கு சின்ன வயதிலேயே வாய்த்தது அதிஷ்டமென்றும், துரதிஷ்டமென்றும் சொல்லிக் கொள்ளலாம். இம்மாடியறையிலிருந்து இறங்கிப் போய், எப்போதும் மூடிய கார் கண்ணாடி வழியே மட்டும் பார்க்கிற அந்த மூலை டீக்கடையில் நின்று ஒரு டீ குடித்துவிட முடியுமா தன்னால்?

கூட்டம் கூடி, போக்குவரத்து நின்று, போலீஸ்காரர்கள் வராமல் அங்கிருந்து மீண்டு இரு நிமிட நடையில் மிஞ்சுகிற தன் அலுவலகத்தை அடைய முடியாத பிரபலமிது. கடந்த பத்திருபது ஆண்டுகளில் வேறெந்தத் தமிழ் நடிகனும் எத்தனை போட்டி போட்டாலும் தன் உயரத்தின் பாதியைக் கூட எட்ட முடியவில்லை
இப்போது ஒரு புன்னகை தன்னையும் மீறி எழுந்ததை உள் மனம் ரசித்தது.
தன் வழக்கமான அன்றாடங்களிலிருந்து இன்றாவது விடுவித்துக் கொள்ள வேண்டிய மனதின் விருப்பத்தை மௌனமாக ஏற்றுக் கொண்டான்.
தன் சொந்த நகரத்தின் நாலுகட்டு நாட்டு ஓடு வேய்ந்த வீடும், அதன் முற்றமும், அதன் நடுவிலிருந்த துளசி மாடமும், தங்கள் வீட்டு இரவுச் சாப்பாடும் நினைவிற்கு வந்தன.
இப்போதுதான் கவனித்தான், ஆறேழல்ல பத்திருபதுக்கு மேல் அணில்கள் அம்மாமரக் கிளைகளில் வியாபித்திருந்ததை. அப்படியேதான் தன் வீடுமிருந்தது ஒரு காலத்தில். அது தங்கள் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு தானே பூட்டிக் கொண்டது. பின் ஒரு காட்சிப் பொருளாகி விட்டது. இம்மாமரப் பச்சை மறைந்து மரம் பட்டுப் போனால், இந்த அணில்களும் இங்கிருந்து வெளியேறிவிடும். பிரிந்து எங்கெங்கோ போய் ஒட்டிக் கொள்ளும். உறவுகளும் நட்பும் அதன் பிரிவுகளும், மறைவுகளும் கூட இப்பிரபல்யத்தின் முன் ஒன்றுமில்லாததாகிவிடுகிறது.
சற்றுமுன் துளிர்த்த புன்னகை வற்றி வேறெதுவோ மனதை நிறைக்கிறது. தங்கள் வீட்டு பர்மா தேக்கிலான சாப்பாட்டு மேசை நினைவுக்கு வருகிறது. ஒரு நாளை நிறைவு செய்ததற்காக ஒவ்வொரு நாளும் நடக்கிற கொண்டாட்டத்தின் மைய மண்டபமது.
எப்போதுமே அக்காதான் உரையாடலைத் துவக்கி வைப்பாள். சொற்களின் அடுக்குகள் தீக்குச்சிகளாக எப்போதும் அவளிடமிருந்தன. ஆழ்ந்து யோசித்தால் அவை உரையாடல்களில்லை. கதைகள். கதைகள்கூட இல்லை. ஒரே ஒருவர் வாழ்விலிருந்து உறிஞ்சியெடுத்த கசப்புகள். கசப்பை ஏன் இவள் இப்படி ருசிக்கிறாள்!
அந்த வீட்டுச் சாப்பாட்டு மேசையில் இடப்படாத ஒரு நாற்காலியில் அக்காவின் மானசீகமான ஆர்.கே.வுக்கும் ஒரு இடமிருந்தது. சொல்லப்போனால் அக்கா தன் ஆதர்ச எழுத்தாளனுக்குப் போட்டிருந்த சிம்மாசனத்தைச் சுற்றி அவர்கள் எல்லோருமிருந்தனர்.
அங்கு நடப்பது எல்லாம் விநோதமாயிருக்கும். உணவு சாப்பாட்டு மேஜைக்கு வருவதற்கு முன்பே அன்றைய அக்காவின் கதை சொல்லல் சில சமயம் முடிந்திருக்கும். பரிமாறிய சாப்பாடு வாய்க்கு எட்டுவதை மறித்து சொற்கள் உதிரும். உணவு நிறைகையிலும் விவாதம் துவங்கும். சிறுசிறு சண்டைகளின்றி இரவுத் தூக்கம் ஏது?
பகலில் ஆர்.கே.யின் கதைபடிப்பதும், மாலைவரை அதைக் கூர்த்தீட்டுவதுமெனத் திரியும் அக்காவிற்கு இரவு உணவு யுத்தகளம். தன் மேதைமை இவ்விவாதங்களில் மெருகேறுவதை அவள் உணர்ந்து ஒவ்வொரு இரவுக்காகவும் தவமிருந்தாள்.
அப்பாவும், அண்ணனும் எப்போதுமே அவள் வார்த்தைகளை இடைமறிக்கிறவர்களாகவும், அண்ணியும் அவனும் அதை மௌனமாக பத்திரப்படுத்துகிறவர்களாவும் இருந்தார்கள். தான் மட்டுமெனக் கூடச் சொல்லலாம். அண்ணியின் மௌனம் எவராலும் அளவிட முடியாதது. அதுவரையிலான மொத்தத் தர்க்கத்தையும் சிதைக்க அவளுக்கு ஒரு வரியல்ல, ஒரு சொல் போதும். அவள் காக்கும் அமைதி எல்லோரையும் எப்போதும் ஒருவித எச்சரிக்கையிலேயே வைத்திருக்கும்.
அவனுக்கு வாசிப்பின் மீது கவனம் குவியாத காலமது. கேட்பது, பார்ப்பது, காட்சியாக்குவது. இது வரிசைமாறி வரிசைமாறி வரும், போகும்.

ஆனால் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இந்த முகம் தெரியாத ஆர்.கே எப்போதும் ந்த வீட்டின் உணவறையில் உட்கார்ந்து கொண்டு விவாதங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார். அது தறிகெட்டு ஓடுகிறது. அவை நிலைக்கு வருவதற்கு முன் இரவு தனக்குள் எல்லோரையும் அமிழ்த்திக் கொள்கிறது. இது தீராத நோய்மாதிரி வியாபித்துக் கொண்டது. சென்னைக்கு வந்து, முதல் ஆறேழு படங்களிலேயே உச்சத்திற்குப் போய் ஒரு நிமிடத் தனிமைக்கும் தவித்த ஒரு மழைக்கால இரவில் படப்பிடிப்பு ரத்தாகி இதைப்போல வாய்த்த ஒரு தனிமையில் தான் ஆர்.கே.வின் முதல் கதையை அவன் வாசித்தான். அத்தொகுப்பைப் படித்து முடிக்க அவனுக்கு ஒரு முழு வருடம் போதவில்லை. இப்போது விவாதங்களைத் துவக்க அக்கா வேண்டாம் அவனுக்கு. அவன் மட்டுமே போதும். அப்பாவும் அண்ணனும் தன்னிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிற்கிறார்களென அளவிட முடிந்ததும் அப்போதுதான்.
அக்கா தினம் தினம் அன்றைக்கான தீக்குச்சிகளை இச்சேமிப்பிலிருந்து தான் எறிந்திருக்கிறாள். அண்ணி தன் மௌனத்தால் அவற்றை மனதில் மட்டும் ஒத்திக் கொண்டிருந்திருக்கிறாள்.
இந்த நிதானத்தில், அணில்களின் குதூகலத்தில், ஒரு முற்றிய மாங்காய் உதிரல் சத்தத்தில் எல்லாமும் புரிகிறது.
வாழ்க்கை ஏன் தன்னை மட்டும் எடுத்தவுடனே உச்சிக்குக் கொண்டுபோய் இருத்தி வைத்து மற்ற எல்லாரையும் குனிந்து பார்க்க வைத்தது? வெறிபிடித்து வாசித்த அக்காவை எது அதை உதறவைத்தது? கேட்டு வளர்ந்த என்னை எது படிக்கத் தூண்டியது? எல்லாமும் எப்போதும் மாறுதலுக்குரியவை.
இப்போது சத்தம் போட்டு சிரிக்க முடிந்தது.
நாற்பது வருடங்களாய்ப் பார்க்கத் தோன்றாத ஆர்.கே.வை இன்று பார்க்கவேண்டுமென்று இதோ இந்த யாருமற்ற இத்தருணம் தள்ளிவிடுகிறது. அவரோடு பேச, விவாதிக்க, சண்டையிட, உச்சிமுகர இதுவரை அடைகாத்த கால ஓடுகள் உடைந்து சிதறுகிறது. அந்நினைவின் முடிவில் தி. நகரில் ஜெகதீஸ்வரன் தெருவில் சற்று உள்ளடங்கிய அவ்வீட்டின் முன் அவனின் ரேஞ்ச் ரோவர் கார் நின்றது.
வழிநெடுகிலும் அவனுடைய பல முகபாவங்களைக் கொண்ட பெரிய பெரிய பேனர்கள் அவனை இன்னும் கூடப் பரவசப்படுத்தியது.
காரிலிருந்து இறங்கி அத்தெருவைப் பார்த்தான். மக்கள் தங்கள் அன்றாடங்களில் கலந்திருந்தார்கள். ஒருவரும் தன்னைக் கவனிக்கவில்லை எனத் திரும்பினபோது எங்கிருந்தோ நாலைந்துபேர் ஓடி வந்து கைகுலுக்கினார்கள். எதிர் வீட்டிலிருந்து ஒரு பெண் கசங்கிய சுடிதாரோடு ஒரு ஆட்டோகிராப் வேண்டி நின்றாள். எல்லாம் ஒரு கணம்தான். இடைவெளியின்றி அவ்வீட்டின் பக்கவாட்டு மாடிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தான். தன் ஷூவின் சத்தம் தனித்து கேட்பதை உணர்ந்தான். இது தான் என்கிற பெருமிதத்தின் அடையாளம். என்னை கவனி, என் மீது குவி என்கிற பிரபல்யத்தின் அழைப்பு. நின்று தன் ஷூவைக் கழட்டினான். ஒரு கணம் அதை அங்கிருந்து அப்படியே வீசிவிடத் தோன்றியது. ஆனால் முடியவில்லை.
படி ஓரம் அவற்றைத் தனித்துவிட்டான். பொருட்படுத்தத் தக்கதாக அல்லாமல் இருபதுக்கும் மேல் செருப்புகள் அங்கு இறைந்து கிடந்தன. அவற்றை வைத்து உள்ளிருப்பவர்களை மதிப்பிட முயலும் தன் அறிவீனம் தனக்கே குமட்டியது.
சத்தமின்றி உள் நுழைந்தான். அது மொட்டை மாடியில் தென்னங்கீற்றுகள் வேய்ந்த ஒரு கொட்டகை. ஒரு வசதியான மரநாற்காலியில் ஆர்.கே. ஒழுங்கற்று கலைந்திருந்த எதிரில் அவனால் அந்தப் பொருட்படுத்தப்பட வேண்டியிராதவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
மிகுந்த பவ்யத்தோடு அவரை வணங்கினான். இந்த பவ்யம் தன் வாழ்வில் முதல்முறை.
அவரிடமிருந்த அலட்சியத்தை கவனித்தான். அல்லது தனக்கு முன்னால் இதுவரை நிகழ்ந்த குனிதல்களுக்கு முன் இது முதல் நிமிர்தல்.
உட்காருங்க என எதிரிலிருந்த ஒரு பழைய மர நாற்காலியைக் காண்பித்தார்.
அவர் முன் வியாபித்திருந்த மௌனத்தில் எல்லா வார்த்தைகளும் கொட்டியிருந்தன. அதில் ஒரு வார்த்தையையும் அவனால் தைரியமாகத் தொட முடியவில்லை. வெகுநேரத் தவிப்படங்கி,
நீங்க ஏன் இப்போதெல்லாம் எதுவும் எழுதுவதில்லை? வரிசையாக ஒட்டிக் கொண்ட வார்த்தைகள் வேர்த்திருந்தன.
எழுதினதே அதிகம்னு இப்ப தோணுது
லேசானதொரு வறட்டுச் சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டான்.
நான் உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்
அவர் இப்போதுதான் அவனை நேருக்கு நேர் பார்த்தார். பார்வை மிக சமீபத்திருந்தது.
வளர்ந்த பிறகுதான் வாசிக்க ஆரம்பித்தேன்.
யார் வளர்ந்த பிறகு?
மௌனத்தை இருவருமே அடைகாத்தனர்.
நீங்கள் உங்கள் காயத்ரியை ஒரு ரோல் மாடலாக்கி சமூகத்தின் முன் நிறுத்துகிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெறும் அதிர்வுகளுக்காக வேண்டுமென்றே புனைகிறீர்கள். காயத்ரி இல்லை என் முன்மாதிரி
அவன் பேசிக்கொண்டே போனான். அவர் அவனைத் தாண்டி தன் பார்வையால் தூரத்திலிருந்த ஒருவரிடம் நிலைத்திருந்தார். அவனும் விடாமல் அவர் முன் கொட்டிக் கொண்டேயிருந்தான். போதும் என நினைத்தபோது அவர் பேச ஆரம்பித்தார்.
எழுதியவற்றைப் பற்றிப் பேசுவதென்பது, பிணத்தின் தலைமுடியைக் கோதுவது மாதிரி. அதில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை
நீங்கள் எழுதினதிற்கு நீங்கள் பொறுப்பில்லையா?
அது அச்சுக்கு போனவுடனே நான் அதிலிருந்து என்னைத் துண்டித்துக் கொள்கிறேன். அப்புறம் அது உன்னை மாதிரி வாசகனோட பொறுப்பு
அப்போ சமூகத்திற்கு இலக்கியத்தின் பங்குதான் என்ன?
இதற்கெல்லாம் பதில் என்னிடம் இல்லை
இந்த வார்த்தைகளில் பல வருடச் சலிப்பிருந்தது.
சரி உங்கள் கதைகள் ஒரு சாமன்ய மனிதனை என்னதான் செய்துவிடும் என நினைக்கிறீர்கள்?
ஒரு மயிரும் செய்துடாதுன்னு நெனைக்கிறேன் என தன் இடது கையால் வளர்ந்து தொங்கின அவர் முடியைத் தள்ளிவிட்டுக் கொண்டார்.
அப்புறம் ஏன் சார் எழுதுறீங்க?
எதுக்கோ எழுதறேன். உன்னை யார் படிக்கச் சொன்னது. அதோட மட்டும் நிக்காம எழுதனவனைத் தேடிவந்து இப்படி சீண்டறது மனிதகுல அநாகரிகம்
அவன் விக்கித்துப்போனான். எதிரில் மீதமிருந்த வார்த்தைகளும் உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்துவிட்டன.
கண்ணாடி டம்ளர்களில் எல்லோருக்கும் டீ வந்தது. அவர் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனுக்குக் கை காட்டினார்.
டீ கொண்டு வந்த பையனைத் தொடர்ந்து மிகுந்த அழகோடும், கம்பீரத்தோடும் இன்னொருவர் உள் நுழைந்தார்.
வாங்க பி.எஸ்.? என மிகுந்த வாஞ்சையோடு அவரை அழைத்து தன் பக்கத்தில் இருத்திக்கொண்டார். இவனைப் பார்த்து அவர் ஒரு துளியும் பரவசப்பட்டது மாதிரி தெரியவில்லை. ஆனால் அவன் எழுந்து நின்று கொண்டான்.
இவர் என் நாற்பதாண்டுகால நண்பர். பெயர் பி.எஸ்

அந்த நண்பர் மிக மென்மையாகக் கைகுலுக்கினார்.
நீங்க பேசிக்கிட்டிருங்கஎன தூரத்தில் கிடந்த இன்னொரு நாற்காலிக்குப் போனார். நடப்பவை எல்லாமும் இதற்கு முன் அவன் பார்த்திராதது.
எனக்கு தமிழ்நாடு முழுக்க இரண்டாயிரத்திற்கும் மேல் நற்பணி இயக்கங்கள் உண்டு
ரசிகர் மன்றங்களா? அலட்சியத்தின் வெளிபாடாக வார்த்தைகள் தெறித்தன
வேறு வழியில்லை. நானும் அவற்றை அப்படித்தான் அழைக்க வேண்டியுள்ளது. ஆனால் அதை நான் மேம்படுத்த, இன்னும் அடுத்த தளத்திற்குக் கொண்டுபோக முயற்சி செய்கிறேன்
செய்ங்க உதாசீனத்தின் தொடர்ச்சி
அவங்கள வாசிப்பாளர்களா, சமூகத்துக்கு ஏதாவது செய்யக் கூடியவங்களா...
நல்லது
அதுக்கு உங்க உதவி வேணும்.
நான் என்ன செய்ய முடியும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?
ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல. நாங்க நடத்துற மாநில மாநாட்டுல நீங்க வந்து பேசணும்
சாரி, இப்படி ரசிகர் மன்றத்துலெல்லாம் வந்து பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பல
இல்ல நீங்க அப்படி ஒதுக்கக் கூடாது. ரசிகர் மன்றம்றதுல வெறும் கேவலமில்லை, அதிலேயும் படிப்பாளிகள், படைப்பாளிகள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் எல்லாமும் இருக்காங்க
அவனுங்ககிட்ட போய் நான் என்ன பேசிடப் போறேன், நான் எட்டாவது கூடத் தாண்டல
உரையாடலின் உக்கிரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேறினான்.
நீங்க இப்படி மறுத்தா நான் எப்படி சார் அவங்களை வேற தளத்துக்கு எடுத்துக்கிட்டுப் போறது. அப்படியே அங்கேயே விட்டுடட்டா எனக் கொஞ்சம் குரலை உயர்த்தினான்.
அவனே எதிர்பாராததொரு தருணத்தில், வர்றேன், என்னைக்கு? எனக் கேட்டார்.
நீங்க என்னைக்குச் சொன்னாலும் அன்னைக்கு எனப் பரவசப்பட்டான்.
டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாளில், எந்த இடத்துல?
நான் கன்பர்ம் பண்ணி சொல்றேன் சார். ரொம்ப நன்றி எனக் கைக்கூப்பி எழுந்தவனை மீண்டும் கையமர்த்தி உட்காரச் சொன்னார்.


இப்போது சுற்றிலிருந்த அந்த பைப் மூன்றாவது முறையாக அவரிடம் வந்தது. ஆழ்ந்து ஒருமுறை இழுத்துவிட்டுத் தந்ததை பவ்யமாகப் பெற்றுக் கொள்ள இரு கரங்கள் நீண்டு காத்திருந்தன.
இவன் விடைபெறும் போது அந்த அறையில் இருந்த ஒருவர் பாட ஆரம்பித்தார். அதன் பின்னணி மாதிரி அங்கெழுந்த சிறு புகைமூட்டம் பரவியிருந்தது.
உதிப்பதுமில்லை மரிப்பதுமில்லை ஒளிரும் சூரியன்
வளர்வதுமில்லை தேய்வதுமில்லை சிரிக்கும் சந்திரன்.
வாழ்க்கை ஒரு தோற்றம், நொடிதோறும் பல மாற்றம்
படித்ததுமில்லை, பரீட்சையுமில்லை எனது ஜாதகம்
சுயபலம் உண்டு, பிறபலமில்லை கவிதை ஜீவிதம்
படியிறங்கும்போது அவன் உதடுகள் கவிதை ஜீவிதம்... என முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அது ஒரு தனியார் பள்ளியின் விசாலமான மைதானம். மேடை அலங்கரிப்பின் ஒவ்வொரு இடத்திலும் திட்டமிடலும் கவனமும் குவிந்திருந்தது. அவனின் பத்துநாள் படப்பிடிப்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில கோடிகள் பற்றுப் பக்கத்திற்கு நகர்ந்தன. எல்லாவற்றிலும் இறுதிமுடிவு அவனுடையதாயிருந்தது. மேடையில் மூன்று நாற்காலிகள் மட்டும்தான் என்பதுவரை.
ஒன்று அவருக்கு,
இன்னொன்று தனக்கு
மூன்றாவது நற்பணி இயக்க மாநிலத் தலைவருக்கு.
வண்டி அனுப்பட்டுமா சார்?
வேணாம், சரியா ஆறறைக்கு நண்பரோட காருல வந்துடுவேன்
அப்படியே ஆறு முப்பத்தைந்துக்கு அந்த கார் மைதானத்திற்குள் நிதானமாய் நுழைந்தது.
      மேடையின் முன்பக்கத்திலிருந்து ஓடிப்போய் முன்கதவைத் திறந்து அவருடன் கைகுலுக்கி, அங்கேயே ஒரு சால்வை போர்த்தி, பெரும் ஆரவாரச் சத்தத்திற்கிடையே அவரை கம்பீரமாய் அழைத்து வந்தான். நூற்றுக்கணக்கான கேமராக்கள் போட்டிபோட்டு மின்னின.
மேடையில் நின்று வணங்கினார். அருகில் நின்று அவன் எல்லோரையும் உட்காரச் சொல்லிக் கையமர்த்தினான். கொஞ்சமும் இடைவெளியின்றி இயக்கத் தலைவர் தன் உரையை ஆரம்பித்தார்.
நம் தலைவர் எத்தனை மகத்தானவர் பாருங்கள். அவரே புகழின் உச்சியில் உள்ள ஒரு நடிகர். ஆனால் தன் ஆதர்சன எழுத்தாளனை நமக்காக அழைத்துவந்து அவர் ஒரு பணியாள் மாதிரி இதற்காக உழைத்து... வார்த்தைகள் தடுமாறி தடுமாறி வந்தன. ஏற்கனவே கேட்டிருந்த அறிவுரைகளின் பலம் கூடி, மொத்தக் கூட்டமும் அமைதி காத்தது. ஒரு விசில் சத்தமும், அது எழும் இடத்தைக் காட்டி கொடுத்துவிடும் அமைதியது.
      ஆர்.கே. தன் கால் மேல் கால் போட்டு அந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அருகில் முகத்தில் சந்தோஷமும், பரவசமும் , பெருமிதமுமாக அவனிருந்தான்.
காலை எடுடா என ஒரு ஆவேசக் கத்தல் கூட்டத்திலிருந்து எழுந்துவந்தது.
பேச்சறுந்து விழுந்தது. துடித்தெழுந்து அவன் மைக் முன்னால் நின்றான். அந்தக் குரல் வந்த திசைநோக்கி, தன் கையமர்த்தி கால்களை அகற்றிக் கொண்டார் அவர். எல்லாமும் நிகழ்ந்து முடிய ஓரிரு நிமிடங்கள் கூடத் தேவைப்படவில்லை. மிகப் பதட்டத்துடன் அவன் பேச ஆரம்பித்தான்.
எது நடக்கக்கூடாதுன்னு நான் நெனெச்சேனோ அது நடந்துடுச்சி. ரசிகர் மன்றம்னா அது தேட் ரேட்டேட் ஆட்களோட கூட்டம்னு அவர் பிடிவாதமா வர மறுத்தாரு. நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். நாங்க அப்படித்தான்டான்னு நீங்க காட்டிட்டீங்க
அய்யோ நான் கேட்டு, படிச்சி, வளந்த ஒரு ஜெயிண்ட்டை இப்படி அவமானப்படுத்திட்டீங்களேடா, இன்னும் அஞ்சு நிமிஷத்துல அப்படி கத்தின ஆள் இந்த மேடைக்கு வரணும். உங்க எல்லார் முன்னாலும் சார் காலுல விழுந்து மன்னிப்பு  கேக்கணும். அப்பதான் இந்தக் கூட்டம் நடக்கும் என பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் எழுந்த சிறு சலசலப்பு கேட்டுத் திரும்பினான்.
கசங்கிய வெள்ளைச் சட்டையுடன் ஒரு ஆள் தரையில் உட்கார வைக்கப்பட்டான். உதட்டோரம் லேசான ரத்தக் கசிவு தெரிந்தது. அடித்திருப்பார்கள் போலும். அவனைச் சுற்றிலும் ஆறேழு பேர் நின்றிருந்தார்கள்.
மொதல்ல நீங்க எல்லாரும் கீழ எறங்குங்க
அவரை அவமானப்படுத்திய அந்த ஆள் இப்போ இந்த மேடையில் இருக்கான். இப்போ நம் எல்லோர் முன்னிலையிலும்...
அவன் பேசிக் கொண்டிருக்கையில், கீழே உட்கார்ந்திருந்தவன் தாவி அவர் முன்னால் டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட்மைக்கை எடுத்தான். அது தவறி விழுந்தது. அநியாயத்திற்கு அவன் கைகளும் வார்த்தைகளும் நடுங்கின.
‘‘அதுஎங்காலு, அதுஎங்காலு’’
போதைக்கும் பித்துக்குமான இடைவெளியில் அவன் குரலுயர்த்திக் கத்தினான். மொத்தக் கூட்டத்தையும் ஒரு மீட்பரின் குரலைப் போல அவன் குரல் ஈர்த்தது. அவன் டீப்பாயில் தலை சாய்த்து, மேடையின் தரையில் கிட்டத் தட்ட ஒரு வளையம்  போல வளைந்து விசித்திரமாய் உட்கார்ந்திருந்தான். தன் இரு சூம்பிய கால்களையும் பக்கவாட்டில் வைத்திருந்தான்.

அவன் இன்னும் எதையோ பேச முயல்கையில் மேடையில் நின்றிருந்தவன் அதைத் தடுக்க முயன்று அவரைத் திரும்பிப் பார்த்தான். அவர் மிக இயல்பாய் கால்மேல் கால் போட்டு முன்னிலும் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.


- ஓவியங்கள்:  கோபி
நன்றி: உயிரெழுத்து செப்டம்பர் இதழ்