Thursday, October 3, 2013

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒரே குளத்தில் நீரருந்தும்

‘முகமூடி’யின் தோல்விக்குப்பின் சற்று மௌனத்திலிருந்த மிஷ்கின், உடன் அதிலிருந்து மீண்டு என்னுடனான தொடர் உரையாடலில் இரண்டு மூன்று கதைகருக்களையும், தலைப்புகளையும் விவாதித்தோம்.
 இருவருக்குமே மிகப்பிடித்தமான தலைப்பாக ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ அமைந்தது.
தன் அலுவலகத்திலேயே நடந்த அப்படத்தின் துவக்க விழாவிற்கு பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது, எஸ்.கே.பி. கருணா, என் நண்பர் ஜே.பி. இவர்களோடு நான் என நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தோம். கமீலா நாசர், இயக்குனர் சேரனின் மனைவி ஆகியோரும் எங்களுடனிருந்து குத்து விளக்கேற்றினார்கள். அப்படத் துவக்க விழாவில் என் நண்பனும் போதகருமான ஜே.பி.தான், திருவிவிலியத்திலிருந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குட்டையில் நீரருந்தும்’ என்ற இவ்வாக்கியத்தைப் பகிர்ந்தான்.
அதன்பிறகான தொடர் படப்பிடிப்பும், Post Production-ம் நடந்த இந்த நான்கு மாதங்களின் ஒவ்வொரு நாளும் எனக்குத் தெரியும். இடையில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களை தன் ஷீக்கால்களுக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டு எழுந்து நின்றான் இக்கலைஞன். புறச்சூழல்கள் எதுவும் தன் படைப்பு மனநிலையை சிதைக்க அவன் அனுமதித்ததேயில்லை. தாள முடியாத துயரத்தை இசை கேட்டும், வாசித்தும், தனித்திருந்தும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிகழ்த்துதலையும் ஒரு படைப்பாகவே கருதினான். இப்படத்தின் வணிக வெற்றி, அதன் மூலமான பணவருகை எதுவும் மிஷ்கினின் நினைவுகளில் நிழலாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு மிஷ்கினிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  ‘பவா இன்னும் இன்றைய படப்பிடிப்பு முடிவடையவில்லை. இரவு பத்து மணிக்கு எனக்கு ஸ்ரீ ஆப்ரேஷன் செய்யும் அந்த காட்சியைப் படமாக்கினோம். அத்தனை விளக்கொளியில், இருபதுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் முன் ஐந்து மணிநேரம் நிர்வாணமாகக் கிடந்தேன். ஒரு மாதிரியான Madness, எந்த Concious-ம் எனக்கு இல்லை என்பதுமட்டுமல்ல. என் சக கலைஞருக்கும் இல்லை’  களைப்பை மீறி குரலில் உற்சாகம் மேலேறியிருந்தது.
எனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ளது என்பதை அறிந்த அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் என்னுடன் எங்கள் நிலத்தின் வரப்பில் சுற்றிக் கொண்டிருந்தபோது திரும்பி, என்னிடம் பேசினார்.
இப்படத்தில் பத்து பேரையாவது நான் கொன்றிருப்பேன். ஆனால் ஒரு கையில் துப்பாக்கியும், தோளில் தங்கையையும் அம்மாவையும் சுமந்து கொண்டு படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பெரும் கார் பார்க்கிங்கிற்குள் நுழையும் காட்சியில்  எதிர்பாராமல் ஒரு வாட்ச்மேன் என்னெதிரே நிற்பான். அவன் கண்களில் தோன்றும் சந்தேகம் என்னில் ஊடுருவும். நான் அவ்வயதான அப்பனை ஏறெடுப்பேன். அவர் தன் கண்களாலேயே,
‘‘என்னடா எங்க போற’’ என விசாரிப்பார். பத்துபேரை சுட்டுத்தள்ளிய நான் அவர் முன் தலைக் கவிழ்த்து நிற்பேன். எங்கள் இருவருக்குமான மௌனம் கேட்டைத் திறந்து என்னை உள்ளே அமைதிக்கும். இருவருக்குமிடையே இரு வசனங்களை வைத்துவிட்டு பிறகு நீக்கினேன். இளையராஜாவிடம், ‘‘இந்த வசனங்களை எடுத்தர்றேம்பா, இசையால் நீ அதை நிரப்பு’’ என்றேன்.
‘‘டேய் கொன்னுடுவேன் படத்திலேயே மொத்தம் ரெண்டு பக்கம் வசனம்கூட இல்லை. அதையும் எடுத்துட்டா மியூசிக் போட சொல்ற?’’ என செல்லமாக முதுகில் தட்டினார். மகத்தான கலைஞர்களின் கோபமும், செல்லமும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்யம். நேரில் பார்ப்பவர்களும், கேட்வர்களும் கூட பாக்யவான்கள். நான் கேட்டேன். தன்னை எதுவுமற்றவனாக்கி ராஜா என்ற இசைமேதையின் கையில் ஒப்படைத்து அவர் பின்னால் ஒரு பார்வையற்ற மனிதனாய் படம் முழுக்க நடந்து போகிறார் மிஷ்கின்.
இத்தனை அனுபவங்களோடும், பட ரிலீஸ் அன்று ஏற்பட்ட பல்வேறு மன, பண நெருக்கடிகளிலும் நசுங்கி அன்று மாலை திருவண்ணாமலையின் ஒரு மோசமான தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். போனேனில்லை. போனோம். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். படம் துவங்கிய பத்து நிமிடங்களிலேயே, நாங்கள் வேறொரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். உடலில் படிந்திருந்த சராசரி தமிழ் சினிமா சனியன்களை ஒரு கலைஞன் தன் முத்தங்களால் துடைத்தெறிந்து இன்னொரு அனுபவத்திற்கு எங்களை அழைத்துப் போகிறான் என அறியமுடிந்தது.

மருந்துவக் கல்லூரியின் பேராசிரியருக்கு தொலைபேசி அழைப்புவரும்போது அவர் அப்பாவின் பிணத்துடன் ஒரு பின்னிரவில் விழித்திருக்கும் காட்சி செய்நேர்த்தியின் உச்சம். அவர் மறுப்பது, அவனை எச்சரிப்பது பின் தன் அப்பாவின் உயிரற்ற முகத்தைப்பார்ப்பது, மீண்டும் தன் மாணவனை அழைப்பது. யாராலும் கணிக்க முடியாத மனித மனதின் அல்லாடல்கள் அவை. லேசில் யாராலும் தொட்டுவிடக் கூடியதல்ல இதன் உயரம்.
என் சில நண்பர்கள் படத்தில் நிறைய Logic மீறல்கள் உள்ளன என்றார்கள்.
மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு மாணவன் எப்படி இத்தனை பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும்? Wolf எப்படி அது முடிந்த ஏழெட்டு மணி நேரத்தில் தப்பிக்க முடியும்? அதன் பிறகு இத்தனை கொலைகளை திட்டமிட்டு செய்ய முடியும்?
என் நண்பன் கற்றது தமிழ் ராம்தான் இக்கேள்விகளுக்கான விடைகளை தொலைபேசியிலும் நேரிலும் பகிர்ந்தான்.
அண்ணா உங்க ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையில் எப்படி ஒரு பச்சை மல்லாட்டையிலிருந்து ஒரு இளவரசி வருகிறாள்?
என்னிடம் பதிலில்லை.
இம்முழுப்படமுமே எதார்த்த மீறல்தான். மட்டுமல்ல, மிஷ்கினின் கதைமாந்தர்கள் எல்லோருமே உதிரி மனிதர்கள்.  ‘அஞ்சாதே’ வில் குருவி, நொண்டி,  ‘நந்தலாலா’ வில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே உதிரிகள். சராசரி சமூகம் கவனிக்க தவறியதை ஒரு கலைஞன் கவனிக்கிறான். தன் படைப்பில் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தருகிறான்.
ஸ்ரீ, மிஷ்கினை சுமந்துத் திரியும் காட்சிகளில் யாருமே அவனுக்கு உதவ முன் வராதபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் அவனைத் தாங்கிப் பிடிக்கிறான். அவனுக்கு ஸ்ரீ தன் பர்சில் இருந்து ஒரு நூறுரூபாயை எடுத்துத் தருவான். பெரும் சிரிப்பினூடே அதை தூக்கி தன் பின்பக்கமாக எறிவான். இது எப்பேர்பட்ட காட்சி சித்தரிப்பு. என் நண்பர் எஸ்.கே.பி.கருணா ஒரு கோவில் திருவிழாவில் தன் தங்கையின் ஒரே மகனை தவறவிட்டுவிடுகிறார். ஒரு மணிநேர அலைக்கழிப்புகளுப்புக்குப் பின் ஒரு கழைக் கூத்தாடியின் அரவணைப்பில் குழந்தையைக் கண்டடைகிறார்.
குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து, கண்களில் நீர் கட்டி தன் பர்சை எடுத்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் முன்னால் நீட்டுகிறார். அவன் அதை தன் பீச்சாங்கையால் தள்ளி விடுகிறான். மிஷ்கினை தாங்கி நிற்பது ஒரு உதிரிமனிதனின் உரமேறிய கைகளில்லை. அது இச்சமூகத்தை தாங்கி நிற்கும் கரங்கள், அதை எப்போதுமே கவனிக்கத் தவறிய நம்மைப்பார்த்துதான் அவர்கள் குரூரமாக சிரிப்பதும். நாம் கொடுக்கும் பணத்தை பீச்சாங்கையால் நிராகரிப்பதும்.
இப்படியான உதிரிகள் இப்படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பார்வையற்றவர்கள், திருநங்கை, ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனான ஸ்ரீயே தன் கழிப்பறையில் மறைந்து வைத்து போதை ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு உதிரி மாணவன்தான். மிஷ்கின் கூலிக்கு கொலைசெய்யும், சமூகத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு பெரும் உதிரிதான். இப்படிபட்ட மனிதர்களின் நேயம் நம்மை சில்லிட வைக்கிறது. சிலரை முகம் சுளிக்க வைக்கிறது.
 ‘மூன்று உயிரைக் காப்பாற்ற பத்து உயிரை பலிகொடுக்க வேண்டுமா?’
நிதானமாக யோசித்தால் நாம், அல்லது நம் குடும்பம் வாழ நாம் தினம் தினம் எத்தைன மனிதர்களை, சமூக விழுமியங்களை, நம் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கிறோம். துரோகங்கள், மறைந்து வைக்கப்பட்ட குரோதங்கள், பத்திரப்படுத்தப்பட்ட அநீதிகள் இவைகளை மறைந்துக் கொண்டுதான் ஜீன்ஸ் பேண்டும் வெள்ளைச் சட்டையுமாய் உலாவுகிறோம்.
ஒரு தேசத்தின் தலைநகரில் முன்னிரவில் ஒரு ஓடும் பேருந்தில் எல்லோரையும் இறக்கிவிட்டு, ஆறு பேர், ஒரு மருத்துவகல்லூரி மாணவியை சுற்றி சுற்றி பாலியல் வல்லூறு செய்ததும், அவளை மிகக் குரூரமாக சிதைத்து போட்டதும் வன்முறை இல்லையெனில், இப்படத்தில் நிகழும் கொலைகள் வன்முறையற்றதுதான்.
கூலிக்குக் கொலைசெய்யும் ஒரு தவறுதல்தானே படம். மிஷ்கின் படம் நெடுகிலும் ஒரு கொலையைக் கூட அநாவசியமாக செய்யமாட்டார். ஒரு இன்ஸ்பெக்டரை தன்னருகே வரவழைத்து முட்டியில் சுடுவார். எல்லா வாய்ப்புகளிருந்தும் ஒரு செக்யூரிட்டியை பார்வையால் கெஞ்சிக் கடந்துபோவார். அவர் கொல்லவதெல்லாம் கூலிப்படையின் சகாக்களைத்தான். அவர்கள் வாழத் தகுதியானவர்கள்தான் என நாம் தீர்ப்புரைப்போமேயானால், நாம் மனதளவில் அவர்களாக இருக்கிறோம் என அர்த்தம்.

இப்படத்தில் நடக்கும் மற்ற கொலைகள் கூலிப்படைத் தலைவனால் அவன் ஆட்களை வைத்து நிறைவேற்றப்படுவது. விசாரணைகளற்ற, கருணையற்ற அவர்கள் உலகில் மனித உயிர்கள் வெறும் அற்பம். கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த கூலிப்படைக் கொலைகளின் எண்ணிக்கையை நாம் இக்கலைப்படைப்போடு கவனப்படுத்த வேண்டியுள்ளது.
அக்கல்லறையில் முட்டிப்போட்டு மிஷ்கின் கண்ணிமைக்காமல் கதை சொல்லும் காட்சி படைப்பின் உச்சம். உடல் மொழியில் பாதியும், கண்களில் மீதியையும் ஒளித்துவைத்து வார்த்தைகளை மிச்சப்படுத்துகிறார். இதன் வசன ஒளிப்பதிவின் போது பலமுறை மிஷ்கினால் பேசமுடியாமல் திணறி வெறியேறியதை நண்பர்கள் சொன்னார்கள்.
இப்படத்தில் என் நண்பர்கள் ஷாஜி, ஷௌகத், என் நண்பரின் மகள் சைதன்யா (ஏழு வயது மொழிபெயர்ப்பாளர்) எல்லோரும் ஆத்மார்த்தமாய் கலந்திருக்கிறார்கள். நண்பன் புவனேஷ் மிஷ்கினைப் பின்னாலிருந்து தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பது திரையை மீறி யூகிக்க முடிகிறது.
படம் பார்த்து முடித்து மூன்று நாட்கள் நான் மிஷ்கினோடு எதுவும் பேசவில்லை. பேசமுடியவில்லை. அவ்வனுபவத்தை முற்றிலும் என்னுள் அடைகாத்தேன். முட்டைகளின் கதகதப்புக்கு வேண்டி தாய் கோழி கூடையை விட்டகலாது. சந்திக்கும் தருணம்  வெகு அருகிலிருந்தும் தவிர்த்தேன். எனக்காக இரவு பதினோரு மணி வரை சாப்பிடாமல் மிஷ்கின் காத்திருந்தும் அவர் அலுவலகத்தைத் திரும்பிப் பார்க்காமல் கடந்தேன். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாததொரு தவிப்பில் மிஷ்கின் என்னை தொலைபேசியில் அழைத்து,
‘‘பவா என்ன கோபமுன்னாலும், என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு, தாங்கிக்கிறேன் பேசாம மட்டும் இருந்திராத எனக்கு கேன்சர் அட்டாக் ஆனதுமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது’’  என்றார்.

மிஷ்கின், என் இனிய நண்பனே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை படைப்பின் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞனைப் பார்க்க திராணியற்ற ஒரு எளிய மனிதனின் ஓடி ஒளிந்து கொள்ளும் தற்காலிக விலகல் அது. 

31 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. முதல் காட்சி முதலே இயக்குனராய் தனது படத்தை மிஸ்கின் ஆக்கிரமித்துக்கொள்கிறார்.
  https://plus.google.com/100702077403469732226/posts

  ReplyDelete
 3. வாஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. கற்சுறாOctober 3, 2013 at 8:24 AM

  பவா... நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் நந்தலாலாவுடன் நான் அந்தக்கலைஞனிடம் ஒன்றுகலந்தேன்.

  ReplyDelete
 5. அருமை, திரு. பவா செல்லதுரை அவர்களே!!

  ReplyDelete
 6. அழகு!

  ...அப்படியெல்லாம் ஒன்றுமில்லை படைப்பின் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞனைப் பார்க்க திராணியற்ற ஒரு எளிய மனிதனின் ஓடி ஒளிந்து கொள்ளும் தற்காலிக விலகல் அது...

  ReplyDelete
 7. என்ன சொல்ல பவா.. இவ்வளவு அருமையாய் படத்தை பகிரமுடிந்த நீர்,பாக்கியசாலி...Mishkin the great Mishkin...

  ReplyDelete
 8. padathai patri konjam athigama ezhuthitingalonu thonuthu anna...

  ReplyDelete
 9. worth watching Thriller in tamil!!! Great come back from Mishkin

  ReplyDelete
 10. சமூக பாவங்கள் ஏழு :

  கொள்கையற்ற அரசியல்
  உழைத்து பெறாத செல்வம்
  அறமற்ற வணிகம்
  மனசாட்சிஇல்லாத மகிழ்ச்சி
  ஒழுக்கத்தை தராத கல்வி
  மனித தன்மையற்ற அறிவியல்
  தியாகமற்ற வழிபாடு

  மேலும்

  மிஷ்கினின் இந்த படைப்பு தோல்வி அடைந்தால் ....

  அன்புடன்
  சுரேஷ்

  ReplyDelete
 11. மிகச் சரியான பதிவு. ஆனால் எனக்கென்னவோ மிஷ்கினை நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் போதவில்லை என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 12. திரு.பவா அவர்களே,

  கனிவும் நட்பும் பெருமையும் வழியும் உங்கள் மொழி படிக்க ருசியாக இருக்கிறது.

  ஆனால் ஒரு படத்தை எடுப்பதற்கு ஒருவர் மெனக்கிட்டார் என்பது அப்படத்தின் தரத்தை உயர்த்தும் எனில் அப்படம் உலகமகாப் படமாகும் எனில் தமிழில் மட்டும் அல்ல எம்மொழியில் எடுக்கப்படும் எந்த மூன்றாந்தரப்படமும் தலைசிறந்தபடமே ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போல.

  உதிரிகளை ஒரு படத்தில் இடம்பெறச் செய்தால் படம் உலகப்படம் ஆகிவிடும் என்கிற தந்திரத்தை,முட்டாள் தனத்தை உங்கள் நண்பர்தான் நம்புகிறார் என்றால் எழுத்தாளர் நீங்களுமா நம்புகிறீர்கள்? கையில் பணமிருப்பவன் பிச்சைக்காரனுக்கு இனாம் அல்லது பிச்சை தருவது என்பது மனிதாபிமானமல்ல, அது அந்த பணம்படைத்தவனின் அச்சம் என்று கூட அறியாத எழுத்தாளாரா நீங்கள்?

  தன்னுடையக் கதையில் உதிரிகளுக்கு இடம் தரும் மிஷ்கினின் செயலும் பிச்சை இடும் பணக்காரனின் செயலும் ஒன்றுபோல்தான் தோன்றுகிறது. மிஷ்கின் உதிரிகளை ஊறுகாய் போல் பயன்படுத்தும் ஒரு சினிமா போதைக்காரர். உதிரிகளைப் பற்றிய படம் ஒன்றை அவரை முழுமையாக எடுக்கச் சொல்லுங்கள்.

  போலிஸ்காரரை காலில் தானே சுட்டார், அப்பா என்ன மனித நேயம்,,, ரொளடிகளினுடைய வியாபாரத்தின் முதலாளிகள் போலிஸ் என்பதைக் கூடவா உங்கள் தமுஎச உங்களுக்குச் சொல்லித் தரவில்லை?

  அவர் தப்பிப்போவது உங்களுக்கு மாந்தீரிக எதார்த்த புனைவாகவே இருந்து தொலைக்கட்டும். தர்க்க மீறல்களுக்கு நீங்கள் அப்படியே பெயர் வைத்துக் கொள்ளுங்கள். தமிழில் எடுத்து எடுத்து தேய்த்த தளபதி காலத்து அதே கதையை இரண்டு மெழுகுவர்த்திக்கு நடுவில் சொல்லி முடிக்கும் போது இதுதானா? ச்சேய் இதற்குத்தானா இத்தனையும் என்று சாதாரணமாக சினிமா பார்க்கும் எவனும் சொல்லிவிடுவான் என்பது கூட எப்படி மறந்தது. ஒருதலை ராகத்தில் சந்திரசேகர் சொல்லும் கதையை விட தாழ்ந்த தரத்தில் ஒரு கதை.இதையா உலகமகாபகாலகாதகா என்கிறீர்கள்?

  உங்கள் நண்பரை நீங்கள் பாராட்டுவதும் அவர் உங்களுக்கு முத்தம் தருவதும் எங்களுக்கு ஆனந்தமே, ஆனால் இதையெல்லாம் திரைப்பட விமர்சனம் என்று எழுதாதீர்கள்.

  மன்னனை அணுகி பரிசில் பெறும் புலவர் போல் எழுதாதீர்கள். நீங்கள் எழுத்தாளர் என்ற நிலையிலிருந்தி வழுகும் போது உங்கள் வாசகனாய் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

  பவாசெல்லத்துரை, துரைமாராய் ஆனிரோ? துதிபாடும் பெரும்புலவர் ஆனிரோ? நியாயமாரே!

  ReplyDelete
 13. ”உடலில் படிந்திருந்த சராசரி தமிழ் சினிமா சனியன்களை ஒரு கலைஞன் தன் முத்தங்களால் துடைத்தெறிந்து இன்னொரு அனுபவத்திற்கு எங்களை அழைத்துப் போகிறான் என அறியமுடிந்தது.”

  திரு பவா அவர்களே, யார் அந்த சனியன்கள், உங்களை அப்படி வெறுப்பேற்றிய அந்த சனியன்களை, குறைந்தப் பட்சம் இந்த ஒரு ஆறு மாத காலத்தில் உங்களை இப்படிக் கோபப்படுத்திய அந்த சனியன்களை தைரியம் இருந்தால் சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்துகொள்கிறோம் நீங்கள் படங்கள் பார்க்கிறீர்களா அல்லது சனியன்களை மட்டும் பார்க்கீறீர்களா என்று?

  ReplyDelete
  Replies
  1. அடையாளம் அற்ற உங்களுக்கு,
   தாமதமாகத்தான் எழுத முடிகிறது. உங்களை போன்று அடையாளத்தை மறைத்துக்கொண்டும். நீங்கள் விமர்சிக்க நினைக்கும் இன்னொருவரை ஏதேதோ பெயர் சொல்லி அடையாளப்படுத்த முயல்வதையும் இச்சமூகம் எப்போதும் மூன்றாம் இடத்தில் கூட வைத்துப்பார்க்காது. அது தேட் ரேட்டர்டு ரைட்டிங். கிராமங்களில் மொட்டை பெட்டிஷன் எழுதுபவனின் இணைய நீட்சி இது. வேசிகள், பிக்பாக்கெட்காரர்கள், ரவுடிகள் இவர்களுக்கு அடுத்த நிலையில் கூட எப்போதும் இவர்களுக்கு இடமிருந்ததில்லை. அதனால் தான் நான் என்னைப்பற்றி இப்படி ஊர் பேர் தெரியாமல் வரும் வதந்திகளை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
   ஆனால் என் வலைப்பக்கத்தில் உங்களை அனுமதித்ததற்கு காரணம் இப்படி ஒரு வக்ரம் உங்களுக்கோ அல்லது உங்களை எழுத வைத்தவர்களுக்கோ உண்டு என்பதை என் வாசகர்கள் அறியவேண்டுமென்பதற்காகத்தான்.
   மிஷ்கின் என் நண்பன். என் நண்பனின் மகத்தான ஒரு படைப்பு வந்திருக்கும் போது நான் அவனுடன் மிக நெருக்கமாக கைக்குலுக்கிக் கொள்கிறேன், கட்டித்தழுவிக்கொள்கிறேன். இப்பதிவு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மீதான என் விமர்சனமல்ல. அதை பக்கம் பக்கமாய் எழுத தமிழில் நூறு பேர் திறந்த பேனாவோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலாவின் ‘நான்கடவுள்’ வெளிவந்த போதும் இதே போல் ஒரு பதிவை நான் எழுதி அது பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
   நீங்கள், உங்கள் நண்பனோ, மகனோ, மகளோ ஒரு சாதனையை நிகழ்த்தும்போது கட்டியணைத்து உச்சிமுகர்ந்ததில்லையா? அப்படிப்பட்ட மனநிலைதான் இது உங்களுக்கு இப்படத்தில் மாறுப்பட்ட கருத்து உண்டெனில் அது வரவேற்கத்தக்கதுதான். அதை நீங்கள் தான் பகிரவேண்டும். அதற்கு வக்கில்லையெனில் (நன்றி சு.ரா.) மௌனம் காக்க வேண்டும். என் எழுத்தை, என் கருத்தை, என் வாழ்வை ஒரு போதும் நீங்கள் தீர்மானிக்கவோ, வாழவோ முடியாது.
   எனக்கு கடந்த 30 வருடங்களாய் தமிழ் சினிமாவோடு நெருங்கிய தொடர்புண்டு. பாரதி ராஜா, பாலுமகேந்திராவில் தொடங்கி எடிட்டர் லெனின், எஸ்.பி. ஜனநாதன், லிங்குசாமி, சேரன், பாலா, பி,சி,ஸ்ரீராம், கற்றது தமிழ் ராம், மிஷ்கின் வரை அது நீண்டுக்கொண்டேதான் இருக்கிறது. இவர்களிடம் ஒரு போதும் வாய்ப்புக்கோட்டோ வேறு எதையோ எதிர்பார்த்தோ நான் வளைந்ததில்லை. எழுத்தை விட உன்னதமானதாக தமிழ் சினிமாவை நான் கருதியதில்லை.
   மிஷ்கினிடம் பரிசல் கேட்டு நிற்கவேண்டிய அவசியமெதுவும் என் வாழ்வில் இதுவரை ஏற்பட்டதில்லை. அவன் நண்பன். எனக்கு தேவையெனில் அவனைக்கேட்காமலேயே எவ்வளவையும் எடுத்துவரும் உரிமை எனக்குண்டு. ஆனால் அது எப்போதும் எனக்கு அவசியப்பட்டதில்லை.

   உதிரி மனிதர்களின் பங்களிப்பைப்பற்றி எழுதினால் அவர்களைப் பற்றி தனியே ஒரு படம் எடுக்க முடியுமா? என அற்பத்தனமாய் கேட்கிறீர்கள். நீங்கள் நினைப்பதை நீங்கள் தான் செய்ய வேண்டும். இன்னொரு படைப்பாளியை உங்கள் கருத்துக்கு நிர்பந்திப்பது முட்டாள் தனத்தின் உச்சம்.
   இப்போது கூட ஒன்றுமில்லை. நீங்கள் யாரென வெளியே வந்து என்னோடு ஒரு டீ குடித்து, சிகெரெட் பிடித்து, உட்கார்ந்து விவாதியுங்கள். வாழ்வில் இனி ஒரு போதும் Anonymous என்று மற்றவர்களை நேரடியாக சொல்ல திராணியற்று கால் புள்ளி, முக்கால் புள்ளி, கமா, கோடு என்றெல்லாம் எழுதாதீர்கள். அது மொட்டை பெட்டிஷன் எழுதுபவனின் இன்றைய நீட்சி.
   நன்றி.

   Delete
 14. ஏன் பவா ஸார், பாலா உங்களிடம் கேட்காமல் “நான் கடவுள்” என்று தலைப்பு வைத்துவிட்டாரோ? இவ்வளவு நல்ல விமர்சனம் எழுதி இருக்கிறீரே அதனால்தான் கேட்கிறேன். அல்லது அவர் பரிசல் எதுவும் தரவில்லையா? போங்க ஸார், போய் நல்லா நாலு போரட்டா சாப்பிடுங்க....

  http://bavachelladurai.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

  ReplyDelete
 15. ANONYMOUS என்னும் முகம் இல்லாத முகமூடி அணிந்து கூட்டத்தில் இருந்து கல் எறிபவனுக்கு எல்லாம் ஏன் பவா இப்படி உங்கள் கட்டுரையில் கீழ் இடம் தருகிறீர்கள்

  ReplyDelete
 16. ஆறு மாத காலத்தில் நீ யாருனு முதல் வெளியே வந்து சொல்லு தம்பி அப்புறம் பாக்கலாம் மத்தத எல்லாம், இப்படியே அலைவானுங்க போல இருக்கு,

  ReplyDelete
 17. எனக்கு ஒரு பவா இல்லை ....

  ReplyDelete
  Replies
  1. Thank God Sir, The Good Friends are who frankly tells something that we dont see from our point of view. They have to tell it from third point of view and we can trust them to move on. Instead of praising things and saying people are fools. Glad you didn't have a friend like Bava :-)

   Delete
  2. என் அன்பான சீனு,

   ஒரு கவிஞனாகவும், இயக்குநராகவும் நீ எப்போதும் என்னுள் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறாய். சில நட்புகளைப்பற்றி உடனே பகிர முடியவில்லை. என் எல்லா நாளும் கார்த்திகையில் எழுதியவர்களை விட விடுபட்ட நண்பர்களே அதிகம். கடந்த முப்பதாண்டுகளாக என்னோடே பயணிக்கும், ஜெயமோகனில் ஆரம்பித்து பாரதி கிருஷ்ணகுமார், நா.முத்துகுமார், ராம், உதயசங்கர், காளிதாஸ், சீனுராமசாமி என அப்பட்டியல் என்னுள் நீண்டுகொண்டேயிருக்கிறது.
   ஒரு பன்றிமேய்க்கும் ஜோயனை கதாநாயகனாய் தமிழ்திரையில் என்முன் துணிந்துக் காட்டியவன் நீ மட்டுந்தான். தென்மேற்கு பருவக்காற்றில் ஒரு கிராமத்து பிற்படுத்தப்பட்டப் பெண்ணை ஏர்பிடித்து உழவைத்து எனக்குள் அதிர்வை ஏற்படுத்தியவனும் நீ தான்.
   கடல் சார்ந்து என் சமகாலத்தில் எடுக்கப்பட்ட கடல், மரியான், நீர்ப்பறவை ஆகிய மூன்று படைப்புகளிலும் உன் நீர் பறவையே என்னுள் சில்லிட்டது. அதில் ஒரு கறுப்பு பாதிரியராக, நடிக்க நீ பலமுறைக் கேட்டும் முடியாமல் போன என் மனநிலைக்கு, தியேட்டரில் படம்பார்த்துக் கொண்டிருந்தபோது வருந்தினேன். என்னைவிடவும் அழகம்பெருமாள் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்திருந்தாலும் என் கால் கதையில் வரும் ஒரு ஊனமுற்றவனின் புலம்பல் போல அது நான் அது நான் செய்திருக்க வேண்டியது என எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
   கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கருகே நீ போட்டு கொடுத்த அறையில் படுத்து உன் கவிதை தொகுப்பை மூன்றாவது முறை படித்துபோது தான் நீ எனக்கு பிடிப்பட்டாய். வாசல் வரை நின்றிருந்த உன்னை கைப்பிடித்து அறைவரை அழைத்துப்போய் அமரவைத்தேன். அன்று பகல் முழுக்க மனதில் தேக்கிய உன் கவிதை வரிகளை அன்று மாலை தேவநேய பாவணர் அரங்கில் நடந்த அப்புத்தக வெளியீட்டில் அப்படியேப் பகிர்த்தேன் நீ என்னை கட்டியணைத்து முத்தம் பகிர்ந்தாய். அக்கவிதை வரிகளை என் வாழ்வை நகர்த்தும் காலச்சக்கரங்களில் ஒன்றாகவே எப்போதும் மதிப்பிடுகிறேன்.

   அன்பு சீனு ,
   இந்த பவா எப்போதும் உன்னுடையவனும் கூட. நாம் இருவருமே எடுத்துவைக்கும் ஒரு முன்னோக்கிய அடியும் நமக்கானதல்ல இச்சமூக அமைப்பின் அசைதலுக்கான நெம்பு கோல்கள் என்ற புரிதல் எப்போதும் எனக்குண்டு. உனக்கு உன் கவிதை, உன் சினிமா எனக்கு என் எழுத்து.

   Delete
  3. பதில் பேச முடியாது..திருவண்ணாமலைக்கு வாறேன்

   Delete
 18. Anonymous அவர்களே என்னுடைய பார்வையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு புதிய அனுபவம் !!!!!

  ஆம் யதார்த்த மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது , ஆனால் யதார்த்த மீறல்கள் இல்லாத சினிமா ஏதேனும் உண்டா இவ்வுலகில் ???

  சினிமா என்பதே கற்பனைதான் !!! நிஜம் மட்டுமே அங்கே இருக்க வேண்டும் என்றால் கதை முழுவதும் ஒரே shotla எடுக்கப்பட வேண்டும் !!!!!

  படத்தை உள்ளார்ந்து கவனித்தீர்களானால் மிஸ்கின் சொல்லும் அந்த முன்கதையின் புது உக்தியை புரிந்து கொள்ள முடியும் ,, ஆம் இது குழந்தைக்கு சொல்லும் ஒரு சாதாரண கதை தான் ஆனால் இங்கே அது திரை மொழியில் மிக அழகாக கையாளப் பட்டிருக்கிறது !!!


  பவா பற்றியும் தெரியாது மிஸ்கினை பற்றியும் தெரியாது ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி தெரியும் அந்த வகையில் இது ஒரு தலைச் சிறந்த திரைப்படம் !!!!!

  ReplyDelete
 19. I love myskin films, but defintely this film is not a world class film, taking a film without songs, without dialogues doesnt make it a world class film, a film will be applauded with love and will be celebrated by people . I kindly ask you and our director Myskin to watch Life is Beautiful Film what a movie it is, there is no need to show dark side of human even though we all know its there in the soceity, we all have good and bad as part and parcel of our birth. But why to show the bad things that happened across the world instead show some beautiful things that makes this place more nice and touch many people to do good things. Instead of concentrating on too many dramatic things let him take a practical relative good cinema by any means it doesnt need to have songs or commercial elements, ask him to watch some of the best world cinema it doesn't need to be dramatic, or songs or commercial masala elements, dont spoil ur friend by saying you have done terrific job awesome people are fools to not to accept, don't say like that if you like your friend to achieve more it doesn't need to be commercial don't blame people that they like only commercial you have taken a dark slow too dramatic movie which is not good thats what people felt, i felt when i watched the movie, we all gave respect to the movie, its good here and there but as a whole movie it has lot of things messed up.just for few scenes a movie will not be good. Kindly dont spoil him.

  ReplyDelete
 20. If he wants to take dark films, go really dark like silence of lambs or seven, checkout the movie I Am Gabriel its very less in budget but awesome movie which gives hope, it also shows different tough situations, Ang Lee Takes films spent huge time, 1000's of people worked on this film called Life of Pie which talks about hope. Take Good Films dont think people are fool. I would like to talk to myskin if you dont dare to tell this truth

  ReplyDelete
 21. இதுவும் வழக்கமான மிஷ்கின் படம்தான் (முகமூடியை தவிர...)
  அப்புறம், ஓநாய் அந்த ஆட்டுக்குட்டி குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலே, அந்த குடும்பம் பிழைத்திருக்கும். என்ன சொல்றிங்க...?

  ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு மறைமுக அர்த்தம் இருக்கும்...
  உதாரணத்திற்கு... டாக்டரின் அவுட் போகஸ் ஷாட், கடவுள் மாதிரி
  வந்து காப்பத்துனாராம்.

  ReplyDelete
 22. கார்த்திகேயன் - சென்னையில் இருந்து.... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - fiction film எனும் போது எப்படிப்பட்ட லாஜிக் மீறல்களையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சமூக சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் ஓர் அளவுக்கு மேலான லாஜிக் மீறல்களை எப்படி நியாயப்ப்டுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. ஒரு அலை பேசி அழைப்பில் நொடிகளில் வந்து விடும் 108 அம்புலன்ஸ் இருக்கும் wolf ஐ முதுகில் தூக்கி திரிவது, வீட்டிலேயே மருத்துவ மாணவன் போனில் பேசியபடியே spelenectomy செய்வது, ஆபரேஷன் முடிந்தவுடன் நோயாளி வெளியே ஓடுவது.. என யதார்த்த மீறல்கள். விஜயகாந்த் செல்போன் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்வதற்க்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விஜயகாந்த் செய்தால் நக்கலடிக்கும் ஊடகங்கள், அதையே மிஷ்க்ின் செய்தால் எப்படியோ நியாயப்படுத்துகிறார்கள். கற்பனை என்று சொல்லி கற்பனையை காட்டினால் தவறில்லை. realistic cinema என யதார்த்த நிகழ்வுகளின் ஊடே ஒரு அளவுக்கு மேல் நம் இஷ்டத்திற்கு கற்பனையை புகுத்துவது சரியல்ல. நம் ஊடகங்கள் தரும் விமர்சநம், மதிப்பெண்கள் ஆகிவற்றின் அளவுகோல் என்ன் என்பதே புரியவில்லை.

  ReplyDelete
 23. ஒநாயும் ஆட்டுக்குட்டியும்....(மிக அரிய படம்)
  வலிந்து சுமத்தப்பட்ட அமைதி, நிறுத்திவிடமுடியாத, மௌனமான, நெஞ்சைப் பிளக்கும் ஒப்பாரியாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,
  மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
  ஹீரோயின் இல்லை….
  பாடல்கள் இல்லை…. புகைப்பிடிக்கும்
  காட்சி இல்லை…. டாஸ் மாக் பார்
  காட்சி இல்லை… அடுத்தவர்
  தோற்றத்தை கீழ்த்தரமாக கமென்ட் அடிக்கும்
  காமெடி இல்லை… இதெல்லாம் இல்லாமல்
  2013ல் ஒரு தமிழ் சினிமாவா…
  ஆம்..உண்மைதான்… இப்படித்தான்
  ஒரு வித்தியாசமான தமிழ்த்
  திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்
  இயக்குனர் மிஷ்கின். எவ்வளவு நாளாயிற்று,
  இப்படி ஒரு படத்தைப் பார்த்து…மிஷ்கின்
  போன்ற ஒரு சில இயக்குனர்களால் தமிழ்
  சினிமா கண்டிப்பாக வளரும் என்ற
  நம்பிக்கை வருகிறது. இவ் ஆண்டின் மிக
  முக்கிய படங்களில் இப்படம் முதல்
  இடத்தை பிடிக்கும்..

  ReplyDelete
 24. unarvukalai pirathipalaikkara padam

  ReplyDelete
 25. நேற்று ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்தேன்.

  ஆரம்ப காட்சிகளில் வீரேந்திர சேவாக் சிக்ஸரும் ஃபோருமாக விளாசுவது மாதிரி காட்சிகள் வந்தன.

  1. ஶ்ரீ தனியார் மருத்துவமனையில் அடிபட்ட மிஸ்கினுக்காக போராடுவது - அவர்களின் தயக்கம் - பொய் சொல்லுவது - ஶ்ரீ தான் ஒரு மெடிகல் ஸ்டூடெண்ட் என்று முன் வைப்பது - அந்த டாக்டர் அதை கொஞ்சமும் மதிக்காமல், அறிவுரைகள் சொல்வது.

  2. போலீஸ்காரன் மிஸ்கினின் வாட்சை திருடுவது.

  3. யாரும் உதவிக்கு வராத போது, யோசிக்கும் திறன் இல்லாத ஒரு மனநோயாளிதான் உதவ வருவார் என்பதை காட்டுவது

  4. ஶ்ரீயின் மருத்துவ ஆசிரியர் தன் வீட்டில் இழவு இருந்தாலும் ஶ்ரீக்கு உதவ முன் வருவது - மருத்துவ விஷயங்களை ஒவ்வொன்றாக கேட்பது. அன்ஸ்தீஸ்யாவுக்கு பதிலாக கேட்டமின் கொடுக்க சொல்வது.

  5. ஆபரேஷன் செய்யும் போது பிடிமானத்திற்கு தண்ணீர் பாட்டில்களை உபயோகிப்பது.

  6. சி.பி.சி.ஐ.டி போலீஸ் குற்ற வழக்குகளை கையாளும் முறைகள்.

  7. சி.பி.சி.ஐ.டி போலீஸ் மற்றும் சட்ட ஒழுக்கு போலீசுக்கும் இடையே உள்ள லடாய் - சாதா போலிஸ் கேடிகளின் கைக்கூலியாக இருப்பது.

  8. ஶ்ரீயை போலீஸுக்கு ஒத்துழைக்க செய்யும் வழிமுறைகள்

  இது மாதிரி ஒவ்வொன்றாக ரசித்து கொண்டே வந்தேன். ஆனால் எப்போது கஸ்தூர்பா காந்தி நகர் ரயில் நிலையத்தில் டிரெயின் ரிவர் கியர் எடுத்து கிளம்பியதோ அப்போதே சேவாக் அவுட்....

  1. எந்த சிக்னல் ஒத்துழைப்பும் இல்லாமல் ஓரே ஸ்பீடில் டிரெயினை பீச் வரை கொண்டு போக முடியும் என்று யார் சொன்னது. பவர் ஷட்டவுண் அடுத்த ஸ்டேஷனிலேயே செய்துவிட முடியுமே?

  2. காற்று ஊதப்பட்ட மெகா தலைகானியை வைத்துக்கொண்டு ஹைபீடில் ஓடிக் கொண்டிருக்கும் டிரெயினிலிருந்து எந்தவித காயமும் இல்லாமல் எப்படி தப்பிக்க முடியும்? ஓடிக் கொண்டிருக்கும் டிரெயினை பாதியில் நிறுத்திவிட்டு, சாதாரணமாக இறங்கி தப்பித்திருக்கலாமே?

  3. ஶ்ரீ டெட்பாடியில் குத்திட்டு நிற்கும் கத்தியால் தன் கைகயிற்றை அறுத்துக் கொண்டாராம்.

  4. நகரம் முழுவதும் அலர்டுக்கு உத்திரவு போட்டிருந்தாலும் மிஷ்கின் போகும் பகுதிகளில் யாரும் வரவதில்லை. அதுவும் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே வருகிறார்கள்.

  5. மிஷ்கின் ஏன் ஶ்ரீயை சந்திக்க வேண்டும்?

  6. வில்லன் பார்ட்டிகள் ஏன் அந்த பார்வையிழந்த குடும்பத்தை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

  7. இயங்க மறுக்கும் மோட்டார் பைக்கை வில்லன் பார்டிகளில் ஒருவர் தொடர்ந்து முயற்சிக்க, இன்னொருவர் டுர் டுர்ரென இயங்க்கிக் கொண்டிருக்கும் இன்னொரு பைக்கில் காத்திருக்க, சல்யூட் வைத்திருக்கும் ஆசாமி சுடப்படுவான் என்று யூகிக்க முடிகிறது.

  8. யாரிடம் அந்த குழந்தையை ஒப்படைக்க போகிறார் மிஷ்கின்? கிளைமாக்ஸில் சக்ர நாற்காலியில் வில்லன் அந்த கார் பார்கிங்கில் வந்தது ஏன்?

  9. அதகளமாக குற்ங்கள் நடந்து முடிந்து, எல்லா போலீஸ்காரர்களும் ரவுண்டு கட்டி நிற்க. ஶ்ரீ அந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு, கூட்டத்தை பிளந்து கொண்டு அமைதியாக போவது, யதார்த்மாக இல்லையே?

  மிஷ்கின், இந்த மாதிரி சில ஓட்டைகளை சரி செய்து எடுத்திருந்தால் இன்னும் பாராட்டியிருக்கிலாம். மசாலா படங்கள் பல வரும் போது புதிய முயற்சி என்ற அளவில்தான் என்னால் சொல்லமுடிகிறது.

  பார்க்க வேண்டிய படம். ஆனால் பாராட்ட வேண்டிய படம் அல்ல.

  ReplyDelete
 26. தியேடர் அதிபர்கள் ஒரு உதவாக்ரைகள்.. இந்த திரைப்படத்தை தவிர எல்லா படங்களையும் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த தரமான திரைப்படத்தின் போஸ்டர் மட்டும் சொல்லிக்கொள்ளும்படியகவோ எங்கும் ஓட்டவில்லை.. எங்களுக்குஇருந்தாலும் உங்கள்மேல் உள்ள நம்பிக்கை எப்போதும் குறையவில்லை.....

  ReplyDelete