Thursday, October 31, 2013

சிங்காரக்குளம்



கருங்கற்களாலான மதில்சுவரின் மீது எப்போதோ அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்பில் பாசி படிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அந்த மதில் சுவரின் உட்புறம் காய்த்துத் தொங்கும் பலாக்காய்களும், பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்களும் எந்த வெளி ஆளையும் மிரட்டும். மலையைச் சுற்றி மதில் சுவரென்பதே ஆச்சிரியமும் அச்சமுமான விஷயம்தான். மதில் சுவரை மீறி வெளியே தெரியும் இரண்டே இரண்டு விஷயங்களில் இந்த மரங்கள் ஒன்று. அதற்கு நிகராக நிற்கும் கோவில். அதற்குள்ளேதான் வேட்டவலம் ஜமீனோ, குதிரைகளோ, தானியக் கிடங்கோ, அதன் தனி ராஜ்ஜியமோ இயங்குவதாக யாரும் எளிதில் நம்பிவிட முடியாது. நகரத்தையே அடைத்த ஜமீனின் ராட்சத இரும்புக் கதவுகள் தொடர்ந்தாற்போல் அஞ்சு நிமிஷம் திறந்திருந்து யாரும் பார்த்ததில்லை.
தெற்கு மதில் சுவரோரம், எந்த ஆரவாரமுமின்றி ஆனால் உள்ளூர ஒரு பயங்கரத்தோடு ஜமீனைப் போலவே தேங்கியிருந்தது சிங்காரக்குளம். இந்தத் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மலையிலிருந்து குளத்திற்கான வழி எது? அல்லது முழுவதுமே பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியைச் சிங்காரக் குளத்திற்காக வைத்திருந்தார்கள். பறத்தெருக்காரர்களைத்தவிர, காமராஜரைப் பார்த்தேன்; இந்திரகாந்தி அம்மாவைப் பார்த்தேன் என்பது போன்ற அந்த ஊர் செய்திகளின் அபூர்வங்களில் ஒன்று சிங்காரக்குளம் பார்த்த பறத்தெருக்காரர்களிள் எண்ணிக்கை.
எளநீர் குடிக்கும்போது, ‘‘சிங்காரக்கொளத்து தண்ணீ மாதிரி இனிக்கிதே’’ என்றும் ‘‘நைனார் வீட்ல வெறகு பொளந்துட்டு மத்தியான சாப்பாட்ல ரெண்டு சொம்பு சிங்காரக்கொளத்துத் தண்ணி குடிச்சேன். ரெண்டு நாள் வாய்க்கு ஒனக்கையா எதுவும் கேக்கல’’ என்பது மாதிரியும் காலனியில் அவ்வப்போது அடிப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்காரக்குளப் பேச்சு.
இப்போ மாதிரியில்லை.
இப்போ பறத் தெருவையே நாலா பிரிச்சி, பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாங்க. ஆனா எவன் அதை கேக்கறான். மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க மட்டும் இந்தப் பேரில் விலாசம் எழுதி கடிதம் போட்டு சரியா வந்து சேராததனால, மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுதறானுங்க. ஊர் ஒலகத்துக்கு மட்டும் அது பாரதி, பாரதிதாசன் தெருவுன்னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்கும்.
ஆனா இப்போ நாலு கூரை வூட்டுக்கு மத்தியில் ஒரு சீம ஓடு போட்ட வீடும் பத்து வூட்டுக்கு ஒரு மெத்தை வீடுமா கட்டுத் தள்ளிட்டானுங்க. வாத்தியாரா ஆனவன், மிலிட்டரிக்குப் போனவன், கவர்மெண்டு உத்தியோகம் பக்கம் போனவன், தலையாரி ஆனவனையும் சேத்தா எண்ணி பத்து வீடு தேறும் முழுசா மெத்தை வீடுன்னு.
அப்பவே வகையறாவுக்கு வகையறா பிரிவு போட்டு, அத்தனை அம்சமா பறத்தெருவுக்கு நடுவுல மாரியம்மன் கோயில் கட்டி, அதுக்கு வடக்கால நிக்குதே அந்த மேடை, அது அப்பா கட்டினதுதான். இப்போ சமூக நாடகம், அம்பேத்கார் கூட்டம் எல்லாம் அதுலதான். ஆனா ராத்திரில படுத்துக்க சொகமான எடம் அது. அன்னிக்கு ராத்திரி கூட்டாளிங்க கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டு, மேடையில படுத்தப்பதான் திடீர்னு பொறிதட்டுச்சு அவனுக்குச் சிங்காரக்குளத்து ஞாபகம்.
ஞாபகம் எங்க வர்றது? முன்னே பின்ன பார்த்திருந்தாதானே ஞாபகம் வர. அதைப் பேசின ஆளுங்களைப் பற்றி, மலைலதான் பொறப்பட்டு ஜமீன் வழியா கீழ எறங்குது என்ற செய்தி பற்றி, வர்ற வழியில ஜமீன் பொம்பளைங்க அதுலதான் குளிப்பாங்களாம் என்ற ஆச்சிரியம் பற்றி, அந்தக் கொளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு, மருவு, தீட்டு படாம காப்பாத்தி வருவது பற்றி, அந்தக் காவலாளுங்களுக்கு வேலையே வைக்காம இந்தப் பறத்தெரு பத்து, பனிரெண்டு வகையறாவுல இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது பற்றி… இது… இதுதான்… இதைப் பற்றின யோசனையின்போதுதான் இதயத்தில் ஏதோ புதுசாய்த் தேங்குவதை உணர்ந்தான்.
விடிந்திருந்தபோது அது கண்கள் வழியே தெறித்திருந்தது. கோபம்… ஆத்திரம்…
அன்னிக்கு காலையிலேயே தொடங்கிய பேச்சுதான். நிக்கல. நெருடல. வயது, ஆளு, வகையறா, தலக்கட்டு எந்தப் பேதமும் அவனுக்குக் குறுக்கே வரலை. எல்லார்ட்டேயும் அவன் சிங்காரக் குளத்தைப் பத்திதான் பேசிக்கொண்டிருந்தான்.
பேசிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் திடீர்னு பேசறத நிறுத்திட்டு, பேசினதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சதும் இதே மாரியம்மன் கோயில் மேடையில்தான்.
அதிர்ந்து போனான்.
சிங்காரக்குளப் பேச்சு அவனிடமிருந்து பலரைப் பிரித்திருந்தது இப்போது புரிந்தது. இவனைப் பார்த்துப் பார்த்து பொம்பளைகள் குசுகுசுவெனப் பேசிக் கொண்டது, சில ஆளுங்க அவனைப் பைத்தியக்காரன் கணக்கா பார்த்தது, இது வீணான வெவகாரம்னு நாட்டாருங்க அறிவுரை சொன்னது, எல்லாத்துக்குமே காரணம், ‘பறத்தெருக்காரங்களும் சிங்காரக்குளத்துல இறங்கி ஒரு கை தண்ணி குடிச்சாகணும்’ என்ற வார்த்தையின் ஆபத்துதான் அது. ஆனாலும் அப்படி, இப்படியென்று பறத்தெருவில் அம்பது, அறுபது பேர், அவன் வார்த்தைகளுக்கு ரத்தமேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அந்த பலமோ, பலவீனமோ, அவனைப் பறத்தெருவைத் தாண்டி வேதக்காரத் தெருவிலேயும் கால்வைக்கவும் சிங்காரத்தெருவுலேயும் கால்வைக்கவும் சிங்காரக்குளத்தைப் பற்றி பேசவும் செய்தது.
வேதக்காரத்தெரு இன்னா வேதக்காரத்தெரு. இவன் சொந்த அக்காவே அங்கதான் வாழுது. ரெண்டு தெருவுக்குமான கொள்வினை, கொடுப்பினை சகஜம். என்ன, பறத்தெருப் பொண்ணு அங்க வாழப்போச்சுன்னா புதுநன்மை எடுத்து ஞானஸ்தானம் வாங்கனுன்னு ஒத்த கால்ல நின்னு ஜெயிச்சிட்டு இருந்தாங்க வேதக்காருங்க. பறத்தெரு பசங்களும், வேதக்கார பொண்ணுங்களை மாசத்துக்கு ஒண்ணுன்னு கூட்டியாந்து தாலி கட்டிக் குடும்பம் நடத்திக்கிட்டு வாழ்க்கையால பதில் சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க.
சிங்காரக்குளப் பேச்சு வேதக்காரத்தெருவுலேயும் பயத்தைக் கௌறினாலும் பறத்தெருவுக்கு பரவாயில்லைன்னுதான் இருந்துச்சி.
அவன் அவனில் முன்னேறிக்கொண்டுதான் இருந்தான். ஓட்டம் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தான். அந்த ஓட்டந்தான் மார்ச் 12 அன்னிக்கு பறத்தெரு, வேதக்காரதெருவுல இருந்து மொத்தமா 15 பொம்பளைங்க சிங்காரக்குளத்துல இறங்க, தண்ணி மொள்ளுவாங்க என்பதில் போய் நின்றது.
அதன் பிறகு மார்ச் 12 நடவடிக்கையை தேசியமாக்கினான்.  நிகழப் போகும் ரத்தச்சேதம் எந்த நேரமும் நினைவில் இருந்தது. முதலில் நம்பிக்கைக்குரிய பதினைஞ்சு பொம்பளை ஆளுகளைத் தேர்ந்தெடுத்தான்.
இனி அவனில்லை. அவர்கள். பொறி, கனிய ஆரம்பித்திருந்தது.
ஊர்த் தெருவைத் தாண்டி தண்ணி எடுக்க போவப்போற பொம்பளைங்க, கூடப் போக ஆம்பள ஆட்கள், அவர்களுக்கு  ஆயுதங்கள், எல்லாமும் பறத்தெரு, வேதக்காரத்தெருவின் சகஜத்தை மீறி நடந்து கொண்டிருந்ததை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. பங்கு தந்தையைத் தவிர.
அவர்கள் மாரியம்மன் கோலில் மேடையில் படுப்பதைத் தவிர்த்திருந்தார்கள். ரகசியங்கள் கசிந்து ரத்தம் கேட்கலாம். கதவு தட்டப்படும் ஓசையில் அதிராமல் ஆனால் சகல ஜாக்கிரதையோடும்  கதவுக் கொண்டியை நீக்கி வெளியே பார்த்தான்.
எல்லாம் வேதக்காரத்தெரு ஆட்கள். எல்லார் முகங்களும் பயத்தில் தொங்கியது. ஒன்றிரண்டு முகங்களில் ஏமாற்றமும் கோபமும் தெரிந்த்தை நிலவு வெளிச்சந்தான் சொன்னது. நேரடியாக விஷயத்துக்கு வந்தார்கள்.
“நாளன்னிக்கு காலைல நடக்கப்போற நடவடிக்கைல வேதக்காரத்தெரு ஆளுங்க யாரும் கலந்துக்கல. ஒரு ரத்தக்களறிய திருச்சபை விரும்பல. நாங்க பங்குத் தந்தையை மீற முடியாது. வாழ்வோ சாவோ மானமோ மரியாதையோ எல்லாமே எங்களுக்கு அவருதான்.”
“மானம் மரியாதைக்குக் கூடவா?”
கேள்வி முடியும் முன்பே கோபத்தோடு பிரிந்தார்கள். அதன் பிறகு வீட்டுக்குள் போக முடியல. பீடியும் புகையுமாய் மாமரத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான்.
இது நின்று விடுமா?
தலைமுறை தலைமுறையாக குனிந்த தலைகள் நிமிரவே வழியில்லயா? முதுகெலும்புகளின் நிமிர்வு காண சாத்தியமே இல்லையா?
ஒரு வேளை ஜெயிச்சிட்டா வரலாற்றின் உச்சம். இல்லை, இல்லை. இதில் பின்னடைவில்லை. இத்தனை மாத உழைப்பு, பேச்சு, கோபம் எல்லாம் நாளை மறுநாள் நிரூபணமாகியாக வேண்டும்.
ஆனால் அவன் கவலையெல்லாம் வேதக்காரத்தெருக்காரங்க நடவடிக்கையில பின்வாங்கிட்டாங்கற செய்தி பறத்தெரு சனங்களுக்கு எப்படியும் தெரிந்திடக் கூடாது என்பதுதான்.
ஆனால் விடிந்து வீட்டுக்கு வருவதற்குள் பறத்தெரு முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவனுடைய “அவர்களே” பெரிசாய் பயந்திருந்தார்கள்.
அவனது எந்தப் பேச்சும் எடுபடவில்லை. அன்றிரவு அவர்களில் பலர் மீண்டும் மாரியம்மன் கோயில் மேடைக்கே படுக்க வந்தார்கள். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவனுக்கு.
“என் மகனாவது சிங்காரக்குளத்துத் தண்ணி அள்ளி குடிப்பானா?”
இதுவரை எதுவுமே நடக்காதது மாதிரி அல்லது நடக்க இருந்ததை மாரியாத்தாளா பாத்து ஒதுக்கிவிட்ட மாதிரி ஆழமான உறக்கத்திலிருந்து தெரு.
ஏதோ கூச்சல் கேட்டுதான் எழுந்தான். கும்பல் கும்பலாய் ஆண்கள், பெண்கள். வேதக்காரத்தெரு ஆட்களும் கலந்திருந்தார்கள்.
“நம்ம பொண்ணுதாண்டா.”
“எத்தை வச்சி உறுதியா சொல்ற.”
“வந்தவன்தான் உறுதியா சொல்றானே!”
திகில் பரவிய முகத்தோடு சைக்கிளிலேயே உட்கார்ந்து கால்களைத் தரையில் ஊன்றி நின்றிருந்தான் ஊர்த்தெரு ஆள்.
பறத்தெரு அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. தடியும் கம்புமாய் புறப்பட்டவர்களின் இடுப்பில்கொடுவாள் உறைந்திருந்தது.
பொம்பளைங்களை வரவேண்டாமெனத் தடுத்தது கூட்டம். இதை எதிர்பாக்காதவனாகப் பெரும் அதிர்ச்சியுடன் சைக்கிளை அழுத்தினான் ஊர்த்தெருக்காரன்.
கூட்டத்தில் பொம்பளைங்களும் இருந்ததை யாரும் கட்டுப்படுத்த முடியாமல் போய்க்கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த ஊரே சிங்காரக் குளக்கரையில் நின்றிருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது.
 கும்பல் அருகில் போனபோது பெரும் அதிர்ச்சியும் பயமும் காற்றில் அலைமோதியது. அதுவரை வாழ்நாளில் அவர்கள் அறிந்திராத திகில் ஒவ்வொருவரையும் கவ்வியது.
ஆம்பளைகளைத் தள்ளிவிட்டு விட்டு பொம்பளைங்கள்தான் குளத்தைப் பார்த்தார்கள். இந்த ஜென்மத்தில் இந்தக் குளத்தை முதன்முதலாய்ப் பார்க்கின்றார்கள்.
குளத்தில் வடக்கால ஓரத்தில் எந்தச் சலனமுமின்றி பாவாடை தாவணியோடு ஒரு பெண்ணின் பிணம் மிதந்து கொண்டிருந்தது.
“நம்ம காத்தவராயன் மக மல்லிகாடா,” அமைதியைக் கிழித்து எழுந்த குரலில் நடுக்கம் இருந்தது.
ஒட்டுமொத்தக் கூட்டமும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்ப, அவனுக்குப் பொறி தட்டிற்று.
இன்னிக்குக் காலைல குளத்தில் இறங்கித் தண்ணீர் எடுக்க பெயர் கொடுத்திருந்த மல்லிகா!
அழுதுவிடக் கூடாது. வெடித்துவிடக் கூடாது.
சொல்லமுடியாத மௌனத்திலிருந்தான்.
பறத்தெருக்கூட்டம் யாருக்காகவும் காத்திராமல் தபதபவென சிங்காரக்குளத்தில் இறங்கிப் பிணத்தைத் தூக்கியது.
ஒருதலைமுறை கனமாய்ப் பிணம் கனத்தது.



No comments:

Post a Comment