Tuesday, October 29, 2013

மஞ்சேரிவரை


நான் எழுதிய எல்லா நாளும் கார்த்திகை அதே பெயரில் டாக்டர் ரகுராம் (இவர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்) அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கோழிக்கோடு ராஸ்பெரி பப்ளிஷர்களால் பதிப்பிக்கப்பட்டு 26.10.2013 சனிக்கிழமை மாலை மஞ்சேரி Wood Bine ஆடிட்டோரியத்தில் அதன் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(மஞ்சேரி, பாலக்காட்டிற்கும், கோழிக்கோட்டிற்குமிடையே உள்ள சிறுநகரம்)
வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு மூன்று கார்களில் என் பதினெட்டு நண்பர்களோடு புறப்படும்போதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. வழியில் அரூர் ஸ்வேதா ஓட்டலின் அசைவ உணவை வைத்தே பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஒரு சதவீதமும் ஏமாற்றாமல் அந்த ஹோட்டலில், மட்டன் குழம்பு, ஒண்ணுக்குள்ள ஒண்ணு (பரோட்டாவில் உடைத்து ஊற்றிய முட்டை) நாட்டுக்கோழி வறுவல், போட்டிக்கறி, தலைக்கறி, கல்தோசையென எங்கள் ருசி அகலமாகிக் கொண்டே போனது. மதிய சாப்பாடு தேவையில்லையென எல்லாருமே அப்போதே முடிவு செய்திருந்தோம்.
என் மகன் வம்சியும், மானசியும் அவர்களுக்கு பிடித்தமான அம்மம்மா, பாஸ் அண்ணன், அஜிதன் (எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்) இவர்கள் பயணித்த டவேராவைத் தேர்த்தெடுத்துக் கொண்டார்கள். தான் புதிதாய் வாங்கியிருந்த எல்லோரையும் பொறாமைப்படுத்திய சிகப்புநிற ஆடி ஏ4-ல் ஓவியர் சீனிவாசனும், நண்பன் கார்த்தியும் மாற்றி, மாற்றி ஓட்ட பயணம் குதூகலித்தது.
சேலத்தில் நண்பன் வேலுவும், ஸ்நேகிதி அல்லியும் கைக்குலுக்கி பயணத்தை மேலும் உற்சாகமாக்கினார்கள்.

மாலை கோவை மருத்துவமனைக்கு எதிரில் நல்லதொரு விடுதியில் என் நண்பன் அக்னி நந்து நான்கு விசாலமான அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இரவு குளித்து முடித்ததும் உரையாடல் ஆரம்பித்தது. மொழிபெயர்ப்பாளர்   ஜி. குப்புசாமி தன் மனைவி நர்மதாவை ஷைலஜா, ஜெயஸ்ரீ அறைக்கு அனுப்பிவிட்டு எங்களோடு சங்கமித்துக் கொண்டார்.
முப்பது மில்லிக்கும் குறைவான ஒயின் கண்ணாடி டம்ளர்களில் தேங்கி நின்றது கொள்ளை அழகு.
பேச்சு சுழன்று சுழன்று அறைக்கு வெளியே அவசரத்தில் தத்தளித்து. நான் புதிதாய் எழுதப் போகும் ஒரு கதையின் கரு எல்லோரையும் வசீகரித்தது. நான் உற்சாகமேறியிருந்தேன்.
சீனுவாசன் சாரும், கார்த்தியும், ஜெய்யும் வம்சியும் கோவை மாநகரில் ஒரு இரவு உலாவுக்குச் சென்றார்கள். அவர்களின் உலகங்களாக விதவிதமான கார்கள், பைக்குகள் இவை கோவையில் யார் யாரிடம் உள்ளன என பட்டியல்கள் அவர்களின் செல்போனுக்கு அதற்குள் தகவல்களாக வந்து குவிந்திருந்தன.
இரவு இரண்டு மணிக்கு மேல்தான் அவரவர் அறைக்கு அவர்கள் திரும்பினார்கள். நான் அடுத்த நாள் நிகழ்வுக்குப் போட வேண்டி விலையுயர்ந்த ஒரு சட்டை வாங்கி வந்திருந்தார்கள்.
என்னை சந்திக்க கோவையில் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். தகவல் தெரியாதவர்கள் திட்டித் தீர்த்தார்கள். தன் வாசகி யாழினியை சந்திக்க ஷைலுவும், ஜெயஸ்ரீயும் காரில் கிளம்பிப் போயி வந்தார்கள். எல்லாம் பரபரப்பான ஒரு திரைப்படக் காட்சி போல விரிந்து கொண்டேயிருந்தன.

எழுத்தாளர் சூர்யகாந்தன் தன் புகழ்பெற்ற மானாவாரி மனிதர்கள் நாவலை மறுபதிப்பு செய்யவேண்டி எங்களை சந்திக்க அறைக்கு வந்திருந்தார். என் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ராம்கோபால் இரவு உணவுக்கு எங்கள் எல்லோரையும் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு வரமுடியாத சூழலை நான் விவரித்ததும் அவர் தொலைபேசியை அவர் மனைவியிடம் தர, அவர் செய்து கொண்டிருக்கும் உணவு வகைகளின் பட்டியல் ஒரு நிமிடம் என் மன நிம்மதியைக் குலைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டேன். திரும்பும் வழியில் சந்திப்பதாக ஒரு பொய் வாக்குறுதியைக் கொடுத்தேன்.
கோவையிலிருந்து லீனா ஜோஸ் என்ற என் வாசகி தன் கணவருக்கு இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக என்னுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் என மெயில் அனுப்பியிருந்தார். அவ்வளவு சிரமம் ஏன் எனக் கோவையிலேயே சந்திக்க விரும்பினேன். அதற்கு அவகாசம் தராமல் நானும் என் கணவரும் மஞ்சேரி புத்தக வெளியீட்டில் சந்திக்கிறோம் என மறுபடியும் மெயில் அனுப்பியிருந்தார்.
காலைத் தேனீருக்கு செல்வேந்திரன் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இரண்டு காரிலும் இருந்தவர்களை அவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கார், பைக் பார்த்த உற்சாகத்தில் எனக்கு வாங்கப்பட்ட சட்டையை அந்த ஷாப்பிங் மாலிலேயே விட்டுவிட்டு வந்ததை எடுக்க நாங்கள் போவதற்கும், அக்கடையைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது.
எடுத்து முடித்து நேரம் பார்க்கையில்தான் மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. லேசான பதட்டம் எங்களைத் தொற்றிக் கொள்ள, செல்வேந்திரனிடம் ஒரு தொலைபேசி மன்னிப்புக் கேட்டு மஞ்சேரி என்ற அந்த கனவு நகரத்திற்கு விரைந்தோம்.

கோவையிலிருந்து பாலக்காட்டிற்குச் செல்லும் சாலை சற்றும் குறைவில்லாமல் நம் ஊர் சுடுகாட்டிற்குப் போகும் சாலையை விடவும் கேவலமாயிருந்தது. கல்லடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உம்மன்சாண்டியும், நாளுக்கொருதரம் அமைச்சர்களை மாற்றும் அம்மாவும் இதை எப்போதாவது கவனிக்க வேண்டும் என்பதற்காக மதுக்கரை லாரி உரிமையாளர் சங்கம் தன் பணியாளர்களுடன் ஒரு கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தார்கள். காரிலிருந்து மனதார வாழ்த்தினோம். கீழறங்கி ஓடி ஊர்வலத்தின் முன் நின்று கோஷம் போட நினைத்த மனதை காரின் வேகம் அடக்கியது.
பாலக்காட்டிலிருந்து மஞ்சேரி செல்லும் சாலையின் இருபுறமும் தான்தோன்றித்தனமாக வளர்த்திருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும், பூத்து, காய்த்து, கனித்து எங்களை வாரி உள்ளிழுத்துக் கொண்டது. ஒரு பெண்ணிடம் புதைந்து போகும் ஆணின் பரவசர மயக்க நிலை அது. மலைப்பாதைதான் அது என்றாலும் மலையேறும் உணர்வு இல்லை. கொஞ்சம் தரை, கொஞ்சம் மலையென மாறிமாறி வளைந்து, நெளிந்து அது எங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசீகரித்தது.
டாக்டர் ரகுராம் வீட்டில் எங்கள் வருகைக்காக எடிட்டர் பீ.லெனின், வைட்ஆங்கிள் ரவிசங்கரன், தமிழ் ஸ்டுடியோ அருண் மூவரும் காத்திருந்தார்கள். அகோர பசியிலிருந்தோம். டாக்டர் ரகுராம் வீட்டில் நவநீத அக்கா எங்களுக்காக விதவிதமாய் சமைத்திருந்தார்கள். நெய்மீன் வருவல் எங்களை இன்னும் ஈர்த்தது. சாப்பிட்டு முடித்து அவசர அவசரமாக ஹோட்டல் மலபாருக்குப் போனோம். அதற்குள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு லெனின் சாரும், ரவிசங்கரும், அருணும் மாடியிலிருந்து  கீழறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மிகுந்த களைப்பில் நானும், சீனுவாசன் சாரும் படுக்கையில் படுத்தோம். அப்படியே தரையிலிருந்து தன் இறையை உள்ளிழுத்துக் கொள்ளும் பாம்பைப்போல தூக்கம் எங்களை இழுத்துக் கொண்டது.
யாரோ எழுப்பியதை வைத்துப் பதறி அடித்து எழுந்தால் நேரம் ஆறைத் தாண்டியிருந்தது. பரபரப்பாகி தயாராகி ட்ராப்பிக்கில் மாட்டி Wood Bine  அரங்கை அடையும்போது மௌனமாக்கப்பட்டிருந்த என் தொலைபேசியைக் கவனித்தேன். ஷைலஜா இருபது முறை என்னை அழைத்திருந்தாள்.
முதல் தளத்திற்கு ஏறக்குறைய ஓடினேன். அப்பெரிய அரங்கு நிரம்பியிருந்தது.  நான் மிக மதிக்கும் மலையாக எழுத்தாளர் டி.டீ. ராமகிருஷ்ணன் என் புத்தகம் குறித்து அழகான மலையாளத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
கவிஞரும், எழுத்தாளருமான கல்பட்டா நாரயணனுக்கும், எடிட்டர் லெனினுக்கும் இடையே எனக்கான இருக்கையிலமர்ந்தேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டிய நிமிடம் நெகிழ்ந்து நின்று எழுந்து கைக்கூப்பினேன். ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து கல்பட்டா நாரயணன் சங்கீதத்தையும் தாண்டிய ஒரு மொழியில் கிட்டதட்ட பாடினார். அதை கேட்டுக் கொண்டேயிருக்க மனம் ஏங்கியது. சலித்துப் போகாத காதலியின் ஆரம்பகால முத்தங்களின் போது உடல் ஒருவிதமாக முறுவலிக்குமே அப்படி.
ஆனால் கனவுகள்தான் பாதியில் அறுத்து போகுமே, கல்பட்டாவும் தன் உரையை நிறைவு செய்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதையில் வரும் ஒரு திருடன் நாட்டு ஓடுகளைப் பிரித்து களவுக்காக வீட்டிற்குள் இறங்கும்போது அந்த நிசப்தமான கணத்தைத் தாண்டி கேட்கும் மெல்லிய சத்தம் ஒரு பூசணிப்பூவின் மலரல் என அவர் முடிக்கும்போது முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கேரளாவின் மிக முக்கியமான  கதகளிக் கலைஞர் கோட்டக்கல் சசீதரன் எழுந்து நின்று கைத்தட்டினார். அவர் கண்கள் நிறைந்திருந்தை மேடையிலிருந்து கவனித்தேன்.
அடுத்து மதுரமானதொரு மலையாள மொழியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளரும், மலையாளத்தில் 100 க்கும் மேற்பட்ட நவீனச் சிறுகதைகளை எழுதியிருப்பவருமான ரகுமான் கிடங்கயம் புத்தக வெளியீட்டு நிகழ்வை அறிமுகப்படுத்தினார்.
பிரசஸ்த்தி பெற்ற எழுத்துகாரன் கல்பட்டா நாரயணன் இப்புத்தகத்தை வெளியிட பிரசஸ்த்தி பெற்ற சித்திரக்காரன் கலைமாமணி என்.சீனிவாசன் இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். ஓரமாய் நின்றிருந்த என்னை இழுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்க வைத்து அழகு பார்த்தார் எங்கள் லெனின்.
அரங்கு கைத்தட்டிக் கொண்டேயிருந்தது. சில்ரன் ஆப் ஹெவனில் வரும் அப்பையன் முதல் பரிசு பெற்று அச்சிறு மேடைமீது நின்றிருப்பான்.
‘‘மாஸ்டர் கொஞ்சம் தலையை உயர்த்துங்க’’ என ஒரு புகைப்படக்காரனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்ப்பான்.
நிமிர்ந்து பார்த்தேன். என்னெதிரே பத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள், தங்கள் கேமராக்களில் மாறி, மாறி இதைப் போட்டிபோட்டு பதிவு செய்தார்கள். பெரும் உற்சாகம் அந்த அரங்கில் நிறைந்து நின்றது.
ஒரு கணம் என் கண்கள் கலங்கின. நான் எழுத ஆரம்பித்த அந்த முதல் நிமிஷம் ஞாபகம் வந்து போனது. பட்ட அவமானங்களில் உடல் எரிந்தது. எல்லாம் எல்லாம் சரியாகி, மொழி தெரியாத இம்மாநிலத்தில் இத்தனை நூறுபேர் என் எழுத்தின் சுவை தேடி வந்திருக்கிறார்கள். என்னை அவர்களின் பிள்ளையாய் சுவீகரிக்கிறார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு ஞானஸ்நானத் தொட்டில்  நிறைந்த நீர் ததும்பியது.
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
இன்னும் எழுதலாமா?

No comments:

Post a Comment