Monday, December 2, 2013

மனப்பிழற்வின் மீதேறி நின்றுகதை எனக்கு சொன்ன கதை

-என்.சீனிவாசன்

சொல்லபடும்வார்த்தையின் மூலமாக, பெயர், பொருள், செயல், என்று அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.இந்த புரிந்து கொண்டதை, வைத்து கொண்டு, அவனால் ஒரு முடிவு எடுக்க முடியும் அப்படி என்றால்,பவா செல்லதுரை தன்னுடைய அம்மாவிடம் கேட்ட கதைகள், கதைசொல்லி என்னும் ஆவணப்படத்தில்பார்த்தேன்.

அம்மாவிடம்ஒரு குழந்தை, செவிவழியாக, ஒரு கதையை, ஒரு மொழியில் கேட்டுவளர்ந்த விதம், என்பது, அதேகுழந்தை, தன்னுடைய, பால்ய பருவத்தில், தான் கேட்டு வளர்ந்த விசயங்களை, பார்க்கனும்அப்படின்னு நினைக்கிறது, அதன்பின் பார்பதற்கான முயற்சியை எடுப்பது, அந்த இடத்தில் போய்பார்ப்பது, அப்போ இந்த கதையில் சொல்லபட்ட விசயங்களை தேடி போன அந்த பால்ய வயது பிள்ளைக்கு,அங்கு என்ன கிடைத்தது? சரி, இப்படி ஒரு கதை கேட்டு வளர்ந்த பிள்ளையுடைய கதைதான், தான்எதிர் கொள்கின்ற தன்னுடைய அண்ணன் மார்களாகவோ, தன்னுடைய ஆதர்சங்களாக சந்திக்க கூடியநபர்களிடத்தில், இந்த குழந்தையாக இருந்து பால்ய பருவத்தை எட்டியபிள்ளை, அவர்களை சந்திக்கும்பட்சத்தில்,அவர்களிடம் போய், இது மாதிரி இங்க ஒன்னு இருந்துதாமே, இது மாதிரி நடந்துதாமே, அப்படின்னுகேட்கும் பொழுது, அவங்க இவருக்கு கொடுத்த பதில் என்ன அப்படின்னா, இவர் அறியாத ஒரு சூட்சமத்தை,அவருக்கு செய்றாங்க. 

பால்யகாலத்துக்கே உறிய ஒரு முறுக்கும், ஒரு முனைப்பும், நம்பிய விஷயங்களின் மேல் கொண்ட கொள்கைபிடிப்பும், நிச்சயமா கதைசொல்லியை பார்த்து கதையானது கேட்பது போல, இந்த கதைசொல்லி கொண்டபிடிப்புக்கு, விசுவாசமாகவும், நம்பிக்கையும், மிக பெரியது. அந்த படத்துல சந்துரு அப்படின்னு,ஒருவர் பேசற மாதிரி, ஒரு ஊருக்கு அந்த இயக்கம் , மாநாடு போட்டா, அந்த மாநாட்டில் பேசப்பட்டபல விசயங்களை தாண்டி, அந்த ஊர் மக்கள், அந்த மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பதாகைகள் பற்றிபேசுவதாக சொல்லும் இடம், மிக நுட்பமானது, ஒரு மாநாடு ஊர் மக்களால் பேசப்படுவது என்பது,மாநாட்டினுடைய தீர்மான நகல்களை படித்தோ, மாநாட்டினுடைய தீர்மானம், என்ன விளைவுகளை,தாக்கத்தை, இந்த மாநாட்டில் கொண்டுவரும், என்பதை பற்றிய  விவாதமோ அற்று, மாநாடு பற்றிய அறிவிப்புகளை தெரிந்துகொண்டு மாநாட்டில் பேசுகின்ற நட்சத்திரங்களை அறிந்து கொண்டு, அவர்களை, பிடித்திருந்தால்,பிடித்த விதத்தில் பாராட்டி, பேசி, மகிழ்ந்து, பிடிக்கவில்லை என்றால் சாடி, திட்டிதீர்த்து, பேசக்கூடிய ஊர் மக்களுடைய மனநிலை என்பது, இவை எல்லாவற்றையும் தாண்டி, வைக்கப்படும்பதாகைகளை பற்றி பேசுவது, அதன் அழகில் மெய் மறந்து போய் கிடப்பது, எந்த கொள்கை சார்புடையவர்களாகஇருந்த போதிலும் தன்னுடைய கொள்கை சார்புடைய இயக்கங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்என்கின்ற, முன் முடிவுகளை எடுக்கக்கூடிய விதத்தில் அந்த பதாகைகள், அமைவது , நான் முன்புகூறியது போல, பால்ய காலத்தின் முறுக்கும், கொண்ட கொள்கையின் பால் வைத்த விசுவாசமும்அதை முன்னெடுத்து செல்லகூடிய, திடமும், தைரியமும், திண்தோள், வலிமையும் கொண்ட வாலிபர்கள்நிறைந்த நாடு. ஆக இப்படி வாலிப பருவத்தை எட்டும் பொழுதும், சிறு வயதில் தன் அம்மாவிடம்கேட்ட கதைகளை, நம்பி இந்த கதைகளத்தில் இருக்க கூடிய புணைவுகளை, உண்மை என்று என்னி அதுதேடி திரியும் காலம், அங்கே தேடி திரிந்த அந்த இடத்தை அனுகும் பொழுதும், அங்கே எதிர்கொண்டுஅழைக்கும் அண்ணன் மார்கள், சொல்லும், சொல்லிய செய்திகளை நம்பி, திரும்பவும், இப்படியாகஒரு சமூகத்திற்காக நாம் போராடுகிறோம், ஒரு சமூகத்தை மேம்படுத்த போராடுகிறோம், எளியமக்களை வருமையில் இருந்து காப்பாற்ற போராடுகிறோம், எல்லாருக்கும் உதவி செய்கின்றோம்,விசுவாசமாக இருக்கின்றோம், கொள்கையோடு இருக்கின்றோம், என்ற மிகப்பெரிய நம்பிக்கையில்திலைத்து, அதில் அன்றாடம் கிட்டும் கைத்தட்டல்கலும், விசில் சத்தங்களும், ஆராதனைகளும்,ஆர்பரிப்பும், மன மகிழ்வை உண்டாக்கி, அந்த மயக்கத்திலே திலைத்து, இயக்கத்திற்காக தன்னைஅற்பனித்து கொண்ட ஒரு வாலிபன், பின்னாலில் இலக்கியம் சார்ந்து இயங்க ஆரமித்து, எழுத்துலகிற்குவந்து எழுத ஆரப்பித்து இந்த மக்களுக்கான பிரச்சார யுக்தியாகவோ, பரப்புறையாகவோ, இல்லாமல்,முக்கியமாக, வட்டார வழக்குகளை, இயல்பாக கையாண்டு, ஒரு கதைசொல்லியாக, நான் இருப்பதுதவறா கதையே என்று கதையிடம் கேட்கின்றான்.

கதைஅவனிடம் சொல்கிறது, நீ ஒரு தனி மனிதன், உனக்கு ஏற்படும் உணர்வுகள், உண்மையானது, நீஉணரும் உணர்வுகளும் உண்மையானது, ஏற்படும் உணர்வுகளுக்கும், உணரும் உணர்வுகளுக்கும்அதிக வித்தியாசம் இல்லை, ஒரு வித்யாசத்தை தவிர, உன் அண்ணன் மார்கள் சுற்றி நின்று கைதட்டியதுஉனக்கு மகிழ்வு என்றால், அது ஏற்படுத்தபட்டது. நீ யாருக்கேனும் யாரும் பரிந்துரைக்காதவிதத்தில் உதவி செய்து நீ உணர்ந்த மகிழ்வு என்பது, நீ அடைந்த மகிழ்வு. உன் உள்ளுணர்வுஉனக்கு சுட்டிகாட்டிய, அறிவும், தெளிவும், மகிழ்வும் நீ உணர்ந்தவை, உன் அண்ணன் மார்கள்உனக்கு ஏற்படுத்தியது ஏற்படுத்தப்பட்டவை. ஏற்படுத்தபட்டவை பலராலும், பல விதத்தில்,பல நேரங்களிலும், பல வகைகளை உன்னிடம் ஏற்படுத்த முடியும், ஆனால் உன் உள்ளுணர்வு உனக்குஉணர்த்துவது என்பது, கதையாகிய நான், கதைப்பவனாகிய உனக்கு ஏற்படுத்துவது, உணர்த்துவது,இவ்வாறான சுயபரிசோதனையின் உச்சத்திலே, நீ ஒரு கதை சொல்பவனாக, எனக்கு தெரிகின்றாய்.சொல்லப்பட்ட கதையாகிய நான், உன்னிடத்தில் என்ன எதிர்பார்கின்றேன், நான் எதிர் பார்ப்பது,என்னவெண்பது உனக்கு தெரிந்துபோன தருணத்தில் நீ உன் அண்ணன் மார்களை விட்டு பிரிந்தாய்,உனக்காகவும், உன்னுடைய முன் முடிவுகளுக்காகவும், நீ உணர்ந்த எளிய மக்களுக்காகவும்,  கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறாய், அப்படி நீ சொல்லப்பட்டகதைகள்தான் உன்னுடைய கொண்டாட்டமான மனநிலையின் உச்சத்தில் இருக்கும், தருணங்களிலே நீஎளிய மக்களை பற்றி பேசுகிறாய், எளிய மக்களின் வறுமை பற்றி கதை சொல்கின்றாய், எளிய மக்களின்துயரங்களை பற்றி பேசுகிறாய், இது ஏற்படுத்தபட்டது அல்ல, உணர்ந்த ஒரு விசயம்.

தனிமனிதனாகிய உனக்கு உன்னுடைய உள்ளுணர்வும், கதையாகிய நானும், உணர்த்திய விஷயம், இந்தஉணர்வின் உச்சத்திலே நின்றுதான் நீ எளிய மக்களை பார்க்கின்றாய், கருணையோடும், அன்போடும்அவர்களை, அறிவோடும், செறிவோடும், வளமையோடும், வாழ்வியலை வைத்துக்கொள்ள ஆசைபடுகிறாய்,நீ எதை கடத்த முற்பட்டாயோ, அதை கடத்தும் கருவியாக என்னை பயன்படுத்திகின்றாய், கதையாகியஎன்னை பயன்படுத்துகின்றாய், உன் அம்மா உனக்கு சொன்னது போல.

………………………………….....................................................................................................................
                                                                                    
ஷைலஜா இப்படி சொல்றாங்க பவாவை பற்றி, அவர்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அப்ரிசிஷியேஷன் தான்,பிடித்திருந்தால் கொண்டாடுவார் பிக்கவில்லைனா இனிமே நான் பேனாவே எடுக்க முடியாதபடிகிழிச்சி மூஞ்சில போட்டு விடுவார், அப்படின்னு ஷைலஜா சொல்றாங்க.

எனக்குதெரிந்து அது தான் இந்த கதைப்பவனுக்கும் கதைக்குமான உரையாடல் தொடங்குகின்ற இடம் அப்படின்னுநான் நினைக்கின்றேன். ஆனா ஜே.பி கதைசொல்லியை பத்தி சொல்லும் போது விஷ்வல் தான் கதைசொல்லியைமுதல்ல இம்பரஸ் பன்னி இன்ஃபுலுயன்ஸ் பன்னி அதிலிருந்து பவாவிற்கான ஒரு டூல் பவா தேர்ந்தெடுத்துஎழுத ஆரம்பிச்சதா ஜே.பி. இங்க ஒரு பதிவை சொல்லியிருக்காரு.

ஜெயமோகன்பவாவை பற்றி பேசும் போது இப்படி சொல்றாரு பவாவின் வாழ்வியல் அப்படிங்கறது ஒரு கொண்டாட்டமானமனநிலை ஒரு நெருக்கடி அற்ற வாழ்வியலாக இருக்கின்றதாகவும், அவருடைய எழுத்து என்பது அல்லல்படும்எளிய மனிதர்களை அவர்களுடைய துயரங்களை கருணையோடு பார்க்கக் கூடிய, அவருடைய துயரங்களைஎழுதகூடிய எழுத்தாகவும், இருக்கிறதா ஜெயமோகன் பதிவு பன்றாறு, இந்த இடத்தில் இருந்துதான்பவா செல்லதுரையின் படம் மூன்று விதமா நான் பிரிக்கின்றேன்,
ஒன்றுபவா செல்லதுரையின் விமர்சனம் அப்படிங்கிறது, ஷைலஜா பதிவு பன்னியிருக்கறதாகவும், பவாசொல்லதுரையின் உள்வாங்கள் அப்படிங்கிறது, விஷ்வல் மீடியமா எடுத்துகிட்டா, பவாசொல்லதுரையின்மனநிலையில் பேசனும் அப்படின்னா, ஜெயமோகன் சொன்ன கருத்தை, எடுத்து பார்த்தோம் அப்படின்னாஇந்த படம் ஆரம்பிக்கின்ற இடம், என்பது சிங்காரக்குளம்.


சிங்காரக்குளம்கதைபத்தி பவா பேசும் போது அந்த சிங்காரகுளம் இருந்த ஜமின் பற்றியும், அதனுடைய அமைப்புபற்றியும்  விரிவாக சொல்கின்றார், அந்த ஜமின்நிலைமை இன்றைக்கு என்னவாக இருகின்றது என்பதை விஷ்வலாக காட்டுகின்றார்கள், அப்பறம் அந்தகுளத்தை காட்டுகின்ற பொழுது பவா சொல்கின்றார், இந்த குளத்தினுடைய ஒரு பகுதி இயற்கைஅறன் பாதுகாத்ததாகவும், இன்னொரு பகுதி ஜமின் அப்படிங்குற முதலாளித்துவ மனோபாவம் பாதுகாத்ததாகவும்சொல்லிவிட்டு, அப்படி இரண்டு விஷயங்களால் பாதுகாக்கப்பட்ட அந்த  நீர்நிலை என்பது, ஒரு சிறு வயதிலிருந்து, செவிவழிசெய்திகளாக, கேட்டு கேட்டு, பார்காமல் அனுபவிக்காமல், அனுபவிக்கவும் , பார்க்கவும்தூண்டப்பட்ட  ஒரு மிகப் பெரிய சமூகம் அதை பார்ப்பதற்கும்,அதை சுகிப்பதற்க்கும், அனுபவிப்பதற்கும், ஒரு இயக்கத்தை முன்னெடுத்து அந்த இயக்கமானதுவெற்றி கொள்ளப்பட்டு இயற்கை அறன் அப்படியே விடப்பட்டு, இந்த முதலாளித்துவ மனோபாவம்பாதுகாப்பதிலிருந்து  அந்த நீர்நிலை விடுவிக்கப்பட்டு,அது அதுவாகவே தன்னை விடுவித்துக்கொண்டு இந்த எளிய மக்களுக்காக வரும் பொழுது,  அது தேன் சொட்டும் தண்ணீராக இல்லாமல் போனது அதுதான்என்னுடைய மிகப்பெரிய சோகம் என்று கதைசொல்லியாகிய பவா செல்லதுரை சொல்கின்றார். இதைத்தான்கதைப்பவனுக்கும் கதைக்குமான உரையாடல்களாக நான் பார்க்கின்றேன்.

ஒருகதை சொல்லி தன்னுடைய கதையினிடம் மிகவும் மனம்திறந்து மனம்விட்டு பேசக்கூடிய இடமாக நான்நினைக்கின்றேன் இந்த ஆவணப்படம் என்பது ஏதோ ஒரு கதைசொல்லி பற்றிய ஆவணப்படமாக எனக்குதோன்றவில்லை. கதைசொல்லிக்கும், கதைக்குமான இரண்டுபேரும் மனம் திறந்து பேசிக்கிற ஒருவிஷ்வலாதான் இதை நான் பார்க்கின்றேன். இந்த கதைசொல்லி கதைகிட்ட என்ன பேசறாரு எதைபத்திஆதங்கபடுகின்றார் அப்படின்னு பார்த்தோமானால் தன்னுடைய பால்ய காலத்துல தன்னுடைய அம்மா,குழந்தை பருவத்தில் தன்னுடைய அம்மா தனக்கு சொன்ன பல செவிவழி கதைகள் மூலமாக தூண்டப்படுகின்றார்.இந்த கதைசொல்லி அப்படி தூண்டபட்ட கதை சொல்லி அதை உண்மை என்று நம்புகின்றார், அதில்வந்த அந்த இடையனும், ஆடுகளும் கல்லா சமைஞ்ச இடத்தை சொல்லும் பொழுது அது நமக்கு புரியுது,அப்படி உண்மையிலேயே அது எப்படி இருக்கும் அப்படின்னு பார்க்கனும் அப்படின்னு நினைக்கிறதுஅவர் ஒரு பால்ய பருவத்தை எட்டும் பொழுது, அதை பார்க்கனும் அப்படின்னு நினைக்கின்றாரு,அதை பார்க்க கூடிய தருணத்தில் அங்க பல விஷங்கள் குறியீடுகளாக சொல்லபட்டிருகின்றதும்,என்ன சொல்லியிருக்கு அப்படிங்கறதும் அவருக்கு புரியுது, புரியவருது.

அப்படிபுரியவரும் பொழுதுதான் ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையை எட்டுவதற்கானஒரு இயக்கத்தை முன்னெடுத்து அந்த இயக்கம் வெற்றி பெறும் பட்சத்தில் எந்த நோக்கத்திற்காகஅந்த இயக்கம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறி அது, அவர்கள் இடத்தில் வந்து சேர்ந்ததாஅப்படிங்கிற மிகபெரிய கேள்வி வச்சியிருக்கார், ஒரு வேளை பவா செல்லதுரை தன்னுடைய கதையினிடத்தில்கேட்டுவிட்ட கேள்வியாகவே அல்லது கேட்டு நமக்கு தெரியாமல் போன கேள்வி இதுவாக இருக்குமாஅப்படிங்கிற யூகம் எனக்கு இருக்கு.

அந்தகேள்வி என்ன அப்படின்னா ஒரு வேளை இப்படியான ஒரு குளத்தை பற்றி கேள்வி பட்ட சமூகம் என்பது, தன்னிடம் இருந்த ஒரு குளதையோ, குட்டையையோ சிங்காரகுளத்துக்கு இணையாக மாற்றி அது சம்மந்தமானஒரு செவிவழி செய்தியை நாம் பரப்புரை செய்திருந்தால் ஒரு வேலை சிங்காரகுளமும் காப்பாற்றபட்டுஅதே போன்று இன்னொரு அருமையான குளமும் கிடைதிருக்கும் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கானஅறிவும், செறிவும், பெற்ற ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்கி இருக்க முடியுமோ, ஒரு வேளைமேம்பட்ட சமூகம் என்று சொல்லிக்கொள்ளகூடிய முதலாளித்துவ மனோபாவம் உடைய, ஒரு சமூகம்குளத்தை வைத்திருப்பதாக நம்பிய விஷயத்தின் மீது ஆர்வத்தின் பால் ஒரு இயக்கம், முற்பது, நாற்பது வருடங்களாக, முன்னொடுத்துகுளத்த போயி எட்டி பார்க்கின்றான். எட்டி  பார்த்தாஅந்த குளம் யாராலும் பயன்படுத்த முடியாத யாருக்கும் பயனற்ற ஒரு நீர் நிலையாக இருப்பதைகண்ணுரும் பொழுது இந்த நீர் நிலையை பாதுகாப்பது, இதே போன்று இன்னொரு நீர் நிலையை உருவாக்குவதுஅதே போன்ற சமூகத்தை உருவாக்குவது, அப்படியான விஷயங்களில் முற்பது வருடமாக கவனம் செலுத்தாமபோனது, அதை பத்தி பவா தன்னுடைய கதைகிட்ட கேட்டு ஆதங்க பட்டு கேள்வி எழுப்புகின்றாராஅப்படின்னு எனக்கு தோன ஆரமிச்சது, ஒரு சமூக மாற்றம் என்பது, அறிவையும் அறிவு சார்ந்தவிசயங்களையும் ஊட்டி ஒரு சமூகத்தை அறிவின் உச்சதுக்கு கொண்டு போறதுக்கு பதிலா ஏதோ அறிவோடுவாழ்ந்த ஒரு சமூகம் இருந்ததா நம்பி அந்த இடத்தில் கொண்டு போய் மனிதர்களை குடியேற்றிவிட்டால்அல்லது இவர்களை அங்கே போய் இருக்க செய்து விட்டால் இவர்களுக்கு அறிவு வந்து விடும், பாஞ்சாலங்குறிச்சி என்ற நிலப்பரப்பில் நின்றால் வீரம் வந்துவிடும் என்கின்ற ஒரு மித்துக்குஇணையாக ஒரு நம்பிக்கை இன்னமும் நிலவுகிறது. அப்படி சினிமா நட்சந்திரங்களுடைய கட் அவுட்டுகளுக்குபக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டால் நாமும் சினிமா நட்சத்திரம் ஆகிவிடலாம்என்ற நம்பிக்கையையோ, தேன் சொட்டும் அருவி தேனாருவி என்கின்ற நம்பிக்கையையோ, இது போன்றவிஷயங்களின் மீது நம் ஆர்வத்தொடு சொயல்பட்டு அதை எதிர்த்து, அதை அடைவதற்கான ஒரு மிகப்பெரியஒரு இயக்கத்தை நடத்தி அந்த இயக்கம் அந்த இலக்கை அடையும் பட்சத்தில் அங்கு. அவர்களுக்குகிடைகின்ற ஏமாற்றம் அந்த ஏமாற்றத்தின் வலி, அந்த வலியின் வெளிப்பாடு இந்த சமூகத்தின்மேல் பவா செல்லதுரை எவ்வளவு அன்போடும், கருணையோடும், சைலஜா சொன்னதை போல மிகபெரிய விமர்சனத்தைமுன்வைக்கின்றார் அப்படிங்கிறது இந்த படம் மூலமா எனக்கு கிடைத்ததாதான் நான் நம்புகின்றேன்.

……………………….............................................................................................................................

அஜித்தன்கூடவும், வம்சி கூடவும் நான் கதைசொல்லியை பற்றி அடுத்த நாள் காலையிலா நிறைய பேசிகிட்டுஇருந்தேன், அப்போ எங்களுக்கு ஒரு விசயத்தை அஜித்தன் சொன்ன மாதிரி, எல்லா கதைகளிலும்,ஒரு கதையில கன்னி வைப்பதை பற்றி சொல்றாரு, இன்னொரு கதையில ஒரு கூண்டுக்கூல் அடைபட்டமனிதனை பற்றி சொல்றாரு, இன்னொரு கதையில எலிகளை எப்படி புடிப்பாங்கனு, எல்லா வலைகளையும்அடைத்து …அப்படிங்கறத பத்தி பேசுவாறு, இதுல இருந்து என்னனா பவா செல்லதுரை என்கின்றமனிதனுக்கு உள்ளே இருந்து புகைமூட்டத்தில் வேகிற வேதனையும் தெரியும், வெளியில் வந்துநிலபிரபுத்துவ தன்மையினுடைய மனோ பாவத்தினுடைய கொண்டாட்டமும் தெரியும், ஆகவே இந்த நிலப்பிரபுத்துவமனப்பான்மையில் உள்ள காபந்துசெய்யபட்ட கொண்டாட்டம் என்கின்ற மனோபாவத்தை, மனநிலையைஅவர் உடைத்து வெளியில் கொண்டுவந்து எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் ஒரு மனிதராக பவாசெல்லதுரை தன்னை உருவக படுத்திக்கொண்டதன் விளைவு பவா செல்லதுரை தன்னுடைய கதையுடன் பவாசெல்லதுரை என்கின்ற கதைசொல்லி ஆதங்க படுவது, பேசுவது, கேள்வி கேட்பது, கதைசொல்லி கதையிடம்கேட்கும் கேள்விகள் என்பது என்னனா?

உள்ளஇருந்து அனுபவித்த வேதனையைதாண்டி, அவர் எளிய மக்களுக்கு இந்த கொண்டாட்டமான மனநிலையை கொண்டுசேர்க்கும் பொழுது அவர் அனுபவிக்கும்வேதனை என்பது அலப்பரியதாக இருப்பதாக தான் இந்த கதைசெல்லி பவா செல்லதுரை தன் கதையினிடத்திலேஅதங்கப்படுகிறார். சூழலை முன்நிறுத்தி ஆதங்கபடுகிறார்.இந்தசுற்று சூழல் என்பது இன்றைக்கு இவ்வளவு கேடு கேட்டுபோய்விட்டதே. இப்போ இந்த விஷ்வல்ஸ்இல்லாம ஜே.பி சொன்ன மாதிரி இந்த கொண்டாட்டமான மனநிலையை இந்த எளிய மக்களிடம் எப்படிகொண்டுபோவது. என்கின்ற ஆதங்கத்தின் உச்சம் தான் அவர் கதையினிடத்தில் அவர் பேசும் பொழுதுஎழுப்பும் கேள்வியாக எனக்கு படுகின்றது.

கதைஅவருக்கு திரும்பவும் ஒரு கேள்வியையும் எழுப்பி பதிலையும் சொல்வதாக இந்த படம் முடிவடைகின்றது.கதை கதைப்பவனிடத்தில் கேட்கும் கேள்வி, எளிய மக்களிடத்தில் கொண்டாட்டமான மனநிலையை கொண்டுசேர்ப்பதற்கு சூழல் சார்ந்த, மனோபாவம் சார்ந்தம், அறிவு சார்ந்த விசயங்களை அவர்களுக்குசெரிவூட்டி இருந்தால் இந்த முற்பது நாற்பது அண்டுகளில் செரிவூட்டியிருந்தால் தாங்கள்கேட்ட, தாங்கள் செவிவழியாக அடைந்த செய்திகளின் உண்மை தன்மை அறியாமல் அதன் மீது போர்தொடுத்து அதற்கு இயக்கம் கண்டதுக்கு பதிலாக அதை போன்ற இன்னொரு சாம்ராஜ்ஜியத்தை நாமேஇந்த முற்பது நாற்பது வருடத்தில் உருவாக்கி இருப்போமேயானால் அது தாங்கள் இயக்கம் காணவேண்டியஅவசியத்தையும், எதற்காக கண்டிருக்க வேண்டும் என்கின்ற அவசியத்தையும், அப்படியாக ஒருஇயக்கம் பேர்லல் பாடியாக முன்னெடுக்க பட்டிருந்தால், பழமையும் காப்பற்றபட்டிருக்களாமே,புதுமையும் மிக அழகாக தங்களுக்கான அடையாளமாக வாழ்வியலின் கொண்டாட்டமாக உண்மையிலேயேஇருந்திருக்குமோ அப்படியான கேள்வியைதான் அந்த கதை கதைசொல்லியான பவாசெல்லதுரையிடம் எழுப்பி,இன்றைக்கு தனிமனிதன் தான் இயக்கம் அப்படி தனி மனித இயக்கத்தினுடைய முன்னோடியகவும் தனிமனிதன் தான் இயக்கம் என்பதை வருங்கால இளைய தலைமுறைக்கு நிதர்சனமாக உணர்த்துபவனாகவும்நீ இருக்கிறாய். உன்னை பார்த்த இளைஞர்களும், உன்னை பார்த்த இன்றைய சமூதாயமும் உன்னைபோன்ற தனிமனித எழுச்சியும், கொண்டாட்டமும், மனநிலையிலும், வாழ்வியலும் கொண்டு இயங்கஆரம்பித்து, இனிவரும் காலங்களில் அடுத்த முற்பது நாற்பது ஆண்டுகளில் நீ நினைக்கும்உலகத்தை உன் கண்முன்னலாயே சிரிஷ்டிக்கும் ஒரு கதை சொல்லியாக இந்த சமுதாயத்திற்கு நீகிடைத்திருக்கின்றாய். நீ அறிவானவன், நீ அன்பானவன், you are the man of love என்றுசொல்வதாகத்தான் இந்த படம் எனக்கு தெரிகின்றது.

வம்சி: பவா  வெறும் கதை சொல்லியா ?

பல இடங்களில் சாப்பாட்டை பத்தி இந்த ஆவணப்படத்தில்சொல்லப்பட்டிருகின்றது. பவா விருந்திற்க்கு அழைப்பதாகவும், விருந்து முடிந்த பின், மிக சிறந்த விருந்து இது என்வாழ்நாளில் அப்படின்னு நண்பர்களிடத்தில் சொல்வதாகவும். அர்த்தபடும்படியான காட்சிகள் இந்த படத்தில் இருக்கு. நீங்க கேட்ட பவாவேரும் கதை சொல்லியா பதிலுக்காக நான் இந்த ஆவணப்படத்துல இருந்து இந்த காட்சிகளைஎடுத்துகிறேன். பவா ஏன் கதைகளை சொல்லனும் பவா என்கிறகதைசொல்லி ஏன் கதைகளை சொல்ல வேண்டும் கதைசொல்லி கதைகளை யாரிடத்தில் சொல்லுகின்றான்,தனக்கு முன்னால் தன்னைவிட தொலைதுரத்தில், தொடர்புக்குஅப்பால் இருக்ககூடியவர்களிடம் தன்னை சந்திக்க வரும் நபர்களிடத்தில், தன்சந்திப்பே இல்லாமல் தொடர்புகொள்ளும் பல பேரிடத்தில், பேச்சின் மூலமாக ஒரு தொடர்பைஅந்த பேச்சின் மூலமாக பேச்சின் எல்லையை விரிவுபடுத்துவதற்காக ஒரு  கதையின் மூலமாக, கதைகதைசொல்லி இரண்டுமே ஒன்றுபோல் அமைந்த வேவ்வேறான வடிவங்கள், கதை சொல்லிக்கு புறஉலகம் என்பது கொண்டாட்டம் மகிழ்வு, அக உலகம் என்பது வலியும்வருத்தமும். கதைக்கு அகம் என்பது கொண்டாட்டம், மகிழ்ச்சி, புறம் என்பது,வலியும்வருத்தமும். ஆக கதை சொல்லி கையாளும் யுக்தி கதைக்கு நேர்எதிர்மாறானது. கதை கையாளும் யுக்தி கதைசொல்லிக்கு நேர்எதிர்மாறானது. இப்போ கதையை பார்த்து கதைசொல்லி கேட்பதுமாதிரியான கேள்வி. நான் வேறும் கொண்டாட்டமான மனநிலையைமட்டும் எளிய மக்களுக்கு கடத்த நினைத்தேனா இல்ல. அப்போ எளியமக்களை மேம்படுத்த, எளிய மக்களை சமூகத்தின் உயர்ந்தஅந்தஸ்தில் நிறுத்த, அதுதான்  அவங்க பள்ளி தோழி முதல் காட்சியில் சொல்லுவங்கசமுகத்தில் நாங்க நிக்கனும் அப்படின்னா, அப்படிங்குறவார்த்தை இருக்கு சமுகத்தில் இவர்களை இவர்கள் மேம்படுத்திக்கொள்ள எப்படிபொருளாதாரரீதியாகவா, அறிவிலா, எந்தவகையில நாகரிகத்திலா, காலச்சாரத்திலா, எந்தவகையில இப்படி பல வடிவங்கள் இருக்கு, ஆக இந்த எளிய மக்கள்தன்னுடைய சமூகத்தை மேம்படுத்த செழுமைபடுத்த, செம்மையடையசெய்ய ஒரு பிம்பம் தேவைபட்டிருக்கின்றது அந்த பிம்பம் தான் ஜே.பி சொன்ன மாதிரி விஷுவல் இன்ஸ்பரேஷன் அந்த விஷ்வல் தான் அம்மா சொன்னகதைகளில் இவருக்கு உருவான பிம்பம், அந்த விஷ்வல் தான் இவர் தேடி போர தேடல்,அந்த விஷ்வல் தன் இவருக்கு உள்ள இருந்து வெளிப்படுகின்றவெளிப்பாட்டு வடிவமான கதை. கதைசொல்லி யாருக்காக கதை சொல்கிறன்,கதைசொல்லி தனக்காகத்தான் கதை சொல்கின்றான் கதைசொல்லியால் சொல்லப்பட்ட கதை, கதைசொல்பவனுக்கு சொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்து, தினந்தோறும் ஒவ்வொருமுறையும் ஒரு கதையை கதை கதைசொல்லிக்கு சொல்கிறது,இப்படி இருபது ஆண்டுகளுக்கு முன்போ எப்போதோ சொல்லப்பட்ட ஒரு கதைசொல்லப்பட்டவனுக்கு அதன் பின்னர் தினந்தோறும் கதைசொல்லிக்கொண்டே இருக்கிறது,இவ்வாறான கதை கதைசொல்லியினிடத்திலே சொல்லப்பட்ட கதையாகத்தான் நான் பவாசெல்லதுரையின் இந்த படத்தினை பார்க்கின்றேன், பார்த்தேன்.இப்படித்தான் நினைத்து பவா செல்லதுரை வாழ்ந்திருக்கின்றார, இப்படித்தான் நினைத்து ஆர்.ஆர். சினிவாசன் பதிவு செய்தாரா. இப்படித்தான் நினைத்துஅவர்கள் எங்களுக்கு திரையிட்டார்களா, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். மிக சாதாரன ஒரு எளிய மனிதனாகஎன் முன்னே அந்த படம் கதை சொல்லியும் கதையும் சொன்ன கதையைத்தான் நான் உங்களுக்குஅல்ல எனக்கு கதையாக சொன்னேன். கதை எனக்கு சொன்ன கதை.


நன்றி: அஜிதன், வம்சி, பாவேந்தன்



Saturday, November 30, 2013

என் தோழனிடமிருந்து நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

மலை மனிதனோடு ஒரு அக பயணம்                                                                                                                                                          
                                                                    ஜி.செல்வா


சந்தைப்பொருளாதாரம், அடிப்படைவாதத்தோடு கூட்டு வைத்து நடத்தும் வெறியாட்டத்தில் மனிதம் சிக்கி வதைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்பும் பாசமும் விளைந்த மண்ணில் குரோதம் தலைவிரித்தாடுகிறது. தோழமை, நட்பு கசியும் காதல் , ஆறுதல் சொற்கள் வேண்டிநிற்கிறது மனம்.இதற்குத்தானே இதோ என நம்முன் நிற்கிறது “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” - பவா. செல்லத்துரையின் சிறுகதைத் தொகுப்பு பதினோறு கதைகளுடன். பாறைக்கும், மண்ணுக்கும் கலைகளுக்கும் உயிர் கொடுக்கும் மக்கள்! அவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தெறிக்கும் வெள்ளை பற்களின் ஒளி. இவைகள் தான் பவாவின் கதைக்களம்.
கதைகளை ஒருசேர ஒரேமூச்சில் வாசித்துவிடுவேன் என நுழைந்தால் ஒவ்வொரு கதை யும் தன்னை வெளிப்படுத்தியவுடன் வாசித்தவர் ஒரு விதமான உணர்வில் சிந்தனை வெளியில் பயணிக்கும் போது மற்ற கதைகள் கை கொட்டிச்சிரிக்கும்.சந்தைப் பொருளாதாரம் நம் பண்பாட்டை கலாச்சார நிகழ்வுகளை சீரழித்த வரலாற்று சாட்சி “ஏழுமலை ஜமா” கதை. பாரம்பரிய கலைகள் கூத்துக்கள் கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் காரணத்தை நறுக்கென சொல்லிச் செல்கிறார் பவா. அத்தோடு கலைஞனை கலையை நேசிக்கும் மக்களின் பிரியத்தை வெளிப்படுத்தி நெஞ்சை கணக்க செய்கிறார்.கொத்துக் கொத்தாய் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் நடத்தும் சேட்டை மிக நுட்பமாக “வேறு வேறு மனிதர்கள்” கதையில் வெளிக் காட்டப்பட்டுள்ளது.அப்பா - மகனின் உறவுகள், ரத்தமும் சதையுமான பேச்சுக்கள் ... மகன்கள் அப்பாவிட மிருந்து வேறுபடும் தருணங்கள்... இணையும் புள்ளிகள் இப்படியாய்... இதையும் தாண்டி இரண்டு கதைகள்.“ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது. வாழ்வு அதுவரை தந்திராத சுவையை அவர்களுக் காக வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்”. இந்த பிரியத்தை அனுபவிக்க , அவசியம் “ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகளில்” பயணிக்க வேண்டியுள்ளது.வாழ்வின் எந்த தருணத்தில், எந்த புள்ளியில் மதத்தின் அரவணைப்பில் மனிதன் அடைக் கலம் தேடுகிறான்? அதேமனிதன் எந்த பொறித்தட்டில் கண்கள் தெறித்து மதத்தின் கட்டுப் பாட்டில் சாதியம் விதைத்திருக்கும் விஷத்தை கருவறுக்கிறான்? இரண்டும் இரண்டு தளத்தில் இரு கதைகளின் வழியே.

ஜப்பான் கிழவன் “காடு காற்றின் சத்தத்திற்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறி கொள்ள வைத்த தருணத்தில்” தன்கண்ணிகளை பையில் பத்திரமாக வைத்து மதத்தில் ஆறுதல டைகிறான். “குளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு மருவு தீட்டு படாம காப்பத்தி வருவைதைப் பற்றி அந்த காவலுக்கு வேலை வைக்காம இந்தப் பறத்தெரு.. இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது”.. “ பறத் தெருவை நாலா பிரிச்சி பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாலும் மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க எழுதும் கடிதம் சரியா வந்து சேராததனால மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுத”.. இப்படியாகத் தொடரும் தலைமுறை கொடூரத்தை சாதியத்தை மதத்தின் பிடியிலிருந்து விலகிவந்து களம் கண்ட து“சிங்காரக்குளம்”. வாசித்தவுடன் கடக்க முடியாமல் தலைமுறை பாரத்தை சுமக்க வைக்கிறது.மனிதர்களின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இயற்கையோடு சேர்த்து பின்னிப் பிணைந்து இழைத்த கதை “சத்ரு”,. மனிதம் ஒரு சொட்டாக உதிர்ந்து பிரவாகம் எடுக்கிறது. இந்தப் பிரவாகத்தில் மூழ்கி தெப்பலாக எழுந்து நிற்கும் போது நமது முகங்கள் வன்மமற்று குழந்தை முகங்களாகி புன்னகை பூத்திருக்கும்.

“முகம்” கதையில் வரும் அம்முகுட்டி முகம் போலிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.மலை, பனிக்காலம், இருட்டு, தார்சாலை, புழுதிதெரு, காடு, குளம், வயல் இப்படியாய் இவற் றோடு காய்ந்த தலைகள், ஈர மனிதர்கள், வறண்ட வயிறு, மனிதம் பூத்து குலுங்கும் சிரிப்பு, வாருங்கள்.. இந்த மலை மனிதனோடு ஒரு அகப்பயணத்திற்கு!“இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்ட” பிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் நூற்றாண்டுச் சிறுகதை வரலாற்றை கச்சிதமாக சொல்லி செல்வது சிறப்பு.

Friday, November 29, 2013

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

ஓவியம்: பாலசுப்ரமணியன்

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின்  நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான் இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.
நடை.
அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.
குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.
நடை நின்று, நிலத்தில் ஊனின கால்கள்.
சனிமூலை மென பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.
கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன்மீது கவிழ்வதை உணரமுடிந்தது.
அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.
கெழக்கத்தி ஆளுங்களா?
அந்த நாளில் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.
துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.
மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.
தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.
புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.
முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.
பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.
அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளைவிடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.
அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.
சொம்பு நிரம்பியதும் உரிச்சி துண்ணு என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.
ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,
இதோ இன்னொரு இளவரசி.
இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.
உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் இவளையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.
துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.
இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’ என்று இவனை அறுத்துக் கொண்டுபோய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி…
அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருத்தது.
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.
பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்த்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தன.
சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான்கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.
மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.
ஒவ்வொருத்தியாய் உட்ஆர்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் உஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.
ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல்களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.
மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும்போது ஒரு கையில் ஒணான்கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிட வைத்தது.
எல்லோரையும் போய் சேர்த்துவிட்ட ஒணான்கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்துப் போனது.
அவன் ஊஞ்சலைத் தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.
இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.
இவன் நினைத்த மாதிரி எதுவுமற்றறு, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தையும் உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்துச் சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள், நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒர மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வௌவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.
ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.
வாழ்வுர அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்து. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன. கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள், நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டே இருந்தார்கள். புதுப்புது விளையாட்டுகளில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’
உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறுவரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைந்தார்கள்.
மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினான் அவள்.
ஒண்ணு… ரெண்டு… மூணு…
நூறு… நூறு…
கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை. எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தன. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்…
‘‘ராஜாம்பா… ராஜாம்பா… ராஜாம்பா…’’
அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.
இருட்டிவிட கொஞ்சமே பொழிதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.
அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டன.
இருள் அடர்ந்து போயிருந்தபோது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள்.
பாலேறி முற்றியிருந்த நெத்ததுக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.
அவன் அவசர அவசரமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

     

Wednesday, November 20, 2013

கார்த்திகை தீபம் – என் வீட்டனுபவங்கள்

ஞாயிற்றுக்கிழமைக்கான தீபக்கொண்டாட்டம் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவே துவங்கிவிட்டது. சாத்தூரிலிருந்து தியாகு அண்ணன் தன் மனைவியுடனும், இரு மகன்களுடன் கூடவே அ.முத்துக்கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு இரவு எட்டு மணிக்கு, சாத்தூர் சண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், சேவு தலா இருபது கிலோவுடன் வந்து சேர்ந்தார். இதுவரையிலான அவர் சந்திப்பு கருப்பட்டிமிட்டாயும், சேவுமின்றி ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை.
அவர் தம்பி மகேந்திரன் சென்னையிலிருந்து தன் ஏழுவயது மகனோடு தனி காரில் இரவு எட்டரைக்கு வந்து சேர்ந்தார். மிக சமீபத்தில் தன் மனைவியை கேன்சருக்கு பலிகொடுத்திருந்தார் மகேந்திரன். அத்துயரம் அவர் பேச்சை உறிஞ்சியிருந்தது. அமெரிக்க வாழ்வு தந்த அலுப்பும் அதனுடன் சேர்ந்திருந்தது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு முன்பே என் நண்பர் ஓவியர் சீனிவாசன் தன் மனைவி ஜெயந்தி, ஐந்து வயதேயான மகன் தம்புக்குட்டியோடு வந்திருந்தார். அவர் வாழ்வு கொண்டாட்டங்களாலும், மௌனங்களாலும் மட்டுமே நிறைந்தது. ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், ஆஸ்ரம சாப்பாடு இதெல்லாம் மௌனத்தின் பக்கம் சேரும். தன் நண்பர்கள் கார்த்தி, ஜெய், முருகனோடு நீண்ட பின்னிரவுகளில் ஊர்சுற்றல், விவாதம், எவரையும் காயப்படுத்தாத நக்கல்கள் இவை முதல்வகை.
நானும் நண்பன் சிந்து ஏழுமலையும், வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒவ்வொரு இடமாகத் தயார் செய்தோம். ஜெயஸ்ரீயின் கல்வீடு, எங்கள் இரண்டாம்நில கெஸ்ட் அவுஸ், மாத்தூர் நில வீடு ஆகியவை ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களால் இரவு பகலாய்ப் பொலிவூட்டப்பட்டன.
சனிக்கிழமை இரவு முதல் என் தொலைபேசி பல்வேறு குரல்களால் மூச்சு திணறியது. மூன்று நான்கு முறை அதை சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது.
இரவு பனிரண்டு மணிக்கு மேல் வந்த மருதா பாலகுரு, மற்றும் அவர் நண்பர்களை அழைத்து வந்து மாத்தூர் நிலத்தில் தங்க வைத்தோம். அடுத்த விடியலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மிச்சமிருந்தது. ஏதோ விசித்திர சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்தால் அடைமழை துவங்கியிருந்தது.
மாலை மூன்று மணியளவில் மலேசியாவிலிருந்து என் மாமா மகள் பரமேஸ்வரியும் அவள் ஸ்நேகிதி யோகேஸ்வரியும் மழையினூடே திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எங்கள் போலோ காரில் வந்திறங்கியது இனிமையான காட்சி.                                     
சனிக்கிழமை மாலையே வந்து சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தர்  எழுத்தாளர். ஜெயமோகனின் மகன் அஜிதன்.
வம்சி, மானசி, ஹரி, அஜி, தியாகு அண்ணனின் மகன்கள் நிருபன், அஸ்வின் அ.முத்துகிருஷ்ணன்  இவர்கள் எல்லோரும் நிறைந்திருந்த கிணற்று நீரில் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஊறிக் கிடந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் ஜெயஸ்ரீ வீட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தோம். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்து சாப்பிட்டோம்.
இடையே சிபிச்செல்வனும், வேல்கண்ணனும் வந்து ஒரு கறுப்பு காபி மட்டும் குடித்து அவசரமாக விடைபெற்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அவசியம் வருவதாக அப்போதே பொய் சொன்னார்கள். எல்லாம் கடந்து போனது.
இப்போதெல்லாம்  என் தம்பியும் கவிஞனுமான நா.முத்துக்குமாரும்,  பாட்டெழுதும் விதமே அலாதியானது. படத்தின் இயக்குநரோடு காலையில் சென்னையிலிருந்து கிளம்பி வாணியம்பாடிவரை பயணிப்பது. இடையிலேயே பாடல் கருக்கொண்டுவிடும். வாணியம்பாடியிலோ, ஆம்பூரிலே முஸ்லீம் வாசம் வீசும் பிரியாணியோடு அப்பிரசவம் முடிந்திருக்கும்.
திரும்பி வரும்போது அவர்களை ஒரு புதுப்பாடல் நிறைக்கும். இம்முறை அருணாசலேஸ் வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலையே முத்துக்குமாரும் நீயா நானா’ ஆண்டனியும், அவரின் நண்பனும் பட இயக்குனருமான சார்லஸ் ஆகியோர் இரு கார்களில் புறப்பட்டு வந்தவாசி வழியே தங்கள் பயணத்தைத் துவக்கியிருந்தார்கள்.

ஆண்டனி சார் தயாரிப்பில் சார்லஸ் இயக்கும் படத்திற்கு முத்துக்குமார் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்படப் பாடல் நிறைவடையும் இடத்தில் சார்லசும் கோபியும் அப்படியே சென்னைக்குத் திரும்பிவிடுவார்கள். (டப்பிங் வேலை) நாங்கள் எத்தனை பேருக்கு சமைப்பது என்பது குழப்பத்திலிருந்தது. வந்தவாசி அவர்களுக்கு அப்பாடலை பரிசளித்து அப்படியே திருப்பியனுப்பியது. ஆண்டனியும், முத்துக்குமாரும் மட்டுமே மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரின் பயணம் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.
மாலை ஐந்து மணிவரையிலும் நண்பர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஐந்து மணிக்குக் குளித்து முடிந்து எல்லோரும் மொட்டைமாடிக்குப் போனோம். மானசி, வம்சி, அஜி, பாஸ்கர், ஹரி எல்லோருமாக அம்மொட்டைமாடியை அகல் விளக்குளால் அலங்கரித்திருந்தார்கள். செம்மண் அகல்களில் தீப எண்ணெய் நிறைந்திருந்ததே தனி அழகு.

எங்கிருந்தோ சிந்து ஏழுமலை ஒரு பை நிறைய மத்தாப்புகளையும், பட்டாசுகளையும் கொண்டு வந்தான். நான் நேரம் பார்த்தேன். சரியாக 5.50 எனக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. பல லட்சம் கண்களோடு சேர்ந்து என் கண்களும் மலையின் திசையில் நிலைகொண்டது. மலை உச்சியை கருமேகங்கள் நிறைப்பதும், விலகுவதும் அட… அது ஒரு சுவாரசியமான ஏமாற்றம். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துக்குமாரையும், ஆன்டணி சாரையும் எழுப்பினேன். பதறியடித்து எழுத்து வந்து மொட்டைமாடி வெறுந்தரையில் சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். மானசி முதல் மந்தாப்பைக் கொளுத்துவதற்கும் தீபம் ஏற்றுவதற்கும் சரியாயிருந்தது. எங்கிருந்தோ வந்த உற்சாகம் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லார் வீட்டு மொட்டைமாடிகளிலும் அதுவே பிரிதிபலித்தது. அடுத்த அரைமணி நேரத்திற்கு ஊரெங்கும் வான வேடிக்கையும், குதூகலமும், ஆன்மீக அனுபவமுமாகத் திகழ்ந்தது.
அகல் விளக்குகளின் ஒளி குறைதலுக்கு அஜி தனியே எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வம்சி இவைகளை ஓடிஓடி பல கோணங்களில் படமாக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு சிறு குழுவிடம் ஆன்டணி நீயாநானாவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை பரிதி அதில் மூழ்கியிருந்தார். ஷைலுவும், ஜெயஸ்ரீயும் ஒரு பெரிய மேசையில் தாங்கள் இதுவரை சமைத்த இருபத்தியோரு வகை உணவை மிக அழகாக மூடியிட்டு அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அதில் என்னைக் கவர்ந்த ஆறேழு வகை, காலிபிளவர் ப்ரை, முருங்கைக்கீரை மல்லாட்டை கலவை, பாகற்காய் வெங்காயம் சேர்ந்தொரு வறுவல், மூக்குகடலை, மொச்சை, பட்டாணி, பெரும்பயறு கலந்ததொரு சுண்டல், ஷைலஜாவின் பிரத்தேயக சேமியா பாயாசம். இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய பீர்க்கங்காய் காரக் குழம்பு.
சிறுசிறு குழுக்களின் பேச்சினூடே சாப்பிட ஆரம்பித்தோம். ஒவ்வொருவருக்கும் முன் ஒரு மூன்றடிக்கு தலைவாழை இலை. பௌர்ணமி வெளிச்சத்தில் அதன் மஞ்சள் கலந்த பச்சை நிறம் மின்னியது.
உற்சாகமும், உணவும் கூடிக் கொண்டேயிருந்தது.
ட்ரம்ஸ் சிவமணியை முத்துக்குமார் சாப்பிட அழைத்தான். அவர் பேசி முடித்து என்னிடம் தொலைபேசியைத் தரச்சொல்லி,
‘‘சாரி பவாண்ணே, போன வருட தீபத்துக்கு உங்க வீட்டு மொட்டமாடியிலதான் சாப்பிட்டேன். நாளைக்காலை பூனாவுக்கு ப்லைட் பிடிக்க அவசர அவசரமா போறேன். இடையில் இன்னொரு முறை வர்றேன். தீபத்துக்கு சமைச்ச அத்தனை வகையும் வேணும்’’
தொலைபேசியை முத்துக்குமார் கைகளுக்கு மாற்றிய என்னிடம் ஒரு பெருமிதமான சிரிப்பிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு, இது ஷைலஜாவுக்கு,
அவள் முதல் வார்த்தையிலேயே பரவசமாகி அதையும் என்னிடமே தந்தாள்.
‘‘சார் நான் சப்தரிஷி, லா.ச.ரா பையன். பத்து வருசமா உங்களை பாக்கனுன்னு முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் வாய்ச்சது. உங்க ‘வம்சி’ முன்னால நிக்கறேன். அங்கிருந்த போர்ட்லதான் நெம்பர் எடுத்தேன். வீட்டுக்கு எப்படி வரணும்?’’
நான் ஆட்டோவிற்கு வழி சொன்னேன். அவரும் அவர் மனைவி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆட்டோ கிடைக்காமல் நடந்தே மூணு கிலோமீட்டர் தூரம் வந்தார்கள். அவர் மொட்டைமாடியில் ஏறும்போதே பெரும் உற்சாகத்தைக் கூடவே கூட்டி வந்தார். அது எல்லோரையும் பற்றிக் கொண்டது.
நான் உங்களைப் பார்க்க வந்தது 49%. தான் ஷைலஜாவைப் பார்க்க வந்ததுதான் 51%. கணக்கு சரியா?
அதற்கும் நான் சிரித்துக் கொண்டேன்.
‘சிதம்பர நினைவுகள்’ என்னை உலுக்கியது. அதுக்கு அப்புறம்தான் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’
‘‘நேற்று நீங்க உங்க இப்லாகு-ல எழுதினதுவரை படிச்சிட்டேன் சார்’’ இது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாய்ஸ்.
அவர்களுக்கு ஷைலுவும், ஜெயஸ்ரீயும் தாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைக் கையெழுத்திட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர், அப்பாவின் ‘தொனி’யை மீண்டும் படித்தேன் பெரிய கலைஞன்தான் அவர் என அதிலிருந்த ஒரு பகுதியை அச்சுப் பிசகாமல் அப்படியே எங்களிடம் பகிர்ந்தார்.
‘அபிதா’வும், ‘பச்சைக்கனவும்’ வந்துவந்து போனார்கள். இடையிடையே கருமேகத்திற்கிடையே தீபம் மினுக்கிமினுக்கி எல்லோருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகனின் ‘அறம்’ கேட்டார். கொடுத்தவுடன் அதில் ஜெயமோகனுக்கு பதிலாக அவர் மகன் அஜியிடம் கையெழுத்து கேட்டார்.
அவன் முடியவே முடியாதென அடம்பிடித்தபோது என் தொலைபேசி வழியே ஜெயமோகனே வந்தார்.
நான் பெரும் சிரிப்பினூடே,
‘அஜி உங்களுக்கு பதிலா கையெழுத்து போட மறுக்கிறான் ஜெயமோகன்’ என்றேன்.
அவரும் சிரித்துக் கொண்டே தொலைபேசியை அஜியிடம் கொடுக்கச் சொன்னார்.
அவர் என்னமோ சொல்ல அவன் மிக வெட்கப்பட்டு, நாணிக் கோணி அப்புத்தகத்தில் கையெழுத்திட்டது பேரழகு.
நான் ஜெயமோகனிடம் ‘அஜி இப்போது ஐந்தாவது பந்திக்குப் பரிமாறுகிறான்’ என்றேன்.
அவர் ‘அவனை உங்கள் வீட்டிற்கு பஸ் ஏற்றுவதற்கு முன் ‘எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா’ என சொல்லித்தான் பவா பஸ் ஏற்றினேன்’ என்றார்.
இருவருமே முடிந்தவரை சிரித்துத் தீர்த்தோம்.
இப்போதைக்கு எவரும் பேசுவதை நிறுத்துவதாயில்லை. என் கை கால்களைத் தனித்தனியே கழட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாங்கமுடியாத வலி உடலெங்கும் பரவியிருந்தது.
அவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு நானும் சிந்து ஏழுமலையும் பைக்கை எடுத்துக் கொண்டு நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போனோம்.
கெஸ்ட் அவுஸ் திறந்தே கிடந்தது. ஏதோ ஒரு அவசரத் தொலைபேசியின் அழைப்பின் பொருட்டு இத்தனை கொண்டாட்டங்களையும் இழந்துவிட்டு தீபம் பார்க்காமலேயே பஸ் ஏறிவிட்ட கட்டுரையாளன் அ.முத்துகிருஷ்ணன் படுத்திருந்த தடயத்தை மட்டும் விட்டு சென்றிருந்தான். இந்த வருடம் நிச்சயம் அவனால் அவ்வளவு அதிரடிக் கட்டுரைகளை எழுதவே முடியாது, அண்ணாமலையாரின் சாபம் அப்படி.
மேடைமீது நேற்று நண்பர்கள் குதூகலித்து முடித்த மிச்சமாய் வயலட்நிற ‘வோட்கா’ இருந்தது.
அதை பார்த்துக் கொண்டே நான் அப்படியே படுக்கையில் சரிந்தேன். திரும்பிப் பார்த்தால் ஏழுமலை சிறு குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
எழுந்து வெளியே வந்து கிணற்றுத் திட்டின் மீதமர்ந்தேன். அங்கிருந்து தீபத்தைப் பார்த்தேன். நள்ளிரவிற்குப்பின் சுடர் பிரகாசமாய் எரிந்தது தெரிந்தது.
  ஆரவாரங்களின் அடங்கல்களில் எதுவும் பிரகாசமடைகிறது. அதை முழுவதும் தரிசிக்கவும், பருகவும் முடிகிறது.
அந்நிலப்பரப்பில், சுற்றிலும் வயல்வெளிகளிள் அடர்பச்சையின் அசைவினில் அப்பாவின் நினைவு வந்தது.
பத்து வருடத்திற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முடித்த முன்னிரவில், ஷைலஜாவை தன்னருகே அழைத்து ‘தீபம் ஏற்றிட்டாங்களாம்மா’ என்ற வார்த்தையோடுதான் அவரின் உயிர்ச்சுடர் அணைந்தது. அவர் பேசிய கடைசி வார்த்தைகளும் அதுதான்.
எல்லாவற்றையும் தாண்டி அப்பாவை நினைத்து ‘ஓ’ வென கத்தி யாருமற்ற இந்த வனாந்தரத்தில் கொஞ்சநேரம் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.