Tuesday, October 1, 2013

கடந்த 48 மணி நேரத்தில்



நேற்று முன் தினம் விஜய் டி.வி.யின் அழைப்பின்பேரில் கோபிநாத் ஒருங்கிணைத்த ‘‘மகாபாரதம் மக்கள் முன்னால்’’ என்ற நிகழ்வில் பங்கெடுத்தேன். என்னுடன், பத்திரிகையாளர்கள் கடற்கய், தீபா, எழுத்தாளர் அராத்து, மருத்துவர் சுனில் ஆகியோர் விருந்தினர்களாக வந்திருந்தனர். ‘‘மகாபாரதம்’’ இந்தியாவின் மிகப்பெரிய காப்பியம். அதை ஒரு மணி நேர உரையாடலில் அடக்க எல்லோருமே சிரமப்பட்டோம். ஆனாலும் ஆன்டனியும், கோபிநாத்தும் அதை மிக எளிதாக கடந்தார்கள். நாளையும் நாளை மறுநாளும் (அக்டோபர் 2,3) மாலை 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.


இரண்டு
தொலைக்காட்சி பதிவு முடிந்து ஒரு மிகச் சிறந்த இரவு Dinner ரை என் நண்பர் ஓவியர் சீனிவாசன் எனக்கும் என் நண்பர்களுக்கும் அளிக்க, அதன் ருசியோடே இரவு பயணித்து அதிகாலை மூன்று மணிக்கு சேத்பட் வந்தோம். தூக்கம் கலைந்து நண்பர் கிருஷ்ணமூர்த்தி திடீரென கந்தர்வனின் சாசனம் கதைபற்றி பேச உற்சாகம் தொற்றிக் கொண்டது. திருவண்ணாமலை வரும்வரை கந்தர்வனின் பல கதைகளின் நுட்பம் எங்கள் காருக்குள் சுழன்றது. அந்த நினைவுகளினூடே அன்று அதிகாலை தூங்கியது சுகமாயிருந்தது.
மூன்று
காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டேன் வயலில் இன்று நெல் நடவு. முப்பது பெண்ஆட்களும் பத்து ஆணாட்களும் நிலம் நிறைந்து நின்றிருந்தது பெருமிதமான காட்சி.
மகள் மானசிதான் முதல் ஏழுநாற்றுகளை சனிமூலையில் நட்டு நடவைத் துவங்க வேண்டுமென நடவந்த பெண்கள் கோரிக்கை வைக்க, கொஞ்சமும் தாமதிக்காமல், அதற்காகவே காத்திருந்ததுபோல மானசி சேற்றுக்குள் இறங்கி ஏழு நாற்றுக்களை ஊன்றினாள். அக்கணம் எழுத்திற்கும் அப்பால்போய் இதிலிருந்து நழுவுகிறது.
‘‘கற்றதுதமிழ்’’ ராம் தான் அன்று அதிகாலை என்னை எழுப்பியது. ஒரு கூட்டத்திற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தவர் என்னோடு பைக்கிலேயே நிலத்துக்கு வந்தார். இரண்டு பேரும் வம்சியைத் தேடி நிலத்தைத் தாண்டி திப்பகாட்டின் விளிம்புக்கு போனோம். ஒரு ஆலமரத்தைச் சுற்றி இருநூருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சப்தமின்றி நின்றிருந்தார்கள். கூட்டத்தை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தால் ஈரமண் தரையில் பணியனைக் கழட்டிப் போட்டு அதில் முட்டி போட்டுக் கொண்டு தன்னெதிரே நடந்த கோழிச்சண்டையை வம்சி படமெடுத்துக் கொண்டிருந்தான். என்னுடன் ராமைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டித் தழுவிக் கொண்டான். ராமும் வம்சியும் அப்படியொரு நண்பர்கள். எனக்குக் கேட்காமல் வெகுநேரம் ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ பற்றி பேசிக் கொண்டே என் முன்னால் நடந்து வந்தார்கள். எங்கள் புது கிணற்றங்கரையில் ராம் பொறாமையுடன் பார்த்து நிற்க வம்சி கிணத்தில் துள்ளி குதித்து நீந்திக் காட்டினான்.



நான்கு
அன்று காலை 11 மணிக்கு ‘‘தங்கமீன்’’களுக்கு நடந்த கலந்துரையாடலில் ராம் 30 நிமிஷங்கள் பேசினார். ஆழம், கோபம், ரௌத்ரம் என அப்பேச்சு எல்லோரையும் உறைய வைத்தது. தமிழில் விமர்சன போதாமை படைப்பாளிகளையையே தன் படைப்பின் நுட்பங்களை பேச வைக்கும் கொடுமையை மிக உஷ்ணமாக பகிர்ந்து கொண்டார்.
ஐந்து
மதியம் நான்கு மணிக்கு மதுரை இறையியல் கல்லூரிப் பேராசியர் ராஜேந்திரன் தன் ஜெர்மன் மனைவியோடும், தன் இரு பெண்பிள்ளைகளோடும் என்னை சந்திக்க நிலத்துக்கு வந்திருந்தார்கள். பேச்சு இலக்கியம், கலை, நிலம் என பல திசைகளிலும் சுழன்றது. அக்குழந்தைகளுக்கு நெல், நாற்று, நடவு, சேடை என எல்லாவற்றையும் அவர் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார் பம்புசெட் தொட்டி மீதேறி அமர்த்திருந்த அப்பெண்கள் ஒரு கட்டத்தில் உற்சாகம் பீறிட தொட்டியில் குதித்து வெகுநேரம் குளித்தார்கள். ‘சளி பிடிச்சுக்கும் ஜூரம் வரும்’ ‘புது தண்ணி’ என்ற அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்கள் எதுவும் நல்லவேளை அங்கு கடைசி வரை பிரயோகிக்கப்படவில்லை.
ஆறு
மூன்று மணிக்கு என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவின் பால்ய நண்பன் கணேஷ் தன் மனைவி குழந்தையோடு நிலத்துக்கு வந்திருந்தார். (அமெரிக்கா ரிட்டன்) நிலம், மீன்குளம், ஜெயஸ்ரீயின் கருங்கல்வீடு, மரங்கள், கெஸ்ட் அவுஸ் எல்லாமும் அவர்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டது.
கணேஷ் தன் பெண்ணிடம்
இதாண்டா Paddy நாற்று. இது வளந்து நெல் வந்தாதான் நாம Rice சாப்பிட முடியும் என விளக்கிக் கொண்டிருந்தார்.
காலம் பின்னோக்கி சுழல நான் அக்குழந்தையிடன் உங்க தாத்தா காரபட்டார் என்னை மாதிரியே விவசாயிதான்மா என சொல்ல

‘‘விவசாயின்னா என்ன Uncle?’’
எப்போதும் போல் மீண்டும் ஒருமுறை அக்குழந்தையிடம் பதில் சொல்ல முடியாமல்த் தோற்றேன்.
ஏழு
மதியம் நடவு நட்டவர்களோடு ஜெயஸ்ரீ வீட்டு வராண்டாவில் இலைபோட்டு சாப்பாடு. உழைப்பின் வியர்வையோடு அவர்கள் சோற்றை அள்ளி அள்ளி சாப்பிட்டபோது எனக்குள் படிந்துவிட்டிருந்த மத்தியதரவர்க நாசூக்கு வெட்கியது.
எட்டு
ராம் போனபின் நானும் வம்சியும் வரப்பில் உட்கார்ந்து ஆட்கள் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன் பருமனான ஒரு பாம்பு வேகமாக வருவதைப் பார்த்தேன். அது மஞ்சள்சாரை என என் அனுபவம் உணர்த்தியது. வம்சியை பயப்பட வேண்டாமென சொல்லிவிட்டு ஏழுமலையையும், பலராமனையும் அதனோடு கொஞ்ச நேரம் விளையாடச்சொன்னேன். வம்சி என் கைப்பேசியில் அதனருகில் போய்ப்படமெடுத்தான். அடுத்தமுறை மஞ்சள்சாரையோடு தானும் விளையாடுவேனென அடம்பிடித்தான். சுமார் அரைமணிநேர விளையாட்டுக்கு பின் அது தன் தாவரச்செறிவினூடே நுழைந்து மறைந்தது அற்புதம்.


ஒன்பது
இரவு ஏழுமணிக்கு ஆர்.ஆர். சீனுவாசன், நண்பர்கள் கார்த்தி, முருகன், ஷைலஜாவோடு உட்கார்ந்து L.C.D யில் என் ஆவணப்படத்தை (பவா என்றொரு கதைசொல்லி) பார்த்து இறுதிசெய்தோம். நவம்பர் 10 அன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அப்பட திரையிடல். அதற்கான ஆயத்தங்கள் துவங்கிவிட்டன.


பத்து
எல்லாம் நிறைந்து பெரும்கலைப்புடன் இரவு பதினோரு மணிக்குத் தூங்க போவதற்கு முன் ஒரு கவிதை படிக்கத்தோன்றியது. அது ஒரு கழுகைப் பற்றிய ஆங்கிலக் கவிதை. என் நண்பர் மிஷ்கின் தமிழில் மொழிபெயர்த்தது. அந்நாளின் எல்லாவற்றையும் அக்கழுகு தனக்குள் உள்வாங்கிக்கொண்டது.
ஒரு முழு நாற்பத்தியெட்டு மணிநேரம் நகரமும், கிராமும் சாராத ஒரு எளிய மனிதனின் வாழ்வை எப்படி நிரப்பிக் கொள்கிறது என்ற நினைவே போதுமானதாயிருந்தது.

15 comments:

  1. தொடர்ந்து உங்கள் வாழ்வை பதிவு செய்யுங்கள் பவா. வாசிப்போருக்கு வாழ்வின் மீதான, அவர்கள் கொண்டிருக்கும் கனவுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் எழுத்து உங்கள் எழுத்து.

    ReplyDelete
  2. இயற்கையுடன் குடும்பம் நடத்தும்
    இனிய மனிதர் ...

    ReplyDelete
  3. அற்புதம் மிக அருமையான அனுபவங்கள். நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்

    ReplyDelete
  4. //ஒரு முழு நாற்பத்தியெட்டு மணிநேரம் நகரமும், கிராமும் சாராத ஒரு எளிய மனிதனின் வாழ்வை எப்படி நிரப்பிக் கொள்கிறது என்ற நினைவே போதுமானதாயிருந்தது// மிக அழகான வரிகள் பவா சார். மிகவும் ரசித்தேன். //‘‘விவசாயின்னா என்ன Uncle?’’
    எப்போதும் போல் மீண்டும் ஒருமுறை அக்குழந்தையிடம் பதில் சொல்ல முடியாமல்த் தோற்றேன்.// வெகு யதார்த்தம்!. ராம் தான் “கலகம்” விருதை 6174க்கு வழங்கினார். எனக்கு நேரில் வந்து அவருடன் தங்கமீன்கள் குறித்து விரிவாகப் பேச ஆசை இருந்தது. முடியவில்லை. அவர் சொல்வது மிக வேதனையான யதார்த்தம் - அதிக ஆழமில்லாத விமர்சனங்கள் நச்சாகப் பரவிவிடுகின்றன. எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறேன்... மிக நல்ல பதிவுக்கு நன்றி பவா. :)

    ReplyDelete
  5. உங்கள் எளிமையும் இனிமையும் அழகு.

    ReplyDelete
  6. கிராமம், நகரம், மாநகரம் என வாழ்க்கை மாற்றி போட்டாலும் கிராமத்தில் வாழ்ந்த நாள்களின் நினைவுகள் மட்டும் என்றும் மறக்க முடியாது ....இந்த பதிவு கோவில்பட்டியில் உள்ள எனது கிராமமான இலுப்பையூரணிக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது .....தங்களின் இந்த மிக நல்ல பதிவு எல்லோரயும் கிராமத்திற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டது ....மிக்க நன்றி பவா சார் ....பேச்சிமுத்து ,கோவில்பட்டி ..

    ReplyDelete
  7. பவாவும் இயற்கையும் ஒரு பொது இழையாக இந்த பத்து செய்திகளிலும். பெயர் மாற்றி இதை சிறுகதை என்று சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன். வாழ்தல் இனிது... :)

    ReplyDelete
  8. மிகவும் இயல்பான இயற்கை வாழ்வு ]பவா சார்.

    ReplyDelete